மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு

ஹொன்னாவர் 1605

தோமஸ் அகஸ்டின்ஹோ ரொம்பப் பரிதாபமான நிலையில் காணப்பட்டார். லிஸ்பன் மாநகரில் இருந்து வந்த அவருக்கும், அவர் கூட வந்த ஜோஸ் கார்லோஸுக்கும் ஹொன்னாவர் கருமார் தெருவில் தங்க ஏற்பாடு செய்திருந்த வீட்டில் தான் பிரச்சனை. 

கார்லோஸ் நேற்று மங்கலாபுரம் என்ற மங்களூர்ப் பட்டண விசேஷம் எல்லாம் பார்க்கலாம் என்று போயிருந்தார். சாராய ஆசை இல்லாமல் இருந்தால் அகஸ்டின்ஹோவும் மங்கலாபுரம் சுற்றிப் பார்க்கப் போயிருப்பார். இங்கே பெரும் துன்பத்தோடு  ராத்திரி வெகுநேரம் உறங்காமல் கழித்திருக்க மாட்டார். 

வேறொண்ணுமில்லை. ஒரு பெருச்சாளி, ராத்திரி உறங்க விடாமல் அவர் படுக்கையைச் சுற்றிக் குறுக்கும், நெடுக்கும், மேலும் ஓடிக்கொண்டிருந்தது. 

லிஸ்பனில் அவ்வப்போது அவர் மாளிகையில் எலிகளும், கரப்பான் பூச்சிகளும் பிரத்யட்சமாகும். விசாலமான வீட்டு ஹாலிலோ, தோட்டத்துக்குப் போகும் கருங்கல் பதித்த நடைபாதையிலோ அவை தட்டுப்படுவது அபூர்வம். 

வீட்டு குசினியில் திறந்து வைத்திருக்கும் மாமிசப் பதார்த்தங்கள் மேலோ, விருந்து முடிந்து அலம்பித் துடைத்து வைக்கக் கழுவுமிடத்தில் போட்ட எச்சில் தட்டுகள் மேலோ அவை இருப்பது கண்ணில் பட்டால், அகஸ்டின்ஹோ தன் வேலைக்காரர்கள் எல்லோரையும் நிறுத்தி வைத்துத் திட்டித் தீர்த்து விடுவார். 

ஒரு தடவை மிளகுப்பொடி நறநறவென்று அரைத்து சேமித்து வைத்த போத்தல் மூடி திறந்திருக்க, அதற்குள் இறந்து போன ஒரு கரப்பைக் கண்டு, அகஸ்டின்ஹோவின் மனைவி எட்டூருக்குக் கேட்கிற சத்தம் போட்டாள். 

வைத்தியருக்கு ஒரு மாதம் கணிசமான சிகிச்சைக் கட்டணமும், அகஸ்டின்ஹோ பெண்டாட்டி ரெண்டு வாரம் படுக்கையில் கட்டாய ஓய்வு எடுக்க (இல்லாவிட்டாலும் வேறொன்றும் செய்வதில்லை அவள்) தீர்மானித்து, முழுநேரப் பணிவிடைக்காக எடுபிடி ஒருத்தியை நியமித்து அந்த வகைச் செலவும்,  மிளகுப்பொடி புதிதாக வாங்கி வைத்ததுமாகச் செலவுக் கணக்கு நீண்டது. 

ஒரு சமையல்காரியும், சுற்றுக்காரியம் கவனிக்கும் சிப்பந்தியும் உடனடியாக வேலையில் இருந்து நீக்கப்பட்டு, அவர்கள் தினசரி அகஸ்டின்ஹோ வீட்டு வாசலில் நின்று அழுது மன்றாடி அதுவரை வாங்கிய மாத சம்பளத்தில் எழுபத்தைந்து சதவிகிதம் மட்டும் புதுச் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டு மறுபடி வேலைக்குச் சேர்ந்தார்கள்.  

ஆக கரப்பும் எலியும் அகஸ்டின்ஹோவை நேரடியாகப் பாதித்தது இல்லை. இங்கேயோ, காட்டு மிருகம் போல் பெரிய வடிவில் கிட்டத்தட்ட சினை பிடித்த முயல் போல ஏதோ ஒரு உருவம். கண்கள் இருட்டில் மின்னி பயமுறுத்த, வாயில் வாச்சிவாச்சியாக பற்கள் ஏழெட்டு வரிசையில் கூடுதல் அச்சமூட்டுகின்றன. ரத்தக் காட்டேரி இப்படித்தான் இருக்கும். 

இன்று, பார்லி தானிய மதுவும், பிராந்தியும் படுக்கையில் இருந்தே அருந்தி சுமாரான இறுதிகட்ட போதையோடு உறங்கப் போக நினைத்திருந்தார் அகஸ்டின்ஹோ.

