அதிரியன் நினைவுகள் -14

This entry is part 14 of 22 in the series அதிரியன் நினைவுகள்

தமிழாக்கம் : நா. கிருஷ்ணா

பூமியும் ஸ்திரத்தன்மையும்

என் வாழ்க்கை மீண்டும் ஒழுங்கிற்கு வந்தது, பேரரசில் தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் நிறைய இருந்தன. என்னை வாரிசென்று அறிவித்து, கையளித்திருந்த உலகு, தோற்றத்தில் ஓர் வாலிபவயது ஆண்மகன் போலவே இருந்தது, கூடுதலாக நல்ல திடகாத்திரம், மருத்துவர் ஏற்கனவே பரிசோதித்திருந்தார், தளர்ச்சியின் அறிகுறிகள் எதுவுமில்லை, இருந்தும் மிக மோசமாக சுகவீனப்பட்டு அண்மையில்தான் அவ்வுடல் தேறியிருந்தது. அந்நியருடன் சமாதான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கினேன்.  இம்முறை அனைவருடனும் உத்தியோகபூர்வமாக. திராயான் இறப்பதற்கு முன்பு, அவரே என்னிடம் இப்பொறுப்பை ஒப்படைத்திருந்தார். ஈட்டிய வெற்றிகளில், எங்கெல்லாம் அபாயங்களுண்டோ அவற்றையெல்லாம் களைய நினைத்தேன். நம்மால் தக்க்கவைத்துக்கொள்வது கடினமென நினைத்த மெசொபொடோமியாவை மட்டுமல்ல, நம்முடைய ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசு என்கிறபோதும், தொலைதூரத்தில், நமது கோள் அச்சிலிருந்து அதிகம் விலகி  இருந்த காரணத்தாலும் அர்மீனியாவையும்  கைகழுவது என முடிவாயிற்று. இரண்டு மூன்று சங்கடங்கள் இருந்தன, ஏற்பாடு செய்யப்பட்ட ஓர் சமாதான மாநாடு பல வருடங்கள் இழுத்தடிக்கப்படக்கூகூடும் என்கிற நிலைமை, காரணம்  சம்பந்தப்பட்ட முக்கிய தரப்பினர் தங்கள் இலாபம் கருதி இதனைச் செய்யக்கூடுமென எதிர்பார்க்கப்பட்டது, இந்நிலையில் பாரசீக சத்ரபதிகளின் (Satrapes)  நம்பிக்கையைப் பெற்றிருந்த வணிகர் ஓப்ரமோஸ்(Opramoas) தலையிட்டு சிக்கலைச் சுமுகமாக தீர்த்துவைத்தார். போர்க்களத்திற்கென்று  மற்றவர்கள் கட்டிக்காக்கும் உத்வேகத்தை பேச்சுவார்த்தைகளுக்கு பயன்படுத்த முயற்சித்தேன்; அண்டை நாட்டினருடன் சமாதானம் அவசியமென தோனேறியது. என்னுடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டவரும் அதை விரும்பினார்,  பார்த்தியர்கள் இந்தியாவிற்கும் நமக்குமான தங்கள் வர்த்தக வழிகளை மீண்டும் திறக்க நினைத்தனர். ஒரு சில மாதங்களின் பெரும் மந்தநிலைக்குப்  பிறகு, ஓரண்டேஸ் கரையில் வணிகர்கள் மற்றும் நாடோடிகளின் கூண்டுவண்டிகள் வரிசையை மீண்டும்  காண்பதில் எனக்கு மகிழ்ச்சி.  பாலைவனப் பசுஞ்சோலைகளில் மீண்டு வணிகர் கூட்டம், சமைப்பதற்கென மூட்டுகிற தீ வெளிச்சத்தில் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வார்கள், காலைவேளைகளில் சரக்குகளை மீண்டும் வண்டிகளில் ஏற்றுவார்கள்; ஒவ்வொரு காலையிலும்,  தங்கள் உணவுப் பொருட்களோடு, முன்பின் அறிந்திராத நாட்டிற்கு  ஒரு சில சிந்தனைகளையும், வார்த்தைகளையும், நமகென்றிருக்கிற மரபுகளையும் அவர்கள் கொண்டு செல்வார்கள், மெல்ல மெல்ல அவை இவ்வுலகைத் தன்வசமாக்கிக்கொள்ளும்,  அணிவகுத்துச் செல்லும் துருப்புகளைக்கூட அவை விட்டுவைப்பதில்லை. தங்கத்தின் புழக்கமும், புதிய கருத்துகளின் தடமும் தமனிகளிலுள்ள உயிர்க்காற்றைப்போல நுட்பமானவை,  அவை உலகென்ற பெரிய உடலுக்குள் மீண்டும் பரவ, பூமியின் நாடி மீண்டும் வலுவுடன் துடிக்கும்.

