மூட்டம் 

மெயின் ரோடு நிறுத்தத்தில் பஸ் நின்ற போது. அதிலிருந்த முக்கால்வாசிப் பேரும் உதிர்ந்து  விட்டார்கள். கோயிலுக்குப் போகும் ஜனம். நல்ல வேளையாக இன்று ஆடிக் கிருத்திகையோ, பங்குனி உத்திரமோ இல்லை. இருந்திருந்தால் கூட்டம் அம்மித் தள்ளியிருக்கும். அன்றெல்லாம் பக்திப் பரவசம் கூத்தாட ஓடி வரும் மக்கள் முருகனே மலையிலிருந்து கீழே இறங்கி வந்து நேரில் தரிசனம் தந்து  

விடுமளவுக்கு  முருகா முருகா என்று  கோஷமிட்டு ஊரையே கலக்கி விடுவார்கள். என்ன ஒரு பக்தி! என்ன ஒரு இறையாண்மை! ஆனால் தேர்தலன்றுதான் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்று நினைத்தபடி சரவணன் பஸ்ஸிலிருந்து கடைசி ஆளாக இறங்கினான்.

மெயின் ரோடிலிருந்து கோயிலுக்குச் செல்லும் தார்ப் பாதையில் காணப்பட்ட குண்டு குழிகள் நகராட்சியின் நரகாட்சித் திறமையைப் பறைசாற்றின. அப்பாதையில் சென்ற நான்கு சக்கர, இரு சக்கர வாகனங்கள் நடப்பவர்களைப் பயமுறுத்தும் வகையில் தாவித் தாவி ஓடின. அவற்றின் டயர்களை சாலை நிச்சயமாகப் பதம் பார்த்திருக்கும். ஒரு வேளை டயர் கம்பனிக்காரர்கள்தான் அதிக விற்பனையை எதிர்பார்த்து நகராட்சியுடன் கைகோர்த்து அம்மாதிரி சாலைகளை அமைத்திருப்

பார்களோ என்ற சந்தேகம் மனதில் தோன்ற சரவணன் தார்ச் சாலையை ஒட்டியிருந்த மண்பாதையில் நடந்து சென்றான். இடது பக்கமும் வலது பக்கமும் சற்றே சிதிலமடைந்தாற் போலக் காணப்பட்ட வீடுகள், ஐந்து மைல் தள்ளியிருந்த பெருநகரத்தின் நாகரிகத்தை இன்னும் பற்றிக் கொள்ள

வில்லை என்று உரத்த குரலில் கூறிக் கொண்டிருந்தன. ஏழெட்டு வீடுகளுக்கு ஒரு முறை பெரியதும் சிறியதுமான கல்யாண மண்டபங்கள் தென்பட்டன. குளிர் மட்டுமின்றி காற்றும் நிசப்தமும் மட்டுமே வளைய வந்து கொண்டிருந்த அம்மண்டபங்களும் நடந்து கொண்டிருப்பது மார்கழி என்று உறுதிப்படுத்தின. 

அவன் கோயில் வாசலை அடைந்த போது வலது பக்கமிருந்த பூஜை சாமான் கடைகள் ஒன்றிலிருந்து “சரவணா!” என்னும் அழைப்புக் குரல் அவனை வரவேற்றது. தொங்கிக் கொண்டிருந்த மாலைகளுக்கும் விபூதி, குங்கும, சந்தனக் கட்டுக்களுக்கும் நடுவே பிச்சாண்டியின் முகம் தெரிந்தது. சரவணன் கடையருகே சென்றான்.

“அட நீ எங்கே திடீர்னு முருகனைப் பாக்க வந்திட்டே?” என்று சிரித்தான் பிச்சாண்டி. அவனும் சரவணனும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள்.

“முருகனை இல்லே. முருகேசனை” என்று சரவணனும் சிரித்தான். முருகேசனும் அவர்களது வகுப்புத் தோழன்தான்.

“ஓ அப்பிடியா? இன்னிக்கிக் கடையெ இழுத்து விட்டுக்காம இருந்தேன்னா, நாங்கூட இப்ப உன்னோட வரலாம்” என்றான் பிச்சாண்டி சிறிது வருத்தம் தெரிவிக்கும் குரலில். 

அப்போது அர்ச்சனைக் கூடை கேட்டு ஒருவர் வந்தார்.

சரவணன் நண்பனிடம் “அதுக்கென்ன, அடுத்த தடவை எல்லாருமா மீட் பண்ணினாப் போச்சு. நீ வியாபாரத்தைக் கவனி. நான் வரட்டா?” என்று நகர்ந்தான்..

“ஒண்ணும்  சாப்பிடாம போறியே? கலர் வாங்கிட்டு வரச் சொல்லட்டா?” என்று அர்ச்சனைக் கூடையில் பூஜை சாமான்களைப் போட்டபடி கத்தினான் பிச்சாண்டி.

“வேணாம், வேணாம்”. 

கோயில் வாசலில் பெரிய தேர்  நின்றது. சிறு குழந்தைகள் அதைத் தொட்டுப் பார்த்தும் விளையாடியும் புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருந்ததை அவர்களின் முகங்கள் தெரிவித்தன. குழந்தைகளுடன் நின்றிருந்த பெரியவர்கள் கவனம் வெவ்வேறு இடங்களில் இருந்தது. அறியாத

வர்களுக்குப் புதுமை தரும் கிளுகிளுப்பும் மகிழ்ச்சியும் அறிந்தவர்களுக்கு ஏற்படுவதில்லை என்பது வாழ்க்கை உருவாக்கி விட்ட நியதி போலும். சரவணன் வலது பக்கம் சென்ற சாலையில் நடந்தான். அவனுக்கு

