
இன்று இந்தியாவில் தான் உலக அளவில் இளைஞர்கள் அதிகம். மூன்றில் ஒருவர் இளைஞர் என்கிறார்கள்.
ஜப்பான் போன்ற நாடுகளில் குழந்தைப்பிறப்பு விகிதம் பல ஆண்டுகளாக குறைவாக இருந்துவருகிறது. வளரும் அறிவியல் சூழலில், சராசரி வயது உலகெங்கும் ஏறிக்கொண்டே வருகிறது.
நான் வாழும் சிங்கப்பூரில், சராசரியாக முதியவர்கள் தொண்ணூறு வயது வரைகூட வாழ்கிறார்கள்.
வாழ்க்கை என்பது வெறும் உண்டு, மனதில் நினைத்தையெல்லாம் பேசி, தூங்கி, நாட்களைக்கடத்தும் வாழும் வெற்று வாழ்க்கையாக இருக்க வேண்டுமா? அல்லது, இறுதிவரை உற்சாகத்தோடு, தன்னால் முடிந்த வரை பிறருக்கும் தனக்கும் அர்த்தமானதாக இருக்க வேண்டுமா?
எப்போதோ உன்னி கிருஷ்ணன் அவர்கள் பாடிக்கேட்ட, ஹிந்தோளம் ராகத்தில் அமைந்த நம்பிக்கெட்டவர் எவரய்யா என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
“அன்று செயலழிந்தல மருபொழுது சிவன் பெயர் நாவில் வாராதே
ஆதலினால் மனமே இன்றே சிவநாமம் சொல்லிப்பழகு”
என்பது பாபநாசம் சிவனின் வரிகள்.
அன்று செயல் அழிந்து அலமரும் பொழுது (முதுமையில்) சிவன் பெயர் நாவில் வராது. அதனால் இன்றே சொல்லிப்பழகு என்று அறிவுறுத்தியிருப்பார்.
எப்படி வாழ்க்கைக்கான பொருளைச் சம்பாதிக்க, கல்வி முக்கியமாகிறதோ, அப்படித்தான் முதுமைக்கானத் திட்டமிடுதலிலும் பழக்கவழக்கங்களை மேம்படுத்துவதற்கான முயற்சித் தேவைப்படுகிறது.
என் கண்முன்னே கண்ட ஒரு சில உதாரணங்களோடு, சொல்லப் பார்க்கிறேன்.
முதலாமவர், பெரிய பன்னாட்டு நிறுவனத்தில், காலை ஜப்பானில் காபி, மதியம் ஹாங்காங்கில் உணவு, இரவு ஜெர்மனியில் சாப்பாடு என்று எப்போதும் விமானத்தில் பறந்து பறந்து நன்றாகச் சம்பாதித்தார்.
கண்முன்னே அவரது பொருளாதார ஏற்றம் அவருக்கு மகிழ்ச்சியையும், சமூக அந்தஸ்தையும் பெற்றுத்தந்தது.
உடன் வந்த கெட்டப்பழக்கங்கள், குடும்பம் அருகில் இல்லாத நாட்களில் அவரைச் சிக்கெனப்பற்றிக்கொண்டன.
பிடித்த பிடி உடும்புப் பிடியாக புகைப்பிடிக்கும் பழக்கமும், இரவில் பீர், அல்லது வேறு ஏதாவது மதுபானமோ, இருந்தால் தான் உறக்கம் பிடிக்கும் என்றாகிப் போனது.
வளர்ந்த பிள்ளைகள் அவருடைய குணநலம் குடியால் கெடுவதைக்கண்டு கோபப்படுகிறார்கள். குடும்பம் அமைதி என்ற ஒன்றைத் தொலைத்தாகிவிட்டது.
பல கோடிகளில் வீடு வாங்கி, ஓய்வும் பெற்றுவிட்டார். காலில் லேசாக எங்கோ ஒரு மூலையில் இடித்துக்கொண்ட புண் ஆறாமல், மருத்துவரைப் பார்த்தபோது தான் சர்க்கரையின் அளவு கட்டுக்கடங்காமல், காட்டாறாய்ப் பாய்வதுத் தெரிந்தது.
