
சுருதி கூட்டல்
துவாரம் மங்கத்தாயாரு கர்னாடக சங்கீத வயலின் கலைஞர். வயலின் மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடு இவர் தந்தையும் குருவும் ஆவார். வளரும் பருவத்தில் அவர் தந்தையை மனமெல்லாம் நிறைந்த வியப்புடன் நோக்கி, அவரிடம் வயலின் பயில ஏங்கியவர். அவர் தந்தைக்கு அவருக்குக் கற்றுத் தருவதில் அதிக நாட்டம் இருக்கவில்லை. பயில்வதைவிட இசையைக் கேட்பது அவசியம் என்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மங்கத்தாயாரு தன் தந்தையுடன் ரேடியோவில் வாசிக்கத் தொடங்கிய பிறகுதான் தன்னிடம் பயில விருப்பமா என்று மகளிடம் கேட்டார் தந்தை.
மங்கத்தாயாரு வயலின் வாத்தியத்தைத் தெரிவு செய்தது வழக்கத்தைவிட மாறுபட்டது என்று கூற முடியாது. வயலின் குறித்த ஆராய்ச்சியை நோக்கும்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிற்ப வடிவங்களில் பெண்கள் வயலின்போன்ற ஒரு இசைக்கருவியை வாசிப்பதுபோல் வடிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போதுள்ள வடிவில் பிடிலு என்று கன்னடத்திலும் பிடில் என்று தமிழிலும் கூறப்படும் வயலின், 18ம் நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தில் கர்னாடகாவில் முதலில் தோன்றியது. பொ.யு.1784இல் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் வரையப்பட்ட ஒரு சுவரோவியத்திலும் கிட்டத்தட்ட பொ.யு.1850இல் செதுக்கிய ஒரு மர சிற்பத்திலும் பெண்கள் வயலின் வாசிப்பது காட்டப்பட்டிருக்கிறது. (காண்க ஸ்ருதி. 1 அக்டோபர் 1985) புகழ்பெற்ற வாக்கேயக்காரரான முத்துஸ்வாமி தீட்சிதரின் தம்பியான பாலஸ்வாமி தீட்சிதர்தான் முதலில் வயலின் பயின்றார் என்று பிற்காலத்தில் கூறப்பட்டது. இது வாத்தியத்தின் வரலாற்றை மாற்றியதோடு மட்டுமல்லாமல் அதை ஆண்களின் வாத்தியமாகவும் மாற்றிவிட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்து நாம் அறிந்த வயலின் மேதைகள் அனைவரும் ஆண்களே. இந்த உருமாற்றம் எப்படி நேர்ந்ததென்பதைத் தெரிந்துகொள்வது சுவாரசியமான ஒன்றாக இருக்கும். தேவதாசிப் பண்பாட்டில் வீணை தனம்மாளின் மகள்களான பாபநாசம் பாலசரஸ்வதி, அபிராமசுந்தரி இருவருமே வயலின் இசைத்தவர்கள். தொழில்முறைக் கலைஞர்கள் அல்லாத குடும்பங்களிலிருந்து மேடையில் கச்சேரி செய்யாவிட்டாலும் பெண்கள் 1908இலிருந்தே வயலின் பயின்றிருக்கிறார்கள். (காண்க ஸ்ருதி 1 டிசம்பர் 1985: அட்டைப்படத்தில் 1908இல் அவருக்கு எட்டு வயதில் எடுக்கப்பட்ட பி.எஸ். சுந்தராம்பாள் வயலினோடு இருக்கும் படம்) ஆகவே மங்கத்தாயாரு செய்தது வரலாற்றில் இல்லாத ஒன்றில்லை. ஆனால் வயலின் மேதையான அவர் அப்பாவின் ஆளுமை வீட்டை நிறைத்ததோடல்லாமல் ஆதிக்கமும் செலுத்தியது. அவர் பல்லவி வாசிப்பதில் பெரும் புகழ் பெற்றிருந்தாலும் தன் மகள் உயர்தரமான முறையில் பல்லவி வாசிப்பதை மங்கத்தாயாரு பொது மேடையில் வாசிக்கத் துவங்கியபின் கூட அவர் ஊக்குவிக்கவில்லை. அவருக்குப் பல்லவி வாசிப்பதையும் இசையின் எல்லா அம்சங்களையும் பயிற்றுவதை ஒரு சவாலாக ஏற்றது அவருடைய இன்னொரு குருவான வரகூர் முத்துஸ்வாமி ஐயர்தான்.
1954இலிருந்து தன் தந்தையுடன் வாசிக்க ஆர்ம்பித்தார் மங்கத்தாயாரு. ஆனால் 1956இல்தான் அவருக்குச் சரியான முறையில் சில பாடங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். வயலின் மேல் பித்தாக இருந்த மங்கத்தாயாரு திருமணம் செய்துகொள்வதில்லை என்று தீர்மானித்தார். அவர் தந்தையின் வாசிப்பு முறையைத் தொடர்வதில் அவர் பங்கு குறித்து அதிகம் பேசப்படுவதில்லை. அவர் குடும்பத்திலேயே இது கண்டுகொள்ளப்படாமலேயே இருக்கிறது. ஸ்ருதி பத்திரிகை துவாரம் வெங்கடஸ்வாமி நாயுடு குறித்த சிறப்பிதழ் கொண்டுவந்தபோது மங்கத்தாயாருவின் சகோதரர்களையும் துவாரம் வெங்கடஸ்வாமி நாயுடுவின் பேரன் முறையாகும் மருமகனையும் கூடத் தங்கள் கருத்துகளைக் கூறும்படி கேட்டுக்கொண்டது. ஆனால் மங்கத்தாயாரு குடும்ப வரைபடத்தில் ஒரு பெயராக மட்டுமே இருக்கிறார். தொட்டாற்சுருங்கி இயல்புடைய அவர் இவ்வித ஒதுக்கப்படுதலால் மேலும் தன் கூட்டினுள் ஒடுங்கிக்கொள்வதைத் தன் இயல்பாக்கிக்கொண்டிருக்கிறார். (அவரிடமிருந்து புகைப்படங்களைப் பெறுவது குதிரைக்கொம்பாய் இருந்தது. நான் வெளியிட்ட புத்தகத்தில் தந்திருப்பவை இரண்டாண்டு முயற்சிகளுக்குப்பின் பெற்றவை) மங்கத்தாயாரு வழக்கமாக நம் மனத்திலுள்ள வயலின் இசைக்கும் பெண் விதூஷிகள் போல் அல்லாதவர். தன் தோற்றத்தில் அவர் அதிக அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. அதனால் சிறிது கிறுக்குப் பிடித்தவர் என்றே பலர் அவரைக் கருதுகின்றனர். பதிவு முடிந்ததும் அவர் என்னிடம் கூறினார்: “என்னைப்போல் ஓர் ஆண் இருந்திருந்தால் அவரை மேதை என்று கொண்டாடியிருப்பார்கள். நான் பெண்ணாக இருப்பதால் என் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் துணிச்சல் இருக்கிறது எல்லோருக்கும்.” இவற்றால்தானோ என்னவோ அவர் வயலின் இசைப்பதைக் கேட்பது ஓர் அபூர்வ அனுபவமாக இருக்கிறது. அவர் வாசிப்பை “ஆழமான சாந்த உணர்வு உடையது என்றும் அறிந்ததை முற்றிலும் வெளிப்படுத்தாத அறிமடத்தன்மை உள்ளது என்றும்” சில இசை ஆய்வாளர்கள் கூறியிருப்பது இதனால்தான் போலும். (N.E. Sjomon and H. V. Dattatreya, An Introduction to South Indian Music, Sarasvati Project Series, Netherlands, 1986: p.86) அவருடைய தந்தை ஓர் இசை மேதை என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால் அவர் ஆளுமை அவர் மகள் மேல் ஒரு கரிய நிழலாகப் படர்ந்திருக்கிறது.
நாங்கள் உரையாடும் போது ஐம்பது வயதைத் தாண்டிய ஆண்டுகளில் இருந்த மங்கத்தாயாரு அந்த நிழலின் தாக்கத்திலிருந்து மீண்டு வந்திருக்கவில்லை. துவாரம் வெங்கடஸ்வாமி நாயுடு இத்தாலியில் வடிவமைக்கப்பட்ட புகழ்பெற்ற ஸ்ட்ராடிவேரியஸ் வயலின் தனனிடமிருக்கவேண்டும் என்று மிகவும் விரும்பினார் என்று சொல்லப்படுகிறது; மங்கத்தாயாருவுக்கு அந்த ஆசையெல்லாம் இல்லை. தான் வயலின் வாசித்து அது எல்லோர் செவியிலும் விழுந்தால் போதும் அவருக்கு.
23 ஜூன் 1991: மங்கத்தாயாருவின் வீட்டில் மாலை 5 மணிவாக்கில் மாடியில் இருந்த சிறு அறையில். நாங்கள் தனியாகப் பேச முடிந்தது என்றாலும் அறை அவருடைய தனி அறை அல்லாமல் குடும்ப அறையாக இருந்ததால் அவ்வப்போது யாராவது வருவதும் போவதுமாக இருந்தது. மொழி: தெலுங்கு.
லக்ஷ்மி: எல்லாக் கலைஞர்களிடமும் முதலில் அவர்கள் குழந்தைப் பருவம் பற்றிக் கேட்கிறேன். பெற்றோர்களுடன் அவர்களுக்கு எத்தகைய உறவு இருந்தது, ஏன் குறிப்பிட்ட ஒரு கலையைத் தேர்வு செய்தார்கள் என்பது பற்றியெல்லாம்.
