என் மனதில் நிற்கும் மதியம்

தமிழாக்கம்: ராமலக்ஷ்மி

எனக்கு அவ்வளவாக நினைவில் இல்லை
என் தாயின் கிராமத்திற்குச் செல்ல
பேருந்துக்கு எப்படிக் காத்திருந்தோம் என்றோ
நகரங்களுக்குச் செல்ல இரயிலுக்குக் காத்திருக்கையில்
எவ்வாறாகக் கோடையைப் பொறுத்துக் கொண்டோம் என்றோ.

அவை என் பொறுமையை உரித்தெடுக்கும்
பற்ற வைக்கப்பட்ட வெடித் திரியைப் போன்றவை.
ஆயின் பாயும் என் நினைவுகளின் கால்வாயில்
கொத்தாக அடைத்து நிற்பவற்றைப் பனியாக உருக வைப்பவை.

என்னிடம் இருக்கிறது நான்
மாமா, அண்ணா மற்றும் அப்பாவுடன்
மீன் பிடிக்கும் இந்தப் புகைப்படம் – இருப்பதிலேயே பருத்தவர்
நிற்கிறார் தூண்டிலைப் பிடித்தபடி.

பரவசம் இப்போதும் பரவியிருக்கிறது இந்த சட்டகத்துக்குள்
ஆயின் மாமாவும் தாத்தாவும் காலமாகி விட்டார்கள்.

அன்று நாங்கள் பிடித்த மீன்
இன்றும் என் மனதில் துடிதுடிக்கிறது.
அந்தக் குளம் பாதுகாப்பாக வைத்திருக்கக் கூடும்
தண்ணீரின் ஏதோ ஒரு இடத்தில் –
பிற்பகல் ஒளியில் பிடித்த எங்களது பிரதிபலிப்பை.


மூலம்: “An Afternoon in My Mind” 

By Sonnet Mondal

*

சானெட் மொன்டல் (1990) கொல்கத்தா மற்றும் தில்லியில் இருந்து ஆங்கிலத்தில் எழுதி வரும் இளம் இந்தியக் கவிஞர். ‘An Afternoon in My Mind’ உட்பட எட்டு கவிதைப் புத்தகங்களின் ஆசிரியர், இலக்கிய நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளர். கொல்கத்தாவின் சர்வதேச இலக்கிய விழாவில், ‘கவிதை மாலைப் பொழுதுகள்’ நிகழ்வின் நிறுவனர் மற்றும் இயக்குநர். பல முக்கிய கவிதைப் பத்திரிகைகளுக்கு ஆசிரியராகவும், கெளரவ ஆசிரியராகவும் செயல்பட்டு வருகிறார். இருபது நாடுகளுக்கு அழைப்பின் பேரில் இந்தியாவின் சார்பாக சென்று தன் கவிதைகளை வாசித்திருக்கிறார். இருபது மொழிகளில் இவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. லண்டனைச் சேர்ந்த ‘The CultureTrip’ இணையதளம் இந்தியாவின் முக்கிய ஐந்து ஆங்கிலக் கவிஞர்களில் ஒருவராக இவரைக் குறிப்பிட்டிருக்கிறது.


– ராமலக்ஷ்மி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.