1/64, நாராயண முதலி தெரு – 3

This entry is part 3 of 4 in the series 1/64, நாராயண முதலி தெரு

 1973

  “வாலாஜா சாலை முனையிலிருந்து பந்து வீச்சாளர் தனது ஓட்டத்தைத் தொடங்குகிறார். அளவு சற்று குறைவாக விழுந்த பந்து. நமது அணியின் கேப்டன் அஜித் வடேகர்  பின்னங்காலில் சென்று வெட்டி ஆடுகிறார். கவர் திசைக்கும் பாயிண்ட் திசைக்கும் இடையே பந்து பறந்து செல்கிறது. வேகமாக ஓடி இரண்டு ஓட்டங்களைப் பெறுகிறார். அணியின் எண்ணிக்கை எண்பதாக உயர்கிறது.. அடுத்த ஓவர்.. ” கூத்தபிரானின் தமிழ் வர்ணனை சாம்பவி மாமி வீட்டு டிரான்சிஸ்டரிலிருந்து உரக்க ஒலித்தது. 

     இந்தியா – இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் சேப்பாக்கம் ‘மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்’ மைதானத்தில் நடந்து கொண்டிருந்தது.

     ரேடியோ கமென்ட்ரியைக் கேட்டதும் தாமுவுக்கு ஆராவமுது ஞாபகம் வந்து விட்டது. அண்ணா இப்போது இருந்திருந்தால் மேட்ச் பார்க்க எப்படியாவது டிக்கெட் வாங்கி தன்னையும் ஸ்டேடியத்திற்கு அழைத்துச் சென்றிருப்பான் என்று தோன்றியது. 

     மகர சங்கராந்தி பண்டிகைக்கு வாங்கிய கரும்புத் துண்டைக் கடித்துக் கொண்டே, தனசேகர் அனுப்பியிருந்த ‘பொங்கல் வாழ்த்து’ அட்டையை ரசித்துப் படித்தான்.  ‘டியர் தாமோதர்’ என்று எழுதி, அச்சடிக்கப்பட்டிருந்த வாசகங்களுக்கு அடியில் கையெழுத்து போடப்பட்டிருந்தது.     

     மேனகா, ‘சன்லைட்’ பார் சோப்பைத் தேய்த்து துணி துவைக்கும் கல்லின் மீது துப்பட்டியை ஆக்ரோஷமாக அடித்துக் கொண்டிருக்க, தெலுங்கு மாமி வீட்டில் பம்ப் ஸ்டவ்வின் ‘புஸ்ஸ்ஸ்’ சப்தம் கேட்டது. அதன் கிருஷ்ணாயில் வாசனை தாமுவுக்கு ரொம்பப் பிடிக்கும். அதை நுகர்ந்து கொண்டே சமையலறைக்குச் சென்றான். அருவாமணைக்கு அருகில் பாதி திருத்திய பெங்களுர் கத்திரிக்காய் இருந்தது.

     முற்றத்தில் சுந்தரவல்லி ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தாள் “மாமி.. பத்து பதினஞ்சு நிமிஷமா நீங்களே பிடிச்சிண்டிருக்கேள்.. இன்னும் சித்த நாழியில தண்ணி நின்னுடும்.. நானும் ரெண்டு பாத்திரம் பிடிச்சுக்கறேன்..”

     சிவகாமசுந்தரி “நீயே எல்லாத்தையும் எடுத்துக்கோயேன்.. யார் வேணாங்கறா..” என்றாள் முக பாவத்துடன் “பதினோறு மணி வரைக்கும் குழாய்ல வரும்.. கவலைப்படாதே..”

     “நீங்க பெரிசு பெரிசா ஜோர்தவலை, கங்காளம்னு ‘ஜலம் ரொப்பற பண்டிகை’ மாதிரி ஒண்ணு மாத்தி ஒண்ணு பிடிச்சுண்டேயிருந்தா மத்தவாளுக்கு வேண்டாமா.. என்கிட்ட உருளி, வெண்ணைத்தாழி மாதிரி சின்ன பாத்திரமான்னா இருக்கு..”

