உபநதிகள் – ஏழு

This entry is part 7 of 15 in the series உபநதிகள்

ல்லூரி வாழ்க்கைக்கு ஆடைகள், அலங்கார சாதனங்கள், எழுதுபொருட்கள் சேகரித்தபோது மானஸாவுக்கு முந்தைய தினம் வலைவழி கண்டுபிடித்த பெண்ணைப் பற்றிய சிந்தனை. 

அவள் மட்டுமே குடியிருந்த கூக்கில் உலகில் இன்னொரு மானசா சகாதேவன். போட்டி என்று சொல்வதற்கு இல்லை. இவளுக்கு பக்கம் பக்கமாகப் பதிவுகள். அவளுக்கு ஒன்றேயொன்று. இருந்தாலும்..  

ஆர்வம் தலைதூக்க.. இன்னொரு தேடல். 

ஆனிக்ஸ் எந்த மாதிரி புத்தகங்கள் வெளியிடுகிறது? 

பாடப்புத்தகங்கள், பொது அறிவை வளர்க்க, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள ஊக்கநூல்கள். 

சமீபத்தில் வெளிவந்தவை.. 

எண்கள் வழி சிந்தனை – மூளைக்கு ஒரு புதிய செயல்முறை 

மாதமாடிக்ஸ் ப்ளஸ் – உயர்மட்ட கணிதம் மூன்று பகுதிகளில் – 

மொத்தவிலை எழுநூற்றிஐம்பது ரூபாய். (பத்து டாலர், மலிவுதான்.) 

ஆசிரியர் டாக்டர் வினதா சகாதேவன். 

இன்னொரு சகாதேவன்! 

விரைவில் வரப்போகும் புத்தகங்கள். 

ஆங்கிலம் – தெளிவாகப் பேசவும் எழுதவும் 

தமிழ்த் தலைப்புகள். எழுத்துக்கூட்டிப் படித்தாள். 

எண் ணங் கள் வண் ணங் கள் – கவிதைத்தொகுப்பு. தாட்ஸ் கலர்ஸ். அதைவிட ‘ஷேட்ஸ் ஆஃப் இமாஜினேஷன்’ இன்னும் பொருத்தம். 

வி ன தா வைப் போல ஒரு பெண். 

அதாவது, 

லைக் வினதா ய கர்ல், ம்ம்.. சரியாகச் சொன்னால், 

ய உமன் லைக் வினதா. 

உப தலைப்பு: ஒரு மகள், ஒரு மனைவி, ஒரு தாய். ஒரு பெண்ணின் ஆன்மீக வாழ்க்கை 

ஆசிரியர்? மானசா சகாதேவன். 

அந்நிறுவனத்தின் நிதி நிர்வாகி மானசாவாக இருக்குமோ? சுவாரசியம் இல்லாத கணக்கு வழக்கு பார்ப்பதுடன் ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு மொழி வன்மை ஒருத்திக்கு இருக்குமா? என்ற சந்தேகம். அந்தப் பெயரில் எவ்வளவு பேர் இருக்க முடியும்? என்று மறுகேள்வி. புத்தகத்தின் நாயகி டாக்டர் வினதாவாகவே இருந்தாலும் ஆச்சரியம் இல்லை என்கிற அனுமானம்.  

உயிரற்ற எண்களுடன் உயிரை வடிக்கும் எழுத்திலும் அந்த மானசாவுக்கு திறமை இருக்கிறது. அது ஆச்சரியம் தான். 

‘கங்கா: த கர்ல் ஹு வான்ட்டட்  டு ஸ்விம்’    ‘ய உமன் லைக் வினதா’  

இரண்டு பெண்கள், மூன்று நான்கு வயது வித்தியாசத்தில். ஒரே பெயர். ஸ்ரீனிவாசன் போல சஹாதேவன் சாதாரணப்பெயர் இல்லை. மானஸாவும் அப்படியே. இரண்டு அசாதாரணப் பெயர்கள் சேர்ந்த இருவர். ஆச்சரியம் அடங்கவில்லை. அது மட்டுமல்ல, ஒரே மாதிரியான புத்தகங்களை உருவாக்கியவர்கள். பரிமளவல்லியின் நோக்கில் அபூர்வம், ஆனால் அசாத்தியம் இல்லை. காலத்தின் போக்கில் நீண்டுகொண்டே செல்லும் வளைகோடுகள் ஒன்றையொன்று தொடுவது நிகழக்கூடிய சம்பவம். எழுதுவது எல்லாரும் ஆசைப்படும் செயல். விருப்பம் இருந்தாலும் பெரும்பாலோருக்குத் திறமை இருப்பது இல்லை. அவர்களுக்கு இருக்கிறது, அவ்வளவுதான். 

