காற்றில் கலக்கும் பேரோசை

‘கமல மேவு திருவே!  
நின்மேல் காதலாகி நின்றேன்.  
குமரி நின்னை இங்கே பெற்றோர்  
கோடியின்ப முற்றார்.  
முல்லை போன்ற முறுவல் காட்டி  
மோக வாதை நீக்கி  
எல்லையற்ற சுவையே- எனை நீ  
என்றும் வாழ வைப்பாய்.’  
திருவேட்கை கொண்டு பாரதியார் பாடிய பாடல் அது. 

செல்வம், வளம், சேமிப்பு இவை பொதுவாக உயிரினங்கள் விரும்பும் ஒன்று. தன் இணையற்ற அழகால் மட்டுமல்ல, தன் வளத்தினால், (இங்கே இதை உடற்கூற்றைச் சார்ந்த ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்) தன் இணையைக் கவரும் குணம் அனைத்து உயிர்களிடத்தும் காணப்படுகிறது. மனிதன் தன் உடலில், உயிர் ஆற்றலைச் சேமிக்கிறான்; மூளை, நரம்புத் தூண்டுதல்களால் ஏற்பட்ட அனுபவத்தை நினைவுகளாகச் சேமிக்கிறது; மனம் எண்ணங்களாகச் சேமிக்கிறது. சேமித்தல் என்பது இயற்கை வழங்கியுள்ள கொடை. 

மனிதன் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை அறிவுச் சேமிப்பிலும், செல்வச் சேமிப்பிலும் செலவிடுகிறான். அவன் உழைப்பை வங்கிகளில் வைப்புத் தொகையாக, பணச் சந்தையில் முதலீடுகளாக, தங்கமாக, வீடு மற்றும் மனை, நிலம் என்றெல்லாம் மாற்றுகிறான். இதில் வங்கிகள் பெரும் பங்காற்றுகின்றன. நேற்றிருந்த வங்கி இன்றில்லை எனும் சூழலில் அவன் சந்திக்கும் பிரச்சனைகள் அதிகம். அதுவும் இன்றைய உலகக் கிராமத்தில் எங்கோ நடக்கும் போர், எங்கோ சரியும் ஒரு நிதி நிறுவனம், எங்கோ வீழ்ச்சியடையும் ஒரு வர்த்தகம், ‘பட்டாம் பூச்சி விளைவு/ தாக்கம்’ எனச் சொல்வார்களே அதைப் போல நடந்து விடுகிறது. 

இதுவரை இந்த உலகம் அதிக வீழ்ச்சியைக் கொணரும் ஐந்து நிதிச் சிக்கல்களை சந்தித்துள்ளது. 

  • 1772ம் ஆண்டின் கடன் சிக்கல்- பாஸ்டன் தேநீர் விருந்து 
  • மிகப் பெரிய சரிவான, பத்தாண்டு நீடித்த ‘க்ரேட் டிப்ரெஷன்’- 1929-39 
  • 1973ல் நடந்த எரிபொருள் எண்ணெய் ஏற்றுமதி நாட்டுக் கூட்டமைப்பு அளித்த விலை அதிர்ச்சி. 
  • 1997-ல் நடந்த ஆசியச் சிக்கல் 
  • நிதிச் சிக்கல் 2007-08 

இதில் பத்தாண்டு காலம் நீடித்த பொருளாதார இறங்கு முகம், 1933 வாக்கில் 15 மில்லியன் அமெரிக்கர்களுக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்காமல் துன்புறுத்தியது; 20,000 குழுமங்கள் திவாலாகின. அதிகபட்ச அமெரிக்க வங்கிகள் மூழ்கிப் போயின. 

வங்கிகள் பொருளாதாரத் தேரை இழுத்துச் செல்லும் சக்கரங்கள், சக்கரத்தின் அச்சாணிகள்; அவை முறிந்தால் தேர் நிலை குலையும். ‘திரு நாள் வந்தது; தேர் வந்தது; ஊர்வலம் போகும் நாள் வந்தது; ஓட முடியாமல் தேர் நின்றது.’ 

