காலத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்கள்

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

வாழ்க்கை என்றால் என்ன? வாழ்க்கை ஏன் இவ்வாறு இருக்கிறது? இதற்கு என்ன  காரணம்? இதனை மேம்படுத்தும் விதமாக, மகிழ்ச்சிகரமாக மாற்றிக் கொள்வதற்கு வழி உண்டா? வழி இருந்தால் அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டிய முறை என்ன? இவ்வாறு தொடங்கிய கேள்விகளோடு மனிதன் செய்யும் ஆராய்ச்சிகளையும் முடிவெடுக்கும் இலக்கையும் அதனை அடைவதற்காகச் செய்யும் செயல்திறன் உள்ள முயற்சிகளையும் சேர்த்து மனிதனுடைய வாழ்க்கையின் தத்துவம் என்று கூறலாம். 

காலாதீத வ்யக்துலு நாவலில் ஆண் பெண் அனைவரும் படித்து வேலை பார்ப்பவர்கள். அவர்களுக்கு உள்ளமும் புத்தியும் ஒருமித்து கூர்மையாக பணிபுரிந்தன.

யாரோ முடிவெடுத்த வாழ்க்கையை வாழாமல் ஒவ்வொருவரும் வாழ்க்கை பற்றி தர்க்கம் செய்தார்கள். மோதிக்கொண்டார்கள். ஒன்றுபட்டார்கள். இவர்களில் அதிகமாக வாழ்க்கை பற்றி தர்க்கம் செய்தவர்கள் பிரகாசமும் கல்யாணியும். வாழ்க்கை பற்றி இருவருக்கும் அச்சம் இருந்தது.

பிரகாசத்திற்குத் தாய்மாமன் தன் வாழ்க்கையின் மீது காட்டும் அதிகாரம் பிடிக்கவில்லை. ஆனாலும் எதிர்த்துப் பேச முடியாது. தாய்மாமன் என்றால் பயம்.  சரியான நேரத்தில் தன் தேவைகளுக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்று அவன் கேட்க முடியாது. தன் சொந்த வயலில் கிடைக்கும் ஆதாயம் பற்றியோ செலவு பற்றியோ கேட்க முடியாது. தாய்மாமனுக்காகத் தன் வாழ்கை வீணாவது  அவனுக்குப் பிடிக்கவில்லை. உலகம் என்ன சொல்லுமோ என்று பயம்.   இந்திராவோடு வெளியில் சென்றால் ப்ரொபசர்கள் பார்த்து விடுவார்களோ என்று பயம். இரவில் மட்டுமே வெளியே செல்வான். இந்திரா என்றால் கூட பயம்தான். தன் விருப்பு  வெறுப்புகளை அவளிடம் அவனால் கூற முடியாது. அவனுக்குப் படிக்க வேண்டிய வேலை இருந்தாலும் அவள் வா என்றால் அவளிடம் இருக்கும் அச்சத்தால் அவள் பின்னால் செல்வான். கல்யாணியோடு அவனுடைய சினேகம் பற்றியும், காதல் விவகாரம் பற்றியும் விமர்சனம் செய்த சக மாணவியிடம் தகராறு செய்கிறான். அதாவது உலகத்திற்குத் தன்னை எப்போதும் நல்லவனாகவே காட்டிக் கொள்ள வேண்டும் என்ற குணம் அது. உண்மையில் அவனுக்கு என்ன வேண்டுமோ அவனுக்கே தெரியாது.

கல்யாணியின் அப்பாவித்தனமும், மென்மையான இயல்பும் அவனுக்கு வேண்டும். அதே நேரம், கல்யாணி கண்ணில் இருந்து மறைந்த உடனே, “கல்யாணிக்கு நீ ஏன் உதவி செய்தாய்?” என்று இந்திரா கேள்வி கேட்டபோது கல்யாணியிடமிருந்து    விலகி விடவும் அவனால் முடிந்தது. அவனை உரிமையோடு ஆதரித்து தைரியம் அளிக்கும் இந்திராவும் வேண்டும் அவனுக்கு. 

இந்த இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது? அதற்குத் தேவையான புத்தி கூர்மை அவனுக்கு இல்லை. புத்தி கூர்மையோடு முடியிடப்பட்ட சுதந்திரமான   நடத்தைக்கு இனி வாய்ப்பே இல்லை. அதனால் அவன் கல்யாணியை விட்டுப்  பிரிந்தான். இந்திராவையும் அடைய முடியாமல் போனான். இவர்கள் இருவராலும் அவனுக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லை என்றும் தாய்மாமன் தேர்ந்தெடுத்த திருமணத்திலேயே பாதுகாப்பு இருக்கும் என்றும் எண்ணி அதற்கு அடங்கிப் போனான். 