சமாதான நடவடிக்கைகளுக்குப் பிறகு  கிளர்ச்சியின் காய்ச்சல்களைத் தணிக்க வேண்டிய அவசியம். எகிப்தில் அதன் வீரியம் மிகவும் அதிகமாக தெரியவர, கூடுதல் துருப்புகள் வரும்வரைக் காத்திராமல் விவசாய போராட்டக்காரர்களுக்கு அவசரகதியில் வரிவிதித்து அவர்களை அடக்க முயற்சித்தேன்.  எனது தோழர் மார்சியஸ் டர்போவிடம், அங்கு ஒழுங்கை நிலைநாட்டும்படி கேட்டுக்கொண்டேன், அவரும் அப்பிரச்சனையைச் சற்று கடுமையான சாதுர்யத்துடன் கையாண்டு இட்ட பணியை நிறைவேற்றினார்.  ஆனால் பொதுவெளியில் நிலைநாட்டப்பட்ட  ஒழுங்கு முழுமையான திருப்தியை அளிக்காததால்  குடிமக்கள் மனதில் அதை மீட்டெடுக்க வேண்டும், இயாலாதெனில் அமைதி  அவர்களை அரசாளவேண்டும் என் விரும்பினேன். பெலூசியஸ் (Péluse) நகரில் ஒருவார காலம் தங்குவது, என்றென்றும் தீராத பிரச்சனையாக உள்ள கிரேக்கர்-யூதர் உறவில் சமரசம்  ஏற்படுத்த நேரத்தை முழுமையாக அர்ப்பணிப்பது என முடிவுசெய்தேன். அங்கு பொழுதைக் கழிக்கவும், காண்பதற்கும்  நைல் நதி, அலெக்ஸாண்டிரியா அருங்காட்சியகம்,  கோவில்களில் சிலைகளெனப் பல இருந்தும்  எனக்கு நேரமில்லை. ஏன், கனோபஸ்(Canope) நகரம் சிற்றின்ப விடுதிக்களுக்கு பெயர் பெற்றது, அதற்கெல்லாம் கூட நேரமில்லை.  வெளியில் கடுமையான வெயில், அதிலிருந்து பாதுகாக்க காற்றில் படபடக்கும் மரச்சட்டத்திலான  பெரிய தட்டிகள் இருந்தன, இந்நிலையில் தீர்ப்பாயக் கூடம் கொதிக்கும் தொட்டிபோல இருக்கும், அதில்தான் எப்பொழுது முடியுமோவென ஆறு நாட்களை முழுமையாக கழிக்கவேண்டியிருந்தது. இரவு நேரங்களில் பெரியபெரிய கொசுக்கள் விளக்குகளை மொய்ப்பதும், அவை பொரிந்து விழும் சப்தமும் கேட்கும். கிரேக்கர்களிடம் அவர்கள் எல்லா நேரங்களிலும் உத்தமர்கள் அல்ல என்பதைச் சுட்டிக்காடினேன். அதுபோல யூதர்களிடமும் அவர்கள் எப்பொழுதுமே  அப்பழுக்கற்றவர்களாக  இருக்கவியலாது என்பதைத் தெரிவித்தேன்.  அடிமட்ட ஹெலெனியர்கள்(கிரேக்கர்கள்) தங்கள் எதிரிகளை துன்புறுத்த பாடும் நையாண்டி பாடல்கள் முட்டாள்தனத்தில், யூதர்கள் இடும் மோசமான சாபங்களுக்கு எவ்விதத்திலும் குறைந்தவை அல்ல. பல நூற்றாண்டுகளாக இரு இனமக்களும் அருகருகே வாழ்கிறபோதும்  ஒருவர் மற்றவரை அறியவேண்டுமென்கிற  ஆர்வமோ,  அங்கீகரிக்கிற கண்ணியமோ இரு தரப்பினருக்குமில்லை. நள்ளிரவுவரை தங்களுக்கென வாதாடி அலுத்து எதிர்தரப்பிற்கு விட்டுக் கொடுக்கின்றவர்கள், மறுநாள் அதிகாலையிலேயே எனதிருக்கையை ஆக்ரமித்து, பொய்சாட்சியங்களின் குப்பைக் குவியலை பழையபடி கிளற ஆரம்பித்து விடுவார்கள்; குற்ற ஆதாரங்களாகக் காட்டப்படும் கத்தியால் குத்தப்பட்ட சடலங்கள் பெரும்பாலும் நோய்வாய்ப்பட்டு இறந்த மனிதரின் சடலங்களாகவோ அல்லது பிணச்சீரமைப்பு கிடங்கிலிருந்து