மங்கத்தாயாரு: என் பயிற்சி பற்றிக் கூறுவதானால் ஆரம்ப காலத்திலேயே, நான் குழந்தையாக இருக்கும்போதே என் அப்பா சோதனை முயற்சிபோல் ஏதோ செய்திருந்தாராம். என் அப்ப்பாவைப் பற்றிச் சொல்ல வேண்டும் உங்களிடம். அவர் ஒரு மிகப் பெரிய மனிதர்—வயலின் சக்கரவர்த்தி. எல்லோருக்கும் தெரிந்ததுதான், நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர் அன்றாட நியமம் பற்றி அவர் மாணவர்கள் சொல்லி நான் எவ்வளவு தெரிந்துகொண்டேனோ அதை உங்களுக்குச் சொல்கிறேன். இதில் ஒரு பொய்யும் இல்லை. மாலையில் ஆறு மணிக்கு உட்கார்ந்தால் இரவு ஒரு மணிவரை வாசிப்பார். ஏன் ஆறு மணியிலிருந்து ஒரு மணிவரை வாசித்தார் என்று நீங்கள் கேட்டால், கண் பார்வை சரியில்லாததால் அவருக்கு வீட்டில் வேறு எந்த வேலையும் இருக்கவில்லை என்பதுதான் காரணம். பிறவியிலிருந்தே கடவுள் தந்த வரமாய் வந்தது அந்தக் குறை. வயலின் மட்டுமே அவரை ஆட்டிப்படைக்கும் ஒன்றாயிற்று. எப்போதும் இசையில் இருந்து அதைச் சாதகம் செய்தார். வயதானதும் மெல்ல வாழ்க்கை மாறியது. டீச்சரானார் பிறகு லெக்சரரானார் அப்புறம் பிரின்சிபால் ஆனார். நான் சொன்னேன் இல்லையா, கல்லூரியிலிருந்து திரும்பி வந்ததும் வேறு எதற்கும் அவருக்கு நேரம் இருக்கவில்லை என்று? வீட்டில் கவனிக்க வேண்டிய விஷயம் ஏதாவது இருந்தால் தன் மூத்த மாணவர்களைக் கூப்பிட்டு—எல்லோரையும் தன் குழந்தைகள்போலவே நடத்துவார்—“இதோ பாரு பையா, நீ இந்த வேலையைப் பண்ணு; மார்க்கெட்டுக்குப் போ; நீ கடைக்குப் போய் வாங்கவேண்டியதை வாங்கு; நீ இந்த வேலையைப் பண்ணு” என்று வேலைகளைச் சொல்லிவிட்டு ஆறு மணியிலிருந்து வாசிப்பார். என்ன வாசித்தார், எப்படி வாசித்தார், எந்தக் குறிப்பிடக்கூடிய முறையில் வாசித்தார் என்பதெல்லாம் யாரும் சொல்ல முடியாது. அவர் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அதில் சிலவற்றைச் சொல்கிறேன். சஞ்சீவரெட்டிகாரு, பெஜவாட் கோபால் ரெட்டிகாரு, சஞ்சீவய்யகாரு, இப்போதைய பிரதமர் (நரசிம்ம ராவ்) இத்தகைய அன்றைய பெரிய மனிதர்கள்… துவ்வூரி நரசராஜகாரு (அப்போதைய அட்வொகேட்-ஜெனரல்) ரமண ராவ் (புகழ்பெற்ற டாக்டர்) இப்படிப்பட்ட மிகவும் பெரிய டாக்டர்கள், வக்கீல்கள், எஞ்சினியர்கள், வர்த்தகர்கள் எல்லோரும் தினம் வீட்டுக்கு வருவார்கள். அப்போதுதான் அந்த ஆங்கிலப் பாடல் ரெகார்டுகள், அந்த மெழுகில் செய்த, எழுபத்தைந்தோ எழுபத்தெட்டோ ஆர்.பி.எம் ரெகார்டுகள் அப்போதுதான் வெளிவந்திருந்தன; ஆங்கில ரெகார்டுகள்—வயலின் ரெகார்டுகள்—அப்போது புதுமையானவை. அவர்கள் ரெகார்டுகளைக் கொண்டுவரும்போது ஒரு நிபந்தனையோடு கொண்டுவருவார்கள்: “நாயுடுகாரு, நாங்கள் ஜான் ஹுப்லிக்கின் ரெகார்ட் தருகிறோம் உங்களுக்கு. இந்தச் சங்கீதத்தில் இருக்கும் ஏதாவது நம் சங்கீதத்துக்குப் பயன்படுமா என்று பாருங்கள். அதை மனத்தில் வைத்துக்கொண்டு நீங்கள் வாசித்து அந்த இசையை நம் இசையில் ஏதாவது வகையில் ஊன்ற முடியும் என்றால் நாங்கள் உங்கள் முன் சரணாகதி ஆகிவிடுகிறோம்.” இப்படி அவருக்குச் சவால் விட்டு ஒவ்வொரு ரெகார்டாகத் தருவார்களாம். பத்து முறை கேட்டாலும் அதைவிட அதிகம் முறை கேட்டாலும் சுலபமாகப் புரியக் கூடியவை அல்ல அந்த ரெகார்டுகள். கடினமான விஷயம் அது. அவருடைய மாணவர்களில் கிருஷ்ண ஐயங்கார் என்று ஒருவர் இருந்தார். கும்பகோணத்திலிருந்து வந்த தமிழர். அப்பாவின் வாசிப்பைக் கச்சேரிகளில் கேட்டு வீட்டை விட்டு வந்துவிட்டவர் அவர். அவர் என்ன செய்வார் என்றால் ஒரு ரெகார்ட்டை துவரம் பருப்பு அல்லது புளியங்கொட்டையால் எண்ணியபடி நூறு தடவை கேட்பார் [அப்பாவுடன்]. இங்க்லீஷ்—மேற்கத்திய—இசை வித்தியாசமானது இல்லையா? வடநாட்டுச் சங்கீதமும் வேறுமாதிரியானது இல்லையா? எவ்வளவு வகைகள் இருந்தாலும் நாம் நம் மொழியை எந்த வகையிலும் சிதைக்க முடியாது இல்லையா? அதை நூறு முறை கேட்டபின் கர்நாடக சங்கீதத்துக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாமல், அந்தச் சங்கீத முறையின் கட்டுப்பாடுகள், நியதிகள் இவற்றை மீறாமல்—அதைக் குலைக்க நாம் யார்?—அதிலிருந்து எடுத்துக்கொள்ளக் கூடியவற்றை எடுத்துகொண்டு நம் சங்கீதத்துக்கு ஏற்ப அதைத் தழுவிச் செய்வார். அதை ஆராய்ச்சிபோல் கருதி, வில் போடும் முறை அல்லது தந்தியில் விரல் வைக்கும், அசைக்கும் முறை இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து எடுத்துக்கொள்வார். நம் சங்கராபரணம், கரஹரப்ரியா, சக்ரவாகம் ராகங்களுக்கு இத்தகைய தன்மைகள் உண்டு. இந்த ராகங்களில் மேற்கத்திய இசையைத் தழுவி இசை அமைக்க முடியும். சாருகேசியும் அப்படிப்பட்ட ராகம்தான். அவர் அந்த இசையை இந்த ராகங்களில் தழுவி வாசிப்பார். அடுத்த நாள் அவர் 6 மணிக்கு வாசிக்க அமரும்போது அதைத் தானமாக வாசித்துக் காட்டுவார். நான் இப்போது சொன்னதெல்லாம் மூத்தவர்களும் அவர் மாணவர்களும் ரெகார்டுகளைத் தந்தவர்களும் சொல்லிக் கேட்டதுதான். இன்னொரு வகை சங்கீதத்தைத் தழுவி வாசிக்கத் தானம் ஏற்றது, அப்படிச் செய்தால் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு ஏற்றும் மாற்றம் பிசிறில்லாமல் அமையும் என்று அவர் கருதினார். இசையின் செம்மையைக் குலைக்காமல் தானம் மூலம் செய்யலாம். ஆகவே ராகம் தானம் மூலம் இந்தத் தழுவலைச் செய்தார். கல்பனா ஸ்வரத்தையும் விட்டுவிடவில்லை. கல்பனா ஸ்வரத்துக்கு மேற்கத்திய இசையை விட பாரம்பரிய இசையில் அதிக வழிகள் உண்டு. மேற்கத்திய இசையிலும் இந்துஸ்தானி சங்கீதத்திலும் அது கிடையாது. மனோதர்மமாகப் பாடும்போது ராகம் தானம் இவற்றில் இருக்கும் [நெகிழ்வு]க்கான தன்மைகள் கல்பனா ஸ்வரத்தில் இல்லை. கல்பனா ஸ்வரத்துக்கு சில எல்லைகள் உண்டு இல்லையா? அதனால் ராகம் தானத்தில்தான் இதைச் செய்தார். செய்து பெரும் வெற்றியையும் பெற்றார். வந்தவர்கள் வியந்துபோய் மேலும் ரெகார்டுகளைக்—இங்க்லீஷ் ரெகார்டுகள்—கொண்டுவந்து அப்பாவுக்குக் கொடுத்தார்கள். என்னிடம் அந்த ரெகார்டுகள் எல்லாமே இருக்கின்றன. ஆனால் என்னிடம் கிராமஃபோன் இல்லை என்பது வெட்கமாக இருக்கிறது. அப்போது நாங்கள் பிறந்திருக்கவில்லை. இதற்குப் பிறகுதான் அவருக்குக் குழந்தைகள் பிறந்தார்கள். இரண்டு அண்ணாக்களும் ஒரு தங்கை, தம்பியும் நானும்.
நான் உங்களுக்குச் சொல்வது அறுபது எழுபது வருடங்களுக்கு முன் நடந்ததை. மாலையில் வாசிக்க உட்கார்ந்தால் 8:30 மணிக்கு மேல் தானம் தொடங்கும். பழைய மாதிரி வீடு அது; கிராமத்தில் இருந்த வீடு. முற்றத்தின் இரு புறமும் மூன்று அறைகள் வரிசையாக இந்தப் பக்கத்திலிருந்து அந்தப்பக்கம் வரை. நான் நான்கைந்து மாதக் குழந்தை அப்போது. வாசிப்பின் இரண்டாம் பாதி ஆரம்பிக்கும்போது என்னைப் பக்கத்தில் கிடத்திக்கொண்டு வாசிப்பார். ஏன் தினமும் இதைச் செய்கிறார் என்று அங்கிருந்த நண்பர்கள் கேட்டார்களாம். “இங்கு வரும் டாக்டர் நண்பர்களில் ஒருவர் கலையுணர்வு ஆழ் மனத்திலேயே உருவாகிறது என்றார். குருவிடம் எத்தன ஆண்டுகள் கற்றாலும் இப்படிக் கற்பது இன்னும் வேகமாக இருக்கலாம். ஒரு குழந்தைக்கு சமஸ்க்ருதமோ எதுவோ இந்த வயதிலேயே ஆரம்பிப்பது நல்லது என்றார் அவர்” என்று கூறினார் அப்பா. அப்பாவுக்கு இதில் நம்பிக்கை எல்லாம் இருக்கவில்லை; இருந்தாலும் சோதித்துப் பார்க்க விரும்பினார்; என்னை வைத்து அந்தச் சோதனையைச் செய்தார். என் பெரியப்பாவும் மூத்தவர்களும் சொன்னது; இல்லாவிட்டால் எனக்கெப்படித் தெரியும்? அவர் இப்படி வாசித்தபடி இருந்தபோது நான் வளர்ந்தேன், ஆனால் இசையில் நான் எந்தவித ஆர்வத்தையும் காட்டவில்லை. அதனால் இந்தச் சோதனையில் அவருக்கு நம்பிக்கை போய்விட்டது. ஆனால் நான்கு வயது ஆனபின் அவர் மாணவர்கள் கற்றதை எல்லாம் நான் வீட்டின் இந்தப் பக்கம் பாடுவேனாம். அவர் வயலினை வாசிக்க எடுக்கும் முன்பே நான் ஓடி வருவேனாம்; வயலினை எடுத்து தெரிந்ததோ இல்லையோ எதையாவது வாசிப்பேனாம். அப்பா அதைப் பார்ப்பாராம்… அம்மா அவரிடம் பலமுறை கேட்பாராம்: “இவ்வளவு ஆசைப் படுகிறதே? குழந்தைக்குக் கற்றுத் தரக் கூடாதா? இத்தனை மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறீர்களே? இந்தக் குழந்தையையும் பக்கத்தில் வைத்துக்கொள்ளக் கூடாதா?” “முடியாது. கற்றுத் தராமல் வரும் ஞானம் நிறைய நாள் நீடிக்கும். அதாவது கேட்டுக் கேட்டு வரும் கேள்விஞானம். ஊட்டிவிடுவது கொஞ்ச நாள்தான் இருக்கும். இது உனக்குத் தெரியாது. இதிலெல்லாம் குறுக்கிடாதே” என்பாராம் அப்பா.
இதை அம்மாவிடம் சொன்னாரா?
