வெத்தலப்பட்டி

கிழவன் செய்யும் அட்டகாசத்தைப் பார்த்து ஊரே சிரித்துக் கொண்டிருந்தது. பேருந்து நிறுத்தமாதலால் பொதுமக்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். எல்லோரும் அவர் செய்வதைப் பார்த்துக் கடந்து கொண்டிருக்க அவர் வளர்த்த நாய் மட்டும் “நான் இருக்கேன் வோய்… உம்ம கூட” என்பது போல் பக்கத்தில் நின்று கொண்டிருந்தது. சில சிறுவர்கள் தூரத்தில் நின்று, வேற்று கிரக வாசியைப் பார்ப்பதை போல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் சிரித்துக் கொண்டிருந்தனர். பைப்பு மூட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த சில பெண்களும், வைத்த கண் வாங்காமல் கிழவன் செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தனர். 

கிழவன் எதையும் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. கண்கள் சிவந்து இருந்தது. கொஞ்சம் தண்ணியடித்திருப்பார் போலும். கோவிலில் சாமிக்கு பூஜை செய்வதைப் போல், அகர்பத்தியை கவரிலிருந்து பிரித்து எம்ஜிஆர் போட்டோவிற்குக் காட்டிக்கொண்டிருந்தார். ரோட்டோரத்தில் இருந்த ஒரு மர நிழலில் போடப்பட்டிருந்த மேஜையின் மீது ஒரு ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்க, அதில் ஒரு தாம்பாளத்தில் திட்டுவிளை மஸ்தான் சாஹிப்புக் கடையில் வாங்கிய திராட்சை, ஆரஞ்சு, வாழை பழங்களுக்கு நடுவே சிறிது கற்கண்டும்,ஒரு ஓரத்தில் சிரித்த முகமாய் எம்ஜிஆர் போட்டோவும் வைக்கப்பட்டிருந்தது. எல்லா ஊரிலும் எம்ஜிஆர் இறந்த நாளன்றும் இந்த நடைமுறை பழக்கமானதுதான் என்றாலும், வருடம் தவறாமல் இதைத் தவறாமல் கண்ணியமாக, கண்ணீருடன் செய்யும் துரை பாட்டாவை தான் ஊரே நின்று வேடிக்கை பார்க்கிறது இன்று. 

துரை பாட்டா அடிமைப் பெண் படத்தை ஐம்பத்து ஏழு தடவை பார்த்த எம்ஜிஆர் ரசிகர். சரியாகச் சொன்னால் எம்ஜிஆர் பக்தர். ஒல்லியான தேகம். ஒருகால் ஊனம். ஒருபுறமாய்ச் சாய்த்து கிண்டி,கிண்டி நடந்தாலும், நல்ல கால்கள் வைத்திருப்பவர்களை விட வேகமாக நடப்பவர். மழைக் காலத்தில் மட்டும் சட்டையணிபவர். மற்ற நேரங்களில் குற்றாலம் துண்டும், வடசேரி நெய்வு வேட்டியும் தான் முழு நேர உடை. எண்ணை தேய்த்து வழித்துவாரிய தலையும்,நெற்றி நடுவே பெருவிரல் அகலத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் அம்மன் கோவில் குங்குமமும் அவர் குளித்ததைப் பறை சாற்றும் அடையாளக் குறிகள். உடல் ஊனமுற்றவர் கோட்டாவில் ரேசன் கடையில் கிடைத்த அரசு சலுகை வேலையை, வேண்டாமென்று ஊதித் தள்ளிய ரோசக்காரர். “என் கழிவ பாக்காம, கால்ல….. இருந்த ஊனத்தைப் பார்த்து கிடைச்ச வேலை… மயிருக்குச் சமானம் டே.,,- என்று இப்போதும், சில பேரிடம் உதார் விடுவதுண்டு. ஊர் பஸ்டாண்டில் இருக்கும் அரச மரமும் அதன் நிழலில் இருக்கும் கூரைவேய்ந்த பெட்டிக்கடையும்தான் அவர் உலகம். 

கடைச் சுவரில் இருக்கும் இரட்டை இலைச் சின்னத்தையும், எம்ஜிஆர் பெயரையும் பல ஆண்டுகளாகப் பொக்கிசமாகப் பாதுகாத்து வருபவர். “வீம்பு புடிச்சவண்டே..அந்த நொண்டி.”. என்று அவரைப் பிடிக்காதவர் மத்தியிலும், “ஊனமா இருந்தாலும் வைராக்கியம் உள்ளவண்டே…” என்று அவரைப் பிடித்தவர் மத்தியிலும் பெயர் வாங்கியவர். ஊரின் நுழைவாயிலில் உள்ள கடையாதலால், ஊரில் உள்ள அநேக பேருக்குப் பரிச்சயமானவராக இருந்தார் துரை பாட்டா. 

