
ஒவ்வொரு சனிக்கிழமை பிற்பகல் ஐந்து மணிக்கும் சகாதேவனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. அப்போது அவனுக்கு மாலை ஆறரை. சாப்பாட்டை முடித்து சாவதானமாகப் பேசுவதற்கு நேரம். ஆதவிக்குக் கூடத் தெரியும். முக்கியமான ஒருவர் தொலைபேசி இணைப்பின் எதிர்ப்பக்கத்தில் இருக்கிறார். பல மாதங்களுக்கு முன்னால் சில நாட்கள் தங்கி அவளைக் கொஞ்சியவர்.
“ஆதவி எப்படி இருக்கா?”
முதல் கேள்வி அவளைப் பற்றித்தான் என்றும் அவளுக்குத் தெரியும். அவளே பதில் சொல்வது போலத் தலையசைத்துப் புன்னகைப்பாள்.
“யுகேஜில அவ தான் ஃபர்ஸ்ட்.”
“நம்பவே முடியலயே.”
“எனக்கும் தான். எல்லாம் டாக்டர் விமலா கொடுத்த மாத்திரைகளின் மகிமை.”
“நீ ஆதவியோட எவ்வளவு நேரம் செலவழிச்சிருப்பே. அதுவும் தான்.”
“அடுத்த பொங்கல் வந்தா மூணு வருஷம். அவளுடைய மனம், மூளை, இரண்டின் வளர்ச்சியைப் பார்க்கும்போது மனசில ஒரு நிறைவு.”
“மாத்திரை இனிமேலும் சாப்பிடணுமா?”
“போன வாரம் ஆதவியை அழைச்சிண்டு போனேன். டெஸ்ட் பண்ணிட்டு இனிமே அவசியமில்லன்னு சொல்லிட்டா. அப்பப்ப அவளுடைய பால்மொழி வார்த்தைகளைச் சொல்லுவோ. உடனே தன்னைத் திருத்திண்டு தமிழ்லியோ இங்க்லிஷ்லியோ அதையே இன்னொரு தடவை.”
“ஒரு கவலை விட்டுது. மானசா?”
“இங்க தான் இருக்கா. அப்பாவோட பேசறியா?”
அவள் பக்கத்தில் வந்ததும்,
“இந்தா!”
“எப்படி இருக்கேப்பா?”
“எல்லாம் சௌகரியமா இருக்கு. உங்களைவிட்டுப் பிரிஞ்சிருக்கறது தான் கஷ்டமா இருக்கு.”
“எங்களுக்கும் தான்.”
“கான்ட்ராக்ட்ல ஆறு மாசம் பாக்கி. அது முடிஞ்சதும் திரும்பிவந்துடறேன்.”
“சரிப்பா. தமிழ் கட்டுரைப்போட்டில நான் ஃபர்ஸ்ட்.”
“வெரி குட்! எதைப்பத்தி?”
“சயன்ஸ் ஃபிக்ஷன் எப்படி இருக்கணும்னு.”
“நீ என்ன எழுதினே?”
“முதலில் அதன் இலக்கணம். முக்கியமா, இயந்திரங்களைப் பத்திய விவரங்கள் எவ்வளவு இருந்தாலும் மனித உணர்ச்சிகள் வெளிப்படணும். அதுக்கு உதாரணமா சுஜாதாவின் காட்ச்-22.”
“எனக்கு அனுப்பு!”
“சரிப்பா!”
மறுபடி வினதா.
“போன மாச சம்பளம் பாங்க் கணக்கில க்ரெடிட் ஆயிடுத்து.”
“உன் புது வேலை?”
“தினத்துக்கு இரண்டு ப்ளஸ்-டூ க்ளாஸ். வண்டலூர் போயிட்டு வரணும். பத்து மணிக்குப் போனா குழந்தைகள் திரும்பிவர்றதுக்குள்ள வீட்டுக்கு வந்துடலாம். சாப்பாட்டு பேக்கெட் அனுப்பிச்சேனே. சௌகரியமா இருக்கா?”
“ம்ம்..”
“கடைக்குப் போய் எல்லாம் வாங்கிண்டு வந்தாச்சா?”
