இன்று நேற்று நாளை 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’- திருக்குறள்

இந்த உலகத்தைப் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க தெளிவும், குழப்பமும், மீள் தெளிவும், மீள் வினாக்களும் எழுகின்றன அல்லவா? 

‘அ’காரம், ‘ம’காரம். ‘உ’காரம் மூன்றும் சேர்ந்த ஓம் எனும் பிரணவத்திலிருந்து தோன்றியது உயிர்க்குலம் நிரம்பிய இந்த உலகு என்ற கருத்து பெரும்பான்மையான இந்துக்களிடம் நிலவுகிறது. 

ஆதியில் ‘அது’ இருந்தது, குணங்களற்று, நிறங்களற்று, வாசனைகளற்று. அதைப் ‘பிரும்மம்’ என்று அழைத்தார்கள். அதில் உள்ளிருந்த சக்தி வெளியானதும், மூன்று முதல் தேவர்கள் வந்தனர். சிவமாக இருந்த ஒன்று, பல்வேறு உருத் தோற்றங்களை எடுத்துக் கொண்டு ஆடிய ஆடல் அது. 

அறிவியல், உலகம், ‘பெரு வெடிப்பிற்குப்’ (Big Bang) பின்னான நிகழ்வு என்று சொல்கிறது. அதற்கு முன்னே என்ன இருந்தது என்ற கேள்விக்கு ‘ ஒன்றுமில்லை’ (Nothingness) எனப் பதில் சொல்கிறது. இருப்பது இல்லாது போகும், இல்லாதது எப்படி இல்லாததாகும் என்ற கேள்விக்கு அண்டவியல், இயற்பியல், மானுடவியல் பல கோட்பாடுகளை மழுப்பலாகச் சொல்கின்றன. 

கிரேக்கர்களின் தொல் கதைகளும், இந்தியச் சிந்தனைக் கூறுகளில் இடம் பெறும் கதைகளும் இந்தக் கட்டுரையில் சுருக்கமாக இடம் பெறுகின்றன. கிரேக்கத் தொன்மங்களும், புனைவுகளும், கட்டுக் கதைகளும் பற்றி ஸ்டீபென் ஃப்ரை (Stephen Fry) எழுதியுள்ளதை எடுத்துக் கொண்டு வளரும் இக்கட்டுரையில், நம் இந்தியப் புராணங்களைப் பற்றியும் சில குறிப்புகள் இடம் பெறும். 

தொன்ம கிரேக்கக் கதைகள் வழியே பல்வேறு புராணங்கள், கட்டுக் கதைகள், தொன்மங்கள் பற்றி படித்திருந்தாலும், தன்னை மிகவும் ஈர்த்தவை கிரேக்கத் தொன்மங்களே என்று சொல்கிறார் அவர். புராணங்கள், கதைகள் தொடங்கிவிடும், ஆனால், முடிவுறுமா? டைடன்களாலேயே (Titan) தூக்க முடியாதவை புராணங்கள் என்று நகைச்சுவையாகச் சொல்பவர், ஆதிக் கடவுள்கள் பற்றி கிரேக்கத்தில் வழங்கும் கதைகளை, தொன்மங்களைச் சொல்லிச் செல்கிறார். 

உருவாக்கலும், முதல் விதியும் (Creation and First Order) 