அகர் பத்தியை கொளுத்தி பழச்சீப்பில் குத்தி வைத்து விட்டு,எம்ஜிஆர் போட்டோவை பய பக்தியோடு இரண்டு நிமிடம் கும்பிட்டுவிட்டு பெட்டிக்கடையை நோக்கி நடக்கலானார் துரை பாட்டா. அவர் நாயும் அவரைப் பின் தொடர்ந்து நடந்து, கடையை ஒட்டிய அரச மூட்டில் படுத்துக்கொண்டது. வேடிக்கை பார்த்தவர்களெல்லாம் அவரவர் வேலைக்குத் திரும்ப, எம்ஜிஆர் போட்டோவின் முன்னாலிருந்த அகர்பத்தி புகையை உமிழ்ந்து பொடியாகிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய்க் காலை நேர பஸ் ஸ்டாண்ட் சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. 

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் கடை இருப்பதாகத் தெரியாத நிலையில் இருந்தது துரை பாட்டாவின் பெட்டிக்கடை. இடுப்பில் செருகி வைத்திருந்த சாவியை எடுத்து, துரு பிடித்த பூட்டை லாவகமாகத் திறந்தார். “இன்னும் என்னை நீ நம்புறாயே… துரை” என்று பூட்டு இவரிடம் கேள்வி கேட்டு, திறந்தது போலிருந்தது. 

கடையைத் திறந்து கைக்கு வசதியாக வியாபார பொருட்களை எடுத்துக் கடையின் முன் புறத்தில் அடுக்கி வைத்தார். ரத்த சிவப்பு நிற சர்பத் பாட்டில்கள், ஆரஞ்சு மிட்டாய் பாட்டில்கள், பார்த்தவுடன் எச்சில் ஊரும் தேன் மிட்டாய் பாட்டில்கள், சுத்து முறுக்கு, தேன்குழல்,மைசூர்பாகு பாட்டில்கள், சிகரெட்டை கொளுத்த, கரி பிடித்த எரியும் சிம்னி விளக்கு என ஒவ்வொன்றாக எடுத்து முன்புற மரப்பலகையில் அடுக்கினார். ஏத்தன், ரசகதளி, பூவன் பழ கொலைகளை எடுத்து வெளிப்புற கயிறுகளில் தொங்க விட்டார். மண் பானையில் சர்பத் அடிக்கக் கிணற்றுத் தண்ணீரை நிரப்பினார். பழைய தண்ணீரைக் கண்ணாடி குவளைகளைக் கழுவப் பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றி வைத்தார். சிகரெட், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு டப்பாக்களை வைத்து முன்புற காலி இடங்களையும் நிறைத்த பிறகு, ஒரு கடைக்கான தோற்றம் வந்தது மாறி இருந்தது. 

பழைய ரேடியோவை ரெண்டு தட்டு தட்டி, பாடல்களைப் பிடித்து வைத்து, பின்பு சர்பத் போடும் கண்ணாடியை குவளைகளைக் கழுவ ஆரம்பிக்கும் போது தான் கடுக்கரை அரசு பள்ளியில் வேலை பார்க்கும் கேசவன் பிள்ளை ஆசிரியர் கடையை நோக்கி வந்திருந்தார். இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள் ஆகையால்,பேச்சுகளில் நக்கலும் நையாண்டியும் நடனமாடும். 

“என்ன துர… தலைவரு பொறந்த நாளை அமக்களமா கொண்டாடுக போல” – என்று கூறிக்கொண்டே வெற்றிலையைக் கிழித்துச் சுண்ணாம்பைத் தடவிப் பேச்சை ஆரம்பித்தார் கேசவன் பிள்ளை. 

“மறக்க கூடிய தலைவரா கேசவா… அவரு… மக்கள் திலகம்டே நம்மாளு…” 

“அது சரி… உண்மைதான்… இப்பவும் அவரு முகத்தைப் போட்டுத்தானே… மொத்த கட்சியையும் நடத்துகானுகோ..” என்று சொல்லி வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு கலவையை வாயினுள் திணித்தார். மொத்தத்தையும் கடவாய் பற்கள் அருகே கொண்டு சென்று, கறாம் பசு, கோரை புல்லை சவைப்பதை போல “நறுக்..நறுக்..” கென்று கடிக்கலானார். 

“காலையிலேயே வெத்தலையைப் போடுக… வேற ஆகாரம் ஒண்ணும் இல்லையா…” 

“ஆகாரம்லா தின்னாச்சுடே… கொஞ்சம் பல்லு வலி… இத போட்டா.. கொஞ்சம் இதமா இருக்கும்லா… அதான்.. – என்று சொல்லி வெற்றிலையைக் கடித்துக் குதப்பினார். சிறிது நேரத்தில் வாய் முழுதும், கோழி ரத்தம் குடித்த சாமி கொண்டாடியை போல் இரத்த சிவப்பாக மாறியிருந்தது. 