அவர் போதை வஸ்துவைக் கவனிப்பாரா, பெருச்சாளியைக் கவனிப்பாரா? அதுவும் கொங்கணி பாஷை பேசுகிற பிரதேசத்து பெருச்சாளி இவர் போர்த்துகீஸ் மொழியில் விரட்டியதை புரிந்து கொண்டிருக்கப் போவதில்லை. வேலைக்காரர் யாரும் இல்லாத சனிக்கிழமை ராத்திரி நேரம் இது.

 சனிக்கிழமை முழு ராத்திரிக்குமாக, அதாவது சனியன்று நடு இரவு கடந்து ஞாயிற்றுக்கிழமை வரும் வரை நடப்பாக்க ஒரு குடிகாரத் திட்டம் கையில் வைத்திருந்தார் அகஸ்டின்ஹோ.  சகல விதமான மதுவையும் ஒவ்வொன்றாக அல்லது கலந்துகட்டியாகக் குடித்துத் தீர்க்கத் திட்டம் அது.   

லிஸ்பன் திரும்பினால் இத்தனை மதுவும் இரவு முழுக்கப் பருகித் தீர்க்க திருமதி அகஸ்டின்ஹோ நிச்சயம் அனுமதிக்க மாட்டாள். இந்தியா போகும்போது மது, மாது விஷயத்தில் நாக்கையும், மற்றதையும் கட்டி வைக்கச் சொல்லி அவள் புருஷனுக்கு தாக்கீது அளித்திருந்தாள்.

அதை எல்லாம் உடைத்துப் போடுவது அகஸ்டின்ஹோவின் சனிக்கிழமை திட்டம்.

ஒரு மதுக்கடைக்குப்   போய் ஒரு கிண்ணம் வெள்ளை ஒயின் மட்டும் குடித்துவிட்டு அதற்கடுத்த மதுக்கடைக்குப் போய் அங்கே ஒரு சிறு போத்தல் ஜெர்மனி ரம்-மை ஜின்னோடு கலந்து மாந்திவிட்டு, ஊரிலேயே பெரிய மதுக் கடையான மாசங்குவன் இந்திய மது ரகங்களின் விற்பனை விலை குறைத்ததைப் பாராட்டி அங்கே உள்நாட்டு பட்டணம் கோவாவில் உற்பத்தி செய்த ஃபெனி மதுவும், தொடர்ந்து ஒரு மொந்தை தென்னங்கள்ளும் குடித்தல்.  இப்படியான சகல விதத்திலும் முழுமையான திட்டம் அது.

ஆனால், தோமஸ் அகஸ்டின்ஹோ அவர்களுக்கு சிவப்பு ஒயின் தான் கிடைத்தது. வெள்ளை ஒயினுக்குப் பதிலாக அவர் அதைக் குடித்திருக்கக் கூடாது. அடுத்து ரம்-மோடு விஸ்கி  கலந்து கொடுத்தான் கடைக்காரன். அகஸ்டின்ஹோவின் திட்டத்தில் சின்னஞ்சிறு மாறுதல் அது. 

தொடர்ந்து   ஒரு கண்ணாடி தம்ளரில் பாதி நிறைத்த முந்திரி ஃபென்னி குடித்ததுமே சடசடவென்று போதை தலைக்கேறி விட்டது. மீதி தம்ளரில் தேங்காய் ஃபென்னியும், கொஞ்சூண்டு மிளகு எலுமிச்சை ஃபெனியைத் தெளித்தும் நட்போடு கொடுத்தான் கடைக்காரன். அது தான் காரணமோ என்று ஆராய முடியாமல் போதை அவருக்கு.

அகஸ்டின்ஹோ வாடகைக்கு எடுத்திருந்த சாரட்டில் தானே ஏறமுடியாமல் நாலுபேர்  தூக்கி உட்காரவைத்து மைதானத்துக்கு அனுப்பிவைத்தார்கள். விதேசிகள் பலரும் மைதானத்தைச் சுற்றி மாடி இல்லாத வீடுகளில் வசிப்பதாக பொதுவான எண்ணம் காரணமாக இப்படி நடந்தது.

தீர்த்தவாரி என்று உள்ளூர் பேச்சு வழக்கில் சொல்கிற கொண்டாட்டம் ஒவ்வொரு சனிக்கிழமை சாயந்திரமும் நடக்கும் இடம் அந்த மைதானம். அங்கே குடித்துக் குடித்து உரக்கப் பாடி ஆடும் சக நாட்டார் ஆன கப்பல் படைவீரர் இளைஞர்களுடன்   ஆட மட்டும்   செய்தார் அகஸ்டின்ஹோ. அவருக்குப் பாட வராது. ஃபெனி வேறு வயிற்றைக் கலக்கிக் கொண்டிருந்தது

வெள்ளைக்கார துரைகள் நடனம் ஆடுகிறார்களே என்று போவோர் வருவோர் – அந்த நேரத்தில் போவோரும் வருவோருமெல்லாம் குடித்துக் குடல் வெந்து கொண்டிருந்தவர்கள் தான் – அவர்களோடு சேர்ந்து குரங்கு மிளகுப்பொடி தின்ற மாதிரி நடுமண்டையில் சுரீரென்று போதை உரைக்க,  பல் எல்லாம் தெரிய இளிப்பும், இரைச்சலுமாக குதித்து ஆடித் தீர்த்தார்கள். 

