
தமிழாக்கம் : சிவா கிருஷ்ணமூர்த்தி
வானிலை முதலில் அசைவின்றி, அமைதியாக, நன்றாகத்தான் இருந்தது. குருவிகள் விஸிலடித்து அழைத்துக்கொண்டிருந்தன. அருகிலிருந்த சதுப்பு நிலத்திலிருந்து ஏதோ ஓர் பறவை தாழப் பறந்து போன சத்தம் காலி போத்தலுக்குள் ஊதுவது போல் கேட்டது. பறந்து போன ஓர் உள்ளான் பறவையை குறி வைத்து வெடித்த துப்பாக்கியின் சத்தம் அந்த இள வேனிர் கால காற்றில் பேரொலியாக ஒலித்தது.
பின் காட்டினுள் இருள் கவிழ ஆரம்பித்து, கிழக்கிலிருந்து துளைக்கும் குளிர் காற்று வீசியபோது அனைத்தும் மெல்ல மவுனத்தில் ஆழ்ந்தன.
அக்கொடுங்குளிர் ஊசிகள் சதுப்பு குளங்களுக்குப் பின்னிருந்து வீசியபோது மொத்த காடும் துயரத் தனிமையில் அமிழ்ந்துப் போனது. காற்றில் குளிர்காலம் இருந்தது.
திருக்கோவில் பணியாளரின் மகனும் திருச்சபை கல்விச்சாலை மாணவனுமான இவான் வெலிகொபல்ஸ்கை, வேட்டையாடிவிட்டு நீர்நிலையை ஒட்டிய புல்வெளிப்பாதையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். அவனது கை விரல்கள் உறைந்துவிட்டிருந்தன, முகம் காற்றினால் அறையப்பட்டு கன்றியிருந்தது.
திடீரென வந்த இந்த கடும் குளிர், ஏதோ ஒரு வகையில் அந்த சூழ்நிலையை. இயற்கையின் ஒழுங்கை, சீரான தன்மையை குலைத்துவிட்டது போன்று தோன்றியது. எனவேதானோ என்னவோ மாலை இருள் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே வந்து கவிந்துவிட்டது போன்று இருந்தது.
சுற்றி எங்கும் விசித்திரமாக, மந்தமாக வெறிச்சோடியிருந்தது, இருண்டிருந்தது. அங்கு தெரிந்த ஒரே வெளிச்சம், ஆற்றை ஒட்டிய விதவைகளின் தோட்டத்திலிருந்து வந்தததுதான். அவனது கிராமமோ மூன்று மைல்களின் தொலைவில் இருந்தது. குளிர் நிறைந்த மூடுபனியின் இருளில் அனைத்தும் மிக தொலைவில் அமிழ்ந்து இருந்தன.
இவான், வீட்டிலிருந்து வெளியே கிளம்பியபோது இருந்த வீட்டுச் சூழ்நிலையை நினைத்துக்கொண்டான். அவனது தாயார், வெறுங்கால்களுடன் தரையில் அமர்ந்து சமோவாரைத் துடைத்துகொண்டிருந்தார். தகப்பனார் ஸ்டவ்விற்கு அடுப்பிற்கு அருகில் இருந்து இருமிக்கொண்டிருந்தார். அன்று புனித வெள்ளி தினமென்பதால் வீட்டில் சமையல் நடக்கவில்லை. இவானிற்கு கடுமையாக பசித்தது.
இப்போது, குளிரில் நடுங்கி/சுருங்கி வருகையில் இப்பாடியாப்பட்ட கொடும் பனிக்காற்று அன்றைய ருரிக் *காலத்தை, இவான் தெ டெரிபிள் **மற்றும் பீட்டரை *** நினைவுபடுத்தியது. அன்றும் இதே போன்ற கொடுங்குளிர் காற்றும் ஏழ்மையும் பசியும் இதே போன்ற ஓட்டைகள் நிறைந்த ஓலைகள் வேயப்பட்ட குடிசைகளும்…இந்த அறியாமையும், வேதனையும் துயரமும் பாழும், வெறுமையும், அடக்குமுறையும் இருந்தன…தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றன…இன்னும் தொடரவும் செய்யும்….
ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் வாழ்வு மாறவே இல்லை… இவானிற்கு வீட்டிற்கு செல்ல விருப்பம் இல்லை.