“ம்ம்..”
“உங்க வேலை?”
“என்ன, இன்னும் கொஞ்ச நாள் தானே.”
“ஏன்?”
“என்னமோ போ! ஆறு மாசம், நூற்றிஎண்பத்தி இரண்டு நாள்…”
வேலை பற்றிய சகாதேவனின் அதிருப்தி வினதாவுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் பாலமாக இருந்ததில் அவனுக்குப் பெருமை, சந்தோஷம். திரும்பிவந்ததும் தொழிற்சாலையில் இயந்திரங்களுடன் மனிதர்களையும் மாரடிக்காமல் வேறுவேலை தேடிக்கொள்ளலாம்.
அடுத்த சனிக்கிழமை. மணி ஐந்து.
தொலைபேசி ஒலிக்கவில்லை. சனிக்கிழமைகளில் ஒரு மோட்டர்சைக்கிள் டாக்ஸி அவனைக் கடைகளுக்கு அழைத்துப்போகும். வீடு திரும்ப நேரம் ஆகியிருக்குமோ. ஆறு மணிக்கு அவளே அழைத்தாள். பதில் வரவில்லை.
மானசா முகத்தில் சோகம். ஆதவிக்குக்கூட ஏதோ சரியில்லை என்கிற உணர்ச்சி. அவர்களுக்காக கவலையை ஒதுக்கிவைத்து நம்பிக்கையை வெளிக்காட்டினாள்.
“அப்பாக்கு அங்க்கோர் வாட் பார்க்கணும்னு ரொம்ப நாளா ஆசை. இங்கே வர்றதுக்கு முன்னாடி ஒரு ட்ரிப். ரெண்டு மூணு நாளில திரும்பிவந்ததும் கூப்பிடுவார்.”
அவள் சொன்னது போலவே செவ்வாய் காலை சகாதேவன் அழைத்தான். பெண்களைப் பள்ளிக்கூடம் அனுப்பி அவள் வேலைக்குக் கிளம்பியபோது.
பின்னணியில் தொலைக்காட்சியின் புரியாத வார்த்தைகளும் ஊர்திகளின் சக்கரங்கள் சாலையைத் தேய்ப்பது போன்ற புரியும் ஒலிகளும்.
சகாதேவனின் வார்த்தைகளில் அசாதாரண நிதானம்.
“உடனே திரும்பிவர்றதா இருக்கேன்.”
“எப்போ?”
“வர்ற சனிக்கிழமை ராத்ரி.”
“நாங்க எல்லாரும் ஏர்போர்ட் வர்றோம்.”
“குழந்தைகள் வேண்டாம். முரளியைக் கூட்டிண்டு வா!”
“சரி.”
“பெரிய வேன்.”
“முரளி ஏற்பாடு பண்ணிடுவார்.”
தொடர்பு அறுந்தது.
ஒரு பக்கம் மகிழ்ச்சி, இன்னொரு பக்கம் சந்தேகம். குரலில் ஏன் தொய்வு? ஏதோ சரியில்லை. விவரம் கேட்க திரும்ப அழைத்தாள். தொடர்பு கிடைக்கவில்லை.
பள்ளிக்கூடத்தில் கால்குலஸை மாணவர்களுக்குப் புரியவைப்பதில் மனம் சமாதானம் அடைந்தது.
வேலையில் பிரச்சினை என்றால் சரவணப்ரியாவுக்குத் தெரிந்திருக்குமோ? இரவு குழந்தைகள் தூங்கியதும் தொடர்புகொண்டாள்.
“முன்னே நடந்தது தான். 1-ப்ரோமோப்ரோபேனுக்கு மாற்றா என்ன செய்யலாம்னு கேட்டார். இப்ப புதுசா சில கெமிகல்ஸ் வந்திருக்குன்னு இரண்டு மூணு சொன்னேன். அது நடந்து ஒரு மாசத்துக்கு மேல இருக்கும்.”
“போன தடவை கூப்பிட்டப்ப ஆறு மாசத்தில கான்ட்ராக்ட் முடிஞ்சதும் வந்திடுவேன்னு சொன்னார். இப்ப திடீர்னு கிளம்பி வர்றதுனால மனசில ஒரு பயம்.”
