தெய்வநல்லூர் கதைகள் – 2

This entry is part 2 of 2 in the series தெய்வநல்லூர் கதைகள்

தமிழ்நாட்டிலே எம்ஜிஆர் மறைவை ஒட்டி அதிமுக ஜெ அணி, ஜா அணி எனப் பிரிந்து யார் உண்மையான அதிமுக என கச்சை கட்டிக் கொண்டிருந்த காலத்திலே தெய்வநல்லூரிலே நடந்த சம்பவமாக்கும் இது.

பரணி சம்பவத்திற்குப் (#தெய்வநல்லூர் கதைகள் 1) பின் சு. கணேசன் எனும் சுனா கானா பள்ளிப் படிப்பு தனக்கு உதவாது என்ற உண்மையை தன்னளவில் தானே அதுவாகி உணர்ந்தார். ஆனால் தான் கண்ட மெய்யறிவு தனக்கே உரியது, பிறருக்கு அது தகவல் மாட்டே எனத் தெளிந்து பிறர் மீது கருணை கொண்டு இனி பள்ளி செல்தல்  தனது சுயகௌரவத்துக்கு இழுக்கு என்று உலகுக்கு அறிவித்தார். 

அதன்பின்  வெறுமே சோம்பி இருந்து விடவில்லை அன்னார். உள்ளூர் காவல்துறையின்  “சிறப்பு நண்பர்கள்” குழுவில் சுனா கானா  இணைந்தார்.  தன்னிறைவு பெற்ற தற்சார்பு கிராமமாய் தம் ஊரை மாற்றும் நோக்கிலும், உள்ளூர் மருத்துவ வேதியல் அறிஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சீரிய நோக்கிலும்  “சிறப்பு நண்பர்கள்” குழுவினர் உழைக்கும் மக்களின் உடல்வலி மற்றும் மனக்கவலைகளைப் போக்கடிக்கும் ஒரு பானத்தைத் தயாரித்து மலிவு விலையில் விற்பனை செய்தும் வந்தனர். இம்முறையில் தயாரிப்புத் துறையின் செயல்பாடுகளை பொதுவாக மூன்று விதங்களாகப் பிரிக்கலாம். ஊறல், காய்ச்சல், வடித்தல் என்பனவாகும் அவை.  இதில் ஊறல் பிரிவிற்கு மூலப்பொருட்களைக் கொண்டுவந்து சேர்க்கும் சீரிய பணியில்தான் சுனா கானா முதலில் தன்னார்வலராக இணைந்தார் 

