
தூது
ஆழ்துளைக் கிணற்றில்
சிக்கிக்கொண்ட குழந்தையை
மீட்க மெனக்கிடுவதைப்போல
ஆழ் மனதில் பதிந்து கிடக்கும்
உன் குரலை மீட்டெடுக்கத்
திண்டாடுகிறேன்.
அது அரூபமாய் சிணுங்குகிறது
என் கையில் சிக்காமல்.
உன் குரலைத் தூக்கி
என் காது மடலிடம்
ஒப்படைத்தால்தான் நிம்மதி.
ஒரேயொரு முறை
சகியே சுகமாவென
உன் குரல் பறவை வழியாக
தூது அனுப்பேன்!
அவ்வளவுதான்
யானை பலம்கொண்ட கனவினைச்
சுமந்து பறக்கும் வண்ணத்துப்பூச்சி நான்.
அவ்வப்போது இந்த செடிகளின் மலர்களில்
தானாகவே வந்தமர்வேன்.
பயணத்தின் கசப்பு கடுமையாகும்போது
இத்தினியூண்டு தேனை மட்டும்
அருந்தி ஆசுவாசம் கொள்வேன்.
என் சிறகுகளை கத்தரிப்பதற்கு மாறாக
புகைப்படமாகவோ
குறும்படமாகவோ
கவிதையாகவோ
ஓவியமாகவோ
உயிர் கொடுத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் என் கனவின் பாரம்
சிறுகச் சிறுகக் குறைந்துவிடும்.
பிரத்யேகமானது
பேச நீயற்றிருக்கும்போது
எட்டிப் பார்க்கிறது மழைத்துளி.
சொற்களற்று சோம்பிக் கிடக்கிறேன்
சாளரத்தின் அருகே நான்.
என் மெளனத்தின் மொழிதல்களுக்கு
சடசடவென ‘ம்’ களைப் பொழிகிறது மழை.
ஆயிரம் மழைத்துளிகளில்
ஒரேயொரு பிரத்யேகத் துளியை
உணர்வது போன்றது
அந்தப் பிரத்யேக ‘ம்’.
காலம் கடத்தாத ‘ம்’
கால நேரமறிந்த ‘ம்’
காலாவதியாகாத ‘ம்’
காதலில் நீந்தும் ‘ம்’
பேச நீயற்றிருக்கும்போது
பேராவலோடு
‘ம்’ கொட்டும் மழையில்
பிரத்யேகமான
அந்த ஒரேயொரு துளியைத் தேடித்தான்
குடைப் பிடித்துக்கொண்டு அலைகின்றது
இந்தச் சின்னஞ்சிறு மனது!