“கவலைப்படாதே! குடும்பத்தைப் பிரிஞ்சு சம்பாரிச்சது போதும்னு தோணியிருக்கும்.”
சனிக்கிழமை நள்ளிரவு. அடுத்தடுத்து வந்த சிங்கப்பூர் மலேஷிய தாய் விமானங்கள். வெளியே வரும் பயணிகள் வரிசையும் நீண்ட நடைவழியை ஒட்டிக் காத்திருந்த கும்பலும் கரைந்துவிட்டன. கடைசியில் சக்கர வண்டியில் வருவது…
சகாதேவன்.
கழுத்தில் கையளவு அகலத்தில் ஒரு வளையம். வினதாவுக்குக் குபுக் என்று கண்ணீர். நடைவழி முடியும் இடத்துக்கு விரைந்தாள். சக்கர வண்டி நின்றது. குரல் கேட்கும் அளவுக்கு அருகில் வந்ததுமே,
“வினதா! அழாதே! எனக்கு சீரியஸா ஒண்ணும் இல்ல.”
வினதா முன்னால் போக சக்கர வண்டியும் சகாதேவனின் பெட்டி பைகளைச் சுமந்த இன்னொரு வண்டியும் தொடர்ந்தன. அவர்களைப் பார்த்து முரளி வேனின் கதவுகளைத் திறந்தார். பெட்டிகள் பின்னால். சகாதேவன் முன்பக்கம் ஏற முரளி அவர் கனத்தைத் தாங்கினான். முதுகைத் திருப்பியபோது வலியை சகித்துக்கொள்ளும் முக இறுக்கம்.
“ஆளுக்கு ஐநூறு ரூபாய் தரணும்.”
அதைச் செய்து அவளும் ஊர்தியின் பின்-இருக்கையில் சகாதேவனுக்குப் பின்னால் அமர்ந்தாள்.
வேனைக் கிளப்பறதுக்கு முன்,
“முரளி! நான் உன்னை வரச்சொன்னது என்னை படியேத்தறதுக்கு மட்டுமில்ல…”
சகாதேவன் பக்கம் திரும்பி அவனையே பார்த்தார்.
“நீ மனைவியின் கான்சர், அப்பாவின் முடிவுன்னு வாழ்க்கையில பல கஷ்டங்களை அனுபவிச்சவன். எனக்கு நடந்த விபத்திலேர்ந்து ஒரு மாதிரியா தேற முடியும் என்கிற நம்பிக்கையை நீ வினதாவுக்கும் எனக்கும் தரணும்.”
“அதுக்கென்னங்க, என்னால ஆனதைச் செய்யறேன்.”
“வண்டியைக் கிளப்பு!”
பிரதான சாலைக்கு வந்ததும்.
“சரவணப்ரியா நீங்க 1-ப்ரோமோப்ரோபேன் பற்றி கேட்டதாச் சொன்னா.”
“தொழிலாளிங்களுக்கு அதனால உடல் பாதிப்பு. சரவணப்ரியா சொன்னதை இங்க என்னோட மேனேஜர் கஜமுகன் எடுத்துண்டார். அதைத் தயாரிக்கிற மோனார்க்கோ அவருக்கு வலை வீசினாங்க. அவர் மாட்டிக்கல. அங்கே மேனேஜரை விலைக்கு வாங்கிட்டாங்க. இங்கே இருக்கறதை விட தாய்லன்ட்ல பெரிய மார்க்கெட். அடுத்ததா மலேஷியா இன்டோனேஷியா. சந்தேகம் வந்தா எல்லா இடத்திலியும் விற்பனை குறைஞ்சிடும். நான் அப்பவே வேலையை விட்டு வந்திருக்கணும்.