ரதவீதியும் தோப்புத் தெருவும் சந்திக்கும் இடத்தில் ஹொன்னாவர் பூங்கா ஏற்படுத்தியிருந்தது. ராத்திரி அது பூட்டியிருப்பது வழக்கம் என்றாலும் அந்தப் பூட்டை எளிதாக விடுவித்து விடலாம். சனிக்கிழமை ராத்திரி பூங்கா கதவுகள் அடைப்பதே இல்லை. உள்ளே வந்து பூங்கா நடைபாதைகளில் படுத்து நித்திரை போன கூட்டத்தில் அகஸ்டினோ பிரபு இல்லைதான். 

ஆனால் அந்தப் பூங்காவுக்கு அவர் அகஸ்மாத்தாக, வீடு திரும்பும் வழியை மறந்து போய்க் கால் போன போக்கில் அலைந்தபோது வந்து சேர்ந்திருந்தார். 

பூங்கா கருங்கல் ஆசனம் ஒன்றில் போதை வடிகிற வரை இருக்க முடிவு செய்தார். அரை மணி நேரத்தில் எல்லாம் சரிப்பட வீடு திரும்பவும் வழி நினைவு வந்தது. மெல்ல வீட்டுக்கு உறங்க மட்டுமான செயல் திட்டத்தோடு நடந்து போனார்.  

படுத்தால் உறக்கம் வரவில்லை. மெழுகுவர்த்திகளை அமர்த்தினார். திரைகளை முழுக்க இழுத்து மூடினார்.  அதையும் இதையும் நினைத்தபடி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார் அகஸ்டின்ஹோ.

 இன்னும் நாலு நாள். அப்புறம் லிஸ்பனை நோக்கிப் பயணம். நல்லபடியாக பயணம் நடைபெற வேண்டும். கடல் பயணத்துக்கான அசம்பாவிதங்களான கடலில் எழும் சூறாவளி,  பொங்கி நாலு ஆள் உயரத்துக்கு அலை எழுப்பும் கடல், கப்பலைத் துரத்தும் சுரா, கூட்டமாக கப்பலைச் சூழ்ந்து திமிங்கில தாக்குதல், எப்போதாவது வந்து சேரும் கடல் கொள்ளைக்காரர்கள், கப்பல் பாய்மரமோ சுங்கானோ, மேல்தட்டோ பழுது சேர்ந்து போவது இது எல்லாம் அசம்பாவிதங்களில் சேர்த்தியானவை. , காற்று இல்லாமல் கப்பலைச் சுற்றி எடுத்துப் போய் அடுத்த காற்றுக்காகக் காத்திருத்தல், கொண்டு வந்த உணவும் குடிதண்ணீரும் குறைவாகப் போவது, சாப்பிடத் தகுதி இல்லாமல் போவது, கப்பல் செலுத்துகிறவர்கள், மற்றவர்கள் உடல்நலம் கெடுதல் இவை சந்திக்க வேண்டிய பேரிடராக இருக்கக் கூடும்.  

எந்த பிரச்சனையும் இல்லாமல் இங்கே கிளம்பினோம், அங்கே போய்ச் சேர்ந்தோம் என்று நாலு வாரத்தில் பயணம் முடித்தால் நன்றாக இருக்கும். 

லிஸ்பன் போய்ச் சேர்ந்ததும் ஆவலோடு கார்டெல்லின் மற்ற அங்கத்தினர்கள் இங்கே நிலவரம் எப்படி உள்ளது, போன காரியம் வெற்றியா என்றெல்லாம் உடனே கேட்டுத் தெரிந்து கொள்வதில் முனைப்பாக இருப்பார்கள். 

போனதும் எல்லாம் சட்டுச்சடவென்று முடிந்து இனி ஐநூறு வருடம் இந்திய அரைகுறை உடுப்புப் பக்கிரிகள் எங்கே மிளகு விதைத்து மிளகு வளர்த்து மிளகு விவசாயம்  முடித்து அந்தந்தப் பருவத்துக்கான மிளகை எல்லாம் ஒரு குந்துமணியும் விடாமல் போர்த்துகல்லுக்கு இருக்கப்பட்டதிலேயே ஆகக் குறைந்த விலைக்கு விற்கச் சம்மதித்து விட்டார்கள் என்ற செய்தி தான் எல்லோரும் எதிர்பார்ப்பது.

