மார்க் தெரு கொலைகள் -2

This entry is part 2 of 3 in the series மார்க் தெரு கொலைகள்

தமிழாக்கம்: பானுமதி ந.

அரச அரண்மனையின் (Palais Royal) பக்கத்தில் ஒரு பெரிய அழுக்குச் சாலையில் ஓரிரவு நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட 15 நிமிடங்களாக  நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை-அவரவர் சிந்தனையில் இருந்தோம். திடீரென்று அவர் இவ்விதம் சொன்னார் : அவன் மிகச் சிறு உருவினன், அது உண்மைதான்; பல நாடக மேடைகளுக்கு ஏற்றவன். (Theatre des Varietes- பாரிசில் உள்ள தியேட்டர். மிகப் புகழ் பெற்றது. அது நினைவுச் சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது)

எண்ணத்தில் ஆழ்ந்திருந்த நான் போகிற போக்கில், “அதைப் பற்றி சந்தேகம் என்ன?” என்று சொல்லி விட்டேன். அசாதாரணமாக என் நண்பர் என் மனதைப் படித்ததில் திகைத்தேன்.

‘டூபான், என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று இது. எனக்கு வியப்பாக இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்வேன். ஆனால், நான் என்ன சிந்தனையில் இருந்தேன் என்று உங்களுக்கு….’ நான் யாரைப் பர்றி நினைத்தேன் என்று அவர் அறிந்துள்ளாரா என்பது புரிவதற்காக நான் பாதியில் நிறுத்தினேன்.

“சேன்ட்டிலி” (Chantilly) என்ற சொன்ன அவர் “ஏன் நிறுத்தினீர்கள்? நீங்கள் உங்களுக்குள் சொல்லிக் கொண்டிருந்தீர்கள் ‘அவனது சிறிய உருவம் அவலச்சுவைக்குப் பொருந்தாது’ என்று.

என் எண்ணங்களில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது அதுதான்; சேன்ட்டிலி தொழில் முறையில் செருப்பு தைப்பவர்; நாடகத்துறையில் பேர் பெறும் ஆசை கொண்டவர். க்ரீபிலோன் (Crebillon- க்ளாட் என்ற ஃப்ரெஞ்ச் நாவலாசிரியர், அவலச் சுவை மிகுந்த  நாவல்களை எழுதியவர்-தந்தை அவலச் சுவையான நாவல்களுக்கு்ப் புகழ் பெற்றவர். அவரது மகனும்- ஜாலியாட், நாவலாசிரியர் ) துயர நாடகத்தில் ஜெக்சீ (Xerxes) பாத்திரமேற்று நடித்து பழிப்புகளுக்கு ஆளானவர்.

நான் ஆச்சர்யத்துடன் கேட்டேன் “சொல்லுங்கள் நண்பரே, இதென்ன விந்தை? இதன் வழிகள் தான், அப்படி ஒன்றிருந்தால், என்னதான் அது? என் மனதை எப்படி ஆழமாகப் படித்தீர்கள்?”

சொல்வதற்கரிதான வியப்பில் தான் நான் இருந்தேன்.

“அந்தப் பழக்காரர்; தோலைச் செப்பனிடும் சேன்ட்லீக்கு அந்த பாத்திரத்திற்கான, அல்லது அதன் பல்வகை வடிவங்களுக்கான உயரம் இல்லை.”

“என்னது, பழக்காரரா? அப்படி யாரையும் எனக்குத் தெரியாதே?”

‘நாம் தெருவில் நுழையும் போது உங்கள் மீது ஒருவர் மோதினாரே.. ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு முன்னால்.’

எனக்கு நினைவு வந்தது- பெரிய கூடை நிறைய ஆப்பிள்களை தலைச்சுமையாய் எடுத்து வந்த ஒருவர், இந்த நடைபாதைக்கு நாங்கள் ஏறி வரும் போது, தவறுதலாக என்னை இடித்து, ஏறக்குறைய என்னைக் கீழே தள்ளப்பார்த்தார். ஆனால், அதற்கும் சேன்ட்டிலிக்கும் என்ன சம்பந்தம் என எனக்குப் புரியவில்லை.