     பின்கட்டில் வெந்நீர் போடும் பாய்லர் அருகில் அனைவருக்கும் பொதுவான கார்ப்பரேஷன் குழாய் இருந்தது. ஒரு நாளைக்குக் குறிப்பிட்ட நேரம் அதில் நன்னீர் வரும். எல்லோரும் முறை வைத்துக் கொண்டு சமமான கால அளவில் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

     தெலுங்குப் பெண்மணி ஒரெயொரு அலுமினியக் குடத்தில் நிரப்பிக் கொள்வாள். மாத்வ மாமா பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை. சாம்பவியின் பையன் முதலிலேயே இரண்டு வாளி எடுத்துக் கொண்டு போய் விடுவான். கடைசியில் அம்மாவுக்கும் தில்லை மாமிக்கும் லடாய் வரும். அவர்களிருவரும் சண்டை போட்டுக் கொண்டு பேசாமலே இருந்து விடுவார்களோ என்று தாமு அச்சப்படுவான்.

     உரத்தக் குரலில் ஒருவரையொருவர் சாடிக் கொண்டாலும் அவர்களது மனதில் பகைமையோ வெறுப்புணர்வோ தேங்கி நிற்காது. அரை மணி நேரத்திலேயே  சகஜமாகி விடுவர்.

     “மாமி.. காஃபி பொடி ஒரு கரண்டி குடுங்கோ.. வாங்கினது காலியாயிடுத்து..” என்று கேட்பாள் சுந்தரவல்லி.

     சிவகாமசுந்தரி “ஒண்ணு என்னடி.. ரெண்டா தரேன்.. உங்க ஆத்துக்காரருக்கு காப்பின்னா உசிராச்சே.. ” என்பாள் “உன்கிட்ட மொக்குமாவு இருக்குமா.. நாளையிலருந்து என்னோட முறைவாசல் .. கோலம் போடணும்..”

     தாமு படிக்கும் ‘சனாதன தர்ம உயர் பள்ளி’ மாணவர்கள் தினமும் நெற்றியில் விபூதி ஸ்ரீசூர்ணம் சந்தனம் எதையாவது இட்டுக் கொண்டு வர வேண்டும் என்பது கண்டிப்பான நியதி. வாரத்திற்கொரு முறை ‘தியாலஜி’ வகுப்பு இருக்கும். அதில் இதிகாச புராணக் கதைகள் மூலம் நன்னடத்தை போதிக்கப்படும்.

     தினசரி காலை வழிபாட்டுக் கூடத்தில் கால் மணி நேரம்  பிரார்த்தனை நடக்கும். ஒவ்வொரு நாளும் அகர வரிசைப்படி ஒருவன் புத்தகத்திலிருந்து ஸ்லோகங்கள் அல்லது பாசுரங்கள் சொல்ல மற்றவர்கள் பின்மொழிவர்.

    வருடத்தில் நான்கு தினங்கள் பள்ளிக்கூடத்தில் விசேஷ பூஜை நடக்கும். ‘அனைவரும் தவறாமல் வர வேண்டும், வருகைப் பதிவேடு எடுக்கப்படும்’ என்று சுற்றறிக்கை அனுப்புவார்கள்.  

     அன்று ராமநவமி வைபவத்திற்காக தாமு நண்பர்களோடு அமர்ந்திருந்தான். நீளமாக இருக்கும் பிரேயர் ஹாலின் முடிவில் கலைவாணியின் பளிங்குச் சிலை தெய்வீகமாகத் திகழும். பக்கவாட்டுச் சுவர்களில் எல்லாக் கடவுளர்களின் படங்களும் சாய்வாக மாட்டப்பட்டிருக்கும்.

