ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில்

இந்த நீண்ட கதை – வடிவக் கவிதை மன்னன் புரூரவஸ் – தேவமங்கை ஊர்வசி இவர்களின் கதையைக் களனாகக்கொண்டு ஸ்ரீ அரவிந்தரால் அவர் பரோடாவில் இருந்த காலகட்டத்தில் (1888- 1892) இயற்றப்பட்டது. இதே கதை வெகுநாட்கள் முன்பு காளிதாசனால் (காலம் – கி. மு. 2ம் நூற்றாண்டு முதல் கி. பி. 4ம் நூற்றாண்டிற்குள்) “விக்ரமோர்வசீயம் (அ) வீரக் கதாநாயகனும் அழகான தேவதையும்,” எனும் பெயரில் ஒரு சிரஞ்சீவிக் கவிதையாக வடிக்கப்பட்டது; அதுவும் ஸ்ரீ அரவிந்தரால் மொழியாக்கம் செய்யப்பட்டது.

இக்கவிதைத்துண்டு என்ன கூறுகிறது எனப் பார்க்கும் முன்பு இக்கதை எவ்வாறெல்லாம் யார் யாரால் எந்தச் சூழ்நிலைகளில் கூறப்பட்டுள்ளது எனத் தெரிந்து கொள்வது இன்றியமையாததாகிறது.

புரூரவஸ் எனும் அரசன் ஹிந்து இலக்கியத்தில் சந்திர வம்சத்தின் முதல் அரசனாகக் கூறப்படுகிறான். அவனைச் சூரியனுடனும் உஷை எனப்படும் புலர்காலையுடனும் சம்பந்தம் கொண்டவனாக வேதங்கள் கூறுகின்றன. அவன் இளை என்பவளின் மகன் என ரிக்வேதம் கூறுகிறது. இதன் விரிவான விளக்கம் சதபாத பிராமண எனும் நூலில் காணக்கிடைக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியளர்கள். இளையே அவனுடைய தாயும் தந்தையும் என மகாபாரதம் கூறுகின்றது. விஷ்ணுபுராணப்படி அவன் தந்தை புதன் (நவகிரகங்களுள் ஒருவன்); அவனே புரூரவஸின் மூதாதை, அவனிடமிருந்தே யாதவர்கள், கௌரவர்கள், பாண்டவர்கள் அனைவரும் தோன்றினர் எனவும் மகாபாரதம் கூறுகிறது.

திரேதாயுகத்தைச் சார்ந்த அரசன் புரூரவஸ், புதனுக்கும் இளைக்கும் பிறந்தவன். புதன் சந்திரனின் மகனானதால் புரூரவஸ் சந்திர வம்சத்து முதல் அரசனாகக் கொள்ளப்படுகிறான். புரு எனும் மலையில் அவன் பிறந்ததனால் புரூரவஸ் என அழைக்கப்படுகிறான்.

காளிதாசன் இதனை ஒரு அழகான காதல்கதையாக வடித்தான். அதற்காகச் சில மாற்றங்கள் செய்தான். அவை பெரும்பாலும் விஷ்ணு புராணக் கதையைத் தழுவியே அமைந்துள்ளன. பல புராணங்களையும் படித்துக் குழப்பமடையாமல் இக்காதல் காவியத்தின் கருவை உள்ளது உள்ளபடியே பார்க்கலாமே!

ஊர்வசி ஒரு அப்சர மாது (தேவலோக மங்கை). மிகவும் அழகுவாய்ந்த அவள் இந்திரனின் தேவலோக சபையில் பெருமைக்குரிய உயர்ந்த இடம் பெற்றவளாவாள். புரூரவஸ், சந்திரன் – தாரையின் மகனான புதன் – இளை இவர்களின் மகன். சந்திர வம்சத்து முதல் அரசன்.

தேவலோகத்து வாழ்க்கை ஊர்வசிக்கு அலுத்துப் போகிறது. தன் தோழிகளுடன் அவ்வப்போது பூமிக்கு வந்து புல்தரைகளில் கால்படும்படியும் இளம் தென்றலை அனுபவித்தவண்ணமும் உலாவுவது அவள் வழக்கம். புரூரவஸ் தேவலோக வாழ்க்கையைக் கண்டு பொறாமைப்படுபவன். அடிக்கடி இந்திரனின் தேவலோகத்துக்குத் தன் தேரில் சென்று அதிவேகமாகத் தேரை ஓட்டிக் களிப்பான். அப்படிப்பட்ட ஒரு சமயத்தில்தான் இருவரும் சந்திக்கின்றனர்.