அப்படியே விட்டுவிட மனம் இல்லை. 

அவளுடன் தொடர்பு கொண்டால் என்ன? ஒரே பெயர் என்றாலும் வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு பண்பாடுகள். அனுபவங்கள் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். அவற்றைப் பகிர்ந்துகொள்ளலாம். அவளும் அவள் பெயரில் அவளைப்போலவே இன்னொருத்தி இருக்கிறாள் என்பதை அறிந்து வாழ்க்கையின் விநோதத்தை ரசிக்கலாம்.  

அவள் பதில் எழுதாவிட்டால். அந்த மானசாவுக்குத்தான் நஷ்டம். 


மானஸா@onyx.co.in 

மானஸா டூ மானசா

அன்புள்ள மானசா! 

இது ஒரு விசித்திரமான நிருபம். இதை அதிசயம் என்று கூடச் சொல்லலாம். நிச்சயம் உன்னை ஆச்சரியப்படுத்தும். 

உன் பெயரை இதுவரை நீ கூக்கிலில் தேடவில்லை என நினைக்கிறேன். அப்படிச் செய்திருந்தால் நான் அகப்பட்டு இருப்பேன். என்னுடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்கிற ஆவல் வந்திருக்கும். நான் பல முறை தேடியிருக்கிறேன். இது வரை தகவல் தீவில் தன்னந்தனியாக இருந்தேன். இப்போது துணைக்கு நீ. 

பெயர் மட்டும் அல்ல இன்னும் பல விதங்களில் நமக்குள் ஒற்றுமை. உன்னைப்போல நானும் எழுத்துத்துறையில் அடையாளம் பதிக்க ஆவல். 

நான் நாஷ்வில் புறநகரில் பள்ளிக்கூடப்படிப்பை முடித்துவிட்டு ட்யுக் பல்கலைக்கழகத்தில் நுழைய இருக்கிறேன். நான் எழுதிய ‘கங்கா: த கர்ல் ஹு வான்ட்டட்  டு ஸ்விம்’  (!!!) அடுத்த மார்ச் மாதம் வெளிவர இருக்கிறது. 

நம் புத்தகங்களின் பெயர்களைப் பார்! மொழி தான் வித்தியாசமே தவிர. பெயரும் உள்ளடக்கமும் ஒன்றுபோலத் தெரிகிறது. நாம் இருவருமே நம் தாய்களைப் பற்றி எழுதியிருக்கிறோம். 

நீ என்ன நினைக்கிறாய்? 

மானஸா மந்தாகினி சஹாதேவன். 

பதில் உடனே வந்தது. 

அன்புமிக்க மானஸா, 

எனக்கு என் பெயரைத் தேட வேண்டும் என்கிற எண்ணம் எழுந்ததே இல்லை. இந்த உலகில், ஏன் தமிழ்நாட்டிலேயே எத்தனையோ மானசா இருப்பார்கள் என்கிற அலட்சியம். நீ சொன்னவுடன் தேடலைச் செய்தேன். என்ன ஆச்சரியம்! நாம் இருவர் மட்டுமே. உனக்குப் பதிவுகள் நிறைய. அதற்காகப் பெருமைப்படுகிறேன். 

நான் ஒரேயொரு தடவை (பத்து வயதில்) இரண்டு வாரங்கள் யூ.எஸ். வந்தேன். உன் ஊருக்குக்கூட வந்திருக்கிறேன். 

இது நம் நீண்ட நட்புக்கு முன்னுரையாக அமையட்டும்! 

என் அலைபேசி எண்… 

மானசா. 

அந்த பதிலைப் பார்த்து மானஸாவுக்கு இன்னொரு மானசாவுடன் தொடர்பைத் தொடங்கியது நல்ல காரியம் என்ற சந்தோஷம். 

தொடர்ந்து உரையாடல். 