 முருகேசனை இந்த ஏழெட்டு மாதங்களாகப் பழக்கம். பி.காமில் இந்த வருஷம்தான் அவர்கள் சேர்ந்தார்கள். சரவணன் வீடு கல்லூரிக்கு அருகில் இருந்ததால் முருகேசனை அவன் பல தடவைகள் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறான். ஜாயிண்ட் ஸ்டடி, காலையில் ஒரு வகுப்புக்குப் பின் அடுத்த வகுப்பு மதியம் என்று இருக்கும் நாள்களில் 

இடைவெளி நேரத்தை வீட்டில் கழிக்க, சரவணனின்  பிறந்த நாள் கொண்டாட்டம் என்று வாய்த்த தருணங்கள் பல இருந்தன. இம்மாதிரி வாய்ப்புகள்  இல்லாததால் முருகேசன் பல வாரங்களாகச் சரவணனைத் தன் வீட்டுக்கு ஒரு நாள் வந்து போகுமாறு வற்புறுத்திக் கொண்டிருந்தான். 

அவன் வீட்டுக்கு வரும் வழியில் ஒரு அய்யர் ஓட்டல் இடது பக்கம் இருக்கும் என்று முருகேசன் சொல்லியிருந்தான். பத்மஜா வெஜிடேரியன் ஹோட்டல் சரவணன் கண்ணில் பட்டது. காலை பத்து மணிக்கு ஹோட்டலிலிருந்து வந்த எம் எஸ்ஸின் சுப்ரபாதத்தை வாசல் தொட்டியில் எச்சில் இலைக்குக் காத்துக் கொண்டிருந்த நாலைந்து நாய்கள் கேட்டுக் கொண்டிருந்தன. ஹோட்டலுக்கு எதிர்சாரியிலிருந்த ஒரு கட்டிடத்தில் ஏதோ விசேஷமென்று வாசலில்கட்டப்பட்டிருந்த மாவிலைத் தோரணங்கள் காற்றில் ஆடிக் கொண்டிருக்க  அங்கிருந்த ஒலிபெருக்கி

யிலிருந்து வந்த “மயக்குறியே! பிரிக்கிறியே” என்ற கந்தர்வ கானத்தைக் கேட்டுக் கொண்டு சில விடலைப் பையன்கள் நின்று கொண்டிருந்தார்கள்.  

சரவணன் மேலே நடந்து சென்றான். வழியில் மயில்களுக்குப் பதிலாக எருமைகள் உடம்பை அசைத்து அசைத்து மெல்ல நடந்து கொண்டிருந்தன. இந்த வழியில் பஸ்கள் செல்ல அனுமதி தரப்படவில்லை என்பதாலோ என்னவோ மனிதர்களும் சாலையின் நடுவில் சுதந்திரமாக நடந்து சென்றனர். கட்டாயத்தின் பலத்தில்தான் ஒழுங்கு இயங்கும் என்பது வெட்ட வெளிச்சமாகும் தருணங்களில் ஒன்று. அவன் நடந்து சென்ற பக்கத்துக்கு எதிர்சாரியில் இரண்டு பெண்கள் சிரித்தும் பேசியும் ஆரவாரமாக நடந்து வந்தது அவனது கவனத்தை ஈர்த்தது. ஒருத்தி ரோஸ் கலரிலும் இன்னொருத்தி  இளம் நீலக் கலரிலும் தாவணி அணிந்திருந்

தார்கள். சரவணன் அவர்களைப் பார்த்த போது நீலக்கலர், ரோஸ்கலரின் முகத்தைப் பார்த்தபடி பேசிக்கொண்டு வர ரோஸ்கலரின் பார்வை அவன் மீது விழுந்தது. அவள் சில வினாடிகள் அவனைப் பார்த்து விட்டு தோழியிடம் ஏதோ சொல்லிச் சிரித்தாள். இப்போது  நீலக்கலர் அவனைத் திரும்பிப் பார்த்த பின் தோழியைப் பார்த்து ஒப்புக் கொள்வது போலச் சிரித்தாள். அவர்கள் அப்போது அவனைக் கடந்து சென்றார்கள். அவன் நடப்பதை நிறுத்தி விட்டு அவர்கள் செல்லும் பக்கம் திரும்பி நின்றான். அவன் எதிர்பார்த்தது போல இருவரும் சில அடிகள் சென்ற பின் திரும்பிப் பார்த்தார்கள். அவன் நின்ற விதம் அவர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கி விட்டது போல அதற்குப் பின் அவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை. சரவணன் தனக்குள் ‘யார்கிட்ட?’  என்று சொல்லியபடி மேலே நடந்தான். 

முருகேசன் அவன் வீடு உள்ள சிறிய சந்தின் ஆரம்பத்தில் மெயின் ரோடு மீது ஒரு பேக்கரி கடை இருக்கும் என்று அடையாளம் சொல்லி

யிருந்தான். சில நிமிஷ நடையில் பேக்கரி வந்து விட்டது. சரவணன் சந்தில் நுழைந்தான். அந்த சந்தில் இருந்த ஒரே மாடி வீடு

அவர்களுடையதுதான் என்றும் முருகேசன் கூறியிருந்தான். அவன் வீட்டு வாசலில் ஒரு தண்ணீர்த் தொட்டி இருந்தது. அவன் வீட்டை நெருங்கிய போது தொட்டியில் இருந்த நீரில் வாயை வைத்திருந்த காகம் ஒன்று அவனை நிமிர்ந்து பார்த்து விட்டுப் பயமேதுமில்லாமல் மீண்டும் தண்ணீருக்குள் முகத்தை விட்டது. தாகம் பயத்தைத் தூக்கியெறிந்து விட்டது என்று நினைத்தபடி சரவணன் படிகளில் ஏறி கதவைத் தட்டினான். 

