பிடி நிலம்

மனையாரர் ஆளனுப்பி வரச்சொன்னதுமே கலியனுக்கு குதூகலமாக இருந்தது. எப்போது கூப்பிடுவாரென எதிர்பார்த்தபடிதானிருந்தான். சாப்பிட்ட தட்டை வழித்து கடைசி வாய் போட்டுக் கொண்டு கைக் கழுவினான். துண்டால் வாயைத் துடைத்து தோளில் போட்டு எரவானத்தில் செருகியிருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு கட்டுத் தரைக்கு வந்து கயிறைத் தேடினான். இவனைப் பார்த்ததும் ஆடுகளிரண்டும் எழுந்து கொண்டன. காரி மாடு நேற்று தான் கன்று ஈன்றிருந்தது. தூரத்தில் கட்டியிருந்த கன்றைப் பார்த்து மூக்கை நீட்டியவாறு படுத்திருந்தவளின் மடி தரையில் அழுந்தி காம்புகளிலிருந்து கசிந்தப் பால் சாணியோடும் மூத்திரத்தோடும் கலந்து தேங்கியிருந்தது. முதுகில் தட்டி எழுப்ப அலையலையாய் தோலில் சிலிர்ப்போட எழுந்து நின்று கொண்டது. சாணிச் சகதியை அள்ளி எருக்கூடையில் எறிந்துவிட்டு நேற்று கூனத்தார் காட்டில் அறுத்து வந்திருந்து மீதமிருந்த அருகம்புல்லை அள்ளி ஆளுக்குக் கொஞ்சமாய் உதறிவிட்டான். 

புல் கட்டு  இடத்தில் கிடந்த சுமைக் கயிறை எடுத்து வெளியே வந்தவன்

“சாயங்காலம் பெருமா கரட்டுக்கு ஓட்டிட்டுப் போ. நான் மாத போய் பாத்துட்டு வர்றேன்” என அலமேலு காதில் விழுமாறு உரக்கக் கத்திவிட்டு சந்தில் நடந்தான். 

ஆவணி கடைசியில் தான் அவள் மகள்வழி பேத்திக்கு முடியிறக்கி காது குத்துகிறார்கள். ஆடு, கோழி, பன்றியென முப்பூசையும் போடுவதாக நேற்று தான் போன் பேசினாள். எப்படியும் வரும்படியாக அரை பவுனாவது இவனுக்கு செலவுண்டு. அதற்கான தொகையைத் தான் மூன்று மாதங்களாகவே திரட்டிக் கொண்டிருக்கிறான். மகன் பாண்டி உங்க சகவாசமே வேண்டாமென பாலிடெக்னிக் முடித்த கையோடு திருப்பூர் போய் பனியன் கம்பெனியில் சேர்ந்து கொண்ட பிறகு அங்கேயே உடன் பணிபுரிந்தப் பெண்ணை மணமுடித்து செட்டிலாகி விட்டான். வலிய அற்றுக்கொண்டு செல்பவனை பிடித்துத் தொங்கிக் கொண்டிக்க கலியனுக்கு விருப்பமில்லை. நேற்று போன் பேசும் போது ஆளாய் வந்து ஆளாய் போவதாக தெளிவாகச் சொல்லிவிட்டப் பிறகு இவனுக்கு துக்கம் கனக்கத் தொடங்கிவிட்டது. 

வாசலில் கோழிக்கு  நொய்யரிசியை தூவிக் கொண்டிருந்த மாது இவனைப் பார்த்து “வாப்பா” என்றான். 

“வர்றன் வர்றன்.. சீக்கிரமா சட்டைய மாட்டிக்கிட்டு வா. மனையாரரு கூப்பிட்டனுப்பி இருக்காரு” என்றதும் விஷயம் விளங்கியவனாய் உள்ளே ஓடி சட்டையை அணிந்து கொண்டு வந்தான். இருவரும் வடக்கு வீதியைக் கடந்து பெருமாள் கோயில் திசையை நோக்கி நடக்கத் தொடங்கினர். அங்கு தான் மனையாரர் வீடு இருக்கிறது. 

