அதிரியன் நினைவுகள் -15

This entry is part 15 of 22 in the series அதிரியன் நினைவுகள்

தமிழாக்கம் : நா.கிருஷ்ணா

த்தியானுஸ் கணித்ததுபோலவே அனைத்தும் நடந்தன. மரியாதைக்குரிய தூயத்தங்கம் அச்சம் என்கிற கலப்படமில்லாதபோது மென்மையாக இருப்பது இயல்பு. மன்னர் திராயானுடைய இறுதிவிருப்பமென ஜோடிக்கப்பட்ட கதைக்கு என்ன முடிவு நேர்ந்ததோ அதுவே நான்கு கான்சலேட்டுகளுடைய  படுகொலைகளுக்கும் நேர்ந்தன. மனதில் நேர்மையும் நல்லொழுக்கமும் கொண்டமனிதர்கள் இவ்விவகாரத்தில் நான் சம்பந்தப்பட்டிருப்பேன் என்பதை நம்ப மறுத்தனர். குறைகாணும் மனிதர்கள், மோசமாக நடந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்பட்டது, பதிலாக அவர்களும் பாராட்டவே செய்தார்கள். மனதில் இனி கசப்புகளில்லை என்றுணர்ந்த கணத்தில் உரோமிலும் அமைதி திரும்பியது. தங்கள் உயிருக்கு இனி ஆபத்தில்லை என்பதால் மகிழ்ச்சியுற்ற ஒவ்வொருவரும் இறந்தவர்களை விரைவாக மறந்தார்கள். எனது இரக்கக் குணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது, காரணம் ஒவ்வொருநாளும் வன்போக்கு என்கிற எனது இயல்பான குணத்திலிருந்து விலகி, விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் மென்போக்கை நான் கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை  புரிந்துகொண்டிருந்தார்கள். எனது எளிமையைப் பாராட்டிய அதேவேளை, அதற்கென்று  ஒரு கணக்கீடு இருப்பதாகவும்  நினைத்தார்கள். இறந்த மன்னர் திராயானுடைய பெரும்பாலான  நற்பண்புகள் அடக்கமானவை; என்னுடையவையோ  பலரையும் மிகுந்த வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தன; கூடுதலாக பலரும் எனது குற்றத்தில்  ஒருவித செய் நேர்த்தியைப் பார்த்தனர்.  என்னிடத்தில் எவ்வித மாற்றமுமில்லை,  நான் முன்பிருந்த அதே மனிதன், ஆனால் எவற்றையெல்லாம் என்னை வெறுக்கத் தூண்டினவோ, அவைகளே அருமையென பின்னர் கொண்டாடப்பட்டன. பெருந்தன்மையின் உச்சத்தில் என்னுடைய சாக்கடை குணங்கள் பலவீனப்பட்டன, கோழைத்தனமாக உருமாறின, இந்நிலையில்  மென்போக்கு திடம்பெற்று, பளபளப்பும், வழவழப்பும் கொண்ட உறையாக மாறிற்று. தங்கள் குறைகளுக்கு நிவாரம் தேடி வருபவர்களிடம் நான் காட்டும் பொறுமை, இராணுவ மருத்துவ மனைகளுக்கு விஜயம் செய்து நோயாளிகளைப் பார்த்தல், அங்கிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களை அவர்கள் வீட்டிற்குச் சென்று நலன் விசாரித்தல் போன்ற எனது நடவடிக்கைகள் வானளாவப் புகழப்பட்டன. எனது வாழ்க்கை முழுவதும் எனது வேலையாட்களையும், பண்ணை விவசாயிகளையும் கூட இதுபோலவே நடத்தியிருக்கிறேன்.  நம்மிடமுள்ள நற்பண்புகளின் எண்ணிக்கை  நாம் நினைப்பதைக்  காட்டிலும் அதிகம், ஆனால் அவற்றில்றை வெற்றியை மட்டுமே வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதற்குக் காரணம், ஒருவேளை நாம் அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பாகபு அதற்கு காரணமாக இருக்கலாம். உலகத்தை ஆட்டிப்படைக்கிற எஜமானன் ஒருவன் முட்டாள்தனமாக சிலவற்றை அலட்சியம் செய்வான், ஆணவத்துடனோ அல்லது கொடூரமானவனாவோ நடந்துகொள்வான், அவ்வாறு இல்லையெனில்  மனிதர்கள்  வியப்பிற்குள்ளாகிறார்கள், தங்கள் மோசமான பலவீனங்களை  ஒப்புக்கொள்கிறார்கள். 

