உள்ளும் வெளியும் பாகம் -2

தமிழாக்கம்: மைத்ரேயன்

முந்தைய பகுதி

முதலிலெல்லாம் கேயிற்குப் பிடித்தவையே வானொலியில் ஒலித்தன, வில்லியும் டானும் எம்மி லூவும், ஆனால் அப்போது அங்கே நான்கைந்து பாடல்கள் வரிசையாக வந்தன, எல்லாம் உடம்புகளைப் பற்றியவை, உன் கதகதப்பான, மென்மையான உடல், என்றன அவை, உடல் என்ற சொல்லுக்கு தடிப்பான ஒலி இருந்தது, பிறகு ‘காதல்’, வேறென்னவிருக்க முடியும், அதே போன்ற தொண்டையின் ஆழத்திலிருந்து வரும் ஒலிப்போடு, ‘ஐ லஹ்ஹ்வ் யெர் பஹ்ர்டி’, அதனால் கடைசியில் அவள் அதை அணைத்தாள். லவ் எனும்போது அவர்கள் பாலுறவைச் சொன்னார்கள் என்றால் சரிதான், போகட்டும், ஆனால் காதல் என்றால் என்ன என்று யாருக்குமே ஏதும் தெரிவதில்லை. ஆனால் நாம் காதலிக்கும் ஒன்றுக்கான சொல், ஒரு சவத்தை வருணிக்கும் அதே சொல்லாக இருக்கையில், நாம் காதலிப்பது ஒரு சவம் என்பது போல ஒலிக்கிறது. அது உயிரோடு இருக்கிறதா, இல்லையா என்பது ஒரு பொருட்டில்லை போலிருக்கிறது. அவள் சமையலறை மேடையை சுத்தமாகத் துடைத்தாள், சமையலறைத் துப்புரவுத் தொட்டியில் கழிவுகளை அரைத்துக் கூழாக்கும் எந்திரத்தை ஓட்டி நிறுத்தினாள், துடைக்க உதவிய துணிகளை அலசினாள், சுற்றிலும் ஒரு முறை பார்வையிட்டாள், ஜாக் காலையுணவு மேஜையில் விட்டுச் சென்ற செய்தித்தாளின் பகுதிகளைப் பொறுக்கி எடுத்தாள், அவற்றை முன்னறையில் காஃபி மேஜையில் வைத்தாள், காலியான அறைக்குள் போனாள். அது விருந்தாளியறை. 

அதன் ஜன்னல்கள் கிழக்குப் பார்க்க இருந்தன, அவற்றின் வழியே முழு சூரிய ஒளி வீசியது, அதில் குளிர் காலத்தின் உப்பான, கோடுகளான அழுக்கு கண்ணாடியில் தெரிந்தது. என்னால் ஜன்னல்களைக் கழுவ முடியும், கே நினைத்தாள், ஆனால் உடனே அந்த தற்காலிக விடுதலையை ஒத்தி வைத்தாள், அதை ஒரு பரிசாக மாற்றிக் கொண்டாள். பிறகு. அவள் அந்த ஜன்னல்களைப் பிறகு கழுவுவாள். 

அந்த ஒளியான சிறு அறையில் எதுவும் அப்படி அழுக்காகவோ, அல்லது அதிகத் தூசியாகவோ, தாறுமாறாகவோ இருக்கவில்லை. ஆனால் பதினெட்டு மாதங்கள் ஆகி இருந்தன. வீட்டின் மற்றப் பகுதிகளைச் சுத்தம் செய்தது போல இந்த அறையையும் சுத்தம் செய்ய நேரம் வந்து விட்டது. குறைந்தது இரண்டு மாதங்களாகி விட்டன. வீட்டில் அவள் தூசி தட்டி. கிருஸ்த்மஸின்போதோ, கிருஸ்த்மஸுக்கு முன்போ. நான்கு மாதங்களாகி இருக்கும். நேரம் வந்து விட்டது. எல்லாவற்றுக்கும் காலமாறுதல்கள் நடக்கின்றன. ஜாக்கின் மருமாள் ஈஸ்டருக்கு வந்தாளானால், இந்த அறையை அவளுக்குக் கொடுக்கலாம், விருந்தாளி அறையை. அது அவளுடைய அறையாக இருக்கும். காரெனின் அறை. அப்படித்தான் இருக்க வேண்டும்; எல்லாரும் அறைகளில்தான் வாழ்கிறார்கள், அவற்றை விட்டுப் போகிறார்கள், ஆனால் அறைகள் அங்கேயேதான் இருக்கின்றன. அவை சாராவின் அறை, காரெனின் அறை என்றெல்லாம் அழைக்கப்படும், ஆனால் அவை எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. அது அன்பைச் சார்ந்தது. அதனால்தான் காதல் என்ன என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தாற்போல, ஏதோ காதல் என்பது சொற்களால் அறியப்படும் ஒன்று என்பது போல, அவர்கள் பாடியபோது அவளை அது பாதித்தது.

ஜாக்கிற்கு அது தெரிந்திருந்தது. அவர் ‘ஐ லவ் யூ’ என்று அவசியம் என்று அவர் நினைத்த நேரத்தைத் தவிர வேறெப்போதும் சொன்னதே இல்லை, அவர் அப்படிச் சொன்னால் அது இருவருக்குமே சங்கடமாக இருந்தது. வாலண்டைன் தினத்தன்று அவருடைய இரவுணவுத் தட்டுக்குக் கீழே அவள் ஒரு வாலண்டைனை வைப்பாள். சிவப்புக் காகித இதயங்கள், வெள்ளைக் காகித பூத்தையல், மோகனச் சிறுவரின் கார்ட்டூன்கள், அதெல்லாம்தான் “ஐ லவ் யூ.” அதெல்லாம் சரிதான். ஆனால் வார்த்தைகளோடு சிறிதும் சம்பந்தமில்லாததும், இருண்டதுமான ஏதோ ஒன்று, அது இந்த அறையில் இருந்தது, இப்போதும் இருக்கிறது – அது அவளுக்குள் இருந்த இந்த அறை, அவள் இருந்த இந்த அறை, அவளுடைய உடலின் பாரம், மரணம் இல்லாத நிலையில் ஜீவனோடு இருந்த அவளுடைய உடம்பு. அதைப் பற்றித்தான் அவர்கள் பாடவில்லை. 

