மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து

ஜெருஸோப்பா 1605 

சிறுவன் மஞ்சுநாத் அப்பாவோடு விளையாட இரண்டு வாரத்துக்கு ஒரு விடுமுறை நாள் கிடைக்கிறது என்று பேர். பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் அவை. அந்த வாவு தினங்களில் ஜெருஸோப்பாவிலும் ஹொன்னாவரிலும் எல்லா வர்த்தக நிறுவனங்களும் கடை அடைத்து வியாபாரத்தை அடுத்த நாளுக்குத் தள்ளிப்போட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று விஜயநகர விதிமுறைகளைப் பின்பற்றி விடுமுறை அறிவிக்கப்பட்டு ஐந்து வருடமாகி விட்டது. 

வேலைக்கு விடுப்பு வந்த தினம் என்று நிறைவேற்றிக் கதவு சார்த்திப் பூட்டுப் போட யாருக்கும் கஷ்டமில்லை. இன்று அப்படி கடைவீதி உறங்கும் பௌர்ணமி வாவுதினம்.  அழகான அதிகாலை.

பௌர்ணமி வாவுதினமும், அமாவாசை வாவுதினமும் சிறுவன் மஞ்சுநாத்தின் அப்பா பரமன் பெரும்பாலும் ஜெருஸோப்பா வீட்டில் இருக்கும் நாட்கள் இல்லை. ஹொன்னாவருக்கு வந்து ரதவீதி மிட்டாய் அங்காடியில் ஏதாவது புது இனிப்புப் பலகாரம் செய்து பார்க்கும் முயற்சிகளில் இருப்பார் பரமன். 

வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தால், ஊர் திரும்பணும், உற்றவர்களோடு பம்பாயில் சேர்ந்து குடும்பம் நடத்தணும் என்று மனம் சதா நச்சரித்துக் கொண்டிருக்கும். ஹொன்னாவருக்குப் போவது தன்னிடமிருந்து தானே தப்பித்து ஓடுவது என்று பரமன் தனக்குள் சொல்லிக் கொள்வார். 

வாவுநாள் விடிகாலையில் அங்கே போகும்போது குழந்தை மஞ்சுநாத் உறங்கிக் கொண்டிருப்பான். ராத்திரி திரும்பும்போது அவன் நித்திரை போயிருப்பான்.

”நீர் ஹொன்னாவர் போகிறபோது அவனையும் கூட்டிப் போனால் என்ன? போகிற வழியில் வேடிக்கை எல்லாம் காட்டினால் பார்க்க மாட்டேன் என்றா சொல்லப் போகிறான்?” என்று ரோகிணி பரமனிடம் வாதாடுவாள்.

”அவன் பார்த்திடுவான் தான். ஆனால் நான் சாரட்டில் உட்கார்ந்ததும் உறங்கி விடுகிறேனே. என்னத்தை வழியில் மரமும் செடியும் தடாகமும் காட்டுவது?” என்று பரமன் தலையைக் குலுக்கி, நடக்காத காரியம் என்பார். 

”சரி உம்மோடு சாரட் உள்ளே உட்கார வேணாம். ரதசாரதி அருகன் கூட உட்கார்ந்து வரட்டுமே” என்பாள் விடாமல் ரோகிணி. தேர்த்தட்டில் குழந்தை சௌகரியமாக உட்கார முடியாது என்று மறுப்பார் பரமன். 

இந்த பௌர்ணமி வாவுநாள் அவன் அருகனோடு உட்கார்ந்து வரட்டும். எப்படி இருக்கு என்று பார்க்கலாம் என்பாள் ரோகிணி. அவளும் ஹொன்னாவர் போகத் திட்டமிடும் வாவு நாளாயிருக்கும் அது.