உடன்பிறந்தே கொல்லும் நோய் என்று அவ்வைக்கூறியது சர்க்கரையைத்தான் என்று அவரைச் சந்திக்கும்போதெல்லாம் தோன்றுகிறது.
பழகிக்கொண்ட பழக்கவழக்கங்களை விட முடியாமலும், தன்னுடைய ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முடியாமலும் அவர் தவித்து வருகிறார்.
இந்த உதாரணம் எப்போதோ தானே குடிக்கிறேன் அல்லது புகைப்பிடிக்கிறேன் என்று சொல்லும் நாற்பது வயதில் இருப்பவர்களுக்குக் கேட்க வேண்டிய எச்சரிக்கைக்குரல்.
எப்போதாவது செய்யும் இந்த பழக்கங்களை எப்பாடுபட்டாவது விட்டுவிடுங்கள். அரசாங்கம் இலவசமாக கொடுத்தாலும், திருமண விருந்தில் கொடுத்தாலும், பொருள் கொடுத்து, மெய்யறியாமையைச் செய்வது மடமை என்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டும்.
இரண்டாமவருக்கு வயது எண்பத்தி ஏழு. ஒரு பிரபலமான கார் நிறுவனத்தில் கணக்கு வழக்குகளைப்பார்க்கும் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
“நிதி மிகுந்தவர் -பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர்–காசுகள் தாரீர்–
அதுவும் அற்றவர் வாய்ச் சொல் அருளீர்” என்ற மஹாகவி பாரதியாரின் வரிகளைச் சொல்லி, இன்முகமாக பேசுவது எவ்வளவு முக்கியம் என்பதைத் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்துக் காட்டுபவர்.
பெரிய அளவில் வருமானம் இல்லாத போதும், தருமமிகு சென்னையில் சிறுகச்சிறுக சேர்த்து ஒரு வீட்டை வாங்கிவிட்டார்.
தன்னுடைய முப்பது, நாற்பது வயதுகளில், தனக்குப்பிடித்த, வாய்ப்பாட்டு, திருமுறை, வள்ளலார் பாடல்கள் என்று தன் ஓய்வு நேரத்தில் கற்றுக்கொள்ளத் துவங்கி விட்டார்.
பலருக்கும் மனதுக்கு இதமாகப்பேசுவதால், இன்றும் சினிமாவின் முன்னணிக்கதாநாயகர்களைபோல இவரும் படு உற்சாகமாக எப்போதும் தன் மனதுக்குப் பிடித்தவற்றோடு, தமிழ் இசை விழாக்களில் கலந்துகொண்டு வருகிறார். பலருக்கும் நல்ல வழிகாட்டியாக மிளிர்கிறார்.
அன்று அவர் தன்னுடைய முதுமையை நன்றாகத் திட்டமிட்டு வைத்திருக்கிறார் என்று அவரைச் சந்திக்கும் உற்சாகம் தரும் பொழுதுகளில் நினைத்துக்கொள்வேன்.
மூன்றாமவர், தன் இளமைக்காலம் முதல் எப்போதும் கோபப்படும் இயல்புடையவர்.”தமிழ்ல எனக்குப்பிடிக்காத ஒரே சொல் மன்னிப்பு” என்று கண்கள் சிவக்க இருக்கும் விஜயகாந்த் தான் இவரும்.
மன்னிக்க முடியாமல், மறக்க விரும்பாமல், தினந்தோறும் தன் சோகமும் கோபமும் கலந்த மூட்டையைத்தூக்கி சுமக்க முடியாத அளவுக்குப்பெருக்கிக்கொண்டே வருகிறார்.
சமீபத்தில் திருமதி.ரேவதி சங்கரன் சொன்ன சித்தர்களைப்பற்றிய பகிர்வு இங்கே நினைவுகூறத் தகுந்தது.