படுக்கையைக் காற்றாட விட வேண்டும். குளிர் காலம் பூராவும் அது அடைந்தே கிடந்திருக்கிறது. அந்த அலமாரிகளுக்கு, கெட்ட இடத்திற்குத் தன் முதுகைக் காட்டித் திரும்பி நின்றாள், விரிப்பையும், போர்வைகளையும் படுக்கையிலிருந்து ஒரே வீச்சில் இழுத்துக் கழற்றிப் போட்டாள். வேறு போர்வைகள், அவள் மற்ற போர்வைகளை யாருக்கோ கொடுத்து விட்டிருந்தாள். அந்த விரிப்புகளை இழுத்து ஒரு மூட்டையாகக் கட்டினாள், மெத்தையடி மென் திண்டைக் கழற்றினாள், கட்டிலைச் சிறிது நகர்த்தி அதன் மேல் சூரிய ஒளி குறுக்காக விழும்படி வைத்தாள். விரிப்புகளை பின்புறத் தாழ்வாரத்துக்கு எடுத்துப் போனாள், அங்கே கம்பியில் மெத்தையடித் திண்டை காற்றாடத் தொங்க விட்டாள். அறைக்குள் அவள் திரும்பியபோது, சுத்தம் செய்யப்படும் விடுதியின் அறைபோல, பிய்த்துதறப்பட்டு, அடையாளம் தெரியாத இடமாக அது இருந்தது. அவள் உடனே அலமாரிகளைப் பார்க்கத் திரும்பினாள். 

அலமாரிகளைத் தூசி தட்டுவதற்காக, சாராவின் விளையாட்டுப் பொருட்களைக் கீழே இறக்கி பீரோவில் வைத்தாள். எல்லாவற்றையும் உறுதியாகக் கையாண்டாள். அவை நிஜத்தில் விளையாட்டுப் பொருட்கள் அல்ல. இரண்டு ப்ளாஸ்டிக் குதிரைகள் இருந்தன, ஓர் உயர்ந்த வகைக் குதிரையும், ஓர் அப்பலூஸா குதிரையும். ஜன்னீனுக்கு ஏழெட்டு வயதிருக்கும்போது, அவள் தன் குதிரைகளைக் கொணர்வாள், இரு பெண்களும், கீழே மணல் மேடுகளில், பிற்பகல் பூராவும் விளையாடுவார்கள். சாரா அந்தக் குதிரைகள் அழகாக இருந்தன என்று சேமித்து வைத்திருந்தாள். அவை விளையாட்டுச் சாமான்களாக இருக்கவில்லை, அவளுக்குப் பிடித்த அழகுப் பொருட்கள். அவற்றுக்கு அங்கே இருக்க உரிமை இருந்தது. அது சரிதான். அழகில்லாத, வெறும் விளையாட்டுச் சாமான்களாக மட்டும் இருந்தவை அல்லது எதற்கோ பயன்பட்டவை, விருப்புக்குள்ளாகாமல் போயின, அவற்றை வைத்திருப்பது சரியில்லை. ஜாக் எல்லாவற்றையும் விட்டு வைக்க விரும்பினார், எல்லாம் அப்படியே இருக்க விரும்பினார். விளையாட்டுச் சாமான்களையும், துணிமணிகளையும், போர்வைகளையும் அவள் பிறரிடம் கொடுத்து விட்டாள் என்பதை அவர் மன்னிக்கவே இல்லை. அவர்கள் அவற்றை வைத்திருக்க முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார், என்றாலும் அவர் அதைப் பற்றிப் பேசவே இல்லை, ஒருக்கால் அதை யோசித்திருக்கக் கூட மாட்டார், ஆனால் அவர் அவளை ஒருபோதும் மன்னிக்கவில்லை. தங்களால் செய்ய முடியாததை, அது செய்யப்பட வேண்டியது என்பதால் நீங்கள் செய்திருந்தாலும், அப்படிச் செய்ததை மனிதர்கள் மன்னிப்பதில்லை. இந்தியாவில் அழுக்குத் துணிகள், குப்பைகள் ஆகியவற்றை அகற்றும், ஒல்லியான கருப்பு மனிதர்களை தொலைக்காட்சியில் பார்க்கிறோமே. அவர்களை யாரும் தொடுவதில்லை. அழுக்கை நீங்கள் அகற்றினால் நீங்களும் அழுக்காகி விடுகிறீர்கள். அது புரிகிற விஷயம்தான். அந்த அறையில் இருந்த எதையும் அழுக்கைப் போலப் பார்க்க ஜாக் விரும்பவில்லை, அகற்ற விரும்பவில்லை. ஆனால் அவை அகற்றப்பட வேண்டியவை. யாரோ அதைச் செய்யத்தான் வேண்டி இருந்தது. 

அழகான, ஓ, அந்த அழகான சிறிய புலி, அவள் அதை மறந்திருந்தாள் – சிவப்பு, மஞ்சள் மற்றும் கருப்புப் பட்டுத் துணியால் செய்யப்பட்டு, சிறு கண்ணாடிச் சில்லுகள் எங்கும் பதித்துத் தைக்கப்பட்டிருந்த அது – இந்தியாவில் எங்கேயோ வாங்கியது, அதனால்தான் அவள் இந்தியாவைப் பற்றி நினைத்தாளா- ஜன்னீன் அதைச் சென்ற கிருஸ்த்மஸுக்கு சாராவுக்குக் கொடுத்திருந்தாள். கேலியான பூனைப் புன்னகையோடு, வரிக்கோடிட்ட பக்க வாட்டில் கண்ணாடித் துண்டங்களுடன் இருந்த அது. அவள் அதைக் கீழே வைத்தாள். புத்தகவரிசையின் முடிவில் இருந்த தடுக்குக்கு அருகில், பாய்மரக் கப்பலின் பக்கத்தில் வைத்தாள். 