அம்மாவிடம் சொன்னாராம், குறுக்கிடாதே என்று. மிகவும் நல்ல மாதிரியான பெண் அவர். மிகவும் எளிமையானவர். அந்தக் காலத்தில் நான்காவதோ ஐந்தாவதோ படித்தவர். சரி என்று அவரும் சும்மா இருந்துவிடுவார். சும்மா சாதாரணமாக நாம் பார்க்கும் பெண் போன்றவர் இல்லை அவர். என் அப்பாவின் அக்கா பெண். அதனால் அவருக்கு அதிக மரியாதை தரப்பட்டது. அம்மா மௌனமானதும் அப்பா தன் மாணவர்களிடம் சொல்வாராம்: “இதோ பாருங்கள், எனக்கு நேரம் இல்லை. நான் மதறாஸோ வேறு எங்காவதோ போனால் அதிலேயே இரண்டு மூன்று மாதங்களாகி விடுகிறது. நீங்கள் ஏதாவது கற்றுக்கொடுங்கள் இந்தக் குழந்தைக்கு.” அந்த மாணவர்கள் சிரமத்தைப் பாராமல் எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள். ஆனால் அப்பாவிடம் புகார் கூறுவர்களாம்: ”குருகாரு, நாங்கள் எதைக் கற்றுக்கொடுத்தாலும் ஒரு நாளில் கற்றுக்கொண்டுவிடுகிறாள். வர்ணம் என்றால் நாலே நாட்கள். கீர்த்தனத்தையும் வெகு சீக்கிரம் கற்றுக்கொள்கிறாள். இப்படி வேகமாகக் கற்றுக்கொண்டால் எங்களிடம் கற்றுத் தர எதுவும் இருக்காது.” அந்த மாணவர்களில்—உங்களுக்கு மிருதங்கக் கலைஞர் எல்ல வெங்கடேஷ்வர ராவைத் தெரியுமா? அவருடைய அப்பா வயலின் கலைஞர் எல்ல ராமமூர்த்தி, அப்பாவின் மாணவர் அப்போது. எல்ல ராமமூர்த்தியின் அண்ணா எல்ல சோமண்ணா மிருதங்கம் மணிகாருவின் சிஷ்யர். எல்ல சோமண்னாவுக்குக் குழந்தைகள் இல்லாததால் அவர் எல்ல வெங்கடேஷ்வர ராவைத் தத்து எடுத்துக்கொண்டார். எல்ல வெங்கடேஷ்வர ராவின் அப்பா எல்ல சோமண்ணா என்று எல்லோரும் சொல்கிறார்கள், ஆனால் அவருடைய அப்பா எல்ல ராமமூர்த்திதான். அவர்தான் வயலினில் என் முதல் குரு. முறையான பயிற்சி இல்லை. ஏதோ சாதாரணமாகக் கற்றுத் தந்ததுதான்.
என் எதிரில் உட்கார்ந்துகொண்டு வாசிப்பார். “அம்மா, இதை வாசி” என்றுவிட்டு எப்படி வாசிப்பது என்று சொல்லித் தருவார். நானும் வாசிப்பேன். அவ்வளவுதான். அதிக ஞானம் எல்லாம் எனக்கு இருக்கவில்லை. அப்படி இருந்ததென்றும் நான் சொல்லவில்லை. காற்றில் கலந்திருந்ததை நான் வாசித்தேன். நான் கேட்டுக் கிரகித்துக்கொண்ட வர்ணத்தையும் கீதத்தையும் நான் வாசித்தேன். முதலில் எதுவுமே தெரியாது. எந்தக் கீர்த்தனை கற்றுக்கொடுத்தாலும் வாசிப்பேன். முதலில் பாடத்தான் கற்றுக்கொண்டேன். இப்படி வளர்ந்து வந்தால் பள்ளிப் படிப்பு என்ன படித்திருக்க முடியும்? கல்வியிலேயே எனக்கு ஆர்வம் கிடையாது. ஆனால் கட்டாயம் படித்தே ஆக வேண்டும். ஏனென்றால் அம்மா சொல்வாள்: “இவள் ஒரு பெண். நாளைக்குக் கல்யாணம் செய்துகொண்டால் நாலு வரி கடிதம் எழுத வேண்டாமா?” இப்படி அம்மாவின் வற்புறுத்தலால் பள்ளியில் போட்டார்கள் என்னை. நாயுடுகாருவின் மகள் அல்லது மகன் என்பதால் எங்களை ஆரம்பத்திலேயே முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் போடாமல் ஐந்து அல்லது ஆறாம் வகுப்புக்குத் தள்ளிவிட்டுவிடுவார்கள். அப்படித்தான் இருந்தது. எங்களுக்கு இருந்த ட்யூஷன் மாஸ்டர் அவர் மனத்தில் தோன்றிய வயதை எழுதி தனக்குப் பிடித்த வகுப்பில் போட்டுவிடுவார். இப்படி ஜமீந்தார் பாணியில் வளர்ந்தோம். இரண்டாவது, அப்பா எப்போதும் பயணத்திலேயே இருந்தார் என்று சொன்னேன் இல்லையா? அதனால் இது அவர் பொறுப்பு இல்லை என்றாகிவிட்டது. குழந்தைகளைப் படிக்கவைக்க வேண்டுமில்லையா? மாஸ்டர்காரு பொறுப்பேற்றுப் பள்ளியில் போட்டார் எங்களை. எஸ்.எஸ்.எல்.ஸி வரை படிப்பிலேயே ஆர்வம் இருக்கவில்லை எனக்கு. வயலின் மேலேயே கவனமிருந்தது. அதற்கு முன்னால் பாடிக்கொண்டிருந்தேன்.
பத்துப் பனிரெண்டு வயதிருக்கும்போது டைஃபாயிட் வந்தது. மூன்று தடவை வந்தது எனக்கு. இரண்டாம் தடவை வந்தபோது டாக்டர் சொன்னார், “இந்தப் பெண் பாடக் கூடாது” என்று. எனக்கோ பாட்டுப் பாட ஏக்கமாக இருந்தது. சில வருஷங்களிலேயே மீண்டும் டைஃபாயிட் வந்தது. ரொம்பப் பிடிவாதம் பிடிக்கவே, “சுலபமாகக் கற்றுக்கொள்ள முடிகிறது என்றால் வயலின் கற்றுக்கொடுங்கள்” என்றார் டாக்டர். அதற்கு முன்னால் பாடுவேன்; வீணையும் வாசிப்பேன். என் பொழுதுபோக்காக இருந்தது அது. நான் வாசித்த வீணை விசேஷமானது. அப்பா ஒரு சின்ன வீணை எனக்காக உருவாக்கினார்—அதைப் பிறகு ராஜாவின் அரண்மனைக்கு அனுப்பிவிட்டார்கள்—அதற்கும் ஒரு காரணமிருந்தது. நான் வீணை வாசிக்கும் காலத்தில் வீணை மாஸ்டர் ஒருவர் வருவார். நாயனகாருவின் மாணவர். கல்லூரியில் வகுப்புகள் முடிந்தபின் வந்து கற்றுத் தருவார். சில நாட்களுக்குப்பின் விரல்களில் வெட்டு விழும். அதில் ரத்தம் வரும்போது பயந்து அழுவேன். மாஸ்டர் வீட்டின் இந்தப் பக்கம் வந்தால் நான் அந்தப் பக்கம் ஓடுவேன். ரத்தம் வந்து நான் கஷ்டப்பட்டேன். வலி வேறு ஒரு பக்கம். வாசிக்க முடியவில்லை. நான் மாஸ்டரிடமிருந்து தப்பிக்க ஓடியதைப் பார்த்த அப்பா, “இது பிரயோசனப் படாது. வீணை உனக்கு ஒத்து வராது. என் வாத்தியத்தையே கற்றுத் தருகிறேன்” என்றார். ஆனால் இந்த வீணையை யாருக்கும் தர மனதில்லை. என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த வீணை அது. வெள்ளியில் மெட்டுக்கட்டப்பட்ட வெகு அழகான சின்ன வீணை அது. அதை எப்படி யாருக்காவது தர முடியும்? அரண்மனைக்குத் தந்துவிட்டோம்… அரண்மனையில் வாசிக்கும் ஒருவருக்கு.
வயலின் வாசித்தாலும் விரல்களில் ரத்தம் வரும் என்று தோன்றவில்லையா என்ன?
இல்லை, வரவே வராது. அப்பாவிடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆசை. எஸ்.எஸ்.எல்.ஸி ஆங்கிலத்தில் படித்ததன் காரணம் க்ரூப் ஒன்றும் இரண்டும் (இசை) தேர்வு செய்தால் அப்பாவிடம் நேரடியாகப் பயிலலாம் என்றுதான். ஆனால் அந்தப் பாடப்பிரிவே இல்லை என்றுவிட்டார்கள். அது இல்லாததால் (இரண்டு பேர் இருந்தால்தான் ஒரு பாடப்பிரிவை ஏற்படுத்த முடியும்) இன்னொரு மாணவியை இதைத் தேர்வு செய்யும்படி வற்புறுத்தினார்கள்.(அவள் பிறகு அகில இந்திய வானொலியில் கூட வேலை செய்தாள்) அவள் பெயர் விஞ்சமுரி லக்ஷ்மி. அவளைக் கேட்டதும் அவள் ரொம்பச் சாதாரணமாக, “இசை எனக்கு எப்படி உதவும்?” என்று கேட்டிருக்கிறாள். ”பரவாயில்லை. எஸ்.எஸ்.எல்.ஸி வரை இந்தப் பாடத்தைத் தேர்வு செய். பிறகு உன் விருப்பம்போல் செய்” என்று கூறி அவளை ஒப்புக்கொள்ளவைத்தனர். பாட அட்டவணையில் இசையை ஒரு பாடப்பிரிவாக முதல் முறையாக விஜயநகரில் அறிமுகப்படுத்தினார்கள் எங்கள் இருவருக்காக. ஆயிற்று. நான் வயலினைத் தேர்வு செய்தேன்—அந்தப் பாடப்பிரிவைத் தேர்வு செய்தேன்—அதை வாசிக்கவும் வேண்டுமில்லையா? அப்பாவிடம் கற்றுக்கொள்ள வேண்டுமில்லையா? “இந்தக் கோர்ஸ் நீங்கள்தான் தினம் கற்றுத் தர வேண்டும்” என்றேன் அவரிடம். முழு கோர்ஸையும் ஆறே மாதத்தில் முடித்துவிட்டார்.
அதற்கான முழு பாடத்தையுமா?
முழு பாடத்தையும். ஆறு மாதம் எனக்கு ஒன்றுமே இல்லை. இன்னும் அதிகமாகக் கற்க நான் ஏங்கினேன். மிகவும் எளிய முறையில் அவர் பாடம் முழுவதையும் எடுத்து முடித்துவிட்டார் என்று எனக்குத் தோன்றியது. அந்தச் சின்ன வயதில் என்னால் என்ன செய்திருக்க முடியும், இல்லையா? எனக்குத் தராமல் பறித்துவிட்டதைப்போல் உணர்ந்தேன். மனம் வருந்தினால் அழுகை வருமில்லையா? வீட்டில் நான் சரியாக நடந்துகொள்ளவில்லை. சாப்பிட மறுத்தேன். அம்மாவிடமும் அப்பாவிடமும் தவறாக நடந்துகொண்டேன்; அந்த வயதில் எல்லோரும் செய்வதைப்போல் செய்தேன். இது உடம்பைத்தான் பாதித்ததே ஒழிய இசை என்னவோ கிட்டவில்லை. என்ன செய்வது என்று யோசித்தபடி ஒரு டிப்லோமா செய்தால் நல்லது என்று நினைத்தேன். 1953இல் விஜயநகர மகாராஜா கல்லூரியில் இசையில் டிப்லோமா செய்தேன். இந்தப் பாடப்பிரிவு அறிமுகமான மூன்றாம் ஆண்டு நான் அதைச் செய்தேன். இரண்டாண்டு கோர்ஸ் அது. நான் அதை ஓராண்டிலோ ஒன்றரை ஆண்டுகளிலோ முடித்துவிட்டேன். ஒன்றரை ஆண்டுகள் கூட இருக்காது. “இவ்வளவுதானா?” என்றால் அப்பா சொல்வார்: “வேறு என்ன வேண்டும்? வயலின் வாசிக்கிறாய். பாடுகிறாய். அவ்வவளவுதான்.” வலிந்து ஊட்டிவிடுவதைப்போல் சொல்லித் தருவதை அவர் எதிர்த்ததால்தான் அப்படிச் சொன்னார்; வேறு எந்தக் காரணத்துக்காகவும் இல்லை. கேள்விஞானத்தால் வருவது நிலைக்கும்; அதுதான் துணை நிற்கும் என்று அவர் உறுதியாக நம்பினார். அதுதான் அவர் அனுபவம் கூட. வயலின் வாசிப்பு, பாட்டு இவற்றுடன் என் எஸ்.எஸ்.எல்.ஸியையும் டிப்லோமாவையும் முடித்துவிட்டு 1954இல் நான் மதறாஸ் வந்தேன். எஸ்.எஸ்.எல்.ஸி 1949இலும் டிப்லோமா 1953இலும் முடித்தேன். அப்பா இங்கே வந்ததால் நாங்கள் எல்லோரும் இங்கே அவருடன் வந்தோம். இங்கு வரும் வரை அப்பாவுடன் வாசிப்பேன். சிறுமியாக இருக்கும்போது பொம்மை மாதிரி இப்படி உட்கார்ந்திருப்பேன். விஸ்தாரமாக எல்லாம் வாசிக்க மாட்டேன். என்னை ஊக்கப்படுத்தத் தன்னுடன் உட்கார்த்தி வைத்துக்கொள்வார். நான்கு வர்ணமும் நான்கு கீர்த்தனையும் வாசித்தால் அது இசையா என்ன?