டுபானைப்  பொறுத்தமட்டில் எந்த வஞ்சகமும் இல்லை. ‘நான் சொல்கிறேன’ என்றவர் உங்கள் எண்ணங்களை கோர்த்துப் பார்ப்போம்- நான் உங்களிடம் பேசிய பிறகு, அந்தப் பழக்காரர் உங்களை இடித்தவரை…. இந்தச் சங்கிலி இவ்வாறு போகிறது- சேன்ட்டிலி, ஓரியன்,(Orion- விண்மீன் தொகுதி -உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் காணலாம்)) டாக்டர் நிகால், (Dr.Nichol) எபிக்யூரஸ், (Epicurus- கிரேக்க மெய்யியலாளர-் பகுத்தறிவாளர்) ஸ்டீரியோடமி, (Stereotomy- முப்பரிமாணமுள்ள திடப் பொருட்களை், கற்கள் போன்றவைகளை, குறிப்பிட்ட வடிவங்களில் செதுக்குவது) தெருக் கற்கள், அந்தப் பழக்காரர்.

ஒரு குறிப்பிட்ட முடிவுகளை நோக்கி தங்கள் மனம் சென்ற பாதையை, தங்களுக்குள் நினைத்து வியக்காத கணங்கள் மனிதர்களுக்கு தங்கள் வாழ்வில் சில நேரங்களிலாவது நிகழும் அல்லவா? இது ஆர்வமூட்டக்கூடியதுதான். முதல் முறையாக தன் எண்ணத்தை மீண்டும் ஓட்டிப் பார்ப்பவர், அது அலைபாய்வதையும், தொடங்கும் புள்ளிக்கும், நிறைவுப் புள்ளிக்கும் இடையே இருக்கும் கட்டற்ற தொலைவையும் எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. இந்த ஃப்ரெஞ்சு நண்பர் இப்போது சொன்னதைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்த நான் அதன் உண்மையில்  அசந்து போனேன்.

அவர் தொடர்ந்தார்:

வசிப்பிடத்திலிருந்து. கிளம்பும் போது நாம் குதிரைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். இந்தப் பாதைக்கு வரும் போது, வேகமாக வந்த அந்த பழக்காரர், நடைபாதையில் மேவுவதற்காகக் குவிக்கப்பட்டிருந்த கற்குவியலில் ஏறத்தாழ உங்களைத் தள்ளிவிட்டுவிட்டார். பழத்தின் தளர்ந்த துண்டில் உங்கள் கால் பட்டு, வழுக்கி, சிறிதளவு கணுக்காலில் நோவெடுத்து, அதனால் எரிச்சலாகி, கசந்து சில வார்த்தைகளை முணுமுணுத்தீர்கள். மீண்டும் அந்தக் கற்குவியலைப் பார்த்தீர்கள். பிறகு மௌனமாக நடந்தீர்கள். நான் உங்களைக் கவனிக்க வேண்டும் என்று இதைச் செய்யவில்லை; இப்போதெல்லாம் ‘கவனித்தல்’ என்பது எனக்குக் குறிப்பிட்டத் தேவையாகி விட்டது. கோபம் கொள்ளும் முக பாவத்துடன் நீங்கள் தரையைப் பார்த்தீர்கள்-அந்த இடைவெளிகள், ஓட்டைகள் இவற்றை நீங்கள் பார்த்ததால் கற்களைப் பற்றி நினைக்கிறீர்கள் என்று தெரிந்தது. கடையாணிகள் அறையப்பட்ட மேலமைப்புகள் உள்ள லேமார்ட்டீன் என்ற சந்தை நாம் அடைந்தோம். உங்கள் முகம் பிரகாசமாக இருந்தது. உங்கள் உதட்டசைவிலிருந்து நீங்கள் ‘ஸ்டிரியோடாமிக்’ என்று உங்களுக்குள் முணுமுணுப்பதைப் புரிந்து கொண்டேன். நீங்கள் வெளியில் கேட்காத வகையில், முடிச்சிட்ட புருவங்களோடு அந்த வார்த்தையின் கிரேக்கச் சொல்லை தேடினீர்கள். அதன் வழியே  நீங்கள் அணுக்களையும், எபிக்யூரசின் கோட்பாடுகளையும் நினைக்காமல் இருந்திருக்க முடியாது. மேலும், வெகு சமீபத்தில் தான் நாம் அந்த மேன்மையான கிரேக்கனை, தானாகவே,  இதைப் பற்றி ஊகங்களின் ஊடாக சிந்தித்த அவரைப் பற்றி பேசினோம். அவரது கணிப்புகள் தான் எப்படி அண்டவியலில் பொருந்துகின்றன பார்த்தீர்களா? நீங்கள் வானை நிமிர்ந்து நெபுலாவைப் (Nebula) பார்ப்பீர்கள் என்று நினைத்தேன். நீங்கள் அதைத்தான் செய்தீர்கள். நான் உங்களைச் சரியாகத்தான் கவனித்துள்ளேன் என்று எனக்கு உறுதியானது. அந்த செருப்புத் தொழிலாளி  முழங்கால் வரையிலான அளவில் காலணி அணிந்து நடித்ததும் அந்தக் கசப்பான குறிப்பில் வந்திருந்த வினோதமான லத்தீன் வாக்கியமும், (Perdidit antiquum litera prima sonum )அதன் பொருளையும் பற்றி நாம் பேசியதும்…அந்த வாக்கியம் பழைய வார்த்தையின் சிதைந்த முதல் எழுத்து.. (யுரியன்… ஓரியன்)