முன்னரே நாம் பார்த்தது போல் ‘பெரு வெடிப்பு’ நிகழந்து உலகம் பிறந்துள்ளது என்று அறிவியல் சொல்கிறது. அந்தப் பெரு வெடிப்பு நிகழ்வை காலமும், வெளியும் இணைந்த தருணம் (Space-Time merger) என்று இன்றைய இயற்பியலாளர்களும், அண்டவியலாளர்களும் சொல்கின்றனர். உலகம் கட்டமைக்கப்பட்டது போல் தோன்றுகிறது. அது கணித விதிகளுக்கு உட்பட்டது என்பது, கிரேக்க தத்துவவாதியான அனாக்ஸி மேன்டரின் (Anaxi Mander) சிந்தனை. கிரேக்கத் தொன்மம், தொடக்கத்தில் குழப்பம் (Chaos) மட்டுமே இருந்ததாகச் சொல்கிறது; ஆம், அப்படியென்றால்? ஒருக்கால், ஒரு தெய்வம், அல்லது ‘ஒன்றுமில்லாமை’ அல்லது ஃப்ரை சொல்வது போல், ஒருக்கால் ‘அண்டத்தில் ஒரு கொட்டாவி.’  எதுவாக இருந்தாலும், மாபெரும் நெசவான இந்த அகிலத்தில், ஒரு சிறிய விண்மீனைச் சுற்றி வரும் நடுத்தரக் கோளான இந்தப் பூமி, விஞ்ஞானக் கூற்றுப்படி ஒடுங்கும். அதாவது, ‘ஒன்றுமில்லாததிலிருந்து புறப்பட்டு அதை நோக்கி முடிவுறும் பயணம். 

பெரு வெடிப்பிற்கு முன்னர் யார் அல்லது என்ன இருந்தது அல்லது கிரேக்கம் சொல்லும் ‘குழப்பத்தின்’ முன்னே யார் அல்லது என்ன இருந்தது என்று வியப்படைகிறோம் அல்லவா? ஒன்றுமில்லை என்பதே பதில். நேரம் அப்போது நேரம் ஜனித்திருக்கவில்லையே? அதனால், ‘முன்னர்’ என்ற கேள்விக்கு வாய்ப்பில்லை அல்லவா? 

எளிமையாக இப்படிச் சொல்லலாம் கிட்டத்தட்ட கூம்பின் வாய்ப்பகுதி ‘வெளி’யாக, அதன் பக்கங்கள் ‘காலமாக’ இருப்பதாகக் கற்பனை செய்தால், காலமும், வெளியும் இணையும் இடம் ஒன்றுமில்லாததாகிவிடுகிறது. நேரம் என்பதே இல்லாத நேரம் அது! 

மிக அற்புதமாக ‘நாசாதிய சூக்தம், 10 வது மண்டலம், ரிக் வேதம் இதைச் சொல்கிறது. அகிலம் தோன்றியதைப் பற்றிய அற்புதமான வரிகள் அவை. 

Nasadiya Sukta – The Big Bang? – The Creation Hymn – The RigVeda (10th Mandala Hymn 129)  

நம் புராணங்களின் படி விஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து படைப்புக் கடவுள் தோன்றினார். அவர் முதன் முதலாக ஏழு உயிர்களைப் படைத்தார். மரீசி, அங்கிரஸ், அத்ரி, கிருது, புலஹர், புலஸ்தியர், கசியபர் .இவர்களால் இந்த உலகில் புழு, பூச்சிகள் தொடங்கி பல்லுயிர்கள் உண்டாகின. 

அதே நேரம் தட்சன் எனும் நாகத்தை முதல் படைப்பாகச் சொல்வதும் உண்டு. அந்த தட்சனின் மகளான கத்ரு, காசியபரை மணந்தவள். அவள் இந்த உலகை சுற்றி வளைத்திருக்கிறாள் எனவும் 13 நாகினியர்களால் நல்லதும், அல்லாததும், இடைப்பட்டதும் நடக்கின்றன என்றும் கதைகள் உண்டு. தட்சன் படைத்த இந்த உலகின் நாகினியர்கள் அதிதி, திதி, தனு, அரிஷ்டிரை, சுரசை, கசை, சுரபி, வினதை, தாம்ரை, குரோதவஸை, இரா, கத்ரு, முனி. உலகில் காணப்படும் அனைத்து உயிர்களும் இந்த நாகினியர்களுக்குப் பிறந்தவை என்ற கூற்று உண்டு. அதிதி பன்னிரு சூர்யர்களையும், எட்டு வசுக்களையும் பெற்றெடுக்கிறாள். திதிக்கு, ஹிரண்யாக்ஷன், ஹிரண்ய கசிபு போன்ற தைத்யர்கள் பிறக்கிறார்கள். தனுவிற்கு 11 ருத்திரர்கள்; கத்ருவிற்கு பெரும் பாம்புகளும், வினதைக்கு கருடனும் பிறக்கிறார்கள். 