     ரவிவர்மா வரைந்த இராமபிரான் உருவப்படத்திற்கு சாமந்திப்பூ மாலைகள் சாத்தப்பட்டு, புரோகிதர் வந்து முறைப்படி மந்திரங்கள் சொல்லி அர்ச்சனை செய்து கற்பூர ஆரத்தி காண்பித்து முடித்தார்.  மாணவர்கள் வரிசையில் பிரசாதம் வாங்கிக் கொண்டிருக்கும் போது, பி.டி. மாஸ்டரின் குரல் உரக்கக் கேட்டது. அனைவரையும் பள்ளியின் உள்ளேயிருக்கும் சிறிய மைதானத்திற்கு வருமாறு உத்தரவிட்டார்.

     அங்கே  எல்லோரும் வகுப்பு வாரியாக நிற்க வைக்கப்பட்டனர். ஒலிபெருக்கியில் உதவித் தலைமை ஆசிரியர் பேசினார்.

     “குட்மார்னிங் பாய்ஸ்.. மெட்ராஸ்ல மிருகக்காட்சி சாலை எங்கேயிருக்கு.. தெரிஞ்சவங்க கையைத் தூக்குங்க..” 

     ஏறக்குறைய எல்லா மாணவர்களும் கரங்களை உயர்த்தினர். முன்வரிசையிலிருந்த ஒருவனைப் பார்த்து “நீ சொல்லு” என்றார்.

     “மூர்மார்க்கெட் பின்னாடி ‘பீப்பிள்ஸ் பார்க்’ல சார்..”

     “வெரி குட்.. ‘பாம்புப் பண்ணை’னு புதுசா போன வருஷம் ஒண்ணு திறந்திருக்காங்க.. அது எந்த இடத்துல…”

      இதற்கு கை உயர்த்திய நான்கே பேரில் தாமுவை அழைத்துக் கேட்டார்.

     “கிண்டி காந்தி மண்டபம் பக்கத்துல ‘சில்ரன்ஸ் பார்க்’ல சார்.. தினமணி பேப்பர்ல படிச்சு தெரிஞ்சுண்டேன்..” என்றான்.

     “சபாஷ்.. நம்ம ஸ்கூல் ‘எக்ஸ்கர்ஷனுக்கு’ இந்த ரெண்டு எடத்துக்கும் போகப் போறோம்..” என்று அவர் அறிவித்தவுடன் மாணவர்கள் ஆனந்தக் கூச்சலிட்டனர்.

    “ஸைலன்ஸ்.. விருப்பமுள்ளவங்க பி.டி. சார் கிட்ட பேர் கொடுக்கலாம்.. ஒருத்தருக்கு நாலு ரூபா கட்டணம்.. இந்த ட்ரிப்புக்காக ஸ்பெஷலா பல்லவன் பஸ் ஏற்பாடு பண்ணியிருக்கோம்..” 

     தாமுவுக்கு போக வேண்டுமென்று ஆசையாயிருந்தது. கூடவே அவ்வளவு தொகை அப்பா கொடுப்பாரா என்ற சந்தேகமும் எழுந்தது.

     தனசேகர் அவன் தோளில் கைபோட்டு “உனக்கும் சேர்த்து நான் பணம் கட்றேண்டா..” என்றான்.

     “வேணாம்.. நான் அப்பாம்மா கிட்ட கேட்டுட்டு சொல்றேன்..” என்று விரைவாக வீட்டுக்கு வந்தான்.

     சிவகாமசுந்தரி தேங்காய் நாரினால் பாத்திரம் தேய்த்தவாறே, அம்மியில் ஏதோ அரைத்துக் கொண்டிருந்த சுந்தரவல்லியிடம் பேச்சுக் கொடுத்தாள் “உம்மிடி பங்காரு கடைக்கு போயிருந்தேன்டி.. தங்கம்  ஒரு கிராம் இருவத்தேழு ரூபா எண்பத்தஞ்சு காசாயிடுத்து.. போன வருஷம் இருவது ரூபா வித்தது.. இப்போ.. சவரன் இருநூத்து இருபத்தி மூணு ரூவாயாம்.. விலைவாசி என்னமா ஏறிண்டே போறது பாரு..” 