மூடநம்பிக்கையால் வாழ்க்கையில் இருந்தும் பொறுப்புகளில் இருந்தும் தப்பித்துக் கொள்ள முயன்றான். இந்திரா கூறியது போல தன்னம்பிக்கையற்ற, மனமுடைந்த ஆளுமை அவனுடையது. தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு அதல பாதாளத்தில் வீழ்ந்தான். இந்திராவையும் கல்யாணியையும் அவர்களுக்குப் பயன்படும் ஆண்களுக்கு வலை வீசும் ரகமாக என்று எண்ணி தன்னுடைய செயல் சரியே என்று சமாதானப்படுத்திக் கொண்டான் பிரகாசம்.

கல்யாணி யோஜனைகளின் பெட்டகம். அவள் பிறந்தது வளர்ந்தது அனைத்தும் அவளுடைய சிந்தனை வழியாகவே நமக்குத் தெரிகிறது. தன்னுடைய நடத்தையை அவள் திறந்து பார்த்துக்கொள்வதும், யார் என்னை நினைத்துக் கொள்வார்களோ என்று யோசிப்பதும் அவளுடைய வாழ்க்கையின் இயல்பு. அனைத்திற்கும் கவலைப்படுவது தன் குணம் என்று அவள் தன்னைப்பற்றி அடையாளம் கண்டு கொண்டாள். அதுவே பிரகாசத்தின் குணம் கூட என்று அறிந்தாள். 

கல்யாணி பிரகாசத்தோடு பேசிய சந்தர்ப்பத்தில் சிரிப்பதற்கு கூட அஞ்சினாள் என்றால் வாழ்க்கையை பற்றிய அவளுக்கு இருந்த பயத்திற்கு அது ஒரு சான்று. அவள் ஆசைப்பட்ட எதுவும் கிடைக்காத போது அந்த பயம் நிலைத்து விட்டது.  

எம்.பி.பி.எஸ். படிக்கலாம் என்று எண்ணினாள். படிக்க முடியாமல் போனது. ஹானர்சில் சேர்ந்தாள். தந்தையின் மரணத்தால் அதையும் சாதிக்க முடியவில்லை. பிரகாசம் தன்னுடைய தனிமைக்குத் துணையாக இருப்பான் என்று நம்பினாள். அந்த நம்பிக்கையும் ஏமாற்றத்தில் முடிந்தது. தந்தையின் மரணத்திற்கு பிறகு அவளுக்கு உதவ வேண்டுமென்று முன் வந்த ராமிநாயுடு மாரடைப்பால் திடீரென்று மரணம் அடைந்தான். அந்த பரிணாமங்கள் அனைத்தும் வாழ்க்கையின் மீது அவளுக்கிருந்த ஆசையையும் நம்பிக்கையையும்  போக்கடித்தன. இந்த விஷயத்தை டாக்டர் சக்ரவர்த்தி கண்டறிந்து அவளிடமும் அதைப்பற்றி பேசினான். 

சக்கரவர்த்தி காட்டிய சினேகம், கிருஷ்ணமூர்த்தி செய்வதாகச் சொன்ன உதவி, வசுந்தராவின் ஆதரவு இவையனைத்தும் அவளுக்கு வாழ்க்கை என்றால் பயப்பட்டுக் கொண்டும், சந்தேகப்பட்டுக் கொண்டும் அடி எடுத்து வைக்காமல், பிரவாகம் எங்கு அழைத்துச் சென்றால் அங்கே செல்வது என்ற புதிய புரிதலை ஏற்படுத்தின. வாழ வேண்டும் என்ற சங்கல்பமும் வாழ முடியும் என்ற தைரியமும் அவளுக்கு ஏற்பட்டன.

“எதையாவது கற்பனை செய்து கொண்டால் கொஞ்சம் பயம் ஏற்படுகிறது. அதை  எதிர்த்தால் தைரியம் வருகிறது” என்ற தீர்மானத்திற்கு வருகிறாள். தன் படிப்பால் சம்பாதித்த உத்தியோகங்களைப் பற்றி எண்ணத் தொடங்கினாள். சுதந்திரமாக வாழ்வதற்காக வசுந்தராவின் வீட்டிலிருந்து வெளியில் வந்து ஒரு அறையை வாடகைக்கு எடுத்து டியூஷன் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினாள். அங்கிருந்து அவளுடைய எண்ணங்கள் அனைத்தும் முன்னேற்றம் நோக்கி நகர்ந்தன.

வாழ்க்கை என்றால் பிரகாசத்திற்கும் கல்யாணிக்கும் முதலில் பயம் ஒரே விதமாக இருந்தாலும் வாழ்க்கை பற்றி கற்பனை செய்து பயப்படுவதை விட எதிர்த்து முன்னேற வேண்டும் என்று வாழ்க்கைச் சூத்திரத்தை கல்யாணி ஏற்படுத்திக் கொண்டது போல் பிரகாசம் ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போனான்.

தாய்மாமனைப் பற்றிய பயம், வாழ்க்கை பற்றிய பயம் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கு எந்த ஒரு எதிர்நீச்சலுக்கும் அவன் தயாராக இல்லை. மாமா ஏற்பாடு செய்த திருமணத்திற்குச் சம்மதித்து ஒரு பயத்திலிருந்து இன்னொரு பயத்திற்குப் பயணம் செய்தான். 