நாம் கிரேக்கத்திற்கு திரும்புவோம். குழப்பத்திலிருந்து இரண்டு உருவானது. ஒன்று எரெபஸ் (Erebus) என்ற இருள், மற்றது ‘நிக்ஸ்’ (Nyx) என்ற இரவு. இவர்கள் இருவரும் இணைந்து, ஹெமிரா (Hemera) என்ற பகலையும், ‘ஈதர்’ (Aether) என்ற ஒளியையும் உருவாக்கினார்கள். இன்னமும் நேரம் (Time) பிறக்கவில்லை. பகல், ஒளி இவற்றுடன், காயா(Gaia-கையா என்றும் சொல்லப்படுகிறது) என்ற பூமியும், ‘தார்தாரஸ்’ (Tartarus- தாரஸ் என்றும் சொல்கிறார்கள்) என்ற பாதாளமும் பிறந்தன. இவர்கள் யாரையும் கடவுள் என்று கிரேக்கப் புராணங்கள் சொல்வதில்லை. இவர்களைப் பற்றிய கதைகளும் இல்லை. இவர்கள் பழம்பெருங்காலத்தின், தெய்வீகத் தன்மை சார்ந்த தேவர்கள். இவர்களிடமிருந்தே, கடவுள்கள், தேவர்கள், அசுரர்கள் பிறக்கிறார்கள். கிரேக்கப் புராணங்கள் தொடங்குவது இங்கிருந்து தான். 

இன்றைய அறிவியல் பல்வேறு உலகங்கள் அகிலத்தில் உள்ளது எனப் பேசுகிறது இந்துக்கள் 14 உலகங்களைச் சொல்கிறார்கள். அவை மேலே ஏழாக, கீழே ஏழாகச் சொல்லப்படுகின்றன. 

நாம் வாழும் பூமி- மண் உலகம் அதற்கு மேலே 

புவர் லோகம்- கிரகங்கள், நட்சத்திரங்கள் 

சுவர் லோகம்- முனிவர்கள் 

மஹர் லோகம்- இந்திரன் முதலான தேவர்கள் 

ஜனோ லோகம்- பித்ருக்கள் 

தபோ லோகம்- தேவதைகள் 

சத்ய லோகம்- ப்ரம்மன் 

கீழே உள்ளவை 

அதல லோகம்- அரக்கர்கள் 

விதல லோகம்- அரக்கர்கள் 

சுதல லோகம்- அரக்கர் குலமாக இருந்தாலும், தானம் செய்தவர்கள். 

தலாதல லோகம்- மாயாவிகள் 

மகாதல லோகம்- புகழ் பெற்ற அசுரர்கள் 

பாதாள லோகம்- வாசுகி உள்ளிட்ட பாம்பு 

ரஸாதல லோகம்- அசுர குரு மார்கள். 

பூமி, வானம், கடல்

மீண்டும் கிரேக்கம்- காயா தானாகவே இரு பிள்ளைகளைப் பெறுகிறாள்- பான்டெஸ் (Pontus)) என்ற கடலும், யுரானஸ் (Ouranos) என்ற வானமும். 

சமீபத்திய அறிவியல் நிகழ்வொன்றைச் சொல்வதும், குந்தி, மாத்ரியை நினைவு கொள்வதும் இங்கே பொருத்தமாக இருக்கும். இரு ஆண்களிடமிருந்து க்ரோமசோமை (நிருவுரு-Chromosome) எடுத்து, அதில் எக்ஸ், (X) வொய் (Y) என்றிருக்கும் ஜோடி ஒன்றிலிருந்து வொய்யை நீக்கி, மற்றவரிமிருக்கும் எக்ஸ், வொய்யை மாற்றாமல் ஆய்வகத்தில் இணைத்து ஒரு உயிரைப் படைத்தார்கள். 