அந்த தோட்டம் விதவைகளின் இல்லம் என்று அழைக்கப்பட்டதன் காரணம், அதில் அம்மாவும் பெண்ணுமாக இரு விதவைகள் வசித்துவந்ததுதான். குளிர் காய்வதற்கான மூட்டப்பட்ட நெருப்பு அந்த உழுத மண்ணில் சடசடத்து கேட்டது.
ஆண்களுக்கான மேல் உடுப்பை அணிந்திருந்த குண்டான வயதான பெண்மணி, வசிலிஸா, ஆழ்ந்த சிந்தனையில் நெருப்பைப் பார்த்தவாறிருந்தார். அம்மைத்தழும்புகளும் அசட்டுக் களை முகம் கொண்ட அவரது மகளான லுகெர்யா, தரையில் அமர்ந்து ஓர் பெரும் பாத்திரத்தையும் ஸ்பூன்களையும் கழுவிக்கொண்டிருந்தார். அவர்கள் அப்போதுதான் இரவுணவை முடித்திருக்க வேண்டும். ஆற்றங்கரையில் குதிரைகளுக்கு நீர் வைத்துக்கொண்டிருந்த வேலைக்காரர்களின் குரல்கள் கேட்டன.
“குளிர்காலம் திரும்ப வந்துவிட்டது” என்று கூறியவாறே மாணவன் குளிர்காய் நெருப்பை நெருங்கினான்.
“ மாலை வணக்கம்”
வஸிலிசா ஏதோ சொல்ல ஆரம்பித்து, பின் அவனை அடையாளம் கண்டு கொண்டதும் ஆதுரத்துடன் புன்னகைத்தாள்.
“உன்னைக் கவனிக்கவில்லை, கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக…நீ பெரும் பணக்காரனாவாய்****” என்றாள்.
அவர்கள் மெல்ல உரையாட ஆரம்பித்தார்கள். வஸிலிஸா, முதலில் உயர் குடி குடும்ப குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாதியாக இருந்தாள். பின் குழந்தைகளுக்கான செவிலியராக வேலை பார்த்தாள். கனிவான, மெருகேறிய முகத்தில் இருந்த மயக்கும் புன்னகை, பேசும் போதும் மாறாமல் இருந்தது.
அவள் மகளான லுகெர்யா, ஒரு கிராம விவசாய பெண்மணி, கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டவள். அவள் எதுவும் பேசாமல் இருந்தாலும் அவளது கண்கள் அம்மாணவனைத் துளைத்துக்கொண்டிருந்தன. அவளது முகத்தோரணைகள் வித்தியாசமாக, ஓர் காது கேளா ஊமையைப் போன்று இருந்தன.
தனது கைகளை நெருப்பின் மேல் நீட்டியவாறே, “புனித பீட்டர் இது போன்றுதான் நெருப்பில் குளிர் காய்ந்துகொண்டிருந்தார்” என்றான், இவான்.
“அப்படியானால், அப்போதும் இப்படித்தான் கடும் குளிர் இருந்திருக்க வேண்டும். அய்யோ! எத்தனை மோசமான இரவாக இருந்திருக்க வேண்டும், அந்த கொடூர நீண்ட இரவு!”
அவன், சுற்றி சூழ்ந்திருந்த இருளை வெறித்துப் பார்த்தான். பின் தலையை அசைத்தவாறே,
“நீங்கள் நிச்சயம் பனிரெண்டு சுவிஷேங்களையும் வாசித்திருப்பீர்கள் தானே?” என்று வினவினான்.
வஸிலிசா, “ ஆம் நான் வாசித்திருக்கிறேன்” என்று பதிலிறுத்தாள்.
“இறுதி இரவு உணவு மேஜையில், புனித பீட்டர் யேசுவிடம் கூறியது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
“நான் இறுதி வரை உங்களுடனேயே இருப்பேன், மரணத்திலும்” என்றது.
அதற்கு நம் இறைவன், “சேவல் கூவுவதற்கு முன் நீ மும்முறை என்னைத் தெரியாது என்று மறுதலிப்பாய்” என்று பதிலளித்தார்.
இரவுணவிற்குப் பின், யேசு தோட்டத்தில் மரண வேதனையோடு ஜெபித்தார். பீட்டரோ, அகச்சோர்வுடனும் மயக்கமுற்ற நிலையிலும் இருந்தார். கனத்த இமைகளோடு உறக்கத்தில் ஆழ்ந்தார்.