“பயம் மனிதனில் உள்ள அனைத்து நல்ல குணங்களையும் அழித்துவிடும்”  என்கிறார் திரு. ராவிசாஸ்த்ரி. அதனால்தான் பிரகாசமும் கல்யாணியிடமோ இந்திராவிடமோ நம்பிக்கையோடு ஈடுபட முடியாமல் போனான். கல்யாணி அவ்வாறு அல்ல. வாழ்க்கை பற்றிய பயத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு அவளுக்குக் கிடைத்த பற்றுகோல் பொருளாதார சுயச்சார்பு. அதன் மூலம்  “மறைந்த உண்மையை கண்டு கொண்ட தவசியைப் போல அவளுக்கு ஞானோதயம் ஆனது” என்று அப்போதைய அவளுடைய மனநிலையை விளக்குகிறார் நாவலாசிரியை. 

அந்த ஞானம் கொடுத்த புரிதல் மூலம், தான் ஒரு சுதந்திரப் பிறவி என்ற நம்பிக்கையை அவள் அடைந்தாள். சுதந்திரமாக வாழ்வதற்கு அவள் முயற்சியும்   தொடங்கினாள். அதனால்தான், “நீங்கள் எல்லாம் என்னிடம் நட்போடு இருங்கள். ஆனால் என்னைப் பார்த்து பரிதாபப்படாதீர்கள்” என்று  சக்கரவர்த்தியிடம் தெளிவாக அவளால் கூற முடிந்தது.

வசுந்தராவின் சித்தி காட்டிய அவமானத்தால் அந்த இரவு வசந்தராவின் வீட்டை விட்டு வெளியேறிய கல்யாணி, “பிறந்தநாளன்று சுதந்திர வாழ்க்கை கொடுத்த புதிய உற்சாகத்தோடு கிளம்பிய எனக்கு இத்தகைய அனுபவம் வாய்த்ததே? என்னைப்  புரிந்து கொள்ள யாரும் இல்லையா? நான் தனித்து விடப்பட்டவளா?” என்ற கேள்விகளால் மனம் புழுங்கி சக்கரவர்த்தியின் வீட்டிற்குச் சென்று, தன் துயரத்தையும் வேதனையையும் அவனோடு பகிர்ந்து கொள்வது ஒரு முக்கியமான கட்டம். கலங்கி விழுந்து விடாமல் தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொள்வதற்கு கல்யாணி சிறந்த முயற்சி செய்தாள். 

“நான் இப்போது நிம்மதியாக எழுந்து நிற்கலாம். தைரியமாக உலகத்தை பார்த்து புன்னகைக்கலாம். எனக்கு புனர்ஜென்மம் கிடைத்து விட்டது. இனி இந்த புதிய கல்யாணி உலகத்தைப் பார்த்து பயப்பட மாட்டாள்” என்று எண்ணிகிறாள். அந்த தைரியத்திலேயே சக்கரவர்த்தியுடன் திருமணத்திற்குச் சம்மதிக்கிறாள். 

தன் வாழ்க்கைக்கு தானே பொறுப்பு ஏற்கக்கூடிய நிலையில் தன் மீது தனக்கு மட்டுமே உரிமை உள்ளது என்ற நிலையான சங்கல்பத்தோடு சக்கரவர்த்தியுடன்  உறவுக்கு சம்மதிக்கிறாள். திருமணத்திற்குச் செல்லும் வழியில் காருக்கு விபத்து நேர்ந்ததால் அவள் தைரியத்தைக் கொஞ்சம் இழந்தாலும் மீண்டும் தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டாள். 

வாழ்க்கை குறித்த பயமும் சந்தேகங்களும் ஒவ்வொரு கணமும் அவளை துரத்திக் கொண்டே வந்து அவளை பலவீனப்படுத்தினாலும் வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்வதே செய்ய வேண்டியது என்ற ஒரே தீட்சையோடு வாழ்ந்தாள் கல்யாணி.

அதனால்தான் அவள் தன் ஆளுமையைக் குறை கூறும் அதிகார அமைப்புகளை முற்றுமாக நிராகரித்தாள். கணவனுக்குக் கூட தன் மீது எப்படிப்பட்ட உரிமையும்  கொடுக்கக் கூடாது என்று எண்ணியதில் அவளுக்கு வேண்டியது பொருளாதாரக்   கணவன் அல்ல என்றம், கணவன் என்ற சொல்லில் உள்ள சமுதாய அர்த்தத்தை நடைமுறைப்படுத்தும் மனிதன் கூட அல்ல என்றும் எண்ணுவதிலும்      சக்கரவர்த்தியிடம் அந்த கருத்தைக் கூறுவதிலும் அவளுக்காக அவள் வாழ்வது தெரிகிறது. மனைவியாக உலகம் குறிப்பிடும் சட்டத்திற்குள் அடங்கி வாழ்வதை  சுய இருப்பின் உணர்வோடு நிராகரிக்கிறாள். அதனைச் சுய அபிமான அறிவிப்பாக அறிய முடிகிறது. .

