தெய்வநல்லூர் கதைகள்- 3

This entry is part 3 of 10 in the series தெய்வநல்லூர் கதைகள்

சுனா கானா என்றழைக்கப்படும் சு கணேசன் எங்கள் நண்பர் குழுவிலிருந்து பிரிந்து போனதும் இரண்டு, மூன்று வாரங்கள் எங்கள் நண்பர்கள் சந்திப்பில் அவர் குறித்தும், அதை விட முக்கியமாக அவர் வாங்கித்தந்த தின்பண்டங்களைக் குறித்துமே உரையாடல்கள் அமைந்திருந்தன. சுனா கானா இல்லாத வெறும் சோகம் தின்பண்டங்களும் இல்லாததால் காவிய சோகமாக பரிணமித்திருந்தது. அவ்வகையில் ஒரே முறை மட்டும் மு மாரியப்பன் அவர் அப்பா பணிபுரியும் மளிகைக் கடையிலிருந்து டவுசர் பையில் எடுத்து வந்த பொட்டுக்கடலை மட்டுமே சந்திப்பின் சிற்றுண்டியாக அமைந்திருந்தது. அதை பங்கு பிரிக்கையில் மு மாரியப்பன் வெறித்த பார்வையுடன் “சுனா கானா இருந்தவரை அவன் வாங்கிட்டு வந்தாலும் அவனுக்கும் பங்கு கொடுத்துட்டுதான் தின்னுருக்கோம். இப்ப அவன் இல்லன்னாலும் அவனுக்கும் நாம பங்கு வைக்கணும் “ என்றார். இதைச் சொல்கையில் 3 செருமல்கள், ஒரு தேம்பல், குரலில் தழுதழுப்பு ஆகியவற்றை உங்கள் பிரியம் போல் சேர்த்து யோசித்துக் கொள்க. 

நான் கண்ணீர் விடவா, வேண்டாமா என்று யோசித்தேன். பின்னர் பொட்டுக்கடலையை எண்ணி என் மனத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டேன். எல்லோருக்கும் பங்கு பிரித்த மு மாரியப்பன் சுனா கானா வின் பங்கில் சற்று அதிகமாகவே சேர்த்தபோது சுனா கானா மீது நான் கொண்ட நட்பை எண்ணி வெட்கினேன். அவரவர் பங்கிலிருந்து ஒரு பொட்டுக்கடலையை மட்டும் சாமிக்குக் கொடுத்து விட்டு தின்றோம். தின்று முடித்ததும்தான் அந்த அறக்குழப்பம் ஏற்பட்டது. ஐயன்மீர்! இப்போது கேட்டாலும் உங்களாலும் விடை பகர இயலா இருத்தலியலின் ஆதாரக் கேள்வியின் சாரத்தை நாங்கள் அன்றே உணர்ந்தவர்கள். “சுனா கானா பங்கினை என்ன செய்வது?”

விவாதங்கள், பிரதிவாதங்கள், வேதாந்த மேற்கோள்கள், தனி வாழ்க்கை தனியன்கள், யாக்கை நிலையாமை போன்ற உயர் தத்துவ சிந்தனை முறை அறிவுரைகள், தலைவர்களின் பொன்மொழிகள், திருக்குறள் (பகுத்துண்டு பல்லாயிரத்தாண்டு ஓம்புதல் என்று பிரபந்தக்குறள் சொன்ன கிடா கருப்பையா குரல் இன்னும் நினைவில் உள்ளது) எல்லாம் களத்தில் மோதின.  ஆனால் களம் வெற்றி தோல்வியின்றி துலாமுள் மையமாய் நின்றது. 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனைகள் சொல்லி அதை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் வரை செல்லத் தயாராக இருந்தனர். முடிவே எட்டப்படாத இந்த வழக்கை மு மாரியப்பன் அவர்கள் முப்பது வினாடி யோசனையில் முடித்து வைத்தார். –“ஏ, இது சுனா கானா பங்குன்னாலும் அவன் இல்லாததுனால வேற யாருக்காச்சும் தான் கொடுக்கணும், எல்லாருக்கும் கொடுத்தா அதுக்கு சுனா கானா குன்னு பங்கு வச்சிருக்கவே வேண்டாம்ல…. இத ரெண்டு பங்கா பேர்வாதியா பிரிப்போம். ஒண்ணு சுனா கானா க்கு இந்தப் பங்கத் தரணும் சொன்னவனுக்கு, இன்னொண்ணு  இந்த பண்டத்த கொண்டு வந்தவனுக்கு “