விருதுகளையும் பட்டங்களையும் வேண்டாமென்று ஒதுக்கியிருந்தவன் நான். இருந்தும் செனெட் உறுப்பினர்கள், நான் ஆட்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே, சொல்லாமல் கொள்ளாமல் வரிசையாக கௌரவப் பட்டங்களை எனக்குச் சூட்டினார்கள், ஒருசில அரசர்களின் கழுத்தைச்சுற்றி சுங்கிட்ட  சால்வைகளைப் போர்த்துவதுபோல. டேசியன், பார்த்தியன், ஜெர்மானியரென்று  பேதமின்றி படையினரின் இசைக்கருவிகள் ஒலியை, உதாரணத்திற்கு பார்த்தியர்களின் தாள இசைக்கருவிகள், முரசொலிகள் போன்றவற்றில்  மன்னர் திராயானுக்கு ஆர்வமதிகம். விருதுகள் விஷயத்தில் அவரிடத்தில் அவை  எதிரொலித்ததோடு, பதில்களாகவும் அமைந்தன, மாறாக  எனக்கோ அவைகளெல்லாம் எரிச்சலையும் அதிர்ச்சியையும் தரக்கூடியவை. விருதுகளையெல்லாம் வேண்டாமென்று களைந்தேன்;  தேசத்தின் தந்தை என்கிற பெருமைமிகு பட்டத்தைக் கூட   உரிய தகுதியை அடையாத நிலையில்  அவசியமற்றதென தவிர்த்தேன். அகஸ்ட்டஸே கூட தம்முடைய ஆட்சியின் பிற்காலத்தில்தான் அவ்வாறு தன்னை அழைக்க சம்மதித்தார். எதிரிகள் மீதான வெற்றிக்கும் இதுதான் நிலைமை. போர் வெற்றி என்பது நிரந்தரமல்ல என்கிறபோது இப்பிரச்சினையில் எனக்கிருக்கும் ஒரே தகுதி, போரைத் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவந்தேன் என்பதொன்றுதான், இந்நிலையில் விருதிற்கு சம்மதிப்பது கேலிக்குரியதாகவே இருந்திருக்கும். இம் மறுப்புகளில்  என் அடக்கத்தை ஒரு சிலர் மெச்சினார்கள் வேறு சிலரோ  எனக்கிதில் ஒருவகை கர்வம் இருப்பதாகக் கூறி நிந்தித்தார்கள் இருவருமே என்னைத்  தவறாகப் புரிந்து கொண்டிருந்தார்கள்.  இவை சார்ந்த விளைவுகளில்   என்னுடைய கணக்கீடு,  என்னைப் பற்றியதாகவே அதிகமிருந்தது,  சுற்றியிருந்தவர்களை அதிகம் பொருட்படுத்தியதில்லை. எனது கௌரவம் தனிப்பட்டது,  என் உடலோடு சேர்ந்தது: எனது மூளை, எனது ஆற்றல்,  மற்றும் என்னால முடிக்கபட்ட செயல்களின்  அடிப்படையில் அதனைக் கணக்கிடவேண்டும், அதைத்தான் நான் விரும்பினேன். விருதுகளும், பட்டங்களும்  எனக்கென்றிருப்பின் , ஒரு நாள் வந்து சேரும், பிறகு என்னுடைய இரகசிய  வெற்றிகளின் சாட்சியங்களாக சில விருதுகளுண்டு, அவற்றை பதவியேற்ற குறுகியகாலத்தில் உரிமைகோரும் துணிச்சல் எனக்கில்லை.  மற்ற தலைப்புகள், இன்னும் ரகசிய வெற்றிகளின் சாட்சியங்கள், அவற்றுக்கு நான் இன்னும் உரிமை கோரத் துணியவில்லை. தற்போதைக்கு,  முடிந்தவரை அதிரியன் ஆக உருமாறவும், இருப்பதற்கும் நான் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன. 

