
ஹிமாலயம் என்பது இந்தியாவின் மேற்கு வடமேற்கு பகுதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு பகுதி வரை சுமார் 2400 கிமீ பரப்பளவில் விரிந்திருக்கும் அற்புத சாம்ராஜ்ஜியம். வானம் தொட்டு நிற்கும் பனிமலைத் தொடர்களாலும் ஆழமான பள்ளத்தாக்குகளாலும் நிரம்பிய பூலோக சொர்க்கம். சுமார் அறுபத்தைந்து மில்லியன் ஆண்டுகளுக்கு இந்து மகா சமுத்திரத்தில் அமிழ்ந்திருந்த இந்திய நிலப்பரப்பு வடக்கு நோக்கி நகர்ந்து மத்திய ஆசிய நிலப்பரப்பின் அருகே சென்றது. பின் இரண்டும் ஒன்றோடொன்று விசையோடு மோதிக் கொள்ள மோதிய வேகத்தில் பூமிக்கடியிலிருந்து பாறைகளும் மண்ணும் பிதுங்கி மேலே எழும்பி பின்னர் அவை செங்குத்தாக நின்று விட்டன. அதுவே இமயம் என்றாகியது என்கிறது நிலவியல் குறிப்பு.
இதனை ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட அமர்நாத் பிரதேசம், பஞ்சாபை ஒட்டிய இமாச்சல பிரதேசம், அல்மோரா, குமயூன், பூட்டானின் ஒரு பகுதி உள்ளிட்ட கூர்மாச்சல பிரதேசம், நேபாளம், சிக்கிம், திபெத்தின் சிறு பகுதி உள்ளிட்ட கௌரிசங்கர் பிரதேசம், ஹரித்வார் முதல் கைலாசம் வரையிலான கேதார்நாத் பிரதேசம் என சமயரீதியாகவும் பூகோளரீதியாகவும் ஐந்தாக பகுக்கலாம். இமயத்தின் முதல் அடுக்கு கிராமங்களாலும் வயல்வெளிகளாலும் பெரு மரங்கள் நிறைந்த வனங்களாலும் உயர்ந்து நிற்கிறது. இரண்டாவது அடுக்கு, புல்வெளிகளாலும் புதர்காடுகள் மற்றும் அதில் வாழும் விலங்குகளாலும் நிறைந்து மக்கள் நடமாற்றமற்று 18000க்கும் அதிகமான அடி உயரத்தில் விரிந்து கிடக்கிறது. மூன்றாவது அடுக்கில் புல் பூண்டுகள் கூட முளைப்பதில்லை. எக்காலமும் பனி மூடியிருக்கும் அற்புத உலகம் அது. பனிக்கு சமஸ்கிருதத்தில் ஹிம் என்று பெயர். அசலம் என்றால் மலை. அதுவே ஹிமாச்சலம் என்றாகியது.
இமயமும் அதிலிருந்து உருவாகும் நதிகளும் குறிப்பாக கங்கை, இந்து மத கோட்பாட்டின்படி புனிதமாக கருதப்படுகிறது. உத்தர்காண்டின் அனைத்து மலைத் தொடர்களுக்குமான புனிதப் பயணம் ஹரித்வாரிலிருந்து தொடங்குகிறது. இது டில்லியிலிருந்து 240 கிமீ தொலைவிலுள்ளது. ஹரி என்றால் இறைவன். த்வார் என்றால் கதவு அல்லது வாசல். ஹரித்வார் என்றால் இறைவனின் நுழைவாயில் என்று அர்த்தமாகிறது.
எல்லா ரகசியங்களுக்கும் ரகசியமான பொருள் பொதிந்த என் வார்த்தையை மீண்டும் நீ கேள். நீ எனக்கு நிச்சயமாக விருப்பமுடையவன் என்பதால் உன் இதத்தை நான் சொல்கிறேன்
என்னில் மனதுள்ளவனாக நீ இருப்பாயாக. என் பக்தனாக இரு. என்னை நினைத்து பூஜிப்பவனாகு. என்னை வணங்கு. என்னையே நீ அடைவாய். சத்தியமாக உனக்கு நான் வாக்குறுதி அளிக்கிறேன். நீ என் ப்ரியமானவன் ஆகிறாய்
நீ எல்லா தர்மங்களையும் ஒதுக்கி விட்டு ஏகனான என்னை சரணடைந்து விடு. நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன். துக்கம் கொள்ளாதே.
பகவத்கீதையின் இந்த பதினெட்டாம் அத்தியாயத்தின் 64, 65. 66ஆம் மந்திரங்களை மனதில் உருவேற்றிக் கொண்டு இமயமலைக்கு புனித யாத்திரை செல்பவர்கள் இறைவனின் இந்த நுழைவாயிலுக்கு வந்து விடுகிறார்கள். இந்த புனித யாத்திரை யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு தலங்களை உள்ளடக்கியது. இதனை சார் தாம் (நான்கு கோவில்கள்) யாத்திரை என்பார்கள்.. யமுனோத்ரி யமுனை உற்பத்தியாகும் இடம். கங்கோத்ரி கங்கை உற்பத்தியாகும் இடம். கேதார்நாத் சிவஸ்தலம். பத்ரிநாத் விஷ்ணு தலம். இவை நான்கும் இமயமலையில் கிட்டத்தட்ட பதினோராயிரம் அடி உயரத்தில் உள்ளன. சார்தாம் யாத்திரையை மேற்கு பகுதியில் உள்ள யமுனோத்ரியிலிருந்து யாத்திரை ஆரம்பிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
கங்கை துடிப்பாக ஓடி வரும் ஹரித்வாரில் ஆசிரமங்களுக்கும் மடங்களுக்கும் பஞ்சமில்லை. கட்டடங்கள், கடைத்தெருக்களை போல இங்கு சாதுக்களின் நடமாட்டமும் இயல்பான ஒன்று. கோவில்கள், மடப்பள்ளிகள், வேத மந்திரங்கள் நமக்கு வேறு ஒரு இந்தியாவை அடையாளமிடும். பொதுவாக இங்கு பிரசி்த்தி பெற்ற கோவில்கள் கூட அதிக பிரம்மாண்டங்களின்றியே இருக்கின்றன. தென்னிந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து செல்பவர்கள் தென்னிந்திய மன்னர்கள் கட்டி வைத்த கோயில்களை எண்ணிக் கொண்டு இங்கு வந்து விட முடியாது. ஏகப்பட்ட ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளான வட இந்தியாவில் புராதனங்கள் இன்னும் விடுபடாமலிருப்பதே பெரிய விஷயமாக தோன்றும். தமிழகத்தில் இருப்பதை போல ஒவ்வொரு நிலையாக கடந்து கருவறையில் கடவுளை தரிசிக்க வேண்டியதில்லை. பிரகாரம் சுற்றும் வேலை இல்லை. உள்ளே நுழைந்ததும் நேராக கடவுள் தரிசனம்தான்.
