1/64 நாராயண முதலி தெரு – 4

This entry is part 4 of 4 in the series 1/64, நாராயண முதலி தெரு

1974

 தாமு கைகள், தலைமுடி எல்லாம் வண்ணக் கலவையாகப் பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பி வந்து, புத்தகப் பையை இறக்கி வைத்தான்.

     “என்ன கண்றாவிடா இது.. பூச்சாண்டி மாதிரி.. யூனிபார்ம் முழுக்க ஒரே கலர் கலரா இருக்கு..” என்று சுந்தரவல்லி அலறினாள்.

     “இன்னிக்கி ‘ஹோலி’ பண்டிகைமா.. சௌகார்பேட்டையில மார்வாடி பசங்க எங்க ஸ்கூல் வாசல்ல நின்னுண்டு எல்லார் மேலயும் சாயம் பூசி ஒரே அமர்க்களம் பண்ணிட்டா..”

     “வெள்ளை சட்டை எப்படி பாழாயிடுத்து பாரு.. எவ்வளவு தோய்ச்சாலும் கறை லேசுல போகாது.. மூஞ்சி பூரா பட்டிருக்கு.. போய் நன்னா குளிச்சுட்டு வா..”

     “இங்க பாரும்மா.. “ என்று காக்கி டிராயர் பாக்கெட்டிலிருந்து சின்னஞ்சிறிய பொம்மைகளை எடுத்துக் காண்பித்தான்.

     “காண்டாமிருகம்.. ஒட்டகச்சிவிங்கி.. முள்ளம்பன்னி.. என்னது இது.. எல்லாம் மிருகமாயிருக்கேடா..”

     “தனசேகர் குடுத்தான்.. ‘பினாகா’ டூத் பேஸ்ட் ஒவ்வொரு டப்பாவிலயும் ஃப்ரீயா வர்றதாம்.. இந்த மாதிரி நிறைய சேர்த்துக்கான்மா.. அவன்கிட்ட சிலது ரெண்டு மூணு இருக்கு.. அதையெல்லாம் என்கிட்ட தந்துட்டான்.. “ என்றான் தாமு உற்சாகத்துடன் “எனக்கும் கலெக்ட் பண்ணணும்னு ஆசையாயிருக்கு.. நாம்பளும் இந்த ‘நஞ்சன்கூட்’ பல்பொடிக்கு பதிலா அதை வாங்கலாம்மா..”

     “அப்பாகிட்ட சொல்லிப் பாரு.. எதையும் லேசுல மாத்த மாட்டா..”

     தாமு குளித்து விட்டு சீக்கிரமாகவே வீட்டுப் பாடம் எழுத உட்கார்ந்தான்.  இரவு வேளைகளில் சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் படிப்பது அவனுக்குச் சிரமமாக இருந்தது. ஒரு தடவை கொழுந்து விட்டெரியும் அதன் தீச்சுடரில் அவனுடைய தலைமயிர் கொஞ்சம் பொசுங்கி விட்டது. அதிலிருந்து அவன் மெத்தைக்குப் போய் வாசிக்க ஆரம்பித்தான்.  கார்ப்பரேஷன் தெரு விளக்கின் பிரகாசமான டியூப்லைட் ஒளி அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் பரவும். 

     கணக்குப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு ‘பித்தகோரஸ் தேற்றம்’ பற்றி அன்று வாத்தியார் நடத்தியதை போட்டுப் பார்த்தான். சரியாகப் புரியவில்லை. சாம்பவி மாமி பையன் கணிதத்தில் புலி என்றும் தனக்கு அல்ஜீப்ராவில் நிறைய சந்தேகங்களை அவன் நிவர்த்தி செய்ததாகவும் மேனகா முன்பொரு முறை சொன்னது நினைவுக்கு வந்தது.  பட்டாசு தந்த தைரியத்தில் நோட்டை எடுத்துக் கொண்டு அவர்கள் போர்ஷனுக்குள் சென்றான். 

     “பிதாகரஸ் தியரம் தானே..  ரொம்ப ஈஸியாக்கும். இப்போ..  ஒரு முக்கோணத்தோட மூணு பக்கமும் சம அளவுல இருக்கணும்னு அவசியமில்லை கேட்டியா.. “ என்று விளக்க ஆரம்பித்தான் அவன்.  தாமு அதை முழுமையாக கிரகித்துக் கொண்டு வெளியே வரும் போது வாசலில் யாரோ “எம்மோவ்.. ஏம்ப்பா..” என்று கூப்பிடுவது கேட்டது. ஓடிப் போய்ப் பார்த்தான்.