கதவைத் திறந்த பெண்மணி அவனைப் பார்த்ததும் “சரவணனா?” என்று கேட்டாள். அவன் முகம் தெரிவித்த அதிர்ச்சியை ரசிப்பது போல அவள் முகத்தில் புன்னகை மின்னியது. அப்போதுதான் அவள் குளித்து விட்டு வந்திருக்க வேண்டும் என்பதை நெற்றியில் தெறித்திருந்த நீர்த் திவலைகளும், தலை முடியைச்  சுற்றிக் கட்டப்பட்டிருந்த ஈரத் துண்டும் தெரிவித்தன. முகத்தில் தென்பட்ட காந்தி ஒரு வினாடி சரவணனை அயர அடித்தது. சற்றுக் கறுப்பாக இருந்த முகத்தைக் கண்களும் நாசியும் பின்னுக்குத் தள்ளி அவளின் பொலிவை எடுத்துக் காட்டின. முருகேசனின் அம்மாவாக இருக்க வேண்டும் என்று சரவணன் நினைத்தான். 

“ஆமா” என்றான். “ஆனா என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்?” 

“அதான் நேத்தி விளக்கு வச்ச நேரத்துக்கு ஆரம்பிச்ச சரவணன் சரவணங்கிற மந்திரம் இப்ப அஞ்சு நிமிஷம் முந்தி வரைக்கும் இந்த வீட்டுக்குள்ளதான சுத்திக்கிட்டு இருக்கு!” என்று அவள் சிரித்தாள். அந்தப் புன்னகையில் அவள் முற்றிலும் வேறொரு மனுஷியாகி எதிராளியின் கவனத்தை ஈர்ப்பவளாக இருந்தாள். 

குரல் கேட்டு உள்ளிருந்து வந்த முருகேசன் “வா, வா. வீடு கண்டுபிடிக்க கஷ்டமா இல்லியே?” என்று சரவணன் கைகளைப் பற்றிக் கொண்டான். தொடர்ந்து “எங்க சித்தி உன்னைப் பயமுறுத்திக்கிட்டு இருக்கா?”  

‘சித்தியா?’ என்று கண்ணில் கேள்விக் குறியை ஏற்றி சரவணன் நண்பனைப் பார்த்தான்.

“வா உள்ளே. வீட்டுக்குள்ளாற வராம எல்லாத்தையும் வாசலிலேயே வச்சுப் பேசணுமா?” என்று முருகேசனின் சித்தி உள்ளே சென்றாள். 

 முருகேசன் “லாப்டாப்பைப் பாக்குறியா? வா, என் ரூமுக்குப் போகலாம்” என்று நண்பனை அழைத்துச் சென்றான்.  அதை பார்க்க வேண்டும் என்றுதான் சரவணன் இன்று கிளம்பி வந்திருந்தான்.  

அவர்கள் அறைக்குள் சென்றதும் சரவணன் “அது உங்க சித்தியா?” என்று கேட்டான்.

“ஆமா. பாக்க வயசு கொஞ்சமானவங்களா இருக்காங்க இல்லே? எனக்கு அஞ்சு வயசும் என் தங்கச்சிக்கு ரெண்டு வயசும் ஆகுறப்போ எங்கம்மா இறந்துட்டாங்க. எங்களைப் பாத்துக்கிறதுக்குன்னுதான் எங்கப்பா ரெண்டாம் தாரம் கட்டிக்கிட்டாரு” என்றான் முருகேசன். பிறகு அங்கிருந்த மேஜையில் ஒய்யாரமாக உட்கார்ந்திருந்த மடிக்கணினி அவர்களைத் தொடச் சொல்லிக் கூப்பிட்டது.  அதன் விலை நாற்பதாயிரம் என்றும் பத்து தவணையில் பணத்தைக் கட்ட வேண்டும் என்றும் முருகேசன் சொன்னான். நீ கூட ஒண்ணு வாங்கிடு  என்றான். அடுத்த கால்மணி நேரம் அவர்கள் லாப்டாப்பைச் சீண்டி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

“ஏன், நீங்க ரெண்டு பேரும் சாப்பிட வரலியா?” என்ற குரல் கேட்டு அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். அறை வாசலில் சித்தி நின்றாள். இப்போது அவள் தலை வாரி, மலரிட்டு, நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டிருந்தாள். சரவணனைப் பார்த்து “இந்த நேரத்துக்கு உங்க வீட்டிலே டிபன் சாப்பிட்டிருப்பேல்லே?”

அவன் சிரித்தபடியே எழுந்தான். சித்தியின் பார்வை தன் மீது குவிந்தி

ருப்பதை அவன் உணர்ந்தான். 

அவர்கள் இருவரும் சாப்பாட்டு மேஜையின் முன் அமர்ந்து கொண்டார்கள். “எங்கே சித்தி, தனத்தைக் காணோம்?” என்று முருகேசன் கேட்டான்.

“இதோ வந்துகிட்டே இருக்கேன்” என்று குரல் முன்னால் வர பின்னால் அந்தப் பெண் வந்தாள். “இன்னிக்கி சனிக்கிழமைன்னு பாத்து வேணும்னே மந்த்லி டெஸ்ட் வச்சிருக்காங்க” என்று சிணுங்கும் குரலில் சொன்னபடியே அவர்களுக்கு எதிரேயிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். முருகேசனின் முகச் சாயல் அவளிடமிருந்தது. அவன் தங்கை என்று சொல்லும்படி அவனை விட உயரம் கம்மியாக இருந்தாள். இரட்டைச் சடை பின்னி, பூ வைத்து. நெற்றியில் பொட்டு இட்டு, தாவணி அணிந்திருந்த அவள் நவ நாகரிகத்திடம் ‘என்கிட்டே வராதே. தலையைக் குனிஞ்சுக்கிட்டு தூரப் போயிடு’ என்று கட்டளை இடுவதைப் போலிருந்தாள்.