திருடப்பட்ட உடல்களாகவோ இருந்திருக்கின்றன. ஆனால் அமைதியான ஒவ்வொரு மணித்துளியும் எப்போதும்போல ஐயத்திற்குரியன என்கிறபோதும், அவற்றையும் வெற்றியாகவே எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. தீர்வுபெற்ற ஒவ்வொரு தகராறும் ஒரு முன்னுதாரணம், எதிர்காலத்திற்கான உத்த்ரவாதம். பெறப்பட்ட உடன்பாடு உளமாற இருதரப்பும்  தந்ததல்ல, புறகாரணிகள்  திணித்தது,  தற்காலிகமானதாக இருக்கக்கூடும் என்பதால், எனக்கது முக்கியமில்லை. நல்லதும் கெட்டதும் இயல்பானதென்றும்,  தற்காலிகம் தொடரக்கூடியதென்றும்,  புற உண்மைகள் அகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமென்றும், விளைவாக காலப்போக்கில் முகமூடி கழன்று உண்மை முகம் தெரியவரும் என்பதும்  எனக்கு நன்றாகத் தெரியும். வெறுப்பும், மடமையும், பித்துக்குளித்தனமும்  நீடித்த விளைவுக்குரியவை என்கிறபோது, ஏன் நல்லெண்ணமும், துலக்கமும், நீதியும் அதற்குறிய விளைவுகளை நெடுங்காலத்திற்குத் தரக்கூடாதென்பது என்னிடத்திலுள்ள கேள்வி.  யூத நடைபாதை வணிகரும், கிரேக்க மளிகைக் கடைகாரரும் முதலில் எனக்கு ஒன்றுபடவேண்டும், எல்லைப் புறங்களில் அமைதியை நிலைநாட்டுவது அத்துணை முக்கியம்மல்ல. 

அமைதி என்னுடைய இலக்கு, ஆனால் அதுவே என்னுடைய உயர்ந்த இலட்சியமும் அல்ல; அதனை எனது குறிக்கோள் என்றழைப்பதிலும் சந்தோஷமில்லை, காரணம் அவ்வார்த்தை தரும் பொருள்   எனது நோக்கத்திற்கு நெருக்கமானதல்ல. போரில் நான் பெற்ற வெற்றியை மறுக்கும் மனப்போக்கில் டேசியாவைக் கைகழுவுவது என்கிற முடிவுவரை சென்றிருந்தேன். எனது முன்னோடியின் கொள்கையிலிருந்து தெளிவாக முறித்துக் கொள்ள முடிந்திருந்தால் நான் அவ்வாறு செய்திருப்பேன். இருந்தபோதிலும் இவ்விஷயத்தில் முடிந்தவரை ஆற அமர யோசித்து முடிவெடுப்பது நல்லதெனத் தோன்றியது. காரணம் அடைந்த வெற்றிகளில் பல எனது ஆட்சிக்கு முந்தியவை, அன்றியும் அவற்றை வரலாறு ஏற்கனவே பதிவு செய்துவிட்டது. போற்றுதலுக்குரிய ஜூலியஸ் பாஸுஸ்(Julius Bassus)  புதிதாக ஒழுங்கமைக்கப்பட்ட இம்மாகாணத்தின் முதல் ஆளுநராக இருந்தபோது பணியின் கடுமையால் இறந்தார்,  சர்மேத்தியர் எல்லைப்பகுதிகளில் தங்க நேர்ந்த வருடத்தில் நானும் அப்படியொரு மரணத்தை  எதிர்பார்த்தேன், நமது ஆட்சிக்குட்பட்டு இனி அடங்கி இருக்கப்போகிற பிரதேசமென நினைக்க,  கடைசியில் அதன் அமைதிக்காக எவ்விதப் பலனுமின்றி ஓயாமல்  உழைக்கவேண்டியிருந்தது.  