அவர்கள் திருமணம் செய்வதற்கு முன்பு ஜாக் அந்தக் கப்பலைச் செய்திருந்தார். மரத்தில் பதிந்த வேலைப்பாடுகளும், குடைந்து செய்யும் வேலைப்பாடுகளும் என்று, எத்தனை அருமையான வேலைப்பாடுகளை அவர் செய்தார் அந்த நாட்களில். ஒருக்கால் வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் அவர் அந்த மாதிரி கலைப் பொருட்களை மறுபடி செய்யத் துவங்கலாம். மற்ற வீட்டில், அவர் திட்டமிட்ட அந்த உருவமைப்பை, இப்போது செய்யச் சொல்லி அவள் கேட்கலாம். அவர் அந்த கட்டமைப்பை எங்காவது வைத்திருப்பார், எதையும் தூக்கிப் போடுபவரில்லை அவர். மூடியில் பதித்த உருக்களாக கடற்பிராணிகள் கொண்ட ஒரு பெட்டகத்தை அவர் வடிவமைத்திருந்தார், அதில் கடல்குதிரைகள் மூலைகளைத் தாங்கிப் பிடிப்பது போலச் சித்திரிக்கப்பட்டிருக்கும். வரைபடத்தில் அந்தப் பெட்டகத்தின் மூலைகள் வளைவான நெளிசல்கள் கொண்டிருப்பதாகத் தோன்றும், பிறகு அவை வால்களின் மீது நேராக நிற்கும் கடற்குதிரைகள் என்பது புரியும். அதை நினைவில் கொண்டு, அவள் புத்தகங்களைத் தூசி தட்டினாள், புத்தகத் தடுக்குகளின் பின்னே வைத்தாள், கடைசியாக அறையில் சுலபமான வேலைகள் உள்ள பகுதிகளுக்குத் திரும்பினாள். 

ஜன்னல்களில் புகுந்த சூரியஒளி அத்தனை பளீரென்று இருந்ததால் அவளுடைய கண்கள் கருமையைப் பார்ப்பது போல இருந்தது, ஆனால் அவளுக்கு உடலெங்கும் குளிர்ந்தது, ஏதோ அறையே குளிர்ச்சியாகவும், இருண்டும் இருப்பது போலவும், மிக மிக அடைப்பாகவும் புலப்பட்டது. சமையலறையில் தொலைபேசி மணி அடித்தது, அவள் ஓடினாள். 

“அஸ்டோரியா வரை போகணும்,” ஜாக் சொன்னார். உரத்தும்,குறைப்படுவதாகவும் ஒலித்த அவர் குரலில் அவருடைய தடித்த, கடினமான, உறுதியான, பாதுகாப்பு ஏதுமற்ற தூல உடலின் இருப்பு நிரம்பியிருந்தது. “அவர்கள் தப்பான காப்புறையை அனுப்பியிருக்கிறார்கள். ஒவ்வொரு தடவையும் ஏதாவது இடக்குமடக்காகச் செய்கிறார்கள்.” அவர் குறைப்பட்டுக் கொண்டார் ஆனால் அவர்களை மன்னிக்கவும் செய்தார். அவர் எதுவும் தடைகளற்றுச் சீராகப் போகும் என்று எதிர்பார்ப்பதில்லை, தானே சீராக எதோடும் ஒத்துப் போவதாக, தலைக்குமேல் எல்லாக் குப்பையும் பறக்கும்போது, குனிந்து தப்புவதாகச் சொல்வார். (வியத்)நாமில் கற்ற பாடங்கள், என்று சொன்னார், “அங்கேயிருந்து ஏதாவது வேணுமா உனக்கு?”

“எதுவும் இருக்கறதாத் தெரியல்லை,”

“அப்பொ நான் லஞ்சுக்கு வரமாட்டேன்.”

“ஆனா, அங்கேயே ஏதாவது சாப்பிட்டுக்குங்க.”

“ஓகே.”

“சித்த இருங்க. கேக்கிறீங்களா? படியேணி எங்கே இருக்கு?”

“கடையில.”

“ஓ.”

“நா சாயந்தரம் வரப்ப கொண்டுட்டு வரேன். மார்டினோட வீட்ல மரப் பட்டிங்களைச் சரி செய்யக் கொண்டு போயிருந்தேன். உனக்கு என்னத்துக்கு அது?”

“ஜன்னல்களை எல்லாம் கழுவணும்.”

“வெளியிலேயா. அதை எங்கிட்டே விடு.”

“இருக்கட்டும், ஆனா எனக்கு எட்டறதை எல்லாம் நான் செய்யறேனே.”

“ஓகே. பார்க்கலாம்.”

“பார்த்துப் போங்க.”

அவள் சீக்கிரமாக பகலுணவை உண்டு விட்டு, ஜாய்ஸ் டாண்டுடன் அமரலாம். அவள் டாண்ட்களின் வீட்டைக் கூப்பிட்டாள். ஆனால் ஜில்லியின் குரல் கதகதப்பான, குண்டான, மென்மையான அவள் உடலையே எதிரில் கொணர்ந்தது, அவள் ஓரளவு பதட்டமாக, இளம் பெண்ணைப் போல, மூச்சு விடுவதாக, ஆனால் தயங்கிப் பின்வாங்குபவள் போல, நம்மைச் சந்திக்கத் தயாராக இல்லாதவள் போலக் காட்டியது. ”ஓ, ஹாய் கே!” என்று பிரியமாகப் பதில் சொன்னாள், ஆனால் தான் தேவையில்லாமல் நுழைவதாகக் கே உணர்ந்தாள். 

“இன்னிக்கு மதியத்துக்குப் பிறகு நான் அங்கே வந்து ஜாய்ஸோட இருக்கலாம்னு பார்க்கறேன். உனக்கு ஏதாவது வெளிவேலை இருந்தா, இன்னிக்கு நாள் அழகா இருக்கு, போய் முடிச்சுக்கலாமே.”

