
ஈன்றுபுறந் தருதல் என்தலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே -பொன்முடியார்
சனிக்கிழமை காலை. அனிகா மனநல சிகிச்சையகம்.
அனிகா எதிர்பார்த்த பெண் வாசற்கதவை நோக்கி நடப்பதைக் கவனித்து, அதைத் திறந்து அவளை வரவேற்றாள். நட்பு முறையில் நடக்கப்போகும் உரையாடல் என்பதால் ஆலோசக அறையின் சம்பிரதாயம் அநாவசியம் எனத் தோன்றியது. நுழைவிடத்தின் வட்டமேஜையை ஒட்டிய நாற்காலிகளில் எதிர் எதிராக அமர்ந்ததும் அனிகா வந்தவள் மேல் கவனம் வைத்தாள். அவளை விட கறுப்பு குறைச்சல் என்பதைத் தவிர தன்னையே ஐந்தாறு ஆண்டுகள் கழித்துப் பார்ப்பது போன்ற உணர்வு. உயரத்தில், வடிவத்தில், முகத்தோற்றத்தில், கூந்தலின் நிறத்தில் தெரிந்த ஒற்றுமை மட்டும் தான் அதற்குக் காரணமா?
“மாயா பல கலாசாரங்களுக்குப் பொதுவான பெயர். உனக்கு அது மிகப்பொருத்தம்” என்று உரையாடலைத் தொடங்கினாள்.
“அனிகா என்ற பெயர் எனக்குப் பிடித்திருக்கிறது.”
“நான் பிறந்தபோது வைத்த அன்னக்கிளியை விட உச்சரிப்து சுலபம்.”
“நீ இந்தியாவில் வளர்ந்து இங்கே வந்தது என்னைப் புரிந்துகொள்ள உதவும் என நினைக்கிறேன்.”
சில காலமாக ஒரு சின்னஞ்சிறு தீவில் தன்னந்தனியாகத் தவிப்பது போன்ற உணர்வு. வலைத்தளக் கடலில் மிதந்தபோது உன்னைக் கண்டுபிடித்தேன். எனக்காக இரண்டு மணி நேரம் ஒதுக்கினால் நன்றி பாராட்டுவேன். – மாயா லக்ஸ்மன்
மின்னஞ்சல் அனுப்பியவள் அனிகா வாசிப்பதற்காக வாங்கிவைத்திருந்த ‘நன்னீர் ‘ (Fresh water) என்ற புத்தகத்தை எழுதியவள் என்பதை அறிந்ததும் சந்திப்புக்கு உடனே சம்மதித்தாள்.
அனிகாவின் பிரித்த மடிக்கணினியில் மாயாவின் டயரி. அதை ஏற்கனவே அவள் வாசித்திருந்தாள்.
1980 ஒரு வயது, பத்து மாதங்கள்.
என் முதல் இந்திய வருகையின் அடையாளச் சின்னம் என் முதல் யு.எஸ். பாஸ்போர்ட். காலாவதி ஆனாலும் ஞாபகார்த்தப்பொருளாக என்னிடம் அது இருக்கிறது. இரண்டு வயதுக்கு முன் டிக்கெட் பத்து சதம் என்பதால் என் பெற்றோர்கள் மேற்கொண்ட பயணம். அதற்கு சில மாதங்கள் முன்பு எடுத்த படம் பாஸ்போர்ட்டில். நெளிநெளியான கறுப்புத் தலைமயிர், அம்மா முகத்தின் சாயல் (இப்போது அது குறைந்துவிட்டது), அப்பாவின் கறுப்பில் முக்கால் பங்கு, கள்ளமற்ற பார்வை. அந்த வருகையின் போது எனக்குப் பாட்டி அன்பளிப்பாகக் கொடுத்த மாயா என்ற பெயருடன் ஒரு தங்கச் சங்கிலி. அதுவும் என்னிடம் இருக்கிறது, பாட்டியின் ஞாபகார்த்தமாக.
அது என் தாய்க்கும் முதல் இந்தியப் பயணம். அதைப்பற்றி எனக்கு விவரம் தெரிந்ததும் அவள் சொன்னது…
லாக்ஸின் பெற்றோர்கள் என்னைக் குடும்பத்தில் ஒருத்தியாக ஏற்றுக்கொண்டார்கள். விமானநிலையத்தில் எங்கள் இருவருக்கும் மாலை அணிவித்ததும், வீட்டில் நுழைவதற்கு முன் சிவப்புக் கரைசலை மூன்று முறை சுற்றித் தரையில் கொட்டிதும் எனக்குக் கூச்சமாக இருந்தது. அடுத்த மூன்று வாரங்கள். யார் வீட்டிற்குப் போனாலும் வயிறு கொள்ளாத சாப்பாடு. உனக்குத்தான் முதல் மரியாதை.
பயணத்தின் முக்கிய சாதனை. உனக்கு டயபர் மாற்றும் பழக்கம் நின்றது.
எல்லாரும் உன்னை மாற்றிமாற்றிக் கொஞ்சியதில் உலகம் உன்னைச் சுற்றிவருவதாக நினைப்பு. ஆனாலும், யு.எஸ். திரும்பிவந்து நம் வீட்டின் விளையாட்டு அறையில் நுழைந்ததும் பயணம் நன்றாகத்தான் இருந்தது, ஆனாலும் இது தான் என் இருப்பிடம் என்ற நிச்சயம் உன் முகத்தில்.
1984 ஆறு வயது.
கின்டர் கார்டன் வகுப்பு முடிய இரண்டு வாரங்கள் இருந்தபோது, வகுப்புத்தோழி ஒருத்தியின் வீட்டில் பிறந்தநாள் விருந்து. அங்கே ட்ராம்பொலினில் குதித்து விளையாடியபோது கீழே விழுந்து கையில் அடி. நான் வலியில் அழுததைக் கவனித்த என் அப்பா என்னைத் தூக்கிக்கொண்டு, கொண்டாட்டத்துக்குத் தடங்கல் இல்லாமல், அங்கிருந்து நழுவினார். மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவு. மேல் கை எலும்பில் சின்ன விரிசல். ஆனாலும், கையை அசையாமல் வைத்திருக்க ஒரு கட்டு. வெளியில் போய் விளையாட முடியவில்லை. என் அம்மா எனக்கு சீட்டு ஆடக்கற்றுக் கொடுத்தாள். சென்னையின் சூட்டில் ஒரு மாதம். நினைவு தெரிந்த என் முதல் இந்தியப் பயணம். என்னைப் பற்றிக் கவலைப்படாமல் அப்பாவும் அம்மாவும் ஊர்சுற்றினார்கள். விமானத்தில் கொடுத்த சீட்டுக்கட்டை வைத்து என் இரண்டு கசின்கள் மற்றும் அண்டை வீட்டுக் குழந்தைகளுடன் விளையாட்டு. கழுதை, இருபத்தியெட்டு… என் வயது சிறுவர்களுடன் சண்டைபோட்டு சமாதானம் செய்து நெருக்கமாக ஆடினேன். அம்மாதிரி ஏன் யூ.எஸ்.ஸில் நிகழவில்லை? இந்தியாவின் காற்றிலோ தண்ணீரிலோ எதாவது வித்தியாசமாக இருக்குமோ?
அப்பயணம் என்னிடம் ஏற்படுத்திய மாற்றத்தை நான் அப்போது உணரவில்லை.
திரும்பிவந்ததும் என் கட்டைப் பிரித்தார்கள். தோல் வெளிறியிருந்தாலும் அது பழைய கை தான். பள்ளிக்கூடம் திறந்ததும் என் சென்னைப் பயணத்தை அறிந்த ஆசிரியை என் அனுபவத்தைப் பற்றி எழுதச்சொன்னாள். அம்மாவின் உதவியுடன்…
பாட்டிக்கும் என்னைப்போல சின்ன பெயர், வேதா.
தாத்தா பெயர் நீளம், ஸ்ரீகிருஷ்ணன்.
அவர் சைக்கிளில் வேலைக்குப் போகிறார்.
என் அப்பாவின் இரண்டு தங்கைகள் எனக்கு ‘அத்தை’கள்.
திருமணம் ஆனபோது என் பாட்டிக்கு பதினான்கு வயது.
அவள் பதினாறாம் பிறந்த நாள் கொண்டாடுமுன்பே என் தந்தை பிறந்தார்.
பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்திருந்தாலும் அவள் பல ஆங்கில நாவல்கள் படித்திருக்கிறாள்.
அவள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாள். நான் தமிழில் ஒருசில வார்த்தைகள் சொன்னேன்.
நான் என் அப்பாவிடம் தமிழ் கற்றுக்கொள்ளப் போகிறேன். அடுத்தமுறை பாட்டியுடன் அவள் மொழியில் பேசுவேன்.
என் பாட்டி சமைத்தது எல்லாம் நான் அனுபவித்து சாப்பிட்டேன். தோசா மட்டும் ஸ்பெஷல்.
“என் பாட்டி ஆரம்பப்பள்ளியையே தாண்டவில்லை. ஆனால் தினசரி வாழ்வதற்குத் தேவையான அறிவு நிறைய. பால் கறப்பது, வீட்டின் கழிவுப்பொருட்களை வீணாக்காமல் காய்கறி விளைப்பது, கையில் கிடைத்த பொருட்களை வைத்து சுவையாகச் சமைப்பது, ஆடையின் கிழிசல்களைக் கையால் தைப்பது…”
1988 பத்து வயது.
என் மிக மகிழ்ச்சியான வருகை. பதின்பருவத்துக்கு முந்தைய ஆர்வம். கனம் இல்லாத உடலும் மனமும். என் தங்கை க்ரெச்சனின் இரண்டாம் பிறந்தநாளுக்கு முன் செப்டெம்பரில் பயணம். முதலில் என் அத்தை ரேவதியின் ஜாதகம் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம். ஒரு பெரிய மண்டபத்தில் நடந்தது. நூறுக்கும் அதிகமான பேர். நிறைய மாலைகள். பிரகாசமான விளக்குகள். சாப்பாட்டில் ஏகப்பட்ட இனிப்புகள். பட்டில் தைத்த நீண்ட ஸ்கர்ட் என்னை மிக அழகாகக் காட்டியது. முதல்நாள் கோவிலில் இருந்து மாப்பிள்ளையுடன் நடந்தேன். காலையில் கல்யாணம். ஒரே புகை, இரைச்சல். மாலையில் மணப்பெண் மாப்பிள்ளையுடன் என்னை நிறுத்திப் படம் எடுத்தார்கள். அது முடிந்து, ஒன்பது இரவு பண்டிகை. ஒவ்வொரு மாலையிலும் ஒரு வேஷம். கிராமத்துப்பெண், ராணி, வெள்ளைக்காரப்பெண் (அது வேஷமா?). கிளம்புவதற்கு இரண்டு நாள் முன் டிவாலி. அதிகாலையில் எழுந்து தலையில் எண்ணெய் வைத்து குளித்தேன். பிறகு நிறைய ஃபயர் வொர்க்ஸ், ஸ்வீட்ஸ். இந்த தடவை நான் பாட்டியிடம் பாதி தமிழில் பேசினேன்.
அப்பாவை லக்ஷ்மண் என்று கூப்பிடுகிறாய். அவர் பெயர் லக்ஸ்மன், இல்லை?
ஆங்கிலத்தில் ண கிடையாது. நாக்கின் நுனியை நன்றாக மடக்கி…
ன்ண. ன்ண
“அனிகா! பத்து வயதில் இதெல்லாம் உனக்கு ஆச்சரியமாக இருந்திராது.”
“அவையெல்லாம் எனக்கும் மறக்காத சந்தோஷ நினைவுகள்.”
1993 பதினைந்து வயது.
சொத்து சம்பந்தப்பட்ட விவகாரத்திற்காக தந்தை அவசரமாக ஏற்பாடு செய்த பயணம். அவருடன் நான் மட்டும். அம்மா வர மறுத்ததுடன் க்ரெச்சனையும் எங்களுடன் அனுப்பவில்லை. அப்போது நான் நடந்துகொண்டதை மறக்க முடிந்தால் நன்றாக இருக்கும். குட்டையான ஆடை, எல்லாரிடமும் அலட்சியப் பார்வை, அங்கொன்றும் இங்கொன்றும் கெட்ட வார்த்தை. நல்ல வேளை, வருகை ஒன்பது நாள் தான். அப்போது உயர்நிலைப்பள்ளியில் கால்வைத்து மற்ற பெண்கள் என்னை அவர்களின் வட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டுமே என்கிற கவலை. வாழ்க்கையின் ஒரு குறுகிய காலக்கட்டம். விரைவில் அது என்னைக் கடந்துபோனது. அந்த இந்தியப்பயணத்தை இப்போது நினைத்தாலும் எனக்குத் தலைகுனிவு. முக்கியமாக பாட்டி என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பாள்? உடனே அவளுக்கு விளக்கமாக ஒரு கடிதம் எழுதினேன். பாட்டியின் புரிதலான பதில். ஆனாலும் உடனே இந்தியாவுக்குப் போக மனம்வரவில்லை.