அவருடைய உழைப்பை நினைவுகூரும்  முகமாக உரோமில் ஜூலியஸ் இறுதிச்சடங்கு சிறப்பாகவே நடந்தேறியது,  பொதுவாக பேரரசர்களுக்கு மட்டுமே அப்படியொரு அஞ்சலியை செலுத்துவது  வழக்கம். தேசத்தின் விசுவாசமிக்க ஓர் ஊழியர் தன்னுடைய இன்னுயிரை விளங்கிக்கொள்ள வகையில் தியாகம் செய்துள்ளார், அந்தவகையில் அவருக்கு  நான் செய்த மரியாதை ஒருவகையில் யுத்தவெற்றிகளுக்கு எதிரான எனது  அரசியலுக்கு நான் செலுத்திய இறுதியான மற்றும் மறைமுகமான அஞ்சலியென்றும் பொருள்கொள்ளலாம். இங்கே மறைமுகமான அஞ்சலியெனக் குறிப்பிடக் காரணம், அண்மையில்தான் யுத்தவெற்றிக்கு எதிரான, எனதுகொள்கையைக் கைவிட்டிருந்தேன், எனவே பகிரங்கமாக தெரிவிக்க முடியாத சூழ்நிலை. மறுபுறம், மோரிட்டேனியாவில் இராணுவ அடக்குமுறை அவசியமாக இருந்தது, அங்கு லூசியஸ் குயீட்டிஸின் ஆட்கள் கலவரத்திற்கு காரணமாக இருந்தனர்; இருந்தும் அங்கு உடனடியாக நான் செல்லவேண்டிய அவசியம் எழவில்லை. பிரிட்டானியிலும் இதுதான் நிலமை,  அங்கு ஆசியப் போரின்போது துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு  கலிடோனியர்கள் எல்லைகளில் எஞ்சியிருந்த துருப்புகள் மீது தாக்குதலை நடத்தினார்கள். இங்கே உரோமில் காத்திருக்கும் பிரச்சனைகளை ஒழுங்குபபடுத்திய பின்னரே நான் தொலைதூர பயணத்தை மேற்கொள்ள முடியும் என்கிற சூழலில் ஜூலியுஸ் சேவெருஸ் எவையெல்லாம்  மிக அவசரமாகக் கவனிக்கப்படவேண்டியவையோ அவற்றிர்க்கு பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் இடைநிறுத்தப்பட்ட  சர்மேத்தியன் போரை நானே முடிவுக்குக் கொண்டு வரவும், காட்டுமிராண்டிகளின் பாதகங்களுக்கு  முற்றுப்புள்ளிவைக்கத் தேவையான துருப்புக்களின் எண்ணிக்கையை இம்முறை அதிகரிக்க வேண்டுமென்பதிலும் உறுதியாக இருந்தேன். ஏனென்றால், இங்கென்றில்லை, பொதுவாக இதுபோன்ற அனைத்து விவகாரங்களிலும் ஒருவகை முறைமைக்குள் என்னை உட்படுத்திக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை.  ஒரு மருத்துவர் அனைத்து எளிமுறைகளையும் கையாண்டுவிட்டு, சிகிச்சைப் பலனளிக்காத நிலையில், சூட்டுக்கோலை உபயோகிப்பதுபோல, எனது சமாதான முயற்சிகள் சங்கடத்திற்கு உள்ளாகிறபோது, நான் விரும்பும் அமைதிக்காக யுத்தம் செய்யவேண்டியுள்ளது.  ஒரு மீகாமனுடைய கடற்தொழில் பயணத்தில்  அவன் விருப்பு வெறுப்புகளைப் பொருட்படுத்தாதவகையில் அமைதியென்கிற இடைக்காட்சிகளுக்குச் சாத்தியமுண்டு, அதுபோல மனிதர்களின் விவகாரங்களும் சிக்கலானவை. எனது ஆட்சி அமைதியாகவே நடைபெற்றது இருந்தும், யுத்தத்தில் ஈடுபட்ட காலங்களும் உண்டு.  

சர்மேத்தியர்ளுடனான இறுதிக்கட்ட யுத்ததத்தை முன்னிட்டு வட திசை நோக்கி பயணித்தபோது, மீண்டும் குய்யேட்டூஸ் ஐ சந்திக்க நேர்ந்தது. சைரின் சமூகத்தினரைக் கொன்றுகுவித்த அம்மனிதர் வழக்கம்போல அனைத்திலும் பலசாலியாக இருந்தார்.  