ஒரு வாவன்று ரோகிணி அருகனை எழுந்து பின்பக்கப் படியில் உட்கார்ந்து வரச் சொன்னாள். லகானைப் பற்றி இழுத்து அவளே சீராக வண்டி ஓட்டி வந்தாள். மஞ்சுநாத் பக்கத்தில் தேர்த்தட்டில் உட்கார்ந்து சிரிப்பும் கொம்மாளமுமாக உற்சாகமாகக் கூச்சலிட்டுக் கொண்டு வந்ததை பரமன்   ஆச்சரியத்துடன் கவனித்தார்.

”ஹொன்னாவர் போய்ச் சேர்ந்த பிறகு என்ன செய்வான் அவன்?” பரமன் ரோகிணியை விடாமல் அடுத்த கேள்வி கேட்டார்.

அவன் பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருப்பான் என்றாள் ரோகிணி, 

”மிட்டாய்க்கடையில் அதுவும் பௌர்ணமி வாவுநாள் அன்றைக்கு அவனோடு விளையாட யார் உண்டு?” பரமன் கேட்டார். 

”அவனே விளையாடட்டும். லட்டு உருண்டையை எடுத்து சுவரில் அடிக்கட்டும். அல்வாவை நாற்காலியில் பசையாக ஒட்டி வைக்கட்டும். ஜெயவிஜயிபவ இனிப்பை வாசலில் வரவேற்கும் தலையாட்டி பொம்மையின் தலைப்பாகைக்கு உள்ளே திணித்து வைக்கட்டும்”. 

விளையாடினான். தனியாகக் களிக்க சீக்கிரமே அலுத்துப் போனது. அடுத்த வாரம் கடை ஊழியர்கள் ரெண்டு பேருக்கு பவுர்ணமி வாவுநாளுக்கு முந்திய நாள் அல்லது அமாவாசை வாவுதினத்துக்கு முந்திய நாள் விடுப்பு கொடுத்து, வாவு நாளன்றைக்கு வேலைக்கு வரணும் அவர்கள். அலமாரிகளில் புதியதாக உண்டாக்கிய இனிப்புகளை சீராக அடுக்கி வைப்பது பாதி நாள் வேலை. மஞ்சுநாத்தோடு விளையாடுவது இன்னொரு பாதிநாள் வேலை. 

அதை நிறைவேற்றத்தான் இப்போது பரமன் மஞ்சுநாத் கூட ஹொன்னாவருக்குப் போய்க் கொண்டிருக்கிறார். கூடவே ரோகிணியும் உண்டு. 

சாரட் வண்டி கல் பாளம் மேவிய தரையில் சப்தமிட்டுப் போகும் ஒலியையும் குதிரைகளின் தாளம் தவறாத குளம்படி ஓசையையும் காது கொடுத்துக் கேட்கிறார். 

பக்கத்தில் இருக்கும் மஞ்சுநாத்திடம் அந்தத் தாளம் தப்பாமல் தகிட தக திமி தகிட தக திமி என்று சொல்கட்டை உதிர்க்கிற உற்சாகம் அவர் குரலில் பொங்கி வழிகிறது.   

தகிட தக ஜுணு தகிட தக ஜுணு. 

ரோகிணி குதிரைக் குளம்பொலியோடு இசைந்து வர இன்னொரு சொல்கட்டை உதிர்க்கிறாள். மஞ்சுநாத் கைகொட்டி சந்தோஷமாகச் சிரித்தபடி அதை அலகு தவறாமல் அப்படியே சொல்கிறான்.   

தகிட தக ஜுணு. 

இரண்டு சொல்லையும் கலந்து சொல்கிறான் மழலை மாறாத குரலில் – 

தகிட தக திமி தகிட தக ஜுணு

 தகிட தக ஜுணு தகிட தக திமி 

வாஹ் ஜனாப். ரோகிணி குனிந்து நெற்றியில்   கை வைத்து மஞ்சுநாத்தின் திறமைக்கு மரியாதை செய்கிறாள். அவன் ரோகிணியின் மடியில் படுத்துக்கொண்டு பரமனைப் பார்த்து, அப்பா நீயும் வா என்கிறான். 