“உன் இந்திய டயரி சுவாரசியம். உன்னைப் புரிந்துகொள்ள உதவியாக இருந்தது.”
“உன் பார்வைக்கு அதை அனுப்பியதன் காரணம். நீ பார்ப்பது பெரும்பாலும் பதின்பருவத்தினர் என்பதால் இளம்வயது மாயாவில் இருந்து நீ ஆரம்பிக்கலாம்.”
மாயாவுக்கு நம்பிக்கை தர,
“கலாசாரக் குழப்பத்தில் சிக்கிய இளையவர்கள் பலர் என்னைத் தேடி வந்திருக்கிறார்கள்.”
“ம்ம்.. என்னைப்போல இன்னும் பலர்” என்று அவள் முகத்தை சோகமாக்கினாள்.
“ஆனால், நீ பண்பாட்டு மானுடவியலில் பட்டம் வாங்கி இருக்கிறாய். உன்னைப்போல இந்திய கலாசாரத்தைப் புரிந்துகொண்டவர்களை நான் சந்தித்தது இல்லை. உன்னிடம் இருந்து நானே நிறையத் தெரிந்துகொள்ள வேண்டும்.”
“தாங்க்ஸ்.”
“அண்மைக்காலம் வரை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் இருவருமே ஒரே இனத்தை, ஒரே பண்பாட்டைச் சேர்ந்தவர்கள். வளரும்போது அவர்களைச் சுற்றிலும் அதே பழக்க வழக்கங்கள். காலத்திற்கு ஏற்றபடி சிறுசிறு மாற்றங்கள். அவற்றைப் பின்பற்றுவதில் குழப்பம் இல்லை. கண்டங்களைத் தாண்டிய பயணங்களினால் கலப்பட திருமணங்கள்.”
“பிஎச்.டி. ஆராய்ச்சிக்கு நாக்ஸ்வில் (டென்னஸி பல்கலைக்கழகம்) வந்த என் தந்தை. அதே ஆய்வுக்கூடத்தில் உதவியாளராக என் தாய். திருமணத்துக்குப் பின் குக்வில் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள். ஐரோப்பிய அம்மாவுக்கும், இந்திய தந்தைக்கும் பல வித்தியாசமான டிஎன்ஏ வரிசைகள். அவற்றில் எனக்குப் பிடித்ததை நான் தேர்ந்தெடுக்க முடியாது.”
“வெள்ளைத் தோலும் குறைவான இந்திய சாயலும்?”
“என் தங்கை அப்படி. ஆழ்ந்த நிறக் கூந்தல் என்பதைத் தவிர மற்றபடி ஐரோப்பிய பாரம்பரியக் களை.”
“டிஎன்ஏ, நம் விருப்பங்களைக் கேட்காமல் இயற்கை நமக்குக் கலைத்துப்போட்ட சீட்டுகள். ஆனால், பெற்றோர்களின் இரண்டு பண்பாடுகளில் பிடித்ததை எடுக்க சுதந்திரம் இருக்கிறது. சில சமயங்களில் இரண்டையும் தாண்டி வேறொன்றைப் பிடித்துக்கொள்ளலாம். மனிதக் கலாசாரங்களின் பொதுவாக சில ஒற்றுமைகள். உனக்கே அவை தெரிந்திருக்கும். தனி மனிதர்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றக் கூடாது, வன்முறையைத் தவிர்க்க வேண்டும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விட்டுக்கொடுக்க வேண்டும், இப்படி. ஆனால், விவரங்கள் என்று வரும்போது பல வித்தியாசங்கள். எதிர்எதிரான கொள்கைளில், ஒரு பெற்றோர் காட்டும் வழியை, இல்லை எது சௌகரியமோ அதை எடுத்துக்கொள்கிறோம்.”
“என் பத்துவயதுப் பயணத்தின்போது க்ரெச்சனுக்கு தங்க வளையால், தங்கச் சங்கிலி, பட்டு ஆடை. திரும்பிவந்ததும் அம்மா அவற்றை அவள் கண்ணில்படாமல் ஒளித்துவிட்டாள். இந்திய அணிகலன்கள் என்னை இந்திய மரபுக்கு இழுத்திருக்கலாம் என்று அவளுக்கு சந்தேகம். அம்மாதிரி க்ரெச்சனுக்கு நடப்பதை அவள் விரும்பவில்லை.”
“அவள் நோக்கில் அது சரி. எண்பதுக்கு, அதாவது உன் குழந்தைப் பருவத்துக்கு முன்னால் பொதுவாக அப்பா வெள்ளை, அம்மா ஜப்பான், ஃபிலிப்பின், அல்லது வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவள். போர், இல்லை ஆக்கிரமிப்பின் முடிவில் இராணுவத்தினர் தங்களுடன் அழைத்துவந்த மனைவிகள். கலிஃபோர்னியாவில் அந்தக் குடும்பங்களுக்கு அதிக பிரச்சினைகள் இருந்திருக்காது. தென் மாநிலங்களில் வெள்ளை உசத்தி என்பதைக் கவனித்த குழந்தைகள் அப்பாவைப் பின்பற்றினார்கள். அம்மாவின் பழக்கவழக்கங்களை, அவள் மொழியை, ஏன் அவளையே கூட அலட்சியமாக நடத்தினார்கள். அத்துடன், தங்கள் தோற்றத்தில் அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை. உன் காலத்தில் பொதுவாக உயர்கல்வி பெற்ற ஆசியன் வெள்ளைப் பெண்ணுடன் குடும்பத்தைத் தொடங்கியபோது இந்த பிரச்சினை அவ்வளவாக இல்லை. ஆண் அமெரிக்க கலாசாரத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு இருப்பான். அப்போது தான் தொழில் வாழ்க்கையில் வெற்றி. அதனால் குழந்தைகளும் அவனை மதிப்புடன் நடத்தினார்கள்.”
“நான் வளர்ந்த குக்வில் சின்ன ஊர். மற்ற கலாசாரம் பற்றி பள்ளிப்பாடங்களில் படித்ததோடு சரி. அந்த சூழலில் என் தங்கைக்கு இந்தியா போவதிலோ, அந்நாட்டைப்பற்றித் தெரிந்துகொள்வதிலோ துளியும் அக்கறை இல்லை. இந்திய உணவு காரம் காரம் என்று சொல்லி அதைத் தொடமாட்டாள். லாக்ஸ்மன் பெயரில் ஜெர்மனின் ஓசை. இப்போது சான் ஹொசேயில் கார்பொரேட் லாயர்.”
“பண்பாட்டுக் குழப்பம் இல்லாதது அவள் தொழில் வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கும்.”
“என் எண்ணமும் அதுதான். உனக்கு எப்படி?”
“இந்தியாவில் இருந்து இங்கே நான் வந்ததும் எட்டாம் வகுப்பில் நுழைந்தேன். படிப்பில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் மற்ற பெண்களின் வம்புப்பேச்சு காதில் விழவில்லை. அதே சமயம், இந்தியப் பண்பாட்டின் எல்லா அம்சங்களையும் பின்பற்ற முடியாது என்று தெரியும். அவற்றில் பலவற்றை ஒவ்வொன்றாகக் கழற்ற வேண்டும். எந்த வரிசையில்? எந்த வயதில்?…”
2001 இருபத்திமூன்று வயது.
பட்டம் பெற்றதும் வெள்ளை இளைஞர்கள் தங்கள் பாரம்பரியத்துடன் உறவு கொண்டாட ஐரோப்பாவைச் சுற்றிப்பார்க்கப் போவது வழக்கம். அதன் பிரகாரம் நான் பி.ஏ. முடித்ததும், என் தாய் கோடைகாலப் பயணத்திற்கு ஏற்பாடுகள் செய்தாள். ஜெர்மெனியில் அவளுடைய பெற்றோர்கள் பிறந்த ஊர்களைப் பார்ப்பதும் அதில் அடக்கம். அதன் முதல் கட்டம் பசிஃபிக் வழியாக சென்னை. இரண்டு நாள் ஓய்வுக்குப் பிறகு மேற்கு மற்றும் வட இந்தியாவில் ஒரு வாரச் சுற்றுலா. அடுத்த நீண்ட கட்டம், ஐரோப்பாவில் பத்து வாரங்கள் – ரயிலில், பஸ்ஸில், வாடகைக் காரில், சில இடங்களில் வழிகாட்டியின் துணையில். பல கல்லூரி மாணவர்கள் ஒரு செமிஸ்டரை வெளிநாட்டில் வைத்துக்கொள்வார்கள். நான் அப்படிச் செய்யாததால் அப்பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்தேன்.
எட்டு ஆண்டுகளுக்கு முன் தந்தையின் பிறந்த மண்ணில் கால்வைத்த மாயா இப்போது இல்லை. அப்போது இல்லாத முதிர்ச்சியும் மனப்பக்குவமும். அந்த மண்ணிலும் பல மாற்றங்கள். விமான நிலையத்தின் நீண்ட வரிசைகளில் நெடுநேரம் காத்துநிற்காமல் வெளியே வந்தாள். அவளை வரவேற்க தாத்தா. அவர் அனுப்பியிருந்த புகைப்படத்தில் இருந்து அவரை அடையாளம் செய்தாள். முந்தைய வருகைகளில் அவருக்கு வேலைகள் நிறைய இருந்ததால், குழந்தைகள் கும்பலில் அவளைத் தனியேவைத்துக் கொஞ்சியது இல்லை. அவளும் அருகில் இருந்து அவரைப் பார்த்தது இல்லை. இப்போது அவர் மட்டும். அப்பாவுக்கும் அவருக்கும் முக ஒற்றுமை ஆனால் உடற்கட்டில் வித்தியாசம். அப்பாவின் உயரமும் இடுப்பின் அகலமும் முன்தலை வழுக்கையும் அவருக்கு இல்லை.
“எல்லாம் எப்படி இருந்தது? மாயா!”
“சௌகர்யமா. கோலாலம்பூரில் ஒரு நாள் தங்கினது பயணக்களைப்பு இல்ல.”
“வெரி குட்! கார் பக்கத்தில இருக்கு.”
அவர் ஒரு தோள்பையை எடுத்துக்கொள்ள அவள் பெட்டியை இழுத்து நடந்தாள்.
“நீ அழகாக வளர்ந்திருக்கே.”
“நீங்க ட்ரிம்மா இருக்கீங்க, தாத்தா!”
“என் வயசுக்கு” என்று புன்னகைத்தார்.
ஊர்தி கிளம்பி இரைச்சலில் இருந்து வெளியே வந்ததும்,
“பாட்டிக்கு நீ வந்ததில ரொம்ப சந்தோஷம். எனக்கும் தான். எங்கே இருந்தாலும் முதல் பேரனோ பேத்தியோ ஸ்பெஷல்.”
அந்தக் குரலில் நிரம்பிய பாசம் அவளை உலுக்கியது. மேநிலைப்பள்ளி மற்றும் கல்லூரி ஆண்டுகளில் இந்தியாவுக்கு வராததை நினைத்து வருத்தமாக இருந்தது. சமாதானமாக,
“நீங்க எங்களைப் பார்க்க வந்திருக்கலாம்” என்றாள்.
சொன்னபிறகு தான் அது அநாவசியம் என்பதை உணர்ந்தாள். பயணத்துக்கு முன்பு தமிழ் அறிவைக் கொஞ்சம் புதுப்பித்ததுடன், தமிழ்நாட்டு சமுதாயத்தைப் புரிந்துகொள்ள ஆர் கே நாராயணனின் சில நாவல்களையும் வாசித்திருந்தாள். மகன் அழைத்தால் மட்டும் போதாது, மருமகளும் நேரடியாக, ‘வா!’ என்று மனமுவந்து சொன்னால்தான் பெற்றோர்கள் அவன் வீட்டுக்கு வருவார்கள். மாயா இந்தியப் பாரம்பரியத்தில் ஆர்வம்காட்டியது பிடிக்காததாலோ என்னவோ, க்ரெச்சனுக்கு நினைவுதெரிந்தது முதல் அவள் தாய் இந்திய உறவினர்களைத் தவிர்த்தாள்.