காலம் இப்படியே போயிற்று. ஆனால் நான் அப்பாவிடமிருந்து அதிகம் எதுவும் கற்கவில்லை. சரி, 1954 இங்கே வந்தோம். 1954இலோ 1956இலோ அப்பா என்னிடம் தன்னிடம் பயில விருப்பமா என்று கேட்டார். ஒரு வேளை, “பாவம், இவ்வளவு ஆசைப்படுகிறாள். நாளுக்கு நாள் இவள் ஆசை அதிகரித்துக்கொண்டே போகிறது. நானும் ரிடையர் ஆகிவிட்டேன், கற்றுக்கொடுத்தால் என்ன?” என்று நினைத்தாரோ என்னவோ? அப்பா கேட்டார்: “சரளி, கீதம் என்று ஆரம்பப் பாடமெல்லாம் என்னிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று ரொம்ப காலமாகச் சொல்கிறாய். உன் ஆசை எனக்குத் தெரியும். இப்போது கற்றுக்கொள்கிறாயா?” நான் ஸ்தம்பித்துப்போய்விட்டேன். இன்று ஒரு கோடி ரூபாய் தந்தாலும் அன்று நான் அடைந்த ஆனந்தத்தைப் பெற முடியாது. (சிரிப்பு) ஆமாம், உண்மையாகவே. என் அப்பா வாயிலிருந்து இதைக் கேட்டதும் எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. ”நிச்சயமாக. ஆரம்பப்பாடமான சரளிவரிசையிலிருந்து கற்றுக்கொள்வதானாலும் கற்றுக்கொள்வேன்” என்றேன். இன்னும் ஒன்று சொன்னார் அப்பா. “ஏற்கனவே ரேடியோவில் வாசிக்கிறாய், இல்லையா? பி உயர் க்ரேடா? இப்போது சரளியிலிருந்து கற்றுக்கொள்வாயா என்ன?” “ஆமாம்,” என்றேன். “நான் வாசிக்கிறேன்தான். ஆனால் அது வேறு. நான் எப்படி வாசிக்கிறேன், எந்த முறையில் வாசிக்கிறேன் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. எப்படியோ வாசிக்கிறேன். நீங்கள் நிறுத்தச் சொன்னால் நிறுத்திவிடுவேன். எனக்கு அதில் எல்லாம் ஆர்வமில்லை. ஆனால் உங்களிடமிருந்து சரளிவரிசை கற்றுக்கொள்வேன்.” (சிரிப்பு) நான் அதைச் சொன்னதும் அவர் சந்தோஷப்பட்டார். அவர் மனத்தில் என்ன ஓடிக்கொண்டிருந்தது என்று எனக்குத் தெரியாது.
மங்கத்தாயாரம்மா, நீங்கள் பெண் என்பதால் உங்கள் அப்பா உங்களுக்குக் கற்றுத் தரவில்லையா இல்லை அவருக்கு நேரமிருக்கவில்லையா?
நான் சொன்னேனே, அவருக்கு நேரம் இருக்கவில்லை. மற்ற மாணவர்களுக்குக் கற்றுத் தர எப்படி நேரம் கிடைத்தது என்று நீங்கள் கேட்கலாம். அதற்காக நேரம் ஒதுக்க எடுக்க வேண்டிய தனிப்பட்ட வகுப்புகளை அவர் வீட்டிலேயே எடுத்தார். வகுப்புகள் இல்லை என்றால் கல்லூரிக்குப் போக மாட்டார். மற்றபடி அவர் மிகவும் ’பிஸி’யாகத்தான் இருந்தார். எப்போதும் கச்சேரிகள் இருந்தன.
பெண்-ஆண் என்ற பாகுபாடு எல்லாம் இருக்கவில்லையா?
இல்லை; இல்லவே இல்லை. அப்படியெல்லாம் கிடையாது. அவருக்கு எல்லோரும் சமம்தான். பார்க்கப்போனால் அவருக்குப் பெண் குழந்தைகள் என்றால் பிடிக்கும். அவரே பிறவியிலிருந்து அரைக் குருடாக இருந்ததால் கண் பார்வை இல்லாதவர்களுக்காகவும் அவர் மனம் கனியும். தான் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று உணர்ந்திருந்ததால் கண்பார்வை இல்லாதவர்களுக்கு எப்போதும் கற்றுத் தருவார். அவர் கற்றுக்கொடுத்த பலர் கலைஞர்களாக இருக்கிறார்கள். சிலர் சினி லைனில் இருக்கிறார்கள்— ஹனுமந்தராவ் சகோதரர்கள்; ராஜேஸ்வர ராவும் ஹனுமந்த ராவும். ராஜேஸ்வர ராவ் சினிமாவில் டைரக்டராக இருந்தார். கண்டசாலா, சுசீலா, ஜானகியை எல்லோருக்கும் தெரியும்…. பிறகு [வீணை] காயத்ரியின் அப்பா (ஜி. அஸ்வத்தாமா) இப்படிப் பலர். எனக்குத் தெரிந்தவர்களை நான் சொல்கிறேன். இன்னும் பலர் உண்டு.
கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்…
ஆரம்பித்தார். இரண்டு மூன்று காலங்களில் பாடிவிட்டு வாசிக்க வேண்டும். இந்தப் பயிற்சியின் சாரம் என்னவென்றால் வாயால் பாடத் தெரியாமல் எந்த வாத்தியத்தையும் ஆள முடியாது என்பதுதான். அப்படித்தான் அவர் சொல்வார்; அது சரிதான். மிருதங்கமோ வேறு எந்த வாத்தியமோ வாயால் பாடத் தெரியாமல் புரிந்துகொள்ள முடியாது. ஏன் என்று நீங்கள் கேட்கலாம். ஏ, பி, ஸி, டி கற்றுக்கொண்டு ஒப்பித்தால் ஆயிற்றா? அதை எழுத வேண்டாமா? அதைக் கரும்பலகையில் எழுதினால் எவ்வளவு கோடுகள், என்ன கோணம், எப்படி எழுத வேண்டும், அதன் அமைப்பு இதெல்லாம் தெரிந்தால்தான் அதன் வடிவம் புரியும். அதேபோல் ஸபஸ கற்றுக்கொண்டால் போதாது; அதைப் பாட வேண்டும். ஒலியுடன் இணைந்து வரும் இந்த ஞானத்துக்கு, பாடுவது என்றால் மனத்தில் அதன் பிம்பத்தை உருவாக்கிக்கொள்வது. ஒலியின் பிம்பத்தை எப்படி உருவாக்க முடியும்? அதுதான் விஷயம்.
ஒலி-பிம்பத்தைச் செய்வது எப்படி? வயலினில் விரல்களை வைப்பது, வில்லை ஒரு மாதிரி வைத்துக்கொள்வது, வயலினை இடது கையில் வைத்துக்கொண்டு விரல்களை எந்த வகையில் அழுத்துவது, இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் விரல்களை வைப்பது என்றால் என்ன? எந்தக் கோணத்தில்? அவற்றை ஒரு குறிப்பிட்ட முறையில் வைத்தால் எழும் ஸ்வரம் என்ன? எந்த மாதிரி ஒலி எழும்புகிறது, நாதம் சரியாக இருக்கிறதா இல்லையா… வீணை அகல்மாகவும் நீளமாகவும் இருக்கிறது. இந்த வயலினில் விரல்கள் வைக்கும் விரல் பலகை (finger board) குறுகலானது. பல ஸ்வரஸ்தானங்களையும் இருபத்திரண்டு சுருதிகளையும் அதில் கொண்டுவரவேண்டும். இன்னும் பல விஷயங்களை அதில் காட்ட வேண்டும். அது எவ்வளவு கடினமானது, நீங்களே சொல்லுங்கள். நாதத்தைக் கச்சிதமாக, யார் உதவியும் இல்லாமல் தானே பற்றிக்கொள்ளும் திறமையிருக்கும் தரத்துக்கு எட்டுவதற்கு, பாடத் தெரிந்தால் மட்டுமே, அதாவது வாயால் பாடுவதைக் குறித்த ஞானம் இருந்தால்தான் சுருதி தப்புகிறதா இல்லை சரியாக இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். இதற்காகத்தான் பாடத் தெரிய வேண்டும் என்று வற்புறுத்தினார். நான் சிறு வயதிலிருந்தே பாடியதால் அவர் கூறுவதை என்னால் எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது. பாடத்தைப் பாடிவிட்டு உடனே வாசித்துவிடுவேன். எனக்கு இது எளிய முறையாக இருந்தது. இது பற்றி எனக்குப் பித்து பிடித்திருந்ததால்—அப்பா நாள் முழுவதும் வயலின் வாசிப்பார்—சின்னக் குழந்தையாக இருந்தபோதிலிருந்தே நான் ஒன்றைச் செய்வேன். வயலினின் ஒலி கேட்டதும் குளிக்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில், சாப்பிட்டுக்கொண்டிருந்தால் கூட, அந்த ஒலி கேட்டால் போதும், சாப்பாட்டுத் தட்டை எடுத்துக்கொண்டு போய் நின்றுகொண்டு அவரைச் சன்னல் வழியாகப் பார்ப்பேன். விரல்களை எப்படி வைக்கிறார், வில்லை எப்படிப் பிடித்திருக்கிறார், நாதத்தை எவ்வாறு எழுப்புகிறார், எப்படி அது அவ்வளவு துல்லியமாக இருக்கிறது—இதையெல்லாம் பற்றி நான் யோசித்துக்கொண்டே இருந்தால், நீங்களே சொல்லுங்கள், படிப்பு ஏறுமா? (சிரிப்பு) படிப்பில் ஆர்வமே இருக்கவில்லை. எல்லாப் பாடங்களிலும் குறைவான மார்க்தான்…. மிகக் குறைவு. தெலுங்கு, இசை, விளையாட்டு இவற்றைத் தவிர மற்றவற்றில் என் படிப்பு வெட்கப்படும்படியாகத்தான் இருந்தது. மகா மோசம். (சிரிப்பு)
அப்பா உங்களுக்குக் கற்றுத் தர ஆரம்பித்தபோது உங்களுக்கு எவ்வளவு வயது?
சொன்னேனே? 1954இல்…. 1956இல்… இங்கே வந்த பிறகு. எவ்வளவு வயது எனக்கு அப்போது?
உங்கள் பிறந்த தேதி என்ன?
7 ஜூலை 1935.
1935 என்றால் இருபது வயது இருக்குமா?
இருக்கு, இருக்கும், அதைவிட அதிகமாகக் கூட இருக்கும். 1935 நான் பிறந்த வருடம்.
இருபத்தோரு வயது மங்கத்தாயாரம்மா…
நாங்கள் இங்கே அப்போதுதான் வந்திருந்தோம். நான் வயலின் வாசித்துக்கொண்டிருந்தேன்… நான் இன்னும் சின்னவளாக இருந்ததால் அது சுலபமாக இருந்தது. அதே ஆசையாக இருந்ததால் மிகவும் எளிதாக… அப்பா கற்றுத் தருகிறார் என்ற உவகை வேறு.