உரோம் நகரை நான் அதிகம் நேசிப்பதில்லையென குற்றம் சொல்வார்கள், அதனாலென்ன உரோம் மிகவும் அழகானதொரு நகரம்,  இரண்டு வருடங்கள் பேரரசும் நானுமாக அதனுடைய குறுகியவீதிகளையும், மக்கள் அதிகம் கூடும் சதுக்கங்களையும் (Forums romains), மனிதர் தசை நிறத்திலுள்ள கட்டிடங்கங்களின் கற்களையும் நேசிக்க முயற்சித்திருக்கிறோம். கீழைநாடுகள், கிரேக்கம் ஆகியவற்றைபோலவே உரோமும் மறுபார்வைக்கு உட்படுத்தப்பட்டது, ஒருவித விநோதமான ஆடையையும் அது தரித்தது, இந்த மாற்றத்தை இங்கு பிறந்து,  இந்நகரால் ஊட்டிவளர்க்கப்பட்ட ரோமானியன் ஒருவனால் உணரமுடியாது. ஈரப்பதமும்,  பனிமூட்டமுமாக இருக்கும்  உரோமாபுரியின் குளிர்காலங்கள்; திபூர் நீர்வீழ்ச்சிகளும், ஆல்பா ஏரிகளும் அளிக்கும் புத்துணர்ச்சியால் தணிந்திருக்கும் அதன் ஆப்பிரிக்க கோடைகாலங்கள்,  கிட்டத்தட்ட நாட்டுப்பாங்கான அதனுடைய மக்கள்,   ஏழு மலைகளுடன் இணைந்திருக்கும் அதன் மாகாணங்கள் அனைத்தும் எனக்குப் புதிதல்ல பழகியவை. இவைதவிர  இந்நகரம் தரும் கனவுகள்,  கிடைக்கும்  ஆதாயத்திற்குரிய கவர்ச்சிகள்,   எதிர்பாராமல் இங்கு அடையக்கூடிய வெற்றி, அல்லது கிடைக்கும்  அடிமைவாழ்க்கையெனப் பலகாரணங்களால் பச்சைக்குத்திய கருப்பின மக்கள், சரீரமெங்கும் உரோமங்களால் மூடப்பட்ட ஜெர்மானியர்கள், மெலிந்த கிரேக்கர்கள், கனத்தசரீரம் கொண்ட கீழைத்தேச மக்களென்று கொஞ்சம் கொஞ்சமாக உலகின் அனைத்து விதமான மக்களும் இங்கு வரத் தொடங்கி இன்று குவிந்திருப்பதைக் காண்பதும் எனக்குப் புதிதல்ல.  வழக்கத்திற்கு மாறாக சங்கடத்துடன் சிலவற்ற்றிர்க்குப் பழகிக்கொண்டேன்: உதாரணமாக பொதுக்குளியல் இடங்களுக்கு முன்பெல்லாம் அதிகம் மக்கள் புழங்கும் நேரங்களில் செல்வதில்லை, அவ்வாறே நேரத்தை வீணாக கழிக்கும் மோசமான விளையாட்டென்று எவற்றை வெறுத்தேனோ அவற்றைச் சகித்துக்கொள்ளக் கற்றேன். சடங்கென்ற பெயரில் அதன் தரப்பில் சொல்ல ஏதுமின்றி விலங்கினம் கொன்று குவிக்கப்படுவதை நான் வெறுத்தபோதிலும், படிப்படியாக  அச்சடங்கிற்குரிய மரியாதையையும்,  பாமரத்தனமான அறியாமைகளிடத்தில் வருத்தத்திற்குரிய இத்தூய்மைப்பாடு நிகழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய விளைவுகளையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது, எனவே இதுபோன்ற விஷயங்களில் நான் கொண்டிருந்த அபிப்ராயங்களில் எவ்வித மாற்றமுமில்லை. எனது விழாக்களின் சிறப்பம்சங்கள் திராயான் விழாக்களுக்குச் சமமாக இருக்க வேண்டும் என்று  விரும்பினேன், அதேவேளை கூடுதல் கலைநேர்த்தியுடனும், கூடுதல் ஒழுங்குடனும் நடத்தப்படவேண்டுமென்பது என் விருப்பம். கிளாடியேட்டர்களின் கச்சிதமான வாள்வீச்சை இரசிக்க என்னை நிர்ப்பந்தித்துக் கொள்ளும் அதேவேளை எந்த ஒரு கிளாடியேட்டரும் அவருடைய விருப்பத்திற்கு மாறாக இக்காரியத்தில் தள்ளப்படக் கூடாதென்பது எனது  விருப்பம்.  