இந்தியப் பக்கிரிகளுக்கும் அவர்களுடைய பாதி நிர்வாணக் குடும்பங்களுக்கும்கூட சமைக்கும்போது ஒரு பிடி மிளகுப்பொடி போட இல்லாமல் அத்தனை விளைச்சலும் போர்த்துகல்லுக்கு அனுப்பி விடுவதாக, மிளகோடு கூட ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, லவங்கம் என்று வாசனா திரவியங்கள் எல்லாவற்றையும்  மிளகு ராணி கிராம்பு ராணி ஏல ராணி என்று எல்லோரும் கையில் அடித்துச் சத்தியம் செய்து இனி போர்த்துகல்லுக்காக மட்டும்  விளைச்சல் பெருக்கிப் பாடுபடுவோம் என்று வாக்குறுதி செய்துவிட்டார்கள் எனச் செய்தி தேவைப்படுகிறது.

 கார்டெல் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் நிதி முதலீடு செய்து இதை எல்லாம் சாதித்திருக்கிறது. நியாயமாகப் பார்த்தால் இதை அரசாங்கம் தான் சாதித்திருக்க வேண்டும். எனவே முக்கியமான பொருளாதார வளர்ச்சிக்கு வழிசெய்த கார்டெலுக்கு அரசாங்கம் வரி இல்லாத இறக்குமதி  சலுகை தரவேண்டும் என்று கோரி அது நடப்பாக்கப்படும் என்றும் கேட்க ஆசை.

 கார்டெல் வாஸ்கோ ட காமாவுக்கு நிதியுதவி செய்த அப்புறம் மறுபடி நூறு வருடம்  கழித்து புது அவதாரம் எடுத்த நோக்கம் நிறைவேற, போர்த்துகல் அரசாங்கத்தையே கார்டெல் நடத்த வேண்டும் என்று முதலாம் பிலிப்பு மன்னர் சட்டமியற்றலாம். 

என்ன என்ன தான் நடக்காது புது வரவாகப் பணம் வந்து! அகஸ்டின்ஹோ கார்டலுக்காக, அரசாங்கத்துக்காக நிறைய உழைத்திருக்கிறார். அவரை ஒரு அமைச்சர் ஆக்குங்கள். எல்லோரும் சொல்ல ராஜா காது சரியாகக் கேட்காமல் இன்னொரு தடவை சொல்லச் சொல்லி உறுதிப் படுத்திக்கொண்டு அவரை மதுபான  மந்திரி ஆக்குவார்கள்

 பாதியில் கனவு நிற்க உடனே உறக்கம் விழித்தார் அகஸ்டின்ஹோ. அவர் மேலே ஒரு பெரிய மிருகம் சர்வ சகஜமாக ஏறி ஊர்ந்து கொண்டு அப்பால் போனது. ஓ என்று கூச்சல் போட்டு எழுந்து உட்கார்ந்தார் அவர். oh não meu querido ஐயோ என் அன்பே என்று அவர் கூப்பிட்ட மனைவி லிஸ்பனில்.

இவ்வளவு பெரிய ஜந்து ஒரு நரியாகத்தான் இருக்க முடியும் என்று அவருக்கு முதலில் தோன்றியது. இவ்வளவு தைரியமாக ஒருத்தன் அதுவும் ஏழாயிரம் கடல் கல் தூரம் கடந்து வந்து தேச வர்த்தமானம் கேட்க, சொல்ல, உண்டாக்க தகுந்த சிநேகிதர்களைத் தேடி வந்து தனியாக ராத்திரியில் துயிலும் நேரத்தில் அவன் நெஞ்சில் ஏறி ஒன்றுமே நடக்காதது போல் அந்தப் பக்கம் இறங்கி போனது நடக்க முடியுமானால் வேறெது தானிந்த   ஹொன்னாவர் நகரத்தில் நடக்க முடியாது என்ற வியப்பை அடக்கவே முடியவில்லை.  

வீட்டுக்குள் நரி வருமா என்ன? எலியாக இருக்குமோ? பத்து எலி சேர்ந்த மாதிரி இது என்ன விலங்கு? பெரிய பூனை? இல்லை, பெரிய எலி? Bandicoot – பெருச்சாளி. அதுவாகத்தான் இருக்கும். சமாதானமாகப் படுத்துக் கிடப்பவன் மேல் பெருச்சாளி ஏன் ஓடி ஆடி விளையாட வேண்டும்?

அது வேறொன்றுமில்லை என்று அகஸ்டின்ஹோ மனம் விளக்கம் சொன்னது – வீட்டை விட்டுப் பயணத்தில் பிரிந்திருந்தது நாலு வாரம். இங்கே வந்து உடம்பு சரியில்லாமல் போய் ஒரு வாரம் படுக்கையில் கிடந்தது, பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து செய்ய வேண்டியதை செய்ய நிர்தேசம் அளிக்க, கனகாரியமாக எல்லாம் நடக்க பார்த்து, கைகாட்டிக் கொண்டு காத்திருக்க இன்னொரு நாலு வாரம் ஆக ஒரு ஒன்பது வாரம் வீட்டு உணவு இல்லாமல் பலகீனமாக இருக்கிறது உடம்பு. அதன் மேல் பெருச்சாளி என்ன பல்லி, எறும்பு, கரப்பு கூட சகஜமாக ஏறி இறங்கிப் போகக் கூடும் தானே.