ஊர்வசி ஒரு அதிகாலைப்பொழுதில் பூமியிலிருந்து தேவலோகத்திற்குத் திரும்பும்போது, ஒரு ராட்சஸன் அவளைக் கவர்ந்து செல்கிறான். இதனைக்கண்ட புரூரவஸ் அவனைத் துரத்திச் சண்டையிட்டு ஊர்வசியை விடுவிக்கிறான். தன்னருகே படைப்பின் மிகச்சிறந்த அழகியைக் கண்ட புரூரவஸ் அவளிடம் காதல் கொள்கிறான். ஒரு மானிடனின் ஸ்பரிசத்தை முதல்முறையாக உணர்ந்த அவளும் அவன்மீது காதல் கொள்கிறாள். இருவரும் ஒருவர் மனதை மற்றவர் அறிய இயலாமையில் தாபத்திலேயே உருகுகின்றனர்.

தேவலோகத்தில் நடைபெற்ற ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் ஊர்வசி ‘லக்ஷ்மி’யின் வேடத்தை ஏற்று நடனமாடுகிறாள். அவளுடைய எண்ணமெல்லாம் புரூரவஸைப் பற்றியே இருந்தது. அதனால் ‘புருஷோத்தமா’ (விஷ்ணு) எனக் கூறுவதற்குப் பதிலாக புரூரவஸ் என அழைக்கிறாள். இதனால் அவளுடைய நாட்டிய குருவான பரதமுனிவர் சினமடைந்து அவளைச் சபிக்கிறார். “நீ யாரை நினைத்துக் கொண்டிருக்கிறாயோ, அவனுடன் வாழக் கடவாய். உனக்கு ஒரு மகன் பிறப்பான். தந்தையும் மகனும் சந்தித்துக் கொள்ளும்போது நீ அவர்களிருவரையும் விட்டு விலகி தேவலோகத்திற்குத் திரும்ப வேண்டும்.”

இந்த சாபம் அவளுக்கு சாதகமாக அமைந்தது. அவள் குழந்தைகளைப் பற்றி எண்ணவேயில்லை. தனது தோழியை பூவுலகிற்கு அனுப்பி புரூரவஸை சந்தித்து வரச் சொன்னாள். அவனும் கந்தமாதன வனத்தில் அவளையே எண்ணியவாறு உருகிக் கொண்டிருந்தான். ஊர்வசி தேவலோகத்தை விட்டு வந்து புரூரவஸை அடைந்து மகிழ்கிறாள்.