பெருங் கூட்டத்துடன் நான் உரையாடக் கற்றது, திறந்தவெளி அரங்குகளின் உயர்ந்த மேடைகளில் இருந்துகொண்டு இடைமனிதர்கள் ஊடாக கலந்துரையாடியபோது. அத்தகைய தருணங்களில், அமைதியை இங்கிதமாக அங்கு கூடியிருக்கும் மனிதர்களிடம் வற்புறுத்துவதுண்டு, அவர்களும் அதனை எனக்கு நூறுமடங்காகத் எனக்குத் திருப்பித் தந்திருக்கிறார்கள்.  அக்கூட்டம் நியாயமாக  எதனை என்னிடம் எதிர்பார்க்க உரிமையுண்டோ, அதைத் தவிர்த்து வேறொன்றை அவர்களுக்கு ஒருபோதும் வழங்கியதில்லை, அதுபோல  மறுப்பிற்கும் உரிய விளக்கத்தைத் தராமல் எந்த ஒன்றையும் மறுக்கிற வழக்கமும் எனக்கில்லை. நீ செய்தது போல எனது சொந்தப் புத்தகங்களை அரண்மனைணைக்குள் நான் கொண்டு போகவில்லை, இப்படிப்பட்ட காரியம் அங்குள்ள பிறர் மகிழ்ச்சியை  அலட்சியப்படுத்துவதோடு அவர்களை அவமதிக்கவும் செய்கிறது. ஸ்டோயிசிச (Stoicism) தத்துவவாதியான எபிக்டெட்டஸை(Epictetos) வாசித்துப் புரிந்துகொள்வதைக்காட்டிலும், அரங்கொன்றில் சம்பந்தப்பட்டக்  காட்சி என்னைப் புண்படுத்தினாலுங்கூட அதைச் சகித்துக்கொள்ளும் முயற்சியில் பயனை உணர்ந்துள்ளேன். 

ஒழுக்கம் என்பது ஒருவரின் சொந்தவாழ்க்கைக்குரிய  ஒப்பந்தம்;  கண்ணியமோ பொது விவகாரம். வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படும் எந்தவொரு காப்புரிமைப் பட்டயமும் எப்பொழுதும் மோசமான தரத்தினைக் கடைவிரிக்கும் செயல். தொடர்ச்சியாக பிரச்சினைகள் எழுந்ததால் சேர்ந்து நீராடுவதைத் தடைசெய்தேன்; உரோமாபுரியின் முன்னாளா மன்னர்களில் இருவரான விட்டெலியஸ்(Vittellius) பெருந்தீனிக்காரர், உணவுபரிமாறவும், விருந்திற்கென்றும் உயர்ந்த உலோகங்களில் விதவிவைதமான தட்டுகள், கத்திகள், கரண்டிகள், இவைதவிர பிற பாத்திரங்களையும் செய்யச் செய்து அரண்மனையில் குவித்திருந்தார், அவற்றையெல்லாம் உருக்கி, கருவூலத்திற்கு கொண்டுவந்தேன்.   எங்கள்  ஆரம்பகால  சீசர்கள்(Césars),  வாரிசுரிமைப்படி பிறர் அடையவேண்டிய சொத்துகளுக்கு உரிமைகோரி கெட்டப்பெயரை சம்பாதித்திருந்தனர். இம்முறையைத் தடுக்க எண்ணி, ஒரு சொத்துக்கு நேரடிவாரிசுகள் தங்களுக்கு உரிமையிருக்கிறதென நம்பும் பட்சத்தில் அதனை நானோ அரசாங்கமோ அடைவதற்கு உரிமையில்லை என்கிறவகையில் ஒரு சட்டத்தை விதித்தேன். அரண்மனையிலிருந்த அடிமைகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சித்தேன், அதிலும் துணிவு, தீரம் போன்ற விஷயங்களில் அவர்கள் நாட்டின் சிறந்த குடிமகன்களுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்களில்லை என்பதுபோல இருந்தனர்,  எனினும் சிற்சில சமயங்களில் அது அச்சமூட்டும் வகையில் வெளிப்படவும் செய்தது.  