தென்னேட்டி ஹேமலதா

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

லதா என்ற பெயரில் தெலுங்கு நாவல் இலக்கிய வரலாற்றில் மிகவும் புகழ் பெற்றவரான தென்னேட்டி ஹேமலதா நூறுக்கு மேலாக நாவல்கள் எழுதியுள்ளார். விஜயவாடாவில் நிபானபூடி விசாலாக்ஷி, நாராயண ராவு தம்பதிகளுக்கு 1935ல் பிறந்தார் லதா. இவருடைய முழுப் பெயர் ஜானகிராம கிருஷ்ணவேணி ஹேமலதா. ஐந்தாம் வகுப்போடு பள்ளிப் படிப்பு நின்று போனது. வீட்டில் இருந்தபடியே சமஸ்கிருதம், தெலுங்கு, ஆங்கில இலக்கியங்களைப் படித்தார். தெலுங்கு இலக்கியத்தில் புகழ்பெற்றவர் பலர் வீட்டுக்கு வந்து போகும் சூழல் இருந்ததால் தந்தையோடு அருகில் அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கழித்த காலம் அவரிடம் இலக்கிய ருசியை வளர்த்தது. எந்த குருவிடம் சங்கீதம் கற்றுக் கொண்டாரோ தெரியவில்லை. ஆனால் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இசையறிவு அவருக்கு இருந்தது. ஆகாசவாணியில் வேலை பார்த்த காலத்தில் மங்கலம்பல்லி பாலமுரளி கிருஷ்ணாவோடு ஏற்பட்ட நட்பு சங்கீத ஞானத்திற்கு  மேலும் உரமூட்டியது. பாலமுரளி கிருஷ்ணா இயற்றிய இசைக்கு பாடல்கள் கூட எழுதினார் லதா. 

ஒன்பதாம் வயதிலேயே அதாவது 1944 ல் தென்னேட்டி அச்சுதராவு என்பவரோடு திருமணம் நடந்தது. அப்போதிலிருந்து இவர் தென்னேட்டி ஹேமலதா என்று அழைக்கப்பட்டார். 18 வயதில் 1952ல் ரேடியோவில் பணிபுரியும் நிமித்தம் உத்தியோக வாழ்க்கையை ஆரம்பித்ததோடு ரேடியோவில் நடிகை, நாடக எழுத்தாளர் என்று பல துறைகளில் நுழைந்தார். (ஏபி ஆனந்த் இன்டர்வியூ யூ ட்யூப்).

சுமார் அதே நேரத்தில் நாவல்கள் கூட எழுதத் தொடங்கினார். 1982ல் ‘நிடுதவோலு’ மாலதிக்குக் கடிதம் எழுதிய போது லதா எழுதிய நாவல்களின் எண்ணிக்கை நூறு.  1997 ல் லதா காலமானார். அந்த பதினைந்து ஆண்டுகளில் லதா மேலும் சில நாவல்கள் எழுதி இருப்பார் என்று கூறுகிறார் எழுத்தாளரும் இலக்கிய விமரிசகருமான மாலதி. (Eminent scholars and other essays in Telugu literature 2012 / e- book edition 2011).

நூறுக்கும் அதிகமான நாவல்கள் எழுதிய எழுத்தாளராக இருந்தபோதிலும் லதாவின் நாவல்கள் அனைத்தும் இப்போது கிடைக்கவில்லை. முப்பத்தைந்து நாவல்களின் பெயர் தெரிகிறது. இருபது நாவல்கள் மட்டுமே கிடைக்கின்றன. நாவலாசிரியையாக லதாவின் இலக்கியக் கண்ணோட்டத்தை புரிந்து கொள்வதற்குக் கிடைத்த மூலச் சரக்கு இந்த நாவல்கள்.

ஒன்று

ஐம்பதாவது தசாப்தத்தில் லதாவின் முதல் நாவல்களான காலி படகலு- நீட்டி புடகலு, ரத்த பங்கம் என்ற இரண்டு நாவல்களைப் பற்றி அதிகாரப்பூர்வமான செய்தி கிடைக்கும் நூல்கள் இரண்டு.  ஒன்று Eminent scholars and other essays in Telugu.   இரண்டாவது Telugu women writers, 1950- 75 A critical study, 2021 e- book edition 2011). இரண்டையும் எழுதியவர் நிடுதவோலு மாலதி (Archives. Org), 

விஜயவாடாவை மையமாகக் கொண்டு விபசாரத் தொழிலில் ஈடுபட்ட பெண்களின் வலி நிறைந்த வாழ்க்கையைச் சித்திரித்த நாவல்கள் காலி படகலு- நீட்டி புடகலு, ரத்த பங்கம் என்ற இரண்டும். 1950 களின் முதல் பகுதியிலேயே விஜயவாடா நகரம் எவ்வாறு வளர்ச்சி பெற்றது?  அதில் ஒவ்வொரு தெருவின் மூலையும் விபசார விடுதிகளாக விளங்கி இஷ்டம் வந்தார்போல் பெண்களின் உடல்கள் எவ்வாறு விற்கப்பட்டன? என்பதை எல்லாம் கண்டறிந்தார் லதா. ஆர்வத்தோடும் இரக்கத்தோடும் அவர்களின் வாழ்க்கையைப்  பரிசீலித்து அதிகாரப்பூர்வமான சமாச்சாரங்களோடு லதா எழுதிய நாவல்கள் இவை.