அந்த ராஜதந்திரிக்கு எதிரான எனது முதல் திட்டம் அவருடைய நுமிடியன் யுத்த அவதானிகள் படைபிரிவைக் (les colonnes d’éclaireurs numides) கலைப்பது; அதுபோக, அவர் செனெட் அவையிலும்  இடம் பெற்றிருந்தார், அன்றியும் மேற்கத்திய பாலைபூமியிலும்  அம்மனிதருக்கு செல்வாக்குண்டு, அதன்பின்புலத்தில் அவர் பாயவும் முடியும், பதுங்கவும் முடியும். மிசியா(Mysie) வின அடர்ந்தக் காட்டுப்பகுதியில் வேட்டையாட  அவர் என்னை அழைத்தார். வேட்டையின்போது என்னைக்கொல்ல தந்திரமாக ஒரு விபத்தை உருவாக்கினார், எனக்கும் அதிர்ஷ்டம் குறைவாக இருந்து,  போதிய முனைப்பையும் காட்டத் தவறி இருப்பின் அன்று எனது உயிர் நிச்சயமாக பறிபோயிருக்கும். இருந்தும் அவரைக்குறித்து எந்த ஐயமும் இல்லை என்பதுபோல நடந்துகொண்டு, அமைதியுடன் எனக்கான தருணத்திற்குக்  காத்திருந்தேன். அத்தகைய வாய்ப்பும் குறுகியகாலத்தில் கிடைத்தது. கீழை மொயெசியா(Moésie)வில் தங்க நேர்ந்தபோது, சர்மேத்திய ஆட்சியாளர்கள் சரணடைவது உறுதி என்பதால் விரைவில் இத்தாலிக்கு நான் திரும்பக்கூடும் என்கிற சூழலில், எனது முன்னாள் பாதுகாவலருடன் பரிமாறிக்கொண்ட இரகசியத் தகவல்கள் குய்யெட்டுஸ்(Quietus) அவசர அவசரமாக உரோமுக்குத் திரும்பியதையும், அங்கு பால்மாவுடன்(Palma) தொடர்பில் இருப்பதையும்  தெரிவித்தன.  எங்கள் எதிரிகள் தங்கள் நிலைப்பாடுகளை பலப்படுத்திக் கொண்டதோடு, தங்கள் ஆதரவு படையிப்பிரிவிலும்  சில மாற்றங்களை செய்திருந்தனர். எதிரிகள் இருவரும் நேரடியாக மோதாதவரை எவ்வித பாதுகாப்பிற்கும் அவசியமில்லையென  நினைத்தேன். விரைந்து செயல்படுமாறு அத்தியானஸுக்கு எழுதினேன். தள்ளாத வயது என்கிறபோதும் , மின்னல் வேகத்தில் செயல்பட்டார். எனது கட்டளைகளுக்கு மாற்றாக காத்திராமல், எனது எதிரிகளென்று முடிவு செய்யபட்ட மனிதர்களையெல்லாம் ஒரேநாளில் அடுத்தடுத்து களையெடுத்தார்.  செல்சஸ்(Celsus), பாய்யெ(Baiae) நகரில் கொல்லபட்டார்.   பால்மா , டெரச்சீனா(Terracina) நகரில் அவருடைய வில்லாவில் வைத்தும், நிக்ரினஸ்(Niogrinus),  ஃபவென்டியா(Faventia) நகரில் அவருடைய இல்ல வாயிற்படியிலும், குய்யேட்டுஸ் தம்முடைய கூட்டாளிகளுடனான சந்திப்ப முடித்து. உரோமுக்குத் திரும்பிக்கொண்டிருந்ததபோது, அவருடைய வாகனத்தின் படியில்வைத்து கொல்லப்பட்டார். உரோம் நகரத்தில் ஒருவித பயங்கரம் தாண்டவமாடியது. செர்வியானுஸ், எனது முன்னாள் மைத்துனர், அதிர்ஷ்டம் என்பக்கம் என்பதை உணர்ந்தவராய், அடங்கி நடந்துகொண்டார், அதேவேளை எதிர்காலத்தில் நான் செய்யவிருக்கும் தவறுகளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பதுபோல தெரிந்தது. அவர் மகிழ்ச்சியின் தாத்பரியத்தை உணர்ந்திருக்க வேண்டும்,  அவருடைய வாழ்க்கையில் அனுபவித்த சிறந்த இன்பமாக  அக்கணம் இருந்திருக்கலாம். இச்சம்பவங்களுக்குப் பின்னர் என்னைப் பற்றி பரப்பப்பட்ட அனைத்து மோசமான வதந்திகளுக்கும் நம்பகத்தன்மை கிடைத்தன.