மு மாரியப்பன் சொல்லிமுடிக்கையில் அவரது அறிவுத்திறனை, நடுநிலை நெறியை, நுண்மான் நுழைபுலத்தை நான் வியந்து நின்றிருக்கையில் என்னை புல்லரிப்பிலிருந்தும், மகத்தான மனிதர்களுள்ள உலகில் என்னைப் பிறப்பித்த இறைவனை எண்ணி இறும்பூது எய்திய மோன நிலையிலிருந்தும் உலுக்கி எடுத்து நடைமுறை உலகிற்கு கொண்டுவந்த செயல் அரங்கேறியது. இரண்டு பங்குகளையும் மு மாரியப்பனே எடுத்துக் கொண்டபோது எங்கள் குழு அதிர்ந்தது. அவர் கூறிய தீர்ப்பினை நாங்கள் உள்வாங்கி செரிப்பதற்குள் அவர் பொட்டுக்கடலைகளை செரிமானத்திற்கு அனுப்பியிருந்தார். யாருக்கும் இச்செயல் பிடிக்கவில்லை எனினும் மு மா அவர்களின் தீர்ப்பிற்கு மேல்முறையீடு செய்யும் வாதத்திறமை இல்லாததால் கட்டுண்டோம், பொறுத்திருப்போம் என புரட்சி மனதை அடக்கி வைத்திருந்தோம்.  ஆனால்  இந்த சம்பவத்திலிருந்துதான் மு மாரியப்பனின்  வாழ்நாள் எதிரியாக மாறப்போகும் “டொம்ப்ளி” செல்வத்தின் வஞ்சத்திற்கு விதை விழுந்தது என்பது வரலாறுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. எங்களுக்குத் தெரிய மேலும் இருபது ஆண்டுகள் ஆயின.

சுனா கானா இடையில் ஒருமுறை மட்டும் பொங்கலை  ஒட்டி ஊருக்கு வந்தார். சுனா கானாவில் சுனா வாக மட்டுமே அவர் வந்திருந்தார். விரல்களுக்கு இடையே கைகளிலும், கால்களிலும் பச்சரிசிச் சோற்றுக் கஞ்சியில் ஆடைகட்டி விரிசல் விட்டது போல் கீறல் புண்கள் வெள்ளையாக இருந்தன. உள்ளே சிவப்பு நிறம் வைரத்தில் ஓட்டமெனத் தெரிந்தது. மெலிந்த உருவத்தில் குரல் சற்று உடைந்து கனத்திருந்தது. அவர் உணவுவிடுதியில் செய்த பக்கோடா பொட்டலம் ஒன்றை எங்களுக்காக கொண்டு வந்திருந்தது அவர் எங்களை மறக்கவில்லை என்பதற்கு சாட்சி.-