தாத்தா பேச்சை மாற்ற,
“சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் வீடு மாறினோம். புது இடம் உனக்குப் பிடிக்கும். இங்கே இரைச்சல் குறைவு.”
“ரேவதி அத்தை எப்படி?”
“அவள் எங்களுக்கு அடுத்த வீட்டிலேயே இருக்கிறாள்.”
வீடு மாறியதற்கு அது ஒரு காரணமாக இருக்கும்.
அவள் மனதைப் படித்தது போல,
“பாட்டியின் தங்கையும் இரண்டு தெரு தள்ளி இருக்கிறாள். வயதான காலத்தில் உதவிக்கு யாராவது பக்கத்தில் இருந்தால் நல்லது.”
மேடு பள்ளங்களில் குலுக்கிப்போட்டு தெருவிளக்கின் மங்கிய ஒளியில் ஒரு வீட்டின் சுற்றுச்சுவருக்கு முன்னால் ஊர்தி நின்றது. தாத்தா கேட்டைத் திறந்து வாசற்கதவின் முன் நின்றார். கதவைத் திறந்த ஒரு நடுவயதுப்பெண்,
“நாளை காலையில வரேங்க.”
“அப்படியே செய், ஜெயமாலா!”
மாயாவின் சாமான்களை உள்ளே கொண்டுவந்து வைத்த டிரைவர் ஜெயமாலாவுடன் காரைக் கிளப்பினான். தாத்தா எல்லா கதவுகளையும் சாத்திப் பூட்டினார். அவரைப் பின்பற்றி மாயாவும் காலணிகளைக் கழற்றி மாடிப்படிக்கட்டுக் கீழே வைத்தாள்.
“மாயா! உனக்கு சாப்பிட எதாவது வேணுமா?”
“பசி இல்ல, தாத்தா!”
“ஒரு கோப்பை கோக்கோ.”
“ம்ம்…”
“எனக்கு வேணும்.”
பாட்டியின் தூக்கத்தைக் கலைக்காமல் கூடத்தைத் தாண்டி சாப்பாட்டு அறைக்கு மெல்லக் காலடிவைத்து நடந்தார்கள். தாத்தா இரண்டு நிமிடத்தில் பாலைக் காய்ச்சி இரண்டு கோப்பைகளில் விட்டு கோக்கோ பொடியைக் கலந்த நேரத்தில் மாயா சுவரில் மாட்டியிருந்த கறுப்பு-வெள்ளைப் படங்களை ரசித்தாள். க்ரிக்கெட் ஆட்டத்தின் விதிமுறைகள் தெரியாவிட்டாலும் அவை அவ்விளையாட்டைச் சேர்ந்தவை என்பதில் சந்தேகம் இல்லை. தரையில் ஊன்றிய மூன்று கழிகளுக்குப் பின்னால் குனிந்து ஒருவர் பந்தைப் பிடிக்கிறார். தொப்பி மறைத்தாலும் அடுத்த இரண்டு படங்களிலும் அவரே தான் என்பது சந்தேகம் இல்லை. கழிகளுக்கு முன்னால் நீண்ட மட்டையைத் தரையில் இலேசாக ஊன்றி சாய்ந்து நிற்கிறார். மூன்றாவதில் மட்டை மேலே உயர்ந்து அவர் முகத்தில் வெற்றிப்புன்னகை. வர்ணம் இல்லாவிட்டாலும் சூரியனின் ஒளியில் வெள்ளை சட்டையும், வெள்ளை பான்ட்ஸும் பிரகாசிக்கின்றன.
சமையலறையில் நுழைந்து கோப்பைகளை எடுத்துவந்து மேஜைமேல் வைத்தாள்.
“உக்காருங்கோ! தாத்தா!” என்று அவரை உபசரித்தாள்.
தாத்தா சொட்டுசொட்டாக அனுபவித்துக் குடித்தார்.
கோப்பையைக் கையில் எடுக்குமுன் மாயா,
“படங்களில் நீங்கள் மிடுக்காக இருக்கிறீர்கள்.”
தாத்தாவின் பார்வை தொலைவில் பின்னோக்கிச் சென்றது.
“கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் எடுத்தவை.”
“நீங்கள் ஒரு சிறந்த ஆட்டக்காரர் என்று இப்போது தான் தெரியும்.”
“உன் அப்பாவுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்ததில்லை. அதனால் உன்னிடம் என்னைப் பற்றி சொல்லி இருக்க மாட்டான்” என்று தன் மகனுக்குப் பரிந்து பேசினார். ஆனாலும் மாயாவுக்கு அது குறையாகப் பட்டது. க்ரிக்கெட் ஆட்டம் இருக்கட்டும், தன் பெற்றோர்களின் எந்தப் பெருமையையும் அவர் அவளிடம் சொன்னதில்லை என்பது நினைவுக்கு வந்தது. அவருக்கு அதெல்லாம் பெருமையாகப் படவில்லையோ?
“க்ரிக்கெட் பேஸ்பால் போல என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.”
“அது மூன்று மணியில் முடிந்துவிடும். அந்தக்காலத்து க்ரிக்கெட் ஆட்டம் ஒரு நாளைக்கு ஐந்தரை ஆறு மணி. அப்படி மூன்று இல்லை ஐந்து நாட்கள் போகும்.”
“எந்தவிதமான குழுக்கள்?”
“அப்போது இந்த மாநிலத்தின் பெயர் மெட்றாஸ். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடன் ஆடினோம்.”
“மைனர் லீக் மாதிரி.”
“அதிலாவது கொஞ்சம் பணம் வரும் என நினைக்கிறேன். அந்தக்காலத்தில் ஒருசிலரைத் தவிர நாங்கள் எல்லாருமே அமெச்சுர் ஆட்கள். ஆட்டத்தில் இருந்த ஆர்வத்திலும், செய்தித்தாளில் பெயர் வரும் என்கிற ஆசையிலும், பார்ப்பவர்களின் கைதட்டலுக்காகவும் நாங்கள் ஆடினோம். பொதுவாக ஆட்டம் காலை பத்தரைக்கு ஆரம்பிக்கும். நான் சில சமயங்களில் வேலையைப் பாதியில் நிறுத்திவிட்டு ஆடப்போய் இருக்கிறேன்.”
“என்ன வேலை?”
“சைக்கிள் தொழிற்சாலையின் சக்கரங்கள் பகுதிக்கு சூபர்வைசர்.”
எழுந்து நின்று இன்னொருமுறை படங்களைப் பார்த்தாள். அவள் ஆர்வம் அவரைப் பேசத்தூண்டியது.
“பேஸ்பாலில் காச்சர் போல நான் விக்கெட் கீப்பர். அதற்கு வேகமாக இயங்க வேண்டும். குனிந்து நிமிர்ந்து உடலை வளைக்க வேண்டும். வேகமாக வரும் பந்தைத் தடுத்துநிறுத்த வேண்டும். கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகள் மிகச்சிறப்பாக ஆடினேன். நாடுகளுக்கு நடுவே நடக்கும் டெஸ்ட் பந்தயங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரேவதி அத்தை பிறந்ததும் குடும்பம் என்னை அழைத்தது. நான் ஆடியபோது ‘ஸ்ரீக்! ஸ்ரீக்!’ என்று ரசிகர்கள் கத்திய ஓசை இப்போதும் என் காதில் ஒலிக்கிறது. என்னை என் ஆட்டத்தை ஞாபகம் வைத்திருப்பவர்கள் இப்போது ஒருசிலர் தான்.”
குரலில் ஏமாற்றம் தொனிக்கவில்லை.
“இப்போது அந்த ஒருசிலரில் என்னையும் சேர்க்கலாம், தாத்தா!”
“தாங்க்ஸ்.”
கோப்பைகளைச் சமையலறையின் நீர்த்தொட்டியில் வைத்தாள்.
“மாடியில் உன் அறை திறந்திருக்கும். ஏர்-கண்டிஷர் போட்டுக்கோ! காலையில் நீ எப்போது வேண்டுமானாலும் எழுந்திருக்கலாம்.”
“குட் நைட், தாத்தா!”
“குட் நைட். மாயா!”
கைப்பையுடன் ஒரு பெட்டியையும் தூக்கி மாயா படியேறினாள். படுக்குமுன் ஒரு சின்ன குளியல். உடலின் அசதியில் குளிர் காற்று அவசியம் இல்லாமல் போனது.
உடனே தூங்கினாலும் நேர வித்தியாசத்தினால் ஜன்னலில் வெளிச்சம் பரவுமுன் விழித்துக்கொண்டாள். கட்டிலை ஒட்டிய மேஜை கடிகாரத்தில் நேரம் ஐந்து மணி. வாசற்கதவைத் திறக்கும் ஓசை. எழுந்து முகத்தில் தண்ணீர் தெளித்துவிட்டு இறங்கி வந்தாள். தாத்தாவின் கையில் பிளாஸ்டிக் கூடை. நாலைந்து பால் பாக்கெட்கள்.
“நான் போட்ட சத்தத்தில ஏழுந்துட்டியா?”
“இல்ல. அதுக்கு முன்னாடி.”
“காபி குடிப்பியா?”
“தாராளமா.”
முந்தைய இரவு போல தாத்தா அடுப்பைப் பற்றவைத்து பாலைக் காய்ச்சினார்.
“டிகாக்ஷன் இருக்கு! கலந்துக்கோ!”
சிறிது சர்க்கரையும் கொஞ்சம் பாலும் நிறைய காப்பியும் கலந்து எடுத்துக்கொண்டாள்.
மேஜையின் இரண்டு பக்கங்களில் அமர்ந்ததும், முந்தைய இரவின் உரையாடல் கனவு போலத் தோன்றியது. அப்படி இல்லை என்பதற்காக தாத்தாவின் பழங்காலப் படங்களைப் பார்த்தாள்.
“அந்தப் படங்களை நான் தினமும் பாக்கறேன். உன்னோட நேத்து பேசினதும் எனக்கு அந்தக்காலம் போன மாதிரி இருந்தது. ராத்ரி கனவுல நாலா பக்கமும் பந்துகளை அடிச்சேன்.”
காப்பியை அனுபவிப்பதில் மௌனமான சில நிமிடங்கள்.
பிரம்புக் கூடையில் வாழை கொய்யா திராட்சை பழங்கள்.
“பாட்டி எழுந்துக்க ஆறுமணி ஆகும். எதாவது சாப்பிடணும்னா சொல்!”
“வாழைப்பழம் எடுத்துக்கட்டுமா?”
“எது வேணுமானாலும்” என்று ஒரு கூடையை முன்னால் வைத்தார். பழங்களுடன் பிஸ்கெட் பொட்டலங்கள்.
“என் வேலைக்கு நான் ஏழு மணிக்கே போயாகணும். அதனால பாட்டி ஐந்து மணிக்கு எழுந்து எல்லா ஏற்பாடும் பண்ணணும், இங்கியே சாப்பிடறதுக்கு, கையில எடுத்துண்டு போறதுக்கு. அதுக்கு பதிலா இப்போ நான் முன்னாடி ஏழுந்துக்கறேன். அவ நிதானமா எழுந்துக்கட்டும்!”
“உங்களுக்கு பாட்டியைப் பதினைந்து வயதிலிருந்தே தெரியும்.”
“சென்ற ஆண்டு எங்கள் ஐம்பதாவது திருமண நாள்” என்றபோது அவர் மனக்கண்ணில் அரை நூற்றாண்டு காலம் ஓடியது. “என் பெற்றோர்கள் என்னை நல்ல குணங்களுடன் வளர்த்தார்கள். அந்த குணங்கள் என்னைவிட்டுப் போகாமல் பாட்டி காப்பாற்றினாள். இரண்டு விதத்திலும் நான் அதிருஷ்டசாலி. அவள் வீட்டின் முழுப்பொறுப்பையும் கவனிச்சதால் தான் நான் உயர் மட்டத்தில் க்ரிக்கெட் ஆட முடிஞ்சுது. நான் யாரிடமாவது கோபமாப் பேசினாலும் அலட்சியமா நடந்துண்டாலும் உடனே என்னைத் தனியே அழைத்துக் கண்டிப்பாள்.”
“பாட்டியின் சமையல் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு.”
“நான் வெளியூர் போனா வீட்டு சாப்பாட்டை நினைச்சிண்டே திரும்பி வருவேன்.”
வாழைப்பழத்துக்குப் பின் சில திராட்சைகள்.
“இப்போ என்ன படிக்கிறே?”