“இந்த தடவயாவது காசு கரெக்ட்டா பேசு கலியா. போன தடவ ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம்” 

மனதுக்குள் எதையோ தீர்மானித்துக் கொண்டது போல கலியன் “ம்..ம்..” என தலையை அசைத்தான். போன வாரம் மேற்கே கரைக்காரர் காட்டுக்குப் போனபோது ஒண்ணேகால் ஏக்கருக்கு ரெண்டாயிரமென பேசி முடித்து விட்டார்கள். காட்டுக்குப்போய் பார்த்தால் புழுதிமண் பெரும் பெரும் கட்டியாக ஐந்து  கலப்பையால் ரெண்டு சால் ஓட்டிய கையோடு கிடந்தது. கலியன் மிரண்டுப் போய் திரும்பவும்  கரைக்காரரிடமே ஓடினான். 

‘என்ன சாமியிது இம்புட்டு கட்டியாக் கெடக்குது? எப்புடி சாமி இதுல போயி பாரு போடுறது?’ எனத் திணறியபடியே கேட்டான்.

‘ரொட்டேட்டர் சாலு ஓட்டுறதுக்குலாம் நேரமில்ல கலியா.. மூணு நாள்ல நீ முடிச்சிக் குடுத்தாதான் நான் வெதைய ஊனிட்டு பெரம்பலூர் போக முடியும். அங்க கொளுந்தியா மவளுக்கு கல்யாணம்..’ தீர்மானமாய் அவர் சொன்னபோது இவனுக்கு பயமாக இருந்தது. 

‘ரொட்டேட்டர்காரனுக்கு போன் போட்டா அவன் வந்து எல்லாக் கட்டியையும் ரெண்டு மணி நேரத்துல மருக்கி குடுத்துட்டுப் போறான். இத செய்ய எவ்வளவு நேரம் ஆவப்போவுது?’ என மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

‘சரி சாமி.. இது வேல அதிகம் புடிக்கும்.. நீங்க வேற மூணு நாள்ல முடிக்கச் சொல்றீங்க.. காசு இன்னும் சேத்துக் குடுங்க..’

‘அதெல்லாம் இல்ல கலியா.. பேசி முடிச்சதுக்கு அப்புறம் திரும்ப பேசுறதுலாம் புதுப் பழக்கமா இருக்குடா. இதெல்லாம் சரியில்ல. போய் வேலையப் பாரு. அடுத்த தடவ பேசிக்கலாம்’ என்றபடி போய் கதவை சாத்திக் கொண்டார். 

கலியன் வெறுப்புடன் திரும்பி நடந்தான். எத்தனை அடுத்த தடவைகள்.. முதலில் காட்டைப் போய் பார்த்துவிட்டு பிறகு தொகை பேசியிருக்க வேண்டும். எல்லாம் என் தவறு’ என்றபடி தலையிலடித்துக் கொண்டான். அதன்பிறகு மூன்று நாட்களுக்கு பேசிய வேலை நான்கு நாட்களானது. பெருங்கட்டிகளை மண்வெட்டியில் அள்ளினால் சரிந்துச் சரிந்து விழுந்து பாரொதுக்கவே வராமல் இருவரும் தவித்துப் போனார்கள். 

நெல்லறுத்த வயலென்றால் கண்டிப்பாக ரொட்டேட்டரில் நொறுக்கினால் மட்டுமே வாய்க்கால் ஒதுக்கவும் பாரிழுக்கவும் தோதாக வரும். மண் சிறு கட்டியுமின்றி உப்புமா மாதிரி பொலபொலவென உதிர்ந்து வரும். அப்படி மண்வெட்டியை இறக்கியெடுத்தால் அள்ளிச் சரவணைக்க  ஆசையாக இருக்கும். ஆனால் கூலிக்காரனுக்கு தோதான வயல் அவ்வாறு சிக்குவது அரிதினும் அரிதானது. வயதான காளைகள் வரிப்புண்ணில் சாட்டையடி வாங்கியவாறு நுரை தள்ள பாதி அச்சு முறிந்தாடும் செக்கில்  புண்ணாக்கு ஆட்டுவதை அக்காட்சி பொட்டல் வெளியில் நினைவுபடுத்தியது. 

