- ஜப்பானியப் பழங்குறுநூறு
- துயரிலும் குன்றா அன்பு
- உனக்காக உறைபனியில்
- நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்
- கடவுளும் காணா அதிசயம்
- கனவிலேனும் வாராயோ?
- எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?
- உயிரையும் தருவேன் உனைக்காண
- நீ வருவாயென!
- மலைவளி வீழ்த்து தருக்கள்!
- துயர் கூட்டும் நிலவு
- செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை
- ஊற்றுநீர் அன்ன தூய இதயம்
- குளிரில் தனிமை கொடிது
- வெண்பனியா வெண்மலரா?
- பிரிவினும் உளதோ பிரிதொன்று?
- நிலவு ஒரு பனியாகி
- மலையாற்றின் இலையணை
- சக்குராவின் சலனம்
- நீண்ட வாழ்வே சாபமோ?
- மனித மனமும் மலர் மணமும்
- கோடைநிலா எங்கே?
- கொடிவழிச் செய்தி
- புல்நுனியில் பனிமுத்து
- காணும் பேறைத் தாரீரோ?
- இறை நின்று கொல்லுமோ?
- சொல்லாத காதல் எல்லாம்
- காதல் மறைத்தாலும் மறையாதது
- காற்றினும் கடியது அலர்
- மறவேன் பிரியேன் என்றவளே!
- காதல்வலி விதைக்கும் வெறுப்பு
- தேடலும் மறத்தலும்

மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
忘らるる
身をば思はず
誓ひてし
人のいのちの
惜しくもあるかな
கனா எழுத்துருக்களில்
わすらるる
みをばおもはず
ちかひてし
ひとのいのちの
をしくもあるかな
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: கவிஞர் உகோன்
காலம்: பிறப்பு இறப்பு பற்றிய தகவல்கள் தெரியவில்லை.
ஜப்பானியப் பேரரசரின் மெய்க்காவல் படையின் வலங்கைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி சுவேனவாவின் மகள் இவர். பேரரசர் தாய்கோவின் (கி.பி 884-930) பட்டத்தரசியாக அரியணை ஏறக் காத்திருந்தவர். ஆனால் பேரரசர் தாய்கோவின் மரணம் அதைத் தடுத்துவிட்டது. ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த அட்சுததா, மொதொயோஷி, தொமொததா, ஷிதாகோ ஆகிய நான்கு இளவரசர்களுடன் இவருக்குக் காதல் இருந்ததை யமாதோவின் கதைகள் சுட்டுகிறது. இந்தப் பாடலில் இவர் குறிப்பிடும் காதலர் அட்சுததாவாக இருக்கலாம் என உரையாசிரியர்கள் ஊகிக்கிறார்கள். கி.பி 960ல் பேரரசர் தாய்கோவின் இளையமகன் பேரரசர் முராகமியினால் சிறந்த கவிதாயினிப் பட்டம் வழங்கப்பெற்றார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 9 பாடல்கள் பல்வேறு இலக்கியங்களில் விரவியிருக்கிறது.
பாடுபொருள்: உறுதிமொழியை மீறிய காதலனைப் பற்றிய கவலை.
பாடலின் பொருள்: நீ என்னை மறந்ததுகூட என்னை அவ்வளவாக வருத்தவில்லை. என்னை மறக்கவே மாட்டேன் எனக் கடவுளின் முன் உறுதிமொழி ஏற்றுவிட்டு இப்போது என்னை மறந்துவிட்டாயே, அக்கடவுளின் கோபம் உன்னை என்ன செய்யுமோ என்றே வருந்துகிறேன்.
மறக்கப்பட்டாலும் காதலன் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் அகப்பாடல். தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே காதல் கைகூடியபோது ஒருவரை ஒருவர் மறக்கமாட்டோம் எனக் கடவுளின்முன் உறுதியேற்கின்றனர். பின்னர்க் காலப்போக்கில் காதலன் காதலியை மறந்துவிடுகிறான். காதலன் தன்னை மறந்துவிட்டான் என்ற கவலையைவிடக் கடவுளின் கோபம் உறுதிமொழியை மீறீய காதலனுக்கு ஏதாவது தீங்கு விளைவித்துவிடுமோ எனக் கவலைப்படுகிறாள் காதலி.
பாடலாசிரியர் உகோனின் இளமைக்காலக் காதல்களைக் கூறும் யமாதோவின் கதைகள் புதினத்தில் இதே கருத்துள்ள பாடல் ஒன்று புலவர் ஒருவர் தன்னை மறந்துவிட்ட புரவலரைச் சுட்டிப் பாடுவதாக உள்ளது. கடவுளின் கோபம் மக்களைத் தண்டிக்கும் என அக்காலத்தில் நிலவிய நம்பிக்கையைப் பதிவு செய்கின்றன இவ்விரு இலக்கியங்களும்.
வெண்பா:
மறப்பினும் எண்ணிக் கொளலாகும் எந்தன்
இறப்பிலும் சிந்தை கலங்கேன் – துறந்தும்
உயிராய் இருப்பேன் எனினும் அருள்மிகு
தெய்வம் விளைக்குமோ தீங்கு?