காலி படகலு- நீட்டி புடகலு என்ற நாவல் 1953 ல் பிரசுரிக்கப்பட்டது. இந்த நாவல் இப்போது கிடைக்காவிட்டாலும் நிடுதவோலு மாலதி ஆங்கிலத்தில் செய்த மொழிபெயர்ப்பு (2002) thulika.net ல் கிடைக்கிறது. 

ராஜம்மா என்ற பெண்மணி சோடா விற்று கணவனோடு சேர்ந்து நடத்தும் விலைமாதர் விடுதியே கதைக்கு மையம். தாய் தந்தை இல்லாத ஒன்பது  அனாதைச் சிறுமிகளை அரவணைத்து சொந்த மகள்கள், தங்கையின் மகள்கள், மருமகள்கள் என்று கூறிக்கொண்டு அவர்களின் உடல்களை மூலதனமாக்கி  ராஜம்மாவும் அவளுடைய கணவனும் சேர்ந்து செய்த விபச்சார வியாபாரத்தில் பெண்களின் வாழ்க்கை எத்தனை ஹிம்சைக்கு ஆளாகியது? பத்து ஆண்டுகளில் வியாதிகளின் நிலையமாகி தெருப் பிச்சைக்காரர்களாக மாறிய அவர்கள் எவ்வாறு அழிந்து போனார்கள்? என்பதை நிரூபிப்பதே இந்த நாவல்களின் மூலக்கரு.   

அவர்களில் சீதாவையும் அனுசுயாவையும் ராஜம்மாவின் வீட்டிலிருந்து வெளியேற்றி மதராசுக்கு பயணம் செய்யவைத்து கதை நடக்கும் இடத்தை மதராசுக்கு மாற்றி சினிமாத் துறையை பின்னணியாக்கி கதையை நடத்துகிறார் நாவலாசிரியை. சாவித்திரி, சுமித்ரா, சீதா, அனுசுயா, ஜென்னி, அன்னபூர்ணா என்று பெயர்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர்கள் விலைமாதர்களாக புதிய அவதாரம் எடுத்ததற்கு குடும்பத்திலேயே இருக்கும்  காரணங்களை அடையாளம் கண்டு அவற்றை இந்த நாவல்களில் வெளிப்படுத்துகிறார் லதா. நெருங்கிய உறவினர்களால் அறிந்தும் அறியாத பருவத்திலேயே பாலியல் வன்முறைக்கு ஆளாவது, வயது வித்தியாசம் பார்க்காமல் நடக்கும் திருமணங்கள், அதன் காரணமாக எந்நேரமும் கணவன்களால் சந்தேகத்திற்கும், அவமானத்திற்கும் ஆளாவது போன்ற பரிணாமங்களால் பெண்கள் குடும்பத்திற்கு வெளியில் தள்ளப்படுகிறார்கள். அதன் காரணமாக மேலும் வஞ்சனைக்கு ஆட்படும் சூழ்நிலை ஏற்பட்டு அவர்களின் இறுதி இலக்கு விபச்சார விடுதிகளாக மாறுகிறது என்பதை அவர்களின் வாழ்க்கைக் கதைகள் மூலம் காட்டுகிறார். புனிதத்தையும் பதிவிரதை தர்மத்தையும் விரும்பும் ஆண்களே விலைமாதுகளின் விடுதிகளை போஷிப்பவர்களாகவும் இருக்கும் முரண்பாட்டை குத்திக் காட்டுகிறார் லதா. 

பெண்களின் பசியும் தேவையும் தீருவதற்கு ஆண்களுடைய விகாரமான  பாலியல் பசியைத் தீர்ப்பதைத் தவிர வேறு வழியில்லாத மார்க்கமாகச் செய்த சமுதாயத்தின் அக்கிரமத்தை இந்த நாவலைப் படிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.  

விஜயவாடா, மதராஸ் என்று நகரம் எதுவாக இருந்தாலும் உலகம் முழுவதும் எந்த பகுதியானாலும் ஆண்களின் பார்வை ஒரே மாதிரிதான் உள்ளது என்று அந்த விலைமாதர்கள் எண்ணுவதற்கும் பேசுவதற்கும் ஆண்கள் பலரை நெருக்கமாகப்  பார்த்த அனுபவமே காரணம் என்று கூறலாம்.

கவிஞர்கள், கலைஞர்கள், உயரதிகாரிகள், வியாபார நிபுணர்கள் என்று யாரானாலும் மேலுக்குத் தென்படும் அவர்களுடைய கௌரவமான சமுதாய வாழ்க்கைக்கும் விலைமாதர்களோடு அவர்களுக்கிருக்கும் தொடர்புக்கும் இடையில் உள்ள ஆழத்தை லதா தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்.

சினிமாத் துறையில் வாய்ப்புக்காக மதராஸ் வரும் பெண்கள், சிறு சிறு வேடங்களில் நடிப்பவர்கள் என்று பலர் மொத்தமாக உடலை விற்றால் ஒழிய வாழ்க்கையில் நிலைபெற முடியாத சூழ்நிலையில் இருந்ததும் நாவலாசிரியை லதாவின் பார்வையிலிருந்து தப்பவில்லை. குற்றத்தைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டிய காவல்துறை அமைப்பு, விலைமாதர் அமைப்புக்கு முதுகெலும்பாக நிற்கிறது என்ற விஷயத்தையும், குற்றத்தில் பங்கு வகிக்கும் முறையையும் கூட இந்த நாவலில் பதிவு செய்கிறார். கடந்த எழுபது, எழுபத்திரண்டு ஆண்டுகளில் தேசத்தின் இந்தக் குற்ற இயல்பு இன்னுமும் தீவிரமாக வளர்ந்துள்ளதே தவிர சற்றும் குறையாமல் இருப்பது வருந்தத்தக்கது.   

