
மரணம்
நெடுநாள் பிணியிடம்
பழகி விட்டால்
பேசிக் கொண்டிருக்கும்
நம்மிடம் அது.
வீடு வாசல்
நில புலன்
சொந்தம்
சுற்றமென்றெல்லாம்
விசாரிக்கலாம்
அது.
சும்மா நாமிருந்தாலும்
சும்மா அது இல்லாமல்
நம்மை இழுத்து வைத்து
பேசலாம் அது.
ஒன்றைத் தவிர-
நாம் பேசத்
தவிர்க்கும் அதைப்
பேசாமல், அதைப்
பேசுவதற்குத் தான்
இது வரை அது
பேசியதெல்லாமென்று
உணர்த்தலாம் நமக்கு அது
கடைசியாய்.
தொலைவு
இலக்கை
நெருங்குவது குறுக
தனிமை சூழ்வதும் அதிகரிக்கிறது.
தொடக்கத்தில்
இவ்வளவு தொலைவுக்கா
தயாரானோம் என்று
தெரியவில்லை.
தொலைவின் இது வரை
கடந்து வந்தது
இவ்வளவு தொலைவா
என்று ஆச்சரியமாயுள்ளது.
அது ஒரு
தற்செயலான நிகழ்ச்சியல்ல
என்று தோன்றுகிறது.
அது எப்படியென்றும் புரியவில்லை.
இனி செல்ல வேண்டியது
அடுத்த நொடியும்
அடுத்த காலடியுமென்றே
இதுவரை கடந்து வந்திருக்க வேண்டும்.
இனி மேலும் இப்படியே
தொலைவு அனுமதிக்கும் வரை
தொலைவைக் கடந்து விடலாம்
இலக்கைச் சேர.
ஆனால் தொலைவின்
கடைசி எட்டுக்குள்ளும்
கடைசி நொடிக்குள்ளும்
ஓரெட்டின் தொலைவு
இலக்கே நகர்வது போல்
கடப்பதற்கு நீள்கிறதே
கடைசி எட்டு
கடைசி எட்டாயில்லாமல்!
சமர்
காமம் துரத்துவது போல்
ஒரு கொசு துரத்துகிறது.
விடுகிறதா?
விட்டு விட்டுப் பறந்து வந்து
கடிக்கப் பார்க்கிறது.
குருதிக் காமம் அதற்கு.
’என் முன்
நீ
கொசு’
என்று
ரீங்கரிக்கிறது.
அது
வீம்பா?
சவாலா?
முடிவு செய்ய வேண்டும்.
முடித்து விட வேண்டும்
அதன் கதையை என்
கைகளில்.
சமர் துவங்க
சமர்
முடியவில்லை.
என் கைகளின் எல்லா வியூகங்களிலும்
தப்புகிறது அது.
ஒரு தடவை கடித்தென்
துளிக் குருதி
ருசி பார்த்து விட்டது.
குருதி மதுவுண்ட களிப்பில்
மறுபடியும் –ரீரீங்கரித்து-
தாக்குகிறது.
முறுக்கேறி சினம் என் தலைக்கேறுகிறது
இறுதித் தாக்குதலில் அதன் இறுதி கட்ட
கைகளடித்தேன். என் உள்ளங்
கைகளில் நசுங்கிக் கிடக்கிறது
சிறுகொசுவின் சடலம்
ஒருதுளிக் குருதி வெள்ளத்தில்.
அற்பமாய்த் தெரியவில்லை அது.
அற்பமாய்த் தெரிந்தேன் நான்
என் ஒருதுளிக் குருதிக்கு-
அதுவும் சிறுஉயிருக்கு
ஒருதுளி உணவாகியதற்கு-அதனைக்
காவு வாங்கியதற்கு.
கைகளில் உறைந்திருந்தது
ஒருதுளிக் குருதியாயினும்
அதன் கறையைக் கழுவுவது,
ஏனோ
அவ்வளவு சுலபமாய்த்
தெரியவில்லை
எனக்கு.
நாற்காலி
நாற்காலி
தனக்குத் தானே
உட்கார்ந்தபடி இருக்கிறது.
யாருக்கும் எழுந்து நிற்கும் மரியாதை
அதற்கு கிடையாது.
அதை நிமிர்த்தினால்
இரண்டு கால்களில் நிற்க முடியாது அது.
நான்கு கால்களில்
தனக்குத் தானே உட்கார்ந்தபடி
இருப்பதுதான்
அதற்கு நிற்பது போல.
அது
அனுசரிக்காது.
நாம் அதற்கு அனுசரித்து
உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
நாம் எழுந்தவுடன்
உடனே அது உட்கார்ந்து கொள்ளும்
தனக்குத் தானே
மறுபடியும்.
ஒருவேளை பிணத்தை அதில்
உட்கார வைக்கிற போது
இரு முன்கால்களில் எழுந்து
எழுந்த கணத்திலேயே
உட்காரலாம் முன்பு போல் அது.
பொய்
தவறை மறைக்க பொய்
உண்மையை மறைக்க பொய்
பொய்யை மறைக்க பொய்
பொய் சொல்லக் கூடாதென்று
கவனமாய் மெளனம் காத்து
உண்மையை உரைக்காமல் பொய்
இரட்டை அர்த்தத்தில் மொழிந்து பொய்
ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி
உண்மையாய் வேடமிடும் பொய்
புரை தீர்ந்த நன்மை
பயக்குமெனின்
உண்மையிடத்த பொய்-
அது பொய்யில்லை என்றில்லை
அதுவும் பொய்
ஆனால்
நல்ல பொய்-
நல்லதில்லா உண்மையால்
எது பொய்யில்லாத பொய்?
இக் கவிதையின் வரிகளா?
இப்படியே வாழ்தலாகி
நேரடியாய்
ஒளியின்
ஆற்றில் இறங்கி
மெய்மையின்
கரையைச்
சேரவா முடியும்?
இருளிலுள்ள நான்
இருளிலிருந்தே
துவங்க முடியும்.
ஆனால்
இருளின் பாலையில்
பயணித்து
விடியலின்
கானலையன்றோ
துரத்துகிறேன்
இளைப்பாறி விட
முடியுமென்று-
இப்படியே
வாழ்தலாகி.