பல்லு வலிக்கு ரெண்டு கிராம்ப.. தேன்ல தட்டி, பொடிச்சு.. வலி உள்ள இடத்துல வச்சா தீரும்லா… வெத்தல போட்டா எப்படித் தீரும்… 

துரை பாட்டா அப்படித்தான். சிறுவயது முதலே வைத்தியத்தில் கொஞ்சம் ஈடுபாடு அதிகம். கை வைத்தியம் சொல்வதில் கெட்டிக்காரர். அவர் சொல்லும் மருந்துகள் வித்தியாசமாகவும்,விவகாரமாகவும் இருக்கும். கைவலி, கால் வலி, மண்டை கனம்,ஆண்மை விருத்தி, தலை சுற்றல், நாய் கடி, நகச்சுற்று, கழுத்துவலி என ஒவ்வொன்றிற்கும் ஒரு மருந்து சொல்வார். 

“கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு மூணையும் சம அளவு எடுத்துத் தண்ணீர் விட்டு அரைத்து, இளம் சூட்டுல கொஞ்சம் கற்பூரம் கலந்து வீக்கம், வலி உள்ள மூட்டுல தேச்சு பாரு.. வலி குறையலேன்னா என் சட்டையைப் புடிச்சு கேளு”.. 

“பூசணி வித்த எடுத்து, காய வைத்து, இடிச்சி பொடியாக்கி, தேனையும் இஞ்சியையும் சேர்த்து, பாலில் கலந்து குடிச்சிட்டு, மத்த(!) வேலையைச் செஞ்சு பாரு… அப்புறம் கட்டிலு உடைஞ்சு போச்சுன்னு.. என்ட வந்து சொல்ல கூடாது… பார்த்துக்கோ!…”. 

“மூஞ்சில பருவுனா… எதுக்குல கண்ட மருந்தை போடுகியோ… கோமூத்ரத்துக்குக் கூடச் சந்தனத்தைச் சேர்த்து.. மூஞ்சியில தேய்ச்சா.. போச்சு… 

“மூணு கற்றாழை மடல, உப்பு கூட இடித்து நாய் கடிச்ச இடத்துல 3 நாளு கட்டினா…நாய் கடி விஷம் குறையாம இருக்குமா!” 

— என்பது மாதிரியான மருந்துகள். 

அவர் மருந்துகள் சில பேருக்கு நிவாரணம் தந்தாலும், பலபேரைப் படாதபாடு படுத்தி விடும். அதனால் தான் கேசவன் பிள்ளை அவர் ஆரம்பிக்கும் போதே… நிராகரித்தார். வெற்றிலை குதப்பலை வெளியே துப்பி, தண்ணீரால் வாயை கொப்பளித்தார். 

“வேய்… துரை… உம்ம வைத்தியத்தை… ஊர்ல உள்ள பயக்கள்ட காட்டணும், கேட்டயா.. நம்மளுட்ட வேண்டாம்.. மண்டையில முடி வளரதுக்கு 25 வருசத்துக்கு முன்னாடி ஒரு வைத்தியம் சொன்னயே.. சண்டாளா…. இப்பவும் மறக்க முடியல என்னால.. உன் வைத்தியத்தோட லெட்சணம் அன்னைக்கே தெரிஞ்சு போச்சு…. மனுசனா நீ….” – என்று சொல்லி பழைய நினைவுகளை நினைந்தார் கேசவன் பிள்ளை. 

ஆம்… அது ஒரு ரசனையான விஷயம்… இருவருக்கும் இருபத்தெட்டு,முப்பது வயது இருக்கும். முதல் குருத்து விட்ட தென்னம் பிள்ளைகளைப் போல், தளத் தளத்த பருவம். கேசவன் பிள்ளைக்கு வாத்தியார் வேலை கிடைத்துப் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கல்யாணத்தை நினைத்து, கனவு கண்டு கொண்டிருந்த கேசவன் பிள்ளைக்குத் தலையில் முடி இல்லாது, வழுக்கையாக இருந்தது பெரிய குறையாக இருந்தது. நண்பன் துரையிடம் ஆலோசனை கேட்க,இளவயது துரை பாட்டா.. ஒரு வைத்தியம் சொன்னார். 

காலையில் தலையில் விளக்கெண்ணையைத் தடவி, தாமரை இலையைத் தீயில் வாட்டி, தலையைச் சுற்றிக் கட்டி, சாயங்கால நேரத்தில் கோவேறு கழுதையைக் கொண்டு வழுக்கை உள்ள இடங்களை நக்கச் செய்ய வேண்டும். இது தான் மருந்து. பாவம் கேசவன் பிள்ளை.. என்ன செய்ய.. துரை பாட்டாவை முழுதாக நம்பினார். முடி வளந்தாகணுமே.. கல்யாணம் வேற வருகிறதே.. சோதனைக்குத் தயாரானார். தலை முழுவதும் விளக்கெண்ணையைத் தடவி தாமரை இலை கட்டும் போட்டாயிற்று. சாயங்காலம் வரை காத்திருந்தார். பணம் கொடுத்து கோவேறு கழுதையையும் வீட்டுப் பின் புறத்தில் வரவழைத்திருந்தார். கழுதைக்காரன் கழுதையோடும் ஆச்சர்யத்தோடும் காத்திருந்தான். தலையிலிருந்து தாமரை இலைக் கட்டு அவிழ்க்கப்பட்டது. இப்போது கழுதை நக்க வேண்டுமே?என்ன செய்ய.. விளக்கெண்ணைத் தலையைக் கழுதையின் முகம் முன்னே நீட்டிக்கொண்டு, கழுதையின் வாயைத் திறந்து, நாக்கை இழுத்து வழுக்கையில் தேய்த்தார். நடக்கும் நிலைமையை ஜீரணிக்க முடியாத கழுதை வித்தியாசமான ஒலி எழுப்ப, கேசவன் பிள்ளை விட்டப் பாடில்லை. கழுதை கண்ட இடத்தில் மிதித்து, முடிவளரும் சிகிச்சைக்குப் பதிலாகக் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை நடந்து விடக்கூடாது என்ற பயமும் கேசவன் பிள்ளைக்கு இருந்தது. 

நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த கழுதை காரனுக்குச் சிரிப்புத் தாங்க வில்லை. கழுதையும் நக்கின பாடில்லை. ஆவேசத்தோடு கழுதைக்காரனிடம் கேட்டார். 

“லேய்.. உன் கழுதைக்கு, என்னல நல்ல புடிக்கும்? 

“உப்பு போட்ட கஞ்சி தண்ணினா…… நக்கி நக்கி குடிக்கும் பண்ணையாரா..! – சிரிப்பை அடக்கி கொண்டு கூறினான். 

என்ன நினைத்தாரோ… என்னவோ…அவரசரமாக அவரசரமாக வீட்டுக்குள் சென்று, கஞ்சித் தண்ணியில் உப்பை போட்டு கலக்கி,கழுதையின் முன் வந்து, ஆவேசமாகத் தலையில் ஊற்றினார். கழுதைக்காரன் சிரிப்பை அடக்க முடியாமல், தென்னை மரத்திற்குப் பின்னால் ஓடி ஒளிந்தான். 

என்ன நினைத்ததோ…. என்னவோ… கழுதை – கேசவன் பிள்ளையின் வழுக்கையை நக்கித் தொலைத்தது. ஆனால் அத்தனை கஷ்டத்திற்குப் பிறகும், முடி மட்டும் வளர்ந்த பாடில்லை. இப்போதும் பள்ளி கூடத்தில், மாணவர் மத்தியில் அவரின் வட்டப்பெயர் “வழுக்கை கேசவன்”தான். 

“கழுதையை ஒழுங்கா நக்க விட்டுருக்க மாட்ட… அதான்.. முடி வரல.. என்று சொல்லி சமாளிக்கப் பார்த்தார் துரை பட்டா. 

“வாயில நல்லா வந்துரும் பார்த்துக்கோ.. என்று கேசவன் பிள்ளை ஆவேசப் படும் போது தான், நிறைமாத கர்ப்பிணி பெண் வருவதைப் போல் அருமநல்லூர் பஸ், ஆடி குலுங்கித் திருப்பத்தில் நின்றது. இரண்டு மூன்று ஆட்களைத் தொடர்ந்து ஒரு வயதான பெண்ணும், 16, 17 வயதில் ஒரு பெண்ணும் இறங்கினர். இருவரின் முகச்சாயல்கள்,அம்மாவும், மகளுமாக இருக்க வேண்டுமென்பதைச் சொல்லாமல் சொல்லியது. இருவரும் நடந்து ஊருக்குள் செல்லும் போதுதான் துரை பட்டா கவனித்தார், அந்த இளம் பெண் லேசாகக் கிண்டி, கிண்டி நடப்பதை. 

ஏதோ யோசனையோடு கேசவன் பிள்ளையிடம் கேட்டார். 

“கேசவா.. யாருடே இது.. எங்கயோ பார்த்த மாறி இருக்கு..” 

“அதான் நானும் பாக்கேன்.. எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு… வைத்திய சாலைக்கா இருக்கும்”- தங்களுக்கு முடிந்த வரையில் இருவரும் ஆருடம் கணித்துக்கொண்டனர். இருவர் மனதிலும் அவர்களை எங்கேயோ பார்த்ததாய் ஒரு குழப்பம். அந்த வயதான பெண்ணின் முகம் நன்கு பார்த்து பழகிய முகமாய்த் தெரிந்தது. துரை பாட்டா,வழக்கமான உரையாடல்களுக்குள் திரும்பி இருந்தாலும் பின் மண்டையில் அந்தக் கேள்வி தொடர்ந்து உறுத்திக் கொண்டேயிருந்தது. 

அரை மணிநேரத்தில் வைத்திய சாலைக்குச் சென்ற அம்மையும் மகளும் பஸ் ஸ்டாண்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். தூரத்தில் அந்தப் பெண்ணின் முகத்தை மீண்டும் கண்டதும், கேசவன் பிள்ளைக்குச் சட்டென்று அந்த முகம் நினைவிற்கு வந்தது.. 

ஒரு வித சந்தோஷ உந்துதலோடு சற்று உரக்கக் கத்தலனார். 

“துரை.. இது மத்தவத் தாண்டே..அவதான்.. அந்தக் கிழவீட்டுக்காரி”. 