நான்கு மெழுகு வர்த்திகளைக் கொளுத்தி தாங்குவானில் வைத்தார். மறுபடி படுத்துக் கொண்டார். மனம் தரிகெட்டுப் பாய்ந்தது.

காலை கார்டெல் கூட்டம். இந்த அரை நிர்வாண மனுஷ்யர்களோடு என்ன பேச? மேலே குப்பாயம் போடாமல் திறந்து விட்டிருக்கிற ஆண்கள் ரொம்ப காரியமாகத் தலையில் உயரமான தொப்பியை, அதை குல்லா என்று என்ன கருமாந்திரத்துக்காகக் கூப்பிடணுமோ, அதைக் கவிழ்த்துக்கொண்டு அபானவாயு விட்டபடி வந்து உட்கார்ந்து விடுகிறார்கள்.

அந்த ரோகிணியை பார்க்க பார்க்க இந்த ஐந்து வாரத்தில் பேரழகி ஆகத் தட்டுப்பட ஆரம்பித்திருக்கிறாள். அவளுடைய உதடுகளையும் முலைகளையும் பிடவைக்கு வெளியே பளீரென்று தெரியும் இடுப்பையும், எடுப்பான கச்சையும், கச்சு இறுக்கிய திடமான தோள்களையும் சளைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். 

நாளைக்கு அவள் பக்கத்தில் குரிச்சி போட்டு கார்லோஸ் ஓரமாக ஒதுங்கி இருக்க ரோகிணி  காது மடல் வாடை பிடித்தபடி கூட்டம் அது இது என்று பேர்பண்ணி விடலாம். காய்ந்து தான் கிடக்கிறார் அகஸ்டின்ஹோ.

முதல் விஷயமாக நாளைக்கு ஆலோசிக்கப் போவது வெடியுப்பைக் கையாள இன்னும் இவன்கள் படும் பெருங்கஷ்டத்தை எப்படி கடந்து போவது என்பது. 

எத்தனை தடவை சொன்னாலும் வெடி உப்பை கந்தகத்தோடு சேர்க்க தடுமாறி கை விரலை பொசுக்கிக் கொண்டு விரலில் கட்டோடு அலைந்து கொண்டிருக்கிறது மட்டுமில்லாமல் அதை ஒரு பெருமையாக வேறு விரலை உயர்த்திக் காட்டிக் கொண்டு திரிகிறார்கள். 

சரியான விகிதத்தில் கந்தகத்தையும் கரித்தூளையும் வெடியுப்பையும் கலக்கும் லாகவம் எப்போது வரும் இவர்களுக்கு. 

இந்த ரீதியில் போனால் ஒரு கண்றாவியும் திட்டமிட்டு நடத்த முடியாது. இந்த விளக்கெண்ணெய்கள் வாயையும் குதத்தையும் உள்ளே விரல் விட்டுப் பொத்திக்கொண்டு சும்மா இருக்க, சீனன்களும், ஆப்பிரிக்கக் கருப்பன்களும்  வேலை பார்க்கட்டும். 

அவர்களுக்குக் காசும் வெடியுப்பும் கந்தகமும் கரிப்பொடியும் தடையில்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். அதை வைத்து அவர்கள் தேவையான அளவு வெடிகளைத் தயார் செய்து இந்த சும்பன்களிடம் கொடுக்கட்டும். 

அந்த வெடிக்குடுக்கையை அவர்கள் எங்கே போட வேணுமோ அங்கே வீசி எறிந்து வெடிக்கட்டும். 

வேண்டாம், அதைக் கன காரியமாகத் தலைகீழாகப் பிடித்து அவரவர் மேல் அல்லாமல் போனால் சுஹ்ருத்துக்கள் மேல் எறிந்து உடம்பு முழுக்கக் கட்டுப் போட்டுக்கொண்டு நடக்க வைப்பார்கள். 

ஆகவே, வெடி பண்ணியதற்குப் பிறகு காசு தனியாக வாங்கி அதை யார் மேல் போடணுமோ அவர்கள் மேல் அந்தச் சீனரையும் கருப்பரையுமே போடச் சொன்னால் தீர்ந்தது பிரச்சனை. ஆனை வாங்கிவிட்டு அங்குசம் வாங்க யாராவது யோசிப்பீர்களா என்ன? 

அப்படியே காலை கூட்டத்தில் கறாராகச் சொல்லி விட வேண்டியதுதான். 