 “ஓ, நீங்க நல்லது செய்ய நினைக்கிறீங்கன்னு தெரியுது. எங்களுக்கு வெளியிலே செய்ய எதுவும் இல்லையே.”

“சரிதான், ஆனா நான் வந்து கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போறேனே.” ஜில்லியின் தயக்கத்தை அவளால் உணர முடிந்தது. நாம் எப்போதும் எதிர்ப்போம்; நாம் அங்கே இருக்க வேண்டும் என்று நினைப்போம், நாம் அங்கேயே இருக்கவேண்டும். யாராவது இப்படி உணர வேண்டியிருக்கிறது. 

“நான் ரெண்டு மணிக்கப்புறம் அங்கே வரேன்,” கே சொன்னாள், தொடர்பைத் துண்டித்தாள். தனக்கு இருக்கும் அதிகாரத்தை அவள் அறிந்திருந்தாள், அதன் ஆதாரம் எது என்றும். 

ஜில் வராந்தாவின் மேற்கூரைக்காகத் தூண்களை வெட்டிக் கொண்டிருந்தாள், அவள் செய்த வீட்டுக்கு முகப்பில் அந்தத் தாழ்வாரத்தை வைக்கத் தீர்மானித்திருந்தாள். அப்போது அவள் அம்மா, சூரிய ஒளிக்கான அறையிலிருந்து பேசினாள், “இங்கே சூடாவும், ரொம்ப நல்லாவும் இருக்கு,” என்றாள். 

ஜில்லி சத்தமாகச் சொன்னாள், “ஆமாம்! சரியாச் சொன்னீங்க!” ஆனால் அவள் அங்கே போக மாட்டாள். அவளுக்கு இது தனக்கான நேரம். மொத்த நாளில் அவளுடைய ஒற்றை மணி நேரம். அவள் களிமண்ணில் துண்டுகளை வெட்டிக் கொண்டே போனாள். மற்ற நேரமெல்லாம் அங்கே செய்ய வேண்டியதை எல்லாம் அவள் செய்வாள், ஆனால் இந்த ஒரு மணி நேரத்தை அவள் ஒதுக்கி வைத்தாள், அப்புறமாக வைத்திருந்தாள், அசட்டுத்தனமான சிறிய சைனாடௌன் மண் வீடுகளின் நகல்களைச் செய்ய இந்த நேரம். அவள் அம்மா இந்த ஒரு மணியையும் கேட்பது நியாயமில்லை. மற்றதெல்லாம் அம்மாவுடையதுதான். இது ஜில்லியின் நேரம், அவளுக்கு விளையாட நேரம், குண்டு மண்ணான ஜில்லி மண் பத்தைகளைச் செய்யும் நேரம். 

அவள் அம்மா மறுபடி பேசினாள், செய்தித்தாளில் அவள் படித்த எதற்கோ மறுவினை செய்தவளாக. ஜில்லி “என்னது?” என்று கேட்கவில்லை. தனக்குக் கேட்காதது போலப் பாவனை செய்தாள். அவளால் செவி கொடுத்துக் கேட்காமல் இருக்க முடியவில்லை. அவள் உற்றுக் கேட்பதை நிறுத்துவதே இல்லை, சில நாள் இரவுகளில்தான் தூங்குகையில் கல்லைப் போல எதுவும் தெரியாமல் தூங்கி விட்டு, விழிக்கும்போது, அம்மா தன் நோயோடு போராடும் வேலையைச் சுலபமாக்குவதற்காகக் கொடுக்கப்பட்ட மருந்துகளோடு அவதிப்படும்போது, தான் ஏதுமறியாமல் கிடந்த நேரத்தை எண்ணி அச்சப்படுவாள். நீண்ட நாட்கள் என்றால் சுலபமானது என்றா அர்த்தம்? ஆனால் இப்போது, இந்த க்ஷணம், அம்மாவுக்கு அவள் தேவையில்லை, அவள் சும்மா பொறாமைப்படுகிறாள். 

செய்தித்தாளின் பக்கங்கள் சலசலத்தன, திருப்பப்பட்டன. ஆறுதலாக உணர்ந்த ஜில்லி, அசௌகரியமான நாற்காலியிலிருந்து தன் பாரத்தை இடம் மாற்றினாள், ஆனால் வராந்தாவின் கூரைமீது வேலை செய்வதைத் தொடர்ந்தாள்.  கூரை தொய்யாமல் இருக்க தூண்களுக்கு இடையே தடித்த உத்தரம் ஒன்று அதற்குத் தேவைப்படும். அதை அவள் சரியாகச் செய்து விட்டால், கூரை போட்ட வராந்தாவோடு அந்த வீடு பூர்த்தியாகி விடும். வாயிற்கதவு வழியே தெரிந்த அந்த வீட்டின் உள்புறம் இப்போது முன்னெப்போதையும் விட வசீகரமாகவும், மர்மமானதாகவும் தெரிந்தது. ஆனால், ஒருத்தர் ஒரு அங்குல உயரமானவராக இருந்தால், வீட்டுக்குள்ளேயே போக முடியும், அங்கே இருக்கும் ஒற்றை அறையில், தரையும், சுவர்களும், கூரையும் ஈரமான, குளிர்ந்த வெற்றுக் களிமண்ணாகத்தான் இருக்கும், அது கோரமாக இருக்கும். வெளியிலிருந்தபடி மட்டும் பார்க்கப்படும் உள்புறம்தான், சுழல் மேடையைச் சுழற்றியபடி, ஜில்லி நினைத்தாள், எப்போதும் அப்படி ஒரு மர்மமாக, வசீகரமானதாகத் தெரிகிறது, அதனால்தான் –

அவளுடைய அம்மா மறுபடி பேசினாள். அவள் செய்தித்தாளிடம் பேசவில்லை; இது வேறு விதமான குரல். சூரிய ஒளி நிரம்பி வழிந்த அறையில், புதிதாகத் துவங்கிய கூடுதல் அளவு மருந்து விழிப்புணர்வில் அரை நினைவும், அந்தி மாலை போன்ற நிலையையும் கொண்டு வந்ததால்,  முழுதும் விழித்துக் கொள்ளாமல் அவள் தன்னுடனேயே வாய்விட்டுப் பேசிக் கொண்டாள்; அவளுடைய புத்தி ஏதோ ஒரு கேள்வியோடோ அல்லது பிரச்சினையோடோ போராடிக் கொண்டிருந்தது, ஏதோ விடையை உருவாக்கிக் கொண்டிருந்தது. முணுமுணுப்பாகச் சில சொற்களைப் பேசினாள், பிறகு தெளிவாக, தன்னுடைய சிறிய, தட்டையான குரலில் “அப்ப சரி, அவ்வளவுதானே அங்கே. சரிதான்.” 