“யாருடே… மனசிலாகலையே…..” 

எழுத்தில் கொண்டு வர முடியாத ஒரு அசட்டுச் சத்தத்தை ஏற்படுத்தினார் கேசவன் பிள்ளை.. 

“துரை… மத்தவ டே.. சரக்க போட்டதும் விருட்டு, விருட்டு ஓடிவியே.. 

குழப்பத்துடனேயே பதில் சொன்னார் துரை பாட்டா… “ஒருத்திட்ட… போனா… சரி… எத்தனை எடம் ஏறி எறங்கியிருக்கோம்..” 

கேசவன் பிள்ளைக்கு லேசாகக் கோபம் வந்தது. 

இப்ச்ச்ஸ்…. ஏ…துரை….. மத்த மாங்குளத்து காரிடே … “வெத்தல பட்டி”-ன்னு சொல்லுவியே… 

“வெத்தல பட்டி”-ன்னு சொன்னதும் பட்டென்று துரை பட்டாவுக்குப் பொறி தட்டியது..மீண்டும் அவர்களை உற்று நோக்கி…. 

அவளா… இல்லை டே…நல்ல பாரு…! 

இப்ஸ்…. அவ தாண்டேன்னு… என்று அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே.. அம்மையும் மகளும் கடையருகே வர ஆரம்பித்தனர்.. 

அருகில் நெருங்க நெருங்க துரை பாட்டாவிற்கு மனசிலாகியது.. அவள் “வெத்தல பட்டி” தான். எப்படி இருந்தாள்…. இப்ப …எப்படி ஆகி விட்டாள்.. 

சட்டென்று நினைவுப் படகேறி, கால வெள்ளத்தில் பதினைந்து இருபது வருடங்கள் பின்னோக்கினார் துரை பாட்டா….. 

துரை பாட்டா இளம் பிராயத்தில் அழகாக இருப்பார். இளமையில் பெற்றோரை இழந்த, குடும்பமேதும் இல்லாத தனிக்கட்டை. தன் ஊனத்தை நினைத்த ஒருவித தாழ்வு மனப்பான்மை மட்டும், எப்போதும் அவரை ஆக்கிரமித்திருந்தது. அதுனாலேயே தன்னைக் கோபக்காரராகக் காட்டிக் கொள்வார். 

தடிக்காரன்கோணம் எஸ்டேட்டில் காலையிலேயே ரப்பர் பால் வெட்டும் வேலை. விடியற்காலை மூணு மணிக்குப் போனால் காலை பதினோரு மணிக்குள் நானூற்றிஐம்பது ரூபாயோடு திரும்பி விடலாம். வேலையின் விவரம் தெரிந்தவர்களுக்கு எளிதான,நாசுக்கான வேலை. வாரம் நான்கு அல்லது ஐந்து நாட்கள் வேலை. வேலை முடிந்தவுடன் கூலி. 

அந்நாட்களில் அவர் நண்பர்களிலேயே அதிகம் சம்பாதிப்பவராக இருந்தார். மொத்த ரூபாயையும் செலவழித்து ஊதாரித்தனமான வாழ்கையில் திளைத்தார். மது, மாது, என எல்லாவற்றிலும் காசை அள்ளி வீசினார். எதையும் விட்டு வைக்க வில்லை. அவர் ஊனத்தைப் பார்த்து அவர் மீது வீசப்படும் பரிதாபப் பார்வைகளை அவர் விரும்பவில்லை.. அல்லது அவருக்கு அது பிடிப்பதில்லை. அவர் மீதின் மற்றவர்களின் அனுதாபங்கள் கூட, அவருக்கு ஏளன பேச்சுகளாகவே பட்டன. 

அன்று அப்படிதான். கோவில் கும்பாபிசேக விருந்தில் டிரைவர் கண்ணன் தெரியாமல் ஒரு வார்த்தை சொல்ல, அவரைக் கேள்விகளால் படாத பாடு படுத்திவிட்டார் துரை பட்டா. பொது மக்கள் கூட்டம் சாப்பாட்டிற்காக உட்கார்ந்திருக்க, சோற்றுச் சிப்பலை கையிலெடுத்து விளம்பத் தயாரானார் துரை பட்டா. இதைப் பார்த்த கண்ணன் சட்டென்று வார்த்தைகளை உதிர்த்து விட்டான். 

“துரை…. நீ மொதல்ல உக்காந்து சாப்பிடு..டே.. இந்தக் காலை வச்சிட்டு விளம்பதுக்கு… நிக்க..” – என்று உண்மையான அனுதாபதில்தான் சொன்னான் கண்ணன். 

கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார் துரை.. 

“லேய்.. நீ உன் சோலி மயிரை பாருல.. எப்பம் சாப்பிடனும்னு எனக்குத் தெரியும்.. அத நீ ஒரு… குன்……யும் சொல்லாண்டாம். நான் உண்ட காலு வலிக்குன்னு சொன்னனா? இந்தப் படம், மயிரெல்லாம் வேற எவண்டயாவது வச்சிகிடணும்.. கேட்டயா?” 