“போன மாதம் நான் கல்சுரல் அந்த்ரபாலஜியில் பி.ஏ. பட்டம் வாங்கினேன்.”
“அது தெரியாம நான் ஏதேதோ சொல்லிண்டு இருக்கேன்.”
“படிக்கும்போது பண்பாட்டின் அங்கங்களைத் தனித்தனியாப் பிய்த்து ம்யுசியத்தில வைத்துப் பார்த்தேன். இப்ப உங்களுடன் பேசும்போது மொத்தத்தையும் உணர்கிறேன்.”
பாட்டி எழுந்து தாத்தா போட்டுக்கொடுத்த காப்பியைக் குடித்தாள். வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பல பெண்களை மாயா பார்த்திருக்கிறாள். பாட்டிக்கு அவர்களைப் போல் முகச்சுருக்கங்களோ, உலர்ந்த உதடுகளோ இல்லை. பிறகு வாசல் நுழைவிடத்தில் சின்ன அரட்டை. தாத்தா செய்தித்தாளை மேலோட்டமாகப் பார்த்தார்.
“அப்பா அம்மா தங்கை எப்படி இருக்கா?”
“அப்பா ஒரு கல்லூரிப் பாடப்புத்தகம் எழுதுகிறார். அம்மாவின் வேலை இப்போது சர்ச் சேவை. க்ரெச்சன் உயர்நிலைப்பள்ளியில். நானே அவளுக்குக் கற்காலம்.”
“நீ வந்ததில எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.”
“எனக்கும்.”
“உனக்காக சூடு கொஞ்சம் குறைஞ்சிருக்கு.”
“இளநீர் வேணுமா?” என்று தாத்தா கேட்ட பிறகு தான் வாசலில் நின்ற தள்ளுவண்டியைக் கவனித்தாள்.
“ம்ம்.”
தாத்தா உள்ளே சென்று இரண்டு பாத்திரங்களுடன் வந்தார். அவருடன் சேர்ந்து வாசலில் நின்று வேடிக்கை பார்த்தாள்.
வண்டிக்காரன் நாற்பது ஐம்பது காய்களில் ஒன்றைப் பொறுக்கியெடுத்து அதன் தலையைச் சீவி துளை போட்டதும் பாத்திரத்தில் கவிழ்த்தான். தேங்காயை இரண்டாகப் பிளந்து வெள்ளையை வழித்து அதைத்தின்ன மட்டையின் சீவல் ஒன்றையும் கொடுத்தான்.
“எல்லாம் பயோடிக்ரேடபில்” என்றார் தாத்தா.
பிளாஸ்டிக் பாக்கெட்டில் குடித்த இளநீர் அவளுக்கு ஞாபகம் வந்தது. அவன் சட்டையின் கிழிசலைப் பார்த்து,
“இருங்க!” என்றாள். இவள் உச்சரிப்பு அவனுக்குப் புரியவில்லை.
“ஒரு நிமிஷம் இருப்பா! “
மாயா மாடிக்கு ஓடிப்போய் பரிசு தருவதற்கு எடுத்துவந்த சட்டைகளில் ஒன்றை எடுத்துவந்து கொடுத்தாள்.
வியப்பில் அவன் வார்த்தை இழக்க,
“என் முதல் பேத்தி” என்று தாத்தா பெருமையாகச் சொன்னார்.
இளநீரை அனுபவித்து முடித்ததும் கேட் திறக்கும் ஓசை. ஒரு சிறுபெண் நீண்ட சட்டையில். உள்ளே வந்ததும்,
“யு ஆர் மாயா, ரைட்?”
“யெஸ், அகிலா.”
குரலைக் கேட்டு உள்ளே சென்றிருந்த பாட்டி நாற்காலியில் வந்து அமர்ந்தாள்.
“மாயா என்னங்கறே? நன்னா தமிழ் பேசுவோ.”
“நன்னா இல்ல. உன் வயதில் நான் உன் அம்மா கல்யாணம் வந்தேன்.”
அகிலா தேங்காய் எண்ணெய் பாட்டிலும் சீப்பும் எடுத்துவந்த பாட்டியிடம் கொடுத்தாள். குட்டி முக்காலியை பாட்டி முன் வைத்து அதன்மேல் அமர்ந்தாள். பாட்டி அவள் பின்னல்களைப் பிரித்து…
“இன்னிக்கி என்ன ஒண்ணும் பேசாம இருக்கே. மாயா ரெண்டு நாள் தான் இருக்கப்போறா.”
“மாயா! உனக்கு தோசை பிடிக்குமா?”
“காலேஜ் பக்கத்தில ‘தோசா ப்ளேஸ்’. வாரம் ஒரு தடவை போவேன். பாட்டி தோசை மாதிரி இருக்காது.”
“பாட்டியின் தோசை மிளகாய்ப்பொடி நல்ல எண்ணெயுடன் சூப்பரா இருக்கும்.”
நீள வாரியதும் கால்கள் பிரித்து பின்ன ஆரம்பித்தாள்.
“நேத்திக்கி தமிழ் க்ளாஸ்ல ஒரே தமாஷ், பாட்டி!”
“யாராவது வாளைப்பளம்னு அளகா உச்சரிச்சாங்களா?”
“ஊகும். ‘கால்நடைகள்’ என்ற தலைப்பில ஒரு கட்டுரை எழுதணும். பாதி பேருக்கு கால்நடைன்னா என்னன்னு தெரியல. காலால நடக்கறதுன்னு எழுதினதை டீச்சர் படிச்சா.”
“அந்தக்காலத்தில உழுவதற்கு, வண்டி இழுக்க மாடுகள். இப்ப பால் கூட பாக்கெட்ல வர்றது. அதனால யாருக்கும் கால்நடைகளைப் பத்தித் தெரியல.”
வேடிக்கையின் விவரம் புரியாவிட்டாலும் அகிலா பள்ளிக்கூட சம்பவத்தை முகபாவத்துடன் சொன்னதையும் பாட்டி ஆர்வத்துடன் ரசித்ததையும் மாயா புன்னகையுடன் பார்த்தாள்.
“நீ என்ன எழுதினே?”
“நான்…” என்று தலையைத் திருப்பி மாயாவை சோகத்துடன் பார்த்தாள்.
“தைரியமா சொல்! நான் சிரிக்க மாட்டேன்.”
“தாத்தாவும் நீங்களும் பிரார்த்தனைக்காக திருவான்மியூர் கோவிலுக்கு நடந்தே போனதை எழுதினேன்.”
“அதுவும் சரிதான்.”
“உன்னோட கணக்குப் புத்தகத்துக்கு அட்டை போட்டுட்டேன்” என்று தாத்தா அதைக் கொண்டுவந்து கொடுத்தார்.
அகிலா போனதும் அவள் தங்கை. பழகாத மாயாவைப் பார்த்து சிறிது வெட்கம். அதிகம் பேசவில்லை. இரண்டு பேத்திகளுக்குப் பின்னியதும் பாட்டி,
“மாயா! உனக்கும் பின்னிவிடட்டுமா?”
இந்தியாவுக்கு வரப்போவது தெரிந்ததும் மாயா இரண்டு மாதமாகக் கூந்தலை வெட்டவில்லை.
“ஏற்கனவே அவளுக்கு நம்ம முகம். பின்னல் போட்டு பொட்டும் வச்சா முழு பாப்பாரக்களை வந்துடும்.”
“அவளை பயமுறுத்தாதீங்கோ!”
கூந்தலின் கீழ்ப்பாதியை மட்டும் தழைய வாரிப் பின்னலில் முடிந்தாள். தாத்தா படம்பிடித்தார்.
தாத்தாவுடன் காலை உணவு, இட்லி.
“சட்னி காரமில்லாம அரைச்சிருக்கேன்.”
“நல்ல வாசனை, பாட்டி!”
“வீட்டில பறிச்ச தேங்காய்.”
சாப்பிட்டதும்,
“மாயா! எனக்கு நீ ஒரு உதவி செய்யணும்.”
“சொல்லுங்கோ, தாத்தா!”
பாட்டி ஒரு ஃப்ளாஸ்க் கொண்டுவந்து பிளாஸ்டிக் கூடையில் வைத்தாள். அதைத் தொடர்ந்து ஒரு அகலமான எவர்சில்வர் டப்பா. ஒரு கைதுடைக்கும் துண்டு. எல்லாவற்றுக்கும் மேல் தாத்தா படித்து ஜாக்கிரதையாக மடித்த அன்றைய செய்தித்தாள்.
“நீ இதைத் தூக்கிண்டு வரணும். ஜெயமாலா அதைச் செய்வோ. இன்னிக்கி அவ இன்னும் வரல.”
வாசற்புறமாக வெளியே வந்து, கார் நிறுத்தியிருந்த கொட்டகை வழியாக, தென்னை மரங்களைச் சுற்றிப் பின்புறம் போனார்கள். அப்போதுதான் மாயா கவனித்தாள் மாடியில் அவள் தங்கிய இடத்திற்குப் பின்னால் இன்னொரு சின்ன பகுதி. அதற்குப்போக படிக்கட்டு. அதன் இரண்டு பக்கங்களையும் பிடித்துக்கொண்டு தாத்தா ஏறினார். அதனால் தான் கூடையைத் தூக்க உதவி.
படிக்கட்டின் முடிவில் சமதளம். கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார்கள். ஒரு வட்ட மேஜையைச் சுற்றி மூன்று நாற்காலிகள். ஒன்றில் ஒரு முதியவர். குளியலறையின் ஒரு பகுதி பாதி திறந்திருந்த கதவு வழியாகத் தெரிந்தது. சுவரில் மாட்டிய கறுப்பு வெள்ளைப் படங்களைத் தவிர சாமான்கள் அதிகம் இல்லை. கீழே பார்த்த படங்களைப்போல இவற்றிலும் ஒரு க்ரிக்கெட் ஆட்டக்காரர். குழுவினர் பின்தொடர அரங்கில் நுழைகிறார். கையை உயர்த்தி பந்தை வீச இருக்கிறார். களத்தின் நடுவே ஓடுகிறார். வெற்றிக்கோப்பையை இரு கரங்களில் அணைக்கிறார்.
தாத்தா கூடையை மேஜைமேல் வைத்தார்.
“அப்துல் ஜப்பார்! என் பேத்தி மாயா. அமெரிக்காஆஆவிலேர்ந்து வந்திருக்கா.”
மாயா வணக்கம் தெரிவித்தாள். அப்துல் தலையை இலேசாக அசைத்தார். அவர் முகம் முழுவதிலும் உளியால் குத்தியது போல குழிகள்.
தாத்தா செய்தித்தாளை மேஜைமேல் பரப்பினார். பிறகு, பாத்திரத்தைத் திறந்து அவர் முன் வைத்தார். ஃப்ளாஸ்கில் இருந்து கோப்பையாக மாறிய மூடியில் காப்பி. மேஜைக்குத் தள்ளி இருந்த இரண்டு நாற்காலிகளில் தாத்தாவும் பேத்தியும்.
“படங்களில் இருப்பது அப்துல், சரியா?” என்று பொதுவாகக் கேட்டாள் மாயா.
“கரெக்ட். நான் ஆடியபோது இவர் என்னோட கேப்டன். ஆட்டத்தின் எல்லா நெளிவுசுழிவுகளும் அத்துப்படி. பந்தை வீசுதல், அதை அடித்தல் எல்லாவற்றிலும் மன்னன். அந்தக் காலத்தில் கேப்டன் என்றால் சும்மா இல்ல. ஆட்டத்தின் எல்லா தீர்மானங்களும் செய்யும் அதிகாரம் அவருக்கு. குழுவின் ஆட்களைத் தேர்ந்தெடுப்பது, யார் எந்த வரிசையில் ஆடுவது? எதிராளிகள் பந்தை அடிக்கும்போது களத்தில் யாரை எங்கே நிறுத்துவது? ஆட்டத்தை எப்படி எடுத்துப்போவது? எல்லாம் கேப்டன். மற்றவர்கள் கைகட்டி வாய் பொத்திக் கேட்க வேண்டும். என்னை எத்தனை தடவை திட்டி அவமானப்படுத்தி யிருக்கார் தெரியுமா? ஒரு தடவை ஒரு சுலபமான காட்சைத் தவற விட்டுட்டேன். அதனால ஜெயிக்க வேண்டிய ஆட்டத்தைக் கோட்டை விட்டோம். என்னுடன் இந்த மனிதர் ஒரு வாரம் பேசவில்லை.”