அவள் என்ன கேட்டுக் கொண்டு என்ன பதில் சொல்கிறாள் என்பது ஜில்லுக்குத் தெரிந்திருந்தது. அங்கே சூடாக, வசீகரமாக இருக்கிறது என்று சொன்னபோது அவளுடைய பெண் அழைப்புக்கு அங்கே ஏன் வரவில்லை? ஏனெனில் அவளால் இனிமேல் எந்த அழைப்பையும் கொடுக்க முடியாது. அவள் வற்புறுத்தித்தான் கேட்க முடியும், “இங்கே வா!” என்றோ அல்லது கெஞ்சியோ, “என் கிட்டே வா!” அவளுடைய பெண் வர விரும்பவில்லை. அப்படியா, சரி. 

ஆனால் அது உண்மையில்லை. அவளுடைய மகள் வரவே விரும்பினாள் ஆனால் வர முடியவில்லை. அவளால் அந்த அறைக்குள் போக முடியவில்லை. அவளால் வெளியிலிருந்துதான் அந்த அறையைப் பார்க்க முடிந்தது. 

அரைகுறையாக முடிந்த அந்த வீட்டை, காய்வதற்காக அலமாரியில் வைத்தாள். களிமண் பிசுக்கோடு இருந்த துணியை ஈரமாக்கி, வெறும் களிமண்ணாக இருந்த மொத்தை மீது வைத்து மூடினாள். அவள் கைகள் களிமண் பூசி, அங்கங்கே திட்டுத் திட்டாக சாம்பல்-வெள்ளையாக இருந்தன, கழுவுவதற்குச் சென்றாள். தொலைபேசி ஒலித்தது, அதைப் பார்க்கத் திரும்பியவள், அம்மாவை அழைத்துச் சொன்னாள், “இதோ கொஞ்ச நேரத்தில அங்கே வரேன்!”

முன்மாலை நேரத்து தொடர் நாடகங்களைத் தொலைக்காட்சியில் பார்க்க ஜாய்ஸ் விரும்பினாள். கேயிடம் அந்தக் காட்சி எதைப்பற்றியது என்று சொன்னாள், ஆனால் காட்சி துவங்கிய உடன் தூங்கிப் போய் விட்டாள். கே பின்னல் வேலையைச் செய்தாள். மாலை நேரத்துச் சூரியன் படுக்கையறை ஜன்னல்களில் வீசியது, ஆனால் ஜன்னல் தட்டிகள் இறுக்க மூடப்பட்டிருந்தன, சூரியஒளியையும், கடலையும் கண்ணில் படாமல் தடுத்தன. தான் இறந்து கொண்டிருப்பவளாக இருந்தால், தனக்கு கடலைப் பார்க்கும்படி இருந்த அறையில் இருக்கப் பிடிக்குமா என்று கே தன்னையே கேட்டுக் கொண்டாள். ஜாய்ஸ் கடலைப் பார்ப்பாளா என்று யோசித்தாள். 

பாதி திரும்பிய முகத்தோடு, ஜாய்ஸ் படுக்கையில் குச்சிகளையும், உருண்டைகளையும் போலக் கிடந்தாள்.

கேயிற்கு அவளைக் கொஞ்சம்தான் தெரியும். அவளும், அவளுடைய கணவரும் ஐந்து வருடங்கள் முன்பு இங்கு இடம் பெயர்ந்திருந்தனர், அவர் முதல் வருடமே இறந்து போனார். இருப்பதே தெரியாமல் அமைதியாக, தட்டையான குரலில் பேசிக் கொண்டு, அவள் அங்கேயே தங்கிவிட்டாள். கிழக்கில் எங்கிருந்தோ வந்திருந்தவள் அவள். ஒஹையோவிலிருந்து வந்திருக்கலாம்.  அவள் சில விதங்களில் புண்படுபவளாகவும், பலவற்றையும் பற்றி அவநம்பிக்கை கொண்டவளாகவும் இருந்தாள், ஆனால் நகைச்சுவையுணர்வு கொண்டவளாகவும் இருந்தாள். அது முறை தவறாத, ஆனால் இளக்காரம் கலந்த நகையுணர்வு. பழுப்பு அல்லது நீலநிறங்களில் அரைப் பாவாடைகளும், இளம்பழுப்பு நிற கார்டிகன் மேலங்கிகளையும் அணிந்தாள். அவளுடைய கட்டிலில் காலடியில் குறுக்காகக் கிடக்கும் அழகான, பளீரென்றிருக்கும் வீட்டு மேலங்கி ஜில்லி கொடுத்ததாக இருக்க வேண்டும். ஜாய்ஸ் விதவையான காலத்தில் போர்ட்லண்ட் நகரிலிருந்து ஒவ்வொரு வார இறுதியிலும் அம்மாவுடன் இருக்கவென்று ஜில்லி வந்தாள், இப்போது இங்கேயே முழு நேரமும் தங்குகிறாள், ஜில்லி ஒரு நல்ல மகள். நகர நிர்வாகத்தில் அவளுக்கு ஒரு நல்ல வேலை இருந்தது, அதை அவள் விட்டிருக்க வேண்டும், அல்லது அதிலிருந்து விடுப்பு வாங்கியிருக்க வேண்டும். அதைப் பற்றி அவளிடம் கேட்பது சுலபமானதாக இராது. அவளுடைய அம்மாவை விட ஜில்லி எளிதே அணுகக் கூடியவள், திறந்த மனதுடையவள், ஆனால் அவள் பின்னொதுங்குபவளாகவும் இருந்தாள். இன்று வெளிச் சூழ்நிலை அழகாக இருக்கிறது, வெளியே போய், கடற்கரையோரம் ஒரு நடை போய்விட்டு வாயேன் என்று அவளிடம் கே சொன்னபோது,  ஜில்லி தனக்கு ஒரு குட்டித் தூக்கம் வேண்டும் என்று சொல்லி விட்டு, அறைக்குள் சென்று ஜன்னல் தட்டிகளைக் கீழிறக்கி அடைத்துக் கொண்டு படுத்திருந்தாள். ஏப்ரல் மாத சூரிய ஒளி பளீரென்று கடற்கரையின் மீதும், கடல் மீதும் கீழிறங்கிக் கொண்டிருந்தது, காற்று கோடைக் காலம் போல உஷ்ணமாக இருந்தது, ஆனால் அவர்கள் மூவரும் திரைகள், தட்டிகள் கொண்டு ஜன்னல்களை அடைத்துக் கொண்டு வீட்டுக்குள் ஒடுங்கி இருந்தனர். 