சூர்யன், யமன், வாயு, இந்திரன், அஸ்வினி தேவர்களை  வணங்கி, கர்ணன் முதலான ஆறு பிள்ளைகள் பிறந்த மகாபாரதம் நாம் அறிந்த ஒன்று. காயா என்பவள் பூமி. அவளைத் தாய் என்றுதான் குறிப்பிடுகிறோம். அவள் விளைவிப்பவள். 

காயாவின் மைந்தனான யுரானஸ் அவளைப் புணர்கிறான்- அதற்கெனவே நிற்கும் ஆரோக்கியமான ஆண் குதிரை பெண் குதிரையைப் புணர்வதைப் போல என்று ஃப்ரை சொல்கிறார். அந்த சமயத்தில், நேரம், ஆளுமை, நாடகம், குணம், அர்த்தம் எல்லாம் பிறக்கின்றன. நமது புராணக் கதைகள் ஒன்றில், பிரும்ம தேவன், தான் படைத்த பெண்ணின் அழகில் மயங்கி அவளை அடைய விரும்புகிறான்; இது சரியில்லை, நாம் அவள் தந்தையல்லவா என்றும் மருள்கிறான். விளைவு அவன் தொழிலான சிருஷ்டி நின்று விடுகிறது. இருக்கும் உயிர்களை எடுத்துச் செல்ல யமன் அஞ்சுகிறான்-ஏனெனில் அவனால் பூமியின் மாந்தர் குலத்தை முற்றாக அழிக்க முடியாது. பிரும்மன் படைத்த பெண், பிரும்மனை ஏற்க முடியாமல் தவிக்கிறாள். கடைசியில், பிரும்மனின் விருப்பம் ஈடேறுகிறது. 

காயாவிற்கும், யுரானசுக்கும் அழகான ஆறு ஆண் குழந்தைகளும், ஆறு பெண் குழந்தைகளும் பிறக்கிறார்கள். அவர்கள் தான் டைடன்ஸ். (Titans-Brothers- Oceanus, Coens, Crives, Hyperion, Lapetus, Cronus Sisters-Thea,Rhea,Themis,Myemosyne,Phoebe,Tethys) இவர்கள் தான் தெய்வீகப் பிறப்பில் இரண்டாம் வரிசை. இந்தப் பன்னிரண்டு அழகுப் பிள்ளைகளைத் தவிர, இரு முறை, மூவராக. அசிங்கமான குழந்தைகள் பிறக்கிறார்கள். சைக்ளோப் (Cyclope)  என்ற ஒற்றைக் கண் அரக்கன், ஹெக்கடான்சிரிஸ் (Hecatonchires) என்ற 50 தலைகளும், நூறு கரங்களும் கொண்ட உ.ருவத்தினர் ( நம் இராவணனைப் போல, கார்த்தவீர்யாஜுனனைப் போல. இராவணனைப் பற்றி பலர் அறிந்திருக்கிறார்கள். கார்த்தவீர்யாஜூனன் இராவணனையே வென்ற வீரன். 85,000 ஆண்டுகள் வாழ்ந்தவன். வலது உடல் பகுதியில் 500 கரங்களும், இடது பகுதியில் 500 கரங்களும் கொண்டவன். வலது கரங்கள் ஒரு செயலைச் செய்யும் போதே இடது கரங்கள் ம்ற்றொன்றைச் செய்யுமாம். மேலும், அவன் விரும்பும் போதுதான் கைகள் உடலிலிருந்து எழும். இவனை சுதர்சன சக்ரம் என்றும் சொல்வார்கள்) ) அழகற்ற தன் குழந்தைகளைப் பார்த்தாலே குமட்டிக் கொண்டு வருகிறது யுரானசிற்கு. காயா இந்தக் குழந்தைகளையும் நேசிக்கிறாள். ஆனால், யுரானஸ், அந்தக் குழந்தைகளை மீண்டும் காயாவின் வயிற்றுக்குள் பலவந்தமாகத் திணித்து விடுகிறான். 