பஜாரில் உள்ள பெட்டிக்கடைகளில் இருந்து விற்பனையாகாத அழுகும் நிலைக்கு முந்தைய நிலையை எய்திய பழங்களைச் சேகரித்தல், கிராமத்தின் வீதிமுனைகளில் வீசப்பட்டு சுற்றுப்புறச் சூழலை சீர்கெடுக்கும் பாட்டரி கட்டைகளை மாற்றுப் பயனீட்டும் பொருட்டு சேகரித்தல், உள்ளூர் உணவுப் பொருள் கிடங்கில் தேவைக்கும் அதிகமாக கொக்கி போடப்பட்டு தரையில் கொட்டி “கையாளுதலில் சேதாரம்” என்ற கணக்கில் காட்டப்பட்டு பெருக்கி அள்ளி மலிவு விலையில் அளிக்கப்படும் சீனியைச் சேகரித்தல், உள்ளூர் வெல்லம் காய்ச்சும் பணிமனையில் வெல்ல வட்டைக்குள் இறங்கி வட்டையைச் சுரண்டி  தூள் வெல்லத்தை சேகரித்தல் , மிக முக்கியமாக இம்மூலப்பொருட்களை ஊருக்கு வெளியே மறைவாக இயங்கும் தொழிற்சாலைக்கு கொண்டுவந்து சேர்த்தல் ஆகியவற்றில் சுனா கானா சிறப்பாகப் பணிபுரிந்தார். கொண்டுவரும் வழியிலேயே வாயில் அள்ளிப்போட்டுக் கொள்ளுதல், தம் பணி குறித்து பிறரிடம் வீண்பெருமை பேசுதல் (எம் நண்பர் குழு மட்டுமே விதிவிலக்கு), காவல்துறை கவன ஈர்ப்பு செய்தல் போன்ற பணிச்செயல்பாட்டு முரண்களில் ஈடுபடாமை  சுனா கானா வின் தொழிற்சாலையில் பாராட்டப்பெற்றன. .    தொழிலகத்தில் அவர்தம் திறனைக் கண்டு மகிழ்ந்த அக்குழுவின் உள்ளூர் மனித வள மேம்பாட்டு அதிகாரியான “கத்திக்குத்து கந்தன்” அவர்களின் ஆதரவில் அடுத்த கட்டத்திற்கு சுனா கானா பணி உயர்வு அளிக்கப்பட்டார். உளவறிதல், ஒற்றறிதல் ஆகிய திறன் சார் பணிகளில் சுனா கானாவுக்கு ஆரம்பக் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இலங்குளத்தின் ஒரு பகுதி சமூகக் காடுகள் திட்டத்தின் கீழ் சீமைக் கருவேலங்களால் செழித்திருக்கும் இடத்தினுள்ளே தொழிற்சாலை இயங்கி வந்தது. ஆனால் சக போட்டியாளர்கள், திருடர்கள், உள்ளூர் அமைப்பு வளர்வதைப் பொறுக்காத பன்னாட்டு நிறுவனங்களின் ஏவல் துறையான காவல்துறையின்  உளவாளிகள் ஆகியோரால் உற்பத்திப் பிரிவு அவ்வப்போது சேதாரங்களைச் சந்தித்தது. ஆகவே தொழில்முறை எதிரிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு சுனா கானாவிற்குத் தரப்பட்டது. 

இலங்குளத்தின் கரையில் இன்றைய மால்களின் தரைத்தளத்திலிருக்கும் படிக்கட்டுகளின் அளவிற்கே பெருத்து வளர்ந்த  புளியமரத்தின் கவை ஒன்றில் அவருக்கு அலுவலக இருக்கை ஒதுக்கப்பட்டு மாடு மேய்க்கும் சிறுவர் எனும் உருமறைத் தோற்றம் அவருக்கு அளிக்கப்பட்டது. இருவேளைத் தேநீர், நொறுக்குத் தீனிகள் முதலியன நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டமை சுனா கானாவின் பணிஈடுபாட்டை அதிகமாக்கியது.  நான்கு திசைகளிலிருந்தும் குழுஊக்குறி காட்டாமல் ( தலைப்பாகை குறிப்பிட்ட நிறத்தில் அணிதல், துண்டை ஆலவட்டம் போடும் விதம், குறிப்பிட்ட அலைவரிசையில் ஸ்வரம் பிறழாத சீழ்கை ஒலிக்குறிப்பு போன்றவை) எவரேனும் உற்பத்திப் பிரிவின் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டினால் எச்சரிக்கை ஒலி (ஆடுகளை அழைக்கப் பயன்படுத்தும் கூவல்களில் ஒன்று) எழுப்பி தம் நிறுவனத்தாரை எச்சரித்தலே முக்கியப் பணி. இவர் எச்சரிக்கை ஒலி எழுப்பியதும் உற்பத்திப் பிரிவினர் பயின்று வந்த நுட்பத்துடன் வெவ்வேறு திசைகளில் உருவாக்கப்பட்டிருக்கும் அவசரகால வழிகளில் பாய்ந்தோடிச் சென்று மறைவர். 