    “பொண்ணு கல்யாணத்துக்கு நகை வாங்க போனேளா..”

    “ஆமா.. குருவி மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தாதானே உண்டு..”

    மேனகா “தாமூ.. தெலுங்கு மாமி உன்னை வரச்சொன்னா..” என்றாள். அம்மாவும் “ஆமான்டா.. மறந்தே போயிட்டேன்..” என்று ஆமோதித்தாள்.  

    அவன் ஓடிச்சென்று அவர்கள் அறைக்குள் நுழைந்தான். மாமா படுக்கையில் இடுப்பைப் பிடித்தபடி முனகிக் கொண்டிருந்தார்.  தரையில் பத்ராசலம் ராமர் படத்தின் முன்னால் மல்லிகைப் பூவிதழ்களும் அட்சதையும் சிதறிக் கிடந்தன.

    “தாமு.. ரா நைனா..  கை கால் அலம்பிட்டு வந்து இந்த மணையில உட்காரு..” என்றாள் அந்தப் பெண்மணி. அவன் எதுவும் புரியாமல் அம்மாவை அழைத்தான்.

    “ஒண்ணுமில்லடா.. ஸ்ரீராமநவமி அன்னிக்கி உன்னை மாதிரி ஒரு பையனுக்கு சாப்பாடு போட்டு தட்சணை கொடுக்கறது அவா வழக்கமாம்.. “ என்றாள் சுந்தரவல்லி.

    தாமுவுக்கு பானகம், வடபருப்பு, நீர்மோர் உட்பட தடபுடலான விருந்து வாழை  இலையில் பரிமாறப்பட்டது.

    “மாமாவுக்கு இப்ப ஒடம்பு எப்படியிருக்கு.. “ என்று அம்மா விசாரித்தாள்.

    “ஜப்பை வலி தாங்க முடியலை அவருக்கு.. ‘நொப்பி’ ‘நொப்பி’னு அனத்தறாரு.. காந்தா ராவ் டாக்டர் கிட்ட காமிச்சேன்..”

    “அங்க பாதி நேரம் கம்பவுண்டர் தான் இருப்பான்.. ‘மிக்சர்’ங்கற பேர்ல கலர் கலரா தண்ணி மருந்து கொடுத்து அனுப்பிடுவான்.. மணகப்பன் தெருவுல குஜராத்தி ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டு போங்கோ.. நன்னா வைத்தியம் பண்றா.. கைராசிக்காரா..”

     உணவருந்தி முடித்த தாமுவுக்கு பனை ஓலை விசிறி சகிதம் வெற்றிலை பாக்கு வாழைப்பழம் வைத்துக் கொடுத்தாள் தெலுங்கு மாமி. தட்டில் ஐந்து ஒரு ரூபாய் நாணயங்களும் இருந்தன.

     ன்று (19.5.73) வெற்றிகரமான 50ஆவது நாள் !!  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்கும் “ராஜ ராஜ சோழன்” !!  சினிமாஸ்கோப் –  வண்ணச்சித்திரம் !! ஆனந்த், ஸ்ரீகிருஷ்ணா, ராக்ஸி, பழநியப்பா திரையரங்குகளில் !!  தினசரி மூன்று காட்சிகள் !!  காணத் தவறாதீர்கள் !!

     தாமு நாட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் மேற்கண்ட சுவரொட்டியை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அம்மா சொல்லியனுப்பிய லைப்பாய் சோப், அரப்பு தூள், விளக்கெண்ணெய் போன்றவற்றை வாங்கச் சென்றவன் அந்தப் போஸ்டரில் மயங்கி நின்று விட்டான். சினிமாவுக்குப் போய் எத்தனை மாதங்களாகி விட்டது என்று நினைத்துக் கொண்டான். ஆராவமுது இருந்த வரை அவன் நண்பர்களுடன் தன்னையும் ஏதாவது படத்துக்கு அடிக்கடி அழைத்துச் செல்வான். 