“ஜில்லி எங்கே போனாள்?”

“கொஞ்ச நேரம் படுத்துக் கொண்டிருக்கிறாள்,” கே அடங்கிய குரலில் சொன்னாள், ஜாய்ஸ் அரைவிழிப்போடுதான் இருக்கிறாள் என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. 

“அவள் வரதே இல்லை.”

“ஓ, அப்படிச் சொல்லக் கூடாது, அது சரியில்லை,” அவள் சொன்னதை மறுத்து, தேறுதல்படுத்தினாள் கே. ஜாய்ஸ் மறுபடி தூக்கத்துக்குள் நழுவிப் போனாள். அவள் தன் பெண்ணை “நேசித்தாளா?” போர்வை மீது கிடந்த அவளது எலும்பான, வீங்கியிருந்த கையைப் பார்த்தாள் கே. நாம் சாகும்போது பிறர் மீது அன்பு கொள்ள முடியுமா?

 “இப்படி நடக்கும்னா என்னை ஏன் பெத்தீங்க?”

ஆனால் அவளுடைய வயது அப்போது பதினான்குதான்.

ஜில்லி கூடத்திலும் குளியலறையிலும் எதையோ உருட்டிக் கொண்டிருந்தாள், அறை வாயிலருகே வந்தாள், தூங்கி எழுந்ததில் முகமெல்லாம் சிவப்பாகி இருந்தது, ரோஜாவும், தங்கமும் கலந்த நிறத்தில் ஒரு பெரும் பெண்ணுருவம் அவள். மென்மையான, கனிவான பெண்.  “ஒரு கோப்பை தேநீர் வேண்டுமா, உங்க ரெண்டு பேருக்கும்?”அவள் உரக்கக் கேட்டாள்.

ஜாய்ஸ் பதில் சொல்லவில்லை. ஒருக்கால் அவளுடைய உடம்புக்கு வெளியே இருந்து எதுவும் அவளுடைய தூக்கத்தையோ, விழிப்பையோ பாதிப்பதில்லை போலும். அவளுடைய உடம்பு, போர்வைக்கு அடியில் இருந்த குச்சிகளும் முண்டு திண்டுகளும். “ஒரு கந்தல், ஒரு எலும்பு, மேலும் ஒரு சுருள் முடி” என்று கேயின் அப்பா அம்மாவைக் கேலி செய்யப் பாடுவார், அவள் ஒரு புது ஆடை வாங்கினாலோ, தலை முடியை சலொனில் கழுவி,அலங்காரம் செய்து கொண்டு வந்தாலோ இப்படிப் பாட்டு. அதே நேரம் அவர்கள் எல்லாருமே அப்படித்தான் ஆகப் போகிறார்கள், அல்லது கடலில் கரைத்த பிடி தூசியாவார்கள். இந்த மென்மையான, கனிவான உடல்கள் எல்லாமே. அவற்றைப் பற்றிப் பாட அதிகம் ஏதுமில்லை, அதனால் அழகாக இருக்க வேண்டி, நாம் தலை முடிக்குச் சாயம் பூசி, சுருளாக்கிக் கொள்கிறோம். 

ஜில்லி ஒரு தட்டோடு உள்ளே வந்தாள். ஜாய்ஸ் எழுந்து கொண்டாள். சேர்ந்து தேநீர் குடித்தார்கள்.

“சரி, நான் வீட்டுக்குப் போய், ஜன்னலெல்லாம் கழுவணும்,” என்றாள் கே, “எவ்வளவுதான் தள்ளிப் போட முடியும் அதை.”

“சூரியன் வெளில வந்தாத்தான் அதெல்லாம் எத்தனை அழுக்காப் போச்சுன்னு நமக்குத் தெரியும்,” என்றாள் ஜாய்ஸ்.

“படுமோசம். வெளிப்பக்கத்துல நிறைய ஜன்னலை என்னால செய்ய முடியாது, அதுக்கு ஜாக் படியேணியைக் கொண்டு வந்தாத்தான் ஆச்சு. ஆனா, உள்பக்கமெல்லாம் நானே செய்ய முடியும், சாராவோட அறையையும் சுத்தம் செஞ்சு முடிக்கணும். ஜாக்கோட மருமாள் ஈஸ்டர் வாரத்துல இங்கே வரப் போறா, அதை நான் உங்க கிட்டே சொன்னேனா? காரென் ஜோன்ஸ். டவுன்லெ ஹெல்த் சைன்ஸஸ் காலேஜ்ல இருக்கா.”

“பேப்பர் டவலை விட நியூஸ்பேப்பர்தான் நல்லாருக்கும். ஜன்னலைத் துடைக்க. அச்சடிச்ச காகிதத்துல ஏதோ இருக்கு, அந்த மசின்னு நினைக்கிறேன்.” ஜாய்ஸ் படுக்கையில் சற்று அசைந்து கொடுத்தாள், பலமாக மூச்சு விட்டாள். கேயை நேராக, ஒரு சுருக்கமான பார்வை, பார்த்தாள், அதில் வெறுப்பு தென்பட்டது. உன்னோட செத்துப் போன பொண்ணை இங்கே கொண்டு வராதே!