காயா துடிக்கிறாள். யுரானசைப் பழி வாங்க நினைக்கிறாள். 

மகாபாரதக் கதை ஒன்று. அரசுக் கட்டில் யாருக்கு என்பதில் பெண்களிடையே நடக்கும் மௌன யுத்தம். குந்திக்குக் காட்டில் யுதிஷ்டிரன் பிறந்து விடுகிறார். செய்தி கேட்ட காந்தாரி தன் வயிற்றை ஓங்கி அறைந்து கொள்ள நிணமும், இரணமுமாக வெளி வரும் சிசுப் பிண்டங்களை நூறு பானைகளில் பிடித்து கௌரவர்களாக வளர்த்து எடுக்கின்றனர். இதில் கவனிக்க வேண்டியது மாயத் தன்மைகளையும், மனிதர்களின் குணங்களையும் மட்டுமே. 

ஒன்பது நாட்கள் இரவும், பகலும் ஊன் உறக்கமில்லாமல், காயா, ஆத்ரிஸ் (Othrys) மலை முகடை அடைகிறாள். (ஒன்பது என்பது உலகப் பொது எண்; நமக்கு நவராத்திரி). அங்கே எரிகல், கருங்கல், ஆபியாலைட் (Ophiolite) என்ற கரு நாகப் பாறைகள், வைரம் இவற்றைக் கொண்டு, உடைக்க முடியாத அறிவாளைச் செய்கிறாள். (இதுவும் கிட்டத்தட்ட இந்திரனனின் வஜ்ராயுதம் போன்றது.) 

பின்னர், தன் அழகிய மைந்தர்களை தங்களது தந்தையை இந்த வாளால் கொன்று விடக் கேட்டுக் கொள்கிறாள். அனைவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது- கடைசி மகனான, அழகனான, நிதானமான, வலிமையான, க்ரோநோஸ் (Kronos) அன்னைக்கு உதவ முன் வருகிறான். அவனுக்குத் தந்தையைப் பிடிக்கவில்லை. (நாம் அறிந்துள்ள பரசுராமரின் புராணத்தை நினைவு படுத்திக் கொள்வோம். ஜமதக்னி முனிவர், தன் புதல்வர்களை அழைத்து மனைவி ரேணுகாவை கழுத்தறுத்துக் கொலை செய்யச் சொல்கிறார். பரசுராமர் மட்டுமே முன் வந்து, துணிந்து அச் செயலைச் செய்துவிட்டு, அதன் பரிசாக அன்னையை மீண்டும் தந்தையின் மூலமாகவே உயிர்ப்பித்துப் பெறுகிறார்.) 

காயா, க்ரோநோசை அழைத்துக் கொண்டு மீண்டும் ஆத்ரிஸ் மலைக்கு அறிவாளுடன் வருகிறாள். மாலை நெருங்கியதும், அவளை நெருங்கும் யுரொனசை, அவர்களின் மகனான க்ரோநோஸ் என்ற டைடன், தந்தையின் பிறப்புறுப்பை அறிவாளால் வெட்டி விடுகிறான். வலியால் பதறித் துடித்து பூமியில் விழுந்து புரளும் யுரொனசை, பூமியின் அஸ்திவாரத்தின் கீழே இருக்கும் புழுதிப் புயலில் தள்ளி விட்டு விடுகிறான க்ரோநோஸ். 

படுகுழியில் தந்தையைத் தள்ளிய பிறகு, ஆத்ரிஸ் வரும் க்ரோநோசை மற்ற டைடன்கள் அனைவரும் தலைவனாக ஏற்கிறார்கள். விருந்து நடக்கிறது. கொண்டாட்டத்தின் முடிவில், ரியா (Rhea-ரேயா) என்ற தன் சகோதரியுடன் உறவு கொள்கிறான் அவன். அவள் அவனை மிகுதியும் நேசிக்கிறாள்; அந்தக் காதலில் உருகுகிறாள்.  