தாத்தாவை மறுத்துப் பேசாமல் அப்துல் முகத்தில் புன்னகை. அவர் மிக நிதானமாக சட்னி தடவிய இட்டிலியை விண்டு வாயில் போட்டுக்கொண்டார். மூடியைக் கையில் எடுத்தபோது நடுங்கினாலும் காப்பி சிந்தவில்லை.
காலையில் யாராவது வந்து அவர் குளிக்கவும் உடை அணியவும் உதவியிருக்க வேண்டும்.
தாத்தாவைப் பக்கத்தில் வர அப்துல் கையசைத்தார். எழுந்து அவர் அருகில் சென்று குனிந்து நின்றார். அப்துல் மெலிந்த குரலில் ஒவ்வொரு வார்த்தையாக.
“ஸ்ரீக்! நான் இங்க வந்த கதையை மாயாக்கு சொல்!”
அப்துல் பின்னால் தாத்தா நின்று, “கேப்டன் வார்த்தையைத் தட்டக்கூடாது, அதனால சொல்றேன்” என்ற முன்னுரையுடன் ஆரம்பித்தார். “இது நடந்து மூன்று வருஷத்துக்கு மேலே இருக்கும். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் குழுவில் ஆடின எல்லாரையும் ஒன்று சேர்த்து ஒரு விருந்து.”
“பள்ளிக்கூட ரியுனியன் மாதிரி.”
“அப்படித்தான். நான் வேலை செய்த சைக்கிள் கம்பெனியின் பிரதான பங்குதாரர். வுட்லன்ட்ஸ் ஹோட்டலில் இரண்டு நாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். விருந்தில் பழைய ஆட்களைச் சந்தித்து ஆழ்ந்துபோன நினைவுகளைக் கிளறிய சந்தோஷம். பெயர் அட்டையைப் பார்த்து தான் மற்றவர்களை அடையாளம் தெரிந்தது. போலர்கள் சுந்தரம், சாந்தப்பா, பின்னி. ரன்களைக் குவித்த கோபாலன், அமர்சிங். முக்கியமான கேப்டனைக் காணோம். ‘ஏன் வரவில்லை’ன்னு கேட்டேன். ‘வர்றதுக்கு சரிப்படல’ன்னு பின்னி சொன்னான். ‘அப்ப அவர் இருக்கற இடத்தைச் சொல்லு’ன்னு விவரம் கேட்டு அங்கே போய்ப் பார்த்தேன். ஒரே ஒரு அறை. ஒரே குப்பை ஒரே அழுக்கு கிழிந்த சட்டை. தினம் சரியா சாப்பிட்ட மாதிரி தெரியல. ‘என் புது வீட்டு மாடியில வாடகைக்குன்னு ஒரு இடம். அது காலியா இருக்கு. நீ இப்ப என்னோட வந்து அங்கே தங்கணும்’னு சொன்னேன். ‘இப்படியே இன்னும் சிலநாள் இருந்துட்டுப் போயிடறேனேன்’னு சொன்னான். ‘நீ ஒருநாள் சொர்க்கத்துக்குப் போகப்போறது நிச்சயம். அதுவரைக்கும் சௌகரியமாத்தான் இரு’ன்னு சொன்னேன். ‘உன் மனைவி ஒத்துக்க வேண்டாமா’ன்னு கேட்டான். ‘நான் உன்னை இந்த நிலைமையில் விட்டுட்டு வந்தேன்னு தெரிஞ்சா அவ என்னை வீட்டுக்குள்ள வர விட மாட்டாள்னு’ சொன்னேன். ‘உனக்கு தொந்தரவு கொடுக்க இஷ்டம் இல்ல’ன்னு அடம்பிடிச்சான். ‘இங்க பார்! அந்தக்காலத்தில நீ என்னை அதட்டி உருட்டி அதிகாரம் பண்ணி இருக்கே. இப்ப நான் சொல்றதை நீ மரியாதையாக் கேட்டாகணும்’னு கையைப் பிடித்து இழுத்துண்டு வந்து இங்கே குடிவச்சேன்.’
மாயா எழுந்துவந்து அப்துல் பக்கத்தில் குனிந்து,
“என் தாத்தா என்னை பெருமையாக அமெரிக்காஆஆவில் இருந்து வந்திருக்கிறேன்னு சொன்னார். அவருடைய முதல் பேத்தி என்கிற பெருமைக்கு மேல் எதுவும் இல்லை.”
அதுவரை ஈரமான கண்களுடன் தாத்தா சொன்னதைக் கேட்ட அப்துல் அழவே ஆரம்பித்தார்.
சமாதானம் செய்ய,
“நீங்க அந்தக்காலத்தில விளையாடினதைப் பேசுவது உண்டா?”
“தினமும் அதுதான். என்னோட பேசாமல் இருந்தான்னு சொன்னேன் இல்லையா? அப்ப எனக்குப் பதிலா இன்னொரு விக்கெட் கீப்பரைப் போடறதா பேச்சு.”
“நீங்க போய், ‘இன்னொரு சான்ஸ் கொடு!’ன்னு…”
“ஊகும்! அவனே வந்து என்னைக் கூப்பிடாவிட்டால் நான் ஆட்டத்துக்கே பைபை சொல்லிடுவேன்னு பின்னி மூலமா செய்தி அனுப்பினேன்.”
“உடனே நான் பயந்துபோய் கேட்டதும் ஸ்ரீக் சரின்னு சொன்னான்.”
“இன்னொண்ணு மறந்துட்டியே. அடுத்த ஆட்டத்தில இரண்டு இன்னிங்ஸ்லியும் செஞ்சுரி அடிச்சேன்.”
அப்துல் சாப்பிட்டு முடித்ததும் கையைக் கழுவவும் துண்டில் துடைத்துக்கொள்ளவும் மாயா உதவினாள்.
“உன்னைப் பத்தி சொல்!”
“தாத்தாவின் மகனை உங்களுக்குத் தெரிந்திருக்கும்….”
“பார்த்திருக்கேன்.”
இறங்கி வந்ததும் குளியல்.
“உன் துணிகளைக் கொடு! தோச்சுடறேன்.”
துவைக்கும் இயந்திரம் சத்தத்தை நிறுத்தியது. இரண்டு பக்கெட்களில் ஈரமான துணிகள். ஆளுக்கொன்றாக தாத்தாவும் பேத்தியும் வாசலுக்கு எடுத்துவந்தார்கள்.
கொடிகளில் ஒவ்வொன்றாக ஹாங்கரில் மாட்டவும் பாட்டியின் புடவையை நீளவாக்கில் மடித்து உலர்த்தவும் தாத்தாவுக்கு மாயா உதவினாள்.
பிற்பகல் சமையலுக்கு தாத்தா காய் நறுக்கினார்.
“நான் எதாவது செய்யட்டுமா?”
“இரண்டு நாள் கை அசைக்காம இரு!”
தாத்தா நிதானமாக சில காய்களின் தோலை ஆய்ந்து, பீன்ஸை சிறுதுண்டுகளாக வெட்டிய அழகை ரசித்தாள்.
“இங்கே கொஞ்சம் வாங்கோ!”
அழைப்பு தாத்தாவின் காதில் உடனே விழவில்லை.
“பாட்டி கூப்பிடறாள்.”
சமையலறையில் கனமான ப்ரெஷர் குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி வைத்தார்.
தாளித்துக்கொட்டிய வாசனையுடன் சமையல் முடிந்தது. தாத்தா பாட்டி இருவருக்கும் அன்றைய சுடோக்குவின் பிரதி.
“சாப்பிடும் வரை” என்றாள் பாட்டி.
“உனக்கும் ஒண்ணு தரேன். பண்ணறியா?”
“நான் முடிக்கறதுக்கு இரவுச் சாப்பாட்டு நேரம் வந்துவிடும்.”
பாட்டி முதலில் கட்டங்களை நிரப்பிவிட்டாள்.
“என்றைக்காவது ஒருநாள் பாட்டிக்கு முன்னால முடிப்பேன்” என்று தாத்தாவுக்கு நம்பிக்கை.
சமையல் பாத்திரங்களைத் தேய்த்து முடித்ததும் ஜெயமாலா ஒரு கேரியரில் அப்துலுக்கு உணவு எடுத்துப்போனாள்.
பிற்பகலில் எல்லாருக்கும் குட்டித்தூக்கம்.
விழித்ததும் தாத்தா தேநீர் தயாரித்தார்.
அரவிந்தாவும் அகிலாவும் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தார்கள். பிஸ்கெட்டைப் பாலில் தோய்த்துத் தின்றார்கள். வீட்டுப்பாடங்கள் செய்தார்கள். தாத்தா அவர்களை வெளியே அழைத்துப் போனார்.
வாசல் மரநிழலில் பூக்காரி பூத்தொடுக்க ஆரம்பித்தாள்.
வேடிக்கை பார்த்த மாயா,
“அவள் முதுகு எவ்வளவு நேரா இருக்கு.”
“அதனாலதான் அவளுக்கு முதுகுவலி வர்றது இல்ல.”
“மாலையை எங்கே விற்பாள்?”
“ஐந்து மணி ஆனதும் கடைத்தெருவில வீட்டுக்கு போற கும்பல். ஏழு மணிக்குள்ள வித்துப்போயிடும்.”
மாலைப்பொழுது முடிந்ததும் பிற்பகலில் மிஞ்சிய உணவை பாட்டி சுடவைத்தாள். அப்துலுக்கு ஒரு கோப்பை பாலும் கைப்பிடி அளவில் வறுத்த வேர்க்கடலையும்.
மறு நாள், அமாவாசை. காப்பி குடித்ததும் தாத்தா குளித்து வித்தியாசமான ஆடையில் இருந்தார்.
“அப்துலுக்கு இட்லி எடுத்துண்டு போறியா?”
“சந்தோஷமா.”
முந்தைய தினம் போல சாப்பாட்டை அவர் முன் வைத்தாள்.
“இன்னிக்கி அமாவாசை. ஸ்ரீக் முன்னோர்களுக்கு சடங்கு செய்யணும்.”
சாப்பிட்டதும், மேஜையைச் சுத்தம் செய்தாள்.
“இனிமே என்ன படிக்கறதா இருக்கே?”
“இதழியல்.”
“அப்ப எனக்கு ஒரு உதவி.”
“எதுவானாலும்.”
“க்ரிக்கெட்ல பெரிய ஆட்டக்காரன்கள் புத்தகம் எழுதி இருக்காங்க. நான் சின்ன ஆள். ஆனாலும் அந்தக்காலத்தில நடந்த சுவாரசியமான நிகழ்வுகள், சந்தித்த மனிதர்கள். தொகுத்து எழுத ஆசை. ஒண்ணு ரெண்டு பேர் படிக்கலாம்.”
“மெமோயர் மாதிரி.”
“அப்படித்தான்.”
“இங்க்லீஷ்ல தானே.”
“ஆமா. நான் இங்க்லீஷ் தமிழ் கலந்து தப்பும் தவறுமா சொல்வேன். நீ சரிப்படுத்தி எழுதணும்.”
மாயா தன் அறைக்குப் போய் தன் மடிக்கணினியை எடுத்துவந்தாள்.
“என் சின்ன வயசில…” என்று ஆரம்பித்தார்.
“சின்ன வயசு என்றால்.”
“க்ரிக்கெட் ஆடறதுக்கு முன்.”
“அப்போ.”
“எனக்கு அம்மை வந்தது…”
முதல் அத்தியாயத்தைப் பாதியில் நிறுத்தி இறங்கி வந்தபோது சடங்கு முடிந்து தாத்தா தினப்படி சட்டை பான்ட்ஸில்.
“தாத்தா! எனக்கு உங்க அனுமதி வேணும்.”
“எதுக்குமா?”
“நான் நாளைலேர்ந்து ப்ளேன்ல ஒரு வாரம் இங்கே அங்கேன்னு பறக்கறதா இருக்கேன், இல்ல?”
“உன்னை ஏர்போர்ட் கூட்டிண்டு போறதுக்கு டிரைவர்கிட்ட சொல்லியாச்சு.”
“சுத்தி முடிச்சதும் இங்கே.”
“டிரைவர் உன்னைத் திரும்ப அழைச்சிண்டு வருவான். அடுத்த நாள் உன்னை லுஃப்தான்ஸால பத்திரமா ஏத்திவிடணும். அதுக்கு நானும் அவன் கூட வருவேன்.”
“நான் இந்தியாவை சுத்தவும் போறதில்ல, நீங்க லுஃப்தான்ஸால என்னை அடுத்த வாரம் இல்ல, மூணு மாதம் கழித்து ஏத்திவிட்டால் போதும்.”
“அப்படின்னா…”
“என்னை மூணு மாசம் உங்களுடன் வச்சுக்க முடியுமா?”