ஒரு நாள், என்னுடைய அரண்மனை அடிமைகளில் ஒருவன் செனட்டர் ஒருவரிடம் தடித்த வார்த்தைகளைப் பிரயோகிக்க,  அவன்  கன்னத்தில் நான் அறைய நேரிட்டது. ஒழுங்கின்மையை நான் வெறுக்கிறவன், எந்த அளவிற்கெனில், பொதுவெளி அரங்கின் மும்முரமான நேரங்களில்கூட சிக்கனமின்றி பணத்தை விரயம் செய்து கடனில் மூழ்கித் தவிக்கும் மனிதர்களுக்கு எதிராக வசவுகளை உபயோகித்துள்ளேன். அனைத்துக்  குழப்பத்தையும்த் தவிர்ப்பதற்காகவும், அவரவர் சமூக அடையாளத்தைக் கட்டிக்காக்கவும்  உரோம் நகரப்  பொதுவெளிகளில் சராசரி மக்கள்  டோகா (la toge) என்ற மேலங்கியையும், செனெட்டர்கள் தங்கள் குறியீடான லாட்டிக் கிளேவா(le laticlave)  என்கிற ஊதா நிற பட்டைகள் கொண்ட ஜிப்பாவையும் அணியவேண்டுமென வற்புறுத்தினேன். உண்மையில் மரியாதைக்குரிய  நியதிகள் அனைத்துமே  அசௌகரியமானவை, நானே கூட உரோமைத்தவிர பிற இடங்களில்  இவற்றை தவிர்ப்பதுண்டு. அத்தாணி மண்டபத்தில் கூடி விவாதித்துக்கொண்டிருக்கும் பொழுதுகூட, நண்பர்கள் வருகிறபோது அவர்களை வரவேற்க, சாய்ந்தோ, வேறுவகையிலோ அரியணையில் உட்கார்ந்தவண்ணம் இராமல் நான் எழுந்து நிற்பேன். குதிரை வண்டிகள் சாலைகளில் நம்பமுடியாத வகையில் பெருகி  நம்முடைய வீதிகளை ஸ்தம்பிக்க செய்தன,  அன்றியும்  தங்கள முடிவைத் தாங்களே தேடிக்கொள்வது போன்ற  மிதமிஞ்சிய வேகமும் சேர்ந்துகொள்ள அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டியிருந்தது, காரணம்  உரோமின் ஒரு புனித சாலை (Via Sacra) நெடுக  வளவிலும் நெளிவிலும் சிக்கி நூறு வண்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு நிற்பதை பார்க்கிறபோது, உரோமில் ஒரு பாதாசாரியாக இருப்பதே மேல் என்கிற எண்ணத்தை  பலருக்கும் அளித்தது.  அரசுமுறையில் இன்றி, தனிப்பட்ட வகையில் சிலர் இல்லங்களுக்கு விஜயம் செய்கிறபோது, எனது சிவிகையை அந்த இல்லங்கள்வரை தூக்கிச்செல்ல அனுமதிப்பேன்,  இதன் காரணமாக  என்னை உபசரிக்கும் விருந்தினர்கள்,  எனக்கென்று வெயில் காயும் நேரத்திலும், ரோமுக்கே உரிய மோசமான காற்றுள்ளபோதும், தங்கள் பொறுப்பில் ஒரு சிவிகையை மாற்று ஏற்பாடு செய்யும் சங்கடங்களின்றிக்  காத்திருக்க முடிந்தது. 

எனக்கு வேண்டியவர்களையும் திரும்பச் சந்தித்தேன். என் சகோதரி  பொலீனா(Paulina) வசம் எப்போதும் அன்புடன் நடந்துகொள்வதுண்டு, அடுத்தது  செர்வியனுஸ் முன்புபோல வெறுக்கின்ற நபராக இல்லை, மிகவும் மாறியிருந்தார். என் மாமியார்  மத்தீதியாமினோர் கீழைத்தேசத்திலிருந்து  மரணம் சம்பவிக்கக்கூடிய நோயொன்றின்  ஆரம்ப அறிகுறிகளுடன் வந்திருந்தார். பணிவும் வெகுளித்தனமும் கொண்ட இம்முதிய பெண்மணியை அவர்படும் வேதனைகளிலிருந்து திசைதிருப்ப எளிமையான விருந்துகள்,   குடிமயக்கத்தில் ஆழ்த்த ஒருதுளி மது என  முயற்சித்தேன். ஏதோ ஒரு கோபத்தில் கிராமப்பகுதிக்கு மனைவி சென்றிருந்தபோதிலும், அதனால் எனது குடும்ப உறுப்பினர்களுடன் நான் அடைந்த மகிழ்ச்சியில் எவ்வித பாதிப்புமில்லை.  