ஹரித்துவாரில் உள்ள முக்கியமான கோவில்கள்
1) மானஸா தேவி கோவில்
ஹரித்வாரில் கங்கை ஆற்றுக்கு இரண்டு புறமும் குன்றின் மேல் இரண்டு அம்மன் கோவில்கள் உள்ளன. ஒன்றில் மானஸா தேவியும் இன்னொன்றில் சண்டி தேவியும் கோவில் கொண்டுள்ளார்கள். சிவாலிக் என்றழைக்கப்படும் இமயமலைத் தொடரில் இக்கோயில்கள் இருக்கின்றன. மானஸா தேவி கோவில் 600 அடி உயரத்தில் உள்ளது. மொத்தம் 786 படிகள். ரோப் கார் வசதியும் உண்டு. சிவபெருமானின் மனசிலிருந்து தோன்றியவர்தான் மானஸா தேவி என்கிறார்கள். மானஸா என்றால் விருப்பம். இந்த தேவியிடம் வேண்டி கொண்டால் நினைப்பது நடக்கும் என்று ஐதீகம். குன்றின் மீது சிறிய கோவிலாக இருக்கிறது.
2) சண்டி தேவி கோவில்
இமயமலையின் தென்கோடி மலைத் தொடரான சிவாலிக் மலைகளின் கிழக்கு உச்சியில் நீலபர்வதத்தின் மேல் இக்கோவில் அமைந்துள்ளது. 1929ல் காஷ்மீர் மன்னராக இருந்த சுசத்சிங் என்பவரால் கட்டப்பட்டது. இருப்பினும் கோவிலில் உள்ள முக்கிய மூர்த்தி 8 ஆம் நுாற்றாண்டில் ஆதிசங்கரால் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது.
3) மாயாதேவி கோவில்
சக்தி பீடங்களுள் ஒன்றாக கருதப்படும் மாயாதேவி கோவில் பதினோறாம் நுாற்றாண்டை சேர்ந்தது. ஹரித்வாரின் முன்னாள் பெயரான மாயாபுரி இந்த தேவியின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. சன்னிதியின் கருவறையில், மையத்தில் மாயாதேவியும் இடதுபுறம் காளிதேவியும் வலதுபுறம் காமாக்கியா தேவியும் அமர்ந்து காட்சி தருகின்றனர்.
(தனது தந்தையான தட்சனிடம் கோபம் கொண்டு நெருப்பில் பாய்ந்த சதிதேவியின் உடலை தோளில் சுமந்தபடி வருத்தமும் ருத்திரமுமாக சிவன் தாண்டவமாடுகிறார். அதன் உக்கிரம் தாங்க முடியாமற்போக, சதியின் சடலத்தை அழிக்க விஷ்ணு சக்ராயுதத்தை அனுப்புகிறார். சதிதேவியின் உடல் அச்சுதர்சன சக்கரத்தினால் வெட்டப்பட்டு பல பாகங்களாக பூமியில் விழுகின்றன. அவ்வாறு விழுந்த இடங்கள் சக்தி பீடங்கள் என்றாகிறது. சதிதேவியின் நாபிக்கமலமும் ஆன்மாவும் விழுந்த இடம் மாயாதேவி கோவில். யோனி பாகம் விழுந்த இடமாக கருதப்படும் அஸ்ஸாம் மாநிலத்தில் கௌஹாத்தியில் காமாக்கியா தேவிக்கு கோவில் எழுப்பப்பட்டுள்ளது.
4) தட்ச மகாதேவ் கோவில்
1810 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக கருதப்படும் இக்கோவில் 1962 ஆம் வருடத்தில் புதுப்பிக்கப்படுகிறது. பார்வதி தேவியின் தந்தையாகிய தட்சன் தன் மருமகனான சிவபெருமானை அழைக்காமல் யாகம் செய்ய விழைகிறார். இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி தந்தையிடம் நியாயம் கேட்கிறார். உரிய நியாயம் கிடைக்காமற்போகவே அவர் ஹோமகுண்டத்தில் குதித்து விடுகிறார். விஷயம் கேள்விப்பட்டதும் சிவபெருமான் வீரபத்திரையையும் பத்ரகாளியையும் அனுப்புகிறார். அவர்கள் கடும் போரிடுகிறார்கள். பின்னர் சிவபெருமானே நேரில் சென்று தட்சனின் தலையை கொய்து விட்டு பார்வதி தேவியை ஹோம குண்டத்திலிருந்து உயிர்ப்பிக்கிறார். பின்னர் தட்சன் தவறை உணர்ந்து சிவனிடம் மன்னிப்பு கேட்கவே, சிவபெருமான் அவரை மன்னித்து ஒவ்வொரு ஆண்டும் சிரவண மாதம் (ஆடி மாதம்) விஜயம் செய்து கௌரவப்படுத்துவதாக வாக்கு கொடுக்கிறார். அதற்காக ஏற்பட்டதுதான் இந்த கோவில் என்கிறது ஸ்தலபுராணம்
கோவில் வாசலில் கோபாவேசமாக சிவன் உருவம் உள்ளது. பக்கத்தில் இரண்டு சிங்கங்கள் உள்ளன. பின்னால் கங்கை அழகாக ஓடுகிறது. நதியை சீர்ப்படுத்தி நெடிய நீச்சல்குளம் போன்று வைத்திருக்கிறார்கள்.
5) ஹர் கி பவ்ரி
ஹரீ கீ பவ்ரி என்றால் ஹரியின் பாதம் என்று பொருள். இமயமலையில் இருக்கும் இறைவனின் பாதமாக ஹரித்துவார் இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இங்கு கங்கையில் நீராடுவது விஷேசமாக கருதப்படுகிறது. இந்த இடத்தின் முக்கிய நிகழ்வு மாலையில் நடைபெறும் கங்கா ஆரத்தி. மாதாவாக கருதும் கங்கையை துாப தீப ஆரத்தியோடு தெய்வமாக உயர்த்துகிறது இந்த ஆரத்தி.
ரிஷிகேஷ்
ஹரித்வாரிலிருந்து 24 கிமீ தொலைவில் ரிஷிகேஷ் உள்ளது. இங்கு தான் கங்கை மலையிலிருந்து சமவெளிக்கு இறங்குகிறது. கங்கை ஊருக்குள் ஓடி கொண்டேயிருக்க அதன் கரைகள் ஆசிரமங்களால் நிரம்பி வழிகிறது. நீர் பளிங்கு போல ஓடுகிறது. மலைத்தொடர்களும் பெருகியோடும் கங்கையும் அதன் கரைகளில் நடக்கும் புனித துாப தீப ஆரத்திகளும் மடங்களிலிருந்து ஒலிக்கும் வேதமந்திரங்களும் காவி வேட்டிகளும் இந்த யோக நகரை யோகம் பெற்ற நகராக மாற்றுகிறது.
கடல் மட்டத்திலிருந்து 1676 அடி உயரத்தில் ரிஷிகேஷிலிருந்து 25 கிமீ தொலைவில் குஞ்சரா தேவி கோவில் அமைந்துள்ளது. தசரா பண்டிகை நாட்கள் இங்கு விசேடமானது. இப்புனிதஸ்தலம் சதிதேவியின் நெஞ்சு பாகம் விழுந்த இடமாக இது கருதப்படுகிறது. கங்கையை தவிர, வசிட்டர் குகை, நீல்கண்ட் கோயில் என்று இங்கு பார்க்க வேண்டிய இடங்களும் நிறைய உள்ளன.