நல்லத்தி ஓடைக்கு மேற்கே மனையாரர் வீடு  வண்ண மிதப்போடு கண்களுக்குத் தெரிந்தது. காம்பவுண்ட் சுவற்றுக் கேட்டைத் தள்ளிக் கொண்டு  மாது பின்தொடர கலியன் உள்நுழைந்தான். சாம்பல் நிற டாடா சஃபாரி தென்னை மரத்துக்கு அடியில் நின்றிருந்தது கண்டு ஒரு கணம் தயங்கினான். வேறு ஏதாவது வேலையிருக்குமோ? முந்தாநாள் கிழக்குக்காட்டுக்கு தேங்காய் உரிக்கச் செல்கையிலேயே காணி வீட்டு டிராக்டர் காட்டில் ஓடுவதைப் பார்த்தான். அழைப்பார்.. அவரே அழைப்பார் என எண்ணியபோது அவன் முகத்தில் ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. இதே நல்லத்தி ஓடையின் ஊற்றெடுத்தக் குழிகளில் நீரை கலியனும் மனையாரரும் தேடிக் கொண்டிருந்த காட்சி கண்களை அடைத்தது. 

மனையாரருக்கு கலியனை மற்றவர்களை விட நிரம்பப் பிடிக்கும்.மற்ற கூலியாட்களிடம் இல்லாததொரு நெருக்கம் அவனிடம் அவருக்கு இருந்ததை கலியன் பெருமையாக நினைத்துக் கொள்வான். அவன் சொந்தங்களே பொறாமைபடுமளவுக்கு வேலை நேரம் முடிந்தபின்னும் அவனுடனான உரையாடல் நீடித்திருக்கும். 

காட்டு வேலை தவிர கடைக்கண்ணிக்குப் போக வர, கணேசா பீடி வாங்கி வரச் சொல்லி அதில் ஐந்தாறை உருவித் தர, காய்கறியோ ஆடு மாடுக்குத் தேவையான புல் பூண்டோ காட்டிலோ வரப்பிலோ அறுத்துக் கொள்ள என பல சலுகைகள் அவனுக்கானது மட்டுமே. நாள் கிழமையன்று கறி காய் எடுத்தால் ஒரு ஆப்பை பொங்கச்சோறிட்டு மனைவியை அதன் மீது தழும்ப தழும்ப கறிக்குழம்பை ஊற்றச் சொல்லி தவறாமல் நான்கு துண்டு கறியாவது இருக்குமாறு பார்த்து சாப்பிடச் சொல்வதென அவர்களுக்குள்ளான உறவு இருந்தது. திருவிழாச் சமயங்களில் ஓடைக்கரையில் ஊறலென்று போட்டால் கட்டாயம் இலைக்கு பக்கத்தில் இவனுக்கும் சரக்கை ஊற்றி வைத்து அழகு பார்ப்பார். விவரம் தெரியா வயதுவரை காடுமேடெல்லாம் கூடவே அலைந்த சிநேகிதனுக்கு தனி சொகுசு என அவர் மனைவியும் அடிக்கடி கிண்டல் செய்வாள். 

அதே போன்று அவருடைய காட்டில் வேலையென்றால் கலியனும் சேர்த்து உரிமையெடுத்துக் கொள்வான். எந்த பருவத்தில் எந்த பயிர் செய்யலாம், போன முறை வைத்த உரத்தின் வீரியம் எப்படி, தேங்காய் சிரையெடுக்கும் நாள் பக்குவம் என விவாதிப்பதோடு அனைத்திலும் அபார உழைப்பைக் கொட்டுவான். கூலிக்கு பார் ஒதுக்கும் போதெல்லாம் வியர்வைத் தண்ணீர் மூக்கு நுனியில் திரண்டு மண்வெட்டியில் ஒழுக ஒழுக இருபுறமும் வாரி இழுத்துச் சேர்க்கையில் மாது பின்னாலிருந்து கட்டியை எடுத்து எறிந்து ‘யே.. சாமி.. கொஞ்சம் மெதுவா தான் போப்பா.. என்னமோ உன் சொந்த காடாட்டம் இந்த வேகம் காட்டுறியே?’ எனக் கிண்டலாக இறைவான்.