நார் நாராகக் கிழித்தெடுத்து விட்டார் துரைபாட்டா… கண்ணனுக்குப் பெருத்த அவமானமாகப் போய் விட்டது. தன் ஊனத்தின் பொருட்டு அளிக்கப்படும் எந்தச் சலுகையும் அவர் எந்தக் காலத்திலும் ஏற்றதில்லை. சொந்த பந்தம் ஏதும் இல்லாததாலும், நல்லது கெட்டது சொல்ல ஆள் இல்லாததாலும் மனம் போன போக்கில் வாழ்க்கையை ருசித்தார். 

இரவானால் தண்ணியடிக்காமலும் இருந்தததில்லை. மாதம் நான்கைந்து முறை “பெண்” கூடுதலும் உண்டு. அப்படித் துரை பாட்டாவிற்கும், கேசவன் பிள்ளைக்கும் அறிமுகம் ஆனவள் தாள் இந்த “வெத்தலபட்டி”. வறுமையில் பிறந்து, புத்தி குறைந்த கணவனுக்கு மனைவியாகி, பின்னர் வயிற்று பிழைப்புக்காக “உடல் தொழில்”-லுக்கு உட்பட்டவள். இம்மாதிரி தொழில் செய்யும் மகளிரின் முந்தைய வாழ்வு எல்லோருக்கும் பொதுவானதுதான். வறுமை, வெறுமையைத் தவிர வேறென்ன இருக்க முடியும். காசு கொடுக்கும் கண்டவர்களோடு, அம்மணமாக உறவாட வேண்டுமென்பது அவர்களின் கனவா, ஆசையா என்ன? அவர்களும் மனிதர்கள் தானே.. அவர்களுக்கும் ஆசா.. பாசம்.. இருக்காதா…. ? 

இருந்தாலும், உறவுகளா? மானமா? உயிரா? என்ற கேள்விகளில்,உறவுகளுக்காக மானமிழந்து உயிர்வாழ்பவர்கள் என்று கூடச் சொல்லலாம். அறிவை விற்றுச் சம்பாதிப்பவர்களுக்கு மத்தியில்,உடலை விற்றுச் சம்பாதிப்பவர்கள். அவ்வளவே. 

வெத்தலபட்டியும் அப்படித்தான். குடும்பம் காக்க, உடம்பைக் கொடுப்பவள். காமம் தணிக்க வரும் யாரிடமும், வெத்தலபட்டி பெரிதாகப் பேசுவதில்லை. யாரும் அவளிடம் பேசுவதும் இல்லை. கேட்ட கேள்விக்குப் பதில். வெத்தலை சிகப்பான உதடுகளால் ஒரு அசட்டுப் புன்னகை. முதலில் பணப்பரிமாற்றம். பின்பு ஆசை தீரும் வரை உடல் சேவை.. அவ்வளவே. 

அரைப் போதையோடு முதல் முதலாய் வெத்தலை பட்டிடம் வந்த போது, துரை பட்டா, அவள் வீட்டு வாசல் படுப்பனையில் உக்காந்திருந்தார். 

“உள்ள வாரும்.. கட்டிலு சரியில்லை.. அந்தப் பாயில உக்காரும்.. இப்ப வாரேன்.” – ஐந்தாறு நிமிட இடைவெளியில் அவளும் வந்து அருகே இருந்தாள். 

சட்டையைக் கழட்டிகொண்டே கேட்டார் துரை பட்டா. 

“எவ்வளவு?” 

“நூத்தி அம்பது.” 

ரூபாயை எண்ணி கொடுத்து விட்டு, வேட்டியை அவிழ்த்தார். கொடுத்த பணத்தைப் பாயுக்கடியில் வைத்து விட்டு, அவர் இயங்க ஏதுவாகப் படுத்தாள் வெத்தல பட்டி. ஆசை வெறியோடு பதினைந்து நிமிடங்கள் இயங்கி, சோர்ந்து பின்பு ஒருகளிந்து சாய்ந்தார் துரை பாட்டா. தேவை தீர்ந்திருக்குமோ?? இல்லையோ?? என்ற குழப்பத்துடனே அவள் அப்படியே படுத்திருந்தாள். துரை பாட்டா, மூச்சு நிதானமடைந்ததும் சட்டையணிந்து வெளியேறினார். 

