
மூளையில் உள்ள “வியாகூலத்திற்கான மரபணுவை” அறவே நீக்குவதற்கான ஒரு இயற்கை வழியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர், அத்தகைய குறைபாடுகளுக்கான (Anxiety Disorder) புதிய சிகிச்சைகளுக்கு இனி வழிவகுக்கும்.
வியாகூலம் : பொதுவாகக் காணப்படும் மனநலக் குறைபாடு
“சுமார் 25% மக்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்தப் பிரச்சினையால் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்” என்று ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
மனக் கவலை எனும் உளச் சிக்கலானது பொதுவான வியாகூலம் (GAD : General Anxiety Disorder), பெரு விருப்பக் கட்டாய மனப்பிறழ்வு (OCD : Obsessive – Compulsive Disorder) மற்றும் அதீத மன உளைச்சலுக்குப் பிந்தைய குறைபாடு (PTSD – Post – Traumatic Stress Disorder) ஆகியவற்றை உள்ளடக்கியது.
வியாகூலக் குறைபாடைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் தற்போதைய மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளின் செயல்திறன் மிகவும் குறைவு. மேலும் பாதிப்புக்கு ஆளானோரில் பாதிக்கும் மேற்பட்டோர், பல மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை வழிமுறைகளைப் பின்பற்றி, பரிந்துரைத்த மருந்துகளை உட்கொண்ட பிறகும், போதிய நிவாரணம் கிடைக்கவில்லை என்று ஏராளமான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பதட்டம் எவ்வாறு நமது மூளையை, மூலக்கூறு அல்லது மரபணு நிலையிலேயே மாற்றுகிறது மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க இதை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பதில் ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தினர்.
“உளவியல் சார்ந்த மன அழுத்தம், அமிக்டலே * (amygdale) உட்பட மூளையின் பல்வேறு பகுதிகளையும் மற்றும் மரபணுக்களிலும் பொது விவரங்களை கிரகிக்கும் தன்மையையும் சிதைக்கக் கூடிய விதத்தில் ஆழ்ந்த மாற்றங்களை ஏற்படுத்தும்” என்று ஆய்வில் விஞ்ஞானிகள் விரிவாக விளக்குகின்றனர்.
மூளையின் ஆழமான இடத்தில் சிறிய பாதாம் வடிவத்தில் காணப்படும் அமிக்டெலா மூளையின் ஒரு பகுதியாக அறியப்படுகிறது, ஆபத்தான சூழலை “எதிர் கொள் அல்லது விலகி ஓடு” என்ற மனோநிலையை பிரதிபலிக்கும் காரணியாக இயங்குகிறது. இது வியாகூலக் குறைபாடுகள் தொடர்புடைய நிலையை உணர்த்துகிறது.
இங்கிலாந்து மனோதத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு தலைமையில் ஆறு மணித்தியாலக் கால அளவிற்கு எலிகளை சிக்கலான மனக்கவலையினை ஆட்கொள்ளும் சூழ்நிலைக்கு உட்படுத்தி, மன அழுத்த நிலையைத் தூண்டுவதற்காக, எலிகளை 6 மணி நேரம் கட்டுப்படுத்தி, அதனால் உண்டாகும் பாதிப்புகளை எலிகளின் மூளை மூலக்கூறுகளை ஆய்வு செய்து கண்டுபிடித்ததன் மூலம் மேற் குறிப்பிட்ட முடிவை உறுதி செய்தது.
விஞ்ஞானிகள், எலிகளின் மூளையில் ஐந்து மைக்ரோஆர்என்ஏக்களின் (மைஆர்என்ஏக்கள்) அளவு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்ததைக் கண்டறிந்தனர்: இத்தகைய சிறிய மூலக்கூறுகள், மனிதர்களிடமும் உள்ளன, அவை அமிக்டலேவில் உள்ள செல்களின் செயல்முறையைப் பல்வேறு விதமான புரதங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்கின்றன.
miRNA (மைக்ரோஆர்என்ஏக்களில் ஒன்றான miR483 – 5p, மற்றொரு மரபணுவான Pgap2 வின் தன்மையை அடக்கி ஆட்கொள்வதால் உருவாகும் ஆன்க்சியோலிடிக் விளைவை நிபுணர்கள் குழு அவதானித்து உணர்ந்து கொண்டது. அதாவது, miR483 – 5p ஒரு மூலக்கூறைப் பிளக்கும் சக்தியாகச் செயல்படுகிறது, இது மன அழுத்தத்தால் தூண்டப்பட்ட அமிக்டெலா மாற்றங்களைச் சமாளித்து, வியாகூலக் கோளாறை சீராக்கி நிவாரணம் பெற உதவுகிறது.