“நீ தங்கறதுக்கு மாடியில இடம் இருக்கு.”
“நீங்க எனக்குன்னு தனியா எதுவும் சமைக்க வேண்டாம்.”
“எதாவது வேலை கொடுத்தா செய்யணும்.”
“அப்புறம்…”
“நாங்க சொல்ற பேச்சைக் கேட்டு நடக்கணும். எதிர்த்து பேசக்கூடாது. ஊர்சுத்தக் கூடாது.”
“அப்படி நான் இருந்ததே இல்ல. உங்களுக்காக…”
“எல்லா பயணங்களிலும் அது தான் என் மனதின் ஆழத்துக்குப் போனது. அதனால் அதை விவரமாக எழுதினேன். முதல் நாள் இருந்த ஆர்வமும் கவனிப்பும் கடைசி வரை இருந்தது. அதுவரை இந்தியப் பண்பாட்டை மேலோட்டமாகப் பார்த்த எனக்கு அதில் ஆழ்ந்து போக ஒரு வாய்ப்பு. தாத்தாவும் பாட்டியும் முதுமைக்காலத்தில் இணைந்து வாழ்வது என் மனதில் தங்கிவிட்டது. ஐம்பது ஆண்டு காலத்தில் நிச்சயம் அவர்களுக்குள் மனத்தாபங்களும், கடும் வார்த்தைகளும் அலட்சியப் பார்வைகளும் மௌன யுத்தங்களும் இருந்திருக்கும். இப்போது இருவரும் அனுசரித்துப் போவதற்கு, இந்த உறவு நிரந்தரம் என்கிற நம்பிக்கை. அப்படியொரு உறவு எனக்குக் கிடைத்தால்?”
‘எனக்கும்’ என்று அனிகா மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.
“என்னுடைய இன்னொரு பாட்டியையும் தாத்தாவையும் ஒருசேர நான் பார்த்தது இல்லை. ஆண்டுக்கு இருமுறை எங்களுக்குப் பரிசுகள் அனுப்புவாள். ஆனால், இந்த தாத்தா பாட்டி தினம் பேத்திகளுக்கும் பெண்களுக்கும் உதவியாக இருக்கிறார்கள்.”
“அப்துலின் வாழ்க்கைக் குறிப்புகள்?”
“தினசரித்தாளில் வாரம் ஒரு கட்டுரையாக வெளிவந்தது. அடுத்தமுறை நான் சென்னை சென்றபோது அவர் இல்லை. சொந்தத்தில் ஒருவர் இறந்த வருத்தம் எனக்கு.”
“இந்தியாவில் இருந்து திரும்பிவந்ததும் அந்த மூன்று மாதத்தின் பாதிப்பு இருந்திருக்குமே.”
“இருந்தது. வர்ணங்கள் நிறைந்த இடத்தில் இருந்து நிறங்கள் இல்லாத உலகத்துக்கு வந்ததுபோல ஏமாற்றம்.”
“அது சிறிதுசிறிதாகக் குறைவதும் இயற்கை. பெரிய ஆபத்தில் இருந்து உயிர்தப்பியதும் வரும் மனத்தெளிவு போல. காலப்போக்கில் தினசரி வாழ்க்கையில் கலந்ததும் சாதாரண நிலைக்கு இறங்குகிறோம்.”
“அப்படித்தான் நடந்தது. முக்கிய காரணம். என் ஆண்-தோழன். டயுக் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தான். ஏற்கனவே பட்டப் படிப்பிற்குக் கடன் வாங்கி இருந்ததால் என் சம்பாத்தியம் அவசியம் ஆனது. மானிடவியலில் உதவியாளராகச் சேர்ந்தேன்.”
“சம்பளம்?”
“அதிகம் இல்லை ஆனால் இருவருக்குப் போதும். இப்படி நான்கு ஆண்டுகள்.”
“எம்.டி.க்கு பிறகு அவன்,”
“அங்கேயே ரெசிடென்ஸி.”
2008 முப்பது வயது
“மேற்கத்திய கலாசாரத்தில் மிச்சம் இருக்கும் ஒரேயொரு ரொமான்டிக் அம்சம் ஆண் பெண்ணிடம் சம்மதம் கேட்பது. கதைகளில் திரைப்படங்களில் மற்ற ஊடகங்களில் அவள் எதிர்பாராத சமயம் அவன் கேள்வியை உடைப்பதும்…”
“ஃபார்ச்யுன் குக்கிக்குள், கடற்கரை மணலில், சுதந்திரசிலையின் உச்சியில்.”
“…அவள், ‘வாட் அ சர்ப்ரைஸ்!’ என்று ஆச்சரியப்படுவதும் கட்டயாம் இருக்கும். உறவின் ஆரம்ப ஆண்டுகளில் அப்படி ஒருவேளை நடக்கலாம். சம்மதத்தை நோக்கிப் போவது இருவருக்கும் தெரிந்திருக்கும். நல்ல துணைவன் கிடைப்பது அரிதான சமுதாயத்தில் பெண் மறுப்பது அபூர்வம். கல்லூரியில் தொடங்கிய எங்கள் எட்டாண்டு உறவு அந்த கட்டத்துக்குள் நுழையவில்லை. ஆனாலும் எனக்குத் திருமணத்தைத் தீவிரமாக யோசிக்க வேண்டிய, இளமையின் அடையாளமான இருபத்தியொன்பது கடந்துபோய்விட்ட வயது.”
“உண்மை தான்.”
“என் இரண்டு இந்திய (அதாவது இரண்டு பெற்றோர்களும் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்கள்) தோழிகள் அமெரிக்க ஆண்-தோழர்களுடன் இந்தியாவுக்கு பயணம் செய்திருந்தார்கள். அங்கே தென்னிந்தியக் கோவில்கள், கோவா கடற்கரை, ஆக்ரா தாஜ்மஹால். திரும்பிவந்ததும் திருமணம். அந்த நம்பிக்கையில் என் அடுத்த இந்தியப்பயணம் – அவனுடன்.”
“உன் உள்நோக்கத்தை ஊகித்து அவன் பயணத்துக்கு சம்மதித்தான்.”
“அப்படித்தான் அப்போது நான் நினைத்தேன்.”
“சுற்றுப்பயணத்திற்கு முன் விமான நிலையத்தை ஒட்டிய ஐந்து நட்சத்திர விடுதியில் நான்கு நாள் தங்கி, மாலையில் தாத்தா பாட்டி மற்ற உறவினர்களுடன் சில மணிநேரம் எனத் திட்டம். முதல் நாள் பாட்டியின் தோசை, காரம் இல்லாத சட்னி. இந்தியாவைச் சுற்றும் என் திட்டம் இன்னொரு முறை ரத்தானது.”
நடந்ததை நினைத்து மாயாவுக்கு சிறிது சோகம்.
“இரண்டு நாளில் அவன் டிக்கெட்டுக்கு அபராதம் கொடுத்து யூ.எஸ். திரும்பிவிட்டான்.”
“உன் முதல் ஆழ்ந்த உறவு. அது முடிந்ததும் வரும் வருத்தம் இயற்கை. ஆனால், அது உன் தவறு இல்லை.” பதின்பருவத்தினருக்கு அனிகா கொடுக்கும் அறிவுரை.
“சித்ரா அத்தையின் பேரக்குழந்தைகள் தவறு” என்று மாயா புன்னகைத்தாள்.
அனிகாவின் முகத்தில், ‘புரியவில்லையே’.
“அப்போது அவர்களுக்கு ஐந்து வயது, மூன்று வயது. இருவருக்கும் நல்ல களையான முகம், தொட்டால் ஒட்டிக்கொள்ளும் கறுப்பு. நாங்கள் போனபோது அவர்களும் இருந்தார்கள். கொஞ்சம் வித்தியாசமான புதுமனிதனைப் பார்த்த சந்தோஷத்தில் அவனிடம் போய் ஒட்டிக்கொண்டார்கள். அவன் அவர்கள் உரசலைத் தவிர்க்க தள்ளித்தள்ளி உட்கார்ந்தான். திரும்பி வந்து இன்னொரு வெள்ளைப் பெண்ணைப் பிடித்தான் என்பது தெரியவந்தது.”
“தன் சாயலில் இல்லாத குழந்தைகளிடம் பாசம் வைக்க மனப்பக்குவம் வேண்டும். அது ஆண்களுக்குக் குறைச்சல்.”
“ஒரு மாதம் தாத்தா பாட்டியுடன். திரும்பிவந்ததும் மனதைத் தேற்ற எம்.ஏ. இதழியல். அதைத் தொடர்ந்து ‘ஆரோரா’ பத்திரிகைக்கு சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் அறிக்கைகள் எழுதினேன்.”
2013-2018 நாற்பது வயதுக்கு முன்னால்.
“கடைசியாக, சென்னையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல்.” என்றாள் அனிகா.
“பிற இடங்களைப்போல இந்தியாவிலும் நன்னீர் குறைந்துவருகிறது. தொழிற்சாலைகளின் கழிவுகள், செயற்கை உரங்கள், பூச்சிகொல்லிகள் கலப்பதும் நிலத்தடி நீரை வேகமாக இறைப்பதும் முக்கிய காரணங்கள். இந்தியாவில் நன்னீரைப் பெருக்குவது பற்றி ஒரு புத்தகம் எழுத அரசின் மானியம் கிடைத்தது.”
“அதை நான் இனிமேல் தான் படிக்க வேண்டும்.”
“அதில் பசுமைப்புரட்சியால் பாதிக்கப்பட்ட நிலத்தை இயற்கைவழியில் சீர் செய்யும் வழிகள், நெல்லுக்குப் பதிலாக நீர் குறைவாகத் தேவைப்படும் கேழ்வரகு போன்ற பயிர்கள், சென்னையின் தண்ணீர்ப் பற்றாகுறையை சமாளிக்க ‘ஆகாய கங்கை’ மழைநீர் சேமிப்பு இயக்கத்தைத் தொடங்கி நடத்தும் டாக்டர் சேகர் ராகவனின் தன்னலமற்ற சேவை. இவை போல இன்னும் பல விஷயங்கள்.”
“புத்தகம் யூ.எஸ்.ஸின் வறட்சியான தென்மேற்குப் பகுதிக்கும் உதவும்.”
“சந்தேகம் இல்லாமல். தாத்தா பாட்டி இருவரின் மூளையும் சுடோகு கட்டங்களை நிரப்பும் அளவுக்குக் கூராக இருந்தாலும் அவர்கள் உடல் மெலியத் தொடங்கியது. கடைசி வரையில் அவர்களின் தினசரித் தேவைகளுக்குக் கைகொடுத்ததில் மனத்திருப்தி.”
“உனக்குத் தியாக மனப்பான்மை.”
யோசித்துவிட்டு,
“என்னிடம் இருக்கும் எல்லா பண்புகளும் அவர்கள் வழியாக என்பது என் எண்ணம். அதற்கு நன்றியாக நான் செய்தேன். அத்துடன் புத்தகத்துக்காக சிறு பயணங்கள் போவது, தேவையான விவரங்கள் சேகரிப்பது, அவற்றைச் சேர்த்து எழுதுவது போக மீதி நேரத்தில்” என்றாள்.
“பேத்திகள்?”
“எப்போதாவது வந்து தாத்தா பாட்டியுடன் கதை பேசுவார்கள். அதுவே பெரிய உதவி இல்லையா?”
அனிகாவின் அலைபேசி ஒலிக்கவே அதை எடுத்துப்பார்த்தாள். புதிய ஆனால் ஆபத்து இல்லாத எண்.
“ஒரு நிமிடம்” என்று மாயாவிடம் மன்னிப்பு கூறிவிட்டு பதிலளித்தாள்.
“ஹாய் டெய்ஸி!”
“நான் சிகிச்சையகத்தில் இருக்கிறேன்.”
“எப்போது வேண்டுமானாலும் கொண்டுவந்து விடலாம்.”
“நித்யாவைப் பார்த்துக்கொண்டதற்கு நன்றி! பை!”
அலைபேசியை மாயாவிடம் நீட்டினாள். அதன் முகப்பில் நித்யாவின் படம். ஈரம் இல்லாத நீச்சல் ஆடையில் பெருமிதத்துடன் பார்க்கிறாள்.
“என் பெண் நித்யா. ஐந்தாம் பிறந்தநாளுக்கு நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறாள்.”
படத்தை மாயா ரசித்தபோது அனிகாவின் முகத்தில் சோகம் படர்ந்தது.