“சனிக்கிழமைகளில் வாடிக்கையா ஒரு மோட்டார் சைக்கிள் டாக்ஸி. இன்டியா எம்போரியத்தில வாரத்துக்கு வேண்டிய பால் பழம் தவிர சோப் – இந்த மாதிரி சாமான்கள் வாங்க அழைச்சிட்டுப் போவான். போக வர பதினைஞ்சு இருபது கிலோ மீட்டர். மூணு வருஷமா நடந்திட்டிருக்கு. அவங்க ட்ராஃபிக் நடுவில புகுந்து ஓட்டறதை நீ பார்க்கணும்! அசந்து போயிடுவே. முரளி!
“போன சனிக்கிழமை. பத்து நிமிஷம் முன்னாடி இன்னொரு டிரைவர் வந்தான். நான் ரஸ்ஸோட தம்பி. அவனுக்கு உடல் சரியில்லன்னு சொன்னான். அவன் தம்பியும் மோட்டர்பைக் டாக்ஸி ஓட்றவன்னு ரஸ் சொன்ன ஞாபகம். அதனால சந்தேகப்படல. கொஞ்ச தூரம் போனதும் ஒரு ஸ்ட்ரெட்ச்ல வேகமா ஓட்டி திடீர்னு ப்ரேக் போட்டிட்டு அவன் குதிச்சுட்டான்.”
“தெரு நடுவில…”
“நான் எதிர்பார்க்கவே இல்ல. டயர் வெடிச்சு நான் தூக்கி எறிஞ்சு விழுந்தேன். ஹெல்மெட் போட்டதாலை தலை தப்பிச்சிது. ஆனா முதுகில அடி. அப்புறம் நடந்தது ஒரு கெட்ட கனவு மாதிரி. மறுநாள் நினைவு திரும்பினப்ப ஹாஸ்பிடல் படுக்கை. முப்பது வயசுக்குள் ஒரு டாக்டர். கை கால்களையும் விரல்களையும் அசைக்கச் சொன்னார். அவரே மடக்கிப் பார்த்தார். ‘என் பெயர் க்ரான்ட். உனக்கு மூணு வரம் க்ரான்ட் பண்ணறேன். கேள்!’னு சொன்னார்.
என் உயிருக்கு ஆபத்து இருக்கக் கூடாது. மூளையில எந்தக் குறையும் இருக்கக்கூடாது. மூணாவது…
நானே கொடுக்கறேன். முதுகுத்தண்டில சீரியஸா அடி படல. நீ இதுக்கு நன்றி சொல்லணும்னு என் பாக்பேக்கைக் காட்டினார்.
அவரால தான் நான் வேகமா முன்னேறினேன்.”
“மோனார்க்கோ கெமிகல் கம்பெனிக்காரங்க மோட்டார்சைக்கிளில பழைய டயரை மாட்டி அந்த ஆளை அனுப்பி இருப்பாங்களோ?”
“இருக்கலாம். ஆனா நிரூபிக்க எந்த ஆதாரமும் கிடையாது. எத்தனையோ ஆக்ஸிடென்ட் தினம் நடக்கறது. கம்பெனிலேர்ந்து இன்ஷுரன்ஸ் பணமும் ஒரு வருஷ சம்பளமும் கிடைக்கும்.”
வினதா முன்னால் குனிந்து அவன் கைகளைக் கட்டிக்கொண்டாள்.
“அதை வச்சு சமாளிச்சிக்கலாம்.”
தாய்லாந்து நேரத்துப் பழக்கத்தினால் சகாதேவனுக்கு ஜன்னலில் வெளிச்சம் தெரிந்தபோதே விழிப்பு வந்தது. பல வருஷம் வாழ்ந்த வீடு என்றாலும் எழுந்து செல்ல தயக்கம். வினதாவைக் கூப்பிடவும் மனம் இல்லை.
கதவைத்தட்டும் ஓசை. சிரமப்பட்டு எழுந்து கால்களை நெருக்கமாக வைத்து நடந்தான். கதவைத் திறந்ததும், மானசா அப்பாவின் வளைந்த முதுகைப் பார்த்து வந்த கண்ணீரை அடக்கி அவனைக் கட்டிக்கொண்டாள்.
முன்பு பார்த்ததற்கு என்ன வளர்ச்சி! உயரத்தில் மட்டுமல்ல, அகலமான உடற்கட்டிலும், முகத்தின் முதிர்ச்சியிலும். குறுகலான நெற்றியில் இருந்து சற்றே இடப்புறமாக ஓடிய வகிடு கற்றைக்கூந்தலில் முடிந்தது.