யமுனோத்ரி
ரிஷிகேஷிலிருந்து இடது பக்கமாக செல்லும் வழி யமுனோத்ரியையும் கங்கோத்ரியையும் அடைகிறது. கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 200 மீட்டர் உயரத்தை அடைந்தால் அதன் பிறகு வளைவுகளாலான மலைப்பாதை பயணம். மலைப்பாதை முடிந்து கீழிறங்கி கங்கையை நோக்கிப் பாயும் நதியொன்றை கடந்தால் மீண்டும் ஒரு ஏற்றம். அங்கே சம்பா என்ற சிறுநகரம் உள்ளது. இடதுபுறம் பந்தர்பூஞ்ச்சும் ஸ்ரீகங்காவும் வலதுபுறம் நந்தாதேவியும் திரிசூலும் நடுவில் கேதாரும் பத்ரியும் உள்ளன. பாகீரதியும் பீலாங்கனையும் இணையுமிடத்தில் டெஹ்ரி உள்ளது. அதுவரை பாதை இறக்கம்தான். டெஹ்ரிக்கு 3 கிமீ முன்பாக, தோபட்டில் ஸ்ரீநகர்-கங்கோத்ரி-யமுனோத்ரி பாதைகள் இணைகின்றன. அங்கிருந்து இடதுபுறம் யமுனோத்ரிக்கான பாதை தொடங்குகிறது.
பயணத்தில், ஃபல்தியானா, சாம், மாத்கூன் கிராமங்களை கடந்து 42 கிமீ துாரத்திலிருக்கும் தரசு-வை அடையலாம். தரசுவிலிருந்து இரண்டு கிமீ கடந்ததும் இடதுபுறமாக யமுனோத்ரிக்கான பாதை பிரிகிறது. நேராக செல்லும் பாதை உத்தரகாசிக்கு செல்கிறது. கல்யாணி, சில்கியாரா, ராணிகட் கிராமங்களை கடந்து பர்க்கோட்டை அடையலாம். பர்க்கோட் ரிஷிகேஷிலிருந்து 175 கிமீ துாரத்தில் உள்ளது. இங்குதான் முதன்முதலாக யமுனை நதியை காண முடியும். நதியையொட்டி செல்லும் பாதை கங்கானியை அடைகிறது. அங்கே கங்கா நயன குண்டம் என்ற தடாகம் இருக்கிறது. இது பூமிக்கடியிலுள்ள ஓடைகளின் வழியாக பாகீரதியுடன் தொடர்புற்று இருப்பதாக நம்பப்படுகிறது. இங்கேயுள்ள கோவிலில் கங்கைக்கும் யமுனைக்கும் வழிபாடு நடைபெறுகிறது. இங்கு யமுனைக்கும் பாகீரதிக்குமிடையில் ஒரு கிலோ மீட்டர் இடைவெளிதான் உள்ளது. ப்ரயாக்ராஜ்க்கு (அலகாபாத்) முன் வேறு எந்த இடத்தில் இவையிரண்டும் இவ்வளவு அருகில் வருவதில்லை. (ப்ரயாக்ராஜில்தான் யமுனை கங்கையில் கரைகிறாள்).
இதற்கு மேலான பயணம் காளிந்தி நதியுடன் தொடர்கிறது. காளிந்த மலையிலிருந்து உருப்பெறுவதால் யமுனையை இங்கே காளிந்தி என்று அழைக்கிறார்கள். காளிந்தி நதி (யமுனை) கறுப்பு நிறமுடையது. தட்சன் மகளான சதியின் மரணத்திற்கு பின் சிவன் தட்ச யாகத்தை நிர்மூலமாக்கி உலகெங்கும் சுற்றியலைகிறான். அப்போது மனைவியை இழந்த சிவனைப் பார்த்து மன்மதன் அம்பு வீச, சிவனுக்கு உன்மத்தமாகி விடுகிறது. நதிகளிலும் கானகங்களிலும் அலைந்து திரிந்தவன் அம்பு பட்டதும் காளிந்தி நதியில் விழுந்து மூழ்கி விட அந்த நீர் கறுத்துப் போனது என்று புராணம் சொல்கிறது.
மலைச்சரிவுகளினுாடாக அபாயம் நிறைந்த பயணம் சயனா சட்டியை வந்தடைகிறது. இது ரிஷிகேஷிலிருந்து கிட்டத்தட்ட 250 கிமீ தொலைவிலிருக்கலாம். இங்கு தேவதாரு மரங்கள் நிறைந்த வனத்துடன் ஆர்பரித்து பாய்ந்தோடும் யமுனையின் பேரிரைச்சலை கேட்க முடியும். அனுமன் சட்டி, ராணா சட்டி, ஃபூல் சட்டி, ஜானகிபாய் சட்டி கிராமங்ளை கடந்த பிறகு யமுனோத்ரியை அடைய 13 கிமீ தொலைவே மிச்சம்.
யமுனோத்ரி கடல் மட்டத்திலிருந்து 3323 மீட்டர் உயரத்தில் உள்ளது. யமுனா சூரிய பகவானுக்கும் விஸ்வகர்மாவின் மகளான சஞ்சனாவுக்கும் மகளாக பிறக்கிறாள். அவள் சூர்ய கன்னி என்றும் சூர்ய தன்யா என்றும் அழைக்கப்படுகிறாள். சூரியன், சஞ்சனா தம்பதிகளுக்கு யமன் என்றும் தர்மராஜன் என்றும் இரண்டு ஆண்பிள்ளைகள் இருக்கின்றனர் என்கிறது தொன்மம்.
பாறையிடுக்குகளினுாடே குதித்தோடி பாய்ந்து கொண்டிருக்கும் யமுனையாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் சிறிய பாலத்தைக் கடந்து விட்டால் கோவில் வந்து விடுகிறது. கோவிலுக்குள் யமுனையும் கங்கையும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. யமுனா தேவியை கறுப்புக்கல்லிலும் இடப்பக்கமிருக்கும் கங்கையை வெள்ளைக் கல்லிலும் செதுக்கியுள்ளனர். பூசாரிகள் கருவறைக்கு சற்று கீழேயுள்ள பெரிய பாறையிலிருந்து சீறி வரும் ஜலப்ரவாகத்தின் முன்னால் அமர்ந்து பக்தர்களுக்கு பூஜை செய்து பிரசாதம் கொடுக்கிறார்கள். அதுவே உற்சவ மூர்த்தி.
உத்தரகாசி
தரசு-விலிருந்து நேராக விரியும் பாதை உத்தரகாசிக்கானது. இதை காசி அல்லது வாரணாசியின் மற்றொரு பதிப்பு எனலாம். கலியுகத்தில் காசி வெள்ளத்தில் மூழ்கி விடுமென்றும் அப்போது காசிக்கு பதில் உத்தரகாசிதான் இருக்குமென்றும் ஒரு நம்பிக்கையிருக்கிறது. உத்தரகாசியின் கோயில், மலைத் தொடர்கள் பலவற்றின் பெயர்களும் வாரணாசியில் உள்ளதாகவே இருக்கிறது.
உத்தரகாசிக்கு சௌம்யகாசி என்று மற்றொரு பெயரும் இருக்கிறது. முன்பொரு காலத்தில், உத்தரகாசியில் ஜமதக்னி முனிவர் வாழ்ந்து வந்தார். அவரின் மனைவி ரேணுகா. அவள் சந்தர்ப்பவசத்தால், க்ருதவீர்யன் என்ற கந்தர்வன் மீது காதல் வயப்பட்டு விட, கோபம் கொண்ட முனிவர் தன் மூத்த மகனிடம் ரேணுகாவை சிரத்சேதம் செய்ய ஆணையிடுகிறார். மூத்தவன் மறுக்கவே, இரண்டாவது மகன் பரசுராமரிடம் தந்தையின் ஆணை வந்து சேருகிறது. பரசுராமன் தந்தையின் ஆணையை கேள்வியின்றி நிறைவேற்றுகிறான். மகிழ்ந்த தந்தை, என்ன வரம் வேண்டுமோ கேள் என்கிறார் மகனிடம். பரசுராமர் தன் தாயாரை மன்னித்து வாழ்வளிக்க வேண்டும் என்று வேண்டுகிறான். மகனின் வேண்டுதலாலும் முனிவரின் ஆசியாலும் ரேணுகா உயிர் பெறுகிறாள். இந்நிகழ்வனைத்திலும் பரசுராமன் வெளிப்படுத்திய சாந்தமும் சமாதானமும் கண்ட தந்தையான முனிவர் இந்த இடத்துக்கு சௌம்யகாசி என்று பெயரிடுகிறார்.