– என்னைப்பற்றிய முக்கியமான தகவல், மொழிவன்மை. என் தந்தை ஸ்ரீலங்காவில் இருந்து வந்த தமிழர். அந்த ஒட்டுறவில் கின்டர்கார்டன் போவதற்கு முன்பே தமிழ் கற்றுக்கொடுத்தார். 

– எந்த அளவுக்கு? 

– மற்றவர்கள் பேசுவது புரியும். படிப்பேன், மிக நிதானமாக. வார்த்தைக்கு அர்த்தம் தெரியாவிட்டால் அகராதி. எழுத வராது, ஆனால் கணினியில் அடிப்பேன் ஒவ்வொரு எழுத்தாக. எனக்கு ஆங்கிலத்தில் இயற்கையாகவே திறமை. மூன்றாம் வகுப்பில் இருந்தே நான் எதை எழுதினாலும் பொருத்தமான வார்த்தைகளும் கட்டான வாக்கிய அமைப்பும் தானாக என்னைத் தேடிவந்ததுபோலத் தோன்றும். ஆசிரியைகள் என் திறமையை வளர்த்தார்கள். உனக்கு எழுத எப்படி ஆசை வந்தது? 

– உன்னைப்போல சிறுவயதில் இருந்தே எனக்கு ஆர்வம் இருந்தது இல்லை. தமிழில் ஒருசில கட்டுரைகள் எழுதியிருந்தாலும் தமிழ்ப்பாடம் பிடித்தமானது என்றும் சொல்வதற்கு இல்லை. என் பதினைந்தாவது வயதில் முதல் சிறுகதை. உண்மையைச் சொல்லிவிடுகிறேன், பணத்துக்காக எழுதினேன். பல பகுதிகளை ஆங்கிலத்தில் எழுதி தமிழ்ப்படுத்தினேன். என் அத்தை கொடுத்த அறிவுரைகள் உதவியாக இருந்தன. அது பரிசு வாங்கியதும் என் தமிழ் ஆசிரியையிடம் தனிப்பட்ட முறையில் இலக்கணப்பாடம். பரிசுபெற்ற கதையும் அதைப்போன்ற பிற அனுபவங்களும் சேர்ந்து என் புத்தகம். ஆனிக்ஸ் உரிமையாளர் உதயசந்திரனின் முகவுரையுடன் வெளிவருகிறது. 

– பாராட்டுக்கள்! நான் என் அம்மாவைப்பற்றி எழுதிய முதல் சம்பவம் நகர நீச்சல்போட்டியின் போது நடந்தது. என் தம்பி அலெக்குக்கு நியாயமாகச் சேரவேண்டிய முதல் இடத்தை ஒரு வெள்ளை ஆண் இரண்டாவதாக வந்த பையனுக்கு மாற்றப்பார்த்தான். புது நாட்டில் குடியேறிய இந்தியர்கள், ‘எதற்கு அனாவசிய வம்பு, நீல ரிப்பனுடன் மெடல் கிடைக்காவிட்டால் என்ன, இதற்குப்போய் ஏன் குட்டையைக் கலக்க வேண்டும்?’ என்று அலட்சியம் செய்திருப்பார்கள். என் அம்மா அதை அப்படியே விட்டுவிடவில்லை. அதை அறிந்த உள்ளூர் செய்தித்தாள் நிருபர் என்னிடம் விவரங்கள் கேட்டபோது நானே முழு அறிக்கையை எழுதிக்கொடுத்தேன். 

– உன் அம்மாவுக்கு தைரியம் தான். எனக்குப் புதிதாக கற்பனை செய்ய இன்னும் கைவரவில்லை. உனக்கு இருக்கும் திறமைக்கு நீ ஒரு புனைவு எழுதியிருக்கலாமே. 

– மகாபாரதக் காலத்தில் நடப்பதுபோன்ற கதை. என் அம்மா கங்கா. என் அப்பாவின் முதல் பெயர் பகீரத். இருவரையும் பழங்கால கதாபாத்திரங்களாக மாற்றி ஒரு அதீதக் கற்பனை. முதல் புத்தகத்தில் என் பெயர் பிரபலம் ஆனதும் வித்தியாசமான அதை வெளியிடுவது நல்லது என பதிப்பாசிரியர் சொன்னதால் அரைகுறையாக நிற்கிறது. 

– அதைப் படிக்க ஆவல்.     

– முதல் புத்தகங்களை முதலில் பரிமாறிக்கொள்வோம். நான் எழுதியதைப் படிக்க உனக்கு அதிக நேரம் ஆகாது. எனக்கு ஒருசில வாரங்கள் ஆனாலும் ஆகலாம். 