நான் உங்களிடம் சொல்லியிருந்தேன் ‘அது ஒரியனைக் குறித்தது- முன்னர் அதை யூரியன் (Urion) எனச் சொன்னார்கள். அதிலிருந்த எள்ளலும், காரமும் உங்களை அதை மறக்க முடியாமல் செய்தன. அதனால் தான் நீங்கள் ஓரியனையும், சேன்ட்டிலீயையும் இணைத்தீர்கள். உங்கள் புன்னகை அதை எனக்குக் காட்டிக் கொடுத்தது. அந்த எளிய செருப்புத் தொழிலாளி அவமானப்பட்டதை நினைத்தீர்கள். அதுவரை குனிந்திருந்த உங்கள் உடல், நிமிர்ந்து நேராயிற்று. அந்த சேன்ட்டிலீயின் குள்ள உருவம் பற்றி எண்ணினீர்கள். உங்கள் சிந்தனையில் நான் இடை புகுந்தேன்- அவர் சிறிய உருவத்தினர்- அவர் த்யேட்டர் த வெரைட்டிக்குப் பொருந்துவார்.

இதற்கு சிறிது நேரத்திற்குப்பின் நாங்கள் மாலையில் வரும் ‘ லெ ட்ரிபுயூனலின்’ (Le Tribunal) ஒரு செய்தியால் கவரப்பட்டோம்.

அசாதாரணமான கொலைகள்: இன்று அதிகாலை 3 மணிக்கு, ரோச்சில் (St Roch) வசிக்கும் அக்கம்பக்கத்தினர் பல விபரீத சத்தங்களால் அதிர்ந்து எழுந்தனர். அது ரூ மார்க்கில் உள்ள  நான்கு மாடி கட்டிடத்திலிருந்து கேட்டது. அங்கே மேடம் மிஸ்பன்யெ (L’Espanaye) மற்றும் அவரது மகளான கமி்ல்(Camille L’Espanaye) வசி்த்து வந்தனர். அந்தக் கட்டிடத்திற்குள் செல்வதில் சில சிரமங்கள் இருந்தன. காகப்பட்டையைக் (Crow bar) கொண்டு வழிக்கதவை பிளந்து எட்டு, பத்து அக்கம்பக்கத்தினரும், இரண்டு போலீஸ்காரர்களும் (Gendarmes) உள்ளே நுழைந்தனர். கதறல்கள் நின்றுவிட்டன. ஆனால், முதல் படிக்கட்டில் இவர்கள் ஏறும்போது, இரண்டு அல்லது மூன்று கடுங்குரல்கள் கோப சர்ச்சையில் ஈடுபட்டிருப்பது போலக் கேட்டது. அது மேலிருந்து வருகிறது எனவும் தெரிந்தது. இரண்டாம் மாடி படிக்கட்டில் இவர்கள் ஏறும் போது இந்த ஒலிகளும் நின்று அமைதியாகிவிட்டன. இந்த நபர்கள் பிரிவு பிரிவாக ஒவ்வொரு அறையிலும் அவசர அவசரமாக நுழைந்தனர்.  நாலாவது மாடியில் பின்னால் இருந்த பெரிய அறையில் (உட்புறம் சாவியால் பூட்டப்பட்டிருந்தது- எனவே பலவந்தமாகத் திறக்கப்பட்டது) கண்ட காட்சி அனைவருக்கும் திகிலாக, பயங்கரமாக இருந்தது.