சித்தி மூன்று தட்டுகளில் பொங்கலும் சட்டினியும் எடுத்து வந்து மேஜையில் அவர்கள் எதிரே வைத்தபடி “அது என்ன, ஒரு மணி நேரம்தான?” என்று தனத்தைப் பார்த்துக் கேட்டாள்.

“ரெண்டு டெஸ்ட்டு. மதியம் சாப்பாட்டுக்கு வந்தாலே பெரிய அதிசயந்தான்.”

“லீவு நாள்லே டெஸ்ட் வைக்கக் கூடாதுனு ஒரு சட்டம் கொண்டு வரணும்” என்றான் சரவணன்.

தனம் அதைக் கேட்டு ‘குபுக்’கென்று சிரித்தாள். 

“தனம் உனக்கு இது யாருன்னு சொல்லலியே. என் பிரெண்டு…”

“சரவணன்” என்றாள்.  “அந்த மஞ்ச சட்டை அவருதானே இவரு?”

“ஐயோ, டேய் என்னடா இது?” என்று சரவணன் திகைத்தான்.

சரவணன் ஒரு நாள் அவனுடைய புதுக் சட்டையை அணிந்து கொண்டு கல்லூரிக்கு வந்தான். இளம் மஞ்சள் நிறத்தில் பொலிந்த  அந்தச் சட்டையின் காலர் அழுத்தமான நீல நிறத்தில் கவர்ச்சியாகத் தைக்கப்பட்டிருந்தது. அன்று பல தடவை முருகேசன் நண்பனிடம் அதை புகழ்ந்து தள்ளி விட்டான். அன்று மாலை அவர்கள் இருவரும் சரவணனின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பார்க்குக்குப் போனார்கள். போகிற வழியில் அவர்கள் தெருவில் கண்ட காட்சியில் அதிர்ந்து விட்டார்கள். தெரு முனையில் எப்போதும் கையை நீட்டிப் பிச்சை கேட்டுக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும், மன நலம் சரியில்லாத பிச்சைக்காரி மார்பில் இரு கைகளையும் குறுக்கே வைத்துக் கொண்டு நின்றாள். பிச்சை கேட்கும் குரல் அவளிடமிருந்து வரவில்லை. அவளுடைய இடுப்பைச் சுற்றியிருக்கும் கிழிந்த புடவை அப்படியேயிருக்க யாரோ அயோக்கியன் அவளது மார்த்துணியை நீக்கி விட்டுப் போய் விட்டிருக்கிறான். சரவணன் ஒரு வினாடி கூட யோசிக்காமல் பரபரவென்று தனது புதிய சட்டையைக் கழற்றி அந்தப் பிச்சைக்காரிக்கு அணிவித்து சட்டைப் பட்டன்களைப் போட்டு விட்டான். தெருவில் நடந்து சென்றவர்கள் அப்படியே நின்று விட்டார்கள்….     

“இன்னும் நிறைய ஸ்டாக் இருக்கு. அப்புறம் சொல்றேன். சித்தி, பொங்கல் சூப்பர்” என்று தட்டைக் காலி செய்து விட்டு அவள் சிரித்துக் கொண்டே எழுந்தாள்.

மறுபடியும் சரவணன் நண்பனைக் கேள்விக்குறியோடு பார்த்தான். 

சித்தியும் முருகேசனும் அவனைப் பார்த்து சிரித்தார்கள்.

“எல்லாம் சொல்லிட்டியா? மீண்டும் கோகிலாலே…”

“எல்லாம் இவங்களுக்குத் தெரியும்” என்றான் முருகேசன்.

“அடப் படுபாவி!”

சரவணன் ஒரு நாள் சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டும் என்றான். அன்று அவனும் முருகேசனும் ஐந்து மணியிலிருந்து டவுன் ஹாலில் சுற்றிக் கொண்டிருந்தார்கள். விடுமுறை தினம் என்று ஒரே கூட்டம். கடைகளுக்கு வந்த பெண்கள் கூட்டம். அவர்களைக் காண இவர்கள்! சரவணன் திடீரென்று வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்னதும் முருகேசன் அவனிடம் “எதுக்குடா?” என்று கேட்டான்.

“இன்னிக்கி டி.வி.ல மீண்டும் கோகிலா போடறாங்க. போய்ப் பாக்கணும்” என்றான் சரவணன்.

“என்ன அந்த நாப்பது வருஷப் பழைசையா? அதை முந்தியே ரெண்டு தடவ பாத்தேன்னு நாம ஜெகதாவுக்குப் போன  அன்னிக்கிசொன்னியேடா!”. 

“ஆமா. ஆனா இன்னிக்கு ஆறாவது தடவை” என்று சிரித்தான் சரவணன்.

“கமலஹாசன் மேலே அவ்வளவு கிறுக்கா உனக்கு?” என்று முருகேசன் கேலியாகச் சிரித்தான்.

“இல்லே. ஸ்ரீதேவி… “

முருகேசன் சிரிப்பை அடக்க முடியாமல் சரவணன் முதுகில் குத்தினான்…

சரவணன் முருகேசனை நெருங்கி “ஸ்ரீதேவி பத்தியும் சொல்லிட்டியா?” என்று முணுமுணுத்தான். 

“அதுதானே அதிலே முக்கியம்” என்று சித்தி அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவள் கண்களில் கூத்தாடிய விஷமத்தைச் சரவணன் பார்த்தான்.

“நல்லா காலை வாரி விட்டிட்டியேடா” என்றான் சரவணன்.

“உன்னைப் பத்தி உங்கம்மாக்குத் தெரியாததெல்லாம் எங்களுக்குத் தெரியும்” என்று மறுபடியும் சிரித்தாள் சித்தி. சரவணன் லேசான வெட்கம் கொண்டவனாகத் தலையைக் குனிந்து கொண்டான்.

