தமிழாக்கம் : பானுமதி ந

மார்க் தெரு சோகம்: இந்த பயங்கர கொலைகள் தொடர்பாக பல தனி நபர்கள் விசாரிக்கப்பட்டனர். ஆனாலும், உருப்படியாக ஒன்றும் தெரிய வரவில்லை. கீழே என்னென்ன சாட்சியங்கள் பெறப்பட்டன என்று நாங்கள் தந்திருக்கிறோம்.
சலவை செய்பவரான பாலின் டி போர், (Pauline Dubourg) இறந்த இருவரையும் மூன்று வருடங்களாகத் தெரியும் என்றும், அந்தக் கால கட்டத்தில் அவர்களுக்காக தான் சலவை செய்தேன் என்றும் சொன்னார். அந்த முதியவளும், அவள் மகளும் ஒருவருக்கொருவர் அனபு செலுத்தினார்கள்; அவர்கள் நல்ல உறவில் இருந்தார்கள். நல்ல பணம் கொடுத்தார்கள். அவர்களின் வருமானம் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. முதியவள், வருங்காலப் பலன்கள் சொல்லி சம்பாதித்தாள் என நம்புகிறேன். பணக்காரர்கள். துணி வாங்கும் போதோ, திரும்பக் கொடுக்கும் போதோ வேறு நபர்களைப் பார்த்ததில்லை. வீட்டில் வேலையாட்கள் இல்லை என்பது தெளிவு. அந்தக் கட்டிடத்தில் நான்காம் மாடியைத் தவிர வேறெங்கும் அறைகலன்களில்லை.
புகையிலை விற்பவரான பியர் மோரோ (Pierre Moreau) மேடத்திற்கு பொடியும், புகையிலையும் சிறு அளவில் நான்கு வருடக் காலமாக கொடுத்து வந்ததாகச் சொல்கிறார். இதே நிலப்பகுதியில் பிறந்து இங்கேயே வசிப்பவர் அவர். இறந்த இருவரும் இந்த வீட்டில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தனர். முன்னாடி, ஒரு நகை செய்பவர் இங்கே இருந்தார். அவர் மேல் மாடி அறைகளை துணை வாடகைக்கு விட்டும் சம்பாதித்தார். இந்த வீடு, அந்த மூதாட்டிக்குச் சொந்தமானது. தனது குடித்தனக்காரர் இம்மாதிரி தன் இடத்தை பயன்படுத்துவது அவருக்குப் பிடிக்கவில்லை. எந்தப் பகுதியையும் யாருக்கும் வாடகைக்குத் தராமல் மூதாட்டி தன் மகளுடன் குடியேறினார். அவர் சிறுபிள்ளைத்தனமானவர். அவர் மகளை இந்த ஆறு வருடங்களில் ஐந்தாறு முறைதான் பார்த்திருப்பேன். நல்ல ஓய்வான வாழ்க்கை இருவருக்கும்; பணம் படைத்தவர்கள் என்று பெயர் வாங்கியவர்கள். மூதாட்டி, எதிர்காலம் குறித்து பலன் சொல்லி சம்பாதித்தார் என்று அக்கம்பக்கத்தினர் சொன்னாலும், நான் நம்பியதில்லை. சாமான் சுமந்து வருபவர் ஓரிரு முறை வருவதைப் பார்த்திருக்கிறேன். மருத்துவர் ஏழெட்டு முறை வருவார். இவர்களைத் தவிர யாரும் அவர்கள் வீட்டிற்கு வருவதைப் பார்த்ததில்லை.
பலரும் மேற்கூறியவாறே சொன்னார்கள். பெரும்பாலும் வெளியுலகத் தொடர்பில்லாமல் வாழ்ந்திருக்கின்றனர் இருவரும். முகப்பு ஜன்னல்கள் திறக்கப்பட்டதேயில்லை. பக்கவாட்டில் இருக்கும் ஜன்னல்களும் மூடப்பட்டே இருக்கும். நாலாவது மாடியில், பின்புறத்தில் ஜன்னல்கள் திறந்திருக்கும். வீடு நல்ல வீடு- ரொம்பப் பழையதல்ல.