வீட்டில் குழந்தைகளின் ஆர்ப்பாட்டமும் கொஞ்சல் சத்தமும் அதிகளவில் இருந்ததில் மனையாரரின் மூத்த மகன் சென்னையிலிருந்து விடுப்பில் வந்திருப்பதாக இவனே அவதானித்துக் கொண்டு வாசலை நெருங்கிச் சென்று அவர் பெயர் சொல்லி அழைத்தான். ஊரிலிருந்து இறக்குமதியாகி இருந்த லேப்ரடார் அவனைப் பார்த்து தொண்டை வரளக் கத்தியது. காரிலேயே அழைத்து வந்திருப்பார்கள் போலுமென நினைத்துக் கொண்டான்.

இவன் குரல் கேட்டு வெளியே வந்த மனையாரரின் மகனைத் தொடர்ந்து அவரது பேத்தியும் ஓடிவந்தாள்.

“டாட்.. வாட் ஈஸ் யூ?”

“ஐ’ம் ஆன் இன்ஜீனியர் டியர்”

“வாட் ஈஸ் அவர் கிராண்ட்பா?”

“ஹீ ஈஸ் அ ஃபார்மர்”

சட்டென இவன் பக்கம் கைகாட்டி 

“வாட் ஈஸ் ஹீ?” என்றாள்.

அவர் சிரித்தபடி “ஹீ ஈஸ் அ லேபர்டா” என்றார்.

தன்னைக் கைகாட்டவும் கலியனும் சிரித்தவாறு

“பாப்பா என்னங்க சொல்லுது?” என்றான்.

“இல்ல கலியன். அவ ஸ்போக்கன் இங்கிலீஷ் பிராக்டீஸ் பண்றா. நீ யாருனு கேட்டா. அவர் வேலையாள்னு சொன்னேன்”

‘நானும் விவசாயி தானுங்கய்யா’ என உடனே சொல்லத் தோன்றியது. ஆனால் சொல்லவில்லை. அவன் காடில்லாத விவசாயி.

மனையாரர் முண்டா பனியனும் வேட்டியுமாய் வெளியே வந்தார்‌. முதலில் கலியனையே கேட்கச் சொன்னார். கலியன் முதலிலேயே காட்டைப் பார்த்திருந்தான். ரெண்டு ஏக்கர் நிலம், ஆமைக் கலப்பை உழவு.சிறு கட்டிகளின் பதம் மண்வெட்டிக்குப் போதுமானதாக இருக்கும். 

“மூணு வயலுக்கும் சேந்து மூணு ஐநூறு குடுத்துடுங்க சாமி” 

என்றதுமே “அடேங்கப்பா” என்ற குரல் அவர் மகனிடமிருந்து வந்தது

கலியனுக்கு ஒருமாதிரியிருந்தது.

“என்னதிது கலியா? ஓவர் ரேட்டா இருக்கே?” இதுவும் அவரே தான். மனையாரர் பேசவேயில்லையே என்ற தவிப்பு அவனுக்கு ஏறியது.

“இல்லைங்க சாமி. ரெண்டு பேரும் வெயில்ல இழுக்கணும். மூணு வயல்லயுமே வடக்கால முழுசும் மேடு. தண்ணி ஏறாது. அங்க ஒரு வாய்க்கா கெழக்க மேற்க எச்சா போடணும். ” 

“இல்ல கலியா ரெண்டாயிரம் வாங்கிக்க ” இப்போதுதான் மனையாரர் வாயெடுத்தார். 

கலியன் பதைபதைத்தான்.

“கட்டுப்படியாவாது சாமி. ரெண்டாளு கூலி வந்தாலே மூணு நாளு ஆவும். ஒரு நாளு கூலி ஐநூறு. கணக்குப் போடுங்க சாமி.”

“அப்படி பாத்தாலும் மூணு தான வருது? ” இது அவர் மகன்.

“கூலின்னா நேரம் முடிஞ்சதும் மேடேறிடுவாங்க. நினைச்சா வேலைய எத்தன நாள்னாலும் இழுக்கலாமுங்க..”

மனையாரர் மகனை அடக்கினார்.

“நீ சும்மாரு. கூலின்னா வேல செய்றானுங்களா ஏமாத்திட்டு நிக்கிறானுங்களானு கூடவே ஒரு ஆளு கண்காணிக்கனும். காண்ட்ராக்ட் தான் சரி”

கலியனுக்கு சுரீரென்றது. மனையாரரின் உருவத்தில் வேறு யாரோ பேசுவது போல உணர்ந்தான்.