“போங்கல அந்தால, ஹோட்டல்ல வேல நல்லா சாப்பிடலாம்னு போனா…. மொத நாள் மீந்ததை ஐஸ்பொட்டியில வச்சி மறுநாள் சூடாக்கித் தாறாங்க. அதுலயும் மீதியத்தான் எங்களுக்குத் தாறாங்க. ஈராங்கெம் உரிச்சா கண்ணு எரியும்லா, அதுக்குன்னிட்டு அண்டா தண்ணிக்குள்ள கொட்டி வச்சித்தான் உரிக்கணும். உருளக்கெழங்கு உரிக்கணும். ராத்திரி ஏனம் கழுவி வைக்கவே பன்னண்டு மணி ஆயிரும். பொறவு காலையில அஞ்சு மணிக்கெல்லாம் எழுப்பிருவாங்க. கடையத் தூத்து தெளிச்சிட்டு கொழாயில தண்ணி அடிச்சிட்டு வந்து சமையலுக்கு தொட்டிய ரொப்பனும். டீ கிளாசு, தட்டு கழுவணும். இதெல்லாத்தையும் கூட செஞ்சிரலாம்ல. ஆனா ராத்திரி ஒறங்கப் போனா இந்த சமையல் மாஸ்டரு காலை அமுக்கி விடு ன்னு சொல்லிட்டு…..”- சுனா கானா வுக்கும் குரல் உடையும் என்றும், மேலே பேச இயலாமல் தொண்டை அடைக்கும் என்றும், அவருக்கும் உதடு கோணும் என்றும் நாங்கள் அறிந்து அதிர்ந்த முதல்முறை அது. தொண்டைக்குள் எதுவோ சிக்கிக்கொண்டதைப் போல காறிக் காறி துப்பிக் கொண்டே இருந்தார் சுனா கானா. எங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. கிளம்பும்போது எங்களிடம் அவர் ஒரு சத்தியம் வாங்கிக் கொண்டார் – “ஏல, நீங்க யாரும் பள்ளிக்கூடத்துலருந்து நிக்கக் கூடாது. தொயந்து படிக்கணும். அப்படி ஏதாவது வேலைக்குப் போய்த்தான் ஆவணும்னா ஹோட்டல்ல மட்டும் நிக்கக்கூடாது. என்ன ? “ – நாங்கள் அனைவரும் செண்பக விநாயகர் சாட்சியாக அவருக்கு பூவரச இலைமேல் அடித்து சத்தியம் செய்து கொடுத்தோம். அந்த இலையை அவர் வாங்கி ஏகாந்தத்தில் வான்கூரை கொண்டு அமர்ந்திருக்கும் பிள்ளையார் காலடியில் இட்டு வணங்கி, எங்களையும் வணங்கச் செய்தார். எங்கள் சத்தியத்தைக் கண்காணிக்கும் பணி இவ்வாறாக செண்பக விநாயகரிடம் சென்று சேர்ந்தது. 

அந்த மறக்கவியலா சந்திப்பில் எங்களுக்கு ஆறுதலும், பொறாமையும், வியப்பும், கூச்சமும், கிளுகிளுப்பும்  ஒருங்கே ஏற்படும்படி சுனா கானா சொன்ன விஷயம் இது மட்டும்தான் – எங்கள் ஊருக்கு வருவதற்கு இருமாதங்கள் முன்னரே ராஜபாளையத்திற்கு புதிய திரைப்படங்கள் வந்துவிடுவதால் அவர் வாரம் ஒரு படம் சென்று பார்க்கிறார். அவ்வாறாகப் பார்த்த “பாண்டி நாட்டுத் தங்கம்” எனும் காவியத்தால் ஈர்க்கப்பட்டு இரண்டு முடிவுகள் அவர் எடுத்திருந்தார். ஒன்று இனி அவர் பெயர் சுனா கானா அல்ல. அவர் தன் பெயரை கார்த்திக் கணேசன் என்று மாற்றிக்கொண்டு விட்டார். இரண்டு நிரோசா போல பாடத் தெரிஞ்ச புள்ளைய மட்டுமே அவர் “காதல்” செய்து கல்யாணம் வரை போவார்”

வருடா வருடம் சுடலை மாடன் கொடையில் ஒற்றை வீச்சில் இரட்டைக் கிடா வெட்டும் மாடசாமித் தேவரின் மகனான கிடா கருப்பையா இந்த முடிவினை மிக ஆரவாரமாக வரவேற்றதோடு தானும் சுனா கானா எனும் கார்த்திக் கணேசனின் இரண்டாம் முடிவினைக் கடைப்பிடிக்கப் போவதாக துணைச் சபதம் செய்தார். 