வங்கிகள் சந்தித்த/ சந்திக்கும் வீழ்ச்சிகள் 19, 20, 21ம் நூற்றாண்டுகளின் மாபெரும் கவலைகளுக்கு இடமளிக்கின்றன. அவை நிதிச் சிக்கல்களை உருவாக்குகின்றன; பொருளாதாரச் சரிவுகள்; அதனால் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைவது; கடன் கிடைக்காமல் இருப்பது; அல்லது கடனை அதிக விலையில் பெற நேர்வது; நிதிக் குமிழிகளின் வெடிப்பு, அரசாங்கமே தான் பெற்ற கடன்களை குறிப்பிட்ட தவணையில், குறிப்பிட்ட நாளில் செலுத்த முடியாமல் போவது (சமீபத்திய எடுத்துக்காட்டுகள்- இலங்கை, பாகிஸ்தான், அவர்களின் இந்த நிலையைத் தந்திரமாகப் பயன் படுத்திக் கொள்ளும் சீனா போன்ற வல்லூறுகள்)  நாட்டில் பணப்புழக்கம் குறைவது.. என அனைத்திற்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக வங்கிகள் திவாலாவதைக் குறிப்பிடலாம். 

இது தேசிய வருமானத்தைக் குறைக்கும்; வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரிக்கும்; தனி நபர் வருமானம், செலவுகளுக்குப் போதாமல் போகும்; சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் அதிகரிக்கும், அரசுகள் அதிகக் கடன் வாங்கும். இந்த நிலையை தற்போது உக்ரைன், அர்ஜென்டீனா, ஜமைக்கா, ரஷ்யா, மெக்ஸிகோ, ஹங்கேரி போன்ற நாடுகள் சந்தித்து வருகின்றன. ரஷ்யாவின் நண்பனாக இருந்து கொண்டே, அதன் செல்வாக்கை மத்திய ஆசிய நாடுகளில் சீனா மறைமுகமாக அழித்து வருகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்; பாலுக்குக் காவல் நிற்கும் பூனை! 

அமெரிக்காவில் பல பெரிய வங்கிகள் மற்றும் சிறிய, நடுத்தர வங்கிகளும் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. சில்வர் கேபிடல் கார்பரேஷன், (Silver Capital Corp) சிலிக்கான் வேலி பேங்க், (Silicon Valley Bank) சிக்னேசர் வங்கி, (Signature Bank) கிரெடிட் சூயிஸ் குழுமம், (Credit Suisse Group AG) ஃப்ர்ஸ்ட் ரிபப்ளிக் பேங்க் (First Republic Bank) என்று பட்டியல் நீள்கிறது. சிலிக்கான் வேலி பேங்க், சிக்னேசர் பேங்க், ஃப்ர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி இவற்றின் இணைந்த சொத்துக்களின் மதிப்பு 25 வங்கிகளின் சொத்து மதிப்பை விட அதிகம்; அப்படியிருந்தும் ஏன் வீழ்ந்தன? ஃப்ர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் நிலையை சீர் செய்யும் திட்டங்களை முன்னெடுத்திருந்தாலும், இத்துடன் நிதி மற்றும் வங்கி அமைப்புகள் எதிர் கொள்ளும் சவால்களும், சிக்கல்களும் முடிவடைந்து விட்டன எனச் சொல்ல இயலாது என்று, ஸ்டான்ஃபோர்ட் பேராசிரியர்  டைலர் டுர்டன் (Tyler Durden) சொல்கிறார். இன்றைய வங்கிகளின் நிலை பயமுறுத்தும் ஒன்றாகத் தான் இருக்கிறது என்று எச்சரிக்கை கொடுக்கிறார்.  ஒரு டைம் பாமைப் போல வெடிக்கும் அபாய காலக் கட்டத்தை பல அமெரிக்க வங்கிகள் நெருங்குவதாகத் தெரிகிறது என்று அவர் மேலும் சொல்கிறார். பேக் வெஸ்ட் (PacWest) மற்றும் வெஸ்டர்ன் அலையன்சின் (western alliance) பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. முதலீட்டாளர்களின் பதட்டம் இதற்கான முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது. வேகமாக ஏறி வரும் வட்டி விகிதங்கள், வேலை முறைகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள், பொருளாதாரச் சரிவின் சாத்தியங்கள் என்ற இந்த வெடிமருந்துக் கலவை வெடிக்காமல் பிசுபிசுக்குமா என்பது அவர் கேள்வி. 

அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் எப்படி வங்கிகளைப் பாதிக்கின்றன? வங்கிகள் நாம் செலுத்தும் வைப்புத் தொகையை கடன் வழங்குவதற்கு மட்டுமே பயன் படுத்துவதில்லை. வங்கி என்ற ஒன்று நடப்பிற்கு வந்த போது, வைப்புத் தொகையை பொது வாடிக்கையாளரிடம் பெற்று, அதைத் தேவையான பொது வர்த்தகங்களுக்கு சற்று மேலதிக வட்டிக்கு விட்டு, வைப்பு நிதியாளருக்கு குறைந்த வட்டி கொடுத்து, இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தில் இலாபம் பார்ப்பது என்பது தான் நோக்கமாக இருந்தது. ஆனால், தனியாருக்கான வீட்டுக் கடன் கள், நுகர்வோர் கடன்கள், வாகனக் கடன்கள், கல்விக் கடன்கள் அரசுகளின் கொள்கை முடிவுகளால் அதிகரித்தன. அதிலும், வீட்டுக் கடனிற்கான சட்ட திட்டங்களும், வாங்குபவரின் தகுதியும் போன்ற இன்ன பிறவும் நீர்த்த பிறகு (இதைச் செய்ததும் அரசுகள் தான்) வங்கிகளின் சொத்திற்கும் (அவை வழங்கும் கடன்) அவற்றின் பொறுப்பிற்கும் (அவை பெற்றுள்ள வைப்புத் தொகை), இடையே இருக்கும் கால பேதங்கள் அதிகரித்தன. வரவிருக்கும் தொகையை வைத்து ‘பெறப்பட்டவை என்ற டெரைவேடிஸ்’ (derivatives) என்ற நூதன காகிதங்கள் உயிர் பெற்ற போது, அன்னிய சந்தையில் கரன்சிகளே வணிகப் பொருளான போது, வங்கிகள் அதில் ஆர்வத்துடன் குதித்தன. இந்த நிலையில் உலகை தள்ளாடச் செய்த கோவிட் என்ற பெருந்தொற்று, மூலப் பொருட்கள் சரிவரக் கிடைக்காமல் உலகச் செயல்பாட்டைப் பாதித்தது. (மூல காரணமான தேசம் தனக்கு நிகர் யாருண்டு என்று இன்று வரை உலா வந்து கொண்டிருக்கிறது- உலக நாடுகள் அமைப்போ, உலக சுகாதார அமைப்போ அதை ஒன்றும் செய்ய முடியவில்லை.) 

வங்கிகள், கடன் வழங்குவதுடன், முதலீடுகளும் செய்யும். அதன் முதலீடுகள் அரசுக் கடன் பத்திரங்களில் பல்லாண்டுக்கான முதலீடுகளாக இருந்தால், ஏறும் வட்டி விகிதங்கள், வங்கிகள் முதலீடாய் வைத்திருக்கும் கடன் பத்திரங்களிலிருந்து பெறும் வட்டி வருமானம் மிகக் குறைந்து விடும். ஏனெனில் அந்தக் கடன் பத்திரங்களில் குறிப்பிடப்பட்டிருந்த வட்டி விகிதம் தான் வருமானமாகக் கிடைக்கும். சந்தையில் விற்றாலும் ‘கடை விரித்தேன், கொள்பவரில்லை’ என்ற கதைதான். அதன் மதிப்பு வீழும். அதே நேரம், காசோலை கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கி தரும் 0.01% வைப்புக் கணக்கிலிருந்து.5.1% தரும் பணச் சந்தைக்குக் சென்று விடுவார்கள். வெற்றுக் காகிதமான கடன் பத்திரச் சொத்துக்களும், உருண்டோடிடும் வைப்புத் தொகையும் வங்கிகளை மத்தளத்தின் இரு பக்க அடிகளைப் போலத் தாக்கும். அது மட்டுமல்ல, கும்கி வாசிப்பதைப் போல அமெரிக்க வணிக மனைத்துறையின் வீழ்ச்சி, வங்கிகளை களைக்கும் வரை அடித்துப் போட்டு விட்டது. எனவே, அதிகரிக்கும் வட்டி, பங்கு மூலதனத்தை பலவீனமாக்கி, அதன் ஆபத்துக்களை அதிகரித்து, அதன் சொத்துக்களை விட அதன் கடன் சுமையை பெரிதாக்கிவிடும். அமெரிக்க வங்கிகளின் சொத்துக்களின் சந்தை மதிப்பு, அதன் ஆண்டறிக்கை புத்தக எண்ணிலிருந்து (Annual Balance Sheet) $2 ட்ரில்லியன் குறைவாக இருக்கிறது என்பதில் வியப்பேதும் இல்லை! ஏறத்தாழ 4800 அமெரிக்க வங்கிகளின் நிதி நிலவரத்தை ஆராய்ந்த போது, நடுத்தர, மற்றும் சிறிய வங்கிகளின் மூலதனம் மிகுந்த சரிவைக் கண்டுள்ளது என்பது, வங்கிகள் மேன்மேலும் திவாலாகும் நிலையில் இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. 