காவல் துறையைச் சேர்ந்த இசிடேர் முசி (Isidore Muset) தனக்கு அதிகாலை மூன்று மணிக்கு அழைப்பு வந்ததாகச் சொன்னார். வாசல்வழியருகில் இருவது, முப்பது நபர்கள் திரண்டிருந்தனர். உள்ளே போக முயற்சித்தனர். கதவை பலவந்தமாக, துப்பாக்கியால், காகப்பட்டை அல்ல, திறந்தேன். அது இரட்டை அல்லது மடிப்புக் கதவு. அதை திறப்பதில் சிரமம் இருந்தது. கீழ், மேல் தாழ்ப்பாள் கிடையாது. அந்தக் கதறல்கள் பலவந்தமாக கதவைத் திறக்கும் வரை கேட்டன. திடீரென்று நின்றன. பெரும் துயரத்தில் இருக்கும் நபர் அல்லது நபர்களைப் போல உரத்தும், நீண்டதாகவும் இருந்த அந்த ஒலிகள், வேகமாகவோ, குறைவாகவோ கேட்கவில்லை. முதல் மாடி ஏறுகையில் உரத்தும், கோபமாகவும் இரு குரல்கள் கேட்டன. ஒன்று முரட்டுக் குரல்; மற்றொன்று, மிக வினோதமாக கிறீச்சென்றிருந்தது. முதல் குரல் சொன்ன சில வார்த்தைகள் ஒரு ஃப்ரெஞ்சுக்காரருடையது; அது பெண்குரலல்ல. ‘புனிதம்’, (sacre) ‘பிசாசு’ (diable) போன்ற சொற்கள் கேட்டன. அந்த க்றீச்குரல் அயல் நாட்டைச் சேர்ந்தவருடையது். அது ஆண் குரலா, பெண் குரலா எனச் சொல்வது கடினம். என்ன சொல்லப்படுகிறது என்பது புரியவில்லை, ஆனால், அந்த மொழி ஸ்பானிஷாக இருக்கலாம். அந்த அறையையும், அந்த உடல்களையும் பற்றி நாங்கள் நேற்று செய்தித்தாளில் சொல்லியிருந்ததை இவரது கூற்றும் உறுதி செய்தது.
வெள்ளி ஆசாரியான ஹென்ரி துவால், (Henri Duval) பக்கத்து வீட்டுக்காரர்; அவரும் அந்த வீட்டில் நுழைந்த குழுவில் முதலாவதாக வந்திருந்தார். கான்ஸ்டபிள் சொன்னதை பொதுவாக இவரும் சொன்னார். நுழை வாயிலை பலவந்தமாகத் திறந்த பிறகு, அவர்கள் அதை உடனே மூடினர். அந்த அகால நேரத்திலும், அங்கே திரண்ட நபர்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே அதைச் செய்தனர். அந்த ‘ஷ்ரில்’ குரல், ஒரு இத்தாலியன் குரலாக இருக்கலாம். ஆம், அது நிச்சயமாக ஃப்ரெஞ்ச் இல்லை. அது மனிதனின் குரலா என்று உறுதி செய்ய முடியவில்லை. அது பெண்ணின் குரலாகக் கூட இருக்கலாம். இத்தாலி மொழி தெரியாவிட்டாலும், அந்த வார்த்தைகளைப் பிரித்து அடையாளம் காண முடியாவிட்டாலும், அதன் உச்சரிப்புத் தொனியிலிருந்து அது இடாலி நாட்டவருடையது என்பது எனக்கு ஏற்புடையதாயிற்று. எனக்கு இறந்த இருவரையும் தெரியும், அவர்களுடன் அடிக்கடி உரையாடியிருக்கிறேன். அந்த ஷ்ரில் குரல் நிச்சயமாக அவர்கள் இருவருடையதும் இல்லை.
உணவகம் நடத்தும் ஓடன் ஹெமர் (Odenheimer) தானாகவே முன்வந்து சாட்சி அளித்தார். அம்ஸ்டெர்டாம் அவரது ஊர்; ஃப்ரெஞ்ச் தெரியாததால், ஒரு மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் அவர் சொன்னது பதிவு செய்யப்பட்டது. அந்தக் கதறல்கள் கேட்ட சமயத்தில் அவ்வீட்டின் வழியே போய்க் கொண்டிருந்தேன். அவை நீண்ட நேரம்- பத்து நிமிடங்கள் இருக்கலாம்- நீடித்தன. ஒங்கி ஒலித்த துயர் மிகு குரல்கள். நானும் வீட்டிற்குள் நுழைந்தேன். அனைத்து சாட்சிகள் சொன்னவைகளுடன் ஒத்துப் போகிறேன். அந்தக் கிறீச்சிடல் ஒருஃப்ரெஞ்ச் ஆணினுடையது. வார்த்தைகள் புரியவில்லை. அவை உரத்திருந்தன, விரைவாகச் சொல்லப்பட்டன, வேண்டுமென்றே இழுத்து இழுத்தும் சொல்லப்பட்டன, சீராகவும் இல்லை- கோபத்திலும், பயத்திலும் வெளி வந்தவை. குரல் கடுமையாக இருந்தது. அதை ஷ்ரில் குரல் எனச் சொல்லமாட்டேன். அந்தக் கடும் குரல் திரும்பத் திரும்ப ‘புனிதம்’, ‘பாவம்’’ என் கடவுளே’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தது.
