
1
பலூனுக்குள்
ஒரு பலூன்
இருப்பதைக் கண்டேன்
இதய வடிவ
குட்டி பலூன்
பெரிய பலூன்
குதித்தால்
குட்டி பலூனும்
குதிக்கிறது
பெரிய பலூன்
பறந்தால்
இதய பலூனும்
பறக்கிறது
பெரிய பலூனுக்குள்
துடிக்கும்
இதய பலூன்
யாருடைய காதல்
பெரிய பலூனுக்குள்
துடிக்கும்
குட்டி பலூன்
எத்தனை மாதம்
இதய பலூனை
பெரிய பலூன்
எப்படிப் பிரசவிக்கும்
பெரிய பலூனை
இதய பலூன்
எப்படி
அம்மா
என்றழைக்கும்
நான்
கவலையோடே
பெரிய பலூனுக்குள்
மிதக்கும்
இதய பலூனைப்
பார்க்கிறேன்
கவலையற்று
ஆனந்தமாய் குதிக்கிறது
அது
அதன்
உலகத்தில்தான்
ஏற்கெனவே
பிறந்துவிட்டதே
2
*முழுதாகக் கரைந்த ரப்பர்*
ஒரு மரம் நிற்கிறது
அதைக் கடந்து
ஒரு பேருந்து செல்கிறது
அழிரப்பரைப் போல்
மரம் அழியவே இல்லை
டூவீலர்கள்
சென்று பார்க்கின்றன
மரம் நிற்கிறது
அதே இடத்தில்
சாலையின் இருமருங்கும்
வாகனங்கள்
மாறிமாறி
அழித்துப் பார்க்கின்றன
அழிவதாய் இல்லை மரம்
ஒரு லாரி
முட்டி மோதிப் பார்த்தது
உதிர்ந்தன
சில இலைகள்
3
ஒரு தீபம்
ஓர் இறகு
வெட்டவெளியில்
காற்று வருவதற்குள்
இரண்டும்
ஏதோ ரகசியம்
பேசிவிட்டன
காற்று வந்தது
தீபம் அணைந்தது
அதன் உயிர்
மேலே பறந்தது
4
*ஏமாற்றுப் பேர்வழி*
எடை தூக்க
என்னையே அழைப்பாள்
கர்ப்பிணி மனைவி
ஒருநாள்கூடக் கேட்டதில்லை
அவள் தூக்கி வைத்திருந்ததை
கொஞ்சம் வாங்கிக்கச் சொல்லி
நானும் பார்த்தேன்
என்னடா இவள் இப்படி பண்ணுகிறாளேயென்று
அவள் மட்டும்தான் சுமப்பாளாம்
ஒரு நாள்
கேட்டேவிட்டேன்
அவள் புன்னகையுடன்
கையில் தந்தாள்
அது அப்படி ஒன்றும் கனமாய் இல்லை
சரியான ஏமாற்றுப் பேர்வழி
5
அழுகையை முழுங்கு
என்றாள் அம்மா
அதன் ருசி என்ன
என்று அறிவதற்குள்
அவசரமாய்
விழுங்கிவிட்டேன்
சிரி என்றாள்
தொண்டைக்குள் இனித்தது
அது
6. *அழகான வெள்ளை இறகு*
தூசி வடிவில்
கண்ணில் விழுந்தது
மரணம்
உறுத்திய கண்களோடு
கிளம்பிய நான்
தடுக்கப்பட்டேன்
யாரோ
உதடு குவித்து
ஊதினார்
அழகான
வெள்ளை இறகு
லேசாகப் பறந்தது