தான் கேட்ட தொகையிலிருந்து மாது முந்நூறு குறைக்கச் சொல்ல இவன் ஐநூறாக குறைத்து மூவாயிரத்தில் வந்து நின்றான். ஆனால் அவர்கள் இரண்டு முந்நூறு வந்து அதிலிருந்து ஏறவேயில்லை.

பேச்சு எதற்கும் பிடி கொடுத்து வராமல் முதல்முறையாக இவ்வளவு நீள்வதாக கலியனுக்குத் தோன்றியது. இவன் தெற்கே முனி கோயிலில் நிற்க அவர்கள் வடக்கே சுண்ணாம்பு மேட்டில் நிற்கிறார்கள். 

முடியவே முடியாதென மகனோடு சேர்ந்து மனையாரரும் கறார் காட்டுவது இவனுக்கு என்னவோ போலிருந்தது. 

“சரி சாமி. நீங்க வேற ஆள வச்சிக் கூட போட்டுக்கங்க” கலியனின் வாயிலிருந்து அவசரமாகச் சொற்கள் வந்து விழுந்தன. தான் அவ்வாறு சொல்லியிருக்கக் கூடாதோ என நினைத்துக் கொண்டிருக்கும்போதே

“சரி கலியா.. நான் வேற ஆள வச்சி போட்டுக்குறேன்” என்றார் மனையாரர்.

கலியனின் முகம் சட்டெனக் கறுத்துப் போனது. ஏதோவொரு சொல்ல முடியாத அவமானத்தில் விழுந்தது போல உடல் குறுகியது. சமாதானமாய் ஏதேனும் சொல் வருகிறதா என பூச்செடிகளின் பக்கம் ஒதுங்கி நின்றான். காரின் டயரை மலைநெல்லி மரத்தின் உயரத்தை வெளியே நாய்க்கு சோறிட வந்த மனையாரர் மருமகளின் முகத்தை என சுற்றும் முற்றும் பார்த்து அங்குமிங்கும் உலாவி இயல்பாக இருப்பதாக காட்டிக் கொள்ள முயற்சித்தான். ஆனால் அவர்கள் எப்போதோ உள்ளே போய்விட்டிருந்தார்கள். கடன் தருபவன் கூறும் அபத்த நகைச்சுவைக்கு வாய்விட்டுச் சிரிப்பவனையொத்த சாயலில் அவனங்கு நின்றிருந்து விட்டு ஏமாற்றத்துடன் வெளியேறினான்.

அதன்பிறகான நிமிடங்கள் யாவும் கலியனுக்கு நீண்டு வளர்ந்துகொண்டே செல்வதைப் போலிருந்தது. உள்ளூற மனையாரர் சமாதானமாய் அழைத்துப் பேசுவாரென நம்பிக் கொண்டு வாசலையே பார்த்தபடியிருந்தான். அலமேலு கூட அவ்வப்போது ‘அந்த ரெண்டு முந்நூறு இருந்தாக் கூட இப்ப எவ்வளவு உபகாரமா இருக்கும் ‘ எனக் கூறி பொருந்தாக் கூலியை வாங்க மறுத்து வருந்திக் கொண்டிருந்த அவன் பாரத்தின் அச்சு நகராமல் பார்த்துக் கொண்டாள். தினசரி அவன் கால்கள் வேலையிருக்கிறதோ இல்லையோ ஒருமுறை மனையாரர் வீட்டு நிலத்தை நோக்கி நகர்ந்துவிட்டு திரும்பி வந்தன. அந்த திசையில் வேலைக்குச் சென்று வருபவர்களிடம் மனையாரர் காட்டைப் பற்றி விசாரித்து வேறு யாரும் நிலத்தில் இறங்கவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டான். 

‘எனக்குத் தெரியும்.. என்னை விட்டா வேற யாரு இருக்கா மனையாரருக்கு?’ 