நடைவழியிலே நின்ற ஆதவியின் லட்சணமான முகத்தில் ஆச்சரியப் பார்வை.
சகாதேவனின் மனக்கண்ணில் திடீரென்று தூக்கியெறியப்படும் உணர்வு.
காலை ஐந்துமணி. சரவணப்ரியா காப்பி குடித்துமுடிப்பதற்குள் அலைபேசியின் அழைப்பு. 91 அதைத்தொடர்ந்து பத்து எண்கள். தொலைவில் இருந்து அழைத்தவர் தெரியாதவராக இருந்தாலும் அவர் ஏமாற்றம் அடைய வேண்டாம் என,
“ஹலோ!”
“ஹலோ! அத்தை! இது மானசா.”
சகாதேவனின் உடல்நிலை பற்றிய அவசர அழைப்போ?
“அப்பா எப்படிம்மா இருக்கார்?”
“வந்ததுக்கு இப்ப பரவாயில்ல. குளிக்கறதுக்கு அம்மா உதவி தேவை. சமையல் வேலை அதிகமா இருந்தா நான் செய்வேன். சாப்பிட்டதும் தாத்தா வந்து அவரை மெதுவா நடத்தி அழைச்சிண்டு போவார். அம்மா வேலைலேர்ந்து திரும்பி வர்ற வரைக்கும் அவங்க வீட்டில இருப்பார். வாரத்துக்கு ஒரு தடவை ஃபிசிகல் தெரபி.”
“போன தடவை பேசினப்போ ‘சால்வென்ட்ஸ்’ல கன்சல்டிங் செய்யப் போறதா சொன்னார்.”
“அதுக்காக கம்ப்யுட்டர் வழியாக தேடறதுல நேரம் போகும். சாயந்தரம் சமையல் ஆனதும் அம்மா அழைச்சிண்டு வருவா.”
“சரி, பாடத்தில எதாவது சந்தேகமா?”
“ஊகும்.”
அப்படியென்றால் அழைப்பின் காரணம்…
“இன்னும் கொஞ்ச நாளைக்கு அம்மாவோட வருமானத்தில நாங்க காலம் தள்ளணும்…”
தாயின் பாரத்தைக் குறைக்க ஆசை. இந்த வயதில் என்ன பொறுப்பு!
“யூ.எஸ்.னா உன் வயசுக்கு ‘க்ரோகர்’ இல்ல ‘மேஸிஸ்’ல சில்லறை வேலை கிடைக்கும்.”
“‘க்ரேஸ்’லியும் ‘அஜந்தா’லியும் அதுக்கு ஏற்கனவே பல பெண்கள் இருக்காங்க.”
“அதனால…”
“பதினாறு வயதுக்குள்ள இருக்கறவங்களுக்கு ஒரு சிறுகதைப்போட்டி.”
“பரிசு…”
“ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ இரண்டுக்கும் ஃபீஸ், மத்த சில்லறை செலவுகள்.”
அந்த இரண்டு வருஷங்கள் அவள் படிப்புக்குக் கவலை இல்லை.
மானசா எழுதி பரிசுபெற்ற கட்டுரைகளை சரவணப்ரியா படித்து இருந்தாள். தமிழ் ஆங்கிலம் எதுவானாலும் இலக்கண சுத்தமான அமைப்பு. தெரிந்தவை மட்டுமல்ல புரட்சிகரமான விஷயங்களையும் கோர்வையாக, தெளிவாக, படிப்பவரின் கவனத்தைக் கடைசிவரை பிடித்துவைக்கும் திறன். புதிதாகக் கற்பனை செய்ய அவை மட்டும் போதுமா?
“இதுவரைக்கும் கற்பனையா…”
“எழுதினதில்ல. எப்படின்னு நீங்க தான் வழிகாட்டணும்!”