அப்போது தனம் அங்கு வந்தாள். 

“சரி, நா கிளம்பறேன். எல்லாரும் எனக்கு விஷ் பண்ணுங்க.” 

“இப்ப உன் முகம் டிஃப்ரெண்டா இருக்கே?” என்றான் சரவணன்.

தனம் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

“இப்ப மூக்குத்தி போட்டுக்கிட்டு வந்திருக்கா” என்றாள் சித்தி.

“நீ நல்லா டெஸ்ட் கொடுத்திட்டு வரணும் “

“தாங்க்ஸ்” என்றாள் தனம்.

“நா ஏன் அப்பிடி சொன்னேன்னு நீ கேக்கலியே?” 

அவள் புரியாமல் அவனைப் பார்த்தாள்.

“இந்தத் தலையை விரிச்சுப் போட்டுக்கிட்டு, அரை ட்ரெஸிலே உடம்பையெல்லாம் காமிச்சுக்கிட்டு ஆம்பளைக்கு  சமானம்னு விட்டா மீசை வளக்கறதுக்குக் கூட தயாரா அலையுறவங்க மத்தியிலே நீ இப்பிடி மகாலக்ஷ்மி மாதிரி ….”

“ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப், இது எல்லாம் எங்க சித்தியோட கெடுபிடி” என்றாள் தனம். சித்தியின் பக்கம் திரும்பி “இப்ப உனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமே!”

“அவன் நல்லாத்தானே சொல்றான். சரி, நீ கிளம்பு. இங்க நின்னு வம்படிச்சுக்கிட்டு இருந்தா டெஸ்ட் அவ்வளவுதான்.”

தனம் கிளம்பிச் சென்றாள்.

“இவனுக்கும் அவ டேஸ்டுதான். இதுங்க ரெண்டும் ஒரு கட்சி. நான் மட்டும் தனி. இப்ப நல்ல வேளையா நீ ஒருத்தன் எனக்குக் கிடைச்சிட்டே” என்றாள் சித்தி. 

சரவணன்  திடுக்கிட்டு அவளைப் பார்த்தான். அவள் முகம் இயல்பாக இருந்தது. அவள் பார்வை அவனை அலசுவது போலத் தோற்றமளித்தது. 

இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டதால் கை கழுவச் சென்றார்கள்.

முருகேசனின் அறைக்கு மறுபடியும் சென்று மடிக் கணினியை இயக்கினார்கள்.

சரவணன் “உங்கப்பாவை இதுவரை நான் பார்க்கலையே” என்றான். 

“பெரியகுளம் போயிருக்காரு. குத்தகைப் பணம் வாங்கிட்டு இன்னிக்கி சாயந்திரம் வந்திடுவாரு” என்றான் முருகேசன். “இன்னிக்கி நீ இங்கியே தங்கிட்டுப் போயேன். அவரையும் பாக்கலாம்.”

“இல்லே, இன்னிக்கி ராத்திரி எங்கம்மா மெட்ராஸ் போறாங்க. நாந்தான் ஸ்டேஷனிலே அவங்களைக் கொண்டு போய் விடணும். அதுக்கு முன்னாலே பூஜாவோட ஈவினிங் ஒரு இங்கிலீஷ் படம் போறேன்” என்றான் சரவணன்.

“ஆமா. இங்கிலீஷ் படங்குறியே! பூஜாவோட ஹெல்ப் நிச்சியம் வேணும் உனக்கு” என்று முருகேசன் சிரித்தான்.

அடுத்த அரைமணி நேரம் அவர்கள் கணினியில் கேம்ஸ் ஆடினார்கள். மூளையின் கூர்மையை வம்புக்கு இழுக்கும் பொழுதுபோக்கு.

முருகேசன் “ஏதாவது புஸ்தகம் படிக்கிறியா?” என்று கேட்டபடி அவன் மேஜையிலிருந்த தமிழ் நாவல் ஒன்றைக்  கொடுத்தான்.

சரவணனும் முருகேசனுடன் அவனது அறையிலிருந்து வெளியே வந்தான் .

அப்போது வாசலிலிருந்து யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. முருகேசன் எழுந்து சென்றான்.சில நிமிஷங்களில் திரும்பி வந்து “மேல் வீட்டுக்காரரு. கரண்டு வரலேங்கிறாரு. போய்ப் பாத்திட்டு அஞ்சு நிமிஷத்தில் வந்திர்றேன்” என்று சொல்லி விட்டுப் போனான்.

சரவணன் ஹாலில் இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு புத்தகத்தைப் புரட்டினான்.

சில நிமிஷங்கள் கழிந்திருக்கும். சித்தி சமையல் அறையிலிருந்து வந்தவள் “உனக்குப் புஸ்தகமெல்லாம் பிடிக்குமா?” என்று கேட்டாள்.

“ஆமா. எங்க வீட்டிலே லைப்ரரியே இருக்கு. எங்கம்மாவுக்குப் புஸ்தகம்னா உசிரு” என்றான்.

“வேலை பாக்குறாங்களா?” என்று கேட்டாள்.

“இல்லேல்லே.”

“உங்கம்மா சிகப்பா?” என்று கேட்டாள்.

அவன் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான்.

“ஆமா. நல்ல சிகப்பு.”

“உன்னைப் பாத்தாலே தெரியுதே? வெள்ளைக்காரன் மாதிரியில்லே கலர் இருக்கு!” என்றபடி அவள் முன்னே வந்தாள். “நம்ம ஆளுங்களுக்கு எல்லாம் இந்த மாதிரிக் கலர் வராதே. ரொம்ப ஆச்சரியமால்ல இருக்கு!” உங்கப்பாவும் சிகப்புதானா?”

“இல்லே, அவர் கறுப்பு. நம்ம ஆளுங்க மாதிரிதான்.”

சித்தி அவனை உற்றுப் பார்த்தாள்.