     அனந்தசயனமும் சிவாஜி ரசிகர் தான். ‘திருமால் பெருமை’ திரைப்படத்தை சிலாகித்து அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருப்பார். ‘கணேசன் பிறவி நடிகன்டா’ என்று மெச்சுவார். 

     வீடு திரும்பிய தாமு “அப்பா.. ரொம்ப நாளாச்சு.. சினிமாக்கு போலாம்ப்பா.. உங்க தலைவர் நடிச்ச படம்.. ராஜ ராஜ சோழன்..”

     சுந்தரவல்லியும் சேர்ந்து கொண்டாள் “ஆமான்னா.. கடைசியா ‘வியட்நாம் வீட்டு’க்கு அழைச்சுண்டு போனேள்.. கிரௌன் டாக்கீஸ்ல.. மூணு வருஷமாயிடுத்து..”

     அனந்தசயனம் படித்துக் கொண்டிருந்த ‘துக்ளக்’கை மூடி வைத்துவிட்டு “சனிக்கிழமை அபூர்வமா ஆபீஸ் லீவு விட்டிருக்கான்.. நிம்மதியா தூங்கலாம்னு பார்த்தேன்.. ரெண்டு பேரும் இப்படி படுத்தறேளே..” என்றார். அவருக்கும் லேசாக சபலம் தட்டியது.

     “நான் ஆறாங்கிளாஸ் பாஸ் பண்ணி ‘ஸெவன்த்’ போயிட்டேனே.. அதுக்காக கூட்டிண்டு போப்பா.. ப்ளீஸ்…”  

     “அக்னி நட்சத்திரம்.. அனல் காத்து வீசறதுடா.. எப்படி போறது..  தியேட்டர் எவ்ளோ தூரமோ..” என்று ஒப்புக்குச் சொன்னார்.

     “கிருஷ்ணா டாக்கீஸ்தான் நம்பளுக்கு கிட்டயிருக்கு.. நைட் ஷோ போலாம்ப்பா.. வெயில் தெரியாது..”

     “வேணாம்டா.. பாதி ராத்திரி ஆயிடும் திரும்ப.. சாயங்காலம் வேணா போலாம்.. “

     “அந்த ‘கொட்டாய்’ மின்ட் பஸ் ஸ்டேண்ட் எதிரே இருக்குன்னா.. அவ்ளோ தூரம் என்னால நடக்க முடியாது.. முட்டி நோவு.. “ என்றாள் சுந்தரவல்லி.

     “ரிக்‌ஷாவுல போலாம்ப்பா.. எனக்கும் ஆசையாயிருக்கு..”

     “அதுக்கு வேற செலவாகும்டா.. கையில காசு கொஞ்சமாத்தான் இருக்கு..”

     “சினிமாக்கு கம்மி டிக்கெட் வாங்கிக்கலாம்.. பால்கனி வேண்டாம்.. அதுக்கு ரெண்டு தொண்ணூறு ஆகும்.. கீழேயே.. தொண்ணூத்தஞ்சு பைசா கூட இருக்குப்பா.. “

     “இன்டர்வெல்ல எதுவும் கேட்கக் கூடாது.. சரியா..” 

     “மாத்வ மாமா குடுத்த கல்யாண பட்சணம் நிறைய இருக்குன்னா.. அதை பொட்டலம் கட்டி எடுத்துக்கலாம்.. இடைவேளையில அதை சாப்பிடுடா..” 

     “சரிம்மா.. ஹையா ஜாலி.. நாம மூணு பேரும் சினிமாக்கு போக போறோம்.. அதுவும் சைக்கிள் ரிக்‌ஷாவுல..”

     “சீக்கிரமா கிளம்பலாம்னா.. டிக்கெட் வாங்கறதுக்கு வேற பெரிய க்யூ இருக்கும்..”

     “படம் வந்து அம்பது நாள் ஆயிடுத்தும்மா.. ரொம்ப கூட்டம் இருக்காது..”

     “எனக்கு சினிமா ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ‘இண்டியன் நியூஸ் ரீல்’ போடுவானே.. அதுல இருந்து பார்த்தா தான்டா திருப்தி..”