பாலியல் தொழிலில் நசுங்கி, சலிப்பு ஏற்பட்டு வீதிகளில் தூக்கி எறியப்பட்ட பெண்களின் பாதுகாப்பு மற்றும் போஷணைக்கான பொறுப்புகளை ஏற்று அவர்களுக்கு கௌரவமான வாழ்க்கையைக் காட்ட வேண்டிய ஒரு ஆசிரமத்தை ‘பந்துலு’ என்பவர் நிர்வகிப்பது போலவும், பார்வதி அந்த ஆசிரம நிர்வாகத்திற்குத்  தேவையான பணம் ஈட்டுவதற்காக சினிமாவில் நடிப்பதற்கு மதராஸ் வந்து சேருவதையும் கதையம்சத்தில் ஒரு பகுதியாக சித்திரிகிறார் லதா. ஆனால் இப்படிப்பட்ட ஆசிரமங்களின் நிர்வாகம் அதிக காலம் தொடராது என்றும் ஒருவருக்கோ இருவருக்கோ சீர்திருத்த எண்ணங்கள் இருப்பதால் மட்டுமே  சமுதாயம் நல்லதாக மாறுவதென்பது சிரமம் என்ற அபிப்ராயத்தையும்  வெளிப்படுத்துகிறார். விலைமாதர்களுக்கு திருமணங்கள் செய்வித்து கௌரவமான வாழ்க்கை ஏற்படுத்துவது அத்தனை எளிது அல்ல என்பது அவருடைய அபிப்பிராயம். 

சீர்திருத்த பிரயோஜனங்களைப் பெற வேண்டும் என்று நினைக்கும் சுயநலமிக்க ஆஷாடபூதிகளைப் பற்றி கன்யாசுல்கம் என்ற நாடகத்தில் கிரீஸம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் குரஜாடா அப்பாராவு செய்த எச்சரிக்கையைத் தொடர்வது போல லதா இந்த நாவலில் ஒரு சீர்திருத்தத் திருமணத்தை செய்வித்து, அது அந்தப் பெண்ணுக்கு நித்ய ஹிம்சையாக மாறி மீண்டும் அவளை வீதிக்குத் தள்ளிய முறையை சித்திரிக்கிறார். இவை அனைத்தையும் குறித்து பார்வதிக்கு எழுத வேண்டும் என்று கூறுகிறாரே தவிர எழுதவில்லை. மாதவிதேவி என்ற எழுத்தாளரின் கதாபாத்திரத்தை நுழைத்து கதையின் ஓட்டத்தில் அவள் பார்வதியை சந்திக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி பார்வதியின்  விருப்பப்படி அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை நாவலாக எழுதியதாகவும் அந்த நாவலின் பெயர் காலி படகலு- நீட்டி புடகலு என்றும் கூறி இந்த நாவலை முடிக்கிறார் லதா.

மத்திய தர குடும்ப வாசகர்களுக்காக எழுதப்படும் நாவல் செயல்பாட்டை, கீழ் வகுப்பு மனிதர்களைப் பற்றி, இன்னும் கூற வேண்டுமென்றால் குடும்பத்திற்கு வெளியில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்ட விலைமகளிரின் தரப்பில் நின்று அவர்களைப் பற்றி, ஒரு மேல் மத்திய தரப் பெண் எழுதுவது  1950ம் தசாப்தத்தில் இலக்கிய உலகில் ஒரு பரபரப்பாக மாறியது. அதனால் அது ஒரு பெண் எழுத வேண்டிய நாவல்தானா என்ற விமர்சனத்திற்கு உள்ளாகியது.

இந்த நாவல் ‘குப்ரின்’ எழுதிய ‘எமா தி பிட்’ நாவலை நினைவுபடுத்துகிறது. லதா இந்த நாவலில் எழுத்தாளரின் பெயரையோ நாவலின் பெயரையோ குறிப்பிடாமல் விலைமகளிரின் வாழ்க்கையைச் சித்திரித்த ரஷ்ய நாவல் என்று குறிப்பிடுவது குப்ரின் படைப்பாகவே இருக்க வேண்டும்.

இதே போல் விபசார விடுதியை மையமாகக் கொண்டு அதற்கு காவல்துறையோடும் நீதித்துறையோடும் இருக்கும் தொடர்புகளை மிக விளக்கமாக கதையம்சத்தில் ஒரு பகுதியாக்கிய ‘ராவி சாஸ்திரி’ எழுதிய  ‘ரத்தாலு ராம்பாபு’ என்ற நாவல் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு வெளிவந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  

‘ரக்த பங்கம்’ முதல் பிரசுரம் கிடைக்கிறதே தவிர அதில் பிரசுரமான ஆண்டு  குறிப்பிடப்படவில்லை. பக்கங்களின் எண்ணிக்கை 1500 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாவலில் ‘தொடக்கம்’ என்ற தலைப்போடு எழுதிய முன்னுரையில் லதா, ஜூலை மாதம் காலை பத்து மணிக்கு மழை பெய்த போது போஸ்ட்மேன் வந்து தனக்கு ஒரு ரெஜிஸ்டர் பார்சல் கொடுத்துச் சென்றார் என்றும் அதில் ஒரு பெண்ணுடைய வாழ்க்கை அனுபவங்கள் கதையாக  எழுதப்பட்ட ஒரு காகிதக் கட்டும், இறந்து போன தன் தோழியின் விருப்பத்திற்கு ஏற்ப அவற்றை லதாவுக்கு அனுப்பிய மற்றொரு பெண் எழுதிய கடிதமும் இருந்ததாகவும் கூறுகிறார்.