ஓர் ஆள், தூக்க முடியாத அளவுக்குக்கர்மவினைகளைக்கொண்டு வந்து சித்தர் சமாதியில் வைத்து, வாழ்க்கை எத்தனைத்துன்பமாக இருக்கிறது என்று அழுதானாம். சித்தர் அவனுடைய கர்மவினையை முற்றாகத் துடைக்க மாட்டார். அவரவர் வினையை அவரவர் அனுபவித்தே ஆகவேண்டும்.
சித்தர்களிடம் வந்தால், அவர்கள் முதுகில் உள்ள சுமையில் இருக்கும் வினையாகிய நாணயங்களை வாங்கிக்கொண்டு அதற்கு சமமான மதிப்பில், எடை குறைவான ரூபாய் நோட்டுகளாகத்தருவார்கள் என்றார் ரேவதி சங்கரன்.
கர்மவினை என்பது உண்மை. நாம் அல்லது செய்தால் அல்லதும், நல்லன செய்தால் நல்லதும் நடக்கின்றன என்பதை உணர்த்தவே வள்ளுவரும் ஊழைக்குறித்து எழுதினார்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளில் நடந்த ஏதோ ஒரு அற்ப விஷயத்தை இன்றும் நினைவு கூர்ந்து கோபமும், துக்கமும் கொண்ட இவருக்கு, காலை உணவு சாப்பிட்டோமோ என்பது மறந்துவிடுகிறது.
எப்போதும் தன் வாழ்க்கையை மற்றவரோடு ஒப்பிட்டு, அவர்களைக்காட்டிலும் தனக்கு பணமோ, வசதிகளோ, வேறொன்றோக் குறைவாக இருக்கிறது என்று அங்கலாய்ப்பது அவருடைய பழக்கம்.
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்.
என்ற திருக்குறளை அவர் பார்த்திருந்தாலும், உள்வாங்கியிருக்க மாட்டார் .
அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்றதால் கிடைக்கும் ஐம்பதாயிரம் அவரின் தேவைகளை விட மிக அதிகம்.
ஓய்வுபெற்ற பிறகு, எந்தத் தொண்டு நிறுவனத்திலும் சேர்ந்து தொண்டூழியம் செய்ய அவரது பிள்ளைகள் அவரை உற்சாகப்படுத்தியபோதும் அவர் கேட்கவில்லை.
இன்று இருக்கும் இருபத்திநான்கு மணிநேரம் அவர் தோளில் ஒரு பிசாசுபோல அமர்ந்து அவரின் எழுவத்தியிரண்டு வயதை அழுத்துகிறது. அண்ணன் தம்பி என யாரோடும் பேசுவதில்லை. குழந்தைகள் எப்படிக்கவனித்துக்கொண்டாலும் அவர்கள் இல்லாத போது தெரியாதவர்களிடம் கூட தன் குழந்தைகளைப்பற்றிக்குறை சொல்லியே நாட்களைக்கடத்துகிறார்.
முதுமை என்பது சுமையானக்காலம் தான். அதில் எத்தனை குறைவாக நம்முடைய எண்ணச் சுமைகள் இருக்கின்றன என்பது மிக முக்கியம் என்பதே நான் இவரிடமிருந்து கற்றப்பாடம்.
நான்காமவர், அதே எழுவது வயதுக்காரர். இதயநோய்க்கான அறுவை சிகிச்சையில் தொடங்கி, சிறுநீர் உபாதைக்கான சிகிச்சை வரை அனைத்தையும் செய்துகொண்டவர். ஆனாலும் உற்சாகம் குறையாததால் இளைஞர்.
யார் அவரிடம் தொலைபேசியில் அழைத்து எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டாலும், “சூப்பரா இருக்கேன்” என்பார். அவரது உற்சாகம் அந்தப்பக்கம் இருப்பவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும்.
தனக்குப்பிடித்த கம்பனைப்படிக்க என்றே பல வருடங்கள் செலவிட்டு, தொடர்ச்சியாகப் புத்தகங்களையும், வகுப்புகளையும் எடுத்துவருகிறார்.