இந்த மூலக்கூறு மூளையில் ஏற்படும் மன அழுத்தத்தை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதைக் கண்டுபிடிப்பது தான் இக்கோளாறை நிவர்த்தி செய்யும் சிகிச்சைக்கான தேடலின் முதல் படி என ஆராய்ச்சியாளர்கள் புரிந்து கொண்டார்கள்.
இந்த ஆய்வுக்கு முன்பாக , மத்திய நரம்பு மண்டலத்தில் (Central Nervous System) உள்ள miR – 483 – 5p இன் பங்களிப்பு தொடர்பான முக்கியமான சிறு தகவலை விஞ்ஞானிகள் பதிவு செய்தனர்.
மன அழுத்தம் தொடர்பான நரம்பியல் மனநல நிலையின் (Neuro Psychiatric) விளைவாக உருவாகும் மன சஞ்சலம் மற்றும் தொடர்புடைய மூலக்கூறு நிகழ்வுகளின் அடிப்படையிலான நரம்பு மண்டலத்தில் உள்ள சுற்றுகள் (Neural Circuits) குறித்த தவறான புரிதலின் காரணமாக சக்திவாய்ந்த மருந்துகளை உருவாக்குவதில் மிகப் பெரியதொரு வெற்றியைப் பெற இயலவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது.
“எலிகளை வைத்துப் பரிசோதனை மேற்கொள்ளும் போது கீழ் நோக்கிய பக்கவாட்டுப் பகுதியில் உள்ள அமிக்டெலாவில் இதற்கு முன்பு நாங்கள் அறியாத மூலக்கூறு நிகழ்வுகளைக் கண்டறிந்து அவற்றை வகைப்படுத்தினோம், இது ஆன்க்சியோலிடிக் விளைவை ஏற்படுத்த போதுமானது” என்ற தெளிவான ஆய்வின் மூலம் அறிந்து கொண்ட முடிவுகளை இறுதியில் பகிரங்கப்படுத்தினோம்.
இந்த மாறுபட்ட அறிவியல் கண்டுபிடிப்பு “மனிதர்களுக்கான மேம்பட்ட ஆன்சியோலிடிக் சிகிச்சைக்கான ஆராயப்படாத வழிகள்” என்கிற இலக்கினை சுலபமாக எட்ட உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Amygdale (அமிக்டெலா) – உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயத்தை மேற்கொள்ளும் நடைமுறையோடுத் தொடர்புடைய மூளையின் ஒரு பகுதி *
ஆராய்ச்சியானது துவக்க நிலையில் தான் இருக்கின்றன மேலும் மனிதர்கள் வியாகூலத்தின் (anxiety) பிடியில் சிக்குவதற்கு இந்த ஒரு அம்சம் மட்டுமே காரணமாக இருக்க முடியும் என்பதை நிறுவ, உறுதி செய்ய மேலும் பல பரிசோதனைகளும், உறுதியான தரவுகளும் தேவைப்படுகின்றன.
ரத்தச் சர்க்கரை அதிகரிப்பிற்கு முக்கிய காரணியான குறைவான இன்சுலின் சுரத்தலை சரி செய்து ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் நிறுத்த வெளியிலிருந்து ஊசி மூலம் இன்சுலினை தேகத்திற்குள் செலுத்துவது என்ற பொதுவான சிகிச்சை முறை மனநலம் தொடர்பான மருத்துவத்தில் சாத்தியமில்லாத நிலை இன்று வரை நீடிக்கிறது. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான குணாம்சம் உண்டு. அதாவது இவ்வுலகில் தோராயமாக 800 கோடி மனித மனோ நிலை. தனி மனிதர்களின் உளவியல் தொடர்பான குறைபாட்டிற்கு நேரடியான மருந்துகளும்/ சிகிச்சை வழிமுறைகளும் கண்டு பிடிக்கப்படும் வரை “அவனி(ளி)ன்றி ஓர் அணுவும் அசையாது” என்ற ஆஸ்திகர்களின் வாதமே ஸ்திரமானதாக நீடிக்கும்.
Excellent Article. Super.
பிரமாதமான கட்டுரை.
படித்துவிட்டு கருத்தைப் பகிர்ந்த வாசக நண்பருக்கு நன்றி