பின்னர், அதே இரவில் யூதாஸ் யேசுவை முத்தமிட்டு காட்டிக்கொடுத்தார். யூதர்கள் அவரை முதன்மை மதகுருவிடம் இழுத்துச்சென்று அடித்தனர்.
பீட்டரோ, களைத்துப்போய், பலகீனமாக உறக்கமயக்கத்தில் இருந்தார். மிக கொடுமையான ஒரு சம்பவம் இப்புவியில் நிகழப்போகிறது என்று உணர்ந்தார்.
அவர் யேசுவை மனமார, ஆழ்ந்து நேசித்தவர்… இப்போதோ, அவர் தூரத்திலிருந்து யேசு எப்படி கொடுமைப்படுத்தப்படுகிறார் என்பதைப் பார்த்தார்…”
லுகெர்யா ஸ்பூன்களை விட்டுவிட்டு அம்மாணாக்கனை அசையாமல் உறுத்துப்பார்த்தார்.
“அவர்கள் யேசுவை முதன்மை மதகுருவின் முன்னிலையில் கேள்விகள் கேட்கத் துவங்கினர். அந்த சமயத்தில் முற்றத்தில் வேலைக்காரர்கள் குளிர் காய்வதற்காக நெருப்பு மூட்டினர். அவர்களுக்கு அருகில் நின்றிருந்த பீட்டரும் கைகளை நீட்டி குளிர் காய்ந்தார். அப்போது, அங்கிருந்த ஓர் பெண்மணி, பீட்டரைக் கண்டு “இவரும் யேசுவுடன் இருந்தார்” என்றார். அதாவது, பீட்டரையும் இழுத்து சென்று கேள்வி கேட்க வேண்டும் என்று அர்த்தத்தில் கூறினாள்.
சுற்றி இருந்த பணியாட்கள் குழம்பிப் போய் நின்றிருந்த பீட்டரை கடுகடுத்தவாறு சந்தேகத்துடன் பார்த்தனர்.
“அவர் யாரென எனக்குத் தெரியாது” என்றார் பீட்டர்.
சற்று நேரம் கழித்து வேறொருவர், பீட்டரை அடையாளம் கண்டுகொண்டார். அவரிடம், “நீயும் யேசுவின் சீடர்களில் ஒருவன் தானே?” என்று கேட்டார்.
பீட்டர், மீண்டும் மறுதலித்துவிட்டார்.
மூன்றாவது தடவையாக, இன்னொருவர் பீட்டரை நோக்கி, “இந்த மனிதரை நான் இன்று தோட்டத்தில் யேசுவுடன் வைத்து பார்த்தேனே?”என்று கூவினார்.
பீட்டர் மீண்டும் மறுதலித்தார்.
அவர் அப்படிச்சொன்னவுடனேயே சேவல் கூவியது.
தொலைவிலிருந்து யேசுவை கவனித்துக்கொண்டிருந்த பீட்டருக்கு, யேசு இரவுணவின் போது கூறியது நினைவிற்கு வந்தது. தன்னிலைக்கு வந்தார், கடும் வேதனையில் விம்மினார்.
நற்செய்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது:
“அவர் அங்கிருந்து வெளியேறி கடும் துயரில் விம்ம ஆரம்பித்தார்…”
என்னால் இதை மனதில் உருவகிக்க முடிகிறது. இன்று இங்கிருப்பது போன்ற ஓர் உயிர்ப்பிலா கடும் இருள் தோட்டம்… அந்த அசைவற்றத்தன்மை, மெல்லிய, அடக்கி வைக்கப்பட்ட அழுகையொலி…”
மாணாக்கன் பெருமூச்சொலியுடன் சிந்தனையில் ஆழ்ந்து போனான். வசிலிஸா முகத்தில் இன்னும் புன்னகை இருந்தது; சட்டென பெரும் கண்ணீர்த் துளிகள் அவள் கன்னங்களில் உருண்டோடின. தன் மேலாடை கையைக் கொண்டு முகத்தை நெருப்பிடமிருந்து மறைத்துக்கொண்டாள்.
லுகெர்யா, மாணவனை அசையாமல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவள் முகபாவம் ஆழ்ந்த வேதனையை தாங்கிக்கொண்டிருப்பவரின் முகம் போல் இருந்தது.