ரோகிணி உதட்டை மெல்லக் கடித்தபடி பரமனைக் காதல் இனிப்புத் தடவிப் பார்க்கிறாள். அவர் கல் போல் உட்கார்ந்திருக்கிறார். தாளம் அவர் குரலில் விடாமல் ஒலிக்க.

 வண்டியின் அச்சு திரும்பும் ஒலியோடு அந்த சொல்கட்டு இசைந்து வர, தேர்த் தட்டில் இருந்து அருகன் குரல் உயர்த்திப் பாடும் சத்தம். துங்கபத்ரா ஆற்றில் படகு செலுத்திப் போகிற படகோட்டிகளின், ஓங்கி உயர்ந்து சகலமானதிலுமிருந்தும் அகன்று பரவும் குரல் அது. 

அதே நிஜம் அதே நிஜம் என்று ஒவ்வொரு சரணத்திலும் கூட்டுக் குரலாக பரமனும் மஞ்சுநாத்தும் சிரித்தபடி முடித்து வைக்கிற சந்தோஷம்.

சாரட் ஜன்னலில் ஒரு வண்ணத்திப் பூச்சி வந்து அமர்கிறது. டிட்லி என்கிறான் கடிபோலி மொழியில். பட்டாம் பூச்சி என்கிறான் தமிழில். சித்ர சலபம் என்கிறான் மலையாளத்தில். சிட்டே என்கிறான் கன்னடத்தில். போர்பொலேடா என்கிறான் போர்த்துகீஸில். 

பரமன் மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தார். மூன்று வயதில் இத்தனை மொழி கொஞ்சம் போலவாவது எப்படி கற்றுக் கொண்டான்? அவனையே கேட்கிறார். தும்பைப் பூ மாதிரி முகம் மலர்ந்து பிரகாசிக்கச் சொல்கிறான் –   என் சிநேகிதங்க வேறே வேறே பாஷை பேசுவாங்க. எல்லோருக்கும் பட்டாம்பூச்சி சிநேகிதி. சரிதானே அம்மா”. 

ரோகிணி அவன் தலையைத் தடவி முத்தம் தருகிறாள். ஒரு வினாடி அவள் கண்கள் பரமனின் கண்களைச் சந்திக்கின்றன.

“குழந்தை புத்திசாலின்னு நிரூபிச்சுண்டே இருக்கான், பாரும்” அவள் பரமனிடம் சொல்கிறாள். 

“நீர் இவனுக்கு பதிவாக கணிதமும் விக்ஞானமும் கற்றுக் கொடுக்கிறீரா?” என்று வேண்டுவது போல் பரமனிடம் கேட்கிறாள். 

பாதி மரியாதையாக நீர் என்று விளிப்பது கல்யாணம் நடந்த நாள் முதல் அவளுக்குச் சுலபமாகியுள்ளது. 

”நானா? கணிதமா? அது உம்முடைய திறமை சம்பந்தப்பட்ட விஷயம் ஆச்சே. தினம் அரை மணி நேரம் கற்றுக் கொடும்” என்கிறார் பரமன். வாங்கிய அரை மரியாதையை அவரும் உடனே திருப்பித் தருகிறார். 

அவருக்கு இந்தக் குழந்தை மட்டுமில்லாவிட்டால் திரும்பப் போவது பெரிய சிக்கலாக, மனதுக்குள் எப்போதும் சுழன்றிருக்கும். 

மஞ்சுநாத் உறக்கம் வந்து ரோகிணி மடியில் நித்திரை போகிறான். காலை ஏழு மணிக்குப் பயணம் போக ஐந்து மணிக்கே எழுந்ததால் உறக்கச் சுவடு இன்னும் உள்வாங்கிய உடம்பு. அவனை பரமன் பக்கம் இருக்கையில் படுக்க வைக்கிறாள் ரோகிணி. 

ரோகிணி ரதசாரதிக்கு பின்னால் இருக்கும் சாளரத்தை மூடி அந்தரங்கம் நடப்பாக்குகிறாள்.