     அனந்தசயனம் பணிபுரியும் நிறுவனத்தில் கூலி வேலை செய்யும் தில்லிபாபு “அம்மா இல்லியா.. கூப்பிடு..” என்றான்.  பேச்சுச் சப்தம் கேட்டு சுந்தரவல்லியும் வேகமாக வந்தாள்.

     “அய்ங்கார் சாரு ஆபீசுல ரொம்ப நேரமா விடாம இரும்பிக்கினே இருந்தாரும்மா.. திடீர்னு ரத்த வாந்தி எடுத்துட்டாரு.. “

    “ஐய்யய்யோ.. “ என்று அம்மா அலற, தாமுவும் பதறிப் போய் “இப்ப அப்பா எங்கே.. என்னாச்சு அவருக்கு..” என்றான்.

     “ஒன்னும் கவலப்படாத.. மொதலாளி அவரை ஜென்ரல் ஆஸ்பித்திரிக்கு இட்டுகினு போசொல்டாரு.. நம்ம கடையில இருக்காரே வேணு சாரு.. அவரும் கூட போயிருக்காரு.. உங்களாண்டை தகவல் சொல்லிட்டு வரச் சொன்னாரும்மா.. ‘ஜிஎச்’சுக்கு போய் பாரு…” என்று கூறிவிட்டு கைவண்டியை இழுத்துக் கொண்டுச் சென்றான்.

     சுந்தரவல்லி “ஏழுமலையானே.. அவருக்கு ஒண்ணும் ஆயிடக் கூடாது..” என்று வேண்டியவாறே சிவகாமசுந்தரியிடம் கைமாத்தாக பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு, சில்லறையைப் புடவைத் தலைப்பில் முடிந்து கொண்டாள். தாமுவுடன் வேகமாக பூக்கடை பஸ் ஸ்டாப்புக்கு நடந்து போய், பதினெட்டாம் நம்பர் சிவப்பு பல்லவனில் ஏறி சென்ட்ரல் ஸ்டேஷன் எதிரே இறங்கினாள். சென்னை அரசுப் பொது மருத்துவமனையின் தகவல் மையத்தில் விசாரித்து உள்ளே சென்றனர்.

    ஸ்பத்திரியின் மாடியில் நுரையீரல் நோய் சிகிச்சைப் பிரிவின் நீளமான பெஞ்ச்சில் உட்கார்ந்து கொண்டு சலவைக்கல் பதித்த சுவற்றில் சாய்ந்தபடி அனந்தசயனம் இருமிக் கொண்டிருந்தார். பக்கத்தில் வேணுகோபாலன் கையில் ‘எக்ஸ் ரே’ மற்றும் மருந்துச் சீட்டுகளுடன் காத்திருந்தார்.

    சுந்தரவல்லி ஒடிப்போய் “என்னன்னா ஆச்சு.. ரத்த வாந்தி எடுத்தேளாமே..” என்று பதறினாள்.  தாமு அப்பா கையைப் பிடித்துக் கொண்டான்.

    “இரும்பல் அதிகமாயிடுத்துடி.. கோழையை துப்பும் போது ஒரேயொரு சொட்டு ரத்தம் வந்துது.. அதுக்கு போயி எல்லாருமா சேர்ந்து அமர்க்களப்படுத்திட்டா.. எனக்கு ஒண்ணுமேயில்ல.. “ என்று இருமிக் கொண்டே சொன்னார்.

     வேணு “பயப்படும்படியா எதுவுமில்ல மாமி.. டாக்டரை பார்த்தோம்.. ‘லங்க்ஸ்’ ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கு.. ‘டிபி’யா இருக்கலாம்னு சந்தேகப்படறார்.. ஒரு வருஷத்துக்கு விடாம மாத்திரை சாப்பிட்டு.. ஊசி போட்டுண்டா சரியாயிடும்னார்..” என்றார் “இப்போதைக்கு கீழே பார்மசியில மருந்து வாங்கிண்டு போயிடுங்கோ.. பைசா எதுவும் குடுக்க வேண்டாம்.. நீங்க சொன்னேள்னா, நர்ஸ் ஆத்துக்கே வந்து அப்பப்ப டேப்லெட்ஸ் குடுத்துட்டு இன்ஜெக்‌ஷன் போட்டுட்டு போவாளாம்.. ஒண்ணும் கவலைப்படாதேள்.. “

     தாமு அந்த ‘பிரிஸ்கிரிப்ஷனை’ வாங்கிப் படித்துப் பார்த்தான் ‘ஐஸோநெக்ஸ்’ மாத்திரையும் ‘ஸ்ட்ரெப்டோமைசின்’ ஊசியும் எழுதப்பட்டிருந்தது.