அறை அலங்கோலமாக இருந்தது; அறைக் கலன்கள் உடைந்து கிடந்தன. ஒரு படுக்கைச் சட்டம் (கட்டில்) அதில் படுக்கை இல்லை. அந்தப் படுக்கை, அறை நடுவில் கிடந்தது. ஒரு நாற்காலியில் இரத்தத்தில் தோய்ந்த சவரக் கத்தி (Razor) காணப்பட்டது. அடுப்பில், வேரிலிருந்து பிிடுங்கினாற் போன்ற, இரத்தம் தோய்ந்த, சாம்பல் நிற, நீளமான, அடர்த்தியான இரண்டு மூன்று முடிக்கற்றைகள் தென்பட்டன. தரையில் நான்கு நெப்போலியன்கள், (Napoleons) புஷ்பராகத் தோடு, மூன்று பெரிய வெள்ளி ஸ்பூன்கள், இரண்டு சிறிய உலோகச் சாமான் (metal d’ Alger), இரு பைகளில் கிட்டத்தட்ட 4000 தங்க  ஃப்ரேங்க் நாணயங்கள் காணப்பட்டன. 

மூலையிலிருந்த ஒரு பீரோவி்ன் இழுப்பறைகள் திறந்திருந்தன- அதில் பொருட்கள் கன்னாபின்னாவென்று குலைந்திருந்தாலும், பல பொருட்கள் அதனுள் இன்னமும் இருந்தன. ஒரு இரும்பு பாதுகாப்பு பெட்டி படுக்கையின் அடியில் காணப்பட்டது. அதன் வாயிலில் இருந்த சாவியால் திறந்து பார்க்கையில், சில பழைய கடிதங்களும், அதிக முக்கியத்துவம் இல்லாத காகிதங்களும் இருந்தன.

இங்கே மேடம் லிஸ்பனேயைப் பற்றி எந்தச் சுவடுமில்லை. புகைக்கரி அதிகமாக மண்டியிருந்து கணப்படுப்பில். புகை போக்கியை ஆராய்ந்ததில் (சொல்வதற்கே அச்சம் தரும் ஒன்று) தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருந்த மகளின் உடல் தென்பட்டது. அது கீழே இழுக்கப்பட்டது. அந்தச் சிறிய துவாரத்தில் குறிப்பிடத்தகுந்த நீளத்திற்கு அந்த உடல் பலவந்தமாகத் திணிக்கப்பட்டுள்ளதைப் பார்த்தார்கள். அந்த உடலைப் பார்வையிடுகையில் அதன் தோல் உரிந்து இருந்ததும், வன்முறையாக அந்த உடல் உந்தி மேலே தள்ளப்பட்டிருந்ததும், துண்டிக்கப்பட்டதுமான கோரக் காட்சியைக் கண்டார்கள். முகத்தில் பல கீறல்கள், நகங்கள் ஆழமாகப் பதிந்துள்ள வன்முறை, எல்லாமே அந்த உயிர் துடிதுடித்து மாண்டதைக் காட்சிப்படுத்தின.