கிடா கருப்பையாவை முந்திச் செல்லும் நோக்கில் “டும்ரீக்கோல்” குருசாமி உடனடியாக கார்த்திக் கணேசனுக்கு இரண்டாம் நிலை உறுதிப்பாட்டிற்கு உதவ முன்வந்தார் – “கார்த்திக்கு, அய்யர்குடிலருந்து படிக்கில்லா வித்யா, அந்தப்புள்ள பாட்டுல்லாம் பாடுமே, அதை வேணா நீ பாக்கியா?” என்று வித்யாவின் தோப்பனார் நிலையிலிருந்து ஆதுரத்துடன் ஆலோசனையை முன்வைத்தார்.

மிகுந்த நுட்பத்துடன் பரிசீலனை செய்த கார்த்திக்கு கணேசன் அந்த ஆலோசனை முன்வைப்பை மறுத்தார் – “ஏல டும்ரீக்கோலு, அந்தப் புள்ளயப் பாக்கலாம்தான், ஆனா அது சங்கீதம்லா பாடும். நமக்கு பாட்டுப் படிக்க புள்ளல்லா வேணும். அதனால அந்தப்புள்ள வேண்டாம் “. 

ஒரு கலப்பு மணப் புரட்சி மூலம் இந்திய சமூகமே புரட்டிப் போடப்பட்டிருக்கும் அரிய வாய்ப்பு ஒன்று பாழாய் போன கர்நாடக சங்கீதத்தால் முளையிலேயே நசுக்கப்பட்டு விட்டது.  

கிட்டத்தட்ட ஒரு முழுஆண்டுத் தேர்வும், அரையாண்டுத் தேர்வும் முடிந்த பின்னர் ஒரு திங்கட்கிழமை காலையில் மு மாரியப்பனால் நாங்கள் நம்பவே முடியாத அந்தத் தகவல் வந்து சேர்ந்தது. பள்ளி இடைவேளையின்போது தான் அந்த ரகசியத்தகவலைத் தான் சொல்வேன் என்று மு மாரியப்பன் அடம் பிடித்தார். அதன் காரணமென்ன என்பதை தெள்ளிதின் உணர்ந்தவராக சிவாஜி விளங்கினார். – அவர் அன்று வாங்கும் சேமியா ஐஸில் பேர்வாதி மு மாரியப்பனுக்குத் தருவதாகச் சொன்னதும் ஒப்புக்கொண்ட மு மாரியப்பன் இடைவேளையில் சேமியா ஐஸைக் கடிக்கும் வரையில் வேறெதற்கும் வாயைத் திறக்கவில்லை.

கடிக்க வேண்டிய இடம்வரை விரலை வைத்து தானே கொடுப்பதாக சிவாஜி சொல்லியதை மறுதலித்து, சிவாஜி குச்சியை மட்டும் பிடித்துக் கொள்ளும் சலுகையை ஏற்றுக்கொண்டு, முழு வாயையும் குடல் விளக்கம் செய்யும்  தாமோதரன் எனத் திறந்து முழு ஐஸையும் உள்ளே நுழைத்து சிவாஜியின் பின்ன நொடிப் பொழுதின் விரைவில் பின்னிழுக்கப்பட்டதால் முக்கால்வாசி ஐஸைக் கடித்ததும் அவருக்கு வாய் கூசி எங்களுக்கு வயிறு எரிய நில்லா நின்ற மூன்று நிமிடங்களுக்குப் பிறகு மு மாரியப்பன் சொன்னார் – கார்த்திக் கணேசன் தம் உணவு விடுதிப் பணியினைத் துறந்து தம் வீடு திரும்பி விட்டார். 