பரமன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் அவரைக் காமம் நனைந்த ஒரு குறுஞ்சிரிப்போடு உதட்டைக் கடித்தபடி நோக்குகிறாள் ரோகிணி. 

பரமனின் கரத்தை எடுத்து தன் வளமான மாரிடத்தில் வைக்கிறாள். அவள் தயாராகி விட்டதாக அழைப்பு விடுக்கும் வினாடி அது. 

நேமிநாதனை நினைத்துக் கொள்கிறாள். இன்னும் எத்தனை வருடம் அவன் கேட்கும்போதெல்லாம் உடுப்பு உயர்த்தி, உள்ளே வரச்சொல்லி அனுமதித்து அவனுக்கு உடனே கீழ்ப்படிய வேண்டி இருக்குமோ. பரமன் வயதானவர் என்றாலும் அவரோடு எந்த சிக்கலும் இல்லாமல் குடும்பம் நடத்த முடியும். 

ராஜ்யமும், பணமும், சதியும், கார்டெல்லும், கப்பம் கட்டுவதும், கோட்டையும் கொத்தளமுமாக ஆட்சி செய்யும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருந்து சாதிக்கப் போவதென்ன?

அவள் பரமனின் கால் மேல் கரங்களைத் தவழ விட்டு இடுப்பைச் சுற்றி அவரை வளைத்து தன் மடியில் வீழ்த்துகிறாள். கிராம்பு வாடை அவரைச் சூழ இறுக்க அணைக்கிறாள். 

எழுந்து உட்கார்ந்து வழக்கம் போல் சாவதானமான குரலில் ரோகிணியிடம் கேட்கிறார் – “சீன மந்திரத்தான் என்ன சொல்கிறான்?” 

பரமனிடம் பகை பாராட்டி உற்று நோக்கி பாம்பு மாதிரி சீறுகிறாள் – “உமக்கு இங்கிதமே இல்லை. குழந்தையை கூட்டிக்கொண்டு பவுர்ணமி வாவுதினத்தைக் கொண்டாட போயிட்டிருக்கோம். உமக்கு உம்ம பைத்தியக்காரத்தனம் தான் எப்பவும் புத்தி முழுக்க. நீர் பம்பாய், விமானம், அது இது என்று பிரலாபித்திருக்க கூடவே அதை எல்லாம் நடத்தித் தர சீன மந்திரவாதி, அரபு மந்திரவாதின்னு கூட்டிவரச் சொல்லி என் பிராணனை வாங்கறது. நீர் இந்த ஒப்பந்தத்திலே இருக்க வேணாம். இறங்கிப் போம். அருகா, அருகா, சாரட்டை நிறுத்து ஓ அருகா”.

பரமனை இறக்கிவிட்டு சாரட் போனது. அவருக்கு சிரிப்பு தான் முதலில் வந்தது. விமானமோ, சாரட்டோ அவருக்கு தீர்க்கமான வாகன யோகம் விதிக்கப்படவில்லை. 

பரமன் நடந்தபடி முன்னால் ஏதாவது சுழலும் மண்டபம் இருக்கிறதா என்று தேடினார். பின்னால் சத்தம். திரும்பிப் பார்க்க, ரோகிணியின் சாரட் வண்டிதான். 

அருகன் சாரட்டை நிறுத்திவிட்டுக் குதித்து ஓடி வந்து ”ஐயா வாங்க, குழந்தை அழுவறான்” என்று குடும்பத்திலே ஒரு நெருங்கிய உறவினன் போல கெஞ்சலுடன் வேண்டினான். 

சாரட் கதவு திறக்க, மஞ்சுநாத் ரோகிணி மடியில் இருந்து தரைக்குக் குதித்து அப்பா அப்பா என்று அரற்றினான். பரமன் சொல்லித்தந்த சொல்கட்டை அவன் சிரித்தபடி ஒலித்து பரமனின் கையைப் பிடித்து உள்ளே இழுத்தான்,

ரோகிணி பரமன் காதருகில் குனிந்து, ”மன்னிச்சுக்கும் பரமவரே. நான் அவசரப்பட்டுட்டேன். உமக்கு உதவி செய்ய சீன மந்திரத்தான் இந்த வாரம் வந்துட்டிருக்கான். நீர் கவலையே பட வேணாம்” என்றாள் நைச்சியமாக.