ஆசை… பேராசை…
(சிரிக்கிறார்)
ஆமாம், பேராசைதான். அளவில்லாத ஆசை. சாப்பாடுகூட வேண்டாம். ஆனால் மூன்று வேளை சாப்பிட்டதுபோல் ஆரோக்கியமாக இருந்தேன்! ஒன்று அவர் செய்வார்—பாடும்போது நாம் தாளம் ஒரு கையால் போடுகிறோம் இல்லையா? ஆனால் எனக்கு மூன்று காலம் நிற்காது. ஏனென்றால் ஆரம்பத்திலிருந்து பல குருக்கள். அதனால் தாளம் பிடிபடவில்லை. கச்சேரியிலோ ரேடியோவிலோ வாசிக்கும்போது தாளம் சரியாகத்தான் இருக்கும். ஆனால் அது குறித்து தன்னம்பிக்கை இருக்கவில்லை. அப்பாவுக்கு அது தெரியும். அதனால் என்னைப் பாடியபடி வாசிக்கச் சொல்வார். மூன்று காலம் பாட வேண்டும். “நாளைக்கு வாசித்துக் காட்ட வேண்டும்” என்பார். ”நீ விரல் வைப்பதை என்னால் பார்க்கமுடியாது. நான் வாசிப்பதைப் பார்த்துச் சரியாக விரலை வை. அதே கோணத்தில் வைத்து வாசி.” அதையே நான் முயற்சிப்பேன். அவர் என் அப்பாவாக இருந்ததால் அவருடன் நிறைய நேரம் என்னால் செலவழிக்க முடிந்தது. அப்படிப்பட்ட நிலைமையில் நான் எப்போதும் இருந்தது—கடவுள் எனக்கு உதவினார் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அந்தச் சமயத்தில், அந்த இளம் வயதில், எனக்குக் கோபம் அதிகம்… எல்லாவற்றுக்கும் மூக்குக்கு மேல் கோபம் வரும். சாப்பிட மாட்டேன் என்று வேறு சொல்வேன். அதனால் எல்லாம் சிதறிப் போகும். இதனால் நேரம் வீணாயிற்று. அப்பாவிடமிருந்து இன்னும்கூடக் கற்றுக்கொண்டிருக்கலாம். இப்போது சொல்லி என்ன பயன்? நான் அதைச் செய்யவில்லை, இல்லையா? அப்பா இல்லை, அந்தக் காலமும் போயாகிவிட்டது. குழந்தைப் பருவமும் போய்விட்டது. ஒரு வேளை அதனால்தானோ என்னவோ நான் இன்னும் பின்தங்கி இருக்கிறேன். எனக்கு அங்கீகாரம் கிடைக்காததற்கு யாரும் காரணமில்லை. ஒரு வேளை எனக்குத் திடம் போதாதோ என்றுதான் நினைக்கிறேன். வேறு எந்த வகையிலும் நினைக்கவில்லை.
மங்கத்தாயாரம்மா, உங்களுக்கு இருபது இருபத்தொன்று வயது ஆகும்போது கல்யாணம் செய்துகொள்ள யாரும் வற்புறுத்தவில்லையா?
ஹ்ம், ஹ்ம். படிப்பே வேண்டாமென்று அழுத நான் கல்யாணத்துக்கு உடன்பட்டிருப்பேனா? இந்த வயலின் மேல் நான் அதீதப் பைத்தியமாக இருந்தேன். வயலின் பைத்தியம் பிடித்துவிட்டால் கல்யாணம் பற்றி எப்படி நினைக்க முடியும்? (சிரிப்பு) கல்யாணம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று என்பது அப்போது எனக்குத் தோன்றவில்லை.
இப்போதோ?
இப்போது அப்படி நினைக்கிறேனா என்று கேட்கிறீர்களா? இப்போது இந்தக் கையறு நிலையில், ”இதனால்தான் எல்லோரும் திருமணம் செய்துகொள்கிறார்களோ?” என்று தோன்றுகிறது. திருமணமானால் குழந்தைகள் இருக்கும். ஒரு வகையில் அது உதவும். வாழ்க்கையுடன் அது நம்மைப் பிணைக்கும், இல்லையா? இதுதான் எல்லோரும் திருமணம் செய்துகொள்வதற்கான காரணம் என்று நினைக்கிறேன். தனிமையை உணரும்போது எனக்கென்று யாருமில்லை என்று தோன்றத்தான் செய்கிறது. அது இயற்கைதான் இல்லையா?
திருமணம் வேண்டாம் என்றபோது அப்பா என்ன சொன்னார்?
ஒன்றும் சொல்லவில்லை. ஒரு தந்தை என்ன சொல்லவேண்டுமோ அதைச் சொன்னார். ஆனால் அம்மாவும் அப்பாவும் என்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தவில்லை. அம்மாவாவது கொஞ்சம் வற்புறுத்தினாள் அப்பா செய்யவில்லை. அப்பா நினைத்திருப்பார், “அவள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும். அது இந்த வயலினின் பாதையில்தான் போகும்” என்று. இப்படித்தான் நினைத்தாரா என்று தெரியாது. ஆனால் அப்போதிருந்த அரைவேக்காட்டு ஞானத்துடனேயே அவருடன் நான் பல கச்சேரிகள் செய்தேன். பல கச்சேரிகள்… அது பற்றிச் சொல்கிறேன். நாங்கள் விஜயநகரில் இருக்கும்போதே, நான் குழந்தையாக இருக்கும்போதே அப்பாவுடன் வயலின் வாசித்தேன். ஆனால் என்ன வாசித்தேன், எப்படி வாசித்தேன் எதுவுமே நினைவில்லை. யாருமே இதை நம்ப மாட்டார்கள். ஆனால் இப்போது கூட என்ன வாசித்தேன், எப்படி வாசித்தேன் என்று நினைத்துப் பார்க்க்கும்போது மனம் குழம்பிப் போகிறது. யாரும் நம்ப மாட்டார்கள் உண்மையிலேயே. ஏதோ நான் வாசித்து அப்பா யார் தவறும் தெரியாமல் அதைச் சமாளித்துக்கொண்டுபோனார். ஏ-பி-ஸி-டி தெரியாதவர்களைக் கூட பக்கத்தில் அமர்த்திக்கொண்டு அவர் ஏதோ ஷேக்ஸ்பியரிலிருந்து பெரிய சொற்பழிவு ஆற்றும் உணர்வைத் தோன்றச் செய்பவர் அவர். வயலினிலும் அப்படித்தான். அப்படி ஓர் உணர்வை உண்டாக்குவார். எல்லோரும், “கூட வாசிப்பவர் என்ன பிரமாதமாய் வாசிக்கிறார்!” என்பார்கள். இது என் அப்பாவின் மகத்துவம், அவர் அருகில் அமர்ந்தவர்களுடையது அல்ல.”
மங்கத்தாயாரம்மா, உங்கள் அப்பாவை நீங்கள் மிகவும் போற்றுகிறீர்கள், இல்லையா?
அது போற்றுதல் மட்டுமில்லை, ஒரு வகையில்… அப்பா வயலின் இல்லாமல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தபோது கூட, அவர் வயலினைப் பிடித்திருப்பதைப் போலவே எனக்குத் தோன்றியது. ஏனென்று தெரியவில்லை… அவரைக் கடவுளாக நினைத்தேன்.
அப்பா இறந்தபின் தனிக் கச்சேரி செய்தீர்களா?
வாசித்தேன் ஆனால் அது சரியில்லை. வாசிக்கக் கூடாது என்று முடிவெடுத்திருந்த என்னை வாசிப்பு ஏன் மீண்டும் ஈர்த்தது? கடவுள் ஏன் அப்படிச் செய்தார் என்று தெரியவில்லை. அப்பாவின் தோழர் ஒருவர், துவாரகா, டாக்டர் துவாரகநாத், மீண்டும் என்னை இந்தப் பாதைக்குக் கொண்டுவந்தார். என் அப்பாவிடம் வாக்குத் தந்திருந்தாராம்: “உங்கள் குழந்தைகளை இந்தச் செயல்பாட்டுக்குக் கவனமாகக் கொண்டுவருவேன். இதிலிருந்து அவர்கள் விலகாமல் இருக்கும்படி கண்காணிப்பேன்.” அவர் மூத்த மகனின் திருமண வரவேற்பில் என் அண்ணா சத்யநாராயணாவையும் என்னையும் வாசிக்க வைத்தார். பிறகு திருப்பதியில் அப்பா இறந்த பல வருடங்களுக்குப் பிறகு அதேபோல் அண்ணாவுடன் வாசித்தேன். நான்கைந்து ஆண்டுகள் வீணாகிவிட்டன அதற்குள். அத்தனை ஆண்டுகள் வயலினில் எதுவும் வாசிக்காமல் இருந்தது மனத்தை உறுத்தியது.
அப்பா மேற்கத்திய சங்கீதத்தை வைத்துச் சோதனை முயற்சிகள் செய்தார் என்றீர்கள். நீங்களும் அத்தகைய முயற்சிகள் செய்ததுண்டா?
கேட்டிருக்கிறேன். ஆனால் முயற்சி செய்யவில்லை. ஏனென்கிறீர்களா? இதுவே கற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் மேற்கத்திய இசை படிப்பது எப்படி?
அது புரியவில்லை என்கிறீர்களா? (சிரிப்பு)
அது நடக்காது. அதுதான் உண்மை.
அப்படியென்றால் வாசிப்பில் இன்னும் திருப்தி கிட்டவில்லை என்று அர்த்தம்.
கிட்டவில்லை, கிட்டவில்லை, கிட்டவில்லை.
இதை விட நன்றாக வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறதா?
இப்போது கூட திருப்தியில்லை. யாராவது கற்றுத் தந்தால் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். ஆசை இருக்கிறது இன்னும்.
இப்போதுமா?
இப்போதும். ஏன், என்ன ஆகிவிட்டது இப்போது? உங்களுக்கு என் மேல் இருக்கும் அன்பினால் நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால் எனக்கு உண்மையாகவே ஒன்றும் தெரியாது. இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
மங்கத்தாயாரம்மா, பெண் கலைஞராக நீங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் என்ன? நீங்கள் பல இடங்களுக்குப் போகிறீர்கள் கச்சேரிக்கு. நீங்கள் வித்தியாசமானவர். உங்களுக்குப் பிடித்த மாதிரி மட்டுமே வாசிப்பவர்… நீங்களே என்னிடம் சொன்னீர்கள் பிடிவாதம் அதிகமென்று. ஆண்களுடன் வாசிக்கும்போது, அவர்களுடன் இணைந்து வேலை செய்யும்போது, அவர்கள் உங்களைப் பாகுபடுத்தி நடத்துகிறார்களா?
ஆமாம்.
பெண் கலைஞர்கள் என்றால் சிலர் அவர்களைத் தாழ்வாகப் பார்க்கிறார்கள்—இப்படி ஏதாவது அனுபவம் உண்டா உங்களுக்கு?