“எங்கப்பா நம்ம ஜாதி. எங்கம்மா அய்யிரு.” 

அவள் ஒரு வினாடி தாக்கப்பட்டவளைப் போலக் காணப்பட்டாள். சமாளித்து “அதானே பார்த்தேன்” என்றாள்.  அவனருகில் வந்து ” உன் கையை நீட்டு” என்றாள். அவன் வியப்புடன் அவள் சொன்னதைச் செய்தான்.  அவள் தன்  கையை அவன் கைக்குப் பக்கவாட்டில் வைத்து “டி.எம்.கே. மாதிரில்ல இருக்கு!” என்று சிரித்தாள். 

அவள்  செய்கை அவனுக்குத் திகைப்பைத் தந்தது. 

அவன் கையை விலக்கிக் கொண்டதைப் பார்த்து  அவள் தன் கையை எடுத்து உடலின் பின்புறம் கட்டிக் கொண்டவள் ஊஞ்சலின் ஒரு முனையில் உட்கார்ந்து கொண்டாள்.

அவனைப் பார்த்து “உங்கப்பாம்மா லவ் மேரேஜா?” என்று கேட்டாள். 

சரவணன் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான். பிறகு ஆமென்று தலையாட்டினான்.

“கொடுத்து வச்சவங்க உங்கம்மா” என்றாள். சரவணன் ஒன்றும் புரியாமல் அவளைப் பார்த்தான்.

“மனசுக்குப் பிடிச்சவனைக் கலியாணம் பண்ணிக்கிறதுக்குக் கொடுத்து வச்சிருக்கணும். எனக்குப் பண்ணி வச்சதெல்லாம் ஒரு கலியாணத்திலே சேத்தியா? எங்க குடும்பம் சாப்பிடறதுக்கு எப்பவும் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிற குடும்பம். இதிலே இவளாவது நல்ல சாப்பாடு சாப்பிடட்டும்னு முருகுவோட அப்பாவைக் கட்டி வச்சிட்டாங்க. அவருக்கும் எனக்கும் இருபத்தி ரெண்டு வயசு வித்தியாசம்.  ஒரு மக வயசு வித்தியாசம்..”

சரவணன் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் உட்கார்ந்திருந்தான்.  

 “இதெல்லாம் போதாதுன்னு எனக்குக்  குழந்தையெல்லாம் பொறக்கக் கூடாதுன்னு ஒரு கட்டளை வேறே.”

“ஐயையோ!” அவனால் தாங்கிக் கொள்ளத்தான் முடியவில்லை.

“எனக்கும் எங்க ஊர்லே ஒரு பையன் மேலே ஆசை இருந்திச்சு. வேற ஜாதின்னு எங்கய்யா மாட்டேன்னுட்டாரு. என்னைய விட மூணு வயசு ஜாஸ்தி. கவர்மெண்டுல வேலை. அவனும் உன்னை மாதிரி நல்ல சிவப்பு” என்றாள்.   

மறுபடியும் கதை  ஆரம்பித்த இடத்துக்கே வருகிறதே என்று அவன் நினைத்தான். அவளுடைய பால்ய காலத்துக் கதையை எதற்குத் தன்னிடம், அதுவும் அறிமுகமான சில மணிகளிலேயே சொல்லுகிறாள்? சினிமாவில்தான் இம்மாதிரி நடப்பதைப் பார்த்திருக்கிறான்.அவன் பேச்சை மாற்றி அவளுக்கு உற்சாகம் தரும் விதத்தில் ஏதாவது பேச வேண்டு என்று தோன்றியது.

“இன்னிக்கி நீங்க செஞ்சிருந்த பொங்கல் பிரமாதம். எங்க அம்மா செஞ்ச மாதிரி இருந்திச்சு” என்றான்.

ஒரு கணம் அவள் முகத்தைச் சுழித்த மாதிரி இருந்தது. பிறகு முகத்தில் மலர்ச்சி தோன்ற “உனக்குப் பிடிச்சிருந்திச்சா? ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.

“ஆனா உங்கம்மாவுக்கு எவ்வளவு அனுபவம் இருக்கும்? அவங்களுக்கு என்ன வயசு?” என்று கேட்டாள்.

 “போன மாசம்தான் அவங்களோட அம்பத்தஞ்சாவது பொறந்த நாளைக் கொண்டாடினோம்” என்றான். கையில் வைத்திருந்த புஸ்தகத்தைப் புரட்டினான்.

“அம்பத்தி அஞ்சு. முப்பத்தி அஞ்சு. கணக்கு சரியா வரலே” என்றாள்.  

சரவணன் அவளை ஏறிட்டு நோக்கினான். அவள் கண்கள் அவன் மீது பதிந்திருந்தன.  

 அவன் பார்ப்பதை உணர்ந்து அவள் தன் கண்களை விலக்கிக் கொண்டு ஊஞ்சலிலிருந்து எழுந்தாள்.

அப்போது “சித்தி” என்று கூப்பிட்டுக் கொண்டே தனம் உள்ளே வந்தாள்.

“என்னடி? என்ன ஆச்சு டெஸ்டு எல்லாம்?”

“ஸ்கூல்லே வேலை பாக்குற பியூன் ஒருத்தரு திடீருன்னு இறந்துட்டாராம். அதனாலே எல்லா டீச்சருங்களும் அங்க போகணும்னு இன்னிக்கி டெஸ்ட்டையெல்லாம் அடுத்த வாரத்துக்குத் தள்ளிப் போட்டுட்டாங்க” என்று அவள் தன் கைப்பையை அங்கிருந்த மேஜை மீது தூக்கிப் போட்டாள்.

“அதான் கெளம்பறப்பவே நீ அழுதுகிட்டுக் கிளம்பினீயே” என்றாள் சித்தி. 