மி நோயி ப்ளிஸ் (Mignaud et Fils) என்ற, டெலோரைன் தெருவில் (Rue Deloraine) இருக்கும் வங்கியில் மூத்தவரான ஜூல் ம்யூ, (Jules Mignaud) சொல்கிறார்- மூதாட்டிக்கு சில சொத்துக்கள் இருந்தன. எட்டு வருடத்திற்கு முந்திய ஒரு வசந்த காலத்தில் எனது வங்கியில் மூதாட்டி கணக்கு ஒன்றைத் தொடக்கினார். சிறு சிறு தொகைகளாகச் செலுத்தி வந்தார். தான் இறப்பதற்கு மூன்று நாட்கள் முன்பு வரை தன் கணக்கை அவர் கையாளவில்லை. தானே நேரில் வந்து 4000 ஃப்ரேங்கை தங்கமாக எடுத்துக் கொண்டார். ஒரு எழுத்தர் அவருடன் அவர் வீட்டிற்குச் சென்று அதை அளித்தார்.
அடல்ஃப் லெ பான் (Adolphe Le Bon) என்ற அந்த எழுத்தர் சொன்னார்: அன்று மதியம் அவர் மூதாட்டியுடன் அவர் வீட்டிற்குப் பணப் பைகளுடன் சென்றார். கதவைத் திறந்து அவரது மகள் ஒரு பணப்பையை பெற்றுக் கொண்டார்; மூதாட்டி மற்றொன்றை. நான் வணங்கி விடை பெற்றேன். அது காலியான, தனிமையான துணைப் பாதைத் தெரு.
பாரிசில் இரண்டு ஆண்டுகளாக வசித்து வரும் வில்லியம் பேர்ட் (William Bird) என்ற ஆங்கிலேயர் ஒரு தையல்காரர். அந்தப் படிக்கட்டில் முதலில் ஏறியவர்களில் ஒருவர். குரல்கள் கேட்டன, பல வார்த்தைகள் இருந்தன, ஆனால் நினைவில் இப்போது இல்லை. என் கடவுளே, புனிதம் போன்ற சொற்கள் தெளிவாக இருந்தன. பல நபர்கள் சண்டையிடுவது போல, போராடுவது போலக் கேட்டது. அந்த ஷ்ரில் குரல் மிக உரத்து இருந்தது-கடுமையான குரலை விட. ஆங்கிலேயரின் குரல் போலில்லை. ஜெர்மானியரின் குரல் போலிருந்தது. ஒரு பெண்ணின் குரலாகவும் இருக்கலாம். ஜெர்மன் எனக்குத் தெரியாது.
குறிப்பிடப்பட்டவர்களில் நான்கு நபர்கள் மீண்டும் அழைக்கப் பட்டனர். அந்த மகளின் உடல் கிடந்த அறை உட்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. எல்லாம் அமைதியாக, எந்தக் கூக்குரலும் இல்லாமல்; பலவந்தமாகக் கதவைத் திறந்த போது ஒரு மனிதரையும் காணவில்லை. முதல் அறையின் முன், பின், ஜன்னல்கள் உள்ளேயே அடைக்கப்பட்டிருந்தன. இரு அறைகளுக்கிடையே இருந்த கதவு பூட்டாமல் சாத்தப்பட்டிருந்தது. முதல் அறையிலிருந்து நடைகழிக்குச் செல்லும் கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது. இந்த நடைபாதையின் முகப்பில், நான்காவது மாடியில், முகப்பில் இருக்கும் சிறு அறை பாதி திறந்த கதவுடன் காணப்பட்டது. இந்த அறையில் பழைய பெட்டிகள், படுக்கைகள் என்று குவிந்து கிடந்தன. அவற்றை கவனத்துடன் அகற்றி ஒரு அங்குலம் கூட விடாமல் தேடினார்கள். துடைக்கும் கழியை புகைப்போக்கியில் மேலும், கீழுமாகச் செலுத்தினார்கள். நாலு மாடி வீடு; கூரையில் ஒரு கதவுப் பொறி பலமாக அறையப்பட்டிருந்தது; பல்லாண்டுகளாக அது திறக்கப்படவில்லை என்று தோன்றியது.