கார்டியன் இதழிற்கு அளித்த பேட்டியில் அமித் செரு (Amit Seru) சொல்கிறார்: 4800 வங்கிகளில், 1000க்கும் மேற்பட்டவை நீரில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. 

வகை தொகையில்லாமல் ஏறும் விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், மக்களிடையே பணப்புழக்கத்தைக் குறைக்கவும் அரசு மேற்கொள்ளும் இந்த வட்டி உயர்வு நடவடிக்கை, சில கடினமான விளைவுகளைக் கொண்டு வருகிறது. இந்த பணக்கட்டுப்பாடு பலன்தர குறைந்தது 9-12 மாதங்கள் வரை ஆகும். சென்ற ஆண்டு ஃபெட் மேற்கொண்ட வட்டி அதிகரிப்பின் பயன் பொருளாதாரத்தில், இன்னமும் விரும்பிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மருந்து செயல்பட நேரம் எடுக்கும்; ஆனால், அதை உட்கொள்ளும் போது குரங்கை நினைக்கக்கூடாது! 

அமித் செரு மற்றொன்றையும் சொல்கிறார்: வணிக  மனைத்துறை (Commercial Real Estate) அமெரிக்காவில் ஒரு முக்கியத் துறை; அனைத்து மக்களுக்கும் சொந்த வீடு என்ற அரசின் கொள்கையால், சாதாரண வங்கிகளின் சொத்தில், இத்தகைய மனைக் கடன்கள் 25%ஆக இருக்கின்றன. அமெரிக்காவில் மனை/நிலம்/வீடு/ வளாகம் இவற்றின் கடன் தொகை அளவு $2.7 ட்ரில்லியன்; அப்படியென்றால் எப்படிப்பட்ட பாதிப்பு உண்டாகும் என பார்த்துக் கொள்ளுங்கள். வரும் சில ஆண்டுகளில் இக் கடன்கள் முதிரும். அவற்றிற்கான மறு நிதி என்பது அதிக வட்டியில் இருக்கும்; அதனால், கடன் திரும்பாமல் போகும் சாத்தியங்கள் அதிகரிக்கும். ஒரு புறம் மனைகளுக்கான மதிப்பு சரிய, மறுபுறம், வெகு கால ஒப்பந்தத்தின் பேரில் பெறப்பட்ட குடக் கூலிகள், குறைந்த அளவிலேயே ஏறும் என்று ஒப்புதல் அளிக்கப்பட்ட வாடகைகள், மனை/ வளாகத் துறையை பாதிக்கும். இதுவும் பணக் கட்டுப்பட்டு மந்திரமான ஏறும் வட்டியின் விளைவே! அதனால் வசூலில் தாமதம், அல்லது வசூலிக்கப்படாமலேயே போகும் நிலை வரலாம். ‘க்ரேட் டிப்ரெஷன்’ காலக் கட்டத்தில் 1% வராக் கடனாக முன்பு இருந்தவை, 9%ஆக உயர்ந்ததை அமித் சுட்டிக் காட்டுகிறார். 