‘இவளிடம் சொல்வதற்கு என்ன தயக்கம்?’ என்ற தீர்மானத்துடன்,
“மாயா! என்னைப் பார்க்க வருகிறவர்களிடம் என் மனக்குறைகளை நான் சொல்வது கிடையாது. ‘இவளுக்கும் என்னைப்போல பல பிரச்சினைகள்’ என்ற ஆறுதலைத் தராமல் அது அவர்களின் பளுவை அதிகப்படுத்தும், அவ்வளவுதான். நீ வித்தியாசம். உனக்கும் எனக்கும் பல ஒற்றுமைகள். அதனால் என் பிரச்சினையை இப்போது உன்னிடம் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். ஆச்சரியம் என்னவென்றால், இன்று காலையில் தான் அதை நான் முழுமையாக உணர்ந்தேன்.”
அலைபேசி கைமாறியது. அத்துடன் பேசுபவர் கேட்பவர் இடங்களும் மாறின.
நித்யாவிடம் இருந்து அந்தக் கேள்வி எப்போதாவது வரும் என்பதை எதிர்பார்த்து அதற்கான பதிலையும் அனிகா யோசித்து இருந்தாள்.
அன்று காலை எட்டு மணிக்கு அவளுடைய முதல் நீச்சல் பயிற்சி. அதுவரை பாப்பாக்கள் பகுதியில் பயிற்றுவிக்கும் பெண்ணின் கைகளைப் பற்றிக்கொண்டு, இல்லை ஸ்டைரோஃபோம் மிதப்பைப் பிடித்துக்கொண்டு கால்களை உதைத்த அவள் தன் உயரத்தைவிட ஆழமான குளத்தில், ஆறு ஏழு வயதினருடன் அவளாகவே நீந்தப்போகிறாள். அதை அம்மாவுடன் அப்பாவும் பார்த்தால் எவ்வளவு பெருமை!
‘நாளை அப்பாவைக் கூப்பிட்டு அங்கே வரச்சொல்கிறாயா?’ என்று முந்தைய தினம் அவள் சொன்னபோது அனிகா நீச்சல் தெரியாமல் குளத்தில் விழுந்தது போலத் தடுமாறினாள்.
தன் நண்பர்களில் சிலர் வார இறுதியில் மட்டும் தந்தையுடன் நேரம் செலவழித்ததை நித்யா கவனித்திருந்தாள். அப்படிச் செய்ய அவளுக்கு விருப்பம் வந்திருக்கிறது.
தாத்தாவை அப்பி என்று கூப்பிட்டாலும் அவர் தன் அம்மாவின் அப்பா, தனக்கென இன்னொருவர் இருப்பார் என்பதைப் புரிந்துகொள்ளும் வயதும் வந்துவிட்டது.
‘கூப்பிட்டாலும் அவன் வரமாட்டான்.’ அதை நித்யாவிடம் அவளுக்குப் புரிகிறபடி எப்படிச் சொல்வது?
வரிசையில் நின்ற சிறுவர்கள் ஒவ்வொருவராக நீரில் குதித்து குப்புற நீந்தினார்கள். அவள் முறை வந்ததும் நித்யா பயப்படாமல் நீரில் குதித்து நீச்சல் குளத்தின் அகலத்தைத் தடுமாறாமல், நடுவில் நிறுத்தாமல் கடந்து எதிர்ப்பக்கச் சுவரைத் தொட்டாள். தொப்பி மறைத்த தலையை உயர்த்தி நீச்சல் கண்ணாடி வழியாக அம்மாவைப் பார்த்தாள்.
“க்ரேட்!” சத்தம் எழாமல் கைதட்டினாள்.
மறுபடி எதிர்த்திசையில் கூரையைப் பார்த்து, பிளாஸ்டிக் சங்கிலியை இடிக்காமல் நீரின் பரப்பை மாறிமாறி இழுத்து…
ஒலிம்பிக் அளவு நீச்சல் குளம் மறைந்து அங்கே ஒரு காட்சி.
அனிகா மனநல சிகிச்சையகத்தின் ஆலோசக அறை. அவளுக்கு எதிரில் அவள் அறிவுரைக்காக ஒரு பன்னிரண்டு வயதுப் பெண்ணும் அவள் தாயும்.
முதலில் பெண்ணின் மேல் கவனம் வைத்தாள். சற்றே வெள்ளை நிறம். நல்ல களையான முகம். உற்சாகமும் கலகலப்பும் வழிந்தோடும் பருவம்.
“நீ முதலில்…”
முன்னுரை எதுவும் இல்லாமல்,
“என் அப்பாவை சந்திக்க ஆசை.”
“எவ்வளவு நாளாக இந்த விருப்பம்?”
“மனதின் ஆழத்தில் முன்பே இருந்தாலும் என் தாத்தா எங்களுடன் வசித்ததால் அதை நான் பெரிதாக நினைக்கவில்லை.”
“இப்போது அவர்…”
“இறந்து சில மாதங்கள் ஆகின்றன.”
சம்பிரதாய வருத்தம் தெரிவித்துவிட்டு,
“வளர்ப்பில் தாய் மட்டும் போதாது என நீ நினைக்கிறாய்.”
“அவள் எனக்கு எந்தக்குறையும் வைக்கவில்லை. முக்கியமாக, நாங்கள் சேர்ந்து செலவழிக்கும் நேரம். இருந்தாலும் தந்தை-மகள் என்கிற பந்தம் அவசியம்.”
அனிகா ஒப்புதலாகத் தலையசைக்கிறாள்.
“என் பள்ளிக்கூடத்தில் ஆண்டுக்கு இருமுறை தந்தை-மகள் நடன நிகழ்ச்சி நடக்கும். நான் இதுவரை தாத்தாவுடன் இல்லை அம்மாவின் நண்பருடன் அதற்குப் போனேன். ஆனாலும், நிஜமான அப்பா போல ஆகுமா?”
“உண்மைதான்” என அனிகா மென்று விழுங்குகிறாள். “அந்த ஒரு காரணம் மட்டுமா?”
“என் தாய்க்கு அவள் தந்தை வழிகாட்டியதால் தான் அவள் சொந்த வாழ்க்கையிலும் தொழிலிலும் உயர்வாக இருக்கிறாள். என் எதிர்காலமும் அப்படிச் சிறப்பாக அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு?”
அவளுக்குப் பேச்சில் சாமர்த்தியம் இருக்கிறது. சட்டத்துறையில் பிரகாசமான எதிர்காலம்.
“உன் பிறப்புக்குக் காரணமாக இருந்தவனும் உன்னை சந்திக்க விரும்ப வேண்டும். இல்லையா?” என்று அனிகா எதிர்க்கேள்வி போடுகிறாள்.
அவள் அசந்துவிடவில்லை.
“ட்ரூ, ட்ரூ. அதைக் கண்டுபிடிக்க எங்கள் முதல் சந்திப்புக்கு என் தாய் ஏற்பாடு செய்வதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.”
அவளை ஒருமுறை பார்த்துப் பேசினால் போதும். அவனுக்கு அவள் மேல் தந்தைப் பாசம் வந்துவிடும். இவ்வளவு காலம் அவளைச் சந்திக்க அக்கறை எடுக்காததற்கு வருத்தம் தெரிவித்து அவளிடம் மன்னிப்பு கூடக் கேட்கலாம்.
முதல் தப்படியை எடுக்க அவள் தாய் மறுக்கிறாள் என்று அவள் மேல் மறைமுகக் குற்றச்சாட்டு.
அனிகாவின் பார்வை இப்போது மற்றவளின் பக்கம். பெண்ணின் வயதில் முப்பதைக் கூட்டி அவள் வயதைக் கணக்கிட அவளுடைய கச்சிதமான தோற்றம் இடம்தரவில்லை. ஆனால், கண்களில் ஒருவிதக் கிலேசம்.
“உன் பெண் சொல்வது…”
“சரியா என நீ தீர்மானிக்க என் நிலையை நான் ஆரம்பத்தில் இருந்து சொல்ல வேண்டும்” என்று மகளைப் பார்க்கிறாள்.
“தாராளமாகச் சொல்! நான் ஒன்றும் குழந்தை இல்லை” என்று மகள் வேகமாகத் தன் அதிருப்தியை வெளிப்படுத்துகிறாள்.
“அப்போது… ஒரு உறவு முறிந்து அடுத்ததைத் தேடும் சமயம். ஊரைவிட்டுத் தள்ளி இருந்த அந்த மருத்துவக் கல்லூரியில் நான் பயிற்சி வைத்தியர். துணையைத் தேர்ந்தெடுக்க அங்கே நிறைய பேர் இல்லை. என் கவனிப்புக்கு வந்த ஒரு மனநோயாளி வான்கோ போல தன்னையே அடிக்கடி காயப்படுத்திக் கொள்வான். ஒருமுறை சுயசித்திரவதை தீவிரமாகி அவனை அவசரப்பிரிவுக்கு அழைத்துப்போக நேரிட்டது. அங்கே கோபியைப் பார்த்தேன். முதல் சந்திப்பிலேயே தன் தங்கையின் இரண்டு பெண்களின் படங்களைப் பெருமையுடன் காட்டி அவர்களைப் பற்றிச் சொன்னான். கோபி அங்க்ல் என்று அவர்களுக்கு அவனிடம் கொள்ளை ஆசை. அவனுக்கும் அவர்கள் மேல் அளவுகடந்த பாசம். அதனால் நான் அவனுடைய முந்தைய வாழ்க்கை விவரங்களில் அக்கறை காட்டவில்லை.”
“சில மாதங்களில்…”
“திருமண முத்திரை விழுந்தாலும் விழாவிட்டாலும் அவனுடன் சேர்ந்து எங்கள் குழந்தையை வளர்ப்பதில் எனக்கு சம்மதம்.”
“ஆனால், அவன்…”
“விஷயம் தெரிந்ததும் அதைக் கலைக்கச் சொன்னான்.”
“எப்போதோ பார்க்கும் குழந்தைகளிடம் ஆசை காட்டுவது வேறு, தன் குழந்தையைப் பொறுப்புடன், பல தியாகங்கள் செய்து வளர்ப்பது வேறு.”
“காலம் கடந்த ஞானம்.” சிறு இடைவெளிக்குப் பின், “வருஷத்துக்கு ஒரு பெண்-தோழி என்பது அவன் கணக்கு.”
“அவன் அறிவுரையை நீ கேட்கவில்லை என்று தெரிகிறது.”
“கலைத்துவிட்டுப் பொறுப்புள்ள ஒருவனுக்கு ஏன் காத்திருக்கவில்லை?” என்று மகள் குறுக்கிடுகிறாள்.
“அப்படி எத்தனையோ பெண்கள் வாழ்க்கையில் நடந்திருக்கிறது, ஆனால் அதெல்லாம் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால்.” அனிகாவைப் பார்த்து, “‘கௌன்ட் டௌன்’ என்ற புத்தகம்…”
“அதன் சுருக்கத்தைப் படித்து இருக்கிறேன்.”
“உனக்குப் புரியும். இருபத்தொன்பது மற்ற வயதுகளைப் போல, இல்லை அவற்றைவிட இன்னும் வேகமாகவே என்னைக் கடந்து போகப்போகிறது. எனக்கு இயற்கை வழங்கிய உயிரை திருப்பிக் கொடுத்துவிட்டு, ஐந்தாறு ஆண்டுகள் போனதும் மறுபடி கேட்டால் அது எனக்கு இன்னொருமுறை கொடுப்பது என்ன நிச்சயம்?”
அனிகாவுக்கு அவள் நிலைமை நன்றாகவே புரிகிறது.
மகள் சிறிது நேரம் யோசிக்கிறாள். அம்மாவை ஆதுரத்துடன் பார்த்து,
“சரி. என்னையும் சேர்த்து உன்னை ஏற்றுக்கொள்ள எந்த ஆணும் முன்வரவில்லையா?”
“அப்படி யாருமே இல்லை என்று ஆண்குலத்தைப் பழிக்க மாட்டேன். அந்த ஒருவனை சந்திக்கும் அதிருஷ்டம் எனக்கு வாய்க்கவில்லை.”
அனிகா என்ன அறிவுரைகள் தரப்போகிறாள்? தன்னையே ஒரு மாயக்கண்ணாடியில் பார்த்து,
“மகளின் நலனுக்காக ஆண்களிடம் உன் எதிர்பார்ப்புகளை வெகுவாகக் குறைத்துக் கொண்டு…”
நீச்சல் பயிற்சி முடிந்தது.