“சரி, நான் கிளம்பிப் போறதுதான் நல்லது. உங்க ரெண்டு பேருக்கும் நான் ஏதாவது செய்யணுமா? அஸ்டோரியாவுலேருந்து ஏதாவது வேணுமுன்னா சொல்லுங்க, ஜாக் அங்கே வாரத்துல ரெண்டு மூணு நாள் போகிறார்.”

“ஓ, இல்லை, எங்களுக்கு எல்லாம் இருக்கு,” ஜில்லி சொன்னாள்.

அவள் கேயோடு முன்னறை வரை போனாள், அங்கே அவர்கள் ஒரு கணம் நின்றார்கள், கே முகப்பு வெளியில், ஜில்லி வாயில் அருகே, கதவைத் திறந்து பிடித்தபடி. அங்கு இலேசான, இனிமையான ஓடும் காற்று அவர்களைத் தொட்டது. கே ஒரு கணம் ஜில்லியின் கைமீது தன் உள்ளங்கையை வைத்தாள். ஜில்லியின் கை நகங்கள், அவள் களிமண்ணில் தோண்டினாற்போல, விளிம்புகள் நிரம்பி இருந்தன. அவள் தொடத்தான் செய்தாள், கட்டித் தழுவிக் கொள்ளவில்லை, ஜில்லி கட்டித் தழுவுவதை எதிர்பார்க்கவில்லை, அதைப் பொறுப்பது கஷ்டமாகவிருந்தது, தன் மகளைக் கட்டிக் கொள்ள விரும்புகிற ஒரு அம்மாவுக்கு இன்னுமே கஷ்டம். “இது கடினமானது, ஜில்லி,” கே சொன்னாள்.

“கஷ்டமான வேலைதான்,” ஜில்லி சொன்னாள், புன்முறுவலித்தாள், அப்போது அவள் உள்ளே போகத் திரும்பியபடியிருந்தாள். 

***

எழுத்தாளர் பற்றிய குறிப்பு

உர்சுலா லெகுவின் பெருமளவு அதிபுனைவுகள் எழுதியவராகவும், ஓரளவு பெண்ணியக் கதைகள் எழுதியவராகவும் தெரிய வந்திருக்கிறார். அவர் கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றையும் எழுதியிருப்பது அதிகம் தெரிய வராத ஒரு விஷயம். தவிர, பொதுவான இலக்கியத்திலும் அவர் பங்கெடுத்திருக்கிறார் என்பதும் அதிகம் தெரியவராத ஒன்று. அப்படி அவர் எழுதிய சில புத்தகங்களில் ஒன்று ‘ஸீரோட்’ என்ற சிறுகதைத் தொகுப்பு. க்ளாட்சாண்ட் என்ற கடலோரச் சிற்றூரையும், அதில் வசித்த மாந்தர் பற்றியும் ஒன்றோடொன்று தொடர்புள்ள பல சிறுகதைகளை லெகுவின் இந்தத் தொகுப்பில் கொடுத்திருக்கிறார்.   இந்தப் புத்தகம் பற்றிய விவரங்களுக்குப் பார்க்க: https://www.ursulakleguin.com/searoad 

அமெரிக்காவின் புகழ்பெற்ற பேட்டியாளராகவும், , வானொலி நிகழ்ச்சிகளில் ஒரு பெரும் சக்தியாகவும் சில பத்தாண்டுகள் முன்பு விளங்கிய ஸ்டட்ஸ் டெர்க்கெல், இந்தப் புத்தகம் பற்றி உர்சுலா லெகுவினிடம் உரையாடி இருக்கிறார். வானொலிப் பேட்டியாக ஒலிபரப்பப்பட்ட அந்த உரையாடலை இங்கே படிக்கலாம்.  

https://studsterkel.wfmt.com/programs/discussing-book-short-stories-searoad-chronicles-klatsand-author-ursula-le-guin

இந்த இரு வலைப் பக்கங்களைத் தாண்டி, இந்தப் புத்தகத்தைப் பற்றியோ கதைகளைப் பற்றியோ ஏதும் சொல்வதானால், ஒரு சிறு கட்டுரையாவது தேவைப்படும் என்பதால் இங்கு அதைக் கொடுக்கவில்லை. வெறும் அதிபுனைவாளர் என்றோ, அரசியல் கதைகளை எழுதியவர் என்றோ உர்சுலா லெகுவினை  சில அடைப்புகளில் போட்டு வைக்க முடியாது என்பதை இந்தக் கதைத் தொகுப்பு வெளிக்காட்டுகிறது. இவை தனிமனித உள நிகழ்வுகள், குண மாறுதல்கள், அவர்கள் தம் சிக்கல்களைத் தாண்டி வரக் கற்கும் விதங்கள் என்று மனிதரின் வளர்ச்சி, மாற்றம், சிதைவு ஆகிய கால ஓட்டத்து மறு உருப்பெறல்களை  நுண்மையாகச் சித்திரிக்கின்றன.  

மொழியாக்கம் செய்த மைத்ரேயனின் குறிப்பு:  

உர்சுலா லெகுவின் எனக்கு அறிமுகம் ஆனது 1970களி்ன் துவக்கத்தில். அறிவியல் நவீனங்களைத் தேடித் தேடிப் படித்த காலத்தில் மிகத் துவக்க கட்டத்திலேயே அறிமுகம் ஆனவர் லெகுவின். அவரது லெஃப்ட் ஹாண்ட் ஆஃப் டார்க்னெஸ் என்ற நாவலைப் படிக்க முயன்று பாதியில் அப்போது கைவிட இருந்தேன். ஆனால் ஏதோ ஒரு உந்துதலில் அதைப் பூராவும் படித்து முடித்த போது 60களின் நடுவில் கல்லூரிப் படிப்பில் நுழையவிருக்கும்போது எனக்கு அறிமுகமான ஆஸிமாவின் ‘ஐ ரோபாட்’ நூல் எப்படி ஒரு புது உலகை எனக்கு அறிமுகம் செய்து என் உலகப் பார்வையையே மாற்றியதோ, அதே போன்ற தாக்கத்தை லெகுவினின் மேற்படி நூல் எனக்குக் கொணர்ந்தது. பிறகு சீக்கிரமே அவரது இதர புனைவுகளை எப்படியோ தேடிப் பிடித்துப் படிக்க முனைந்தேன். அது அன்றைய என் சூழ்நிலையில் அத்தனை சுலபமாக இருக்கவில்லை. 80களில் புலம் பெயர்ந்த போது நான் தேடிப் படித்த எழுத்தாளர்களில் லெகுவின் ஒருவர்.  