     “அட்வர்டைஸ்மென்ட் எல்லாம் எனக்கும் பிடிக்கும்.. “ என்ற தாமு “வீக்கோ வஜ்ரதந்தி.. “ என்று அதே ராகத்தில் பாடிக் காண்பித்தான்.

     சுந்தரவல்லி ஓர் அலங்காரப் பிரியை. சிமிட்டி நிறத்திலான சின்னாளம்பட்டுப் புடவையை மடிசாராக உடுத்திக் கொண்டாள். வசுதா திருமணத்தின் போது செலவோடு செலவாக வாங்கிய ‘கல்யாணி கவரிங்’ சங்கிலி, வளையல்களை அணிந்து கொண்டு, ‘ஆஃப்கான் ஸ்நோ’வையும் ‘குட்டிக்கூரா பவுடரை’யும் பூசிக் கொண்டாள், சிறிய கைக்குட்டையை இடுப்பில் செருகிக் கொண்டு, காதோரம் தலைமுடியை ஸ்டைலாகச் சுருட்டி விட்டுக் கொண்டாள். நான்கு மணிக்கே புறப்படத் தயாராகி விட்டாள். 

சுதா சிறுமியாக இருந்த போது ‘பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் கொலு வைத்தால் நல்லது’ என்று ஆரம்பித்த வழக்கம், அவள் கல்யாணமாகிப் போன பின்னரும் தொடர்ந்தது.

     நவராத்திரிக்கு இரண்டு நாட்கள் முன்பாகவே அனந்தசயனம் பரணையிலிருந்து கள்ளிப்பெட்டிகளை இறக்கி விடுவார். அவற்றில் விதவிதமான பொம்மைகள் துணிகளாலும் காகிதங்களாலும் சுற்றப்பட்டு வைக்கோல் பாதுகாப்புடன் இருக்கும். வீட்டிலிருக்கும் டால்டா டின், மணைப்பலகை மற்றும் தகர டப்பாக்கள் எல்லாவற்றையும் ஏதோவொரு கோணத்தில் அடுக்கி எப்படியோ ஐந்து படிகள் கட்டி விடுவார்.

     சுந்தரவல்லி பழைய வேஷ்டியை அவற்றின் மேல் விரித்து அதன் பின்னணி தெரியாமல் மறைத்து விடுவாள். மஹாளய அமாவாசை அன்றைக்கே எல்லாப் பதுமைகளையும் படிக்கட்டுகளில் வைத்து விடுவார்கள் அம்மாவும், பிள்ளையுமாகச் சேர்ந்து.

     அனந்தசயனம் தன் அலுவலகத்தில் வீணாகிப் போகும் உபரியான வண்ண வண்ண பேப்பர், அட்டைகளைக் கொண்டு வந்து விதவிதமான பூவேலைகள் செய்வார். அவற்றை அறையின் உத்தரமே தெரியாத அளவுக்கு மைதா மாவில் செய்த கோந்தினால் ஒட்டி அலங்கரித்து விடுவார். சுவர்களிலும் காகிதப் பூக்கள் அவரது கலைத்திறனைப் பறைசாற்றும். தாமுவும் அந்தக் கைவேலைகளில் அப்பாவுக்கு உறுதுணையாக இருப்பான்.

    ராமச்சந்திரன் வீட்டில் ஏழு படி கொலு பிரம்மாண்டமாக இருக்கும். லாந்தர் எனப்படும் அரிக்கேன் விளக்குகளை இரவு நேர வெளிச்சத்திற்காக தொங்க விடுவார்கள். ஆனாலும் அங்கு வருபவர்கள் அனந்தசயனம் போர்ஷனில் கண்ணைப் பறிக்கும் காகித வேலைப்பாடுகளில் மெய்மறந்து நின்று விடுவர். 

