
1
சிசு ஜனிக்கிறது
தொப்புள்கொடி அறுபட
சொல்லின் முடிவின்மை சூழ
தாதி அதை/அவனை/அவளை
கையில் ஏந்தி
தாயின் அருகில் கிடத்துகிறாள்
மலரிலிருந்து கனிந்து விடுபட்ட விதையென
அது/அவன்/அவள்
பிறப்பின் தவிப்பை மென்று செரித்து
தன் அருகில் சர்ப்பமென நீளும்
முலைக் காம்பை
சப்பி
உள்ளே படரும்
வெம்மையில் தோய்ந்து
துயில் கொள்ளத் துவங்குகிறது
சொற்களின் குவியலென
2
மழை தனது ஆடையை உலர்த்தத் துவங்குகிறது
பூமியின் கண்கள் மீது
விட்டில் பூச்சிகள்
நிசப்தித்து மேலும் கீழுமாக
அசைகின்றன
பூமியின் பச்சை இமைகளென
3
முடிவின்மையின் படிக்கட்டுகளில்
உதிர்ந்து சருகான நம்பிக்கைகளை கையில் ஏந்தியபடி
பயணித்துக் கொண்டிருக்கிறேன்
அதன் நிச்சயமின்மை
நூற்றாண்டின் தனிமையாக கணக்கிறது
அதன் மீது எங்கிருந்தோ வந்து அமர்கிறது
தலையாட்டி முடியும் கனவுகளின்
உடைந்த சிறகுகள் கொண்ட பறவை ஒன்று
இனி அதற்கு பறக்கவும்
பொறுக்கவும்
சாவின் ருசி நிறம்பிய
நிலம் மட்டுமே உண்டு
4
இந்த உடலை விட்டுக் கொடுக்க
எனக்கு கொஞ்சம்
நேரம் பிடிக்கும்
அதுவரை
நீங்கள்
வாசலில் அமர்ந்தபடி
தேநீர் அருந்துங்கள்
என்னைப் பற்றிய கசப்புகளோடு
சிறப்பு 👏 மகிழ்ச்சி ☺️ வாழ்த்துக்கள் 💐