உத்தரகாசி கடல்மட்டத்திலிருந்து 1558 கிமீ உயரத்தில் வாரணாவத பர்வதத்தின் அடிவாரத்தில் உள்ளது. மலையின் தெற்கிலும் கிழக்கிலும் விரியும் பள்ளத்தாக்கினுாடே பாகீரதி பிரவகித்துக் கொண்டிருக்கிறது. பாகீரதியில் வந்து சேரும் வருணா, அஸி என்ற இரு நதிகளின் மத்தியில் உத்தரகாசி உள்ளது. இங்கிருக்கும் ஆலயம் காசி விஸ்வநாதர் ஆலயம் என்றும் சுக்கா மந்திர் என்றும் அழைக்கப்படுகிறது. கோயிலின் முன்னால் ஒரு பெரிய திரிசூலம் உள்ளது. பித்தளையால் உருவாக்கப்பட்ட அந்த சூலத்தின் கீழ்ப்பகுதியின் சுற்றளவு ஒரு மீட்டர். உயரம் நான்கு மீட்டர். பரசுராமர், தத்தாத்ரேயர், அன்னப்பூர்ணா தேவி, காளி, பைரவர் போன்றோருக்கும் இங்கே கோவில்கள் உள்ளன. ஒரு காலத்தில் இங்கே 365 கோவில்கள் வரை இருந்தனவாம்.
கங்கோத்ரி
உத்தரகாசியிலிருந்து கங்கோத்ரிக்கு செல்லும் பயணத்தில் மனேரி, பட்வாரி, கங்காணி என்ற இடங்களை கடக்கிறோம். பனி படர்ந்த மலைத்தொடர்கள் இங்கிருந்து காட்சியளிக்க தொடங்குகின்றன. இது கடல் மட்டத்திலிருந்து 1677 மீட்டர் உயரத்திலுள்ளது. சுகி என்ற இடத்தை தாண்டி திரௌபதி கா குண்ட் என்ற இடம் வருகிறது. அந்த மலைக்குன்றின் சரிவில்தான் சொர்க்கம் புகும் பயணத்திற்கிடையில் திரௌபதி விழுந்து விட்டதாக ஐதீகம். ஹிமாச்சல் பிரதேசத்துக்கும் உத்தரகாண்ட்டிற்கும் எல்லையாக நிலை கொள்ளும் தௌலாதர் மலைத் தொடர்கள் தொடர்கின்றன.
தௌலாதர் மலைத் தொடர்களில் உருவாகும் ஹரி கங்காவும் நீல் கங்காவும் ஸ்ரீகண்ட மலையிலிருந்து தோன்றும் குப்த கங்காவும் ஹர்சில் என்ற இடத்தில் சங்கமிக்கின்றன. 2600 மீட்டர் உயரத்தில் 2 கிமீ அகலத்தில் 10 கிமீ நீளத்தில் அமைந்திருக்கும் பள்ளத்தாக்கின் நடுவில் ஹர்சில் என்ற அந்த சிறு கிராமம் உள்ளது. அதன் வலதுபுறம் காணப்படும் ஸ்ரீகண்ட சிகரத்தின் பின்புறம் கேதார்நாத் இருக்கிறது. பின்னால் திரும்பினால் பந்தர்பூஞ்ச் சிகரத்தை பார்க்கலாம். அதன் மறுபக்கம்தான் யமுனோத்ரி. பாகீரதியும் ஸ்ரீகண்ட மலையிலிருந்து வரும் துாத்கங்காவும் சங்கமமாகும் இடத்தில் தராளி என்ற சிறிய கிராமமிருக்கிறது. பகீரதன் ஸ்ரீகண்டமலைக்குச் சென்று சிவனைப் பார்த்து வேண்ட, கங்கையை சடையில் ஏற்றுக் கொள்வதாக சிவன் வரம் அளித்தாராம். மண் சரிவில் சிதிலமடைந்த கிராமப்பகுதிகளில் நடத்திய ஆராய்ச்சியில் அங்கே ஒரு சிவன் கோவில் இருந்திருக்கலாமென்று சொல்லப்படுகிறது.
பாகீரதியின் மறுகரையில் முஷிமட் அல்லது மக்வா என்ற கிராமம் உள்ளது. பனிக்காலங்களில் கங்கோத்ரி பனிக்குவியலுக்குள் அழுந்தி விடும்போது கங்காதேவி சிலையை இந்த கிராமத்திற்கு கொண்டு வந்து மார்க்கண்டேயாஸ்ரமம் என்ற கோவிலில் வைத்து பூசை செய்வார்கள். மதங்க மகரிஷியும் மார்க்கண்டேய மகரிஷியும் இங்கே வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. கங்கோத்ரியின் பூசாரிகள் இப்போது இங்கே வசிக்கிறார்கள்.
இன்னும் கொஞ்சம் முன்னேறினால் லங்காசட்டி வருகிறது. ஜான்வியும் பாகீரதியும் இங்கே சங்கமிக்கின்றன. ஜான்வியின் மீதான தொங்கு பாலத்தை கடக்கையில் ஒரு பெரிய பாறையை காணலாம். அதுதான் பைரவர் சிலை. அதன் கீழே பைரவர் கோவில் இருக்கிறது. பைரவன் கட்டிலிருந்து போகும் பயணத்தில் பனி மூடிக் கிடக்கும் மலைத் தொடர்களை வெகு அருகில் நெருங்குகிறோம். மலைச்சரிவுகளிலிருந்து பாகீரதி துள்ளிக் குதித்து வருகிறாள். இங்கேயிருக்கும் சமதளமான வெட்ட வெளியில் பாண்டவர்கள் அசுவதேம யாகம் நடத்தினார்களாம்.
உத்தரகாசி மாவட்டத்தில் 3200 மீட்டர் உயரத்தில் பாகீரதியும் கேதார்கங்காவும் சங்கமிக்கும் இடத்தில் கங்கோத்ரி இருக்கிறது. கங்கோத்ரியில் குதியாட்டம் போடும் நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தையடுத்து ஆசிரமங்களும் தர்மசாலைகளும் உள்ளன. பாலத்தின் கீழே தலைச்சுற்றி போகுமளவுக்கு பாகீரதி பாறைகளில் சுழன்றடித்துச் சீறிப் பாய்ந்து வருகிறது. கலங்கலான நீர். கோவிலிலிருந்து நதியின் பாதையில் கீழே 100 மீ துாரம் சென்றால் கௌரி குண்டம் வருகிறது. இங்கே பாகீரதி 7 மீ ஆழமுள்ள குழியை நோக்கி பாய்கிறது.