இத்தாலிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது  கப்பலின் மேல்தளத்தில் செய்திகள் கிடைத்தன. அவை அச்சுறுத்தலையும் தந்தன. பொதுவாக நம் அனைவருக்குமே எதிரிகளிடமிருந்து விடுதலைபெறுவதெனில் மகிழ்ச்சியே. என் இளமைபருவத்து பாதுகாப்பாளருக்கு இப்பிரச்சினைகுறித்து பேசியபோது, அவற்றின்  எதிர்கால விளைவுகளைப் பெரிதுபடுத்தவில்லை, அவருடைய முதிர்ந்தவயது அதற்குக் காரணமாக இருக்கலாம். மாறாக  இக்கொலை சம்பவங்களுக்குப்பிறகு இருபது  ஆண்டுகளுக்கும் மேலாக இவற்றின்  விளைவுகளை நான் அனுபவிக்க வேண்டியிருப்பதை அவர் மறந்துவிட்டார். ஜூலியஸ் சீசர் கொலைக்குப்பிறகு ஒக்டேவியஸ்(Octave)  உத்தியோகபூர்வமாக கொலையாளிகளுக்கு எதிராக அறிவித்த தண்டனைப் பிரேரணைகள் (proscriptions) நினைவுக்கு வந்தன, அவை என்றென்றும் அகஸ்டஸுக்கு(Auguste) களங்கம் அளித்தவை, அதுபோல  நீரோ இழைத்த முதல் குற்றம் எங்கனம் அடுத்தடுத்து பல குற்றங்களுக்கு காரணமாயின என்பதையும் எண்ணிப்பார்த்தேன். டொமிஷியானோவின் கடைசி காலங்களும் நினைவுக்கு வந்தன. ஒரு சராசரி மன்னர்,  பிறரைக்காட்டிலும் மோசமான நபரென கூறவும் முடியாது. வளர்த்துக்கொண்ட அவருடைய அச்சமும், தம்மை அதற்க்கு பலியாக்கிக்கொண்டவிதமும் இறுதியில் அரண்மனைக்குள்ளேயே நட்ட நடுகாட்டில் வேட்டையாடப்பட்ட ஒரு மிருகத்தின் கதிக்கு அவர் ஆளானார். எனது பொதுவாழ்க்கை ஏற்கனவே என்னிடமிருந்து நழுவிக்கொண்டிருந்தது: என்னைப்பற்றிய  முதல்வரி ஏற்கனவே கல்வெட்டில் ஆழமாக எழுதபட்டுவிட்டது, அவற்றில் சில சொற்களை இனி அழிக்கவும் இயலாது. செனட், நமது ஆட்சியில் முக்கியமான அமைப்பு, சற்றுப் பலவீனமானதாகவே   இருந்துவந்தது, ஆனால் இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளுகிற போதெல்லாம் பலம் பெற்றுவிடும், இந்நிலையில்   தம்முடைய செனெட் உறுப்பினர்களில் நால்வர் கேள்விமுறையின்றி என்னுடைய உத்தரவின் பேரில் கொல்லப்பட்டதை அத்தனை சுலபமாக அது மறந்துவிடுமா என்ன ? கொலையுண்ட மூன்று சதிகாரர்களும்,  ஒரு மூர்க்கமான மிருகமும் செனெட் அவையைப் பொறுத்தவரை தியாகிகள். நான் உடனடியாக அத்தியானுஸைத் தொடர்புகொண்டு,  ப்ருண்டிசி( Brundisium) நகரில் என்னைச் சந்தித்து எனது எதிரிகள் மீதான  அவருடைய கொலைநடவடிக்கைகளுக்கு  விளக்கம் தருமாறு கேட்டுக்கொண்டேன். 

அத்தியானுஸ் எனக்காக துறைமுகத்திற்கு வெகு அருகில், கீழ்த்திசை நாடுகளின் திசைநோக்கி அமைந்த விடுதியொன்றின் அறையில் காத்திருந்தார், கவிஞர் வேர்ஜிலஸ் வெகுகாலத்திற்கு முன்பு  அவ்விடுதியில்தான் இறந்தருந்தார். என்னை வரவேற்க நொண்டிக்கொண்டு விடுதியின் வாசல்வரை வந்தார்.  மூட்டுவலியால்  அவதிப்படுவது தெரியவந்தது.  இருவரும் தனித்துவிடப்பட்டதும், கோபத்தில் வார்த்தைகள் வெடித்தன: நான் விரும்பியதென்னவோ தீவிரபோக்கிலிருந்து விலகிய ஒரு முன்மாதிரியான ஆட்சி. பதிலாக  நான்கு கொலைகளுடன் தொடங்கி வைத்திருக்கிறோம், அவற்றுள் ஒன்றை மட்டுமே நியாயப்படுத்த முடியும், எங்களைச் சுற்றிலும் பிரச்சினைகளுக்குத்  தீர்வையெட்ட முறைப்படியான வாய்ப்புகளிருந்தன, அவற்றை புறக்கணித்தமுறை சரியல்ல, ஆபத்தானது, நாங்கள் செய்திருக்கும் அதிகார துஷ்பிரயோகத்தினால் கிடைத்துள்ள நிந்தனைகள் கொஞ்சநஞ்சமல்ல, இவை காலத்திற்கும் நீடிக்கும். இனி நேர்மையையும், பழிபாவத்திற்கு அஞ்சும் குணத்தையும், இரக்க உணர்வையும் எத்தனை  தீவிரமாக நான் கடைபிடித்தாலும் இவைகளெல்லாம் நான் நற்பண்பிற்குரியவன் என்பதைத் நிரூபிக்க உதவும் முகமூடிகள். இவை ஒரு சராசரி கொடுங்கோலன் புராணத்தை எனக்கென்று கட்டமைக்கவும், வரலாற்றின் இறுதிவரை அக்கதை என்னை பின்தொடரவும் ஒருவேளை உதவக்கூடும்.  