“அதான் சித்தி வாழ்க்கையிங்கிறது. முதல்ல அழுதா பின்னாலே சிரிக்கலாம். என்னா நான் சொல்றது?” என்று சரவணனைப் பார்த்துச் சிரித்தாள்.

“அடேயப்பா! என்னா தத்துவம்! இந்த வார அழுகையெ அடுத்த வாரத்துக்கு மாத்தியிருக்காங்க, அவ்வளவுதான்” என்று சரவணனும் சிரித்தான்.

“அப்பிடிப் போடு” என்றாள் சித்தி.

“அப்பா, என்ன ஒரு ஆப்டிமிசம்” என்றாள் தனம்.

“கொஞ்ச பேருக்குதான் இந்த வாழ்க்கையிங்கிறது ஊசப்பலகையாட்டம். மேலே ஏறுறதும் கீழ எறங்குறதுமா நடக்கும். ஆனா ஒரேயடியா ஆயுசு பூரா கீழயே கெடக்கற ஜென்மங்களும் இருக்கத்தானே இருக்கு” என்றாள் சித்தி.

“இது என்ன புதுக் கணக்கா இருக்கு?’ என்றாள் தனம் சித்தியைப் பார்த்து. அவள் பதில் எதுவும் அளிக்கவில்லை.

சித்தி சொன்னது தனத்துக்கு அல்ல, அவனுக்கு என்று சரவணன் நினைத்தான். மிக ஆழமாக வேரூன்றிய வலியை வெளிப்படுத்தும் சொற்கள். எதற்காக அவள் அவனின் பரிதாபத்தை எதிர்பார்க்கிறாள் என்று அவனுக்கு குழப்பமாக இருந்தது. அவள் எதிர்பார்ப்பது அவனது அனுதாபத்தையா அல்லது…?  அவன் அவளைப் பார்த்தான். அவள் கண்கள் அவன் கண்களை நேரடியாகச் சந்தித்தன. புரியுதா என்று கேட்கும் கண்கள் என்று அவனுக்குத் தோன்றிற்று. அவன் தலையைக் குனிந்து கொண்டான்.

“சரி, நா போயி சமையலைக் கவனிக்கிறேன்” என்று சித்தி உள்ளே சென்றாள். 

“எங்க முருகு அண்ணன்?” என்று தனம் கேட்டாள்.

அவன் மாடி வீட்டுக்குப் போயிருப்பத்தைச் சொன்னான் சரவணன்.

“இன்னிக்கி உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது சினிமா புரோகிராம் இருக்குமே?” என்று தனம் கேட்டாள்.

“இல்லே. நா மட்டுந்தான் போறேன். பூஜாவோட” என்றான்.சரவணன். “அவ என்னோட…”

“கேர்ள் பிரெண்டு” என்று முடித்தாள் தனம் சிரித்துக் கொண்டே.

“ஓ, அதையும் சொல்லிட்டானா?” என்றான் சரவணன்.

“உங்களுக்கு நிறைய கேர்ள் பிரெண்ட்ஸா?”

“ஆமா” என்று கேலியாகச் சிரித்தான் சரவணன். “அழகா இருக்கிறவங்க எல்லாரும் எனக்கு சிநேகிதிங்கதான்.”

 “அப்ப நான்லாம் நுழையக் கூடச் சான்சே இல்லே” என்றாள் அவள் விஷமமாக.

“ஆமா. நோ சான்ஸ்!”

அவள் அவன் பதிலைக் கேட்டு வாய் விட்டுச்  சிரித்தாள்.

அப்போது சமையல் அறையிலிருந்து “தனம்!” என்று சித்தி கூப்பிடும் குரல் கேட்டது.

“என்ன சித்தி?” 

“இங்க வாயேன். கொஞ்சம் வாழக்காவ நறுக்கிக் குடு.”

“சித்தி, அன்னிக்கி நா காய் கட் பண்ணிக் கொடுத்தப்போ நீ திட்டினியே ஒண்ணும் சரியா செய்யலேன்னு.”

“அது அன்னிக்கி” என்று சித்தியின் குரல் சற்று உரத்து ஒலித்தது.

முனகிக் கொண்டே தனம் உள்ளே சென்றாள்.

மறுபடியும் சரவணன் புஸ்தகத்தில் கண்களை நிலைக்க வைக்கும் போது முருகேசன் உள்ளே வந்தான். மேஜையின் மீது தனத்தின் கைப்பையைப் பார்த்து விட்டு “தனம் வந்திருச்சா? ஏன், டெஸ்டு எழுதாம ஓடி வந்திருச்சா?” என்று கேட்டான். “எங்க அது?”  

தனம் சமையலறையில் சித்திக்கு உதவச் சென்றதை சரவணன் சொன்னான்.

“ஐயோ, தனம் சமையக்கட்டுக்குப் போயிருக்கா? அப்ப நாம அய்யரு மெஸ்ஸுக்கு போயி லஞ்சு சாப்பிடறதுதான் உத்தமம். இல்லாட்டி ஒரு பஸ் பிடிச்சு காலேஜ் ஹவுசுக்குப் போயிரலாம்” என்றான் உரத்த குரலில். சமையக் கட்டுக்குக் கேட்கட்டும் என்று. 

ஆனால் சாப்பாடு மிகவும் சுவையாக இருந்தது. சித்தியின் கைப்பாகம்தான் அது என்றாலும் சரவணன் தனத்திடம் “இவ்வளவு பிரமாதமா சமைச்சிருக்கியே சித்திக்கு உதவறேன்னுட்டு” என்று வம்புக்கு இழுத்தான். 

“இந்தக் கேலிதானே வேண்டாங்கிறது” என்றபடி தனம் சித்தியைப் பார்த்தாள். 