குரல்கள் கேட்டதற்கும், வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றதிற்குமான இடை நேரம் சாட்சிகளால் ஒரே மாதிரி சொல்லப்படவில்லை. மூன்று நிமிடம் முதல் ஐந்து நிமிடம் வரை சொன்னார்கள். கஷ்டப்பட்டுத்தான் கதவைத் திறக்க முடிந்ததென்று சொன்னார்கள்.
சவப்பெட்டி செய்பவரான, ஸ்பெயினைச் சேர்ந்த, அதே தெருவில் வசிக்கும் அல்போன்ஸோ கார்சியோ, (Alfonzo Garcio) அச்சத்தின் காரணமாகப் படியேறிச் செல்லவில்லை. குரல்கள் கேட்டன; கடினக் குரல் ஒரு ஃப்ரெஞ்ச் காரருடையது, ஆனால், சொன்னது என்னவென்று புரியவில்லை. அந்த ‘க்றீச்’ குரல் நிச்சயமாக ஆங்கிலேயருடையது. குரலின் தொனியால் சொல்கிறேன், ஆங்கிலம் அறியேன்.
அல்பெர்டோ மான்டனி, (alberto montani) இனிப்பு வகைகளைச் செய்பவர், மாடியில் ஏறிய முதலாமவர்களில் தானும் இருந்ததாகச் சொல்கிறார். குரல்கள் கேட்டன. அந்தக் கடினக் குரல் ஃப்ரெஞ்ச் தேசத்தவரது. பல வார்த்தைகள் புரிந்தன. பேசியவர் மற்றொருவருடன் நட்புடன் பேசிதாகத் தோன்றியது. அந்த ஷ்ரில் குரலின் சொற்கள் புரியவில்லை. வேகமாகவும், சமச்சீரற்றும் பேசினார்கள். அது ருஷ்யனுடைய குரலாக இருக்கலாம். மற்ற செய்திகளைச் சொன்னவர்களுடன் ஒத்துப் போகிறேன். நான் இடாலி நாட்டவன். எந்த ரஷ்யனுடனும் பேசியதில்லை.
நாலாவது மாடியில் உள்ள புகைபோக்கிகள் எந்த ஒரு மனிதனும் செல்ல முடியாத அளவிற்கு குறுகலானவை என்று மீள்சாட்சியங்கள் சொன்னவர்கள் அனைவரும் சொன்னார்கள். அந்தத் துடைப்பான்கள் உருளை வடிவு கொண்டவை. நாங்கள் முன் வாசல் வழியே ஏறும் அதே சமயம், பின் வழியே செல்வதற்கான பாதை ஏதும் இருக்கவில்லை. மரப்பிளவில் பொருத்தப்பட்ட ஆப்பினைப் போல மகளின் சடலம் அந்தப் புகை போக்கியில் அறையப்பட்டிருந்தது. நாலைந்து பேர் இணைந்து அதைக் கீழே இறக்கினோம்.
புலர் காலையில், அந்த உடல்களைப் பார்க்கத் தம்மை அழைத்ததாக பால் டு மாஸ் (Paul Dumas) என்ற மருத்துவர் சொல்கிறார். எங்கே மகளின் சடலம் இருந்ததோ அந்த அறையிலிருந்த படுக்கையில்லாத கட்டிலில் இருவர் உடலும் கிடத்தப்பட்டிருந்தன. மகளின் உடலில் தோல் உரிந்து அதிகக் கீறல்களுடன் இருந்தது. அந்தப் புகைப் போக்கியில் வலுக்கட்டாயமாக இழுக்கப்பட்டிருந்ததால் இந்தக் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம். தொண்டை மிகத் துன்பத்திற்கு உள்ளானது போல இருந்தது; முகவாய் கீழே ஆழமான கீறல்கள், கை விரல்கள் பதிந்ததால் ஏற்பட்ட நீலநிற சாயங்கள். முகம் கோரமாக நிறம் மாறியிருந்தது; கண் விழிகள் பிதுங்கி இருந்தன. நாக்கு பாதி கடி பட்ட நிலையில். தொப்புள் குழியில் பெரும் காயம், அனேகமாக கால் முட்டி அழுந்தியதால் ஏற்பட்டிருக்கலாம். அவர், யாரோ அறியாத நபர் அல்லது நபர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர் கருதுகிறார்.