மகிழ்ச்சியை எண்ணற்ற உயிரினங்களுக்கு அளித்துள்ளேன், அதில் நான் ஜெயித்தும் இருக்கிறேன் ஆனால் என்மனைவி விஷயத்தில் ஜெயித்திருப்பதாக சொல்வதற்கில்லை. விதவையான மகாராணி புளோட்டினா சிறியதொரு இல்லத்தில் தியானம் மற்றும் புத்தகங்கள் என்கிற தீவிர மகிழ்ச்சியில் திளைத்திருந்தார், அவரைக் காண அடிக்கடி செல்வதுண்டு. புளோட்டினாவிடம்  நேர்த்தியான  அமைதியொன்றுண்டு, அதனை மீண்டும் காண முடிந்தது. அவர் வாழ்க்கை நீரோட்டத்திலிருந்து வெளியேறிவராகத் தெரிந்தார். அவருடைய  இல்லம் ஒவ்வொரு நாளும் அருங்காட்சியகமாகவும், தெய்வத்தன்மை அடைந்த   பேரரசியின் ஆலயமாகவும் மாறிக்கொண்டிருக்க வீட்டிலிருந்த சிறிய தோட்டமும், ஒளிரும்  அறைகளும்  சுவர்களாக  மாறிக்கொண்டிருந்தன.  எவ்வாறாயினும், புளோட்டினா என்னிடம் கொண்டிருந்த  நட்பு தீவிரமானது, என்னிடம்  அப்பெண்மணிக்கு வேண்டுதல்கள் இருந்தன,  ஆனால் அவை அனைத்துமே சாதுர்யத்துடன் நியாயமும் கொண்டவை. பழைய  நண்பர்களை மீண்டும் சந்தித்தேன்.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்ததன் காரணமாக ஓர்  உன்னத மகிழ்ச்சியை நான் அனுபவித்தேன், புதுப்பிக்கப்பட்ட இந்த நட்பு பரஸ்பரம் எங்களை மறுகணிப்பீடு செய்துகொள உதவியது. முந்தைய நாட்களில் என்னுடைய சந்தோஷத்திற்கும், இலக்கிய முயற்சிகளுக்கும் துணையாக இருந்த நண்பன் விக்டர் வோகோனியஸ் (Victor Voconius) இறந்துவிட்டார்; நான் அவரது  இறுதிச் சடங்கில் உரையாற்ற சம்மமதித்தேன்.  உரையின்போது அங்கு கூடி நின்றவர்கள் மெல்லப் புன்னகைத்தனர் அதற்கு இரண்டு காரணங்கள், முதலாவதாக இறந்த நண்பனின் பண்புகளின் வரிசையில் அவனுடைய  இந்திரிய ஒழுக்கம் குறித்து பேசியபோது எங்கனம் அவனுடைய  கவிதைகளே அதற்கு மாறாக இருந்தன என்பதைக் கூறியிருந்தேன், அடுத்ததாக  இறந்த விக்டர்,  யாரை தனது ‘அழகான வேதனை’  என வர்ணித்திருந்தாரோ, அந்த தேன்குழலுக்குரிய தெஸ்டைலிஸ்(Thestylis) இறுதிச் சடங்கிற்கு வந்திருந்தார். என்னிடமும் பாசாங்குகள் உண்டு, ஆனால் அவை அவ்வளவு மோசமானவை அல்லவென்பதுதான் எனது அபிப்ராயம்: சுவையோடு எடுத்துக்கொண்ட  அனைத்து இன்பங்களும் என்னைப்பொறுத்தவரை  களங்கமற்றவை.  ஒர் இல்லம், உடையவன் இல்லாத நேரத்தில் எத்தகையை  சங்கடத்திற்கும் எப்படி உள்ளாகக் கூடாதோ அதைப்போல உரோம் நகரும் இருக்கவேண்டும் என்பதை மனதில் வைத்து அதனை மறுசீரமைப்பிற்கு  உட்படுத்தினேன். அவ்வகையில், எனது பணினியில் ஒத்துழைக்கப் புதிதாய் வந்தவர்கள்  தங்கள் திறனை நிரூபித்தனர். நெருக்கடிகாலத்தில் எனக்குத் துணைநின்ற நண்பர்களுடன் சமாதானம் செய்துகொண்டு எனது நேற்றைய எதிரிகள் பாலட்டீனில் (Palatine) ஒன்றாக இரவு உண்வை உண்கிறார்கள். நெரேஷுஸ் பிரிஸ்குஸ் (Nératius Priscus) என்னுடைய  மேசையில் நாட்டின் சட்டவரைவுக்கான அவருடைய திட்டங்களைக் கோடிட்டுக் காட்டுகிறார். கட்டிடக் கலைஞர் அப்பல்லோடோரஸ்(Apollodorus)  தம்முடைய செயல்திட்டங்களை விளக்குகிறார். செய்யோனியுஸ் கொம்மொடோஸ் (Ceionius Commodus)  செல்வம் மிக்க உயர்குடி வகுப்பைச் சேர்ந்தவர், எட்ரஸ்கன் வம்சாவளி என்பதால் கிட்டத்தட்ட ராஜபரம்பரையும் இரத்தத்தில் உண்டு.   மதுவைப்போலவே மனிதர்களையும்  நன்கு படித்தவர். செனட் அவையின் அடுத்தக்கட்ட காய் நகர்த்தலுக்கு உதவ என்னுடன் இணைந்திருந்தார்.