கதை முடியவில்லை; இனிமேல்தான் பல திருப்பங்களுடன் இன்னும் தொடர்கிறது. சிறிது இடைவெளியின் பிறகு நாமும் தொடரலாம்.

~~~~~~~~~~~~~~~~~~

காளிதாசனின் நாடகத்தை அப்படியே மொழியாக்கம் செய்துள்ளார் ஸ்ரீ அரவிந்தர். பின்பு இதனை ‘ஊர்வசி’ எனும் பெயரில் ஒரு மிக நீண்ட கவிதையாக நான்கு காண்டங்களில் வடித்துள்ளார். அதற்கும் முன்பு ‘ஊர்வசி‘ எனும் பெயர்கொண்ட ஒரு சிறு கவிதைத் துண்டாகவும் படைத்துள்ளார்.

இக்கவிதைகளில் நாம் என்ன காண்கிறோம், எதனை உய்த்துணருகிறோம் என்பதே இக்கட்டுரையின் நோக்கம் எனலாமா?

முதலில் ஸ்ரீ அரவிந்தரின் சிறு கவிதைத்துண்டைக் காண்போம். புரூரவஸின் பெயர் தொடக்கத்தில் வருவதன்றி கதைக்குச் சம்பந்தமான ஒரு (நாடக) நிகழ்வும் இதில் காணவில்லை. ஆழ்ந்து படித்துப் பார்த்தால் இதனை புரூரவஸ் – ஊர்வசி கதையில் வரும் சில காட்சிகளின் விரிவான பகுதியாகக் கொள்ளலாம்.

புரூரவஸ் தனது தேரை விரைந்து ஓட்டி தேவலோகத்தில் சஞ்சரிக்கும் நாட்கள்!…
புரூரவஸ் ஊர்வசியை அரக்கனிடமிருந்து மீட்கும் காட்சி…
அவன் ஊர்வசியை நினைந்து உருகும் தாபம் நிறைந்த நாட்கள்…
இன்னும் இந்த நாடகத்தின் பலமுகங்களை இக்கவிதை நமக்குக் காட்டுகிறது.
இவையே என் எண்ண ஓட்டங்கள்!

ஊர்வசிசிறு கவிதைத் துண்டு

ஆங்கில மூலம்: ஸ்ரீ அரவிந்தர்

தமிழாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்

கடவுள்களுடன் நடத்தப்பட்ட உரையாடலின் பின்பு புரூரவஸ்

உயர்வான, மாயமான, இயற்கையின் காணப்படாத ஒரு சிகரத்தின்மீது,

ஆத்மாக்களின் கழிகளின் இடையே தங்கள் நெருப்பை வீசி எறிந்ததும்

தீச்சுடர்களால் அலைக்கழிக்கப்பட்டதுமான கடல்களின் சந்தடியைக் கடந்தான்.

பூமிக்கும் சுவர்க்கத்துக்கும் இடையே தனியாக இருக்கும் ஒரு பிரகாசமான

நட்சத்திரத்தைப் போல,

அவன் எண்ணிக்கையற்ற, எல்லையற்ற குறுக்குவழிகளை அடைந்தான்.

ஒரு ஆத்மா தனது பிரத்யட்சமான திரும்பப் பிறக்கும் வாழ்வினை,

புராதனமானதொரு ஸ்வயத்தின் ஏராளமான பரப்பிலிருந்து,

மங்கலான இன்றியமையாத ஏகாந்தத்தில் (தனிமையில்)

நிச்சயமற்ற சூரியன்களின் மினுக்கொளியினால் வழிநடத்தப்பட்டும், பயணப்பட்டும்

இரவின் பிரம்மாண்டமான வீட்டை (அடைய முயல்வதுபோல), அதன் விளிம்பை

அடைய அவன் முயற்சித்தான்.

நுட்பமான ஒரு வெளிச்சப்பிரதேசம் அவன்முன்பு கிடந்தது.

ஞானியின் மூடிகளற்ற எண்ணங்களின் குறுக்கே ஒளிரும் வெளிச்சத்தை

நம்முடைய (தேக) உறுப்புகளையுடைய (ஐம்)புலன்கள் மறைக்கின்றன,

பூமியின் கருமையான கனவுக் கருவினால் கவரப்பட்டு

உறக்கமற்ற, விழித்திருக்கும் கண் காணும் காட்சியால்

அவன் இந்த மாயவடிவான கரைகளில் தங்கவில்லை.

ஆனால் முடிவற்ற இரவின் புதியதொரு ஆபத்தான அனுபவத்தைத் தேடி

மேலும் அந்த தெய்வீகமான ஆழம் காணவியலாத குழிக்குள் இறங்கலானான்,

ஆச்சரியமான செயல்பாடுகளுக்கு அப்பால் அத்துமீறி

மனித வெளிக்குள்ளும் காலத்திற்குள்ளும் திடும்பிரவேசமாக