பெருநிறுவனம் ஒன்றில் வேலைப்பார்த்தபோது இருந்ததுபோலவே, மனம் என்னும் குரங்குத்தாவாமல் இருக்க, கம்பனையும், திருமுறையையும் மனதில் இருத்திவருகிறார். “சிவசிந்தனை நாள்தோறும்” என்ற பெயரில் அதிகாலையில் இவர் தினம் எழுதும் மரபு நடை செய்யுளுக்கென்றே ரசிகர் பட்டாளம் எப்போதும் உண்டு.
எப்போதும் நமக்குப்பிடித்தவற்றை, விடாமல் செய்ய வேண்டும் என்பது இவர் எனக்குச் சொல்லும் செய்தி.
இன்றைய உலகம், உலகமயமாக்கலுக்குப்பின்னால், மனத்தளவில் திணறி வருகிறது என்பதே உண்மை. வாண்டுகள் முதல், வாழ்ந்து முடித்தவர்கள் வரை அனைவரும் திறன்பேசியிடம் சரண் அடைந்துவருகிறார்கள்.
யாருக்கும் யார் பேசுவதையும் கேட்க அக்கறை இல்லை. யு ட்யுப் தான் பேச வேண்டும்.
பெண்கள் ஆண்கள் என்று இன்று இளமையாக இருக்கும் பலருக்கும், பொருட்களை வாங்கிக்குவிக்கும் மோகமே முன்னிற்கிறது. நம் பாரம்பரியம் வலியுறுத்தும் அடக்கம் உடைமை என்பது இப்போது வழக்கொழிந்த ஒன்றாகி வருகிறது.
தன்னிடம் என்ன இருக்கிறது என்று காட்டிக்கொள்வதே வாழ்க்கை என்று முகநூல் போன்றவை மறைமுகமாகப் போதிக்கின்றன.
முன்பிருந்த எந்தத்தலைமுறையிலும் இல்லாத அளவிற்குப்பார்க்கும் பொருட்களை எல்லாம், தேவை இருக்கிறதோ, இல்லையோ, வாங்கிக்குவிப்பதால், பூமியின் வெப்பமயமாதலும் சேர்ந்தே ஜுரம் போல அதிகரித்து வருகிறது.
திடீர் திடீர் என்று வேலை போவது ஒருபக்கம் நடந்தாலும், கையிலிருக்கும் பொருளை யோசிக்காமல் செலவு செய்யும் போக்கும் மாறாதது கவலைக்குரிய ஒன்றாகிவருகிறது.
அமெரிக்காவில் மக்கள் அனைவரும் அதிகப்படியாக கடன் அட்டைகளில் வாங்கிக்குவித்ததால், ஈராயிரம் ஆண்டுகளின் முற்பகுதியில் அமெரிக்கப்பொருளாதாரம் கடுமையான சரிவைச் சந்தித்தது.
இன்று முப்பத்திலிருந்து, ஐம்பது வயதில் இருப்பவரா நீங்கள்? உங்களின் தனிப்பட்ட, குடும்பம், வேலை தவிர வேறொன்றிலும் உங்களின் முயற்சியை நீங்கள் செலுத்தவில்லை என்றால், உங்கள் ஓய்வுக்காலம் எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். வண்ணமயமானதாக இன்று தோன்றும் அந்த காலம், சுமையாகிப்போக அதிக வாய்ப்புகள் உள்ளன.
உடல் எடை மிகுதியால் அவதிப்படுகிறீர்கள் என்றால் அதை அலட்சியம் செய்யாமல், உடற்பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள். இறைவன் முதுமைக்கென தனி உடலைத்தரப்போவதில்லை.
பிசிராந்தையார் என்ற ஒரு சங்கப்புலவர் இருந்தார். அவர் சொன்ன கருத்து இன்றும் ஏற்புடைய ஒன்றுதான்.