இந்திராவும் கிருஷ்ணமூர்த்தியும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவர்கள். 

வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காமலே வாழ்வார்கள். வாழ்க்கையில் பயம் என்பதை அறியாதவர்கள். 

இந்திராவைப் பற்றி முதலில் குறிப்பிடும்போதே பிரகாசம், “எனக்கு பயமாக உள்ளது கிருஷ்ணமூர்த்தி. அறையை மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது” என்று கூறியபோது, “பயம் எதற்கு?” என்கிறான் கிருஷ்ணமூர்த்தி.

கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்க்கை குறித்த ஆசையே தவிர பயம் இல்லை. இந்திராவைப் பற்றி அறிய வேண்டும் என்று தீவிரமாக எண்ணினாலும், அவளோடு அறிமுகம் செய்து கொண்டாலும், கல்யாணி என்ன ஆனாள் என்று விசாரித்தாலும், தேடினாலும், கல்யாணிக்கு உதவ வேண்டும் என்று தவித்தாலும் அனைத்தும் வாழ்க்கை மீதிருந்த ஆசையாலும் வாழ்க்கையை உற்சவமாக வாழ வேண்டும் என்ற உணர்வினாலும் ஏற்பட்டவையே.   

கிருஷ்ணமூர்த்தி எப்போதுமே பிறருக்காக வாழ முடியாதவன். வீட்டில் இருப்பவர்களுக்கோ சமுதாயத்துக்கோ அவன் எப்போதுமே அஞ்சவில்லை.

கேளிக்கைப் பிரியனாக வாழ்க்கையை நடத்தியதும், தேர்வுகளில் தோற்றதும்,  சீட்டாடியதும், சினிமாவுக்குச் சென்றதும், இந்திராவோடு காலம் கழித்ததும், கல்யாணிக்காகத் தேடியதும், இந்திராவைத் திருமணம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து கொண்டதும் அனைத்தும் தனக்காகச் செய்து கொண்டதே. அவற்றில் ஆனந்தமும் திருப்தியும் கிடைத்ததால் செய்தான். தன் மனசாடசிக்குத் தான் பதில் கூறக் கூடியவனாக வாழ்ந்தான். சுயநலத்துக்காகவே, தன் மகிழ்ச்சிக்காகவே வாழ்ந்தான். 

வசந்தரா அவனைப் பற்றிய ஒரு வார்த்தை சொன்னாள்.. “சேற்றைக் கிளறும்   பழக்கம் இல்லாமல் இல்லை. ஆனால் அது இவன் மேல் ஒட்டவில்லை. அந்த விஷயத்தை மறைக்க வேண்டும் என்ற குணமும் இல்லை” என்ற சொற்கள் உலகத்திற்காக அன்றி தனக்காக தான் வெளிப்படையாக வாழ்ந்த கிருஷ்ணமூர்த்தியுடைய இயல்பைக் குறிப்பிடுகின்றன.

“எதிர்காலத்தில் எனக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் காப்பாற்றுவாயா?” என்று    வசுந்தரா கேட்டபோது, “நான் மனிதன் வசந்தரா. ஆடு அல்ல” என்று தன்மானத்தோடு கூறிய சொற்கள் கவனிக்கத் தக்கவை. தான் யார் என்பதையும்  தன் உயர்வு என்ன என்பதையும் உணர்ந்து நடந்து கொள்ளக் கூடியவன்.

வாழ்க்கை துணையாக வசுந்தராவை தேர்ந்தெடுப்பதா? இந்திராவைத் தேர்ந்தெடுப்பதா? என்ற மனப் போராட்டத்திற்கு உட்பட்ட போது கிருஷ்ணமூர்த்தி யாரை தேர்ந்தெடுப்பதற்கும் சுதந்திரம் உள்ளவன். புத்தி கூர்மை நிறைந்தவன். 

அதனால்தான் அவன் இந்திராவை திருமணம் செய்து கொள்வது தம் இருவருக்கும் நன்மை பயக்கும் என்று நம்பினான்.

தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்பவனாக இருந்தால் வசுந்தராவைத்  தேர்ந்தெடுத்திருப்பான். கிருஷ்ணமூர்த்தியின் புத்திகூர்மையான இயல்பு அவனை  உயர்ந்தவனாக நிலைநிறுத்தியது.

அவனிடமிருந்த இந்த பெருந்தன்மையைச் சரியாகப் புரிந்து கொண்டான் சக்கரவர்த்தி. தானும் வாழ்ந்து பிறர் வாழ்வதற்கும் உதவி செய்ய வேண்டும் என்று குணம் கொண்டவன் கிருஷ்ணமூர்த்தி.  தவறு தன்னுடையதல்ல, சூழ்நிலையுடையது என்று எண்ணும் பிரகாசத்தைப் போன்றவன் அல்ல கிருஷ்ணமூர்த்தி. 