தற்காலிகமாக மங்கிய, அறிவில்லாத கடவுள்களின் உழைப்பினால்

கடினமான உற்பத்தியில்

வாய்ப்பும் மாற்றமும் உடைய சிரஞ்சீவித்தன்மை கொண்ட

ஒரு பிரபஞ்சம் உருவாயிற்று.

விரோதிகளான சமதளங்களின் இடையிலான ஆழ்பிளவை இணைக்கும் பாலமாக

அவன் சுவர்க்கத்தின் வளையங்கள் விரைந்து முன்னேறக் கண்டான்.

சூரியன் மேல் சூரியன், சூன்யப்பிரதேசத்தில் கடவுளின் காப்பாளர்கள்;

வாழ்க்கையின் அளவிடமுடியாத ஒளிமயமான தங்குமிடம்

யுக விருப்பத்தின் கட்டளையின்பேரில் கொழுந்து விட்டெரிவது.

ஆனால் அபாயம் நிறைந்த பறக்கும் சர்ப்பத்தின் தொல்லையுமுண்டு

காவல்புரியும் கிழட்டுக் குருட்டு அறியாமை நீண்டு கிடந்தது

ஆவலோடுள்ள ஒரு ஊமையான சர்ப்பத்தின் எல்லையற்ற தன்மையோடு

அவளுடைய கருத்த நிழல் (இயற்கையாக) ஒளிர்பவர்களை முற்றுகையிட்டது.

நிசப்தமும் மரணமும் ஊடுருவி வரும் நெருப்பை எதிர்த்தன.

நமது வேலியை உடைத்துக்கொண்டு அவன் வருமுன்பாகவே

அவன்மீது மாசுபடிந்த உலகங்களினின்றும் ஒரு முணுமுணுப்பான பேச்சு படிந்தது.

ஸ்தூல உலகின் ஒரு தெளிவற்ற தொடுகையால் வெறுப்புற்ற

தெய்வீக உலகங்களின் வடிவங்கள்

அவன் விட்டுச்சென்றவை, எண்ணங்களுக்கு முன்பாக முழுகின.

இதயத்தின் ஊமைக் குகைகளில் அவை தங்கள் தொடர்கூட்டத்தை நடத்தின.

பெருமை, கருணா கடாட்சம், பிரகாசம், புனிதமான வாழ்வு (ஆகியன)

ஒரு எரியும் கதவின்பின் மறைந்துபோயின:

அந்த கம்பீரமும், அந்தப் பெருவிருப்பமும், அந்த அமைதியும்

எண்ணத்தின் மூடியின்கீழ் பெருந்தன்மையாக நின்றன.

அவனுடைய மனமானது ஒரு ஞாபகசக்தியின் துடிப்பானது.

காட்சி, கேள்வி ஆகியன குறைவான அளவிற்கு மாற்றங்கொண்டன;

சிறு காட்சிகள் பெரிதாக வளர்ந்தன, அப்பெரியது சிறிதாகக் குறைந்தது.

இருப்பினும் ஒரு பெரிய தன்மை உள்ளடங்கிய பொருட்களில் இருந்தது

அவன் அந்த உருவமற்ற புலன்களை (அல்லது கருத்துக்கள் எனலாமா?) நினைவுபடுத்திக் கொண்டான்.

ஆழ்ந்த, அழகான வாழ்க்கையைக் கொண்ட, பெருமை கோலோச்சும் ராஜ்யங்கள்

தனது பூரணமான விருப்பப்படி எதையும் செய்ய சுதந்திரம்கொண்ட அன்புக்கும் (காதல்)

கனவுகளுக்கும் உடனடியாகக் கொடுக்கப்படும் அதிகாரம்.

நமது சிறு சூரிய மண்டலத்தின் முன்பாக

ராட்சஸ விண்மீன்களினூடே தற்செயலாகத் தொங்கிக்கொண்டிருக்கும்

ஒருசில வெளிறிய கோளங்களின் சுற்றுப்பாதையில் சிறையிடப்பட்டவன்

நமது விண்வெளியின் நட்சத்திரக் கூட்டங்களை பகிரங்கமாக அவமரியாதை செய்யும் (உரிமை பெற்றதும்)

காலத்தின் குவிகண்ணாடியை எப்போதும் குறுக்கிவிடுவதுமான

விருப்பத்தின் ஒரு சிறு அசைவை அவன் சந்தித்தான்.

பூமி அவளுடைய உயிர்வாழினங்களிடையே அவனை வரவேற்றாள்.

அவளுடைய ஆழ்ந்த உறக்கநிலைச் சலனங்கள் நெருக்கமாக ஊமையாக,

அவளுடைய சிறு விளக்குகளைவிட புத்திசாலித்தனமான இருண்ட பொழுதுகள்

அவனுடைய இளமையான தெய்வத்தன்மையைத் திரும்ப அடக்குகின்றன.