கோவிலின் பழமை இன்றும் மர்மம்தான். புராதனக் கோவில் மரத்தாலானது. அது பனிப்பொழிவில் தகர்ந்து போய் விட்டதால் ஜெனரல் அமர்சிங் தாபாவின் வழிகாட்டலில் புதிய கோவில் கட்டப்பட்டிருக்கிறது. பாறைகள் இடிந்து விழுந்து அதுவும் பாழானபோது ஜெய்ப்பூர் மன்னர் பழுதுபார்த்து புதியதாக எழுப்பியதுதான் இப்போதுள்ள இந்த கோவில். ஆறேகால் சதுரமீட்டர் பரப்பளவில் மூலவர் சந்நிதி உள்ளது. தேவியின் அழகான சிலை அரை மீட்டர் உயரத்தில் இருக்கிறது. அதற்கு கீழே லட்சுமி, சரஸ்வதி, அன்னபூர்ணா, பாகீரதி, யமுனா, ஜான்வி சிலைகளும் உள்ளன. கோவிலிலிருந்து 16 கிமீ துாரத்தில் பகீரதன் சிலை இருக்கிறது. இங்கேதான் பகீரதன் தவமிருந்ததாக புராணம் கூறுகிறது.
இங்கு மே 1 முதல் அக்டோபர் 31 வரை தான் கோவில் திறந்திருக்கும். பனிக்காலத்தில் சந்நியாசிகள் சிலரை தவிர மற்றெல்லாரும் இங்கிருந்து சென்று விடுவார்கள். பனி்ப்பொழிவு இரண்டு மீட்டர் உயரத்துக்கு காணப்படும். அந்நேரம் பனிக்கோழி தவிர மற்ற அனைத்துப் பறவைகளும் சுகி க்கு இடம் பெயர்ந்து விட, ஒரு ஜோடி காகங்கள் மட்டும் அங்கே அந்த சந்நியாசிகளுடன் தங்கியிருக்குமாம். பக்தர்கள் கொடுத்து விட்டு செல்லும் உணவு, விறகு, காடுகளிலிருந்து கிடைக்கும் காய்கறிகள், காய வைத்த காளான் என்று அந்த சந்நியாசிகள் பனிக்காலத்தை எதிர்க்கொள்கின்றனர்.
கோமுகம்
கங்கோத்ரியிலிருந்து கோமுகத்திற்கான வழி தொடங்குவதே பெரியதொரு ஏற்றத்தோடுதான். அதன் இருபுறமும் சிறியதான ஆசிரமங்களை பார்க்கலாம். கோமுகம் கங்கோத்ரியிலிருந்து கிட்டத்தட்ட 20 கிமீ துாரத்தில் உள்ளது. பாகீரதியின் வலதுகரையோரமாக பயணித்து லட்சுமி வனம், கர்ப்ப யோனி என்ற இடங்களை கடக்கும்போது, பனிமலைகள் தெரிய தொடங்குகிறது. சர்க்கரை போன்ற மணல். இப்பாதை வழியே நடந்து கோமுகத்தை அடையலாம். அங்கு பனிமலையின் அடியிலிருந்து பாகீரதி குதித்து வெளியே வருகிறது. பனிக்கட்டிகள் இடிந்து விழுந்து ஒன்றுடன் ஒன்று உரசி பொடிப்பொடியாகும் சத்தம் எங்கும் எதிரொலிக்கிறது.
பாகீரதி நதி 3892 மீ (12769 அடி) உயரத்திலுள்ள கங்கோத்ரி பனிப்பாறைகளின் அடியில் உள்ள கோமுகிலியிருந்து வருகிறது. ஒரு காலத்தில் கங்கோத்ரியும் கோமுகமும் ஒரே இடத்தில்தான் இருந்ததாம். பின்னர் நகர்ந்து நகர்ந்து கோமுகம் துாரமாக சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. மந்தாகினியும் அலக்நந்தாவும் இந்த இமய பனிப்படலத்திலிருந்துதான் உற்பத்தியாகின்றன. சௌங்கா மலைச்சரிவின் வழியாக வந்து கோமுகத்தில் முடியும் இமயப்பனிப்படலம் 24 கிமீ நீளமும் 4 மீ அகலமும் கொண்டது. இந்தப் பகுதியில் ரத்தவர்ணா, சதுரங்கி, ஸ்வச்சந்தா, மேரு, கீர்த்தி போன்ற அருவிகளும் சிவலிங்கம், மேரு, சுமேரு, பகீரதப் பர்வதம் போன்ற பனிமலைத் தொடர்களும் காணப்படுகின்றன. இந்த பனிப்படலத்தின் முகக்கமலம்தான் கோமுகம் என்ற தீர்த்தயாத்திரைக்கான இடம். இமயக்குகைக்கு மேலே எங்கேயும் கங்கையை காண முடியாததால் இதுவேதான் கங்கையின் உற்பத்தியிடம் என்று நம்ப வேண்டியிருக்கிறது. பாகீரதி மலையின் அடியில் பாய்ந்து வந்து கோமுகத்தின் வழியே கங்கை பிரவகித்துக் கொண்டிருக்கிறது என்றும் ஒரு நம்பிக்கையுண்டு.
இராமரின் மூதாதையரான சகரன் ஒருமுறை அசுவமேத யாகம் செய்ய எண்ணினாராம். குதிரையை நாடெங்கும் அனுப்பி மற்ற அரசர்களை அடிபணிய வைப்பதாக திட்டம். ஆனால் யாகம் வெற்றியடையாதிருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்திரன் அந்த குதிரையை கவர்ந்து விடுகிறார். குதிரை காணாமல் போனதும் யாகம் நின்று விடுகிறது. அதனை தேடி சகரனின் மகன்கள் உலகெங்கும் அலைகின்றனர். இறுதியாக அதனை பாதாள லோகத்தில் கபில முனிவரின் ஆசிரமத்தில் கண்டுப்பிடிக்கின்றனர். குதிரையை ஒளித்து வைத்துக் கொண்டதாக கபில முனியின் மீது சகரனின் மகன்கள் கோபம் கொண்டு பாய, முனிவர் அவர்களனைவரையும் தன் தவவலிமையால் பஸ்மாக்குகிறார். இதே சூரிய வம்சத்தில் பின்னர் பகீரதன் என்ற அரசன் தோன்றுகிறார். அவர் தனக்கு புத்திர பாக்கியம் கோரியும் கபில முனிவரின் சாபத்தால் இறந்து போன தம் மூதாதையர்களுக்கு கங்கை நீரைக் கொண்டு திதி செய்ய வேண்டும் என்று எண்ணியும் கடும் தவம் புரிகிறார். பிரம்மனால் அவரது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது போகவே, அவர் சிவனை நோக்கி தவமிருக்க தொடங்குகிறார். பகீரதனின் முன்பாக தோன்றிய சிவன், “உனக்காக கங்கையை நான் பூமிக்கு கொண்டு வருவேன்” என்று அருளுகிறார். சிவபெருமானின் சொல்லுக்கிணங்கி அவரது தலை மேலிருந்து கீழே விழுந்த கங்கை அதே ஆர்ப்பரிப்போடு பாதாளத்துக்குள் பாய முற்படுகிறது. இந்த வேகத்தை பூமியால் தாங்க முடியாது என்று நினைத்த சிவன் கங்கையை மீண்டும் தன் தலைமுடியில் கட்டிக் கொண்டார். பகீரதன் கவலைப்பட, சிவன் தன் தலைமுடி வழியாக கங்கையை மெதுவாக கீழே இறக்கினார். கங்கையும் சீரான வேகத்தில் பூமிக்கு வந்தது. பகீரதன் முயற்சியால் பூமிக்கு வந்த கங்கைக்கு பாகீரதி என்று பெயர் வந்தது. கங்கோத்ரியிலிருந்து தேவபிரயாக் வரை கங்கைக்கு பாகீரதி என்றுதான் பெயர்.