நான்கு நெல்லிக்காய்களும், இரண்டு தவுனும் பேசி முடிக்கப்பட கூடுதல் விவரங்கள் கிட்டின – பணியில் இருந்த நாட்களில் அடிக்கடி கார்த்திக் கணேசனுக்கு காய்ச்சல் வந்திருக்கிறது. கை கால்களில் உள்ள புண்களால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அசூயைப்பட்டிருக்கிறார்கள். மிக உச்சமாக உறங்கிக்கொண்டிருந்த சரக்கு மாஸ்டரின் இரு கால்களுக்கும் நடுவே பாய்லர் அடுப்பிலிருந்து அள்ளிய தணலைக் கொட்டியது. ( அன்னைக்குன்னு பாத்து அவம் உள்ள டவுசர் போட்ருந்தாம்ல, ங்கொம்மாள, சரியா பாக்காம விட்டுட்டேன். கொஞ்ச சேதாரத்தோட தப்பிச்சிட்டான் , ஆனா மூணுமாசம் புண்ணு ஆறுத வரைக்கும் டவுசரே போட முடியாது – கார்த்திக் கணேசன் தன்னிலை விளக்கப் பேச்சு : circa 1989 ).

அதற்குப் பின் நாங்கள் சந்தித்த கார்த்திக் கணேசன் சற்று வித்தியாசமானவராக இருந்தார். அதுவரை டவுசரோடு திரிந்து கொண்டிருந்தவர் அம்முறையிலிருந்து சாரம் கட்ட ஆரம்பித்திருந்தார். மடக்கி சுருட்டியது வயிற்றுப்பகுதியில் புகையிலைத்தடை வைத்திருக்கும் கிழவர்களைப் போல இருந்தாலும் தான் இனி சாரம்தான் கட்டப்போவதாக எங்கள் குழு சந்திப்பில் தெரிவித்தார். நாங்கள் வியப்பும், அதிர்ச்சியும் அடையும் வண்ணம் அவர் பீடி பிடிக்க ஆரம்பித்திருந்தார். மு மாரியப்பன் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் இத்தகவலை எங்களிடம் சொன்னபோது நாங்கள் அதிர்ச்சியானோம். நான் அடுத்த சந்திப்பில் அதைப்பற்றி கேட்டபோது ( நீ கெட்ட பையனாயிட்டயா சுனா கானா ? அப்பறம் நாங்கல்லாம் எப்படி உன்கூட சேருவோம்?) சுனா கானா சற்று நேரம் அமைதியாக இருந்தார். பிறகு தான் பெரிய பையனாகி விட்டதாகவும் அதை உலகுக்கு நிரூபிக்க இதை விட வேறு வழி ஏதும் தனக்குப் புலப்படவில்லை என்றும் கூறினார். கூடவே நாங்கள் இதைப் பழகக் கூடாது என்றும் வலியுறுத்தினார். 

காலை, மாலை ஆகிய இருநேரமும் கந்த சஷ்டி கவசம் சொல்வதற்காக அவர் தந்தை ராமையாப் பிள்ளை அவர்களால் வரலாற்று ஆசிரியர் கணபதி அவர்களிடம் கீழப்பஜார் பழக்கடை சந்திப்பில் புகழப்பட்டு அதனால் வகுப்பில் ஒருமுறை கணபதி சாரால் மீள ஒரு முறை புகழப்பட்டு, வகுப்பில் அதையே சொல்ல வைக்கப்பட்டு அவரைப் பார்த்துத் திருந்துமாறு எங்களுக்கு அறிவுரைக்கப்பட்ட பீடு சால் பெருமிதங்கள் பல கொண்ட “தெண்டில் மண்டை” செந்தில் கார்த்திக் கணேசனின் பீடி விவகாரத்தில் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார். (நான் தெனோம் ரெண்டு மட்டமும் தீன்நீறு வைக்கேம்லா, கூடவே அலங்காரி அம்மங்கோயில்  குங்குமமும் வைக்கேன். பீடி வாசன பட்டா அந்தப் பவரு கொரஞ்சிரும்லா – தெண்டில் மண்டை செந்தில் சுய ஆய்வு விளக்கம்).