சாரட்டில் மனமே இல்லாமல் ஏறிக்கொண்டார் பரமன். குழந்தை மஞ்சுநாத் மட்டும் பிடிவாதம் பிடிக்கவில்லை என்றால் அவர் எல்லாவற்றையும் எல்லோரையும் உதறிவிட்டுப் போயிருப்பார். எங்கே? ஜெரஸோப்பாவில் கோவில்கள் நிறைந்த ராஜவீதிக்கு. அங்கே இருக்கவும் உண்ணவும் வண்டிக்காரன் சத்திரம் உண்டே, அங்கே வண்டிக்கார நண்பர்களும் உண்டே

சீன மந்திரவாதியால் என்ன செய்ய முடியும் என்று பரமன் காத்திருக்க வேண்டும்? யோசித்துப் பார்த்தார். புரியவில்லை. மாசேதுங்கின் சிவப்புப் புத்தகத்தை மராட்டியின் கிளைமொழியில் மொழிபெயர்த்த இடதுசாரி பரமனா இப்போது சீன மந்திரவாதிக்காகக் காத்திருப்பது? 

என்ன செய்ய? முப்பரிமாண உலகில் எல்லோரும் சுக ஜீவனம் நடத்தும்போது பரமனுக்கு மட்டும் இன்னொரு பரிமாணமாகக் காலமும் சேர்ந்திருக்கிறது.   எடுத்தது எடுத்தது போல் அவரை பௌதீகமாக எந்த மாற்றத்துக்கும் உள்ளாக்காமல், டெல்லியில் இருந்து பம்பாய்க்கு வரும் வழியில் நானூறு வருஷம் பின்னால் போகவைத்து பழைய உலகத்தில் மூச்சுவிடச் செய்து வேடிக்கை பார்க்கிறவர் யார்? 

நான்காவது பரிமாணத்தை ஒரு சாளரம் மாதிரி மூடினால் அடுத்த வினாடியே இந்த சாரட்டும், ஜெருஸோப்பாவும், ஹொன்னாவரும், அருகனும், ரோகிணியும், மஞ்சுநாத்தும் எல்லாமும் எல்லாவரும் மறைந்து விடுவார்கள். இது ஜெருஸோப்பாவிலிருந்து ஹொன்னாவர் போகும் நெடுஞ்சாலையாக இருக்காது. வருடம் பதினேழாம் நூற்றாண்டு தொடங்கி ஐந்தாம் ஆண்டான 1605 ஆகவும் இருக்காது. பரமனைக் கைகழுவிய 1960-ஆம் ஆண்டாக இருக்கலாம். 

பம்பாயில் இப்போது என்ன வருஷம், உலகம் முழுக்க என்ன வருடம்? ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது முடிந்து எத்தனை வருஷம் ஆகியிருக்குமோ. 

யார் எல்லாம் பரமன் போனபோது இருந்தபடியே இன்னும் இருப்பார்களோ, யாரெல்லாம் இறந்திருப்பார்களோ, பம்பாயும் மெட்றாஸும் எப்படி மாறியிருக்குமோ எதுவும் தெரியவில்லை. நினைக்க நினைக்க ஆயாசமும் அயர்வும் ஏற்பட சாரட்டுக்குள் கண்மூடி இருந்தார்.

ஹொன்னாவர் தெருக்களில் மெதுவாகக் குலுங்கி ஓடிய சாரட் நின்றபோது குதிரைகள் கால்களை அழுத்தப் பதித்து கழுத்து மணிகள் ஒலியெழுப்ப நின்றன.  பரமன் கண் திறந்து பார்க்க அவர் மடியில் படுத்து நித்திரை போயிருந்தான் மஞ்சுநாத். 