~~~~~~~~~~~~~

ஆழ்ந்த உட்பொருள்: புரூரவா என்றால் “மிகப்பெரிய சப்தத்தை உண்டாக்குபவன்” என்று பொருள். ஐளா, இளையின் மகன் எனும் பெயரும் அவனுடையதே! இளை என்றால் ப்ருத்வி (பூமி). மேலும் சில ஆய்வாளர்கள் புரூரவா என்றால் ‘மேகம்’ எனப் பொருள் கொள்கின்றனர். பூமியின் தரையிலிருந்து எழும் நீராவி மேகங்களாக மாறுவதனாலும் அவை இடிமுழக்கங்களை உண்டுபண்ணுவதனாலும் இந்தப் பொருள் என்கின்றனர். ஊர்வசி: உரு என்பது விரிந்து பரந்து செல்வது எனப் பொருள்படும். பிரபஞ்சத்தின் தெய்வீகத்தன்மையுள்ள இடங்களில் செல்லும் நீர் எனவும் பொருள் கொள்ளலாம்.

ரிக்வேத மந்திரங்களின்படி ஊர்வசி – புரூரவஸ் உறவுக்குப் பொருள் கொள்ளுவது இன்னுமே ஆச்சரியமான உண்மைகளை உணர்த்துகிறது. புரூரவ எனும் சொல் நீர்நிறைந்த மேகத்தைக் குறிக்கும். ஊர்வசி எனும் சொல் ‘வாயுமண்டலத்தில் எங்கும் நிறைந்துள்ள ஒன்று’ எனப்படும். இவை இயற்கை நிகழ்வுகளைக் கவிதைவடிவில் கதைகளாகக் கூறும் சொற்களாம். இவற்றைச் சரித்திர நிகழ்வாகக் கொள்ளக்கூடாது.

மேகங்கள் ஒன்றோடொன்று உராயும்போது அங்கு மின்னல் ஒரு சில கணங்களுக்கே உண்டாகிப் பளிச்சிட்டு உடனே மறைந்துவிடும். ‘ஆயு’ என்பவன் புரூரவா – ஊர்வசியின் மகனாவான். ஆயு என்றால் அன்னம், (அரிசி, சாதம், உணவு). மேகங்களும் மின்னலும் இணையும்போது, புரூரவா- ஊர்வசி இணைந்து, மழை பொழிகிறது; அதுவே உணவின் (ஆயுவின்) உற்பத்திக்கு வழிவகுக்கின்றது.

இந்தக் கதை பல வழிகளில் பல உட்பொருள்களை விளக்குகிறது. காதலனின் அன்பைப் புறக்கணிக்கும் காதலியைக் காட்டும் காதல்கதையாக இருப்பினும், சூரியன் (புரூரவஸ்) அதிகாலை (உஷஸ்) இரண்டுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது. கந்தர்வன் அல்லது அப்சரஸாகப் பிறக்கச் செய்யவேண்டும் மந்திர வடிவான சடங்குகளைக் குறிப்பிடுகிறது.

~~~~~~~~~~~~~~~

ஊர்வசிக்கும் புரூரவஸுக்கும் இடையேயான உரையாடலை ரிக்வேதத்தின் பதிவில் காணலாம் எனப்படுகின்றது. நான்காண்டுகள் புரூரவஸுடன் காதல் வாழ்க்கை வாழ்ந்த ஊர்வசி அவன் (வேண்டுமென்றே, நினைவறிந்து) இழைக்காத ஒரு குற்றத்திற்காக அவனைப் பிரிந்து செல்கிறாள்; அவனுடன் திரும்ப வந்து இருப்பதற்கான சில நிபந்தனைகளையும் கூறுகிறாள்.

விரைவில் அவற்றைப் பற்றிக் காணலாம்.


References:

1. Vd. Ramgopal Shastri and Prof. Sadhuram (1972) Ved ke Akhyanoka yatarth swaroop. Delhi: Arya Samaj.

2. Vettam, Mani. (1975). Puranic encyclopaedia: A comprehensive dictionary with special reference to the epic and Puranic literature. <https://archive.org/details/puranicencyclopa00maniuoft&gt; Delhi:Motilal Banasidass. (Pages 620-621 and 811-813)

3. Shatapatha Brahmana (Kanda 3 Adhyaya 4)

4. Nighantu (Adhyaya 2)

Series Navigation<< ஸ்ரீ அரவிந்தரின் நெருப்புப் பறவை – ஒரு பார்வை‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’ >>

2 Replies to “ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில்”

  1. உங்கள் மொழிபெயர்ப்பு அசரவைக்கிறது. ஏனெனில் அரவிந்தரின் ஆங்கிலம் அவ்வளவு கடினமாயும், பல்பொருள்காட்டும் ஒருசொல் பயன்பாடுகள் அதிகமுள்ளதாகவும் இருக்கும். ஆன்மிகவாதிகளே அரண்டுபோவர் என்று என் குருநாதர் கூறுவார். இவ்வளவு எளிமையாக மொழிபெயர்க்கும் ஆற்றல் உங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சிக்குரியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.