அப்பாவுடனேயே நீண்ட காலம் வாசித்ததால் அவருடனேயே வேலை செய்ததால் இதையெல்லாம் அனுபவிக்கும் வாய்ப்பு இருக்கவில்லை. அவர் மறைவுக்குப்பின்தான் மற்றவர்களுக்காக வாசித்தேன். பல பெண்கள்தாம் என்னை ஊக்குவித்தார்கள். அதன் பிறகு அந்தப் புல்லாங்குழல் மகான், சக்ரவர்த்தி மகாலிங்கம் என்னை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். அவர் அப்பாவிடம் கற்றுக்கொள்ள வந்தபோது எனக்கு ஒரு வயதாம். நான் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ஆர்வத்துடன் கவனமாகக் கேட்பேனாம். என்னைப் பார்த்தவுடன் அவருக்கு அது நினைவுக்கு வந்தது. இரண்டாவதாக என் அம்மா அவரைத் தன் மகனைவிட மேலாக நினைத்தார். அவர் வேறு எங்காவது தங்கினால் காலையில் காப்பியும் டிபனும் அனுப்புவாராம் அம்மா. அவருக்கு மொழி தெரியாது; அவர் தமிழர். ”பாவம், சின்னப் பையன், பசிக்கும்” என்று அம்மா எண்ணி அவருக்கு எல்லாவற்றையும் இங்கிருந்து அனுப்புவார். இதனால் எல்லாம் அவர் அம்மாவைத் தன் அம்மாவாகவே நினைத்தார். அவர்கள் இருவரையும் பெற்றோராகவே நினைத்து அதிக மரியாதை செலுத்தினார். அவர் வாழ்க்கையில் அப்பா ஏற்படுத்திய மாற்றமும் ஒரு காரணம். அவர் இசை வாழ்க்கையில். அதிக வேகமாக வாசிப்பாராம் அப்போது. பதினாலு… பதினாலு வயது அப்போது. அதி வேகமாக வாசிப்பார்—பதினைந்து நிமிடம் வாசிக்க வேண்டிய கீர்த்தனை இரண்டு நிமிடத்தில் [வாசித்து விடுவார்]—”கிரி பை”, ”சக்கனி ராஜ மார்க்கமு” இந்தக் கீர்த்தனை எல்லாம் மிகத் துரித கதியில் வாசிப்பார். மிருதங்கம் மணிகாருவும் பழனி [சுப்பிரமணியப் பிள்ளை]யும் அதிசயித்துப் போனார்கள். “என்னது இது? இந்த வயதில் இந்தப் பையன் எப்படி இப்படி வாசிக்க முடிகிறது? என்ன தெய்வீகம்!” என்றார்கள். அப்போது அவர் அப்பா சொன்னாராம்: “இது என்ன? இத்தனை வேகம் ஒரு வாத்தியத்தில், இது திருப்தியாக இல்லை; இவனை துவாரத்திடம் அழைத்துப் போகிறேன்.” அவர் விஜயநகரத்துக்கு அவரைக் கூட்டிக்கொண்டு வந்தார் அப்பாவிடம். வெங்கடஸ்வாமி நாயுடு என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. துவாரம் என்றால் போதும். அப்பா அவர் அப்பாவிடம் சொன்னாராம், “இவனுக்குக் கற்றுத் தர ஒன்றும் இல்லை. சாதகமும் அனுபவமும்தான் தேவை அவனுக்கு. அதை நான் கொஞ்ச நாட்கள் மேற்பார்வை செய்கிறேன். நானென்ன சொல்கிறேன் என்றால், உங்கள் பையன் ஏற்கனவே நன்றாகத்தான் வாசிக்கிறான்.” அவ்வளவு சாதாரணமாக அதைச் சொன்னவர் அவரைச் சும்மா தன் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக்கொண்டார். அப்பா பாடுவார், மகாலிங்கம் புல்லாங்குழல் வாசிப்பார். அப்பா நன்றாகப் பாடுவார். அவர் பாடுவார், மகாலிங்கம் அதைப் புல்லாங்குழலில் வாசிப்பார். நிதானம் என்றால் என்ன என்பதை அப்போது புரிந்துகொண்டாராம். எவ்வளவு சௌக்கியமாக, பரபரப்பில்லாமல் இந்த இசை இருந்தது… அதனால்தான் அவர் பிறகு அவ்வளவு சிறந்தவரானார்… திடீரென்று அவருடைய இருபதாம் வயதில் அவர் மாறி முன்னேறினார். இந்த விவரத்தை இன்டியன் ஃபைன் ஆர்ட்ஸில் மகாலிங்கம் குறிப்பிட்டார் ஒரு முறை. அப்போதுதான் எனக்குத் தெரியும். இதையெல்லாம், அப்பாவுடன் அவர் அனுபவங்களை எல்லாம், சொல்வார்… எவ்வளவு பெரிய மனிதர், என்னை முன்னுக்குக் கொண்டுவந்து எனக்குப் பாதுகாப்பாக இருந்தார். கிருஷ்ண கான சபாவில் வாசிக்கும்போது சொன்னார்: “இந்தப் பெண்ணை இவ்வளவு ஊக்குவிக்கிறேன் என்றால், அது என் கடமை. இவளுடைய அப்பாவும் அம்மாவும் என்னை அப்படிப் பார்த்துக்கொண்டார்கள். அப்பா இல்லாத பெண்ணை நான் ஊக்குவிக்கத்தான் வேண்டும். அதைச் செய்வேன். அது என் கடமை.”
அப்பாவுடன் வாசித்தபோது மதிக்கப்பட்டீர்கள் என்கிறீர்கள். இப்போது அகில இந்திய வானொலியில் வேலை செய்கிறீர்கள்—இப்போது தனியாக வாசிக்கும் நிலையில் பெண் கலைஞர்கள் மதிக்கப்படுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால் நீங்கள் சாவித்திரி அம்மாளிடம் (சாவித்திரி ராஜன்) பெண் கலைஞர்கள் மதிக்கப்படுவதில்லை என்றீர்களாம். ”மேக்கப் போட்டுக்கொள்ளுங்கள், அப்போதுதான் டி.வி.யில் வாசிக்க விடுவோம்” என்று சொல்கிறார்களாம்.
(சிரிக்கிறார்) பெரிய கேள்வியாய்க் கேட்கிறீர்களே! உங்களிடம் சொன்னால் இன்னும் என்னை அவமதிப்பார்கள்; நசுக்கிவிடுவார்கள் அவர்கள் என்று நினைக்கிறேன், இந்த மனிதர்கள். “சரியாக உடையணிந்து வந்தால் ஒரு நாளுக்கு இரண்டு மூன்று ப்ரோக்ராம் தரலாம். இப்படி இருப்பது போலவே வந்தால் எப்படி?” என்றார்கள் சிலர்… என்னிடம் நேரடியாகச் சொல்லவில்லை. நான் கேல்விப்பட்டேன். கேள்விப்பட்டு மிகவும் வேதனைப் பட்டேன். இதற்கு என்ன அர்த்தம்? இசையைக் கண்ணால் கேட்கிறார்கள்; அவர்களிடம் செவிகளில்லை, மூளை இல்லை, இதயமில்லை, கலையுமில்லை. இசை அவர்களுக்கு முக்கியமில்லை. கண்ணால் பார்க்க இது என்ன நடனமா? நடனத்தைக் கண்ணை மூடிக்கொண்டு காதால் பார்ப்பார்களா என்ன? இந்தத் தரத்துக்கா இறங்கிவிட்டார்கள்? யாராக இருந்தாலும், தமிழ் நாடோ ஆந்திராவோ கேரளாவோ எங்கிருந்தாலும், ஒருவரைப் பிடிக்காவிட்டால், ஒருவரை அவமானப்படுத்தவேண்டும் என்றால், அவரை ஆழம் காணமுடியாத குழியில் தள்ளிவிடுவார்கள்; நரகத்தில் தள்ளிவிடுவார்கள் அவரை. ஒருவரைப் பிடித்திருந்தால், அந்தப் பெண்ணுக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ அவளை சுவர்க்கத்துக்குத் தூக்கிவிடுவார்கள். இது மனித குணம் என்று நினைக்கிறேன். இங்கு அதிகம் காணப்படுகிறது. ஆனால் என்னைப் பொருத்தவரைதான் இதெல்லாம். அப்பா எல்லாம் இதில் வர மாட்டார். அவர் மிகப் பெரியவர். அவரையும் இவர்களையும் ஒப்பிடக் கூட முடியாது. இப்போதைய நிலைமையைச் சொல்கிறேன். நோக்குகள் மிகவும் தாழ்வடைந்துவிட்டன; பெண்கள் எல்லோரும் ஒரு பக்கமாக இருப்பதே மேல். பாக்கியமிருந்தால் ஒரு டி.வி. அல்லது ரேடியோ கச்சேரி நம்மைத் தேடி வரும். தகுதி இல்லை என்று நினைத்தால் வராது. மனம் புண்படுகிறது என்றால்… புண்படும். [வாய்ப்பு] வரவில்லை என்றால் என்ன செய்ய முடியும்?
மங்கத்தாயரம்மா, கோபம் வரும்போது வயலின் வாசிப்பீர்களா?
இல்லை, முடியாது.
பேசாமல் அமைதியாக இருப்பீர்களா?
யோசிப்பேன். கடந்த காலம் எப்படி இருந்ததென்று… அப்பாவின் அனுபவங்கள், மற்றப் பெரியவர்களின் அனுபவங்கள். அவை பற்றி எல்லாம் யோசித்து என்னை அமைதிப்படுத்திக்கொள்வேன். மனம் அமைதி அடைந்ததும் என் வயலினை வெளியே எடுப்பேன். அந்தச் சமயத்தில் (நான் கோபமாக இருக்கும்போது) வயலினை எடுத்தால் நாதமோ கீதமோ இருக்காது. எல்லாம் அபஸ்வரம், அபஸ்வரம்தான். சிலர் சொல்வார்கள், “மனது அமைதியாக இல்லையென்றால் வயலின் வாசித்தால் சரியாகிவிடும் என்று.” எனக்கு அந்தப் பாக்கியம் இல்லை.
அப்படியானால் மனது சரியில்லை என்றால் உங்களால் வாசிக்க முடியாதா?
இல்லை, முடியாது. அதில் பிரச்சனைகளுண்டு. இது (இப்படித் தோற்றம் குறித்துப் பேசுவது) அவமரியாதை செய்வது. நான் அவமானப்படுத்தப்படுவதுபோல் உணரும் அந்தச் சமயத்தில் வயலினை எப்படிக் கையில் எடுக்க முடியும், சொல்லுங்கள்? சில சமயம் தோன்றும்: “நான் உன்னை (வயலினை) நம்பினேன். இப்போது அவமதிக்கப்படுகிறேன். மற்றவர்கள் போல் இதை விட்டிருந்தால் பி.ஏ, எம்.ஏ, எம்.எஸ்ஸி, பி.எஸ்ஸி, பி.எச்.டி என்றெல்லாம் படித்திருக்கலாம். மதிக்கும்படியான வேலையிருக்கலாம். இந்த அவமரியாதையை ஏன் இப்போது தாங்கிக்கொள்ள வேண்டும்? சில சமயம் இதை நம்பி இப்போது என் வாழ்வு இப்படி ஆகிவிட்டது என்று நினைப்பேன். ஆனால் இது பிரக்ஞை இல்லாததனால் நிகழ்வது. இது சும்மா வரும் கலை அல்ல. ஒருவர் கற்றுத் தருவதால் மட்டுமே வந்துவிடாது. என் பூர்வ ஜன்ம பலனால் இது எனக்கு வரவேண்டும். நான் அவர் மூலமாகப் பிறந்தவள். இரண்டு வகையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவள். ஒரு மகானுக்கு நான் பிறந்தேன் ஒரு மகானிடம் நான் பயின்றேன். இரட்டை நிறைவு இதில். இதோ பாருங்கள், எல்லாக் குறைகளும், என் வாழ்க்கையில் என்னென்ன குறைகள் உண்டோ அவை எல்லாமே இந்த இரண்டு ஆசிகளை நினத்தால் சிறுத்துப்போய்விடுகின்றன. எல்லா வலியும் அடங்கிவிடுகிறது. ஐயோ, என் வாழ்க்கையில் இத்தனை தியாகங்கள் செய்து, இத்தனை தனிமையை அனுபவித்து… தனிமை மட்டுமல்ல, வேறு எத்தனையோ—பணம் இல்லை, பணம் கூட இல்லை எனக்கு (சிரிக்கிறார்). பெயர் பெரிது ஆனால் எனக்கென்று பணம் கிடையாது. ஒரளவு வரை என் அப்பா என்னைக் கொண்டுவந்தார். அவர் வேறு என்ன செய்ய முடியும்? இந்த வயலின்தான் என் சொத்து… வேறு எதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லா வகை ”தந்திரங்களும்” செய்பவர்கள் பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். எனக்கு எந்தப் பதவியைத் தந்திருக்கிறது இந்த வயலின்? இதை ஏன் நம்பினேன்? இந்த மாதிரி நினைப்பது நியாயம்தானே? (தமிழில்) நியாயம்தானே?