அதன் பின்னர் அடிக்கடி அவள் வீட்டுப் படுப்பனையில் துரை பாட்டாவைப் பார்க்க முடிந்தது. அவளின் “அந்த” அணுகுமுறை துரை பாட்டாவிற்குப் பிடித்திருந்தது. மற்ற எல்லாப் பெண்களும்,இவரை ஏளனமாகப் பார்ப்பதுண்டு. இச்சையின் உச்சத்தில் அவரது கால்களை விகாரமாகப் பார்ப்பதுண்டு. ஆனால் வெத்தல பட்டி அப்படிப் பார்த்ததில்லை. ஏறி, ஆடி அடங்கும் வரை துரை பாட்டாவை ஒரு முழு மனிதனாகப் பார்த்தாள். அல்லது அவள் அப்படிப் பார்ப்பதாக இவருக்குத் தோன்றியது. அது அவருக்குப் பிடித்தும் இருந்தது. அதனால் காமம் தலைக்கேறும் போதெல்லாம்,வெத்தலபட்டியிடம் வந்து கொட்டி விடுவார். பதினைத்து, இருபது நிமிட ஆட்டத்தோடு, பைசா கொடுத்து விட்டு நகர்ந்தும் விடுவார். கடைசி வரை அவள் பெயரைக் கேட்டதில்லை. அவளும் கூறிக்கொண்டதில்லை. பின்னொருநாளில் அவள் ஊரை விட்டு எங்கோ சென்று விட்டதாகக் கூறிக்கொண்டனர். துரை பட்டாவும் தன் தாகம் தணிக்க மற்றொரு உடலைத் தேடிக்கொண்டார். இவ்வளவே வெத்தலைப்பட்டியை பற்றி, துரை பாட்டாவின் நெஞ்சகத்துள் பதிந்த நினைவுகள். அதன் பிறகு இப்போது தான் வெத்தலை பட்டியை மீண்டும் பார்க்கிறார். 

துரை பாட்டா சுய நினைவுக்கு வந்த போது அம்மாவும், மகளும் கடையருகே வந்திருந்தனர். பெயர் ஊர்ஜிதம் இல்லாத, அந்த “வெத்தலபட்டி”-யான வயதான பெண்தான் பேசினாள். 

“ரெண்டு சர்பத் தாரும்..” -என்றாள் துரை பாட்டாவிடம். 

கேசவன் பிள்ளை, ஏதோ அவசர பட்டவராய், “நான் பொறகு வாரேன் டேன்னு” – கண்ணைக் காட்டி ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு நகர்ந்தார். 

எதையும் வெளிக்காட்டாமல் கண்ணாடிக் குவளைகளைக் கழுவி,சர்பத் போட ஆரம்பித்தார் துரை பட்டா. இடையிடையே வெத்தலபட்டியையும் கவனித்துக் கொண்டார். 

ஆர்வ மிகுதியில், காமம் துளிர்க்கும் போதெல்லாம் ஏறி புணர்ந்த அந்த உடம்பா… இது.. அவதான்.. காதுக்குக் கிழே இருந்த, கொஞ்சமாய் முடி வளர்ந்த அந்த மருவு மட்டும் அதனை ஊர்ஜிதப் படுத்தியது.. வயதான உடல் கிழடுத் தட்ட ஆரம்பித்திருந்தது. ஏதேதோ நினைவுகள் துரை பாட்டாவை என்னென்னவோ செய்தன. 

அவளுக்கு இவரைப் பற்றிய நினைவு இருப்பதாவே தெரிய வில்லை. சகஜமாக இருந்தாள். 

துரை பாட்டாவிற்கு இதற்கு முன்பு எப்போதும் அனுபவித்திடாத ஒரு தவிப்பு இருந்தது. தனிக்கட்டையாய் வாழ்க்கையை நடத்துபவருக்கு, சொந்தம் கிடைத்தது போலிருந்தது. திருமணத்தின் சாராம்சமே உடலுறவின் மூலம் சொந்தமாக்குவது தானே. அப்படியானால் “வெத்தலபட்டி” எனக்குச் சொந்தாமாக்கும் – என்று ஒரு வித ஏகாந்தமான ஏக்கம் மனதிற்குள் அலைந்தோடியது. பெயர் தெரிந்தாலாவது “அவளாமோ நீ?” – ன்னு ஆரம்பித்துப் பேச்சை தொடரலாம். அதுவும் தெரியாது. ஏதாவது செய்து “நான் தான் உன்னை ஆசையோடு புணர்ந்தவன்” – என்பதைக் காண்பிக்க வேண்டுமென்று இருந்தது. ஒரு வேளை நம்ம காலை பார்த்தா அவளுக்கு ஞாபகம் வரலாம் – என்று பலவாறு எண்ணிக்கொண்டே, சர்பத்தைக் கலக்கிக் கொண்டிருந்தார். 

அந்தப் பெண் துரை பாட்டாவை கண்டு கொண்டதாகவே தெரிய வில்லை. 

வியர்வை வடிந்த ஜாக்கெட்டுக்குள் கையை விட்டு, பர்சைத் திறந்து சர்பதிற்கான காசினை எடுத்து வைத்துக் கொண்டாள் வெத்தல பட்டி. 

சட்டென்று மகளிடம் திரும்பி, 

“அந்தப் பஸ்சூ எப்ப திரும்பி வரும்னு சொன்னான்……. மக்கா..” 

“முக்கா மணிக்கூர்ல வரும்னுனான்… இப்ப சரியாய் இருக்கும்..”- மகள் அழகாகப் பேசினாள். நடக்காமல் நிற்கும் போது அவள் கால் ஊனம் என்பது யாருக்கும் தெரியாமலிருந்தது. 

“இப்ப வலி இருக்கா மக்கா..” 