    “ஆபீஸ் குடோன்ல எப்பவும் தூசி தும்புக்கு நடுவுல இருக்கறது இவர் ஒடம்புக்கு ஒத்துக்கலை.. அதோட.. புகையிலை போடறதை நிறுத்தித் தொலைங்கோன்னு சொன்னா கேட்க மாட்டேங்கறார்..” என்றாள் அம்மா.

     “நான் இனிமே ஒனக்கு வெத்தலை பாக்கு கூட வாங்கிண்டு வர மாட்டேம்ப்பா..” என்றான் தாமு பொய்யான கோபத்துடன். அனந்தசயனம் அவனைக் கட்டியணைத்துக் கொண்டார்.

     வேல் வைத்துக் கொண்டு ஜில்பா தலைமுடியுடன் இருக்கும் பாலமுருகன் படம் போட்ட தினசரி காலண்டரில் பழைய தேதியைக் கிழித்துவிட்டு அன்றைய நாளைக்கான விவரங்களைப் படிக்க ஆரம்பித்தான் தாமு.

    “14-4-1974 ஞாயிற்றுக் கிழமை ஆனந்த வருஷம் சித்திரை ஒன்று தமிழ்ப் புத்தாண்டு விஷு புண்யகாலம் ஈஸ்டர் திருநாள் உத்தராயணம் வசந்த ருது கொல்லம் 1149 ஹிஜ்ரி 1394  பூராடம் நட்சத்திரம் சப்தமி/அஷ்டமி திதி சித்த/ அமிர்த யோகம்..”

    தமிழ் வருடப் பிறப்பு என்றாலே தாமுவுக்குக் கொண்டாட்டம் தான். அம்மா மாங்காய் போட்டு வெல்லப் பச்சடி செய்வாள். அது அவனுக்கு ரொம்பப் பிடித்தமான ஒன்று. அதில் இனிப்பு புளிப்பு காரம் போன்ற அறுசுவைகளும் இருக்கும்.  ‘இதே மாதிரி நம்ம வாழ்க்கையிலயும் சந்தோஷம் ஏமாற்றம் ஆச்சர்யம் வருத்தம் எல்லா அனுபவங்களும் கலந்து வரும். அதையதை அப்படியே ஏத்துக்கணும்கறதுக்கு அடையாளமாதான் இதை பண்றோம்’ என்று அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது.

     புதிதாக வாங்கிய பாம்புப் பஞ்சாங்கம் பூஜை மாடத்தில் தயாராக  இருந்தது. அனந்தசயனம் குளித்து விட்டு திருமண் காப்பு தரித்துக் கொண்டு தாமுவுக்கும் நெற்றியில் ‘ஒற்றை’ இட்டு விட்டார்.  பெருமாள் சேவித்து விட்டு இருவரும் உணவருந்த அமர்ந்தனர்.

     “சாயங்காலம் அண்ணாமலை மன்றத்துக்கு போலாம்..”  

     “என்னால அவ்ளோ தூரம் நடக்க முடியாதுன்னா.. நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்கோ..” என்றாள் சுந்தரவல்லி.

     “பாரிஸ் கார்னர் கிட்டே இருக்கே அதுவாப்பா..   அங்க என்ன விசேஷம்..”

     “பிராட்வேயில ஹை கோர்ட் பக்கமா போனா வருமே.. அதுதான்டா.. இன்னிக்கி நாதஸ்வர கச்சேரி.. அப்பறம் தமாஷா சில ‘ஸ்கிட்’ எல்லாம் போடுவா..”

     சாப்பிட்டு முடித்ததும் ஞாபகமாக அப்பாவுக்கு மாத்திரை எடுத்துக் கொடுத்தான் தாமு. இப்போதெல்லாம் அது அவனுடைய அன்றாடக் கடமையாகி விட்டது.

     மாலை இருவரும் என்.எஸ்.சி.போஸ் ரோடில் ஐந்தாம் ஜார்ஜ் சக்ரவர்த்தியின் சிலையைத் தாண்டி சைனா பஜார் போக்குவரத்து நெரிசல்களைக் கடந்து ‘எஸ்பிளனேட்’ பக்கம் திரும்பி அரங்கத்தை அடைந்தனர்.

     பிரம்மாண்டமான தூண்களுடன் கூடிய கட்டிடத்தின் மேல் ‘தமிழ் இசைச் சங்கம்’ ‘ராஜா அண்ணாமலை மன்றம்’ என்ற எழுத்துக்கள் வண்ண விளக்குகளில் ஒளிர்ந்தன. நுழைவாயிலில் ஆர்.எஸ்.மனோகரின் ‘இலங்கேஸ்வரன்’  சோவின் ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ போன்ற நாடகங்களுக்கான அறிவிப்புப் பலகைகள் காணப்பட்டன.