“எழுத்துக் கலையின் முதல்படியில நீ கால் வைக்கப்போறே. என்ன செய்யக்கூடாது என்பதை முதல்ல சொல்லிடறேன். எழுதணும்னு விரல்கள் விரியும்போதே நீ விரும்பிப் படிச்ச எழுத்தாளர்களின் கதைகளும் வாக்கியங்களும் உன் மூளையில சுத்திசுத்தி வரும். சுஜாதா கதைகளை நீ படிச்சிருக்கே, இல்லையா?”
“நிறைய.”
“ஜாக்கிரதையா இல்லாட்டா அவரோட கவர்ச்சிகரமான நடை சுலபமா பற்றிக்கொள்ளும்.”
“ம்ம்…”
“காவ்யா விஸ்வநாதன் தெரியுமா?”
“கேள்விப்பட்ட பெயரா இல்ல.”
“இது பல வருஷத்துக்கு முந்தி நடந்தது. பதினெட்டு வயசில காவ்யா எழுதின சின்ன பெண்களின் ரொமன்டிக் கதை. அது திடீர்னு பிரபலம் ஆயிடுத்து. ஒரு வாரத்துக்குள்ள அதில சில வாக்கியங்கள் வேற அதேமாதிரி கதைகளிலேர்ந்து திருடினதுன்னு யாரோ குற்றம்சொல்ல… எல்லா பிரதிகளையும் மார்க்கெட்லேர்ந்த எடுத்துட்டாங்க.”
“ஐயோ பாவம்!”
“அவ ஒரு இந்தியப்பெண். அதுவும் புகழின் உச்சியில் இருந்து பழியின் பாதாளத்துக்கு ஒரே வாரத்தில் தள்ளப்பட்ட சின்னப்பெண். அதனால, அவ மேல எனக்குப் பரிவு உணர்ச்சி உண்டு. கற்பனைத் திருட்டுன்னு மத்தவங்க மாதிரி அவ மேல அபாண்டமா பழிபோட மாட்டேன். சமீப காலத்தில அவ ரசிச்சுப்படிச்ச நாவல்களின் ஒருசில வார்த்தைகள் அவளை அறியாமலே அவ எழுத்துல புகுந்திருக்கும். அந்த மாதிரி தவறு நடக்கக்கூடாதுன்னா உன் வாழ்க்கையில நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை வச்சு நீ எழுதணும். நடந்த மாதிரியே இருக்கணும்னு அவசியம் இல்ல. கதைக்காக கூட்டியோ பெருக்கியோ எழுதலாம். ஆன அதனுடைய உணர்வுகளும் தாக்கமும் கதையில இருக்கணும். அப்ப யாரும் நீ யாரையோ காப்பி அடிச்சேன்னு குறை சொல்ல முடியாது. எதிர்காலத்தில உனக்கே ஒரிஜினல் கற்பனையும் நடையும் வர்ற வரைக்கும் இது ஒரு நல்ல டெக்னிக்.”
“நீங்க சொல்றபடி எழுத முடியுமான்னு பார்க்கறேன்.”
“அத்தை! பொங்கல் அன்னிக்கி எழுத ஆரம்பிச்சேன்.”
“நல்ல நாள்.”
“மூணு வருஷத்துக்கு முன்னாடி பொங்கல் சமயத்தில… எங்க குடும்பத்துக்கு ஒரு எதிர்பாராத பரிசு.”
“அப்ப நான் கூட சென்னை வந்ததா நினைவு.”
“நீங்களும் கதையில இருக்கீங்க.”
“அப்ப.. நீ எதைப்பத்தி எழுதப்போறேன்னு தெரியறது. அது ஒரு அபூர்வமான நிகழ்ச்சி. கதை நல்லா வரும்.”
“முழுக்க எழுதினதும் அனுப்பறேன்.”
“முதல் முயற்சிக்கு பரவாயில்ல. டயரி மாதிரி எழுதியிருக்கே. படிக்கும்போது துண்டு துண்டா ஒட்டாம இருக்கு.”
“ஒண்ணு சேர்க்கறேன்.”
“எழுதறது முதல் கட்டம், அதை கொஞ்சம் கொஞ்சமா திருத்தறது அடுத்த கட்டம். பின்னது முன்னததைவிட அதிக நேரம் எடுத்தாலும் எடுக்கும். முயற்சியைக் கைவிடாதே!”