மூதாட்டியின் சடலம் பயங்கரமாகச் சிதைவுண்டிருந்தது. வலது கை, கால் எலும்புகள் நொறுங்கியிருந்தன. இடது கால் முன்னெலும்பு மிகவும் பிளவுண்டிருந்தது; அதைப் போலவே இடது விலா எலும்புகளும். பயங்கரக் காயங்களுடன் நிறம் மாறி பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது. எப்படி இந்தக் காயங்கள் ஏற்படுத்தப்பட்டன என்று சொல்வது கடினம். பலசாலியான ஒரு மனிதன், மழுங்கிய ஆயுதத்தையோ, விறகுக் கட்டைகளையோ, பெரும் இரும்புத் துண்டைக் கொண்டோ இந்த வன்முறையை நிகழ்த்தி இருக்கலாம். எந்தக் கருவியைக் கொண்டும் இத்தகைய காயங்களை ஒரு பெண்ணால் ஏற்படுத்த முடியாது. மூதாட்டியின் தலை அவர் பார்க்கும் போது முழுதும் உடலிலிருந்து நீங்கி இருந்தது. அது நொறுங்கியும் காணப்பட்டது. சவரக்கத்தி போன்ற கூர்மையான ஒன்றால், அவரது தொண்டை வெட்டப்பட்டிருந்தது என்று கண்டேன்.
அலெக்ஸான்ட்ரே எடின், (Alexandre Etienne) சர்ஜன், டுமாசுடன் இந்த உடல்களைப் பார்வையிட அழைக்கப்பட்டார். அவர் பிந்தையவர் சொன்னவைகளுடன் ஒத்துப் போனார்.
பல நபர்களை விசாரித்தும் முக்கியத் துப்புக்கள் கிடைக்கவில்லை. இத்தகைய மர்மமான, குழப்பக்கூடிய கொலைகள் பாரிசில் இதற்கு முன்னால் நடந்ததில்லை- உண்மையில் கொலைகள் நடந்திருந்தால்… இத்தகைய அசாதாரணமான நிகழ்ச்சி- என்ன சொல்ல- போலீசைத்தான் முழுவதும் குற்றம் சொல்ல வேண்டும்; துப்புத் துலக்க ஒரு நூல் பிடி கூட இல்லையே!
அந்த நாளிதழின் மாலைப் பதிப்பு, அங்கே இன்னமும் இனம் புரியாத பரபரப்பு நிலவியதாகச் சொன்னது. அந்த வளாகம் மீண்டும் கவனத்துடன் ஆராயப்பட்டது. சாட்சிகளை மீள் விசாரணை செய்தார்கள். ஒன்றும் பிரயோஜனமில்லை. அதில் ஒரு பின் குறிப்பாக, அடோல்ப் லெ பான், (adolphe le bon) கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார் என்றும், முன்னர் சொன்ன விவரங்களை விட மேலதிகமாக அவரை இக் கொலைகளில் தொடர்பு படுத்த காரணிகள் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் சொன்னது.
என் நண்பர் தனியாகவே இந்தக் கொலைகளைப் பற்றி சிந்திக்க நினைக்கிறார் என்று அவர் நடந்து கொள்ளும் விதத்திலிருந்து நான் புரிந்து கொண்டேன், லெ பானின் கைதுக்குப் பிறகுதான், என் கருத்தை மதித்து நான் என்ன நினைக்கிறேன் எனக் கேட்டார்.
பாரிசில் அனைவரும் நினைத்ததைப் போலவே நானும் இது தீர்க்க முடியாத மர்மம் என்று ஒப்புக் கொண்டேன். அந்தக் கொலைகாரனைக் கண்டுபிடிக்க வழி இருக்கவில்லை என்பதுதான் என் எண்ணமும்.
