
1
சமரசங்கள் மீதமின்றி
தீர்ந்து போய்விட்டதொரு பொழுதில்
உன் மீதான
அதுவரையிலான அன்பை
சட்டகமிட்ட நினைவுச்சின்னமாய்
மாற்றிக் கொண்டேன்.
உனக்கான ஜீவநதி
எனது பேரன்புக் கடலின்
கழிமுகத்தில்
உறையத் துவங்கியது
உனை நோக்கிப் பயணித்த
கடைசிக் கப்பல் அங்கு தான்
தரை தட்டி நிற்கிறது.
2
இரவினை உதறி மடித்து வைக்கிறாள்
வைகறைச் சீமாட்டி
பனித்துளிகளின் ஈரமேறிய
வெளுத்த வெயிலுடையை
வானில் விரிக்கிறாள் மீமெதுவாய்
இருள் துரு துலக்கிய வானம்
தன் அகன்ற வாய்குவித்து
ஆச்சரியங்காட்டி
பரிதியாய் சிரிக்கிறது.
3
மணிக்கழுத்தில் மயிலறகு வருட
பரவும் மென்னதிர்வால் கூசி
குறுக்கும் கால்களில்
குளிரில் விரைத்த சிறுபுல் ரோமங்கள் குத்திட
ஒரு யுக வெட்கம் பூசிய முகத்தில்
அனிச்சையாய் வந்தமர்கிறது
காரணமற்ற குறுஞ்சிரிப்பு
நாணத்தின் முதற் சொல்லாய்.