சிவாஜி தலைமையில் ஒரு அணி கார்த்திக் கணேசனுக்கு ஆதரவாகவும், தெண்டில் மண்ட தலைமையில் எதிர்ப்பாக  இன்னொரு அணியும் கோஷ்டி பிரிந்தன. வழமை போல் நான் நடுநிலை வகித்தேன். கிட்டத்தட்ட எண்ணூறு நாட்களுக்கும் மேலாக எவ்வித கோஷ்டி மோதலும் இல்லாமல் சிறு சிறு மனக்கசப்புகளையும் மறந்தும், மன்னித்தும் இருந்த இந்த நட்பு வட்டத்தில் இப்படி ஒரு விரிசல் வந்தது குறித்து நீங்கள் மனம் கலங்குவதில் பொருளில்லாமல் இல்லை. ஆனால் அதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. 

ஐந்தாம் வகுப்பு முடிந்ததும் நாங்கள் ஆறாம் வகுப்புக்கு நேரு நடுநிலைப்பள்ளிக்கு மாறினோம். துவக்கப் பள்ளியில் படித்ததில் எங்களுடன் இருந்தவர்கள் மூன்று பேர்தான். சிலர் நேரடியாக மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்புக்குப் போய்விட்டனர். ஆறாம் வகுப்பு போனதும் நாங்கள் எங்கள் நட்பு வட்டத்தை விரிவாக்கும் முடிவினை ஒத்த மனதுடன் ஒருமிக்க எடுத்து புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொண்டோம். அவர்களை இணைக்கையிலேயே நாங்கள் எங்கள் அனுபவ மூப்பினை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்த மாட்டோம் என்றும் இணைப்பு உறுதிமொழியாகக் கொடுத்திருந்தோம். சுனா கானா வாக இருக்கையில் கணேசனைத் தெரியாதோர் , கார்த்திக் கணேசனாக மட்டுமே அவரை அறிந்தோர் இப்போது குழுவில் அதிகம். ஆகவேதான் இந்தப் பிளவு.

தெண்டில் மண்டையின் அப்பா ராமையாப் பிள்ளை முக்கண் உடையவர். ஆனால் நடைமுறையில் அதில் ஒன்றரைக் கண்ணையே பயன்படுத்துவார். ஊரிலிருந்த இன்னொரு துவக்கப்பள்ளியில் அவர் ஆசிரியர். ஆனால் அவர் தன்னை சைவத்தமிழ் அறிஞர் என்றே பகர்வார்..( தெண்டிலு, உங்கப்பாக்கு ஏம்ல  ஒரு கண்ணு அரைக்கண்ணா இருக்கு? தெரியல, ஆனா எப்பவுமே சிவஞான போதத்துலையே இருந்தா அப்டி ஆயிரும்னு ஓதுவார் தாத்தா சொன்னார்). 