– நான் வேண்டுமானால் ஆங்கிலத்தில்… உன்னளவுக்கு இல்லாவிட்டாலும் என்னால் ஓரளவு நன்றாவே எழுத முடியும். 

– வேண்டாம், முழுத் தாக்கத்தையும் அனுபவிக்க தமிழிலேயே வாசிக்க ஆசை. இப்போது நேரம் இல்லை. தாங்க்ஸ்கிவிங் விடுமுறையில். 

– மானஸா! நான் ஒரே நாளில் வாசித்து முடித்துவிட்டேன். குட் ஜாப்! 

– அவ்வளவு தானா? 

– உன் தாயின் துணிச்சல் தான் மனதில் தங்கிநிற்கிறது.  

– அதுவரை தாங்க்ஸ். 

– பதிப்பிக்க ஒரு நாவல் என் பார்வைக்கு வந்திருக்கிறது. கதையில் பெரும்பகுதி யூ.எஸ்.ஸில் நடக்கிறது. அதையும் உன் புத்தகத்தையும் ஒரே சமயத்தில் படித்ததால் இரண்டையும் அனுபவிக்க முடிந்தது. 

– நாங்கள் நாளை கிளம்புகிறோம். என்னை ட்யுக்கில் விட்டுவிட்டு மற்றவர்கள் வீட்டிற்குத் திரும்பி வருவார்கள். அம்மாவும் அப்பாவும் அழாமல் இருக்க கூடவே என் தம்பி. 

– புதிய இடத்தில் தனியே விடப்பட்டால், நான் நிச்சயம் அழுவேன். நீ? 

– கூட்டைவிட்டுப் பறந்த பறவைக்குஞ்சின் சுதந்திர உணர்வை அனுபவித்தாலும் வருத்தம் நிச்சயம் இருக்கும். ஒரு வாரத்திற்காவது. 

அடுத்த மூன்று மாதங்களில் எப்போதாவது ஓரிரு வார்த்தைகள். வகுப்புப் பாடங்களில், ‘ஏ பி ட்யுக் ஸ்காலர்’ என்கிற தகுதியில் நடந்த கூட்டங்களில் மானஸா மூழ்கினாள். மானசாவுக்கும் வேலையின் பளு. மூன்று பாகங்களில் எழுதிய நீண்ட நாவலை வெளியிட்டு அதைப் பிரபலப்படுத்தும் பொறுப்பு. 

மானஸா மூன்று வாரம் வீட்டிற்கு வெளியே தங்கியிருக்கிறாள். ஒரு மாதம் தனியே இந்தியா போயிருக்கிறாள். கல்லூரியில் நீண்ட மூன்று மாதங்கள் புது அனுபவம். பிறந்த இல்லத்தின் இனிய நினைவுகள் தாக்கியபோது தாங்க்ஸ்-கிவிங் விடுமுறையை நினைத்தாள். 

நவம்பர் கடைசி வாரம். டிக்கெட் செலவைக் குறைக்க திங்கள் இரவே வீட்டிற்கு வந்தாள். முன்பெல்லாம் பயணம் முடித்து தன் அறைக்குத் திரும்பி தன் கட்டிலில் படுத்ததும் கூட்டுக்குத் திரும்பிய பறவையின் நிம்மதி. இம்முறை அது வரவில்லை. இது வித்தியாசமானது. இனி அவள் வீட்டில் தங்கப்போகும் நாட்களை நான்கு வயது மானஸாவே எண்ணிவிடுவாள். ட்யுக் மாணவ அறையின் கட்டில் அசௌகரியம் என்றாலும் அது தான் அவளின் இப்போதைய இருப்பிடம். பெற்றோர் வீட்டின் படுக்கை விடுதியின் தாற்காலிகத் தங்குமிடம்.   