“பரவா இல்லமா.. கொஞ்சம் கேட்டிருக்கு..” 

“ரெண்டு பழம் கூடச் சொல்லட்டா… ?? 

“ இல்லமா.. வேண்டாம்.. இப்பதான் வீட்டுக்கு போயிரோவோம்லா” 

—-அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். 

சர்பத்தைப் போட்டு முடித்து இரண்டு கிளாசையும் எடுத்து முன் வைத்து, 

“இந்தாங்..குடிங்கோ” – என்றார் துரை பட்டா. 

இருவரும் எடுத்துக் குடிக்கத் தொடங்கினர். 

“வெயில்ல யாம்மோ நிக்க…. உள்ள தள்ளி நின்னு குடிம்மோ”-ன்னு அந்தச் சின்னப் பெண்ணிடம் குசலம் கொண்டாடினார் துரை பாட்டா. அந்தப் பெண் அவரைப்பார்த்து லேசாகப் புன்னகைத்தாள். துரை பாட்டாவிற்கு அது பிடித்திருந்தது. 

குடித்து முடித்ததும் வெத்தல பட்டி கேட்டாள். 

“எவ்வளவு ஆச்சு?” 

“பத்து ரூபா..” என்றார் துரை பட்டா. 

ருபாய் கொடுக்கும் போது அந்தப் பெண்ணின் கைகளைக் கொஞ்சம் உற்று நோக்கிக் கொண்டார். மனம் ஒருநிலையில் இல்லாது பலவாறு சிந்தித்தது. அவர்கள் கூடக் கொஞ்ச நேரம் அங்கேயே இருக்க வேண்டுமென்று தோன்றியது. 

பணத்தைக் கொடுத்து விட்டு இருவரும் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தனர். சிறிது நேரத்தில், வீட்டுக்குப் போன கேசவன் பிள்ளை மீண்டும் கடைக்கு ந்து சிரித்த படியே கேட்டார். 

“என்ன வேய்.. காமுகியையை வழியனுப்பியாச்சா? சர்பத்துக்குப் பைசா வாங்குனையா?” 

“என்ன வேய் இப்படிச் சொல்லுகேரு?” – என்றார் துரை பாட்டா. 

“இல்ல துரை….வெத்தலபட்டின்னு சொன்னா உனக்கு ஒரு கிறக்கம்லா… அதான் கேட்டேன்…” பின்பு திரும்பி பஸ் ஸ்டாண்டை பார்த்துக்கொண்டே, “அந்தப் பிள்ளை உன் மகளா கூட இருக்கலாம்டே”..- என்று காமெடிச் சிரிப்பு சிரித்தார் கேசவன் பிள்ளை. 

கேவலமான கணிப்பாக இருந்தாலும் குடும்பம், சொந்தம் ஏதுமில்லாத துரை பாட்டாவிற்கு அது சுகமானதாக இருந்தது. 

“ஊருக்கே காதலி தலா… உன் மகளா கூட இருக்கலாம்..” – சட்டென்று பதில் பேசினார் துரை பாட்டா. ஆனால் முகத்தில் கோபம் இல்லை. 

“அதில்லைடே… உன் மக தான். காலப் பார்த்தா தெரியலையா?”-..சட்டென்று சொல்லி விட்டு, கேசவன் பிள்ளை உதட்டை கடித்தார். துரை பாட்டாவின் கோபத்தை நினைத்துக் கொஞ்சம் பயந்தார். 

பதிலேதும் பேசாமல் தூரத்தில் நின்ற அந்தப் பெண்களையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் துரை பாட்டா. அந்த நிமிடம் அவர் ஊனத்தை நினைத்துச் சந்தோஷப் பட்டது மாதிரி தெரிந்தது. வெத்தலபட்டி, அவள் மகள், துரைப்பாட்டா மூவரும் ஒரே வீட்டில், குடும்பமாய் வாழ்வதாகக் கற்பனை செய்து கொண்டார். சீ… பைத்தியக்கார அலைபாயும் மனதில் என்னவெல்லாம் தோன்றுகிறது. தன் நினைவுகளை நினைத்துச் சலித்துக் கொண்டார்.. சிறிது நேரத்தில், நினைவுகளை உதறி தள்ளி, சட்டென்றுத் சுய நினைவு திரும்பி, அவர்கள் குடித்த சர்பத் கிளாசுகளோடு, அந்த நினைவுகளையும் கழுவ ஆரம்பித்தார். 

மேலத்தெரிசனம்கோப்புத் திருப்பத்தில் அருமநல்லூர் பஸ் அசைந்து அசைந்து வந்து கொண்டிருந்தது. 

2 Replies to “வெத்தலப்பட்டி”

  1. கதையினூடே வெளிப்படும் சில வாக்கியங்கள் அடிமனசை அசைத்துப் பார்க்கின்றன. பாசாங்கற்ற, எளிமையான எழுத்து நடையில் மின்னும் தேர்ந்த சிறுகதைப் படைப்பு.

    எழுத்தாளருக்கு வாழ்த்தும் அன்பும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.