அந்த வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தேடிய இந்தக் குழுவினர், கட்டிடத்தின் பின் பகுதியிலுள்ள சிறிய பாதையில், அந்த மூதாட்டியின் சடலத்தைக் கண்டார்கள்; அது எவ்வளவு சிதைந்திருந்ததென்றால், அவளைத் தூக்க முற்பட்டபோது, அந்தச் சடலத்தின் தலை கீழே விழுந்து சிறு தொலைவுக்கு ஓடிச் சென்று நின்றது. மனிதத்தனமே சிறிதும் இல்லாமல் உடலும், தலையும் சிதைக்கப்பட்டு இருந்தது-அதிலும் தலைப்பகுதியில் நிகழ்ந்த வன்முறை அதிகம்.

இந்தப் பயங்கர மர்மத்திற்கான சிறிதளவு ‘க்ளு’ கூட கிடைக்கவில்லை இதுவரை.

அடுத்த நாளின் செய்தித்தாளில் மேலதிக விவரங்கள் இருந்தன. 

(தொடரும்)


பதிப்பாசிரியர் குறிப்பு

இந்த இதழிலும் சென்ற இதழிலும் பிரசுரமான எட்கர் ஆலன் போவின் சிறுகதை பற்றிச் சில தகவல்கள் தருவது பயனுள்ளதாக இருக்கும்.  இந்தக் கதையின் மூல வடிவு கீழ்க்கண்ட சுட்டியில் கிட்டும்.  

https://daily.jstor.org/the-murders-in-the-rue-morgue-edgar-allan-poe-annotated/

இந்த வடிவும் மூல வடிவு என்று சொல்ல முடியாது. [ஒரு கதைக்கு எது மூல வடிவு என்பதே ஒரு மீபொருண்மைப் பிரச்சினை என்று ஒரு எழுத்தாளர் தன் சமீபத்திய பிரசுரமொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். டொபையாஸ் ஓல்ஃப் 2008 ஆம் ஆண்டில் தன் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை வெளியிடுகிறார். தான் 70களிலிருந்து எழுதிய சில கதைகளை இந்தத் தொகுப்பில் சேர்த்து, சமீபத்தில் வெளியான கதைகளோடு ஒரு தொகுப்பாக்கிக் கொணர்கிற புத்தகம் அது. புத்தகத்தை அறிமுகப்படுத்தி அவர் எழுதுகிற குறிப்பு இப்படித் துவங்குகிறது.  

“இந்தத் தொகுப்பின் முதல் கதை சுமாராக முப்பதாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது, கடைசிக் கதை சென்ற வருடம்தான் எழுதப்பட்டது. இப்படி ஒரு தொகுப்பை நான் பொறுக்கிச் சேகரித்தபோது, என் முன் ஒரு கேள்வி எழுந்தது, அதை நான் எதிர் கொள்ள வேண்டி வந்தது: என் கதைகளை, அவை எத்தனை பழைய வடிவில் இருந்தாலும், அவற்றின் முதல் வடிவத்திலேயே நான் அளிக்க வேண்டுமா? அல்லது இந்தக் கதைகளை இங்குமங்கும் மறு பார்வையில் சோதிக்கும் சுதந்திரத்தை நான் எடுத்துக் கொள்ளலாமா?” 

மேலே எழுதியிருக்கிற மூன்று நான்கு பத்திகளில் மேற்படி கேள்விகளுக்கு அவர் ஒரு விடை காண்கிறார். அவர் எழுதுகிறதின் சாரம் இது: அன்று எழுதிய ‘நான்’ இன்று இங்கு இல்லை. 25 அல்லது 10 வருடங்கள் கூட இல்லை, இரண்டு வருடங்கள் முன்பு எழுதிய ‘நான்’ கூட இன்று இங்கு இல்லை. அதனால் நான் இவற்றுக்கு மரியாதை கொடுக்கும், மரித்தவரின் விருப்புகளை நிறைவேற்றும் ஒரு செயலாளராக மட்டும் இருக்க வேண்டும், அவற்றைக் கையாளும்போது எந்தச் சேதமும் இல்லாது அப்படியே மறுமுறை அளிக்க வேண்டும் என்று ஒரு அணுகல் சொல்லும், அதனளவில் அது சரிதான். ஆனால் எனக்கிருக்கிற ஒரு பிரச்சினை இது: ஒரு கதையின் ‘அசல்’ வடிவு என்பதுதான் எது?  இருபது தடவைகள் திருத்தி எழுதும் முன், முதல் முதலாகப் பூர்த்தி செய்த ஒரு வடிவுதான் அதுவா? அது நிச்சயம் இராது- அதை யாரும் படிக்க விரும்பமாட்டார்கள். ஒரு பத்திரிகையில் வெளியான வடிவா? அல்லது ஒரு கதைத் தொகுப்பில் வெளியான வடிவா? பத்திரிகையில் வெளியாகுமுன் அதன் பதிப்பாசிரியர் அந்தக் கதையில் எங்கும் பென்சிலால் குறியிட்டுத் தன் யோசனைகளைக் கொடுத்திருப்பார்- அந்தப் பெண்மணியின் ஒரு சில கருத்துகளாவது கதையில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கும். அவரால் அச்சுறுத்தப்பட்டு நான் மாற்றினேன் என்றில்லை, அவரது யோசனைகள் அந்தக் கதையை மேம்படுத்தின என்பதால்தான் மாற்றி இருக்கிறேன்.  