எனது அச்சத்தை வெளிப்படையாகத் தெரிவித்தேன்:  மனிதர்களின் எந்தவொரு தீயகுணத்துடனும் ஒப்பிடும்போது,  இக்கொடூர குணத்திலிருந்து எனக்கு விமோசனமில்லை என்பதை உணரமுடிந்தது. ஒருமுறை இரத்தத்தை சுவைத்த மிருகத்தைப்போல, பொதுவெளிகளை  குற்றத்திற்கு ஏதுவான இடமாகப் பார்த்தேன்.  அத்தியானுஸ் என்னுடைய வெகுநாளைய நண்பர், அவருடைய விசுவாசத்தை ஒருபோதும் சந்தேகிக்க முடியாது, என்னிடமுள்ள பலவீனத்தை நன்கறிந்தவர்போல,  தன்னிச்சையாக, எனக்காற்றும் சேவை என்ற பெயரில், அதேவேளை  நிக்ரினஸ்  மற்றும் பால்மா இருவரிடமுள்ள தமது சொந்தப் பகையைத் தீர்த்துக்கொள்ளவும் முடிவு செய்து   சிலகாரியங்களை செய்துவிட்டார், அதுதான் உண்மை.  அதை முடித்த கையோடு  உரோமுக்கு  நான் திரும்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகளில் இறங்கியிருந்தார். ஆனாலிந்த  ஏற்பாட்டினால் மகிழ்ச்சிகொள்ளும் மனப்பாங்கில் நானில்லை.

முதியவர் உட்காருவதற்கு என்னிடம் அனுமதி கேட்டார், கட்டுடன் இருந்த காலை ஒருமுக்காலிமீது கிடத்தி அமர்ந்தார். நான் பேசிக்கொண்டே பாதித்திருந்த காலை ஒரு போர்வைகொண்டு மூடினேன். கடினமான பாராயணத்தை சிரமங்களின்றி மாணவன் சொல்ல, கேட்க நினைத்த ஆசிரியர்போல அவர் உதட்டில் புன்னகை . நான் கூறி முடித்ததும், ஆட்சியின் எதிரிகளை என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறாய்  என்று நிதானமாக கேட்டார். தேவையெனில், இந்த நான்கு பேரும் என்னைக்கொல்ல சதி செய்தார்கள் என்பதை நிரூபிக்க  வேண்டும்;  அப்படிச் செய்வதற்கு அவர்களுக்கும் காரணங்கள் இருந்தன. ஆட்சி அதிகாரத்தில் பதவிமாற்றம் என்கிறபோது பாதையில் குறுக்கிடும் அல்லாதவற்றை களையெடுப்பது அவசியமாகிறது. எனது கைகளில் கறைகபடியாமல் அவற்றை செய்துமுடிக்க அவரும் பொறுப்பேறுக்கொண்டார்.   பொதுமக்கள் இப்பிரச்சனைக்கு எவரையேனும் தண்டிக்க நினைத்தால்   பிரட்டோரொயன் ஆட்சியர் பொறுப்பிலிருந்து அவரை நீக்குவதைபோல எளிதான காரியம் ஏதும் இருக்க முடியாதென தெரிவித்தார். செனெட்டை சமாதானப்படுத்த வேண்டியிருப்பின் நாட்டின் வேறு பகுதிகளுக்கு, அல்லது தேவையெனில் தாம் நாடுகடத்தப்படவும் சம்மதம் என்றார்.அத்தியானுஸ் வெறும் பாதுகாப்பாளாராக மட்டுமின்றி வேண்டியபோது பணம்கொடுத்து உதவும மனிதராகவும், நெருக்கடியான  காலங்களில் ஆலோசகராகவும், என்னுடைய நம்பிக்கைக்குரிய ஊழியராகவும் இருந்துள்ளார், அத்தகைய மனிதரின் முகத்தை,  கைத்தடியின் கைப்பிடியை முடங்கிய  கைகள் சேர்த்துப் பிடித்திருக்க, நன்கு சவரம் செய்த, தசைகள் தளர்ந்த கன்னங்களுடன் காணநேர்வது எனக்கு இதுதான் முதல் முறை. அவர் ஒரு சுகவாசியான மனிதராக இருப்பதற்குரிய பல்வேறு கூறுகளை நன்கு அறிந்திருந்தேன்: முதலாவதாக