”நன்றாக உறங்கியிருந்தீர் ஓய். உடல் ஓய்வு கேட்கும்போது மறுத்து வேலை வேலை என்று வேலையில் மூழ்கி பவுர்ணமி வாவுநாளைப் பாழ் படுத்திக் கொள்ள வேண்டாம். கடை வாசலில் குரிச்சி போட்டு கம்பீரமாக உட்கார்ந்திரும். மஞ்சுநாத்தோடு சாரட் ஓடாத, கூட்டம் குறைந்த ரதவீதியில் ஓடிப் பிடித்து விளையாடும். கோகர்ணம் போய் கடற்கரையில் ஓடி விளையாடலாம். எத்தனை தடவை போனாலும் அலுக்காத இடமாச்சே”.

ரோகிணி சொல்லியபடி சாரட்டை விட்டு இறங்க, அருகன் அவசரமாகக் கடை வாசலுக்குப் போய் அங்கே காத்திருந்த இரண்டு பேரை மாடிக்கு அழைத்துப் போனான். 

”பரமவரு, நான் வியாபாரம் பேசிட்டு வரேன். போய் குழந்தையோடு குழந்தையா விளையாடிட்டிரும்”.  

ரோகிணி பரமனைக் கழுத்தைப் பிடித்து அகற்றுவது போல் அனுப்பி வைத்து விட்டு வந்தவர்களைத் தொடர்ந்து மாடிக்குப்  போனாள். 

அருகன் சாரட்டுக்குள் திரும்ப ஏறி உள்ளே துணி மூடிக் கட்டி வைக்கப்பட்டிருந்த கனமான எதையோ இன்னொரு சிப்பந்தி கைகொடுக்க மாடிக்கு எடுத்துப் போனான். 

பரமன் கடைக்கு உள்ளே போகாமல் ஏனோ ரோகிணி சொன்னபடி வாசலுக்கு ஒரு குரிச்சியைத் தூக்கிக்கொண்டுவந்து போட்டு உட்கார்ந்திருந்தார். 

சூரியன் சுட்டெரிக்காத கார்த்திகை மாத வெய்யில் இதமாக மேலே படிந்திருந்தது. மஞ்சுநாத் கடை மாடிப்படிகளில் ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருந்தான். ”மஞ்சு ஓடாதே படியிலே தடுக்கி விழுந்தா பல் உடஞ்சுடும். வா, நாம் கீழே ஒளிஞ்சு பிடிச்சு விளையாடலாம்” என்றார் பரமன். 

மஞ்சு வந்துட்டேன் அப்பா என்று அவருக்கு முன்னால் வந்து நின்றான். கண்டு பிடிச்சுட்டேனே என்று பரமனின் கையைப் பிடித்து இழுத்தான். 

”பொடியா, நான் இன்னும் ஒளியவே இல்லை, எப்படி பிடிச்சே?” பரமன் கேட்க மஞ்சுநாத் சிரித்தான். அவன் பரமனின் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்தான். 

திடீரென்று அவனைச் சுற்றியும் பரமனைச் சுற்றியும் மிளகு வாடை கனமாக எழுந்து வந்தது. 

”நீ எங்கே ஒளிஞ்சாலும் பட்டாம்பூச்சி மாதிரி பறந்து வந்து கண்டுபிடிச்சுடுவேன். நான் உன்னோடுதான் எப்பவும் இருக்கேனே அப்பா”. 

அவன் சொல்லும்போது பரமனின் கண்களில் நீர் நிறைந்தது. மிளகு வாசனை சன்னமாகச் சூழ்ந்திருந்தது.

அப்பா வரட்டுமா என்று பின்னால் இருந்து குரல். இரு ஒளிஞ்சுக்கறேன் என்று பரமன் சந்த்ரய்யாவின் ஜவுளிக்கடை ஓரமாக அரச மரத்தின் பின்னால் போய் ஒளிந்து நின்றார். மறுபடியும் மிளகு வாடை. 