ரோகிணியின் திரண்ட மார்புக்கு நடுவே முகத்தை இருத்திக் கொண்டால் தான் தூக்கம் வரும்போல் இருக்கிறது. அவள் அந்த கிறுக்கன் நேமிநாதனுக்கு சேவை சாதிப்பதற்கே பிறவி எடுத்து வந்தவள் மாதிரி ஏதோ கள்ளத்தனம் செய்கிறாள். அவனை லிஸ்பனுக்கு அனுப்பி வைக்கிறதாக கார்டெல் திட்டம் இருந்தால் நன்றாக இருக்கும். அப்புறம் ரோகிணியின் முலைகளுக்கு அகஸ்டின்ஹோ சொந்தபந்தக்காரனாகி விடலாம். சந்தனமும் வியர்வையுமாக மனம் கிறுகிறுக்க வைக்கும் வாசனை அடிக்கும் அந்த அழகுக் குன்றுகள் இரண்டும்  என்று அகஸ்டின்ஹோவுக்குத் தெரியும். 

இன்னொரு ரூபவதி இருக்காளே கஸாண்ட்ரா அவள் கிடைத்தால்  ஷெராவதி ஆற்றுக் கரைக்கு   அவளோடு  போகலாம். அவளுக்கு ஒதிகோலன் வாசனை.

ஏன் என்னை மட்டும் அனுப்பி விட்டு நீர் மெல்ல வருகிறீர்? ரோகிணியோடு பந்தாட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தீரா? என்னைத் தொடாதீர்கள் என்று செல்லமாகக் கோபித்து விலகுகிறாள் கஸாண்ட்ரா. 

தேன் வாங்கி வர நேரம் ஆச்சுடி. கோபிக்காதே. 

சிருங்காரக் கனவில் மனம் லயிக்க இடுப்புக்குக் கீழ் அவசரமாக ஊர்ந்து படுக்கையில் இருந்து குதித்துக் கீக்கீக்கென்று சத்தமிட்டுப் போனது பெருச்சாளி. சந்தன மணமும் ஒதிகோலன் வாசனையுமில்லை. புழுத்த கழிவு தேங்கிய சாக்கடை ஓரம் குமட்டும் மேல்தோல் நனைய நகரும் பெருச்சாளி வாடை.

அதன் சிறு கண்கள் அகஸ்டின்ஹோவின் கண்ணை நேரே பார்த்த பார்வை காமாந்தகாரா என்று இகழ்ந்தது.  வாயைத் திறந்து வெளிப்பட்ட பற்கள் கடித்துக் கொல்லக் கூடியவையாகத் தெரிந்தன. நாலு பெருச்சாளிகள் சேர்ந்து ஒரு ராத்திரியில் அகஸ்டின்ஹோ உடம்பை முழுக்கத் தின்றுவிடும். 

முதுகுத் தண்டில் பனிக்கத்தியைச் செருகின மாதிரி சிலிர்க்க கைகால் ஒரு நிமிடம் மரத்துப் போய் வியர்வை ஆறாகப் பெருக கட்டிலில் அமர்ந்திருந்தார் அகஸ்டின்ஹோ. முதுகில் பெருச்சாளி அப்பியிருப்பதாக பிரமை. பின்னால் சுவரில் பிடித்து பெருச்சாளி ஏறிப் போவதாக பயம். எதுவும் நிஜமில்லை

வீட்டை விட்டு வெளியே வந்து கதவடைத்து பிச்சைக்காரன் போல் வாசல் படிகளில் படுத்து உருண்டு உறங்கலாமா என்று ஒரு நிமிட யோசனை. வேண்டாம் என்று ஒதுக்கினார். அவர் நாலு தலைமுறையாகக் கப்பல் கட்டும் பரம்பரை பணக்காரர். பெருச்சாளிக்காகப் பயந்து வீட்டை விட்டு ஓடுகிறவரில்லை.

அதற்கப்புறம் ஒரு அரை மணி நேரம் சத்தமே இல்லை. காற்று பெரிதாக அடித்து ஜன்னல்கள் படார் படாரென்று மூடிக்கொண்டன. அந்த ஜன்னல்கள் வழியாக பெருச்சாளி வந்து போயிருக்கலாம் என்று பட்டது அகஸ்டின்ஹோவுக்கு. 

எழுந்து போய் நான்கு ஜன்னல்களையும் சார்த்தி, அழுத்தமாகக் கொக்கித் தாழ்ப்பாள் போட்டு பூட்டி விட்டுப் படுக்கைக்கு வந்தார் அவர். படுக்கையில் இருந்து சாடி எழுந்து கட்டிலுக்குக் கீழ் பார்த்து எதுவும் இல்லையென்று நிச்சயப்படுத்திக் கொண்டார். 

உறக்கம் மெல்ல வருவதாகப் போக்குக் காட்ட அதன் அணைப்புக்குத் தன்னைக் கொடுத்தபடி அவருடைய நினைவுகள் ஊர்வலம் போகத் தொடங்கின.