கேதார்நாத்
கேதார்நாத் பயணத்தில், ரிஷிகேஷிலிருந்து 74 கிமீட்டர் தொலைவில் தேவபிரயாகை உள்ளது. இங்கு பாகீரதியும் அலக்நந்தாவும் சங்கமிக்கின்றன. பாகீரதி பச்சை நிறத்தில் ஆர்ப்பரித்து ஓடி வர அலக்நந்தா நீல நிறத்தில் அமைதியாக நடந்து வருகிறது. ஆங்கில Y போன்று தோற்றமளிக்கும் இவ்விடத்தில் இரு நதிகளும் ஒன்று கலப்பதை நம்மால் தெளிவாக காண முடியும். இரண்டும் ஒன்றென கலந்து கங்கை என்றாகிறது.
அலக்நந்தா ஆற்றின் நீராதாரனமானது நந்தா தேவி, திரிசுல் மற்றும் கமேட் போன்ற சிகரங்களின் பனிமுகடுகளிலிருந்து உருவாகிறது. அலக்நந்தா பத்ரிநாத்துக்கு மேல் குபேரனின் தலைநகரான அலகாபுரியிலிருந்து வருகிறது என்கிறது தொன்மம்.
அடுத்து 34 கிமீ துாரத்தில் ருத்ரபிரயாகை வருகிறது. பஞ்ச பிரயாகைகளில் இது நான்காவது. முதலாவது விஷ்ணு பிரயாகை, பிறகு நந்த பிரயாகை, கர்ண பிரயாகை, ஐந்தாவது தேவபிரயாகை. ருத்ரபிரயாகையில் பத்ரிநாத்திலிருந்து வரும் அலக்நந்தா நதியும் கேதார்நாத்திலிருந்து வரும் மந்தாகினி நதியும் இணைகின்றன. இங்கு நாரதர் சிவபெருமானை நோக்கி தவமிருக்கிறார். நாரதரை ஆசிர்வதிப்பதற்காக ருத்ரனாக காட்சி தரும் சிவபெருமான் ருத்ரவீணை வாசிப்பதோடு ருத்ர தாண்டவமும் ஆடுகிறார். நாரதருக்கு மஹதி என்ற வீணை கிடைத்ததும் இந்த ருத்ரபிரயாகையில்தான் என்கிறது தொன்மம்.
சாலை ருத்ரபிரயாகையில் இரண்டாக பிரிகிறது. அலக்ந்தாவை ஒட்டிய பாதை பத்ரிநாத்துக்கும் மந்தாகினியோடு ஒட்டி செல்லும் பாதை கேதார்நாத்துக்கும் செல்கிறது.
இங்கிருந்து சுமார் 85 கிமீ பயணத்தில் கேதார்நாத் ஆலயம் அமைந்துள்ளது. கேதார்நாத் செல்லும் வழியில் அகஸ்தி முனி (நம் பொதிகை அகத்தியர் பெயர்தான்), குண்ட் சட்டி, குப்தகாசி, சோனப்பிரயாக், ராம்பூர் என ஊர்கள் வருகின்றன. ராம்பூர் கடல் மட்டத்திலிருந்து 6500 அடி உயரத்தில் உள்ளது. கேதார்நாத் 11800 அடி உயரத்தில் உள்ளது. அங்கிருந்து பத்து கிமீ துாரத்தில் கவுரி குண்ட் உள்ளது. சிவபெருமானை மணந்துக் கொள்வதற்காக பார்வதி தேவி கேதார் அடிவாரத்தில் தவமிருந்த ஊர்தான் கவுரிகுண்ட் என்பது புராணக்கதை. கௌரிகுண்ட் கேதார்நாத் செல்லும் நுழைவு வாயில். அதன் பிறகான 14 கிமீ மலைப்பாதை.
கேதார்நாத் கோயில் பாண்டவர்களால் கட்டப்பட்டது என்கிறது ஸ்தல புராணம். பின்னர் ஆதிசங்கரர் எட்டாம் நுாற்றாண்டில் புனருத்தாரணம் செய்திருக்கிறார். குருஷேத்திர யுத்தம் முடிந்ததும் பாண்டவர்கள் உலகப் பற்றை துறந்து கேதார்நாத் வருகிறார்கள். சகோதரர்களைக் கொன்ற பாவம் தீருவதற்காக தன்னிடம் பாப விமோசனம் கேட்க வரும் பாண்டவர்களை சிவபெருமான் தவிர்க்க எண்ணுகிறார். அவர்கள் கண்களில் படாமல் இருப்பதற்காக எருது ரூபம் எடுத்து ஓடுகிறார். இதை அறிந்த பாண்டவர்கள் எருதை பிடிக்க ஓடுகிறார்கள். அவர்கள் கையில் சிக்காமல் எருது ஓடுகிறது. பூமிக்குள் புகுந்து ஒளிந்து கொண்டு விடலாம் என்று பூமிக்குள் நுழைகிறது. அதற்குள் பீமன் எருதின் வாலைப் பிடித்து இழுத்து தடுத்து விடுகிறார். பாதி உடல் பூமிக்குள் போன நிலையில் எருது அப்படியே நின்று விடுகிறது. எருதின் பின் முதுகுப் பகுதி மட்டும் பூமிக்கு வெளியே காட்சி தருகிறது.
கேதார்நாத் கோவிலினுள் இப்படிப்பட்ட உருவத்தைதான் நாம் வணங்குகிறோம். இது ஒரு சுயம்பு லிங்கம். நடுவில் எருதின் முதுகு வடிவில் சிவன் காட்சி தருகிறார். காலை நேரத்தில் சென்றால் நாமே மூலவரை தொட்டு அபிஷேகம் செய்யலாம். மூலவருக்கு முன்னே ஒரு நந்தி இருக்கிறது. சுற்றியுள்ள பிரகாரத்தில் பஞ்ச பாண்டவர்களின் சிலையும் திரௌபதியின் சிலையும் உள்ளது.
கேதார்நாத் கோவிலின் பின்புறம் ஆதிசங்கரரின் நினைவிடம் உள்ளது. ஆதி சங்கரர் கிபி 788 ஆம் ஆண்டு கேரளாவிலுள்ள காலடி என்ற ஊரில் பிறந்தார். சிறு வயதில் அவரது தந்தை இறந்து போக தாயார் அவரை வளர்த்து வருகிறார். சங்கரருக்கு சிறு வயதிலிருந்தே சந்நியாசத்தில் நாட்டம் வந்தாலும் தாயார் அவரை அனுமதிக்கவில்லை. எட்டு வயதாகும்போது ஒருநாள் ஆற்றில் குளிக்கையில் முதலையொன்று அவர் காலை கவ்விக் கொள்கிறது. அப்போது அவர் தாயாரிடம் தான் சந்நியாசம் மேற் கொள்ள முடிவெடுத்தால் முதலை காலை விட்டுவிடும் என்றும் இல்லையேல் முதலை கொன்று விடும் என்றும் கூறுகிறார். வேறு வழியி்ன்றி தாயார் சந்நியாசத்துக்கு சம்மதிக்கிறார். தாயாரின் சம்மதத்துக்கு பிறகு சங்கரர் குருவை தேடி வட இந்தியா போகிறார். அங்கு கோவிந்த பகவத் பாதா என்ற குருவை சந்தித்து பாடம் கற்கிறார். ஞானம் பெற்றதும் இந்தியா முழுக்க பயணித்து இந்து மத தத்துவங்களை பரப்புகிறார். அந்நேரம் இந்தியாவில் புத்த மதமும் சமண மதமும் வெகுவாக பரவியிருந்தன. சங்கரர் அவற்றின் தாக்கத்தை தடுத்து இந்து மதத்தின் மேன்மையை பரப்புகிறார். கேதார்நாத் கோவிலுக்கு வந்த அவர் ஒருநாள் கோவிலின் பின்புறமாக நடந்து செல்கிறார். அதன் பிறகு திரும்பவேயில்லை. அப்போது அவருக்கு வயது 32.