மறுநாள் ஒருமணி முன்னதாக எழுந்ததும் ஒரு குற்ற உணர்வு. யோசித்ததும் காரணம் தெரிந்தது. மானசா அவள் புத்தகத்தை உடனே படித்து சிலாக்கித்ததை அவள் திருப்பிச்செய்யவில்லை. வீட்டில் மற்றவர்கள் நடமாட்டத்தில் குறுக்கிடாமல் இருக்க, மடிக்கணினியில் முன்பு மானசா அனுப்பிய புத்தகத்தின் உரு வடிவைத் திறந்தாள். தங்கை ஆதவி பற்றிய கதையைப் படித்து முடித்தபோதே காலைப்பொழுது காணாமல் போனது. பிற பகுதிகளை ஒவ்வொன்றாக…  

வியாழன் பிற்பகல். பண்டிகை மகிழ்ச்சியை இரட்டிக்க அம்மாவின் தோழி சுபத்ராவும் அவள் குடும்பத்தினரும் வந்தார்கள். அவள் கணவரை அப்பாவும், பதின்பருவப் பையன்கள் இருவரை அலெக்கும் கவனித்துக்கொண்டார்கள். கங்காவும் மானஸாவும் விடுமுறை விருந்துக்கு ஏற்பாடு செய்தபோது,   

“நான் என்ன செய்யட்டும்?” என்றாள் சுபத்ரா. 

“ஆறு மணி பண்டிகை நெரிசலில் காரை ஓட்டிண்டு வந்திருக்கே. பேசாம உட்கார்!”  

அறிவுரையின் முன்பாதியைச் செய்யப் பிடிக்காமல், 

“மானஸா! நீ என்ன மேஜர் எடுக்கறதா இருக்கே?”  

“பயாலஜி, சோஷியாலஜி – இரண்டில ஒண்ணு.” 

“நீ நன்றாக எழுதுவதால் மொழியியலை எதிர்பார்த்தேன்.”  

“அவர்கள் சொல்லித்தருவது வெறும் டெக்னிக். எனக்கு புனைவுதான் முக்கியம். அதற்கு மனிதர்களையும் சமுதாயத்தையும் படிப்பது அவசியம் என்பது என் எண்ணம்.” 

“நீ சொல்வது என் வேலைக்கும் பொருந்தும்.”  

“நீங்கள் அனலிடிக்ஸ் செய்வதாக அம்மா சொன்னாள். எனக்குத் தெரிந்தது அனலிடிகல் கெமிஸ்ட்ரி.”  

“ஒரு பொருளைப் பிரித்து தனித்தனியாக ஆராய்வது அனாலிசிஸ். வியாபாரத்தின் பலவழிகளில் வந்த தகவல்களைப் பகுத்து, சாரம் எடுத்து, அடுத்த விற்பனைக்குத் திட்டமிடுவது அனலிடிக்ஸ்.”  

“அதற்கு நீங்கள்..” 

“ஐஐடியில் எம்.எஸ். வரை கணிதம். இங்கே கோர்னேலில் பிஎச்.டி. ஆபரேஷன் ரிசர்ச் என்கிற பிரிவில். அதை அப்ளைட் மாத் என்று சொல்லலாம். முடித்ததும் உடனே டிஜிடாலிஸ் வேலை. மானஸா! இந்த விவரங்களை வைத்து என்னைப்போல ஒரு கேரக்டரை நீ உருவாக்கினால் ராயல்டியில் எனக்கு பங்கு தரணும். இப்பவே சொல்லிட்டேன். உன் அம்மா சாட்சி.”  

மானஸா புன்னகையில், “நிச்சயமா” என்றாள். 

சுபத்ராவையும் வினதாவையும் ஒப்பிடாமல் இருக்கமுடியவில்லை. ஐந்து வருஷ கல்லூரிப்படிப்பு, அடுத்த ஐந்து வருஷம் கணிதத்தில் பிஎச்.டி., இன்னொரு ஐந்து வருஷம் உயர் ஆராய்ச்சி. சுபத்ரா வெற்றிகரமாக நடக்கும் நிறுவனத்தின் வைஸ்-ப்ரெசிடென்ட், வினதா? 

ஞாயிறு பிற்பகல். விமான நிலையத்தில், விடுமுறை முடிந்து அரைமனதுடன் திரும்பும் கும்பல். அதில் மானஸா. காத்திருந்த நேரத்தில்..

“இது மானஸா. என்ன செய்யறே?” 

“வீட்டுக்குக் காவல். அம்மா ஆதவியை ட்ராயிங் க்ளாஸ் அழைத்துப்போய் இருக்கிறாள்.” 