சூழ்நிலையைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டு தவறைத் திருத்தும் குணம் கொண்டவன். அதனால்தான் கல்யாணியை சந்திக்கும் வரை அவன் தேடுவதை விடவில்லை. கல்யாணியைக் கண்டுபிடித்தவுடன் அவளுக்குத் தான் எவ்வளவு தூரம் உதவி செய்ய முடியும் என்று நேர்மையாக முயற்சி செய்தான். 

வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் சூழ்நிலை பூதத்தை போல பீடித்தாலும், எதிர்த்துப் போராடுகிறாள் என்பதால் அவன் இந்திராவைப் பாராட்டினான். அவளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தான். அவளுக்காக குடும்பத்தையும் சமுதாயத்தையும் எதிர்ப்பதற்குத் துணிந்தான். இவற்றை கவனிக்கையில் வாழ்க்கையை விரும்பி வாழ்வது கிருஷ்ணமூர்த்தியின் இயல்பு என்பதை அறிய முடிகிறது. 

அநீதி நிறைந்தவனும் பொறுப்பற்றவனும் சுயநலத்தை நாடுபவனுமான ஆனந்த ராவின் மகள் என்ற உண்மையை உணர்ந்து, தன்னைப் பற்றிக்  கவலைபடுபவர்கள் யாரும் இல்லை என்று புரிந்து கொண்டு தனக்காகத் தான் வாழ்வதற்கு பழகிக் கொண்ட பெண் இந்திரா. உலகத்திற்குத் தான் ஒரு பேசும் பொருளாக இருப்பதை அவள் விரும்பவில்லை. அதோடு ஒரு பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறதோ அதற்கு மாறாக சுதந்திரமான நடத்தையை ஏற்படுத்திக் கொண்டாள். ஆண்களோடு நெருக்கமாக பேசுவது, உலகத்தின் கண்ணில் ஒரு விதமாகவும் தனக்குள் ஒருவிதமாகும் அன்றி தான் என்ன நினைக்கிறாளோ அதை பயமின்றி வெளிப்படையாகக் கூறுவது, பிரகாசத்தோடும் சரி, கிருஷ்ணமூர்த்தியோடும் சரி சினிமாவுக்கும் ஊர் சுற்றுவதற்கும் செல்வது – இவையனைத்தும் அவளுடைய சுதந்திரமான நடத்தையின் ஒரு பகுதியே என்று அறியமுடிகிறது.

சுதந்திரமான நடத்தை பொறுப்பினைக் கோருகிறது. இந்திரா தன் வாழ்க்கைக்கு பொறுப்பு தானே என்ற சுய உணர்வோடுதான் கடைசிவரை நடந்து கொள்கிறாள். இந்திரா தனக்கு எது இஷ்டமோ எது சுகத்தை அளிக்குமோ அதைச் செய்யக்கூடிய பெண். பிறருக்காக அசௌகரியங்களை வாழ்க்கைக்குள் வரவேற்க மாட்டாள். தன்னைப் பற்றி சிந்திப்பதற்கு யாருமில்லாத குடும்பத்தில் தனியாக, தன் வாழ்க்கைக்குத் தானே பொறுப்பு வகிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் வளர்ந்த இந்திராவுக்கு வாழ்க்கையின் மதிப்பு தெரியும். தினம் ஒரு உற்சவமாக வாழ்க்கையை வாழ்வதற்கும் தெரியும். நட்பையும் காதலையும் கொடுக்கத் தெரியும். ஆனந்தராவு ஒரு பாரமாக தன் வாழ்க்கைப் பாதையில் தடை ஏற்படுத்தினால் அதனை விலக்கிக் கொள்ளவும் தெரியும். 

கல்யாணியோடு சினேகம் செய்தாள். தன் வீட்டிற்கு வந்து தங்கச் சொன்னாள். அவளுக்கு ஜுரம் வந்தபோது சேவை செய்தாள். பிரகாசத்தின் விஷயத்தில் தனக்குப் போட்டியாகிறாள் என்று அந்த சினேகத்தை வெட்டி விட்டாள். தனக்காக தைரியமாக நிற்க முடியாதவன் என்று பிரகாசத்தைப் பற்றி அறிந்துகொண்ட பின் அவனிடம் தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினாள். 

தான் வலிமையோடு நின்று பிறருக்கும் வலிமையைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுவது, எதுவாக இருந்தாலும் கண்களைத் திறந்தது வைத்து, அதாவது முழு உணர்வோடு சுய பொறுப்பில் செய்வது, எதை செய்வதென்றாலும் சந்தேகம் கொள்ளாமல் கவலைப்படாமல் இருப்பது, என்ன நடந்தாலும் தைரியமாக நிற்பது – இந்திராவின் இந்த இயல்புகள் எல்லாமே வாழ்க்கையை விளையாட்டாக எண்ணி ஆடும் ஒரு விளையாட்டு வீரரின் இயல்புகள்.