கேதார்நாத் கோவிலை குளிர்காலம் வந்ததும் கார்த்திகை முதல் தேதி மூடி விடுகிறார்கள். பின்னர் பிப்ரவரி மாதம் மகா சிவராத்திரி அன்று பண்டாக்கள் ஒன்று கூடி கோயில் திறக்கும் நாளை முடிவு செய்கிறார்கள். பொதுவாக ஏப்ரல் மே மாதங்களில் கோயில் திறக்கப்படுகிறது.
பத்ரிநாத்
மீண்டும் குப்தகாசி, குண்ட் சட்டி, அகஸ்திமுனி, தில்வாரா வழியாக ருத்ரபிரயாகை சென்று அங்கிருந்து அலக்நத்தா நதியோடு பத்ரிநாத் பாதையில் பயணக்கலாம். அங்கிருந்து பனிரெண்டாவது கிலோ மீட்டர் கடந்ததும் கர்ணப் பிரயாகை வருகிறது. அது அலக்நந்தா நதியும் பிண்டாரி நதியும் சங்கமிக்கும் இடம். கர்ணன் இங்கு தவம் செய்து யாராலும் உடைக்க முடியாத கேடயத்தை பெற்றான் என்று கதை சொல்லப்படுகிறது. அங்கிருந்து 21 கிலோ மீட்டர் துாரத்தில் நந்தப்பிரயாகை. இங்கு அலக்நந்தாவுடன் நந்தாகினி கலக்கிறது. நந்தா மலை சிகரத்திலிருந்து உருகும் பனி இந்த நதியில் வெண்மையாக ஓடி வரும். இங்கு பிரசித்தி பெற்ற கோபால்ஜி ஆலயம் உள்ளது. ஆதி காலத்தில் யது சாம்ராஜ்ஜியத்தின தலைநகராக இந்த இடம் இருந்ததாம். இங்கு மன்னர் நந்தகோபார் மாபெரும் யாகம் நடத்தியுள்ளார். கிருஷ்ணபரமாத்மாவின் வளர்ப்புத் தந்தையான நந்தகோபரின் நினைவாகவே இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அடுத்து சமோலி என்ற ஊர் (உத்தர்காண்ட் மாநிலத்தில் சமோலி இரண்டாவது பெரிய மாவட்டம். இந்தி தவிர கார்வாலி மொழியும் இங்கு பேசப்படுகிறது. சமஸ்கிருதத்துக்கும் கார்வாலிக்கும் நிறைய பொதுவான வார்த்தைகள் உள்ளன) சமோலிக்கு அடுத்து வரும் பிபால்கோடி என்ற சிற்றுாரிலிருந்து பத்ரிநாத் 80 கிமீ துாரம். இந்த செங்குத்தானதாக பாதையை கடந்து தொடரும் பயணத்தின் 35வது கிமீல் ஜோஷிமட் என்ற ஊர் வருகிறது.
ஜோஷிமட்டில் ஆதிசங்கரர் நீண்டநாட்கள் தங்கியிருந்திருக்கிறார். வடக்கே ஞானம் பெற்ற அவர் கால்நடையாக இமாலயம் வருகிறார். இமாலயம்தான் இறைவனின் இருப்பிடம் என்பது ஆதிகால நம்பிக்கை. இங்கு தவம் செய்வதற்காக குகையொன்றை தேர்ந்தெடுக்கிறார். அவர் தவம் செய்த குகையை இன்றும் காண முடியும். பின்னர் அங்கிருந்து பயணித்து பத்ரிநாத் சென்று அங்கு பத்ரிநாராயணன் கோவிலை நிறுவுகிறார். பத்ரிநாத்தில் இப்போதிருக்கும் சாலிகிராம மூலவர் அவரால்தான் ஸ்தாபிக்கப்பட்டது. அவர், தான் உபதேசித்த அத்வைத சித்தாந்தத்தை பரப்பும் நோக்கில் இந்தியாவெங்கும் மடங்களை நிர்மாணிக்கிறார். மேற்கேயிருக்கும் துவாரகைதான் தலைமை பீடம். கிழக்கில் பூரி. வடக்கில் ஜோஷிமட், தெற்கில் சிருங்கேரி ஆகிய நான்திசைகளிலும் மடங்கள் உருவாகின்றன. இமயம் முழுக்க நடந்தே சென்றவர் கடைசியாக கேதார்நாத் சென்று அங்கு தன் 32வது வயதில் மறைந்து போகிறார். ஜோஷிமட்டில் இருக்கும் நரசிம்மர் ஆலயத்தில் சங்கரருக்கு சந்நிதி இருக்கிறது. மிக பெரிய ஸ்படிக லிங்கம் ஒன்றும் இங்குள்ளது. இங்கிருக்கும் கற்பகவிருட்சம் 1200 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.
மேலும் ஜோஷிமட் முக்கியமான ராணுவ தளமும் கூட. இங்கிருந்து 45வது கிமீட்டரில் தொலைவிலிருக்கும் பத்ரிநாத் ஆலயத்தை நோக்கிய பாதை 1600 அடி இறக்கத்தில் செல்கிறது. செங்குத்தாகவும் குறுகலாகவும் உள்ள இப்பாதையை கடந்து சென்றால், கடைசி சங்கமமான விஷ்ணு பிரயாகையை அடையலாம். தவுலி கங்கா நதியும் விஷ்ணு கங்காவும் கலக்குமிடமே விஷ்ணு பிரயாகை. (அலக்நந்தாவின் பழைய பெயர் விஷ்ணு கங்கா)
அங்கிருந்து பயணித்து கோவிந்த காட் என்ற ஊரை அடையலாம். இது சீக்கியர்களின் புனித ஸ்தலம். குரு கோவிந்த் சிங்கின் குருத்வாரா இங்குள்ளது. இங்கிருந்து 6 கிமீ இறக்கத்தில் உலகப் புகழ் பெற்ற மலர் பள்ளத்தாக்கு வருகிறது. (Valley of flowers). கோவிந்த் காட்டை அடுத்து பாண்டுகேஷ்வர் செக் போஸ்ட், அதையடுத்து அனுமன் சட்டி. (பயணவசதிகள் அதிகமில்லாத காலத்தில் யாத்ரீகர்கள் இங்கு தங்கிச் செல்வர்) இங்கு சிறு அனுமன் கோவில் உண்டு. அங்கிருந்து பதினோரு கிமீல் பத்ரிநாத் கோவில் உள்ளது.
பத்ரிநாத்தில் அலக்நந்தா கிட்டத்தட்ட நாற்பதடி அகலத்தில் குறுகி ஓடிக் கொண்டிருக்கும். நதியின் மீதிருக்கும் பாலத்தை கடந்து கோவிலை அடையலாம். கோவிலுக்கு படியேறி செல்ல வேண்டும். கோவிலின் இடது புறத்தில் பிரம்ம குண்டம் எனப்படும் வெந்நீர் ஊற்றுகள் இருக்கும். அதற்கு முன்னாலிருக்கும் அகலமான படித்துறையில் இறங்கினால் பனியின் குளுமையில் பெருகி ஓடிக் கொண்டிருக்கும் அலக்நந்தாவை தொட முடியும்.