“தாங்க்ஸ்கிவிங்க்கு வந்துவிட்டு திரும்பிப்போறேன். இப்ப தான் நேரம் கிடைத்தது. உன் புத்தகத்தை முடித்துவிட்டேன். இந்தியாவுக்கு ஒரு நடை போய்விட்டு வந்ததுபோல இருக்கிறது.” 

“தாங்க்ஸ்!” 

“நான் கங்காவை நான்கு மாதத்தில் முழுவேலையாக எழுதி முடித்தேன். நீ அப்படிச் செய்யவில்லை.” 

“ஐந்து ஆண்டு காலத்தில் எழுதியதைக் கோர்வையாக சேர்த்தேன். தொடர்ச்சி இல்லாமல் இருக்கிறதோ?” 

“அதற்காகச் சொல்லவில்லை. போகப்போக முதிர்ச்சி தெரிகிறது.” 

“அது போதும்.” 

“நீ எழுதியதை உன் அம்மா எப்படி எடுத்துக்கொண்டாள்?” 

“அவள் நல்ல குணங்களை நான் பெரிதுபடுத்தியதாக எண்ணம்.”  

“எல்லாமே நடந்த சம்பவங்களா?” 

“கிட்டத்தட்ட. ஒன்றைத் தொகுப்பில் சேர்க்க என் அம்மா அனுமதிக்கவில்லை.” 

“ஏன் என்று நான் தெரிந்துகொள்ளலாமா?” 

“நீ படித்திருப்பாய், என் அப்பாவால் குனிந்து நிமிர்ந்து நீண்டநேரம் நின்று தொழிற்சாலையில் வேலைசெய்ய முடியாது. தினம் எதிரில் தாத்தா வீட்டிற்கு மெதுவாக நடந்து சிரமப்பட்டு மாடிக்கு ஏறுவார். அங்கே கணினியின் முன் அவர் நேரம் போகும். ஆலோசனை என்ற பெயரில் ஓரளவு வருமானம். வெளிவேலை எல்லாவற்றையும் என் அம்மாவே செய்வாள். அதை அடிக்கடி கவனித்த ஒரு ஆள் என் பெற்றோருக்கு இடையில் நெருக்கமான உறவு இல்லை என்று கணக்குப் போட்டுவிட்டான். அவனுடைய பையனுக்கு ட்யுஷன் பற்றிப்பேச என் அம்மாவை ஒரு விடுதிக்கு வரச்சொல்லி அங்கே சந்தித்தான்.” 

“ரகசிய உறவுக்கு சம்மதமா?” 

“அப்படி நேரடியாகக் கேட்காமல்… எங்கள் தெருவிலே தனித்து வாழும் ஒரு பெண். ப்ரோ-டெக்கில் வேலைசெய்யும் அவள் கணவன் துபாயில். எப்போதாவது தான் இங்கே வருவான். அவளுடன் தொடர்பு வைத்திருக்கிறேன் என்று அந்த ஆள் சொல்ல..” 

“அதேபோல உன்னிடமும் என்கிற அர்த்தத்தில்…” 

“என் அம்மா சொன்ன பதில் எனக்கு மிகவும் பிடிக்கும். ‘இது, அவள் நீ என்று இருவருக்கும் இடையிலான அன்னியோன்னிய உறவு. சரியா தவறா என்பது முக்கியம் இல்லை. அவள் அனுமதி இல்லாமல் நீ அதை என்னிடம் சொன்னது உன் கீழ்த்தனம்’ என்று கோபத்துடன் எழுந்து வந்துவிட்டாள்.” 

“அவள் செய்தது பாராட்ட வேண்டிய விஷயம்.” 

“ஒருவேளை என் புத்தகத்தைப் படிக்கும் யாராவது இந்தப் பெண் தான் அவள் என்று அடையாளம் காணலாம் என்று அம்மாவுக்குப் பயம். மற்ற கதைகளில் யாருடைய அந்தரங்கத்தையும் நான் வெளிப்படுத்தவில்லை.” 

நார்த் கரோலைனாவில் குளிர்மழை என்பதால் ராலே-ட்யுரம் செல்லும் விமானம் அரை மணி கழித்துக் கிளம்பும். தாமதத்திற்கு மன்னிக்கவும்!

உரையாடல் தொடர்ந்தது. 

“வினதா உனக்கு அம்மா. ஆனால் நான் அவளை ஒரு கேரக்டராகப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். அவள் தன் புத்திசாலித்தையும் பிஎச்.டி. ஆராய்ச்சியையும் சரியாகப் பயன்படுத்தாதது போலத் தெரிகிறது.”   