அந்தக் கடிதத்தின்படி, இறந்துபோன பெண்ணும் கடிதம் எழுதிய பெண்ணும் தோழிகள் மட்டுமல்ல லதாவின் இலக்கிய வாசகிகள் கூட என்றும், காலி படகலு-நீட்டி புடகலு நாவலைப் படித்துவிட்டு பெண்கள் அனுபவிக்கும் வேதனைகளை ஒரு பெண்ணாக இருப்பதால் அவ்வாறு எழுத முடிந்தது என்று உணர்ந்த பண்பாடு மிக்கவர்கள் என்றும், லதாவின் போட்டோவுக்கு பிரேம் போட்டு மணம் மிக்க மலர்களால் மாலை போடும் அளவுக்கு போற்றும் மனப்பாங்கு அவர்களுக்கு இருந்ததாகவும் தெரிகிறது.

அதனால்தான் இறந்த பெண் தன் வாழ்க்கை அனுபவங்களைத் தன் தோழியின் மூலம் எழுதச் செய்து அவற்றை ஆதாரமாகக் கொண்டு லதா ஒரு நாவல் எழுத வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறார்.

எத்ததனை பேருடைய எலும்புக் கூடுகள்/ சாம்பல்கள் இந்த எமக் கிணற்றில் நிரம்பி இருக்கிறதோ, எத்தனை பேருடைய இரத்தத்தால் இந்த தேசம் சேறாகியதோ அதைப்பற்றி எழுதுவது தன் கடமை/ விதி என்று நம்பிய லதா அவ்வாறு தனக்கு போஸ்டில் வந்த பெண்ணின் வாழ்க்கை அனுபவங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதிய நாவல் ‘ரக்த பங்கம்’ (ரத்தச் சேறு) என்ற நாவல். 

“கடந்த காலமெல்லாம் ஈரமான ரத்ததால் அல்லது கண்ணீரால்” என்ற கவிஞர் ஸ்ரீஸ்ரீயின் ‘மகா பிரஸ்தானம்’ என்ற கவிதை நூலின் வரிகளின் தாக்கமும்  உற்சாகமும், எழுத்தாளராக தான் என்ன எழுத வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்வதில் லதாவுக்கு தூண்டுதல் அளித்தன என்று கூறலாம்.

இந்த ‘தொடக்கத்தில்’ லதா, அந்த கடிதத்தைப் படித்தபோது காலி படகலு- நீட்டிபுடுகலு நாவலை எழுதியபோது வாக்கிய திட்டுக்கள் எல்லாம் தீர்ந்து போனதாகத் தோன்றுகிறது என்று கூறுகிறார். அதாவது காலி படகலு- நீட்டிபுடுகலு எழுப்பிய புயல் அப்போது இன்னும் பச்சையாகவே இருந்ததால்   அந்த நாவலின் தொடர்ச்சியாக வந்த இந்த நாவல் 1950 ம் தசாப்தத்தின் இறுதியில் வந்திருக்கலாம். இந்த நாவலை அவர், “பவனத்திலிருந்து பவித்திரத்தைப் பிரசாதிக்கும் பிரபு ஸ்ரீ வெங்கடேஸ்வரனுக்கு கண்ணீருடன் சமர்ப்பணம்” அளித்துள்ளார்.

“தேசத்தின் வரலாற்றை மனித வரலாற்றிலிருந்துப் பிரித்து அதிலிருந்து ஹிந்து சமுதாயத்தைக் கிள்ளி எடுத்தால் பெண்களின் சுதந்திரமற்ற நிலை, பெண்களின் பொருளாதார மனச்சோர்வு, பெண்களின் பதிவிரதைத் தன்மை, பெண்களின் அழிவு என அனைத்தும் சேர்ந்து “ரக்த பங்கம்” என்பதன் கீழ் உருவாகி, புனிதத்தின் மீதும் சத்தியத்தின் மீதும் பவித்திரத்தின் மீதும் கறைகளை ஏற்படுத்துகின்றன. இந்தக்  கறைகளைப் பார்த்து எந்தச் சமுதாயமானாலும் வெட்கப்படத்தான் வேண்டும்.    ஆனால் ஹிந்து சமுதாயம் இதற்கு ‘ஒழுக்கத்தைப் பாதுகாத்தல்’ என்ற பெயரைச் சூட்டி, தன்னுடைய தர்மத்தைக் காப்பாற்றும் இயல்புக்குத் தானே கர்வப்படுகிறது”. இது விலைமாதாக மாறிய ஒரு பெண்ணின் வாழ்க்கை அனுபவ சாரத்தை வெளிப்படுத்தும் சொற்கள்.

காதல் புரியக் கூடிய உள்ளம், அனுபவிக்கக்கூடிய ஆரோக்கியமான உடல், யோசிக்கும் புத்தி உள்ள பெண் தன் கதையைத் தொடங்குவதற்கு முன் திரையை நீக்குவது போன்ற சொற்கள் இவை. நாவலில் அதற்குப் பின் உள்ள கதை முழுவதும் இந்த சொற்களின் விரிவாக்கமே.  