ஆமாம். இப்படித் தோன்றுவது நியாயம்தான்.
எப்போதாவது, பெண்ணாக இருப்பதால் இப்படித் தோன்றும். ஆனால் உடனே அடங்கிவிடும். இது இயற்கைதான்.
மகாலிங்கத்துக்கு வாசித்தது தவிர வேறு பல வித்வான்களுக்கும் வாசித்திருக்கிறீர்கள்…
ஆமாம், பலருக்கு வயலின் பக்கவாத்தியம் வாசித்திருக்கிறேன்.
யாருக்கெல்லாம்?
அந்தக் காலத்து வித்வான்கள்; செம்பை [வைத்தியனாத பாகவதர்].
செம்பையா?!
செம்பையுடன் மூன்று நான்கு முறை வாசித்திருக்கிறேன். நிறைய ஊக்கப்படுத்தியிருக்கிறார் என்னை. அப்புறம் பாலமுரளி [கிருஷ்ணா] நேதுநூரி [கிருஷ்ணமூர்த்தி], வோலெட்டி [வெங்கடேஸ்வர்லு] நூகல சின்ன சத்யநாராயணம். இங்கே [தமிழ் நாட்டில்] மிகப் பெரிய வித்வான் டி. கே ஜயராமன், [ஆசார்ய சூடாமணி] ஏ. சுந்தரேசன், தஞ்சாவூர் சங்கர ஐயர்…. பல வித்வான்கள், பெரிய வித்வான்கள்.
அவர்கள் ஊக்குவித்தார்களா?
ரொம்ப ஊக்கப்படுத்தினார்கள். மனத்தில் மரியாதையுடன் வாய்ப்பு தந்து ஊக்கமும் தந்தார்கள். அதைக் கச்சேரியில் என்னால் பார்க்க முடிந்தது. இன்னும் பலர்—சந்தியாவந்தனம் ஸ்ரீனிவாச ராவ், ஸீனியர் ஆர்டிஸ்ட் அவர்; மிகப் பெரிய வித்வான். டி.கே. பட்டம்மாள், எம்.எல்.வி [எம்.எல். வசந்தகுமாரி], மணி கிருஷ்ணஸ்வாமி, ஆர் வேதவல்லி. இதை எல்லாம் விட, எம். எஸ். அம்மா [எம்.எஸ். சுப்புலட்சுமி மகாலிங்கம் போலவே என்னை வெகுவாக ஊக்கப்படுத்தியிருக்கிறார்.
எல்லோருமே உங்களை ஊக்க்கப்படுத்தியிருக்கிறார்கள், மங்கத்தாயாரம்மா. பிறகு ஏன் இந்த அதிருப்தி?
தெரியவில்லை.
அங்கீகாரமில்லை, பணமில்லை என்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையை இந்த வயலினுக்குத் தந்திருக்கிறீர்கள். கல்யாணம்கூட செய்துகொள்ளவில்லை. ஆனால் உங்களுக்கு மனநிறைவு இல்லை.
மன நிறைவு உண்டாகவில்லை. ஏனென்று தெரியவில்லை. எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால்…
தனிமை இருக்கிறது…
தனிமை மட்டுமில்லை. இப்போது ஒரு குழந்தைக்கு ஒரு மிட்டாய் தந்தால் அது சாப்பிட்டுவிட்டு டாட்டா சொல்லிவிட்டுப் போகும். அதேபோல்… எனக்கு—நான் பெரிய விதுஷியாக இல்லாமல் இருக்கலாம்—என் தரத்துக்கு ஏற்றபடி எனக்கு ஊக்கம் தந்தால் அது அந்த மிட்டாய் தருவதுபோல. அந்த ஊக்கம் ஒரு மிட்டாய். அதைத் தந்தால் நன்றாக வாசித்துவிட்டு, திரும்பி வந்து “கச்சேரியில் இன்று நன்றாக வாசித்தேன்” என்று சொல்வேன். மகிழ்ச்சியாக இருக்கும், அது பற்றி பேசுவேன். ஒரு கலைஞரோ… அல்லது ஆடியன்ஸில் இருக்கும் பத்து பேரோ திருப்திப்பட்டால் அவர்கள் முகத்தில் தெரியும். கலைஞர்களுக்குச் சின்ன விஷயங்களில் வெகு சீக்கிரம் சந்தோஷம் பிறந்துவிடும். இவ்வளவு பெரிய பின்னணி எனக்கு இருக்கிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு நான்கு வர்ணமோ கீர்த்தனையோ கற்றுக்கொண்டு, “நான் சௌக்கியமாக வாசிப்பேன்; வாசித்துக் காட்டுகிறேன், நீங்கள் தயவுசெய்து கேளுங்கள்” என்று நான் சொன்னால் அல்லது எப்படி இருக்கிறது என்று அபிப்பிராயத்தைக் கேட்டால் நீங்கள் ஒன்றும் சொல்லாவிட்டால் மனம் வருத்தப்படாதா?
மங்கத்தாயாரம்மா, உங்க வீட்டில் நீங்க வாசிப்பதைக் கேட்க விரும்புவார்களா?
எல்லோரும் கேட்பார்கள். எல்லோருமே இந்த இசைப் பரம்பரையில் வந்தவர்கள் நான்கு தலைமுறைகளாக. அப்பாவும் தாத்தாவும் கொள்ளுத்தாத்தாவும் அவருடைய அப்பாவும். அங்கேயிருந்து ஆரம்பமாகிறது.
இல்லை, தற்காலம் பற்றிக் கேட்கிறேன். உங்கள் கூடப் பிறந்தவர்கள் நீங்கள் வாசிப்பதைக் கேட்கிறார்களா?
ஓ, கட்டாயமாக. எல்லோருக்கும் பிடிக்கும். என் அண்ணா சத்யநாராயணாவும் வயலின் வாத்தியக்காரர்தான். அவரிடம் எல்லாம் இருக்கிறது. ஆனாலும் இந்த உலகத்தில் எங்களுக்கு அங்கீகாரம் இல்லை. துவாரம் குடும்பத்துக்கே அங்கீகாரம் தர மறுக்கிறார்கள். பழைய பாரம்பரியங்கள் தங்கள் தன்மையை மாற்றிக்கொள்ளும்போது அவை வியாபாரமாகி அவற்றின் திசை மாறிவிடுகிறது; அவற்றின் தடங்களும் மாறிவிடுகின்றன. இப்படி முன்னால் தள்ளிவிடப்படவேண்டியவர்களைத்தான் அவர்கள் ஊக்குவிப்பார்கள். இன்னொன்றையும் உங்களுக்குச் சொல்கிறேன். நான் கர்வி என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள். சொல்கிறேன், கேளுங்கள். பாப்பாலால் நகைக் கடை இருக்கிறது. அப்படிப் பல கடைகள் உண்டு. தங்க முலாம் பூசிய நகைகள் விற்கும் கடைகளும் உண்டு. ஒரு கையில் ஒளிரும் வைரமும் இன்னொரு கையில் ஜொலிக்கும் கற்களும்—முலாம் பூசிய நகையில் உள்ள கற்கள்
என்னமாய் ஒளிர்கின்றன! ஆனால் அந்தக் கற்களும் வைரமும் ஒன்றாகுமா? பாப்பாலால் கடையின் வைரங்கள் உயர்ந்தவை; அவை எப்போதும் உயர்ந்தவையாகவே இருக்கும்.
உங்களிடம் கற்றுக்கொள்பவர்கள் உண்டா?
இல்லை, இந்த வீடு அதற்குச் சௌகரியமாக இல்லை. ஒரு தனி அறை இருந்தாலொழிய மாணவர்கள் வந்துபோக முடியாது.
அவர்கள் வீட்டுக்குப் போய் பாடம் எடுக்கலாமே? முடியாதா?
எங்கள் அப்பா அதைச் செய்யவில்லை. நான் ஒரு பெண். நான் போய் பாட்டு ட்யூஷன் எடுத்தால் நன்றாக இருக்காது. ஒவ்வொரு வீட்டுக்கும் போனால், (தமிழில்) “நாயுடுகாரு லேடி வீடு வீடாய்ப் போய் சொல்லித்தராங்க” என்பார்கள்.
மாணவர்களும் இங்கே வருவதில்லை தனி அறை இல்லாததால்…
யாருக்கும் நான் சொல்லவில்லை, விளம்பரம் செய்யவில்லை. ஆனால் அப்படிச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். செய்ய வேண்டும்.
உங்களுக்கு என்று அறை ஒன்று இருந்தாலா?
இல்லை, இல்லை. என் அப்பா பெயரில் ஒரு பள்ளியைத் தொடங்க ஆசை. தனியாக இரண்டு மூன்று அறைகள் இருந்தால் விளம்பரம் செய்யலாம். [வீட்டிலுள்ள] ஒரே அறையில் நான் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தால் மற்றவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும். அவர்களை அசௌகரியப்படுத்தக் கூடாது. அதையும் பார்க்க வேண்டும். ஆரம்பகால சங்கீத மாணவர்களைச் சகித்துக்கொள்வது கடினம். அத்தனை அபஸ்வரங்களையும் அவர்கள் ஏன் தாங்கிக்கொள்ள வேண்டும்? வயலினிலும் ஃப்ளூட்டிலும் ஆரம்பத்தில் வெறும் அபஸ்வரங்கள்தாம். சரியான தடத்துக்கு வந்தபின் கேட்க நன்றாக இருக்கும்; அதுவரை வெறும் அபஸ்வரக் களஞ்சியம்தான். தாங்க முடியாது. வீணை அப்படி இல்லை. தண்டியும் மேருவும் மெட்டுகளும் உண்டு. எதை வாசித்தாலும், இழைத்து வாசிக்காவிட்டாலும் அபஸ்வரம் விழாது. வயலின் அப்படியில்லை; அதற்குத் தண்டி கிடையாது. தண்டியே இல்லாத விரல் பலகை. சின்ன, வெகு குறுகலான விரல் பலகையில் அதிகம் காட்ட முடியாது.
மங்கத்தாயாரம்மா, திருப்பிக் கேட்கிறேன். உங்கள் அப்பா மேற்கத்திய இசையை வைத்துச் சோதனை முயற்சிகள் செய்தார். எதிர்காலத்தில் நீங்களும் அதை முயற்சி செய்ய வாய்ப்பு உண்டா?
செய்ய விருப்பம் இருக்கிறது. நிச்சயமாக ஆசை இருக்கிறது. அவர் ஒலிப்பதிவுகளில் புதிதாகப் படைப்பதற்காகச் செய்த சில நுணுக்கங்களை முயற்சி செய்து பார்க்க விருப்பம். தலைகீழாக நின்றாவது அதைச் செய்ய வேண்டும். என்னால் முடியும். முயற்சி செய்ய வேண்டும். கடவுள் உதவ வேண்டும்.
மங்கத்தாயாரம்மா, சாவித்திரி ராஜனுடன் மிகவும் நெருங்கிப் பழகியிருக்கிறீர்கள், இல்லையா? எப்படி அவருடன் நெருக்கமான உறவு ஏற்பட்டது? உங்கள் வேலையில் உங்கள் அனுபவங்கள் எப்படி இருந்தன? அவர் அவற்றை எதிர்கொள்வதில் உங்களுக்கு எவ்வாறு உதவினார்?