“வாய்ப்புகளைத் தவறவிட்டாள் என நினைக்கிறாயா?”  

“ஒருவேளை யு.எஸ். வந்திருந்தால்… அவள் எப்படி இருந்திருப்பாள் என்று யோசித்துப் பார்த்தேன்.” 

சுபத்ராவைப் பற்றி சுருக்கமாகச் சொன்னாள்.  

“சுபத்ராவின் திறமையைக் குறைவாக மதிப்பிடவில்லை. பிஎச்.டி. முடித்ததும் சரியான நேரத்தில், தேவையான கல்வி அறிவுடன் ராசியான நிறுவனத்தில் அவள் நுழைந்திருக்கிறாள். வர்த்தகம் உலகமயம் ஆன காலத்தில் அந்த நிறுவனம் வளர அவள் பதவியும் உயர்ந்து இருக்கிறது. அவை எல்லாம் என் அம்மாவுக்கும் நடந்திருக்கும் என்பது நிச்சயம் இல்லை. அப்படியே நடந்திருந்தாலும் அந்த பரபரப்பான வாழ்க்கையில் அவளுக்கு சந்தோஷம் இராது. நிலையான வாழ்க்கையை நிதானமாக அனுபவிப்பது அவள் குணம்.” 

“ஆதவியின் பால்மொழி, உன் தந்தையின் விபத்து போன்ற அதிர்ச்சிகளை அவள் தாங்கிக்கொள்ள வில்லையா?”  

“அவற்றை சமாளிக்க முடியும் என்கிற நம்பிக்கை. அது அனுபவத்தில் உருவானது. அத்துடன், அந்நிய மண்ணில் கால் ஊன்றியிருக்கவும் மாட்டாள்.” 

“ஏன்?” 

“அவள் தாத்தா பாட்டியுடன் கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்தவள். அதைத் தொடரச்செய்ய வேண்டும் என்பது அவள் எண்ணம்.” 

“இந்தியாவிலும் கூட சமுதாயத்தின் அலகு தற்போது பெற்றோர்கள் குழந்தைகள் மட்டுமே கொண்ட குடும்பம்.”  

“இருக்கட்டும். என் அம்மாவுக்கு அதில் விருப்பம் இல்லை என்பது தான் என் நோக்கில் முக்கியம்.”  

“காலத்துக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்வதில் என்ன தவறு?”  

“என் அம்மாவுக்கு புதிய அனுபவங்களைத் தேடிப்போவதில் விருப்பம் கிடையாது. அவள் பழைய வழக்கத்தைக் காப்பாற்றியதால் தான் என் பாட்டியின் கேடராக்ட் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒருவாரம் அவளை அடுப்புப் பக்கம் போகாமல் வைக்க முடிந்தது. என் தாத்தா ஒருசில நாட்கள் தனியாக இருக்க நேரிட்டாலோ, இல்லை தனியாகப் பயணம் செய்யும்போதோ அவருடைய தேவைகளைக் கவனிக்க முடிகிறது. சென்ற ஆண்டு தாத்தாவின் அம்மா இறக்கும் வரை அவளுக்கு ராமாயணம் படித்தாள். இதெல்லாம் அவள் யூ.எஸ்.ஸில் இருந்து செய்ய முடியுமா?”   

உயர்மட்டக் கல்லூரியில் சமூகவியல் வகுப்பை எடுக்கும் அவளுக்கு பி.பி.ஏ. பட்டம் வாங்கிய ஒருத்தி பாடம் கற்பிக்கிறாள். ம்ம்..

சுபத்ரா போன்றவர்களின் தொழில் வாழ்க்கை சாதாரணம், ஒன்றும் பிரமாதம் இல்லை என்று மற்றவள் அலட்சியம் செய்ததாக மானஸாவுக்குத் தோன்றியது. 

உரையாடல் மேலும் மனக்கசப்பை வளர்ப்பதற்குமுன், ஒலியியக்கத்தில் வந்த அறிவிப்பு அதை முடிவுக்குக் கொண்டு வந்தது.  

உங்கள் பொறுமைக்கு நன்றி! ராலே-ட்யுரம் செல்லும் விமானம் தயார். முதலில்… 

(தொடரும்)

Series Navigation<< உபநதிகள் – 6உபநதிகள் – 8 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.