கிருஷ்ணா ஜில்லா ‘கௌதரம்’ என்ற கிராமத்தின் அருகில் உள்ள ‘சிக்கால’ என்ற  குக்கிராமத்தில் ஆரம்பமாகி குடித்தனம் செய்வதற்குச் சென்ற மூன்று மாதங்களுக்குள் கணவன் இறந்து, கணவனின் சகோதரன் அவள் மீது வன்முறை செய்தபோது தப்பித்துக் கொண்டு, சாகலாம் என்று குளத்தில் குதித்த போது காப்பாற்றி அழைத்துச் சென்ற இளைஞன் ராஜமகேந்திரவரத்தில் வைத்து  அவளுடைய ஆசைகளைத் தூண்டிவிட்டு அனுபவித்து, கருவுற்றாள் என்பதை அறிந்தவுடன் ஒரு அனாதை சரணாலயத்தில் சேர்த்து விட்டு கையை துடைத்துக் கொண்டு ஓடிவிட்டான். பிரசவமான அடுத்த நாளே குழந்தையை அவளிடமிருந்து பிரித்து வேறொரு சரணாலயத்திற்கு அனுப்பிய போது எதுவும் கூற முடியாமல் அங்கு பெண்களை விலைமாதர்களாக செய்கின்ற தீய வழியைச் சகித்துக் கொண்டு அங்கிருக்க முடியாமல் ரிஷிவாலி அருகில் ஒரு ஆன்மீக ஆசிரமத்தைச் சென்றடைந்து ஆன்மீகப் போர்வையில் அங்கு சுவாமிகளின் சிங்கார லீலைகள் பற்றி அறிந்து மனம் வெறுத்து அங்கிருந்து வேறொரு பெண்ணோடு சேர்ந்து ஓடிப் போய், ஹைதராபாத் வந்து விலைமாதுவாக வாழ்ந்து அனாதையாக மரணித்த பெண்ணின் கதை இது. அந்தப் பெண்ணின் பெயர் ராஜ்யம். 

இந்த நாவலின் தொடக்கத்திலேயே அவள் இறக்கும்போது அவளுடைய வயது நாற்பது  என்று கூறி இருபத்தைந்து வருடங்களுக்கு முன் அவள் கதை தொடங்கியது என்கிறார். 1955 க்கு பிறகு இந்த நாவல் வந்தது என்று கருதினால்  அங்கிருந்து இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். அதாவது  1930ல் ராஜ்யத்திற்கு பதினான்கு வயது இருக்கும்போது கதை ஆரம்பமாகிறது. திருமணத்தோடு அந்த கதை ஆரம்பம் ஆகிறது. திருமணத்தின்போது ராஜ்யத்திற்கு பதினான்கு  வயது என்று நாவலில் கூறப்பட்டுள்ளது. 

கணவனோடு சுகமாக சம்சாரம் செய்தது மூன்று மாதங்கள். அவனுடைய  மரணத்திற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் மாமியார் வீட்டில் தனிமை வாழ்க்கை. அதன் பிறகு ராஜமன்டிரியில் ராஜசேகரத்தோடு சேர்ந்து இருந்த காலம் நான்கைந்து மாதங்கள். மூன்று மாத கர்ப்பம். ஆறு மாதங்களுக்குப் பிறகு பிரசவம். அதாவது ஓராண்டு கடந்தது. அனாதை சரணாலயத்தில் வசித்த காலம் எட்டு மாதங்கள். சுவாமிகளின் ஆசிரமத்தில் சுமார் ஓராண்டிற்குப் பிறகு ஹைதராபாத். அதாவது மொத்தத்தில் கதை ஆரம்பித்த ஐந்து ஆண்டுகளில் 1937ல் அவள் ஹைதராபாத் வந்து சேர்ந்தாள் என்று கருதலாம். 

அங்கு விபச்சாரத் தொழில் செய்த வாழ்க்கையில், ‘நிறைய ஆண்டுகள் சாதாரணமாக எப்படியோ ஓடிவிட்டன’. அதையெல்லாம் விளக்கிக் கூறாவிட்டாலும் ஹைதராபாதில் காலரா பரவியது பற்றி கூறப்பட்டுள்ளது. 1940  லிருந்து 1948 வரை காலரா உபத்திரவம் ஹைதராபாதை நடுநடுங்க வைத்தது. அத்தகைய வருடங்கள் பல உள்ளன என்று வரலாறு கூறுகிறது. 

ராஜ்யம் ஹைதராபாதுக்கு வந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு நேர்ந்த விபத்தாக குறிப்பிட்டுள்ளதால் 1945 – 1948 ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் நேர்ந்த விபத்தாகயிருக்க வேண்டும். அதன் பிறகு கூட வாழ்ந்து நாற்பதாவது  வயதில் மரணமடைந்த ராஜ்யத்தின் கதை 1955 வரை தொடரும் வாய்ப்பு உள்ளது. அதிகமாக இருபத்தைந்து ஆண்டு காலத்தில் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் உடல்ரீதியான ஆசைகளுக்கும் பதிவிரதைத் தன்மைக்கும் இடையில் நடந்த தீவிரமான போராட்டம், அடக்குமுறை, எதிர்ப்பு போன்றவை இந்த நாவலில் சித்திரிக்கப்படுகின்றன. 