இந்த மேலோட்டுத் தனமானவைகளைக் கொண்டு ஒரு முடிவிற்கு நாம் வரக்கூடாது என்றார் என் நண்பர். அறிவாற்றல் மிகப் பெற்றுள்ளதாக போற்றப்படும் இந்த பாரிஸ் காவல் துறை, உண்மையில் தந்திரமானவர்கள்; வேறு ஒன்றுமில்லை. அந்தத் தருணத்தின் வழிகள் மட்டுமே தெரியும் அவர்களுக்கு; ஆனால், அவர்கள் செயற்பாடுகளில் முறைமை இருக்காது. நிறைய நடவடிக்கைகள் எடுப்பது போலக் காட்டுவார்கள்; ஆனால், எந்தக் குறிக்கோளிற்கானதோ, அதற்கெல்லாம் இது பொருந்தியே வராது. இசையை அனுபவித்துக் கேட்க தன் அங்கியைக் கொண்டு வருமாறு சொன்ன திரு. ஜோர்டானைத் தான் நம் நினைவில் எழுப்புவார்கள் இவர்கள். (Monsieur Jourdain’s calling for his robe-de- chambre- pour mieux entendre la musique) முடிவுகள் வியப்பளிக்காமல் இருப்பதில்லை- ஆனால், பெரும்பாலும், விடாமுயற்சியாலும், செயல்களாலும் கிடைப்பவையே. அவைகள் கை கொடுக்காத நேரத்தில், அவர்களின் ஆற்றல் என்று எதைச் சொல்ல? வைடாக், (Vidocq), முன்னாள் ஒரு உதாரணத்திற்கு நன்றாக ஊகிப்பவர் தான்; சிறந்த, மாறுபடும் ஒன்றைத் தேர்வு செய்யாமல், தன் புலனாய்வின் தீவிரத்தாலே அவர் தவறுகளைத் தொடர்ந்து செய்கிறார். கண்ணுக்கருகிலே பொருளை வைத்துப் பார்த்தால்..? ஒன்றிரண்டு விஷயங்கள் தெளிவாகத் தெரியலாம்; அப்படிச் செய்வதனால் முழப் பூசணி சோற்றில் மறைவதை அவரால் காண முடியாது போகிறது. எனவே, ஆழமான வஸ்து ஒன்று உள்ளது. உண்மை கிணற்றுக்குள் இருப்பதில்லை. முக்கியமான அறிவாக நானும், அவள் மேலோட்டமாக இருக்கிறாள் என்பதை நம்புகிறேன். ஆழம், நாம் அவளைத் தேடும் பள்ளத்தாக்குகளில் உள்ளது; அவள் காணப்படும் மலை உச்சிகளில் அல்ல. விண்ணக விஷயங்களை நாம் சிந்திக்கும் விதத்தை இதனுடன் ஒப்பிடலாம். ஒரு விண்மீனை பார்க்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள்-அதை நோக்கி நம் விழித்திரையின் வெளிப்புற கடைக் கோடியால் (பக்க நீளத்தில்) பார்க்கும் போது, அந்த நட்சத்திரத்தைத் தனிப்பட்ட முறையில், அதன் ஒளிர்வை அனுபவிக்கலாம்-இந்த ஒளிர்வானது நாம் அதன் மீது நமது முழுப் பார்வையையும் செலுத்தும் விகிதத்தில் மங்குவதையும் அறியலாம். பின்னால் சொல்லப்பட்ட இதில் நிறைய ஒளிக்கற்றைகள் கண்களில் விழும்; முதலில் சொல்லப்பட்ட பார்வையோ, புரிந்து கையாளக்கூடிய திறனைக் கூட்டும்.
பலவீனமான, பதற்றமான சிந்தனையால், நாம் ஆகாயத்திலிருந்து வெள்ளியைக் கூட மறைந்து போகச் செய்து விடுவோம். (பதறிய காரியம் சிதறும்) அந்த அளவிற்கு நாம் நேரடியாக, அடர்த்தி மிகுந்ததாக, அதையே அதே கோணத்தில் பார்ப்பவராகச் செயல்படுகிறோம்.
“இந்தக் கொலைகளைப் பற்றி நாம் சிந்திப்போம். நாம் மேற்கொள்ளவிருக்கும் விசாரணை நமக்கு சில புல்லரிப்புகள் தரலாம். ஆனாலும் லெ பான் எனக்கு முன்னர் செய்த உதவிக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். நாமே அந்த இடத்தை, வீட்டைச் சென்று பார்ப்போம். எனக்குக் காவல் துறையின் தலைவரைத் தெரியும், எனவே அனுமதி கிடைப்பதில் சிரமம் இருக்காது.”
அனுமதி கிடைத்ததும் உடனே, அந்தத் தெருவிற்குச் சென்றோம். இது ஒரு மாதிரியான தொல்லை தரும் பாதை; தெரு ரீ ஷெல், (rue Richelieu) மற்றும், ரோச்சிற்கும் இடையிலிருந்தது. நாங்கள் இருந்த இடத்திலிருந்து இது தொலைவில் இருந்ததால், நாங்கள் பின் மதிய நேரம் தான் சென்று சேர்ந்தோம்.. வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இல்லை; இன்னமும், குறிக்கோளற்ற ஆர்வத்துடன் எதிர்சாரியில் நின்று கொண்டு மூடியிருந்த சட்டகத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர் பொது மக்கள். இந்த வீடு ஒரு சாதாரண பாரிசியன் வீடு, நடைபாதை, பக்கவாட்டில் மெருகூட்டப்பட்ட கண்காணிப்புக் கூண்டு, ஜன்னல்களில் சறுக்கும் கதவு, வரவேற்பு அறையைக் காட்டும் விதமாக இருந்தது. வீட்டிற்குள் செல்வதற்கு முன், நாங்கள் அந்தத் தெருவில் நடந்து, ஒரு சந்தைக் கடந்து, மீண்டும் திரும்பி, வீட்டின் பக்கவாட்டைக் கடந்து நடந்தோம். என் நண்பர் அந்த அக்கம்பக்கத்க்தை, அந்த வீட்டை, மிகக் கவனத்துடன் ஆராய்ந்தவாறே நடந்தார். எனக்கொன்றும் பொருட்படவில்லை.