யாண்டு பலவாக நரையில வாகுதல் யாங்கா கியரென வினவுதிராயின் மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர் யான்கண் டனையர் என் இளையர்: வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதனதலை ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே (புறநானூறு: 191)
அன்றைய காலக்கட்டத்தில், நல்ல சமூகத்தொடர்பு (A Good Social Network) உடையவராகப் பிசிராந்தையார் இருந்திருக்கிறார்.
என்னோடு, என் குடும்பம், நட்புவட்டம், சான்றோர்கள் என்று பலரும் இருப்பதால், நான் விரைவாக முதுமை அடையவில்லை என்கிறார் அவர்.
இன்று உங்களின் குடும்பத்துக்குள் அமைதி இல்லை என்றால், அதில் அமைதியை ஏற்படுத்த நீங்கள் என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும்பட்சத்தில், உங்கள் முதுமைக்கான முதல் முதலீட்டை நீங்கள் நல்லபடியாக செய்துள்ளீர்கள் என்று நிச்சயம் நம்பலாம்.

இதன் தொடர்பில் நான் சந்தித்த ஒரு உற்சாகம் மிகுந்த, இந்த படத்தில் காணும் தாமஸ் குவான் என்பவரின் முன்னெடுப்பு, முக்கியமான ஒன்றாகும். இவர் U 3rd Age என்ற நிறுவனத்தை நடத்துகிறார்.
முதியவர்கள் முதியவர்களைச் சந்திக்கவும், நட்புவட்டத்தை உருவாக்கிக்கொள்ளவும் உதவி வருகிறார்.
உற்சாகமான நட்புவட்டம் இருந்தால், முதுமையை எளிதாய்க்கடக்கலாம் என்று இவர் நம்புகிறார்.
முதுமை என்பது நம் வாழ்நாளின் நீட்சி என்பதால், முதுமை அதன் பருவம் எய்துவதற்கு முன்னரே, நம் வாழ்க்கையைச் சரிசெய்து கொள்வது மிக முக்கியமாகிறது.
இன்று ஒரு சிலர் குழந்தைகள் வேண்டாம் என்று தங்கள் வேலையில் கிடைக்கும் முழுமையை அனுபவிக்கும் நோக்கில் இருப்பதையும் வளர்ந்த நாடுகளில் காணமுடிகிறது.
ஈராயிரம் ஆண்டு கணினித்துறையில், பல நாடுகளுக்கும் இளைஞர்கள் பறந்த போது, அவர்களின் பெற்றோர், வருடக்கணக்காக முதுமையில் தனிமை என்னும் வலியை அறிந்திருக்கமாட்டார்கள். இனி வரும் தலைமுறை, முதுமையிலும் சவால்களைச் சமாளிக்கத் திறன்களை வளர்த்தே ஆக வேண்டிருக்கிறது.
Four Quadrant Living என்ற ஒரு புத்தகத்தை சமீபத்தில் காண நேர்ந்தது.

உடல் நலம், மனநலம், இனநலம் இவற்றோடு பூமியின் நலத்தையும் இந்த புத்தகம் பேசுவதிலிருந்து, இயற்கையை அதிகம் பாதித்த தலைமுறை, தன்னோடு, இயற்கையையும் மீட்டெடுக்க வேண்டியது அவசியம் என்பது புரிகிறது.
மனநலம் பேண பெரிதாய் ஒன்றும் செய்யவேண்டாம். நல்ல உறக்கம் இருந்தாலே மன நலம் தெளிவாக இருக்கும். தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக மின்னணு சாதனங்களிலிருந்து விலகியிருப்பதை ஒரு விதி போல கடைபிடித்தாலே போதும்.
புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்கள், அதை ஒரு போதும் விடாதீர்கள். தியானம், மூச்சுப்பயிற்சி என்று எதைக்கற்றுக்கொண்டாலும், அது நாற்பதுகளில், முன் தலைமுறையையும்,பின் தலைமுறையையும், கருடனைப்போல தாங்குபவர்களுக்கு, உற்சாகம் மட்டுமே தரும்.நல்ல மனநலமும், இன நலமும், உடல் நலமும் இருந்தால், நாம் யாருக்கும் முதுமையில் பாரமாக மாட்டோம்!.