இந்த நாவலிலும் லதா, பெண்கள் விலைமகளிர் ஆவதற்கான காரணமாக   குடும்பத்தையே காண்கிறார், காட்டுகிறார். பதினைந்து வயதிலேயே கணவனை இழந்த பெண்ணை, அவளுடைய உடல் அனுபவத்திற்கு ஆசைப்படும் என்ற விஷயத்தையே மறந்து வெள்ளை புடவையும் ஒருவேளை சோறும் போட்டு சம்பளம் இல்லா வேலைக்காரியாக வாழ்வு முழுவதும் கழிக்க வேண்டும் என்று ஆணையிடும் குலம், குடும்பம், மறைவாக அவளை வேட்டையாடி அனுபவிப்பதற்குத் தயாராக இருக்கும் குடும்பத்தில் உள்ள ஆண்களின் வக்கிர புத்தி போன்றவை பெண்ணுக்கு ஆரோக்கியமான பாலியல் அனுபவம் கிடைக்காமல் தடுக்கின்றன. இவற்றின் மீது எதிர்ப்பு காட்டி வெளியில் வந்தால் களங்கமானவளாக நிந்தையைச் சுமந்து பரிதாபமான சூழ்நிலையில் வாழ்க்கையைக் கழிக்க வேண்டி வருகிறது. இந்த வாழ்வியல் உண்மையை கதையின் போக்கில் பாத்திரங்களின் சிந்தனை மூலமாகவும் அபிப்ராயங்களாகவும் விளக்கங்கள் மூலமும் நிரூபிகிறார் லதா.

பாலியல் இச்சைகளின் இயல்பான திருப்திக்கு திருமணம் மூலம்  ஏற்றுக் கொள்ளக் கூடிய அமைப்பை ஏற்படுத்திக் கொண்ட பின்பு கூட, அவற்றைத்  தடுக்கும் குடும்ப அமைப்பின் இயல்பை ராஜ்யத்தின் அனுபவங்களின் முகமாக விவாதத்திற்கு எடுத்து வருகிறார் லதா.

ராஜ்யத்திற்கு சுந்தரத்தோடு திருமணமானது. அவர்கள் தாம்பத்தியம் நடத்தத் தொடங்கியபோது அவனுக்கு பதினெட்டு வயது. அவளுக்கு 15 வயது. கணவனுக்கு மனைவியிடம் அன்பு. ஈர்ப்பு, மோகம் இருந்தது. அவன் மூலம் பெண்மை மலர்ந்த மனைவி அவள். ஆனால் கணவனோடு புதுமணப்பெண் பகலில் பேசக்கூடாது. மாமியார், நாத்தனார், ஓரகத்திகளின் கண்காணிப்பின் இடையில் புதுமண தம்பதிகள் பகலில் சந்திப்பது சாத்தியமே இல்லை. இரவுகளில் சாப்பாடு முடிந்து  அனைவரும் தூங்கி விட்டார்கள் என்று தெரிந்து கொண்ட பிறகு புது மணப்பெண் அறைக்குள் செல்ல வேண்டிய சம்பிரதாய பழக்க வழக்கங்களின் இடையில் புது தம்பதிகளுக்கு மூச்சு முட்டியது. தடுக்கப்பட்டதை ரகசியமாகப் பெறுவதற்கு வழிகளைத் தேடச் செய்தது. ராஜ்யம் குளத்திலிருந்து தண்ணீர் கொண்டு வரச்  சென்ற போது சந்திக்க ஏற்பாடு செய்கிறான் கணவன். அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் தாய் அவர்களைப் பார்த்து விட்டாள். தாயைப் பார்த்தவுடன் பரவசத்தோடு தன் உடல் மீது மனைவி தலை வைத்து படுத்திருந்ததைக் கூட  மறந்து எழுந்து நின்றான். “இது என்ன உலகமோ? மனைவியைக் கூட ரகசியமாக சந்திக்க வேண்தியிருக்கிறது” என்று சலித்துக் கொள்ளும் சுந்தரம், “வெட்கங்கெட்டவள்” என்று தன் தாய் மனைவியைத் திட்டிய போது அதில் தன் பங்கு பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல், மனைவியுடன் பேசி ஆறுதலளிக்காமல் மௌனமாக அங்கிருந்து சென்று விட்டான். குடும்பம் விளக்கும் பாலியல் ஒழுக்கத்தின் எதிரில் ஆண் கூட எத்தனை உதவியற்றவனாக நிற்கிறான் என்பது புரிகிறது.

இந்தப் பாலியல் ஒழுக்கம் இரட்டை விழுமியங்களோடு கூடியதாக இருப்பது மற்றுமொரு கொடூரம். “பட்டப்பகலில் அவ்வாறு தோட்டங்களில் சந்திப்பதற்கு வெட்கமாக இல்லையா உனக்கு?” என்று அவள் மகனைக் கேட்கவில்லை. “வெட்கமற்ற செயலைச் செய்த உன் தரித்திர முகத்தை உலகத்திற்கு எவ்வாறு காட்டுவாய்?” என்று கூறவில்லை. மருமகளை மட்டும் அதட்டுகிறாள். தவறு முழுவதையும் மருமகள் மீது சுமத்துகிறாள். மகன் எப்போதும்போல் வீட்டில் திரிந்தாலும் மருமகள் குற்றவாளியாக முகத்தை மறைத்துக் கொண்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதன் பின்பு ஒரு வாரத்தில் ஜுரம் வந்து மகன் மரணித்த போது மருமகள் செய்த வெட்கமற்ற செயலே அதற்குக் காரணம் என்று மாமியார் தீர்ப்பு கூறுவதை கவனிக்கலாம்.