அவருடைய மகன் லூசியஸ் சியோனியஸ், அப்போது வெறும் பதினெட்டு வயதே ஆன இளைஞன். இந்த இளம்பிராயத்து ராஜகுமாரனுடைய அழகான சிரிப்பு விருந்துகளுக்கு கலகலப்பூட்டும், ஆனால் எனக்கோ விருந்தில் இவை கூடாத விஷயங்கள்.  அந்த வயதில் ஏற்கனவே அவரிடம்  அபத்தமானதும், பைத்தியக்காரதனத்திற்கு உரியதுமான குணங்கள் இருந்தன. உதாரணத்திற்கு நண்பர்களுக்கு அரியவகை  உணவுகளை  தயாரித்து அளிப்பது, நயநுணுக்கத்துடன் மலர் அலங்காரங்களைச் செய்வது, சூதாட்டங்களிலும், விதவிதமான ஆடை அலங்காரங்களிலும் பைத்தியக்காரத்தனமாக காதல் கொண்டிருப்பதென அவற்றை வரிசைப்படுத்தலாம். போர்க்குணம் அவருடைய சமயம். காமம் தோய்ந்த கவிதைகளை எவ்வித கூச்சமுமின்றி சொல்வார், இருந்தபோதும் அதில் வசீகரமிருக்கும். அவரிடம் வாக்குறுதிகளை அளித்துவிட்டு பின்னர் நான் வருத்தப்பட்டதுண்டு. ஆடிக்களித்த இப்பதின்வயது ஃபோன் (Faune) (ரோமானிய புராணக்கதையின் படி ஓர் தெய்வீக மனித ஆடு) என் வாழ்க்கையில் ஆறு மாதங்களை ஆக்கிரமித்திருந்தான்.

லூசியஸுக்கும் எனக்குமானத் தொடர்பு அடிக்கடி விட்டுப்போகும், ஒருவருடம் தவறினால்கூட, அடுத்துவரும் வருடங்களில் எப்படியும் திரும்பக் காண்பேன், இருந்தும், எந்தவொரு கட்டத்திற்கும் பொருந்தாது, கணத்தில் தோன்றி மறைகிற அவரது இருப்பு அடுக்கடுக்கான நினைவுகளால்  கட்டமைக்கப்பட்ட  ஒரு வடிவம், அதனை பத்திரமாக கட்டிக்காப்பது எனக்குச் சுலபமல்ல. பண்பட்ட நாகரீகத்தில்தோய்ந்த  உரோமாபுரியின்  சற்று கர்வம்பிடித்த நீதியரசர், வளரும் பேச்சாளர், புதிய பாணிகளைத் தயக்கத்துடன் பின்பற்றுபவர்,  கடினமான விஷயத்தில் என் ஆலோசனையை நாடி, மெல்லியதாடியை வருத்திக்கொண்டு பதற்றப்படும் ஓர் இளம் அதிகாரி, சாகும்வரை ஓயாமல் இருமிக்  களைத்த மனிதர் என அவருடைய பலவடிவங்கள் மனதில் இருக்கின்றன. லூசியஸின் பதின்பருவ உருவத்தை என்னுடைய நினைவகத்தின் இரகசிய பெட்டகத்தில் ஒளித்து வைத்திருக்கிறேன்: முகமும், உடலும்,  சற்றே வெளிரிய ரோஜா நிற சலவைக்கல் ஒத்த தோற்றமும் கவிஞர் கால்லீமாக் காதல் அங்கதக் கவிதைக்குச் சரிசமமானவை, கவிஞர் ஸ்ட்ராடொவின் அலங்காரமற்ற தெளிவான ஒரு சில கவிதை வரிகளுக்கு நிகரானவை. 