தன்னார்வலராகப் பணியில் இணைந்த இரு மாதங்களுக்குள்ளாகவே நிறுவனத்தின் எதிர்காலத் தலைமைச் செயல் அதிகாரியாக விளங்குவார் என எதிர்பார்க்கப்படும் அளவிற்கு வளர்ந்து வந்த சுனா கானா எங்கள் நட்பையும் விடாது தொடர்ந்து வந்தது குறித்து எங்களுக்கெல்லாம் மிகப் பெருமை. கூடவே அவ்வப்போது தம் நிறுவனம் வழங்கும் நொறுக்குத் தீனிகளை எம்முடன் பகிர்ந்து கொள்வது எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்தது. “ஏல, எந்தக் கடையிலருந்து என்ன வேணும்னு சொல்லுங்கல, நான் வாங்கித்தாரேன்” என்று உரைத்து ஒருமுறை முத்தலிபு அத்தா கடை கொத்துப் புரோட்டா வாங்கி வந்து எம் ரகசிய சந்திப்பிடத்தில் சுனா கானா தந்தபோது  சிவாஜி என்ற சா கணேசன் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு தன் வாழ்நாளில் தம் தந்தை மகற்காற்றும் இவ்வுதவியை பன்முறை கோரியும் சாத்தையா அவர்கள் செய்யாதிருந்த நிலையில் இதை சுனா கானா செய்தார் என்பதால் தன் உயிரை அவருக்குக் கொடுப்பதாக கண்ணீரை சாட்சியாக்கி வானும், மண்ணும், நீரும், கொத்துப்பரோட்டாவும், நாங்களும் அறிய உறுதி ஏற்றார்.  பீடு கொண்ட சிறு புன்னகையுடன் தேவைப்படுகையில் அவர் உயிரைத் தாம் பெற்றுக்கொள்வதாக பெருந்தன்மையான ஏற்பினை சுனா கானா சிவாஜிக்கு அளித்தார். ( ஏலே, சிவாஜிப்பய புரோட்டால இருந்த மொளகாயக் கடிக்கவும்தான் கண்ணுல தண்ணி வந்துச்சு. அதை வச்சி சினிமா நடிப்பு நடிச்சிட்டுடாம்ல  என குழுவின் மு. மாரியப்பன் சொன்ன தகவலை இங்குதான் வெளியே சொல்கிறேன்). 

எல்லா தேனிலவும் முடிவுக்கு வரும் எனும் முதுமொழியை நாங்கள் முதன்முதலாய் உணரும் காலமும் விரைவிலேயே வந்தது. காவல்துறை விருந்தினராக சின்னாட்கள் சென்றிருந்த புலி சுப்பையா இல் ஏகிய  இரண்டாம் நாளே கள நிலவரம் உணர்ந்தார். அவர்தம் தொழில்முறை நண்பர்களால் நற்சான்று சுனா கானா வுக்கு அளிக்கப்பட்டாலும் தனக்கு ஈடாக சிறு வயதிலேயே மகன் உருவாவதை ஒரு தொழில்முறைப் போட்டியாகக் கருதிய அவர் தந்தை புலி சுப்பையாவால் இந்த தேனிலவு வாழ்க்கை விரைவில் முடித்துவைக்கப்பட்டது. 