கார்டெலில் காசு கொடுத்து பங்கு எடுத்ததென்னமோ சரிதான். நாலு புது தேசம், கடல் கடந்த நிலப்பரப்பு, விதம்விதமான மனுஷர்கள், மனுஷிகளைப் பார்ப்போம் பழகுவோம் போய் வந்ததைப் பற்றி எழுதி எல்லோருக்கும் தெரியச் செய்து பிரபலமாவோம் என்று நினைத்தது தான் சரியாக வரவில்லை. 

கார்டலில் சேர்ந்த, அகஸ்டின்ஹோ கூடப் பயணம் வைக்காமல் லிஸ்பனில் மரச்சாமனை உட்கார்ந்து தேய்த்துக் கொண்டிருக்கும் அவனவன் தானே எஜமானன் மாதிரி, அவர்களுக்காக உயிரை திரணமாக மதித்து பயணம் வந்த அகஸ்டின்ஹோவை வேலைக்காரன் மாதிரி கருதி, ’ஓய் அது என்னாச்சு இது என்னாச்சு’ என்று வெகுவான அதிகாரம் தட்டுப்பட விசாரிக்கிறான்.  

இந்த பன்றியைக் கலக்கும் பயல்களுக்கு கார்டல் சார்பில் ரகசியக் கடிதம் அனுப்பி பெற்று நடத்த ஒரு பிரத்தியேக சேவை இருந்தால் நன்றாக இருக்கும். 

இங்கே குப்பச்சிகள் எழுதுகிற ஏதோ கொங்கணி கவிதைகளை போர்த்துகீஸ் மொழியில் பெயர்த்து எழுதி லிஸ்பன் கவிதை மன்றத்துக்கோ எழவெடுத்த எங்கேயோ  அவை பத்திரமாக அனுப்பப் படுகிறதாக நேமிநாதன் சொன்னானே, அந்த ஏற்பாட்டை பயன்படுத்தினால் என்ன?  

தூக்கம் கண்ணைக் கவிந்து கொண்டு வந்தது. அகஸ்டின்ஹோ கவிதைகள் பற்றி யோசித்தார். கவிதைகளோடு கவிதையாக வணிகக் கவிதைகள் என்று தலைப்பிட்டு முக்கியமான வர்த்தகத் தகவலை எழுத்தெழுத்தாகத் தகுந்த முறையில் மாற்றி எழுதி அனுப்பிப் பூடகமாக்கிப் பெற்றால் என்ன? 

வணிகக் கவிதைகள் தலைப்பை பார்த்ததுமே அவை வர்த்தக கவுன்சிலுக்கு அனுப்பப் பெறும். வர்த்தகக் கவுன்சில் ஏதாவது அனுப்ப வேண்டுமென்றால் கவிதை மன்றம் மூலமாக வணிகக் கவிதை தலைப்பில் நேமிநாதனுக்கும் ரோகிணிக்கும் பூடகமான உருவத்தில் வந்து சேர்ந்து விடலாம். யார் கண்டது? வர்த்தகத் தகவல்கள் பற்றி எழுதிய, வேறு யாருக்கும் புரியாத வணிகக் கவிதைகள் சிறந்த கவிதைகளாகக் கொண்டாடப்பட்டு விருது வழங்கப்படலாம். புரிந்தால் அதென்ன கவிதை? 

ரோகிணி ரோகிணி ரோகிணி. கஸாண்ட்ரா. கஸாண்ட்ரா. கஸாண்ட்ரா.

தடார் என்று குசினியில் சத்தம். தூக்கமும் விழிப்புமான ரெண்டுங்கெட்டான் நிலைமை விலகி அகஸ்டின்ஹோ  எழுந்து நின்றார். பெருச்சாளிதான். ஆனால் குசினியில் போய்ப் பார்க்க, ஒரு பூனை பால் பாத்திரத்தைச் சாய்த்து தரையில் இருந்து பாலை நக்கிக் கொண்டிருந்தது. 

பெருச்சாளி இல்லை என்பதே அகஸ்டின்ஹோவுக்கு நிம்மதி. அவர் பேருக்கு பூனையை விரட்டுவதாக நாலு வார்த்தை சொல்லிவிட்டு படுக்கைக்குத் திரும்பினார்.

 கார்டெல் பணம் அகஸ்டின்ஹோ பணமும் தான். இதுவரை காசு விஷயத்தில் நேமியும் ரோகிணியும் அவர்கள் மூலம் பணம் வாங்கியவர்களும் வாங்கிய காசை செலவழிக்காமல் இல்லை. 

கோகர்ணம் வெடி வெடிப்புகள், சமணப்பள்ளி வெடிப்பு எல்லாம் தோற்றதாகச் சொல்ல முடியாது. காரணம் சக்தி குறைந்த வெடி உருவாக்கி வெடித்து பயமுறுத்துவது தான் குறிக்கோள். அது சிறப்பாக நடந்து விட்டது. 