குடும்பத்தின் பாலியல் ஒழுக்க நீதிச் சூத்திரங்களை கச்சிதமாக அனுசரித்து அமல்செய்யும் பொறுப்பு பெண்ணுடையதாகச் செய்யப்படுகையில் குடும்ப கௌரவத்திற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்போடு நடந்து கொள்ளாமல் போனால் தண்டனை அனுபவிக்க வேண்டியதும் பெண்ணே ஆகிறாள். அது இன்றைக்கும் கௌரவக் கொலைகளின் வடிவில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

ஹிந்து பால்ய விதவையாக ராஜ்யம் என்ற பெண் ஆகாரத்திலும்  விவகாரத்திலும் எதிர்கொண்ட பாகுபாடும், கணவனின் நினைவுகளோடு கூட உடல் அனுபவங்களும் நினைவு வந்து அவள் பட்ட அந்தரங்க துன்பமும் அளவற்றது. தனிமையைச் சகிக்க முடியாமல், இளமையின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், கணவனின் ஞாபகத்திலிருந்து மீள முடியாமல், நிரந்தரம் அவமதிப்புகளை சகிக்க இயலாமல் உள்ளுக்குள்ளே அவள் பட்ட வேதனைக்கு எல்லையே இல்லை. குளிப்பதற்காக குளத்திற்குச் சென்றால் துரத்தும் கிராம கர்ணத்தின் பெரிய மகன் பார்வை. அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு வீட்டில் ஒளிந்து கொண்டால் கணவனின் சகோதரனுடைய ரகசிய வேட்டை. இவற்றுக்கு பலியாகக் கூடாது என்று நினைத்ததால் தெருவுக்கு வர வேண்டி வந்தது. 

மொத்தத்தில் பதிவிரதை தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு மனதாலும் உடலாலும் அவள் செய்த போராட்டத்தைக் காட்டுவதில் லதாவின் பார்வைக் கோணம் வெளிப்படுகிறது. உடல் நீர்க்குமிழி போன்றது. சரீர இச்சைகள் துச்சமானவை. ஸ்திரீக்கு சீலம் மிகவும் முக்கியம். பதிவிரதை தர்மமே ஆதரிசமானது. இவ்விதமான கருத்துக்களால் தயார் செய்யப்பட்ட புத்திக்கு இயற்கையோடு சகஜமான சரீர சஞ்சலங்களுக்கு இடையில் நங்கூரம்  கிடைக்காமல் எத்தனை பெண்கள் தம்மைத்தாமே துன்புறுத்திக் கொள்கிறார்கள்? எத்தனை தூரம் நசுங்கிப் போகிறார்கள்? குமைந்து, சோர்ந்து போகிறார்கள்? என்பதை ராஜ்யத்தின் நிலைமையை சித்திரிப்பதன் மூலம் லதாவால் காட்ட முடிகிறது.

இந்த அழுத்தங்களுக்கு இடையில் ராஜசேகரத்தோடு ஏற்பட்ட தொடர்பு உடலுக்கு சுகத்தை அளித்தாலும், தான் கெட்டுப்போனவள் என்ற எண்ணத்தின் பாரம் அவள் மனதை துன்புறுத்திக் கொண்டே இருந்தது. அவள் கருத்தரித்தாள் என்று தெரிந்த பின் ராஜசேகரம் அனாதைப் பெண்களின் சரணாலயத்தில் அவளைச் சேர்த்ததில் இருந்து, ரிஷிவாலி ஆசிரமம், அதன் பின் ஹைதராபாத் வந்து சேரும் வரை  வீழ்ச்சியடையாமல், மோசமான பாதையில் சிக்காமல் இருப்பதற்கு ஒவ்வொரு கணமும் உடலளவிலும் மனத்தளவிலும் உள்ளும் புறமும் அவள் செய்த யுத்தம் அநேகம்.  

இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு, எதிர்ப்புகளுக்குப் பிறகு, உதவியற்று   வேறு வழியில்லாத சூழலில் ராஜ்யம் விபச்சாரத் தொழிலில் இறங்கியதாகக்  காட்டுவதன் மூலம் பெண்கள் விலைமகளிராக பிறக்க மாட்டார்கள். தயார் செய்யப்படுகிறார்கள் என்று கூற நினைக்கிறார் லதா.

அனாதை சரணாலயங்களானாலும் ஆன்மீக ஆசிரமங்களானாலும் பெண்களின் உடலை சமுதாயத்தின் அசிங்கமான புருஷ இச்சைகளுக்கு பரிமாற்ற மையங்களாக மாற்றிய சங்கதியை லதா அன்று அன்றே அடையாளம் கண்டார்.  

கடந்த அறுபது, எழுபது ஆண்டுகளில் அவை பெண்களின் உடலைக் கொண்டு வியாபாரம் செய்யும் நிலையங்களாக விரிவடைந்த செய்தியை விளக்க எத்தனையோ சம்பவங்கள் உதாரணமாக உள்ளன.

ரிஷிவாலி ஆசிரமத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தபோது தங்குமிடமும் உணவும் எவ்வாறு கிடைக்கும் என்று கவலைப்பட்ட ராஜ்யம், “இந்த தேசத்தில் பெண்களுக்கு உணவு கிடைக்காமல் போவது ஏன்? அவர்களுக்கு படிப்பு இல்லை. அவர்கள் காலில் அவர்கள் நிற்பதற்கு கௌரவமான தொழில் இல்லை. பத்து பாத்திரம் தேய்த்து வாழ வேண்டும். இல்லை என்றால் உடலை விற்று வாழ வேண்டும்” என்று வருத்தப்படுகிறாள்.