அவருடைய பிரியத்துகந்த துணைவியார், அடுத்தது மணம் முடிந்த அவரது மகள்கள், பின்னர் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள். அவர்களைத் தமது சொந்தப்பிள்ளைகளாக கருதி அவர்களுக்கென்று எளிமையான அதேவேளை தீவிரமான சில சிலகனவுகள் அவரிடமிருந்தன. தவிர நல்ல உணவுகள், கிரேக்க போதைப் பொருள்கள், நடனமாடும் இளம்பெண்கள் ஆகியவற்றிலும் மிகுந்த ஈடுபாடும், காதலும் அவருக்குண்டு. இவை அனைத்திலும் எனக்கு முன் உதாரணமாக அவர் இருந்தார். கடந்த முப்பது ஆண்டுகளாக அவருக்கிருக்கும்  தலையாய பிரச்சனை  என்னை நன்கு  பாதுகாப்பதும், எனது தேவைகளை உரியவகையில் நிறைவேற்றுவதும் ஆகும். என்னைப்பொறுத்தவரை, தொடர்ந்து யோசனைகளுக்கும் திட்டங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கவிரும்பினேன்,  என்னைப்பறி நான் கொண்டிருக்கும் அதிகபட்ச வருங்கால சித்திரமும் அதொன்றுதான்,  இந்நிலையில் அவரிடம் வெளிப்பட்ட  மனிதர்க்கு மனிதர் காட்டும் சராசரி  அர்ப்பணிப்பு அற்புதமானதாகவும், விளங்கிக்கொள்ள இயலாததாகவும் எனக்குப்பட்டது. எந்தவொருமனிதரும்  அந்த  அர்ப்பணிப்பிற்கு  தகுதியானவரென சுட்டமுடியாது, இன்றுவரை அதை விளங்கிக்கொள்ள முடியாதவனாக நான் இருக்கிறேன். பின்வந்தநாட்களில் அவருடைய  ஆலோசனைப்படி நடந்தேன்,  பிரட்டோரியன் ஆட்சியர் பதவியை அவரும் இழந்தார். தம் வார்த்தைகள் பலிக்குமென்ற உண்மையை முன்பே அறிந்து அதற்கெனவே காத்திருந்ததுபோல, பதவி விலகியநேரத்திலும் மெலிதாகப் புன்னகைத்தார். ஒரு முன்னாள் சினேகிதரிடத்தில் நான் கொண்டுள்ள காலத்திற்கு ஒவ்வாத கரிசனம், நிலமைக்குத் தக்கவாறு புத்திசாலித்தனமாக நான் எடுக்கும் முடிவுகளை ஒருபோதும்  தடுக்காது என்பதையும் அவர் புரிந்துகொண்டிருந்தார். அவருடைய அரசியல் வாழ்க்கையும் வேறுவகையான முடிவை எதிர்பார்க்கவில்லை. கூடுதலாக அவருடைய மரியாதைக்குப் பங்கம் நேர்ந்துவிடக்கூடாதென நான் நினைத்தேன்: இருள் சூழந்த சில மாதங்களுக்குப் பிறகு செனெட் அவையில் அவரை மீண்டும் சேர்ப்பதில் வெற்றி பெற்றேன். உரோமானிய மேட்டுக்குடியினர் அமைப்பு இராச்சிய பரிபாலன வரிசைப்படி,  அவர் செனெட் அவைக்குரியவரல்ல, மாவீரர்கள் (equester ordo)என்கிற பிரிவுக்குள் வரும் மனிதர்  இருந்தும்  அவரை செனெட் உறுப்பினராக்கினேன்,  அம்மனிதருக்கு நான் அளித்த மிக உயர்ந்த மரியாதை அது. நமது சமூகத்தின் பெரிய  குடும்பங்கள், வணிகர்கள் ஆகியோரைப் பற்றிய  அவருடைய முழுமையான ஞானம், கூடுதலான மரியாதையைச் சம்பாதித்துக் கொடுத்தது. எனவே ஒரு செல்வாக்கான மாவீரரராக எவ்வித சங்கடங்களுற்றதொரு முதுமையில் நாட்களை அவரால் கழிக்க முடிந்தது. ஆல்பா மலைப்பகுதியில் இருந்த அவரது வில்லாவில் அடிக்கடி விருந்தினராக இருந்திருக்கிறேன். அது உண்மை என்கிறபோதும்,  போரொன்றிற்கு முன்பாக, உரோமுக்கு செல்லவேண்டியிருந்தது, அத்தருணம், அலெக்ஸாந்தரைப்போலவே அச்சத்திற்கென்று  அவரை பலிகொடுத்தேன். இன்றைக்கும் என்னால் பாதிக்கப்பட்ட மனித உயிர்களை கணக்கிடுக்கிறபொழுது, அவரை நான் மறப்பதில்லை.

(தொடரும்)

Series Navigation<< அதிரியன் நினைவுகள் – 13அதிரியன் நினைவுகள் -15 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.