‘அது எங்காடு.. அதோடு உடம்பு பூராவும் எங்கால் பட்டாதான் சூல் புடிக்கும்னு அவருக்கு நல்லாவேத் தெரியும். அவரு மவன் ஊருக்குப் போய்ட்டாருல்ல.. இனிமே கூப்டுவாரு’

‘எம்மேல கொஞ்சம் கோவம் அவருக்கு.. நீ வேணும்னா பாரு இன்னும் ரெண்டு நாள் பாத்துட்டு அவரே ஆள் விட்டு அனுப்புவாரு தெரிஞ்சிக்க’ என அலமேலுவிடமும் மாதுவிடமும் மாறி மாறி நெகிழ்ந்து கொண்டிருந்தான்.அவ்வளவு தூரம் பேரம் பேசாமலிருந்தால் அவரே காசு தரும்போது சேர்த்துக் கொடுத்திருப்பாரெனவும்  நினைத்து அவ்வப்போது சமாதானப்பட்டுக் கொண்டான்.

நான்கைந்து நாட்களுக்கு மேலாகியும் அவர் அழைக்காதது குறித்து அவனுக்கு மிகுந்த கவலை உண்டானது. ஆவணி பிறந்துவிட்டால் மழை வந்து எல்லாம் பாழாகிவிடும் என விசனப்பட்டான்.

“அவரு வந்து உன்ன பாத்து கொஞ்சுவாரா? நீ தான் போய் சமாதானப்படுத்திட்டு வர்றது?”

அலமேலு சொன்னது தான் சரியெனப்பட்டது. இருவருக்கும் நடக்கும் பனிப்போரில் பயிர் நாசமாகிவிடக்கூடாதென துண்டை உதறிப் போட்டுக் கொண்டு நடந்தவனை “திரும்பவும் போய் பேரம் பேசிக்கிட்டு இருக்காத” என எச்சரித்தாள்.

மனையாரர் வீட்டை நெருங்கும்போதே காட்டுக்குள் ஏதோ இயந்திரம் ஓடும் சத்தம் தெளிவாகக் கேட்டது. தென்னந்தோப்பில் களையெடுப்பார்களென நினைத்தவாறு அருகில் நெருங்கியவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

ஏற்கனவே பார் ஒதுக்கும் வண்டியைப் பற்றி கலியன் கேள்விப்பட்டிருக்கிறான். 

‘அதுலாம் ஒரு வண்டியாடா? ஒருத்தன் புடிச்சிக்கிட்டு தள்ளிக்கிட்டே போறான். நாலஞ்சு கலப்பைக்கு பின்னாடி ஒரு இரும்பு பலகைய மாட்டியிருக்கானுவ. அதுதான் மண்ண ஒதுக்கிக் குடுக்குது. ஆனா செரவோட ரெண்டு ஓரத்துலயும் ஒண்ணும் கிழிக்க முடியல. ஓரம்பாரமும் ஒண்ணும் அசைக்க முடியல. அதுக்குத் தனியா மம்பட்டில கொத்திக்கிட்டு கெடக்கணும். என்னா இருந்தாலும் மனுசன் கைப்படுற மாதிரி இருக்குமா’ என கிண்டல் செய்திருக்கிறான். 

தான் புழுதிக்கிளற வேண்டிய காட்டில் அவ்வண்டியின் உலோகச் சத்தம் காதுகளை செவிடாக்கும்படி இயங்கிக் கொண்டிருப்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. உடலிலிருந்து எதுவோ பிய்ந்து கொண்டுப் போனதுபோல் வலித்தது. 

அவ்வளவு தான் உனக்கும் இந்நிலத்திற்குமான தொடர்பென சமர் செய்ய வந்தவனை அசூயையோடு நெட்டித் தள்ளி எக்களித்துச் சிரிக்கும் காலத்தின் பற்கள் முதுகெலும்பை கிழித்துக் கொண்டிருந்தன. மனையாரரைப் பார்த்து வெடுக் வெடுக்கென நான்கு கேள்வி கேட்கவேண்டும் போலிருந்தது. மனையாரர் காட்டில் தென்படவில்லை. 

கலியனுக்கு பால்யத்திலிருந்து தொடர்ந்து வரும் தனக்கும் காட்டுக்குமான தொடர்பிழை அற்றுக்கொண்டிருப்பது போலத் தோன்றியதில் உடனடியாய் அதற்குள் இறங்கி அவ்விழையை ஒட்ட வைக்க வேண்டிய அவசரத்தில் தானிருப்பதாகப் பட்டது. கன்றீந்த காரி மாட்டின் மடி கண்களுக்கு வந்துப் போனது. நெறி கட்டாமலிருக்க ஐந்தாறு நாட்களாக வைக்கோலை மட்டுமே போட்டுக் கொண்டிருக்கிறான். இன்று காலை தான் சீம்பால் வருவது நின்று ஆவினில் முதல் பால் ஊற்றினான். 