வெடியை உண்டாக்குவதில் இவர்களுக்கு உள்ள திறமையின்மை இன்னும் அதிகமாக இந்த வெடிவைப்பு வைபவங்களை நடத்த இடைஞ்சலாக உள்ளது.   

ஆக ஏழெட்டு வெடி வெடிப்பு நடந்தாலும் மிளகு ராணி சென்னபைரதேவி மேல் யாருக்கும் கோபமோ, விரோதமோ இல்லை. அவை ஒரு பதினைந்து அல்லது இருபதாக இருந்தால் மக்கள் கவனம் திரும்பி இருக்குமோ என்னமோ. 

அனுதாபம் மிளகு ராணி மேல் அதிகரித்துள்ளதாம். அவள் புது துர்க்கை அம்மன் கோவிலும் நான்கு முக கட்டிடமும் கட்டி நல்ல பெயர் வாங்கி விட்டாள். அவள் பெயர் கெட்டு, நேமி மன்னன் ஆவது நடக்க,  இன்னும் நாள் செல்ல வேண்டி வரும். 

தூக்கம் அகஸ்டின்ஹோ அவர்களை ஆக்கிரமித்தது. விடிகாலையென்று ஜன்னலுக்கு வெளியே சிறு வெளிச்சத்தோடு புலர்காலை புது நாளைத் தொடங்கி வைத்துக் கொண்டிருந்தது. 

ஜன்னலைத் தான் சார்த்தியாச்சே என்று பட, நிச்சயித்துக் கொள்ள அகஸ்டின்ஹோ ஜன்னல் பக்கம் போனார். பாதையோரம் ஒரு கூட்டம் எலிகளை நாய்கள் துரத்திக் கொண்டு போக வீதி வெறுமையாக இருந்தது. பெருச்சாளியையும் அவை துரத்திப் போய்க் கொன்றிருக்கக் கூடும். நல்லது.

’அகஸ்டின்ஹோ, நீர் இன்னும் ஒரு மணி நேரமாவது உறங்கலாம்’ என்று களைத்த அவர் உடல் சொன்னது. படுக்கையில் விழுந்த அடுத்த நிமிடம் கார்டெல் கூட்டத்தில் நேமிநாதனின் குள்ளநரிக் குரல் மனதில் சுழன்றது.

இந்தக் கூட்டத்தில் முதலாம் பிலிப்பு அரசர் பெயரைச் சொல்லி எப்படியாவது அரசப் பிரதிநிதி இம்மானுவெல் பெத்ரோவைச் சேர்க்க வேண்டும் என்று கார்லோஸ் சொன்னது காட்சியாக விரிந்தது. அதற்கான செலவு எவ்வளவு என்றாலும் கார்டெல் அதை வழங்கி ஆதரிக்கும் என்றார் கார்லோஸ்.

பெத்ரோ பெண்பித்தன். அதுவும் உள்ளூர் பெண்டுகள் மேல் ஒரே காமம். அவனுக்கு அருமையான கொங்கணிப் பெண் தருகிறேன். என் பெண்டாட்டி ரஞ்சி. அவளை அவனுக்குப் பெண்டாள, நம் பொது வெற்றிக்காகத் தருகிறேன் என்றான் போன வாரக் கூட்டத்தில் தியாகி பாவனையோடு. 

அந்த ராஜகுடும்பப் பெண் நல்ல அழகி தான் போலிருக்கு.  பெத்ரோவுக்கு ஏன் பெண் மோகம்? கார்டெல் உறுப்பினர்களுக்கு வேண்டியது இல்லையா அந்த சிநேகம்? ராஜகுடும்பப் பெண் எதுக்கு? ரோகிணியும் கஸாண்ட்ராவும் நாள் முழுக்கப் பக்கத்தில் படுத்துப் பார்க்கக் கிடைத்தாலும் போதும்.

படாரென்று அகஸ்டின்ஹோ முகத்தில் நாற்றத்தோடு விழுந்து நகம் அவர் மூக்கில் கீற ஓடி ஜன்னல் வழியே வெளியே ஓடியது பெருச்சாளி.

அகஸ்டின்ஹோ போட்ட சத்தத்தில் வாசல் கதவை யார்யாரோ தட்டி என்ன ஆச்சு என்று கேட்கத் தொடங்கினார்கள்.  பெரிய எலிக்கு உங்க ஊர்லே என்ன பெயரோ அது ஓடுது என்றார் அகஸ்டின்ஹோ ஜன்னல் வழியாகப் பார்த்து.

எலி அம்மணமா ஓடுதாம் என்று யாரோ யாரிடமோ சொல்லிக்கொண்டு போனார்கள்.

Series Navigation<< மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்துமிளகு – அத்தியாயம்  நாற்பத்தேழு  >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.