அப்பா அப்பா. மஞ்சுநாத் தெருவில் நின்று அழைத்தபடி இருந்தான். அவன் குரல் பரமனின் உள்ளே இருந்து கேட்டது. அது தெருக்கோடியிலிருந்தும், மரத்தின் மேலிருந்தும், பறந்து போகும் பறவைகளோடும் சேர்ந்து ஒலித்தது. 

”அப்பா அப்பா”. 

“மஞ்சு மஞ்சு”. 

பரமன் ஒளிந்த இடத்தில் இருந்து பார்க்க, எதிரே சிதிலமான சமண சதுர்முக வசதி உள்ளே இருந்து கால்களில் தாங்குகட்டைகள் வைத்துத் தாங்கி பரமன் நடந்து வந்து கொண்டிருந்தார். 

’அப்போ, மரத்தடியில் ஒளிந்திருக்கும் நான் யார்’? 

”அப்பா அப்பா”. 

மஞ்சு குரல் அண்மையில் ஒளித்தது.  அவனுடைய பிஞ்சுக் கரங்கள் பரமனின் கையை இறுகப் பற்றிக் கொண்டன. மிளகு வாடை நின்று போயிருந்தது. 

கட்டைகள் தாங்கி சிதிலமான சதுர்முக வசதியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த இன்னொரு பரமனைக் காணோம். 

”பரமரவரே, வாங்க போகலாம். கோகர்ணம் போய் வரலாம்”. ரோகிணி அழைத்தபடி வந்தாள். கையில் பொதி ஒன்றில் பளிச்சிடும் தங்கம் சிறு செவ்வகங்களாகக் காட்சி அளித்தது. 

”பத்திரமாக வச்சுக்கும். கோகர்ணம் போய் வந்தபிறகு திரும்ப வாங்கிக்கறேன்” என்றாள் அவள்.

”இத்தனை தங்கத்தை என்ன பண்ணப் போறே? புது நகை உனக்கு இன்னும் வேண்டியிருக்கா?” 

அவள் பதிலே சொல்லவில்லை. அருகன் சாரட்டைக் கிளப்ப, இடைவெளி சாரளத்தை அடைத்து விட்டு அமர்ந்தாள் ரோகிணி. 

”பரமரவரே, தங்கப் பிசாசு நான். கையிலே வச்சிருக்கற பணம், வெள்ளிப் பாத்திரம், காலையிலே எடுத்து வந்தேனே ஆனைத் தந்தம், முத்து, பவிழம், மரகதம் எல்லாத்தையும் விற்று தங்கம் வாங்கப் போறேன். வீட்டை, ஜெர்ஸோப்பா கடை, ஹொன்னாவர் கடை எல்லாத்தையும் விற்க முடிஞ்சா விற்று தங்கம் ஆக்கிடப் போறேன். என்னை வித்தா தங்கம் கிடைக்குமா?” 

ரோகிணி மனம் குலைந்தது போல் பேசிக் கொண்டே போனாள். 

எனக்குப் பிடிக்காது என்றான் மஞ்சு. எதை என்று கேட்டார் பரமன். 

தங்கம் என்று தமிழில் சொன்னான். ஓவ்ரோ என்றான் போர்த்துகீஸில். சின்னா என்று கன்னடத்தில் சொன்னான்.  எனக்குப் பிடிக்காது என்றான். ஏன் பிடிக்காது என்று ரோகிணி கேட்டாள். தங்கத்துக்கு என்னை விற்றுவிடுவாய் என்றான் மஞ்சு மழலைக் குரலில். ரோகிணி உறைந்து அமர்ந்திருந்தாள்.

தங்கப்பொதி கையைச் சுட்டது. அவசரமாக ரோகிணியிடம் அதைத் திருப்பிக் கொடுத்தார் பரமன். சாரட் கோகர்ணம் நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.

(தொடரும்)

Series Navigation<< மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.