பத்ரிநாத்தில் மூலவரான பத்ரி நாராயணன் ஒரு சுயம்பு சாலிக்கிராமம். நீள் உருண்டையாக இருக்கும் ஒரு கருப்புக் கல். எட்டாம் நுாற்றாண்டில் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்டது. பூசாரிகள் சாலிக்கிராமத்தின் மேல் சந்தனத்தினால் கண் மூக்கு வரைந்து அதற்கு முகமாக உருக் கொடுக்கிறார்கள். கேரளாவிலிருந்து ஆதிசங்கரருடன் வந்த நம்பூதிரிகள் இங்கு பூசை செய்கிறவர்கள். பத்ரி நாராயணனுக்கு இடதுபுறம் நாரதரும் இருக்கிறார். வலதுபுறம் கருடரும் இருக்கின்றனர். இடதுபுறம் பெரியளவில் நாராயணனும் வலதுப்பக்கம் குபேரரும் இருக்கின்றனர்.
எதிரேயிருக்கும் பனிச்சிகரத்தின் உச்சியில் முக்கோணமாய் தெரியும் நீலகண்ட பர்வதத்தின் மீது சூரியக்கதிர்கள் படும்போது அது தங்கமென ஜொலிக்கும். அலக்நந்தா கரையோரம் பிரம்ம கபாலம் என்ற இடத்தில் முன்னோர்களுக்கு திதி செய்வதை விசேஷமாக கருதுகிறார்கள். கேதார்நாத் போல பத்ரிநாத்தும் வருடத்துக்கு ஆறு மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். குளிர்காலத்தில் குறிப்பிட்ட நாளில் நாராயணனுக்கு அலங்காரம் செய்து கம்பளி ஆடை அணிவித்து கோவிலை மூடி விடுவர். நாராயணின் அந்த கம்பளி ஆடையை அருகிலிருக்கும் மானா என்ற கிராமத்தை சேர்ந்த பழங்குடிகள் நெய்து தருகிறார்கள். கோவிலை மூடும் முன் ஒரு பாத்திரம் நிறைய நெய் ஊற்றி பெரிய திரியை போட்டு கோவிலின் தலைமை பண்டா விளக்கேற்றுவார். உற்சவ விக்கிரகமான பாண்டுகேஸ்வரர் ஊருக்கு எடுத்து செல்லப்படும். பண்டாக்கள் கீழிறங்கி விடுவர். பின் ஏப்ரல் மாதத்தில் கோவில் திறப்பார்கள். அப்போது ஆறு மாதங்களுக்கு முன் ஏற்றி வைத்த தீபம் அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும். அதை காண பெருமக்கள் திரள் அங்கு வந்து சேரும்.
மானா என்ற ஊர் பத்ரிநாத்துக்கு மேல் கிட்டத்தட்ட 10 கிமீ துாரத்திலிருக்கும் ஒரு சிறிய கிராமம். இமயத்திலிருக்கும் இந்தியாவின் கடைசி கிராமம். அங்கிருந்து எட்டிப் பார்க்கும் தொலைவிலிருப்பது திபெத் நாடு. கம்பளி பின்னுவதும், உருளைக்கிழங்கு பயிர் செய்வதும் அங்கிருக்கும் மக்களின் தொழில். அவர்களும் கூட உறைபனி சமயத்தில் கீழிறங்கி விடுகிறார்கள்.
பஞ்சபாண்டவர்கள் குருஷேத்ர யுத்தம் முடிந்ததும் சிறிது காலம் ஆட்சி புரிந்து விட்டு மேலுலகம் போகிறார்கள். அவர்கள் பாதம் பூமியில் படும் கடைசி ஸ்தலம் இது. இதன் பிறகு அவர்கள் பூலோக வாழ்க்கை முடிகிறது என்கிறது பாரதம். பாரதம் எழுதிய வியாசர் இங்குதான் வாழ்ந்திருக்கிறார். இங்கு அமர்ந்துதான் நான்கு வேதங்களையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். வியாசர் சொல்ல சொல்ல விநாயகர் பாரதம் எழுதியதும் இந்த மானா கிராமத்தில்தான் என்கிறது தொன்மம்.
உத்தரபிரதேசத்திலிருக்கும் அலகாபாத்தில் கங்கையும் யமுனையும் குப்த சரஸ்வதியும் சங்கமிக்கின்றன. அதில் சரஸ்வதி கண்ணுக்குத் தெரியாமல் கலக்கும் என்பார்கள். அந்த சரஸ்வதி நதி மானா கிராமத்தில்தான் உற்பத்தியாகிறது. அது அலக்நந்தா நதியுடன் கலந்து தலைமறைவாக பயணிக்கிறது. பின்னர் அலக்நந்தா கங்கையாகிறது. முடிவில் அலகாபாத் சங்கமத்தில் கங்கையும் யமுனையும் கண்ணுக்கு தெரியாத சரஸ்வதியும் இணைகின்றன.
மானா கிராமத்திலிருந்து சற்று துார நடையில் சிறிய ஓடையொன்று இருக்கிறது. இந்த ஓடையைக் கடந்துதான் பஞ்ச பாண்டவர்கள் மேலுலகம் போனதாக நம்பப்படுகிறது. கணவர்களை போல திரௌபதியால் அந்த ஓடையை தாண்ட முடியவில்லை. பீமன் ஒரு பெரிய பாறையை எடுத்து நீரினுள்ளே போடுகிறார். அதில் கால் வைத்து திரௌபதி மறுபக்கம் போகிறார். அந்த பாறை இன்றும் இருக்கிறது. அந்த இடத்துக்கு பீமகுளம் என்று பெயர். அங்கு வசுதரா என்ற நீர்வீழ்ச்சி அறுநுாறு அடி உயரத்திலிருந்து கம்பீரமாக நேராக விழுகிறது.
ஹரித்வாரிலிருந்து கங்கை உத்தரபிரதேச மாநிலத்துக்குள் நுழைகிறது. இதுவரை தெற்கே பாயும் ஆறு தென்கிழக்காக பாய தொடங்குகிறது. 800 கிமீ தொலைவுக்கு கன்னோசி, கான்பூர் நகரங்களில் பாய்கிறது. வழியில் ராம்கங்காவுடன் இணைகிறது. அலகாபாத்தில் யமுனையுடன் இணைகிறது. காசியில் புனிதத்துவம் பெறும் கங்கை நதி, பாட்னா (பீகார்) வழியாக சென்று ஹுக்ளி, பத்மா என இரண்டு ஆறுகளாக பிரிந்து முறையே மேற்கு வங்காளம், வங்கதேசம் வழியே சென்று மிகப் பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்கி தனது 2525 கிமீ பயணத்தை முடித்துக் கொண்டு வங்காள விரிக்குடாவில் கலக்கிறது.
போலவே, கங்கையுடன் இந்து மதமும் அதன் புனிதத்துவமும் ஒன்று கலந்து பிரியா நிலையை அடைகிறது. அதன் ஆழம் அறிய அதில் கரைவதொன்றே வழி என்ற நம்பிக்கையோடு லட்சோபலட்ச மக்கள் அங்கு வருடந்தோறும் புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர்.