“என்னவோ எங்களுக்குத் தெரிஞ்சதை செஞ்சோம். நாங்க என்னா அய்யிரு மெஸ்ஸைக் கண்டோமா? இல்லே காலேஜு ஹவுசுக்குப் போயிருக்கமா?” என்றாள் சித்தி.

தனம் சிரித்தாள். சரவணனும் கூட. முருகேசன் “அப்பா! என்னா அடி! என்னா அடி!” என்று வலி பொறுக்க முடியாதவன் போல முகத்தைக் கோணிக் கொண்டான்.

“உங்க அம்மா சமையல் மாதிரி இருக்கா? இருக்காது” என்றாள் சித்தி.

“உண்மையைச் சொல்லணும்னா எங்க அம்மா சமையல் மாதிரி இல்லே” என்று சொல்லி நிறுத்தினான் சரவணன். பிறகு “அதை விட சூப்பரா இருக்கு!” என்றான்.

சாப்பிட்டு முடித்த பின் அவனும் முருகேசனும் ஹாலில் சென்று உட்கார்ந்து கொண்டார்கள். பேச்சும் சிரிப்புமாக அரை மணி கழிந்தது. தனம் பரிட்சைக்குத் தயார் செய்ய அன்று காலையில் சீக்கிரமே எழுந்து விட்டேன் என்று சொல்லித் தூங்கச் சென்று விட்டாள். 

சரவணன் நண்பனிடம் “சரி, நான் கிளம்பட்டுமா? என்று எழுந்தான். முருகேசன் சித்தியை அழைத்து வர சமையலறைக்குச் சென்றான். அவன் வர சில நிமிடங்கள் பிடித்தன.      

“அவங்க இப்பதான் சாப்பிட உக்காந்தாங்க போல. நீ கிளம்பதைச் சொன்னேன். கையைக் கழுவிட்டு வராங்க” என்றான்.

“அடடே. எதுக்கு சாப்பிடறத நிறுத்திட்டு வரணும்?” என்று சரவணன் பதறினான்.

சித்தி அதற்குள் வந்து விட்டாள்.

“கிளம்பிட்டியா? சரி. போயிட்டு வா” என்றாள். “எங்களையெல்லாம் ஞாபகத்தில் வச்சுக்க.” 

“என்ன இப்படி சொல்லிட்டீங்க? உங்க எல்லாரையும் எப்பிடி மறக்க முடியும்?” என்றான் சரவணன்.

பிறகு அவனும் முருகேசனும் பஸ் ஸ்டாண்டை நோக்கிச் சென்றார்கள்.

“இன்னிக்கி நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேண்டா” என்றான் சரவணன்.

முருகேசன் தலையை அசைத்தபடி கூட வந்தான்.

“உங்க சித்தி பந்தா எதுவும் இல்லாம பேசினது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது” என்றான் சரவணன். “ஆனா கடைசியா அவங்க எதுக்கு மறந்துறாதேன்னு சொன்னாங்கன்னுதான் புரியலே. அது வழக்கமா மொகத்துக்கு எதிரே சொல்ற ஃபார்மாலிட்டி டயலாக் இல்லே? நான் உங்க வீட்டுக்கு வருவேன் அடிக்கடின்னு சொல்ல நினைச்சேன். வெரி நைஸ் பீப்பிள். இல்லியா?” 

முருகேசன் ஒன்றும் சொல்லாமல் வந்தான்.

சரவணன் “என்னடா, நான் பேசிக்கிட்டே வரேன். நீ ஒண்ணும் சொல்லாம வரே?” என்று கேட்டான் சற்று வருத்தம் தொனிக்கும் குரலில்.

முருகேசன் நடப்பதை நிறுத்தி விட்டான். வெய்யில் ‘சுள்’ளென்று அடிக்கும் நடுத்தெருவில் அவர்கள் நின்றார்கள்.

முருகேசன் “அதை எப்படிச் சொல்லறதுன்னுதான் தடுமாறிக்கிட்டு இருக்கேன்” என்றான் மெல்லிய குரலில்.

“எதே?”

அவன் தயங்கினான். பிறகு குரலைச் செருமிக் கொண்டு ” நிஜமாவே எனக்கு இப்ப பேசப் பிடிக்கலே. நீ கிளம்பறேன்னு சொல்ல நான் உள்ள போனேன்லே. அப்ப சித்தி என்கிட்டே வயசுப் பிள்ளே நம்ம வீட்டுலே இருக்கு. அதை நீ ஞாபகம் வச்சுக்க. இந்தத் தனம் பிள்ளே விபரந் தெரியாம கெக்கே பிக்கேன்னு சிரிச்சுக்கிட்டு வாயாடிகிட்டு இருக்கு. அவனும் வயசுப் பிள்ளதானே.  தனத்தை அவன் அடிக்கடி பாத்துகிட்டே இருந்ததை நானும் பாத்தேன். பொண்ண வச்சுக்கிட்டு நாமதான ஜாக்கிரதையா இருக்கணும்னாங்க.”

“அவ்வளவுதானே” என்றான் சரவணன் தனது உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு. “அவங்க சொல்றதிலேயும் நியாயம் இருக்கில்லே. நா ஒன்னும் தப்பா  நினைக்க மாட்டேன். சரி வா. அங்க அஞ்சு ஏ நிக்குது ” என்று விரைந்தான். பஸ்ஸை நெருங்கியதும் நண்பனின் கையைப் பிடித்து அழுத்தி “நாளைக்கு காலேஜிலே பாப்போம். வரட்டா?” என்று விடை பெற்றான்.

பஸ் ஓடத் தொடங்கிற்று. சரவணன் ஒருமுறை முருகேசன் சொன்னதை நினைத்துப் பார்த்தான். முருகேசனின் வீட்டில் தன்னை அதிகமாகப் பார்த்தது யார் என்று மனதில் ஓர் எண்ணம் எழுந்து ஓடிப்போனது.           

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.