இந்திரா தனித்திருந்தபோது அவளுடைய வீட்டில் படுத்துறங்குவதற்கு அஞ்சி, அண்டை அயலார் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று கிருஷ்ணமூர்த்தி தயங்கிய போது, “அண்டை அயலார் யார் என்றே எனக்குத் தெரியாது. அவர்களின் வழிக்கு நான் போகாத போது என் வழிக்கும் யாரும் வரமாட்டார்கள்” என்கிறாள். 

உலகத்திற்குத் தான் ஒரு பேசும் பொருளாக ஆவதற்கு இஷ்டப்படாமல். உலகத்தோடு வேலையின்றி தனக்கிஷ்டமான முறையில் தன் வாழ்க்கையை வாழ்வதற்கு இந்திரா பழக்கப்படுத்திக் கொள்கிறாள். 

“உலகத்திற்காக இல்லாத துக்கத்தை எல்லாம் என்னால் நடிக்க முடியாது” என்று  தந்தை ஜெயிலுக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்னது கூட அவளுடைய உள்ளத்தின் தெளிவுக்கு ஒரு அடையாளம். கிருஷ்ணமூர்த்தியோடு திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த பின் தந்தை என்ன நினைப்பாரோ என்ற சிந்தனை அவளுக்கு வந்தது. மறு நிமிடமே தனக்கு வேண்டியது கிடைக்கையில் அதைப் பெறுவதில் தந்தைக்கோ வேற யாருக்கோ இஷ்டம் இருக்குமோ இருக்காதோ என்று சந்தேகப்படுவதும் அதற்காக தியாகம் செய்வதும் புத்தியற்ற செயல் என்ற தீர்மானத்திற்கு வருகிறாள். அதற்காக அவள் பிறரிடம் கொள்ள வேண்டிய பொறுப்புகளை மறந்து விடவில்லை. தன் உத்தியோகத்தையும் சுதந்திரத்தையும் தான் நிறுத்திக் கொண்டு, தந்தைக்கு ஆதரவாக இருப்பதற்கும் அவள் தயாராகவே இருந்தாள்.

கல்யாணி தைரியமாக நிற்க வேண்டும் என்று நினைத்து அப்போதைக்கப்போது சக்தியை கூட்டிக் கொண்டு நிற்கையில், இந்திரா தைரியமே வாழ்க்கையாக வாழ்ந்தாள். வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சனைகள் இருக்கும். ஆனால் பிரச்சனைகள் இருக்கிறதே என்பதற்காக கவலைப்பட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பது அல்ல செய்ய வேண்டியது என்று இந்திரா தீர்மானமாக நம்பினாள்.

நாவலின் இறுதியில் கிருஷ்ணமூர்த்தியிடம் அவள் கூறிய சொற்கள் அவளுக்குள்  இருந்த தத்துவவாதியை வெளிக்காட்டுகிறது. தைரியமாக பயமின்றி வாழ வேண்டும். மனித நேயத்தோடு வாழ வேண்டும், சுயநலம், ரோஷம், குரோதம், பயம் எல்லா இடத்திலும் நிரம்பியுள்ளது. அனைவரிலும் உள்ளது. ஆதலால் அவற்றைப் பற்றி பயப்பட வேண்டிய தேவை இல்லை என்று தெரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை மீது ஆசையும் கனவும் பாசமும் அன்பும் இருப்பது நல்லது. ஆனால் அதுவே எல்லாம் அல்ல. தேவை ஏற்படும்போது மோகத்தை விலக்கி அவற்றை அறுத்தறிய வேண்டும். ஏமாற்றங்களை மறந்து விட வேண்டும். வாழ்க்கை என்றால் வாழ்வதே. அவ்வாறு வாழ்வதற்குத் தானும்  தயாராகி கிருஷ்ணமூர்த்தியையும் தயார் செய்கிறாள்.

சக்கரவர்த்தியும் மன வளர்ச்சிக்குத் தடையாக உள்ள மூட நம்பிக்கையோடு கூடிய காதல்களையும், முட்டாள்தனங்களையும் பற்றி அனுபவத்தில் அறிந்து கொள்கிறான். தனக்கு இனி வாழ்வே இல்லை என்ற நிலையை சென்றடைகிறான். தன் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்கான தேடலிலும் கவலையிலும் ஒரு டாக்டராக மருத்துவ சேவைகளை அளிக்க வேண்டிய மனிதனாக தன்னைத்தான் அடையாளம் காண்கிறான். திருப்திகரமான தொழில் வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்கிறான். தன்னுடைய குறைகளோடு கூட தான் யார் என்பதை அறிந்த மனிதன் சக்கரவர்த்தி. எதையும் மூடி மறைக்க வேண்டும் என்று எண்ணாத இயல்பு அவனுடையது. 