     அரங்கின் உள்ளே நுழைந்ததும் சில்லென்று இருந்தது. “என்னப்பா இவ்ளோ குளிர்றது.. ஏர் கண்டிஷனர் பண்ணியிருக்காளா..” என்றான் தாமு. அவன் அதை முதல் முறையாக அனுபவித்தான். 

     மேடையில் தவில் வித்வான்கள் ஆவேசமாக வாசித்துக் கொண்டிருக்க, நாதஸ்வரக் கலைஞர்கள் தாளம் போட்டபடி காத்திருந்தனர்.  கச்சேரி முடிந்ததும் சில நகைச்சுவைக் குறுநாடகங்களும் நடத்தப்பட்டன. 

     தாமு எல்லாவற்றையும் ரசித்துப் பார்த்து மகிழ்ந்தான். நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும்போது அப்பாவிடம் கேட்டான்  “இந்த ப்ரோக்ராமுக்கு டிக்கெட் எவ்ளோப்பா.. ஏசி ஹால் வேற.. காஸ்ட்லியா இருக்குமே.. நிறைய ரூபா குடுத்து எப்படி வாங்கினே..”

     “சித்திரை வருஷப் பிறப்பு அன்னிக்கு மட்டும் இங்க ‘அனுமதி இலவசம்’டா.. அதனாலதான் உன்னை அழைச்சுண்டு வந்தேன்..” என்றார் அனந்தசயனம்.

     தாமு, சிவகாமசுந்தரியின் போர்ஷனுக்குள் நுழைந்து “மாமீ.. உங்காத்து விநாயக சதுர்த்திக்கு நானே குடை தயார் பண்ணி கொண்டு வந்திருக்கேன்..” என்றான்.

    “ஜோரா இருக்கே.. எப்படிடா செஞ்சே இவ்ளோ அழகா..” என்று வியந்தாள் “மேனகா.. இங்க பாருடி..”

     “போன தீபாவளிக்கு வாங்கின ராக்கெட்டோட கொம்பு.. அட்டையில வட்டமா கத்தரிச்சு அதுல சொருகி.. மேல கலர் காகிதம் எல்லாம் ஒட்டி.. பக்கவாட்டுல ஜிகினா பேப்பர் தொங்க விட்டேன்..” 

     “அப்பா மாதிரியே பிள்ளை..  அந்த பிள்ளையார் பொம்மைக்கு பின்னாடி நிக்க வை..”  என்று சொல்லிவிட்டு சமையல்கட்டுக்குச் சென்றாள்.

     அவன் மணைப்பலகை மீது இருந்த சிறிது களிமண்ணை எடுத்து அதில் குடையைச் செருகி பின்பக்கம் வைத்தான்.

     “இந்தா தாமு.. மோதகம்.. ஆமவடை.. பாயசம்.. எல்லாம் எடுத்துக்கோ..” என்று தட்டை நீட்டினாள் தில்லை மாமி. “சுவாமி கால்மாட்டுல மூஞ்சூறு பண்ணி வெச்சிருந்தனே.. எங்கடா காணோம்..”

     “ஓ.. அது சுண்டெலியா.. நான் அதுலதான் குடையை நிக்க வெச்சுட்டேன்.. ஸாரி மாமி..”

     “பரவாயில்லை விடு.. கணபதி, வாகனம் இல்லாம நடந்தே போகட்டும்.. ” என்றாள் சிரித்துக் கொண்டே.

     மேனகா “கொடை மட்டுமில்ல.. கோகுலம் புஸ்தகத்தை பார்த்து    ‘வாலாட்டும் நாய்க்குட்டி’  ‘குதிக்கும் கோபாலன்’னு விதவிதமா அட்டையில பண்ணியிருக்கான்மா இவன்.. கைவேலையில கெட்டிக்காரன்..” என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தாள்.

     “அப்பாக்கு இப்ப ஒடம்பு எப்படிடா இருக்கு.. மருந்து எல்லாம் ஒழுங்கா சாப்பிடறாளா..” என்று அக்கறையாய் விசாரித்தாள் சிவகாமசுந்தரி.

     “பரவாயில்ல மாமி.. இருமல் குறைஞ்சிருக்கு.. வேளா வேளைக்கு நானே மாத்திரையை எடுத்துக் குடுத்துடறேன்..” 