     சிவகாமசுந்தரி கொலுவின் கீழே பார்க் கட்டவும், களிமண்ணில் மலை செய்து குளம் வெட்டவும் தாமுவை ஒத்தாசைக்கு அழைத்துக் கொள்வாள். ஒரு வாரத்திற்கு முன்னரே கொட்டாங்குச்சியில் மண் நிரப்பி அதில் வெந்தயம், தனியா போன்றவற்றைத் தூவி செடி வளர்த்து பூங்காவிற்கு அழகு சேர்ப்பான்.

     அனந்தசயனம் வீட்டிற்கு விருந்தாளிகள் குறைந்த அளவிலேயே வருவர். தினமும் ஏதாவது சிற்றுண்டி செய்வதற்கு அவர்களது பொருளாதாரம் இடம் கொடுக்காது. தில்லை மாமியிடமிருந்து ஒன்பது நாளும் விதவிதமான தின்பண்டங்கள் தாமுவுக்குக் கிடைத்து விடும். சரஸ்வதி பூஜையன்று மட்டும் சுந்தரவல்லி கொண்டைக்கடலை சுண்டல் செய்து ஒருசிலரை அழைத்து, தனக்குக் கிடைத்த ரவிக்கைத் துணிகளை சுழற்சி முறையில் அவர்களுக்குத் தாம்பூலத்துடன் கொடுத்து விடுவாள். 

     அன்று மேனகாவை தவறாமல் பாடச் சொல்லி வற்புறுத்துவார்கள். ‘கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’ அவளிடமிருந்து முதலில் ஒலிக்கும். அனந்தசயனம் “குறையொன்றுமில்லை பாடேன்” என்று கேட்க, அவளும் ரம்மியமான குரலில் ‘நேயர் விருப்பத்தை’ நிறைவேற்றுவாள். அளவற்ற வாஞ்சை காரணமாக மேனகாவைத் தன் இரண்டாவது மகளாகவே பாவித்து வந்தார் அவர். கோகுலாஷ்டமியன்று அவள் போடும் மாக்கோலத்தைப் பார்த்து “கிருஷ்ணர் பாதமா இது.. கம்சன் காலுன்னு நினைச்சுண்டேன்..” என்று வம்புக்கு இழுப்பார்.

     தன்னுடைய பிறந்த நாளன்று “மாமா.. நமஸ்காரம் பண்றேன்..” என்று இரட்டை ஜடை தரையில் புரள மேனகா விழுந்து சேவிக்க, அவர் “க்ஷேமமா இருடிம்மா.. சீக்கிரமே விவாஹ பிராப்தி ரஸ்து.. வஸுதா மாதிரி ஒனக்கும் நல்ல மாப்பிள்ளை அமையணும்” என்று வாழ்த்துவார்.    

     ஒவ்வொரு நவராத்திரிக்கும் ஏதாவது அரசியல் தலைவரின் பொம்மையை இரண்டு வீட்டு கொலுவிற்கும் வாங்கித் தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மாத்வ மாமா. இடுப்பிலிருந்து தொங்கும் கடிகாரத்துடன் காந்தியும், ‘கோட்’டில் ரோஜாப் பூவுடன் நேருவும், முண்டாசு மீசையுடன் கம்பீரமான பாரதியும் முந்தைய வருடங்களில் அவர் கொடுத்தவை தான். அந்த ஆண்டு கருப்பு வெள்ளை தலைமுடியுடன் பிரதமர் இந்திரா பொம்மையைப் பரிசளித்தார். 

     ராமச்சந்திரன் தீவிர காங்கிரஸ் அபிமானி. இந்திரா காந்தியின் உருவச் சிலையை பயபக்தியுடன் தசாவதார செட்டுக்கு அருகில் எழுந்தருளப் பண்ணினார். அனந்தசயனம் வேண்டா வெறுப்பாக அதை வாங்கிக் கடைசிப் படியில் செட்டியார் கடை ஓரமாக வைத்து விட்டார்.

(ஆண்டுகள் தொடரும்)

Series Navigation<< 1/64,  நாராயண முதலி தெரு – 21/64 நாராயண முதலி தெரு – 4 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.