மைக்கேல் ஹார்ட்னெட் (Michadel Hartnett) என்ற பேங்க் ஆஃப் அமெரிக்காவின் (Bank of America) வியூக சிறப்பாளர் சொல்கிறார்: ஃபெட் எடுக்கும் ஒவ்வொரு பணக் கட்டுப்பாட்டு, நிதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கையும் சிக்கலில் தான் சென்று முடிந்திருக்கின்றன. மிகப் பெரும் ஆளுமையும், சொத்தும் நிறைந்த கிரெடிட் சூயிஸ், யூனியன் பேங்க் ஆஃப் ஸ்விட்சர்லாந்துடன் (UBS-AG) இணைக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களும், வாடிக்கையாளர்களும், கிரெடிட் சூயிசின் பல நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு அதன் வைப்புத் தொகை குறைந்து, பங்குச் சந்தையில் சரிவினைச் சந்திக்கத் தொடங்குகையில் இந்த அவசரக் கல்யாணம் நடத்தப்பட்டுள்ளது. யூ பி எஸ் $17 பில்லியன் இழப்பிற்கு உள்ளாகும் எனத் தெரிகிறது. 

இந்தியா, இந்திய வங்கிகள்

பிப்ரவரி 8, 2023க்குப் பிறகு, இந்திய ரிசர்வ் வங்கி 6.5% சதவீதமாக இருந்த ‘ரிபோ’ (வங்கிகள் ரிசர்வ் வங்கியிலிருந்து பெறும் கடனிற்கான வட்டி விகிதம்) ஏற்றவில்லை. இன்றைய நிலவரத்தில், இதை ஒரு அறிவார்ந்த செயலாகப் பார்க்கலாம். கிரெடிட் சூயிஸ் மற்றும் யூ பி எஸ் யின் சங்கமம் சிறிய அளவில், அதுவும் சில அன்னிய வர்த்தகங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனச் செய்திகள் வந்தாலும், இந்தியாவின் பொருளாதார நிலை மோசமாக இல்லை. மார்ச் 2021ல் ரூ 9.6 ட்ரிலியனாக இருந்த வங்கிகளின் வைப்புத் தொகை ரூ.175.4 ட்ரில்லியனாக வளர்ந்துள்ளது- அதாவது, ஜி டி பியில் (GDP- Gross Domestic Product) 45% ஆக இருந்தது 67.6% ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்தியா பொறுப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். வர்த்தகங்கள் குறையும், வாடிக்கையாளர் அல்லது நுகர்வோரின் நம்பிக்கைகள் குறையும்; உலகின் சமனப்படாத பொருளாதார நிலை, மூலதனக் கடனின் ஏறும் வட்டி, ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் குறைதல் ஆகியவை நிர்வாகத்தின் கவனத்திற்கு நிரந்தரமாக எடுத்துச் செல்லப்பட வேண்டும். 

நம் வங்கிகள் அதிக இலாபம் ஈட்ட வலியுறுத்தப்படுகின்றன. தேவையற்ற கடனை வழங்குவதன் மூலம் இன்றைக்கு இலாபத்தைக் காட்டிவிடலாம் என்ற குறுக்கு வழியை நாடாமல் இருப்பது உத்தமம். 

இந்தியாவில் வங்கிகள் திவாலாகவில்லையா? 1913-66 வரை 1800 வங்கிகள் காணாமல் போயிருக்கின்றன- அவற்றில் 25% கேரள வங்கிகள், 21% மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவை, 20% சென்னை மாகாண வங்கிகள். 1913 முதல் 1934 வரை 350 வங்கிகள் மூடப்பட்டன. 

வரலாறு பாடம் சொல்லும்; நடப்பு நிலை சுவற்றில் எழுதிக் காட்டும். அறிஞர்கள் அறியட்டும் இதை; சாதாரணர்களைக் காக்கட்டும் அவர்கள். 

“வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை.” திருக்குறள். 

இக்கட்டுரை பல வணிக, பொருளாதார இதழ்கள், ஊடகங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டது. மேலும், https://www.zerohedge.com/markets/its-spooky-stanford-professor-warns-thousands-us-banks-are-insolvent?s=08 By Tyler Durden என்ற கட்டுரையையும் தழுவி எழுதப்பட்டது.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.