(தமிழில் பேச ஆரம்பித்துப் பிறகு தெலுங்கில் பேசுகிறார்) பார்க்கப்போனால், உண்மையாகச் சொல்கிறேன், என் அம்மா கூட சங்கீதத்தில் அந்தம்மா அளவு ஊக்கம் தந்தது கிடையாது. இப்படி நான் வந்ததற்கு, சாவித்திரி ராஜன் செய்தது… வார்த்தையே இல்லை சொல்ல. வார்த்தையே இல்லை எந்த மொழியிலும். அவர் பண்ணியது மிகப் பெரிய விஷயம். பண ரீதியாக இல்லை. அந்தம்மா என் அம்மா மாதிரி, என் குரு. என் அப்பா ஸ்தானத்தில்; தெய்வம் மாதிரி. எனக்கு எவ்வளவோ புத்தி சொல்லியிருக்கிறார். எவ்வளவோ நடந்தது! மனது சரியில்லை என்றால் அவரிடம் போய் அழுவேன். ”எவ்வளவு வேண்டுமானாலும் அழு, அப்புறம் நான் பேசுகிறேன்” என்பார். காப்பி, டிபன் எல்லாம் தந்து உட்காரச் சொல்வார். ”மங்கத்தாயாரு, வாழ்க்கையில் எவ்வளவோ மேடு பள்ளங்கள் வரும். அதையெல்லாம் நீ தாண்டவேண்டும்… அதை நீ செய்தால் அது ரொம்ப உத்தமம். நூறோ இல்லை நூற்றுக்கு மேலோ நாம் அனுபவிக்கும் கஷ்டங்களை ஒவ்வொரு நாளும் நாம் எண்ணிப் பார்க்கலாம். அப்படியும் சங்கீதத்தை விடாமல் இருக்கிறோம். அதுதான் உண்மையான சங்கீதம், அப்போதுதான் அது நன்றாக இருக்கும். அப்போதுதான் அதில் நுண்ணுணர்வு இருக்கும். இன்னும் நீ நிறைய தூரம் போகவேண்டும். இந்த விஷயத்துக்கெல்லாம் நீ இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டால், நீ இப்படி இருந்தால், எப்படி நீ அதைச் செய்ய முடியும்? யாரோ உன்னை அவமதித்தால் என்ன ஆகிவிடும்? நம் வயலின் நம்மை அவமதிக்கக் கூடாது. இதை மனத்தில் வைத்துக்கொள். ’இனிமேல் இந்த வயலின்தான் என் தெய்வம், என் வாழ்க்கை, இதுதான் எல்லாமே—அப்பா, அம்மா, குடும்பம், குழந்தைகள், குரு, தெய்வம், எல்லாமே.’ அப்படி அதை வைத்துக்கொண்டு வாழ முடியாதா உனக்கு? அதைச் செய்து பாரேன்.” இப்படிப் பேசுவார். பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டு, அங்கேயே இருக்கச் சொல்வார், தன் பெண்ணை விட மேலாக என்னைப் பார்த்துக்கொள்வார். சொல்லவேண்டியதை எல்லாம் சொல்வார். புத்திமதி சொல்வார். உண்மையில் அவர் என் குரு, என் அம்மா, அப்பா மாதிரி. அவர் இல்லாததை இப்போதும் உணர்கிறேன். மற்றவர்கள் இழப்பு பற்றி தெரியாது, ஆனால் அவர் இல்லாதது எனக்குப் பெரிய நஷ்டம். என்னை முதலில் ஊக்கப்படுத்தியது சாவித்திரி அம்மாதான். ஸம்ப்ரதாயா நிறுவனத்திடம் எனக்கு ஒரு கச்சேரி, ஒரு மூணு மணி நேர லெக்சர்-டெமான்ஸ்ட்ரேஷன் ஏற்பாடு செய்யச் சொன்னார். நான் தனியாகவும் வாசிப்பேன் என்று அப்போதுதான் பத்து பேருக்குத் தெரியவந்தது. அப்புறம் அந்த வெளிநாட்டு ஆசாமி ஒருவர் சரஸ்வதி ப்ராஜக்ட் பண்ணினார், மூன்று மணி நேரக் கச்சேரி. அவர் அந்த ஒலிநாடாக்களை ஆஸ்திரேலியாவில் விற்றுக்கொண்டிருக்கிறாராம். அதுவும் சாவித்திரி அம்மா மூலமாகத்தான் நடந்தது. ஏதோ ஒன்றிரண்டு நல்ல விஷயங்கள் எனக்கு நடந்திருக்கிறது என்றால் அது சாவித்திரி அம்மாவால்தான். வேறு யாரும் அப்படி ஊக்குவித்தது கிடையாது. யாரும் அப்படிச் செய்யப்போவதுமில்லை.
மங்கத்தாயாரம்மா, சாவித்திரி ராஜன் மாதிரி வேறு யாராவது பெண்மணி உங்களுக்கு நெருக்கமாக இருந்தாரா? உங்க அக்காவோ தங்கையோ, வேறு யாராவதோ? உங்க வயதில் இசை உலகத்தில் ஏதாவது தோழிகள் உண்டா?
கேசி, ஃப்ளூட் கேசி. [என். கேசி]
நெருங்கிய தோழியா?
முப்பது வருஷமாக நெருங்கிய தோழி. அப்பா இறந்த பிறகு, நான் வயலின் திரும்ப வாசிக்க ஆரம்பித்தபோது, 1968இல் கேசியுடைய நேஷனல் ப்ரொக்ராம் இருந்தது. மகாலிங்கம் அதில் பங்குபெறச் சொல்லி என்னை ஊக்குவித்தார். அம்மாவிடம் சொன்னார்: இவ்வளவு நன்றாக வாசிக்கும் பெண்னை வீட்டோடு வைத்து என்ன பயன்? கொஞ்சம் வெளியில் வரட்டுமே அவள். துவாரம் வெங்கடசாமி நாயுடுவின் ஆத்மா சந்தோஷப்படட்டும்.” கேசி அவருடைய சிஷ்யை, இல்லையா? எனக்கு ஊக்கம் தந்து நான் இப்படி வயலின் வாசிக்கும் நிலைமைக்கு கொண்டுவந்தது—எல்லாம் ஃப்ளூட் கேசி அம்மாவும் மகாலிங்கமும் செய்ததுதான்.
மங்கத்தாயாரம்மா, சாவித்திரி அம்மா ஒரு முறை உங்களிடம் ஏன் இந்த அவமதிப்புகளைத் தாங்க வேண்டும் என்று கேட்டார் இல்லையா? நீங்கள் ராஜினாமா செய்திருக்கலாமே? இல்லை அந்தப் பணம் தேவைப்படுகிறதா?
ஆமாம், தேவைப்படுகிறது. அதனால்தான் வேலையை விட முடியாது. இல்லாவிட்டால் அந்த மாதிரி கலைஞர்களை, அந்த மாதிரி இசையைக் காதுகொடுத்துக் கேட்கக் கூடாது. கேட்கக் கூடாது அந்த மாதிரி சங்கீதத்தை. அதை [ரேடியோவில்] கேட்பது கலைஞர்களுக்கு மட்டும் பெரிய பாவம் இல்லை, கேட்கும் மற்றவர்களுக்கும்தான். என்ன வேண்டுமானாலும் ஆகலாம் அதனால். சாஸ்திரங்கள் இசை ஆரோக்கியத்தைத் தருகிறது என்று சொல்கின்றன. இப்படிப்பட்ட பாட்டைக் கேட்டால் ஆரோக்கியமே போய்விடும்; பணமும் போய்விடும். ஆனால் அப்படிப்பட்ட பாட்டுக்கு நான் வயலின் வாசித்தேன். நான் என்ன செய்ய முடியும்? அது என் கடமை, அதனால் செய்தேன். இந்தப் பதினாறு ஆண்டுகளில் பலமுறை இதை அனுபவித்துவிட்டேன்.
நீங்கள் ஏ.ஐ.ஆர் ஆர்டிஸ்ட்டாக இருப்பதாலா?
வேறு யாருக்காகவும் போய் இப்படிப்பட்ட பாட்டுக்கு வாசிக்க மாட்டேன். அப்படிச் செய்யவே கூடாது. கட்டாயம் என்றால் சுத்தமான இசையைக் கேட்க வேண்டும், இல்லையா, கேட்கவே கூடாது. பக்தி பாடல்களைக் கேட்டால் முக்தி கிடைக்கும். பரமாத்மா உதவுவார். நல்ல பாட்டைக் கேட்டால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எனக்கு அந்த அனுபவம் உண்டு. அப்பா இறந்தபின், மன அழுத்தம் இருந்தபோது, அப்பாவின் மாணவர் கிருஷ்ணையங்காரு சொன்னார்: “ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறாய்? சென்ட்ரல் காலேஜில் ஒரு பெரிய வித்வான் கச்சேரி இருக்கிறது. அங்கே போகலாம். வா, போய்க் கேட்கலாம்.” சரி என்றுவிட்டுப் போனோம் இருவரும். அதற்குப் பிறகு எனக்கு ஜுரம் வந்துவிட்டது. அது என்னவோ, ஏனோ, அந்த ஜுரம் பத்து பதினைந்து நாட்கள் விடாமல் இருந்தது. இதற்கு என்ன சொல்கிறீர்கள்? இசை ஆரோக்கியத்தைத் தரும், மோசமான இசை ஆரோக்கியத்தைக் குலைத்துவிடும் என்பது உண்மைதானே? அதிலிருந்து இது உண்மை என்று எனக்குத் தெரிந்துவிட்டது. ”சங்கீத மகரந்தம்” நூலிலோ வேறு எங்கோ அப்படிச் சொல்லியிருக்கிறது. உயர்ந்த மனிதர்கள் அனுபவங்களின் ஆதாரத்தில்தான் சாஸ்திரங்களை எழுதியிருக்கிறார்கள்.
மனம் இப்படி பாதிக்கப்பட்டபோது என்ன செய்தீர்கள்? வீட்டுக்கு வந்து வாசித்தீர்களா?
இல்லை, காதுகளை நன்றாகச் சுத்தமாகக் கழுவிக்கொள்வேன்! (சிரிப்பு) சிரிக்காதீர்கள்! நான் நன்றாக வாசிக்கிறேனா? இல்லை, வாசிப்பதில்லை. ஆனால் என் செவி நிறையக் கேட்டிருக்கிறது, இல்லையா? நல்ல இசையைக் கேட்டிருப்பதால் என் செவி மோசமானதை ஏற்காது. நான் நன்றாக வாசிக்கிறேன் என்று பெருமையாகப் பேசவில்லை. நான் சொன்னேன் உங்களிடம் ஏற்கனவே, எனக்குத் தெரியாது, நான் இன்னும் கற்க வேண்டும் என்று. அப்படியானாலும் என் மனம் அதை (மோசமான இசையை) ஏற்காது. அப்படிப்பட்ட மகானுக்குப் பிறந்துவிட்டு இப்படி வாசிக்கவேண்டி இருக்கிறதே என்பது வலிக்கிறது. என்ன செய்ய முடியும்? வேலைக்காக எல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது, இல்லையா? ஆனானப்பட்ட ஷேக்ஸ்பியர் கூட ஒரு வேலையில் சேர்ந்திருந்தால் உயர் அதிகாரியிடம் சண்டை போட்டிருப்பார் ஆனால் எல்லா அவமதிப்பையும் விழுங்கியிருப்பார்! (சிரிப்பு)
நாங்கள் பேசி முடிக்கும்போது மாலையாகிவிட்டது. அவருடைய தங்கை சில விருந்தினர்களை எதிர்பார்த்திருந்தார். அதனால் மங்கத்தாயாரம்மா வரவேற்பறையை ஒட்டியிருந்த ரேழியின் ஓரத்துக்கு என்னைக் கூட்டிப்போய் ஒரு கோப்பை தேநீர் தந்தார். அங்கே உட்கார்ந்துகொண்டு வெகு நேரம் எங்கள் இருவருக்கும் நன்றாகத் தெரிந்த, நாங்கள் இருவரும் வெகுவாகப் போற்றிய சாவித்திரி ராஜன் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.
An interview of great depth. Yet I am wondering at the mental make up of Smt. Mangathaayaaru. She, probably, underestimated her skills. It is a pity that her obsession with Perfect and Divine Music stood as an impediment for her progress.