சிவாஜி என்ற சா கணேசன் எதையும் கடிக்காமலேயே அழ, அவருக்கு ஒப்பு சொல்லி மு மாரியப்பன் இம்முறை அழ ஆரம்பித்தார் ( சிவாஜியை விட நாந்தாம்ல நெறைய அழுதேன். அவனுக்கு சட்டையில கீழ்தான் நனஞ்சிச்சு, எனக்கு பேர்வாதி சட்ட நனஞ்சிருக்குல்லா – மு மாரியப்பனின் கேட்புரிமச் சொல்லாடல்). காரணம் என்னவெனில்… இதைக் கேட்டுவரும் நண்பர்களே, மனதைத் திடம் செய்து கொள்க, …. சுனா பானாவை ராஜபாளையத்தில் இருக்கும் ஒரு உணவு விடுதியில் அவர் அப்பாவாகிய சுப்பையா சேர்த்துவிட்டார். அங்கேயே தங்கி இருக்க இடமும், உணவும், மாத ஊதியமும் என முடிவாகி விட்டது. துவக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த சுனா கானா உணவுவிடுதியின் உணவுவகைகள் அனைத்தையும் தினமும் வேண்டுமளவு உண்ணலாம் எனும் பணிச்சலுகை இருப்பதாக புலியார் சொன்னதும் மனம் மாறினார். நண்பர்கள் குழாமில் இம்முடிவினை சுனா கானா அறிவித்ததும் இடி இடித்து, மின்னல் வெட்டி, எரிமலைகள் டாப்பு கழன்று தெறித்து, பூமி பிளந்து என ஆகிவந்த திரைமரபுகள் எங்களுக்குள் நிகழ்ந்து முடிந்தன. 

இனி யாருல எங்களுக்கு பண்டம் வாங்கித் தருவா என சிவாஜி மீண்டும்  ஆரம்பித்தபோது மு மாரியப்பன் குறுக்கே புகுந்தார். “ஏலே, சுனா கானா ஒண்ணும் சும்மா போகல்ல. ஹோட்டலுக்குப் போறான். நாளைக்கு நாம ராசபாளையம் போனா அவன் ஹோட்டல்ல எம்புட்டு வேணும்னாலும் சாப்புடலாம். காசே தர வேண்டாம்”. நாங்கள் மு மாரியப்பன் சொன்னதன் தோற்ற மயக்கக் காட்சி நிலையில் உறைந்து நின்றோம். அந்த நொடியில் எங்களிடமிருந்து விடைபெற்று மறைந்தார் சுனா கானா எனும் நண்பர். 

நண்பர்கள் மனமுடைந்து போகவேண்டாம். சுனா கானா தனக்குத் தானே இட்டுக்கொண்ட மாற்றுப்பெயரோடு விரைவிலேயே மீண்ட சம்பவம் அடுத்து வரும்.

(வளரும்)

Series Navigation<< தெய்வநல்லூர் கதைகள் – 1

4 Replies to “தெய்வநல்லூர் கதைகள் – 2”

  1. நமக்குள் இருக்கும் பள்ளிச் சிறுவனை கையை பிடித்து இழுத்து வந்து அமரச்செய்யும் எழுத்து. இப்படி ஒரு குருப்பு எல்லா ஊர்களிலும் இருந்தது. நாம் நினைவுகளின் அடுக்குகளில் கடைசி பெட்டியில் வைத்திருக்கிறோம், ஜாஜா அதை படம் போட்டு விளக்குகிறார். தொடரட்டும். வாழ்த்துக்கள்

  2. இரண்டாவது தொடரிலும் சதம் அடித்துவிட்டீர்கள்.சுனாகானா பற்றி சிரிப்புடன் வாசித்து முடித்தேன். உள்ளூர் காவல்துறையின்”சிறப்பு நண்பர்கள்”குழுவில் இணைந்தார் ன்னு வாசிக்கும்போது நிஜமாலுமே ஏதோ உளவறியும் பணி போலும்னு நினைத்து வாசிச்சா கடைசியில் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில்😃

  3. “இடி இடித்து, மின்னல் வெட்டி, எரிமலைகள் டாப்பு கழன்று தெறித்து, பூமி பிளந்து என” எழுந்து பிளந்து கட்டியுள்ள மொழிபு.

  4. “சுனா கானா தனக்குத் தானே இட்டுக்கொண்ட மாற்றுப்பெயரோடு விரைவிலேயே மீண்ட சம்பவம் அடுத்து வரும்.”

    இப்போ KGF அடுத்த பாகம் வருவதற்கு காத்திருப்பு தொடங்குகிறது… 😇

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.