ஆனால் லெகுவினின் சமூக எதார்த்தக் கதைகளைப் பற்றி எனக்குத் தெரிய வந்தது 2000 ஆவது வருடத்துக்குப் பிறகுதான். 2010க்கு முன்பு நான் படித்த ஒரு நூல் இந்த ஸீரோட். நான் படித்த பல்கலைகளில் பெரும் நூலகங்கள் இருந்தன என்றாலும் அவற்றில் இந்த நூல் இருந்ததாக எனக்கு நினைவில்லை. 2000களின் இறுதிச் சில ஆண்டுகளில் நானிருக்கும் நகரின் பொது நூலகத்தில் தற்செயலாக இந்த நூல் தட்டுப்பட்டுப் படித்த போது எனக்கு இது நல்ல புத்தகம் என்று தெரிந்திருந்தாலும், இதன் கதைகளின் சூட்சுமம் எனக்குப் பிடிபட்டிருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 2012க்குப் பிறகு எனக்கு என் மகள் மூலமாகத் தெரிய வந்த ஒரு எழுத்தாளர் மேரிலின் ராபின்சன். கல்லூரியில் படித்து வந்த என் மகளிடம் நான் பல புத்தகங்களை, ஆசிரியர்களைத் தெரிந்து கொண்டிருந்தேன். மேரிலின் ராபின்சனின் முத்தொகுப்பு நாவல்கள் என்று நான் புரிந்து கொண்டிருந்த ‘கிலியட், ஹோம், லீலா’ ஆகியவை என்னைப் பெரிதும் பாதித்த நாவல்களில் சில. இவற்றுக்கு முதல் நூலான ’ஹௌஸ்கீப்பிங்’ தான் என் மகள் என்னிடம் கொடுத்திருந்த புத்தகம். அது இந்த மூன்று நாவல்களுக்குத் துவக்கம் என்பதை நான் புரிந்து கொள்ளக் கொஞ்சம் காலம் ஆயிற்று. இவற்றின் கடைசி நூல் ‘ஜாக்’ என்பது. உண்மையில் இவை ஐந்து நாவல்களின் கொத்து என்றுதான் சொல்ல வேண்டும்.  

மேரிலின் ராபின்சனின் நாவல்கள் எனக்குச் சிறு கிராமப்புற ஊர்களில் அமெரிக்காவும், அமெரிக்கர்களும் என்ன மாதிரி இருந்தனர் என்பதைக் காட்டின. அதோடு அவை அம்மக்களின் வாழ்வில் கிருஸ்தவம் எத்தனை ஊறி இருந்தது என்றும் காட்டின. மேரிலின் ராபின்சனின் கிருஸ்தவம் மரபார்ந்த கிருஸ்தவம் இல்லை எனலாம். அதாவது சர்ச்சுகளையும் பெருநிறுவனங்களையும் சேர்ந்த கிருஸ்தவம் இல்லை அது. அவர் ஜான் கால்வின் என்ற ஒரு கிருஸ்தவ பிரச்சாரகரைப் பெரிதும் மதிக்கிறவர். இவருடைய கிருஸ்தவ சிந்தனை பற்றிய ஒரு உரையாடலை இங்கே காணலாம்: https://www.christiancentury.org/article/interview/faith-imagination-and-glory-ordinary-life 

மேரிலின் ராபின்சனை இங்கே கொணர்ந்ததற்கு ஒரு காரணம் உண்டு. உர்சுலா லெகுவின் மதம் அல்லது மரபு ஆகியவற்றை அதிகம் பாராட்டியதில்லை, மாறாக அவற்றைப் பெருமளவு மனித முன்னேற்றத்துக்குத் தடைகளைக் கொணரும் சக்திகளாகவே நோக்கி இருக்கிறார். அதே நேரம் அவற்றை அழிப்பதை அவர் ஒரு பாதையாக, வழியாக முன்வைக்கவும் இல்லை. பரிணாம ரீதியாக மாற்றங்களும், வளர்ச்சியும், சிதைவுமாக மனிதம் முன்னேறுவதையே அவர் விதந்தோதுகிறார். ஆனால் ஸீரோட் என்ற கதைத் தொகுப்பில் உர்சுலா எதார்த்தத்தை ஒரு அணுகுமுறையாகக் கைக்கொண்டதால் மேரிலின் ராபின்சனின் நாவல்களில் வரும் சிற்றூர் மாந்தர்களின் உலகுக்குள் உலா போக வேண்டிய ஒரு கட்டாயம் அவருக்கு ஏற்படுகிறது. விளைவு, லெகுவினின் சிற்றூரில் மேரிலின் ராபின்சனிய உலகம் சற்றே மாறுபட்ட விதங்களில் வெளிப்படுகிறது என்று என் நினைப்பு. இதை நான் இன்னும் தீவிரமாக ஒப்பிட்டுப் படிக்கவில்லை. ஒரு நாள் அதைச் செய்ய நேரும்.  

இந்தச் சிற்றூர்வாசிகளைப் பற்றிய கதைகள் இந்த இருவரின் தனி அணுகல்கள் இல்லை. இந்த வகைக் கதைகளுக்கு அமெரிக்க இலக்கியத்தில் நெடிய மரபு உண்டு. அது பற்றிப் பிறிதொரு சமயம் பார்ப்போம்.  

One Reply to “உள்ளும் வெளியும் பாகம் -2”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.