கல்யாணி கிருஷ்ணமூர்த்தியின் உதவியை நிராகரித்து படிப்பை நிறுத்துவதற்குத்  துணிந்தது பற்றிக் கூறுகையில் ஒரு விதவையின் பண உதவியோடு படித்து,   அந்த படிப்புக்காக பலப்பல ரோஷங்களை அடகு வைத்து காலம் கழித்த தான், கல்யாணியை விடத் தகுதியில் துளிக்கூட உயர்ந்தவன் அல்ல என்று அவளிடம் கூறுவதால், அவன் உள்ளம் சிறந்தது என்பது புரிகிறது. அந்த நற்குணத்தின் காரணமாகவே மனைவி மீது அதிகாரம் செலுத்துவதற்கு ஆணாக இந்த சமுதாயம்  தனக்கு அளித்த அதிகாரங்களைத் தானாக முன்வந்து களைந்து விடுவதற்குத் தயாராகிறான்.

அனுபவங்களால் பட்டை தீட்டபட்டவன் சக்கரவர்த்தி. கஷ்டத்திலும் தைரியமாக இருப்பதோடு கூட உறுதியாகவும் இருப்பதும், தான் செய்ய வேண்டியவற்றை செய்துவிட்டு, பலன் எதுவாக இருந்தாலும் சரி ஏற்றுக் கொள்வேன் என்ற நம்பிக்கையோடு நடந்து கொள்வதுமே சரியான வாழ்க்கை முறை என்று  நினைக்கிறான். 

கல்யாணியிடம் ஈர்ப்பு ஏற்படுவதற்கு அவளுடைய நடத்தையில் அந்த உறுதி இருப்பதை அவன் கவனித்ததுதான் காரணம். துயரத்தைக் காதலிப்பவர்களைக் கண்டால் அவனுக்குப் பிடிப்பதில்லை. 

கல்யாணி துயரத்தை காதலிக்கிறாளோ என்ற சந்தேகம் வந்த உடனேயே சினிமாவுக்கு போகலாமா என்று ஒரு பரீட்சை வைக்கிறான். அவள் அந்த பரீட்சையில் தேர்வாகி அவனுக்கு அருகாமையில் செல்கிறாள். “உன் துயரத்தை உள்ளே மறைத்துக் கொண்டு உன் மகிழ்ச்சியை அனைவருக்கும் பகிர்ந்து கொடு” என்ற சீனப் பழமொழி அவனுக்குப் பிடிக்கும் என்று கூறுகிறார் நாவலாசிரியை. அது சக்கரவர்த்தியின் வாழ்க்கை அணுகுமுறையைத் தெளிவாக காட்டும் சொற்கள். எதற்காக வாழ வேண்டுமென்பது தெரிந்தால் எவ்வாறு வாழ வேண்டுமென்பதை  நிர்ணயித்துக் கொள்ளலாம் என்பது அவனுடைய புரிதல். 

ஏதோ ஒரு நம்பிக்கை, விசுவாசம் இல்லாவிட்டால் மனிதனால் வாழ முடியாது என்பது அவனுடைய அபிப்ராயம். எதன் மீது நம்பிக்கை வைத்தாலும் இறுதியில் அது சிதறிப்போகலாம். அதன் காரணமாக காயமடையலாம். ஆனாலும் வேறு வழியில்லை. வேறு ஏதோ ஒரு நம்பிக்கையைத் தேடிக்கொண்டு அதன்  ஆதரவோடு வாழ வேண்டியதுதான். மனிதன் வாழ்வதற்கு வேறு ஒரு வழியே இல்லை என்று டாக்டர் சக்கரவர்த்தி எண்ணுகிறான். கல்யாணியைப் பற்றி யோசிக்கையில் வாழ்க்கை குறித்து அவன் சிந்தித்த கருத்து இது. இந்தச் சிந்தனை அவன் தன் அனுபவத்திலிருந்து வடிவமைத்துக் கொண்டதே.  

தந்தையின் பணத்தாசை, வளர்ப்புத் தாயின் முட்டாள்தனம், ஐந்தாண்டுகள் குடித்தனம் செய்து மரணம் அடைந்த மனைவி வாழ்ந்த காலம் வரை அவன் மீது காட்டிய வெறுப்பு, அவனுக்கு வாழ்க்கை என்றாலே ஒவ்வாமையை ஏற்படுத்தின. 

ஆனாலும் அந்த ஞாபகங்களை கெட்ட கனவாக எண்ணி மருத்துவராக புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கிறான். 

வேறு சபலங்கள் இல்லாத சினேகத்துக்கானது அவனுடைய தேடல். கல்யாணியிடம் அப்படிப்பட்ட சினேகம் கிடைத்தது. அதனை நிலைத்த உறவாக செய்து கொள்ள எண்ணிய போது, கணவனாக அவனுக்கு ஒரு புதிய பதவித்தகுதி அளிப்பது பற்றி அவள் அஞ்சுகிறாள். அந்த அச்சம் வாக்குறுதி அளிப்பதால் தீராது என்று அவனுக்குத் தெரியும். சில நாட்களில் போய்விடும் என்ற தைரியம் அவனுக்கு இருந்தது. அந்த தைரியத்தில்தான் அவளைத் திருமணத்திற்கு சம்மதிக்க செய்கிறான். சில நாட்களில் போய்விடும் என்றால் அதற்குத் தக்க வகையில் அவன் தன் நடத்தையில் காட்டும் நேர்மையை பொறுத்தும், சினேகம் மற்றும் கௌரவத்தைப் பொறுத்தும் அவளுக்கு அந்த பயம் போய்விடும் என்று அவன் நினைக்கிறான். அதாவது வாழ்க்கை என்பது வாக்குறுதி அளிப்பது அல்ல. வாழ்ந்து காட்டுவது என்று நம்பினான் சக்ரவர்த்தி. 