     “சமத்துடா.. ஒனக்கு பொறுப்பு வந்துடுத்து.. நான் பார்த்து வளர்ந்த பையன் நீ.. சின்ன வயசுல பெருமாள் விக்ரகங்களை வெச்சுண்டு விளையாடிண்டு இருப்பியே. உங்கப்பா மரத்துல ஒரு தேர் பண்ணிக்குடுத்தார்.. ஸ்வாமிக்கு ஊஞ்சல் கட்டி.. கோவில்ல பண்ற மாதிரியே அபிஷேகம் எல்லாம்   பண்ணுவே.. “

    “நீங்க தானே திருமஞ்சனத்துக்கு பாலு தயிரு எல்லாம் தருவேள்..  கனகாம்பரம், தவனம்னு ரகரகமா பூவுல மாலை கட்டி கொடுப்பேளே.. “

     “ஆமான்டா.. இப்ப நீ பெரியவனாயி எட்டாங்கிளாஸ் போயாச்சு.. அதையெல்லாம் விட்டுட்டே..”

     “அந்த விக்ரகம் எல்லாம் பத்திரமா வெச்சிருக்கேன் மாமி.. பழையபடி ஆத்துலயே பெருமாளுக்கு உற்சவம் பண்ணனும்னு ஆசைதான்.. நேரமில்லை.. படிப்பு எழுத்து அதிகமாயிடுத்து..” என்றான் தாமு.

1975

     னந்தசயனம் அன்று கூடுதலாக ‘ஹிண்டு’ பேப்பரும் வாங்கினார். முதல் பக்கத்தில் தலைப்புச் செய்திகளை வாசித்துவிட்டு ஆத்திரத்துடன் அதைக் கொண்டு போய் ராமச்சந்திரனிடம் காண்பித்தார். 

     “ஐயர்வாள்.. உங்க காங்கிரஸ் தலைவி பண்ணியிருக்கற காரியத்தை பாருங்கோ.. “ என்று ஆங்கிலச் செய்தித்தாளை நீட்டினார்.  ஈஸிசேரில் சாய்ந்து கொண்டிருந்தவர் எழுந்து மூக்குக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு அதை வாங்கிப் படித்தார்.

    “THE HINDU – MADRAS EDITION – THURSDAY 26TH JUNE 1975 –   “PRESIDENT FAKHRUDDIN ALI AHMED PROCLAIMS NATIONAL EMERGENCY – SECURITY OF INDIA THREATENED BY INTERNAL DISTURBANCES – PREVENTIVE ARRESTS : PRESS CENSORSHIP IMPOSED – PRIME MINISTER INDIRA GANDHI EXPLAINS ACTION”

    “நானும் ‘மெயில்’ பத்திரிகையில பார்த்தேன்.. மேடம் நல்லது தானே பண்ணியிருக்கா அனந்து..”

    “எது.. இந்தியா முழுக்க கிட்டத்தட்ட எழுநூறு லீடர்ஸை கைது பண்ணதா..  ராத்திரியோட ராத்திரியா அவாளை ஜெயில்ல அடைச்சதா.. போலீஸ் அராஜகம் தாண்டவமாடியிருக்கு..”

     “நாட்டுல சட்டம் ஒழுங்கு பிரச்னை வராம இருக்கணும்கறதுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை அது..”

     “ஜெயப்பிரகாஷ் நாராயணன், சரண் சிங், கிருபளானி, ராஜ் நாராயண், மொரார்ஜி தேசாய்.. எல்லாரும் அரெஸ்ட் ஆயாச்சு.. ஒரு எதிர்க்கட்சி தலைவரையும் விட்டு வெக்கலை.. நல்ல வேளை, எங்க ராஜாஜி மேலே போய் சேர்ந்துட்டார்.. இல்லேன்னா அவரையும் பிடிச்சு உள்ளே போட்டிருப்பா இந்திரா..” 

     இருவரும் காரசாரமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த தாமு அங்கே வந்தான்.  “என்னப்பா ஆச்சு.. ‘எமர்ஜென்சி’ன்னா என்னது…”

     “நெருக்கடி நிலைடா.. இனிமே மத்திய அரசாங்கத்தை கேட்காம நாம்பள்ளாம் மூச்சு கூட விடக்கூடாது..”

     ராமச்சந்திரன் “இதனால ஜனங்ககிட்ட ஒரு கட்டுப்பாடு, ஒழுக்கம் ஏற்படும்.. கவர்மென்ட் ஆபீஸ்ல எல்லாரும் டயத்துக்கு வருவா.. வேலை சீக்கிரமா முடியும்.. எதுக்கும் லஞ்சம் குடுக்க வேண்டாம்..  ரயில் வண்டி சரியான நேரத்துக்கு கிளம்பும்,  போய்ச் சேரும்.. திருட்டு கொள்ளை எல்லாம் குறைஞ்சுடும்.. இந்த மாதிரி நிறைய நல்லதும் நடக்கும்.. நீங்க வேணா பாருங்கோ..” என்றார்.

