துவாரம் மங்கத்தாயாரு

வயலின் குறித்த ஆராய்ச்சியை நோக்கும்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிற்ப வடிவங்களில் பெண்கள் வயலின்போன்ற ஒரு இசைக்கருவியை வாசிப்பதுபோல் வடிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போதுள்ள வடிவில் பிடிலு என்று கன்னடத்திலும் பிடில் என்று தமிழிலும் கூறப்படும் வயலின், 18ம் நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தில் கர்னாடகாவில் முதலில் தோன்றியது. பொ.யு.1784இல் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் வரையப்பட்ட ஒரு சுவரோவியத்திலும் கிட்டத்தட்ட பொ.யு.1850இல் செதுக்கிய ஒரு மர சிற்பத்திலும் பெண்கள் வயலின் வாசிப்பது காட்டப்பட்டிருக்கிறது.  (காண்க ஸ்ருதி. 1 அக்டோபர் 1985) புகழ்பெற்ற வாக்கேயக்காரரான முத்துஸ்வாமி தீட்சிதரின் தம்பியான பாலஸ்வாமி தீட்சிதர்தான் முதலில் வயலின் பயின்றார் என்று பிற்காலத்தில் கூறப்பட்டது. இது வாத்தியத்தின் வரலாற்றை மாற்றியதோடு மட்டுமல்லாமல் அதை ஆண்களின் வாத்தியமாகவும் மாற்றிவிட்டது