பாண்டியர் கால உள்ளூர் உமையொருபாகன் கோவிலில் ஓதுவார் பாடுகையில் ராமையா பிள்ளை அவர் உச்சரிப்பில் ஐகாரக் குறுக்கம் செவ்வி அமையாது சீறியது என்றும், மகரக் குறுக்கம் மாண்பை மீறி மிரட்டியது என்றும் செயல் அலுவலரிடம் புகார் செய்தார். அதைக் கூட மன்னிக்கத் தயாராக இருந்தார் ஓதுவார் கோமதிநாதப் பிள்ளைவாள். ஆனால்  எவ்வாறு பாட வேண்டும் எனச் சொல்லிக்காட்டுவதாகச் சொல்லி ராமையாப் பிள்ளை குரலெடுத்து “வெந்த வெண் நீறணிந்து விரிநூல் திகழ் மார்பின் நல்ல பந்தனவும்” என்பது வரை ஒரே மூச்சில் இழுத்து விட்டார்.  அடுத்த பாட்டைப் பாடாமலாவது இருந்திருக்கலாம். ஆனால் “அலைமலி தன்பு  னலோட  டரவஞ்” என்று ஆரம்பித்த வரை கூட சரி, சலேரென தனது உச்சரிப்பின் பாங்கை பண்ணுக்கும் ஆங்கே பொசிய விட்டது சிக்கலாகி விட்டது. “ டரவஞ் “ல் நிரவல் எடுக்கும் முடிவினை அவர் எடுத்தது வினையாகி விட்டது. இரண்டாவது டரவஞ் கோவிலின் விதானங்களில் வெவ்வேறு விதமாய் பிரிக்கப்பட்டு  தூண்களால் சிதறுண்டு கற்சுவர்களால் மீண்டும் ஒன்றாகத் திரட்டி உருட்டப்பட்டு கோவிலுக்குள் பாய  உள்பிரகாராம் சுற்றிக் கொண்டிருந்த அக்ரகாரத்து மீனா மாமி பதறி ஓடிவந்து “நெறையா இருக்கற லக்ஷ்மிக்கு வலி எடுத்துடுத்து. கோவில் மாடாச்சேன்னு அசட்டையா இருந்துடாதேள். வேணும்னா சிவகிரிலருந்தோ , கடையநல்லூர்லருந்தோ மாட்டு டாக்டரை வரச் சொல்லுங்கோ. செலவை நான் ஏத்துக்கறேன் “ என்றார்.

விவகாரம் முடிந்து ராமையாப் பிள்ளை இனி நாதோபாசனையை தேரடிக்குத் தெற்கேதான் வைத்துக்கொள்ள வேண்டுமென செயல் அலுவரால் சொல்லப்பட்டு வெளியே வந்த போது மீனா மாமியிடம் ஓதுவார் சொல்லிக் கொண்டிருந்தார் – “நல்லவேளை மாமி, வலுவில வந்து கேட்டும் இவனுக்கு என் பொண்ணைக் கொடுக்கலை. இவன் அம்மாதான் நமக்குச் சொந்தம். இவன் அப்பன் தவசிப் பிள்ளை குடும்பம். நல்லவேளை, ஈசனருள் இவனுக்கு என் பொண்ணு வாக்கப்படல “

தெண்டில் எதிர்ப்பு தெரிவித்தது கருவின் குற்றமேயன்றி கதாபாத்திரத்தின் குற்றமன்று என்பதை ஈண்டு நிறுவவே அவர் தந்தையார் வரலாற்றில் ஒரு பகுதியை நாம் காணுமாறு நேர்ந்தது. மடைமாற்றதை நீவிர் பொறுத்தருள்க….. தெண்டில் மண்டையார் மீது வேறோர் ஊழல் குற்றச்சாட்டும் உண்டு. 

கீழ பஜாரும், மேல பஜாரும் இணையும் இடத்தில் இரு தெருக்கள் இடவலமாய் பிரியும். நீங்கள் கீழபஜாரிலிருந்து மேற்கே போகும்போது இடக்கை பக்கமாகத் திரும்பும் தெருதான் கழுநீர் ஓடைத் தெரு. அந்த முக்கில் வசந்த் டெயிலர் கடை என்ற கடை இருக்கும். இக்கடை பற்றி இதை வைத்திருந்த தோழரண்ணன் மாரியப்பன் குறித்து பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்கப் போகிறோம். அந்தத் தெரு நேரே போய் சிவகிரி, ராஜபாளையம் செல்லும் சாலையில் முடியும் அல்லது அங்கிருந்து தொடங்கும். இந்தத் தெரு முடியும் மையச் சாலையின் மறுபுறம் செங்கழு நீர் பிள்ளையார் கோயில். 

(தொடரும்)

Series Navigation<< தெய்வநல்லூர் கதைகள் – 2தெய்வநல்லூர் கதைகள் -4 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.