     அனந்தசயனமும் விடாமல் “பத்திரிகைகள் சுதந்திரமா எதையும் எழுத முடியாது.. பேப்பருக்கும் சென்சார் வந்தாச்சு.. ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிக்கறவாளுக்கு கொண்டாட்டம்..” என்று பதிலளித்தார்.

     அப்பாவுக்கும் மாமாவுக்கும் வாய்ச்சண்டை முற்றிக் கொண்டே போய் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு விடுமோ என்று தாமு கவலைப்பட ஆரம்பித்தான். அவன் வழக்கமாக முடிவெட்டிக் கொள்ளும் சலூனில் பார்த்த ‘இங்கு அரசியல் பேசக் கூடாது’ என்ற பலகை ஞாபகம் வந்தது. அதே மாதிரி ஒன்றை இங்கேயும் கட்டித் தொங்கவிடலாமா என்று தோன்றியது.

     தெய்வாதீனமாக அந்தச் சமயம் பார்த்து ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து வந்த செவிலியர் பெட்டியோடு வீட்டிற்குள் நுழைந்தாள். 

     “அப்பா.. ஊசி போட நர்ஸ் வந்திருக்கா.. வா..” என்று தாமு அவர் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.

சாம்பவி மாமி தன்னிடம் கொடுத்தனுப்பியச் சீட்டைப் படித்துக் கொண்டே வந்தான் தாமு. “இதுல ‘குடக்கூலி ரசீது’ன்னு போட்டிருக்கே… அப்படின்னா என்னதும்மா..” 

     “நாம்ப மாசா மாசம் வாடகை குடுக்கறமோன்னோ.. அதுக்கு அத்தாட்சிடா“ என்றாள் சுந்தரவல்லி.

     “‘சி.அனந்தசயனம் அய்யங்காரிடமிருந்து பதினைந்து ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டேன்’னு இருக்கு.. நீ இருவத்தஞ்சு ரூபா குடுத்தியே.. நான் பார்த்தேன்.. “

     அவள் மெதுவான குரலில் “பத்து ரூபாயை மாமி எடுத்துண்டறா…” என்றாள்.

     “அது தப்பு தானேம்மா..” 

     “இவ்வளவு கம்மியான வாடகைக்கு வேற எங்கயும் வீடு கிடைக்காதுடா.. அதனால நாங்களும் கண்டுக்கறதில்லை..”

     “அதுக்காக. அவா இந்த மாதிரி… “ என்று ஆரம்பித்த தாமுவைத் திசை திருப்பினாள்.

     “இப்போ.. நம்ம கிட்ட வாட்ச்.. அலாரம் டைம்பீஸ்.. ஏதாவது இருக்கா..”

     “இல்லே.. எதுக்குமா கேக்கறே..” 

      “மணி தெரிஞ்சுக்கறதுக்கு நீ என்ன பண்ணுவே..”

     “சாம்பவி மாமியாத்து ஜன்னல் வழியா சுவர் கடிகாரத்துல பார்த்துண்டு வருவேன், பள்ளிக்கூடம் கிளம்பறதுக்கு நேரமாயிடுத்தான்னு…”

     “அப்பறம்.. அவாகிட்ட தானே ரேடியோ இருக்கு..”

     “டெலிஃபங்கன் டிரான்சிஸ்டர் வெச்சிருக்கா..”

     “அதுல நாம ஒலிச்சித்திரம்.. வண்ணச்சுடர்.. தேன்கிண்ணம்.. மாநிலச் செய்திகள்.. எல்லாம் ஓசியில கேட்கறோமா.. இல்லையா..” 

     “ஆமா.. நானும் விவித்பாரதியில ‘ஹார்லிக்ஸ் சுசித்ராவின் குடும்பம்’.. ‘போர்ன்விடா க்விஸ் கான்டெஸ்ட்‘.. அப்பறம்.. ‘சிறுவர் சோலை’  கேட்டுண்டிருக்கேன்..”

     “இதுக்கெல்லாம் சேர்த்து தான் அந்த பத்து ரூபான்னு வெச்சுக்கோயேன்..” என்றாள் சுந்தரவல்லி.

னசேகர் பள்ளிக்கூட வாசலிலேயே ‘ஹீரோ’ மிதிவண்டியில் காத்திருந்து நண்பன் தொலைவில் வருவதைப் பார்த்ததும் அவனருகில் சென்றான். 