பிறகு கதைத் தொகுப்பாக ஆக்கும்போது இன்னொரு பதிப்பாசிரியர் தன் கருத்துகளை, அவை உதவும் நோக்கத்தோடு கொடுக்கப்பட்டவை, தெரிவித்திருப்பார். பிறகு பல எழுத்தாளர்களின் கதைகளோடு வெளியான ஒரு தொகுப்பில் இது சேரும்போது மேலும் சில மாற்றங்களை அந்தத் தொகுப்பாளர்கள் கேட்டிருப்பார்கள். அல்லது நானே இன்னொரு முறை அந்தக் கதையைப் படித்து சிலவற்றை மேம்படுத்தி இருப்பேன்.  

உண்மை என்னவென்றால், நான் என் கதைகளைப் புனிதப் பிரதிகளாக ஒருபோதும் கருதியதில்லை. அவை எனக்கு இன்னும் ருசிகரமாக இருக்கும் பட்சத்தில் நான் அவற்றின் உயிரோட்டத்தை வைத்துக் கொள்ள முயல்வதையே செய்திருக்கிறேன். இதில் ஒரு விதமாக அழகுணர்வுக்கான நாட்டம் ஓய்ந்து விடாமல் துடிப்புடன் இயங்குகிறது. இதை நான் ஒரு விதத்தில் அந்தக் கதைக்கு நான் காட்டும் மரியாதை என்றும் சொல்லலாம். அந்தக் கதையில் ஒரு பத்தி நேர்த்தியற்று இருப்பதாகவோ, தேவையற்றதாக இருப்பதாகவோ நான் கவனித்தால், அதை நீங்களும் கவனிப்பீர்கள், உங்களை அந்தக் கதையில் ஒட்டாமல் போகும்படி செய்யும் அவமரியாதையை நான் ஏன் மேற்கொள்ள வேண்டும்? அதை நான் தவிர்த்திருக்கலாமில்லையா?”  

இது அவர் ஏன் தன் வெவ்வேறு தொகுப்புகளில் கதைகளை மாற்றிப் பிரசுரித்திருக்கிறார் என்பதை அவர் விளக்கும் விதம்.  

(டொபையாஸ் ஓல்ஃபின் புத்தகத்திலிருந்து: ’அவர் ஸ்டோரி பிகின்ஸ்’ : 2008)  

இங்கு இதைக் கொடுக்கக் காரணங்கள் பல. ஒன்றை மட்டும் கொடுக்கிறேன்.  பொதுவாகச் சொன்னால், மூல வடிவம் என்று ஒரு கதைக்கு எதுவும் உறுதியானதாக இருப்பதில்லை. அப்படி அமைவது மிக அபூர்வம்.  இதைக் குறிப்பாக மேற்குலகின் இலக்கிய உலகம் நன்கு புரிந்து வைத்திருக்கிறது. அதற்குப் பல வரலாற்று ரீதியான காரணங்கள் உண்டு. அந்தக் காரணங்களைப் பற்றி எழுத இங்கு இடமில்லை.  