மீள் அடி எடுத்து வைத்து, அந்த கட்டிடத்தின் முகப்பிற்கு வந்து, ஒலி எழுப்பானை அழுத்தி, எங்கள் சான்றிதழ்களைக் காண்பித்து, அங்கே பொறுப்பு முகவர்களாக இருந்தவர்களால் உள்ளே அனுமதிக்கப்பட்டோம். நாங்கள் மாடி ஏறினோம்- இறந்த இரு உடல்களும் இன்னமும் அங்கே இருந்தன. அறையின் அலங்கோலம் அப்படியே இருந்தது. ட்ரிபூயுனலில் சொல்லப்பட்டிருந்தவை தவிர எதையும் நான் பார்க்கவில்லை. அந்த உடல்களையும், எல்லாவற்றையும் அவர் ஆராய்ந்து கொண்டிருந்தார். மற்ற அறைக்கும், முற்றத்திற்கும் போனோம். ஒரு கான்ஸ்டபிள் எங்களுடனே வந்தார். இருள் கவியும் வரை ஆய்வு செய்து விட்டு நாங்கள் கிளம்பினோம். எங்கள் வீட்டை நோக்கிச் செல்கையில், எனது தோழர் ஒரு நாளிதழின் அலுவலகத்திற்கு சிறிது நேரம் போய் வந்தார்.
நான் சொல்லியிருக்கிறேனே என் நண்பரின் பல் விருப்பங்களைப் பற்றி. அதை என்னவென்று வர்ணிப்பது- மிரட்டும் ஒன்றா அல்லது… மறு நாள் மதியம் நாங்கள் வைன் அருந்தும் வரை இந்த கொலைகளைப் பற்றிய பேச்சுக்களை அவர் மறுதலித்து நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று நான் ஏதும் வினோதமாக அந்த அராஜகம் நடந்த இடத்தில் பார்த்தேனா என்று கேட்டார். அவர் ‘வினோதம்’ என்ற சொல்லை உச்சரித்தவிதம், காரணமே இல்லாமல் எனக்கு நடுக்கம் தந்தது.
‘இல்லை, அப்படி எதுவும் நான் பார்க்கவில்லை, நாளிதழில் நாம் படித்த செய்தியைத் தவிர எனக்கெதுவும் விசித்திரமாகத் தெரியவில்லை.
லே ட்ரிப்யூனல், நான் கருதுகிறேன், வழக்கமற்ற இந்தக் கொடூரத்தின் பக்கமே செல்லவில்லை. அது வெட்டியாய்ச் சொன்ன செய்திகளுக்கு நாம் திரும்ப வேண்டாம். எந்தக் காரணத்தை ஒட்டி அதை எளிதாகத் தீர்க்க முடியுமோ, அதுவே அதை தீர்க்க முடியாமல் செய்கிறது என்பது என்னவொரு முரண்! ‘இவற்றைத் தவிர’ என்ற சிந்தனையின் போக்கு சுத்தமாக இடம் பெறவில்லை. கொலைகளுக்கான முகாந்திரம் பற்றியல்ல, அதன் வன்முறைக்கான காரணங்கள் பற்றிய பெருங்குழப்பம் காவல் துறைக்கு இருக்கிறது. அங்கே கேட்ட குரல்களை வகைப்படுத்த அல்லது ஒப்பு நோக்க முடியவில்லை. இறந்து கிடந்த அந்த மகளைத் தவிர வேறு யாரையும் பார்க்கவில்லை; அது தவிர மேலே சென்ற குழுவின் கண்களுக்குத் தப்பி எவராலும் வெளியேறியிருக்கவும் முடியாது. அந்த அறை இருந்த கோலம், தலை கீழாய் புகை போக்கியில் தொங்கிய சடலம், பயங்கரமான சிதைவுகளுடன் கூடிய மூதாட்டியின் உடல், இன்ன பிற காட்சிகளும், அரசு அதிகாரிகளின் வீங்கிய ஆணவ அறிவால், ஆய்வில் தேக்கத்தையும், குழப்பத்தையும் தந்துள்ளன. அவர்களின் சுருங்கிய பார்வை- அத்தொன்றும் இயல்பில் இல்லாதது இல்லை, வினோதத்தைக் கவனிக்க அவர்களைத் தூண்டவில்லை. காரணத்தைக் கண்டுபிடிக்க, அதன் மூலம் உண்மையைக் கண்டெடுக்க, சாதாரண முறைகளிலிருந்து மாறு பட்டு எங்கெங்கு வேறுபாடுகள் இருக்கின்றன, அல்லது வழமைக்கு மாறாக இருக்கின்றன, என்பது தான் முக்கியம். நாம் இப்போது புலனாய்வு செய்கிறோமே, அதில் ‘என்ன நடந்தது?’ என்ற கேள்வியைக் காட்டிலும், ‘இதற்கு முன்னர் நடந்திராத என்ன ஒன்று இப்போது நடந்துள்ளது?’ என்ற திசையில் பயணிக்க வேண்டும். சொல்லப் போனால், எந்த சிந்தனையின் மூலம் இந்த மர்மத்தின் விடையை அடைவேனோ அல்லது அடையும் நிலைக்கு வந்துள்ளேனோ, அது காவல் துறையின் கண்களில் தீர்க்க முடியாத மர்மமாகத் தென்படும் ஒன்றின் சரியான விகிதத்தில் தான் உள்ளது.”
வசீகர மௌனத்துடன் நான் அவரைப் பார்த்தேன்.
எங்கள் வசிப்பிடத்தின் கதவை நோக்கிக் கொண்டு அவர் தொடர்ந்தார்: நான் ஒருவரை எதிர்பார்க்கிறேன்; அவர் இந்தப் படு பயங்கரத்தைச் செய்தவராக, ஒருக்கால், இல்லாமல் இருக்கலாம்; ஆனால், ஏதோ, ஒரு வழியில் அவர் சம்பந்தப்பட்டவரும் கூட. அந்தக் குற்றத்தின் வன்முறை, மற்றும் கீழ்மையைப் பொறுத்த வரையில் அவர் அப்பாவியாகக் கூட இருக்கலாம்; எனது ஊகம் சரியானது என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அதன் மீதுதான் இந்த முழுப் புதிரையும் அறியும் ஆவலில் என் சிந்தை கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வினாடியும் நான் அவர் வரவை இந்த அறையில் எதிர்பார்க்கிறேன். ஆம், உண்மைதான், அவர் வராமலும் போகலாம். ஆனால், வருவதற்கான சாத்தியம் அதிகம். அவர் வந்தால், அவரை நம் கண்காணிப்பில் வைக்கவேண்டிய தேவை இருக்கிறது. இதோ பாருங்கள், துப்பாக்கிகள் இருக்கின்றன; அவற்றைப் பயன்படுத்த நேரிட்டால் எப்படிச் செய்ய வேண்டும் என நம் இருவருக்கும் தெரியும்’
அவர்கள் எதிர்பார்த்தவர் வந்தாரா? கொலைகளின் மர்மம் துலங்கியதா?
(தொடரும்)
ஆங்கிலத்திலும் வாசிப்பதற்கு சற்று கடினமான கதை தான், குறிப்பாக ஆரம்பப் பத்திகள். நல்ல மொழிபெயர்ப்பு என்பதில் சந்தேகமில்லை, சில வார்த்தைகளுக்கு மாற்று தமிழ் வார்த்தைகளை மனம் யோசித்தது. உ.ம்: “strong man exults in his physical ability” பலசாலி என்பதா இல்லை வேறு வார்த்தை பயன்படுத்தலாமா? ஏனெனில் தன் பலத்தை மட்டுமல்ல அவனின் வலுவான தசைகளும் அதன் அசாத்திய செயல்பாடுகளில்தான் அவன் மகிழ்ச்சி இருக்கிறது என்று கதையில் வருகிறது. அது எல்லா மொழிபெயர்ப்புகளிலும் ஏற்படுவது தான், சொல்வனம் ஆசிரியர் குழு கொடுத்த விளக்கமும் சிறப்பு. இதே கதையை மற்றொருவர் எளிமைக்காக மொழிபெயர்ப்பில் கதையின் மொழியை தன் போக்கில் மாற்றிருந்ததால் சந்தேகத்துடனே இம்மொழிபெயர்ப்பை படித்தேன்.
உங்கள் மொழிபெயர்ப்பில் அவ்வாறு நிகழவில்லை என்பதே மிகப்பெரிய ஆறுதல். அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.
Thanks, Sir for your encouraging comments