ஆனால் நான் உரோம் நகரை விட்டு வெளியேற ஆர்வத்துடன் இருந்தேன். எனது முன்னோடிகள்  இதுநாள்வரை குறிப்பாக யுத்தங்களுக்காகமட்டுமே இந்நகரைப் பிரிந்தனர்.  நானோ யுத்தங்களுக்கன்றிப் பெரிய திட்டங்கள், அமைதி நடவடிக்கைகள் ஆகியவற்றிற்காகவும்  பிரிந்திருக்கிறேன், உண்மையில் எனது வாழ்க்கையே உரோமின் அரண்களுக்கு வெளியே தொடங்கியதுதான்.

இறுதியாக நான் செய்யக்கூடிய கடமை ஒன்று எஞ்சியிருந்தது.  நோய்வாய்ப்பட்ட திராயான் இறுதிநாட்களில் அவரைவிடாமல் துரத்திய கனவுகளுக்கு அச்செயல் வெற்றியைக் கொடுக்கின்ற ஒரு விஷயம். ஒரு மனிதனுடைய வெற்றி இறப்பிற்குப் பிறகே அடையாளம் பெறுகிறது. உயிர் வாழ்க்கையின்போது நம்மைக் குறைகூறவென்று யாரேனும் ஒருவர் எப்பொழுதுமுண்டு, சீசர் வாழ்ந்த காலத்தில் அவருடைய வழுக்கையையும், காதல்களையும் கூட விமர்சிக்க மனிதர்கள் இருந்தனர். ஆனால்   ஒரு கல்லறையின் இந்த வகை உத்தியோகபூர்வ  திறப்பு விழாவிற்கு,;   அதாவது பல நூற்றாண்டுகால மகிமைக்கும்,  பல்லாயிரம் ஆண்டுகால மறதிக்கும் முன்பாக  இப்படி  சிலமணிநேர பகட்டான ஆரவாரத்தைப் பெறுவதற்கு, இறந்த ஒரு மனிதனுக்கு உண்மையில் உரிமையுண்டு. மரித்த ஒருவனின் பெருமை அவனுடைய பின்னடைவுகளையும் கணக்கிற்கொண்டது;  அவனது தோல்விகள் கூட வெற்றியின் சிறப்பைப் பெறுகின்றன. திராயான் பார்த்தியர்கள் மீதான யுத்தத்தில் பெற்ற ஐயத்திற்குரிய வெற்றியை  நினைவுகூர்ந்து கொண்டாடியது,  வாழ்நாள்முழுவதும் அவருடைய கௌரவத்தை நினைவூட்டும் வகையில் அம்முயற்சி இருந்தது என்ற  காரணத்தால். அகஸ்டஸின் முதுமை காலத்திற்குப் பிறகு  உரோம் அறியவந்த, ஒரு சிறந்த பேரரசரைக் கொண்டாட நாங்கள் ஒன்று கூடினோம். பணியில் விடாமுயற்சி, நேர்மையின் உச்சம், அநீதிகளை மிகக் குறைவாக இழைத்தவர் என்கிற பெருமைக்குரியவர் திராயான். குறைகள் கூட ஒரு வகையில்  அவருடைய தனித்தன்மைகளுக்கான அடையாளங்களன்றி வேறில்லை என்பதை ஒரு மார்பளவு  பளிங்குச் சிலையும் முகமும் மிகச்சரியாக நமக்குணர்த்தும்.  சக்கரவர்த்தியின் ஆன்மா சொர்க்கத்திற்குச் சென்றது. அதனை செய்துமுடித்தது திராயான் தூணிலுள்ள அசைவற்ற திருகுச் சுழல்கள். என் வளர்ப்புத்தந்தை இன்றைய தினம் ஒரு கடவுள்.  பல நூற்றாண்டுகளாக இவ்வுலகில் அதிர்வினை ஏற்படுத்தவும், புதுப்பிக்கவும் என்றே பிறந்த போர்க்குணமிக்க வீரர்கள் பலர் என்றென்றும் நிலைபெற்று இருக்கக்கூடிய செவ்வாய் கோளில் இடம் பெற்றுள்ளனர், அவ்வரிசையில் இன்று திராயான். பாலட்டீனியா பால்கனியில் நின்று, அவருக்கும் எனக்குமுள்ள வேறுபாடுகளை கணக்கிட்டிருக்கிறேன், அமைதியான சில முடிவுகளை முன்வைத்து என்னை வழிநடத்த ஆரம்பித்தேன், என்னிடம் அப்போது இருந்தவையெல்லாம்  உண்மையான  ஒலிம்பியன் இறையாண்மைக் கனவுகள்.

தொடரும்….

Series Navigation<< அதிரியன் நினைவுகள் -14அதிரியன் நினைவுகள் – 16 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.