எப்படி இந்தப் புரிதல் மேற்கில் உள்ளதோ, அதே போல மேற்கின் பல இலக்கிய வழிமுறைகள், மரபுகள்/ பழக்கங்கள் எல்லாமே பல வகை வரலாற்று ஓடைகளின் சங்கமத்தில் உருவான சிற்றாறுகள்தாம். இந்த வகைச் சிற்றாறுகளில் ஒன்று, உரையாளர்களின் குறிப்புகளுடன் கதைகளோ, புத்தகங்களோ மறு பிரசுரம் செய்யப்படுதல் என்பது.  இதை இங்கிலிஷில் ‘அனொடேடட் எடிஷன்’ என்று சொல்கிறார்கள்.  

இது இந்திய மரபிலும் சரி, தமிழ் இலக்கிய மரபிலும் சரி, வெகு காலமாக உள்ள ஒரு மரபுதான். உதாரணமாக இங்கும் திருக்குறளுக்குப் பற்பல உரையாசிரியர்கள் இருந்திருக்கிறார்கள்.  

இன்னொன்று மூலக் கதை அல்லது நாவல் போன்றனவற்றைச் சுருக்கிய வடிவில் கைக்கு அடங்கும் அளவில் பிரசுரிப்பது. இதை ’அப்ரிட்ஜ்ட் எடிஷன்’ என்று இங்கிலிஷில் சொல்கிறார்கள்.  தமிழில் ராஜாஜி இராமாயணத்தையும், மஹாபாரதத்தையும் சுருக்கிய நூல்களாகப் பிரசுரித்திருந்ததை நாம் அறிவோம். (சக்கரவர்த்தித் திருமகன்/ வியாசர் விருந்து என்ற அந்த இரு நூல்கள் பல பதிப்புகளைக் கண்ட நூல்கள்.) 

எட்கர் ஆலன்போவின் ’த மர்டர்ஸ் இன் தி ரூ மோர்க்’ என்ற ஒரு கதையை லிஸ் ட்ரேஸி என்பார் இப்படி ஒரு விளக்கக் குறிப்புகளோடு இணைத்துப் பிரசுரித்திருக்கிறார். (இந்தக் குறிப்பின் துவக்கத்தில் அதற்கான சுட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது.)  

மூலக் கட்டுரையைப் படித்தால் அதில் உள்ள குறிப்பிட்ட வரிகள் என்ன தகவலை உள்ளடக்கியவை என்பது அடிக்குறிப்புகளில் விளக்கப்பட்டிருப்பது தெரியவரும்.  

இது ஒரு கதை வெறும் பொழுதுபோக்குக்காக எழுதப்பட்டது என்ற எண்ணத்தை அகற்றி, அதற்குள் காலப் போக்கு குறித்தப் பற்பல தகவல்கள் பொதிந்திருப்பதைக் காட்டி, நாம் பிரதிகளிலிருந்து வெறும் படிப்பு ருசியை மட்டும் பெறுவது என்ற நிலையைத் தாண்டி, அக்கதையின் பின்புலன், அதன் பற்பல அர்த்தத் தளங்கள் ஆகியனவற்றைப் பெறுவதன் மூலம் செழுமையான ஒரு அனுபவத்தைப் பெற முடியும் என்ற எண்ணத்தை நம்மிடம் விட்டுச் செல்வன இத்தகைய ‘அனோடேடட் எடிஷன்’கள். 

பொதுவாகச் சொன்னால், ஒரு பாய்ச்சலைச் சாதித்த இலக்கியத்திற்கு பிற்காலத்தவர் கொடுக்கும் மரியாதை இத்தகைய விளக்கக் குறிப்புகளுடன் பிரசுரிக்கப்படும் மறு பதிப்புகள்.

இந்த வகைப் பதிப்பை மொழியாக்கம் செய்து நமக்குக் குறிப்பிடத் தக்க விதத்தில் வளமூட்டி இருக்கிறார் பானுமதி ந. அவருக்கு சொல்வனம் குழுவினரின் நன்றி உரித்தாகிறது. 

Series Navigation<< மார்க் தெரு கொலைகள் – 1மார்க் தெரு கொலைகள் -3 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.