கரையில் ஏறி, துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு நித்யா குளியல் பகுதிக்கு நடந்தபோது முதன்முதலாகப் பார்த்த இன்னொரு பெண்ணுடன் சுவாரசியமான பேச்சு. அனிகா எழுந்து வெளியேவரும் இடத்தில் காத்திருந்தாள். ஐந்து, பத்து நிமிடங்கள். உள்ளே போய்ப் பார்க்கலாமா?
நித்யாவின் குரல் முதலிலும் தோள்பையுடன் அவள் உருவம் பின்னாலும் வெளியே வந்தன.
“மாம்! இது ஹேஸல்.”
அவளுடன் வந்த அப்பெண்ணுக்கு ஒன்றிரண்டு வயது கூட இருக்கும். வெவ்வேறு நிறங்களில் இருவரின் கூந்தலும் ஈரத்தில் துவண்டு தொங்கியது.
“ஹாய் ஹேஸல்!”
ஈரமான துணிகளால் கனத்திருந்த நீச்சல் பையை நித்யாவிடம் இருந்து வாங்கிக்கொண்டாள். அரங்கின் வெளியே வந்தபோது உடற்பயிற்சி ஆடையில் ஹேஸலின் தந்தை.
அவனிடம் அவள்,
“டாட்! என் புதுத் தோழி நித்யா.”
அனிகாவும் தன்னை அறிமுகம் செய்தாள்.
“நான் உடல்நல மருத்துவன்” என்றான் அவன். “என் கைவரிசை பலிக்காவிட்டால் நோயாளிகளை உன்னிடம் அனுப்புலாமா?”
“இளைஞர்களாக இருந்தால்.”
மையத்தின் வெளியே வந்து பிரிந்து இரு ஊர்திகளை நோக்கி நடக்க இருந்தபோது,
“டாட்! ஸ்கேட் செய்ய நித்யாவையும் கூட்டிப் போகலாமா?”
எதிர்பாராத அக்கேள்வி அனிகாவைத் தடுமாற வைத்தது. ஹேஸலின் தந்தையை சங்கடத்தில் வைக்காமல் அவளே என்ன சாக்கு சொல்லி மறுக்கலாம்? நித்யா ஸ்கேட் செய்தது இல்லையே.
ஆனால், அவனோ அனிகாவிடம் தழைந்த குரலில்,
“சென்ற மாதம் ஹேஸலின் நெருங்கிய தோழி சத்யா ஃப்ளாரிடாவுக்கு நகர்ந்துவிட்டாள். அதிலிருந்து அவள் வருத்தமாக இருக்கிறாள். நித்யாவை அனுப்பி வைத்தால் எங்களுக்குப் பெரிய உதவி” என்றான்.
“ம்ம்…”
“ஹேஸலுக்கும் ஸ்கேட்டிங் இது தான் முதல் தடவை. இரண்டு மூன்று மணியில் நாங்களே வீட்டில் கொண்டுவந்து விடுகிறோம்.”
அவன் இவ்வளவு சொல்லும்போது… அது தந்தையின் ஓய்வு நேரம் எனத் தன் சிகிச்சையகத்தின் முகவரியைச் சொன்னாள்.
நித்யா தானாகவே, “சமத்தா இருப்பேன்” என்று அம்மாவுக்கு வாக்குக் கொடுத்தாள். பிறகு ஹேஸலின் தந்தை கையை இறுக்கப் பற்றிக்கொண்டு நடந்தாள். அந்தக் காட்சி அனிகாவின் மனதில் நெடுநேரம் நின்றது.
தந்தைக்கு நித்யா தோழியுடன் போகிறாள் என்ற தகவல் அனுப்பிவிட்டு நீச்சல் மையத்தில் இருந்து சிகிச்சையகம் வந்தாள்.
அனிகாவின் விவரிப்பைக் கவனத்துடன் கேட்ட மாயா,
“நான் உன்னிடம் சொல்ல வந்ததில் இன்னொன்று பாக்கி” என்று தொடர்ந்தாள். “இந்தியாவின் பரபரப்பான வாழ்க்கையில் சில காலம் ஊறிய பிறகு யூ.எஸ். திரும்பிய எனக்குப் பழக்கம் இல்லாத இடத்துக்கு வந்தது போல இருந்தது. இந்தியாவில் இருந்து கிளம்புமுன்பே ‘நன்னீர்’ புத்தக வடிவம் பெற்றது. அதைப் பிரபலப்படுத்தும் சுற்றுப்பயணம் கிட்டத்தட்ட ஆறு மாதம். பல விடுதிகள். புதிய மனிதர்கள். வித்தியாசமான நேரங்களில் விருந்துகள்.”
“அதை சிலாக்கித்துப் பல மதிப்புரைகள் பார்த்தேன். ஆனால், செலவு போக கையில் ஒன்றும் மிஞ்சி இருக்காது.”
“நானும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அது கொடுத்த புகழினால் வுட்மான்ட்டின் (பல்கலைக்கழகம்) எழுத்துத்துறையில் ஆசிரியர் பதவி. சூழலியல் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் பரப்புவதை மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும். அதிகம் இல்லை என்றாலும் நிலையான வருமானம். இளைஞர்களுடன் உலகை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும் சந்தோஷம். காலம் இனிதாகப் போனது.” சிறு இடைவெளிக்குப் பின், “மார்ச் மாதத்தில் முதல் வாரம்…”
“கோவிட்டின் முழுத்தாக்குதல் இன்னும் நிகழவில்லை.”
“அதை ஆரம்பித்துவைத்த பெருமை எனக்கு.”
“எப்படி இருந்தது?”
“சாதாரண ஜுரம். கொஞ்சம் களைப்பு. வைரஸைவிட இரண்டு வாரம் வீட்டிலேயே தனியாக இருந்தது என்னைப் பலவீனப்படுத்தியது.”
“தேவையான பொருட்கள் வீட்டிற்கு வந்திருக்குமே.”
“அதனால் இல்லை. நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடந்த மனம் ஒரே விஷயத்தையே சுற்றி சுற்றி வந்தது. உடல் நிலை இன்னும் மோசமாகப் போனால்… தேநீர் தயாரித்து, சூப் சுடவைத்து என்னை யார் காப்பாற்றுவார்கள்? பாட்டிக்குத் தாத்தாவைப் போல. அப்துலுக்கு ஸ்ரீக் போல.”
“தாத்தா பாட்டிக்கு ஒரு மாயா போல.”
“என் பெற்றோர்களை நம்புவதற்கு இல்லை. குழந்தையைத் தத்தெடுக்கலாம் என்றால் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.”
அனிகா தன் அதிருஷ்டத்தை எண்ணிப் பார்த்தாள்.
“‘ஃப்ளவர் ஆரோ’வில் தேடுவதற்கு பதில் ‘நெக்ஸ்ட்டோர்’ (பல வீட்டுக் குடியிருப்புகளின் இணையத்தளம்) தகவல்களில் புதிய நண்பர்களை சந்திக்க விருப்பம் என அறிவித்தேன்.”
நாற்பத்தியோரு வயதில் குழந்தைப் பொறுப்பு இல்லாத ஒரு அழகான பெண்ணை சந்திக்க…
“பதில்கள் வந்து குமிந்திருக்குமே.”
“பொழுதுபோக்குகள் வித்தியாசமாக இருந்தாலும் எல்லாருக்கும் தேவை தாற்காலிக உறவு. அடுத்த ஒரு மாதம் தொலைவழி வகுப்புகளில் மன அமைதி. செமிஸ்டர் முடிந்ததும் மறுபடி தனிமை. என் எதிர்பார்ப்புகளைக் கணிசமாகக் குறைத்து இன்னொரு தேடல். எழுத்துத்துறை. வயது ஐம்பது. முக்கியமாக டென்னிஸ் ஃபீனாம் எல்லென் பாங்க்ஸின் தந்தை. பெயர் நார்க்ராஃப்ட். ஆட்டத்திற்காக பெண் அப்பெயரை எடுத்திருக்கலாம். மார்கோ போலோ விடுதியில் சந்திப்பு.”
“அங்கே அளவான சாப்பாடு, நியாயமான விலை.”
“அவர்கள் உணவை வீணாக்குவதில்லை என்பதால் சம்மதித்தேன். இவனுக்கு விளையாட்டு அரங்கில் பிரபலமாக இருக்கும் எத்தனையோ பேர்களுடன் நெருங்கிய பழக்கம். அவர்களுடன் புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறான். மற்றபடி, எங்களுக்குப் பொதுவான எழுத்துக்கலையைப் பற்றிப் பேச அவனுக்கு ஆர்வம் இல்லை. எல்லென் பாங்க்ஸைப் பற்றிக் கேட்டேன்.”
“அவளை வளர்த்து டென்னிஸ் வீராங்கனையாக உருவாக்கியதில்…”
“இவனுக்கு எந்தப் பங்கும் கிடையாது. அவள் அம்மா கல்லூரி மட்டத்தில் டென்னிஸ் ஆடியவள். இவனுடன் அவள் பழகியபோது ஆட்டத்தில் இன்னும் உயர – இவனுடைய தொடர்புகளைப் பயன்படுத்தி – ஸ்பான்ஸர் வாங்கித்தருவான் என்கிற எதிர்பார்ப்பு.”
“அப்படி ஆசை காட்டி அவளை ஏமாற்றி இருக்கிறான்.”
“இவன் வார்த்தைகளில் அது சாமர்த்தியம். சாப்பாட்டை முடித்து காப்பி குடித்ததும், ‘வீட்டுக்குப் போக முக்கால் மணி. அதனால் இப்போதே’ என்று நான்கு பக்க நீல மாத்திரையை உள்ளங்கையில் வைத்தான்.”
“முதல் சந்திப்பிலேயே கடைசி வரைப் போக அவனுக்கு ஆசை.”
“மேலே வளராமல் பதின்பருவத்திலேயே நின்றுவிட்ட ஆண்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? ‘நடுவயதில் பெண்களுக்கு வரும் தொந்தரவு எனக்கு மிக அதிகம். அதற்காக இது’ என்று கைப்பையில் இருந்து ஆயுர்வேதக் குளிகை ஒன்றை விழுங்கினேன். அவனுக்கு ஏமாற்றம் எரிச்சல். ‘உன் வயதில் எட்டைக் குறைத்துச் சொன்னது மகா புளுகு’ என்று கத்திவிட்டு வேகமாக எழுந்து நடந்தான். அந்த அனுபவத்துக்குப் பின் எனக்கு ஆழ்ந்த விரக்தி. அதிலிருந்து மீள்வதற்காக உன் உதவியை நாடினேன்.”
மாயாவின் விரக்தியுடன் தன் பிரச்சினையையும் சேர்த்து அனிகா யோசித்தாள். எல்லன் பாங்க்ஸின் அம்மாவை மதிப்புடன் நடத்தாத நார்க்ராஃப்ட் அவர்கள் பெண்ணையும் பொறுப்புடன் வளர்க்கவில்லை.
“மகளின் எதிர்காலத்திற்காக ஒரு தாய் தன் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்கிற என் அறிவுரையை நான் திரும்ப வாங்கிக்கொள்கிறேன்.”
மாயாவுக்கும் அது நடைமுறையில் சரிப்பட்டு வரும் என்று தோன்றவில்லை.
வேறு என்ன வழி?
“பண்பாடுகளில் ஆண் பெண் வித்தியாசங்கள் பற்றி ஓரளவு தெரியும் என்பதால் என் அறிவுரை அந்தப் பன்னிரண்டு வயதுப் பெண்ணுக்கு” என்றாள் மாயா. “அவள் சொன்னது போல மன வளர்ச்சிக்கும், ஒழுக்கத்தைப் போதித்து உலகியல் பாடங்களில் வழிகாட்டவும் ஒருவர் அவசியம். ஆனால், அது ஒரு ஆணாக இருக்க வேண்டும் என்று என்ன கட்டாயம்?”
” அப்படியென்றால், இன்னொரு தாய்?”
“இல்லை. தந்தைக்கான குணங்களுடன் ஒரு பெண்,”
அந்த சாத்தியத்தின் பரிமாணங்களை ஆழ்ந்து யோசித்த இருவரும் சிகிச்சையத்தை ஒட்டி ஒரு ஊர்தி வந்து நின்றதையும், அதில் இருந்து நித்யா இறங்கியதையும் கவனிக்கவில்லை.
“பை ஹேஸல்! தாங்க்ஸ் மிஸ் டெய்ஸி!” என்று கத்திவிட்டு தானே முன்கதவைத் தள்ளி உள்ளே நுழைந்த நித்யா அம்மாவையும் மற்றவளையும் ஆச்சரியத்துடன் மாறிமாறிப் பார்த்தாள்.