     “என்னடா.. புதுசா வாங்கியிருக்கியா..” என்ற தாமு பெல்லை அடித்துப் பார்த்தான் “டைனமோ கூட இருக்கே.. “

     “இத்தனை வருஷமா ‘அவர்’ சைக்கிள் எடுத்து சுத்திகிட்டிருந்தேன்.. இன்னிக்கி  பிறந்த நாளைக்கு வீட்டுல சொந்தமாவே வாங்கிக் குடுத்துட்டாங்க..”

     “மறந்தே போயிட்டேன்டா.. ‘ஹேப்பி பர்த்டே’..” என்று கைகுலுக்கினான்.

     “தேங்க்ஸ்டா.. காலேஜ் சேர்ந்தவுடனே ‘லாம்ப்ரேட்டா’ ஸ்கூட்டர் கேட்டிருக்கேன்..”

     “அது சரி..  இதுக்கு என்ன ‘ட்ரீட்’ குடுக்க போறே..”

    “ஸ்கூலை கட் அடிச்சுட்டு நாம ரெண்டு பேரும் ஜாலியா சுத்தறோம்.. எல்லா செலவும் என்னோடது..”

     “அய்யய்யோ.. பள்ளிகூடத்துக்கு மட்டம் போடறதாவது.. நான் மாட்டேன்ப்பா.. வீட்டுல தெரிஞ்சா அவ்வளவுதான்.. தோலை உறிச்சுடுவாங்க..”

     “தாமோதர்.. ஒம்பதாவது படிக்கறடா.. மீசை முளைக்க ஆரம்பிச்சாச்சு.. ரெண்டு வருஷத்துல ‘ஸ்கூல் ஃபைனல் எக்ஸாம்’ எழுத போறே.. இன்னமும் பயந்தாங்கொள்ளியா இருக்கியே.. “

     “எத்தனை வயசானா என்னடா.. அம்மாப்பாக்கு தெரியாம எந்தக் காரியமும் செய்ய மாட்டேன்..  பரிட்சை வரப் போறது.. கிளாஸை மிஸ் பண்ண கூடாது..” என்றவாறே பள்ளியை நோக்கி நடந்தான்.

     தனசேகர் அவனை வண்டியால் வழிமறித்து “எனக்கு மட்டும் படிப்புல அக்கறை இல்லியா என்ன.. இன்னிக்கி ரெண்டு பீரியட் இங்கிலீஷ்.. அவர் ஏற்கெனவே போர்ஷனை முடிச்சுட்டு ‘ரிவிஷன்’ பண்ணிட்டிருக்காரு.. அதுக்கப்பறம் ‘தியாலஜி’.. அடுத்து டிராயிங் க்ளாஸ்.. மத்தியானம் முழுக்க ‘பி.டி.’ அந்த மாஸ்டர் வழக்கம் போல கண்ணப்பர் திடலுக்கு வரச் சொல்லிடுவாரு..”

     “நீ சொல்றது வாஸ்தவம் தான்டா.. இன்னிக்கி லீவு போட்டா பெரிய நஷ்டம் ஒண்ணுமில்ல..  இருந்தாலும்..” என்றான் தாமு.

     “அப்பறம் என்ன.. பின்னாடி உட்காரு.. முதல்ல பார்வதி லஞ்ச் ஹோம்க்கு போறோம்.. மூக்கை பிடிக்க சாப்பிடறோம்..  மினர்வா தியேட்டர்ல ‘கிரேஸி பாய்ஸ் ஆஃப் த கேம்ஸ்’ படம் பார்க்கறோம்.. பயங்கர காமெடியா இருக்கும்.. அதுக்கப்பறம் எக்ஸிபிஷன்..” என்று அடுக்கிக் கொண்டே போனான்.

     “எனக்கென்னமோ பயமா இருக்குடா.. ஸ்கூல் கட் அடிச்சா பெரிய பிரச்னை ஆயிடும்..” 

     “நீ என் க்ளோஸ் ஃப்ரெண்ட் தானே.. பிறந்த நாளும் அதுவுமா என்னை ஏமாத்தாதே.. சைக்கிள்ல ஏறுடா..” என்று அவனைக் கட்டாயப்படுத்தி ‘கேரியரில்’ அமரச் செய்து பெடலை வேகமாக மிதிக்க ஆரம்பித்தான்.

     ஓட்டலில் தாமு ஒப்புக்கு ஏதோ சாப்பிட்டான். ஆங்கிலத் திரைப்படத்திலும் அவன் மனம் லயிக்கவில்லை. எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்க அவனுக்கு மட்டும் குற்ற உணர்ச்சி வாட்டியது.  

     “சினிமா முடிஞ்சவுடனே நான் போயிடறேன்டா.. வேறெங்கேயும் வரலை..” 