ஆற்றங்கரையிருந்து வேலைக்காரர்கள் திரும்ப வரத்துவங்கினர். அவர்களில் ஒருவன் குதிரையில் வந்தான். நெருப்பின் ஜ்வாலை அவன் முகத்தில் பிரதிபலித்தது.
மாணாக்கன் அவ்விதவைகளுக்கு இரவு வணக்கம் கூறிவிட்டு புறப்பட்டான்.
மீண்டும் இருள் அவனைச் சூழ்ந்துகொண்டது, விரல்கள் விரைக்கத்தொடங்கின. கடும் ஊசிபனிக்காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. உண்மையிலேயே குளிர் காலம் திரும்பிவிட்டது போல் இருந்தது. நாளை மறுநாள் ஈஸ்டர் என்பது போலவே இல்லை.
அவன், யேசு சிலுவையிலறையப்பட்ட முந்தின இரவு பீட்டருக்கு நிகழ்ந்ததை நினைத்துக்கொண்டு கண்ணீர் விட்ட வசிலிஸாவைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தான்…
அவனைச் சுற்றி கவனித்தான். ஒற்றை வெளிச்சக் கற்றை இருளிலிருந்து தெரிந்தது. அதைச் சுற்றி எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
வஸிலிசாவின் கண்ணீர், அவளது மகளின் நெடிய துயரம்….அவர்களிடம் அவன் சொல்லிக்கொண்டிருந்த அச்சம்பவம்… பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த ஓர் சம்பவத்திற்கும் இன்று ஓர் பாழடைந்த ஓர் கிராமத்தில் வசிக்கும் இந்த இரு பெண்மணிகளுக்கும், தனக்கும், அனைத்து மானுடர்களுக்கும் ஏதோ ஓர் தொடர்பு இருக்க வேண்டும்…
அவள் கண்ணீர் விட்டது… மனம் நெகிழும் வகையில் மாணாக்கன் கதை சொன்னதால் அல்ல… பீட்டரை அவள் மிக அருகாமையில் உணர்ந்திருக்க வேண்டும்… அவளது முழு கவனமும்/ முழுமையான இருப்பும் பீட்டரின் ஆன்மாவிற்குள் நிகழ்ந்தவற்றை அறிவதில் இருந்திருக்க வேண்டும்.
சட்டென அவன் அகத்தில் ஓர் மகிழ்ச்சித்தூண்டுதலை உணர்ந்தான். சொல்லப்போனால் ஒரு நிமிடம் பயணத்தை நிறுத்திவிட்டு ஆழ்ந்து மூச்சிழுத்தான்.
தொடர் சம்பவங்கள் மூலம், கடந்த காலம் இன்று வரை, நிகழ்காலத்துடன் இணைந்திருக்கிறது. அவன் இப்போது அந்த சங்கிலித்தொடரின் இரு முனைகளையும் கண்டிருக்கிறான். அவன் அதன் ஒரு முனையைத் தொட, இன்னொரு முனை நடுங்கி அசைந்திருக்கிறது…
அவன் படகில் ஆற்றைக் கடந்து பின் மலையேறிச் சென்றான். உச்சியிலிருந்து அவனது கிராமத்தைக் கண்டான். பின்னர் மேற்கு திசையை நோக்கினான். குளிர்ந்த, கடும் சிவந்த ஒடுங்கிய சூரிய அஸ்தமன ஒளிக்கற்றை தெரிந்தது.
அந்த முற்றத்தில், தோட்டத்தில் இருந்த சத்தியமும், மெய்மையும் அழகும், தரிசனமும் இன்றுவரை இடர்களைத் தாண்டி இன்றுவரை மானுட வாழ்க்கையை வழி நடத்திக்கொண்டிருக்கின்றன.
இவையே இம் மானுட வாழ்க்கையின் மிக முக்கிய பங்கு வகிப்பன….இளமை, ஆரோக்கியம், திடம் – அவனுக்கு இருபத்தி இரண்டு வயதுதான் – விவரிக்க இயலாத இனிமையான எதிர்பார்ப்புகள், புரிபடாத மகிழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக அவனுள் பொங்கி பிரவாகமாக பெருகின.
வாழ்வு, வசீகரமாக, அற்புதமாக, முழு அர்த்தத்துடன் இருப்பதாக உணர்ந்தான்.