“நல்ல முன்னேற்றம். கதையை என் நோக்கில எழுதியிருக்கே. தாங்க்ஸ்.”
“அம்மா, இல்ல நான் சொல்றமாதிரி எழுதிப் பார்த்தேன். சரிப்பட்டு வரல. கதையில நீங்க நேரடியா சம்பந்தப்படல. உங்க பார்வையில எழுதினது நன்னா வந்திருக்கு.”
“சரி தான். என்னைப்பத்திய ஒருசில விவரங்கள் கதைக்கு அவசியம் இல்லன்ன வெட்டிட்டேன். அந்த சமயத்தில ஆதவியின் நிலையை நான் மனோதத்துவ ரீதியில அலசிப்பார்த்தேன். கதை என் பார்வையில இருக்கறதால அதையும் சேர்க்கறது நல்லது. அதுக்காக சைகாலஜில சில பகுதிகளை உனக்கு அனுப்பப்போறேன். அடிப்படை விஷயங்கள் தான். உனக்குப் புரியும்.”
“படிச்சுட்டு நான் எழுதறது தப்பா இருந்தா…”
“திருத்தறேன்.”
“நீ எழுதினதில பெரிய தப்பு எதுவும் இல்ல. சில வார்த்தைகளை மாத்தியிருக்கேன், வாக்கியங்களின் நீளத்தைக் குறைச்சிருக்கேன். கதைக்கு பால்மொழி என்கிற பெயர் மிகப்பொருத்தம். அதுக்கே உனக்கு பரிசு தரணும்.”
“அப்பாடா!”
“சிறுகதை முதல் வரியிலேயே சூடுபிடிக்கணும், முக்கால்வாசி இருக்கும்போதே முடிஞ்சிடணும். நீ எழுதினது முழுவதையும் சேர்த்து வச்சுக்கோ! எதிர்காலத்தில உதவும். ஆனா, போட்டிக்கு அனுப்பற கதை சனிக்கிழமை காலையில தொடங்கி நோம் கோம்ஸ்க்கியை ஆதவி மட்டம் தட்டறதோட முடிந்துவிடும். அதாவது கதையின் கால நீளம் இருபத்தியாறு மணி. என்னோட பழங்கால அளவுகோலில் ஒரு சிறுகதை அப்படித்தான் இருக்கணும். கடைசியா ஒண்ணு. எழுதி முடிச்சதும் இரண்டு வாரம் அதை யோசிக்காம மறுபடி படிச்சுப்பார்! சின்ன சின்ன தப்புகளெல்லாம் பெரிசாத் தெரியும்.”
பால்மொழி
மானசா சகாதேவன்
சென்னை வருகைகள் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வதால் சரவணப்ரியாவுக்கு அவை மறக்காது. அந்த ஒன்று மற்ற வருகைகளில் இருந்து தனித்து நினைவில் நின்றது.
சனிக்கிழமை காலை… … …
……..
அதன்படி ஒருசில ஒலிச்சேர்க்கைளைத் தாங்களே உருவாக்கவும் அவர்களால் முடியும். இதைப் பால்மொழி என்று சொல்லலாம். பால்பற்கள் விழுந்து அவற்றின் இடத்தில் நிரந்தப் பற்கள் வளர்வதுபோல பால்மொழியும் கொஞ்சம்கொஞ்சமாகத் தேய்ந்து அதன் இடத்தைத் தாய்மொழி நிரப்புகிறது. எப்படி என் தியரி? நான் ரொம்ப ப்ரில்லியன்ட், இல்ல? ப்ரொஃபசர் கோம்ஸ்க்கி!
ம்ம்.. ஒருவிதத்தில் நீ சொல்வது சரியென்று தான் தோன்றுகிறது. ஆனால், இந்த மொழி மாற்றம் ஒரு குறிப்பிட்ட குழந்தைக்கு நத்தை வேகத்தில் நடக்கிறது என நினைக்கிறேன்.
தபிபதி வரிகரிதரி
(தொடரும்)