“ஒரு முறை வீட்டு வாசலைத் தாண்டிய பெண் திரும்ப சமுதாயத்திற்கு செல்ல முடியாத போது விற்பதற்கு உடலைத் தவிர தன்னுடையது என்று கூறி கொள்வதற்கு எதுவும் இல்லாமல் விபச்சார இல்லங்களுக்கு போவதை தவிர   வேறு வழியில்லாத பெண்ணின் வாழ்க்கை கொடுமையானது. பசியின் விலை பெண்ணின் மானத்தின் விலையை விட அதிகமாக இருக்கும் வரை இந்த அவஸ்தை தீராது” என்று சுகுணா செய்த தீர்மானம் கவனிக்கத்தக்கது. 

லதா, ஹைதராபாத் ‘மேந்தி’ பஜாரை வர்ணிக்கையில், “மனித நேயத்தோடு தொடர்புடைய அழுக்கு அனைத்தையும் இந்த சாக்கடை ஸ்பாஞ் போல உறிஞ்சுக் கொள்கிறது” என்கிறார். “உலகின் பாவங்களுக்கு அது ஒரு குப்பை தொட்டி” என்கிறார்.

நரஸா என்ற பெண், “ஒரு சில பெண்கள் இந்தப் பணியைச்  செய்யாவிட்டால் எல்லா பெண்களும் புனிதமாக இருக்க முடியாது” என்கிறாள். “விபச்சாரம் விவாகத்திற்கு கட்டப்படாத கோட்டை” என்கிறார் மற்றொரு இடத்தில். மொத்தத்தில் நல்ல சமுதாயம், கௌரவமான குடும்பம் – இவற்றின் சார்பியல் தான் விபச்சாரத் தொழிலின் இயல்பைத் தீர்மானிப்பதை பார்க்கிறோம்.

அவ்விதமாக விபசாரத்தில் ஈடுபடும் பெண்களுடைய வாழ்க்கையின் துயரங்களை எண்ணி லதா எத்தனை வேதனைப்படுகிறாரோ, இத்தகைய பொல்லாத அமைப்பை தயாரித்துக் கொண்ட சமுதாயத்தின் பலவீனத்தைக் குறித்தும், மதம், குலம், குடும்பம், மனிதத்தன்மையற்ற சம்பிரதாய ஒழுக்கங்கள் குறித்தும் அத்தனை குரோதத்தை வெளிப்படுத்துகிறார். விபச்சாரத் தொழிலை சீர்த்திருத்தும்  வரம்பெல்லைகளில் இருந்து அல்லாமல் பொருளாதார, அரசியல் கோணத்தில் இருந்து கதைப் பொருளை எடுத்துக் கொண்டதால் ‘ரக்தபங்கம்’ நல்ல நாவலாக ஆகிறது.  

விபச்சாரத் தொழில் எவ்வாறு ஒழியும் என்ற கேள்வி கூட இந்த நாவலில் வருகிறது. நீதிபதிகள், சமுதாயத் தலைவர்கள், இன்னும் பிற மேதாவிகள் அனைவரும் இந்த விபச்சார நரகத்திற்கு வருவதை நிறுத்தி இதன் சொரூபத்தை உடைக்க வேண்டும் என்கிறாள் ராஜ்யத்தோடு இறுதி வரை இருந்த சுகுணா.

ராஜ்யத்தின் அருகில் வரும் எழுத்தாளரின் நண்பன் ரகசியமாகவும் பகிரங்கமாகவும் நடக்கும் விபச்சார விடுதிகளை தடை செய்து, அனாதை சரணாலயங்களையும் பெண் சரணாலயங்களையும் ரத்து செய்து, தொழிலை விட்ட பெண்களுக்கு வாழ்க்கை வழிமுறை ஏற்படுத்திக் கொடுத்து, குழந்தை இல்லாத விதவைகளுக்கு மறுமணம், ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான பொருளாதார சுதந்திரம், ஆரோக்கியமாக உள்ளவர் அனைவருக்கும் திருமணம்,   அவற்றில் குலப் பிரிவினைகள், வரதட்சணை, காணிக்கை போன்றவை இல்லாமல் இருப்பது, பதினெட்டு வயதிற்கு முன்னால் பெண்ணும் இருபத்தைந்து வயதுக்கு முன்னால் ஆணும் செக்ஸுக்கு பழக்கமாகக் கூடாது என்ற பண்பாட்டை ஏற்படுத்துவது போன்ற சீர்திருத்தங்கள் மூலம் விபச்சாரத் தொழிலை அழித்துவிடலாம் என்கிறான்.

இதெல்லாம் லதா கண்ட கனவு. இது நடக்கும் பொற்காலம் எப்போதாவது வருமா என்ற சந்தேகம் அவருக்கு இல்லாமல் இல்லை. திருமணம், ஆண் பெண் தொடர்பு, தாய்மை முதலான பல விஷயங்களை இணையாக விவாதத்திற்கு உட்படுத்தி அறிவுக்கு முன்னுரிமை கொடுத்த நாவல் ரத்தபங்கம்.

அடுத்து, மீதியுள்ள லதாவின் நாவல்களை சமுதாய நாவல், புராண நாவல் என்று பிரித்து ஆராயலாம்.

Series Navigation<< காலத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்கள்தென்னேட்டி ஹேமலதா- பொது உலக பரிச்சயம் அல்லது மேதமை பிரபஞ்சம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.