தவிடு, தீவனம் செட்டியார் கடையில் வாங்கி வைத்திருக்கும் போதிலும் பசும்புல் போல வராது. 

உள் வரப்பில் கால் வைத்து பருத்திக் காட்டை நோக்கி நடந்தான். வண்டியின் இரைச்சல் திரையிசையை கேட்கப் பணிக்கப்பட்டிருக்கும் கூத்துக் கலைஞனைப் போல காதில் பிடிவாதமாக விழுந்தது.  பசுஞ்சாறு வீரியமாய் அசைபோடும் வாயெச்சிலில் கலந்து சுரப்பை அதிகரிக்கும் குண்டுமணியான் புற்களும் தடித்தக் கோரைகளும் திரண்டிருக்கும் காட்டுக்குள் பருத்தி விளார்களைத் தள்ளிக்கொண்டு உள்ளிறங்கினான். இருக்கும் மனக்கொதிப்புக்கு கதிரருவாளின் தேவையிருக்காது. இருகைகளையும் புற்களுக்கு இடையில் நுழைத்துப் பற்றி ஆவேசமாக பறிக்கத் தொடங்கியதில் மருக் மருக்கென புற்கள் அற்று கைக்கு வந்தன. 

பசியேறி ஆவலாய் பரவும் தீ சுற்றத்தை ஆவ் ஆவ்வென விழுங்குவதைப் போல அவன் புற்களை பிடுங்கிக் கொண்டிருந்தான். உண்மையில் நினைவிலிருந்து மெல்ல நழுவிக்கொண்டிருக்கும் நிலத்தை ஆவேசம் பொங்க இரு கைகளாலும் வாரி வாரி அணைப்பதைப் போலிருந்தது.

ஒற்றையாள் சுமைக்கட்டுக்குத் தேவையான அளவுக்கு  சேர்த்த அசதியில் அப்படியே மண்ணில் கால்களை விரித்தவாக்கில் அமர்ந்தான். வியர்வை பெருகி புல் வாசத்தோடு கலந்து இடற நாசியைச் சொறிந்தவன்

வரப்பில் யாரோ நடந்து வரும் சலனம் கேட்டு தலையைத் திருப்ப வரப்போர தென்னை வரிசைகளைக் கடந்து மனையாரர் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்த சொற்கள் இவன் கேட்காமலேயே காதில் விழுந்தன. 

“இவனுங்களுக்குலாம் இப்படித்தான் மச்சான் தண்ணி காட்டணும். எதுக்குமே இனிமே கூப்பிடாம எல்லாத்துக்கும் மிஷின உடணும். இங்க முடிச்சதும் மிஷின்காரன அங்க வரச்சொல்லிட்டேன். இவனுங்களுக்கு அழுவுறத விட ரேட்டு கம்மியா தான் ஆவுது. “

குரல் தொலைவில் குறைந்தபடியே தொலைந்து கொண்டிருக்க கலியனுக்குள் குருதி உறைந்து தீக்கட்டிகளாய் அனலேறிக் கொண்டிருந்தது. பின்னால் திரும்பிப் பார்த்தான்.  நான்கைந்து இடங்களில் சேகரித்த புற்கள் கட்டாகாமல் பரவிக் கிடந்தன. வேட்டியில் செருகிக் கிடந்த வாழை நார்களை இழுத்தெறிந்து விட்டு எழுந்தான்.மனையாரருக்கு எதிர்திசையில் தளர்வாக நடந்து வேலிப்புதர்ச் செடிகளை அகற்றி நல்லத்தி ஓடைக்குள் இறங்கினான். நிலத்திலிருந்து வலுக்கட்டாயமாக பிய்த்துக் கொண்டு போவது  போல கால்கள் நடையை மறுத்து நடுங்கின. வழிநெடுக சொடுங்கிய முகத்தை  மறைக்க முயன்று தடுமாறி  நகர்பவனின் கைகள் வேட்டியின் பின்புறம் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட முயன்று தோற்றுக் கொண்டிருந்தன. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.