     “சீக்கிரம் வீட்டுக்கு போனா அம்மா கேக்க மாட்டாங்களா..”

     “’பி.டி. க்ளாஸ்க்கு போகலை.. பரிட்சைக்கு படிக்க வேண்டியிருக்கு’ன்னு ஏதாவது சாக்கு சொல்லிடறேன்..”

     “சரிடா.. அப்பறம் உன் இஷ்டம்.. “ என்றான் தனசேகர்.

      வெளியே வந்ததும் தாமு “நான் மெதுவா நடந்தே போயிடறேன்.. அதுல கொஞ்ச நேரம் ஓடிடும்.. எல்லாத்துக்கும் தேங்க்ஸ்டா..”  என்று புத்தகப்பையைச் சுமந்து கொண்டு நகர ஆரம்பித்தான்.

யாராவது பார்த்து விடப் போகிறார்களே என்ற அச்சத்தில் தலையைக் குனிந்தபடியே நடந்தான் தாமு. நேரத்தை நீட்டிப்பதற்காகச் சுற்றி வளைத்துக் கொண்டு அண்ணா பிள்ளை தெரு வழியாகச் சென்றான். அவன் வீட்டை நெருங்கியதும் வாசலில் நிறைய பேர் குழுமியிருப்பதும் ‘ஸ்டாண்டர்ட்’ கார் நிற்பதும் தூரத்திலிருந்தே தெரிந்தது.

     தாமுவுக்கு வயிற்றைக் கலக்கியது. ஏதேதோ கற்பனையான பயங்கள் அவனைத் தொற்றிக் கொண்டன. அப்பாவுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்று எண்ணினான். கடந்த சில நாட்களாகவே அவருக்கு இருமல் அதிகமாக இருந்தது.  தான் பள்ளிக்குச் செல்லாமல் ஊர்சுற்றியதற்கு கடவுள் உடனடியாகத் தண்டனை கொடுத்து விட்டாரோ என்று நினைத்தான். அழுகையைக் கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று. 

     ‘அப்படி எதுவும் நடந்திருக்காது’ என்று மனதைத் தேற்றிக் கொண்டான். ‘இதுவரை பெற்றோரிடம் எதையும் மறைத்ததில்லை. இன்றைய சம்பவம் முதலும் முடிவுமாக இருக்கட்டும்’ என்று நினைத்துக் கொண்டான். ‘பகவானே நான் பண்ணின தப்புக்கு அப்பாவை தண்டிச்சுடாதே’ என்று பிரார்த்தனை செய்தான். வேகமாக நடந்து வீட்டையடைந்தான்.

     ஒரு பெண்மணியின் அழுகுரல் கேட்டது. உள்ளே நுழைந்தான். புதியவர்கள் உட்பட எல்லாக் குடித்தனக்காரர்களும் கூடியிருந்தனர். குழப்பமாக இருந்தது தாமுவுக்கு.

     மேனகா முதலில் கண்ணில் பட்டாள். அவளிடம் “யாருக்கு என்னாச்சு..” என்றான். 

     அவள் மெல்லிய குரலில் “தெலுங்கு மாமியோட ஹஸ்பெண்ட் மூட்டைப்பூச்சி மருந்தைக் குடிச்சுட்டார்டா.. இடுப்பு வலி ரொம்ப பொறுக்க முடியாம போயி.. டிக்20 விஷத்தை முழுங்கிட்டாராம்.. ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டு போறா.. சாம்பவி பையன் கார் ஏற்பாடு பண்ணியிருக்கான்..” என்றாள் “பிழைக்கறது கஷ்டம்னு பேசிக்கறா.. அவரோட சொந்தக்காராளுக்கு தந்தி குடுக்கறதுக்காக மாத்வ மாமா போஸ்டாபீஸுக்கு போயிருக்கார்.. ”

     தாமுவுக்கு போன உயிர் திரும்பி வந்த மாதிரி இருந்தது. கூட்டத்தில் அம்மாவைத் தேடிக் கண்டுபிடித்து அவள் கரங்களைப் பற்றிக் கொண்டான். இரவு அப்பா ஆபீஸிலிருந்து வந்ததும் இன்று நடந்ததைச் சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டுமென்று நினைத்தான்.

     இப்பொழுது அவனுடைய பிரார்த்தனை திசை மாறியது. ‘பெருமாளே இந்த தெலுங்கு மாமாவை எப்படியாவது காப்பாத்திடு’ என்று மனமுருக வேண்டிக் கொண்டான்.

(முடிந்தது)

Series Navigation<< 1/64, நாராயண முதலி தெரு – 3

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.