வாழ்க்கை சுக மயமாகவோ திருப்திகரமாகவோ இல்லை என்று தெரிந்தும்  வாழ்க்கையை அதைவிடப் பிரகாசமாக மாற்றி வடிவமைத்துக்கொள்ளும் சாகசம் இல்லாததால் இருந்த நிலையிலேயே சமரசம் ஆகிறான் பிரகாசம். ஜீவிதம் பற்றியும் மனிதர்களைப் புரிந்து கொள்வது பற்றியும் யோசித்த அளவுக்கு  திருப்தியாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதற்கு அவன்  முயற்சிக்கவில்லை. 

வாழ்க்கையில் ஆசைகளும் துயரங்களும் ஓயாமல் அவளைப் பின்தொடர்ந்தாலும்  யோசித்துக் கொண்டும் கவலைபட்டுக் கொண்டும் இருந்தாலும், தன் வாழ்க்கைக்கு வேண்டிய சுதந்திரத்தையும் எந்த சபலங்களும் இல்லாத சினேகத்தையும் புரிந்து கொண்டு அவற்றை அடைவதற்கு சுய நிர்ணயம் எடுத்து,   துயரம், ஏமாற்றம் என்று எண்ணிய வாழ்க்கையை சந்தோஷத்தால் நிரப்பி  நிலைநிற்பதற்கு முயற்சி செய்கிறாள் கல்யாணி.

வாழ்க்கை என்றால் வாழ்வது என்றும், தேவை என்று எண்ணியவை கிடைக்காத போது அதை நினைத்து அழுது கொண்டு உட்காராமல் கிடைத்ததைப் பெறுவதற்குத் தேவையான செயலூக்கத்தோடும் கலையுணர்வோடும்  மோகமற்று வாழ்வதையே தன் வழிமுறையாக ஏற்படுத்திக் கொள்கிறாள் இந்திரா.

வாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் அன்பு செலுத்துவதைத் தவிர வேறு எதையும்  அறியாத கிருஷ்ணமூர்த்தி வாழ்க்கை என்றால் இவ்வாறு வாழ வேண்டும் என்ற சூத்திரம் எதுவும் தனக்குத்தானே விதித்துக் கொள்ளாமலே அப்போதைக்கு அப்போது எதிர்ப்படும் அனுபவங்களுக்கு பதில் வினையாற்றி வாழ்க்கை என்றால் நிலைநிற்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும் மனிதர்கள் செய்யும் நிரந்தர பிரயத்தனம் என்று கல்யாணி மற்றும் வசுந்தராவின் நட்பின் மூலம் உணர்ந்து கொள்கிறான். அப்படிப்பட்ட முயற்சியையே வாழ்க்கை வழிமுறையாகக் கொண்ட இந்திராவுடன் அன்பு செலுத்திப் பாராட்டுகிறான்.  

வாழ்க்கையை ஆசை ஆனந்தம் துயரம் ஆகியவற்றின் ஒரு கலவையாக ஏற்று,   ஆசையை ஆதாரமாகக் கொண்டு இலட்சியங்களைச் சாதிப்பதற்குத் தேவையான நடத்தையை கூர்மையாக்கிக் கொள்வதே வாழ்க்கை முறை என்று நடந்து  கொண்டான் சக்கரவர்த்தி.

அவரவர் எல்லையில் அவரவர் போராடியபடி வாழ்பவர்களுடையதே எதிர்காலம்.    போராட்டத்தை நிறுத்தி விட்ட இளைஞர்கள் பிறப்பிலேயே முதியவர்கள். தாத்தாவின் தந்தையின் எண்ணங்களுக்கு வாரிசானவர்களுடையது கடந்த காலமே.

வாழ்க்கையை எவ்வாறு நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்ற விவேகத்தைத்  தூண்டும் நாவல் காலாதீத வ்யக்துலு. 1963 ல் வெளிவந்த “சதுவுகுன்ன அம்மாயிலு” (படித்த பெண்கள்) சினிமாவுக்கு மூலக்கதை காலாதீத வ்யக்துலு நாவல் என்று கூறுவார்கள். ஆனால் நாவலுக்கும் சினிமாவுக்கும் எங்கும் தொடர்பு தென்படாது. 

Series Navigation<< காலாதீத வ்யக்துலு என்ற நாவல் – டாக்டர். பி. ஸ்ரீதேவி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.