ரியா கருவுறுகிறாள்; ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. க்ரோநோசிற்கு தந்தை இட்ட சாபம் காதுகளில் ஒலிக்கிறது. அவன் அந்த அழகிய பெண் குழந்தையை சிப்பியை முழுங்குவது போல் விழுங்கி விடுகிறான்; அதைத் தொடர்ந்து பிறக்கும் மற்ற நான்கு குழந்தைகளுக்கும் அதே கதி.(பூனை, நாய் போன்ற சில விலங்குகள் பிரசவித்தவுடன் தன் குட்டிகளில் ஒன்றைத் தின்று விடும்.) ரியா ஆறாவது முறையாகக் கருவுறும் போது க்ரோநோசிடம் அவளுக்கிருந்த காதல் கருகி விடுகிறது. அவள் ஒரு திட்டம் திட்டுகிறாள். 

மேல் பத்தியைப் படித்ததுமே நாம் கம்சனையும், தேவகியையும், அவர்களின் முதல் ஆறு குழந்தைகள் அடைந்த நிலையையும் நினைத்துக் கொள்வோம். இன்னொரு கதையும் இருக்கிறது. ஒரு சாபத்தினால் அஷ்ட வசுக்கள் பூமியில் பிறக்க நேரிடுகிறது. அதில், முதல் எழுவருக்கும் சாப விமோசனமாக பிறந்தவுடன் இறந்து விடலாம் என்ற வரமும் தரப்படுகிறது.  மன்னன் சந்தனுவை மணந்த கங்கையானவள் முதல் ஏழு குழந்தைகளையும், பிறந்தவுடன் கங்கை ஆற்றில் போட்டுவிடுகிறாள். எட்டாவது மகனையும் அவள் அவ்வாறு செய்ய நினைக்கையில், தன் வாக்குறுதியையும் மறந்து, சந்தனு ராஜா அவளைத் தடுத்து நிறுத்த, அவள் தேவ விரதனை, அந்த எட்டாவது சிசுவை, வளர்த்து உரிய காலத்தில் அரசரிடம் ஒப்படைப்பதாகவும், ஆனால், இனி அவர் மனைவி என அவள் அரண்மனையில் இருக்கமாட்டாள் என்றும் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறாள். அந்தக் குழந்தைதான் பீஷ்மர். 

ரியா, முதலில் க்ரீட்டிற்குப் (Crete- கிரேக்கத்தில் உள்ள மலையும், குகையும்)) போய், அங்கே, அமால்தியா (Amalthea) என்ற பெண் ஆட்டையும், ‘மெலியே’ (Meliae) என்ற சாம்பல் மரத்தின் வேர், இலை, கிளைகளின் சுரப்பு நரம்புகளையும் கலந்து ஆலோசிக்கிறாள். (அனுமன், அசோக வனத்தில் சிஷும்பா என்ற மரத்தில் மறைந்து அமர்ந்து பின்னர் தான் சீதையைச் சந்திக்கிறான். அந்த மரமும் சாம்பல் வர்ணம் கொண்டது.) பின்னர், வழுவழுப்பான, அவரைக்காய் விதை வடிவக் கல்லை துணியினால் வரிந்து கட்டுகிறாள். இப்போது அனைத்தும் தயார் நிலையில். 

ஒரு மதியத்தில், தன் பிரசவ நேரம் நெருங்குகிறது என உணர்ந்த அவள், தாள முடியாத வலி இருப்பது போல் கூச்சலிடுகிறாள்; பின்னர் பிறந்த குழந்தை அழும் ஒலியை தத்ரூபமாக எழுப்புகிறாள். க்ரோநோஸ், வழக்கம் போல வந்து கல் பொதியப்பட்ட மூட்டையை குழந்தை என நினைத்து அதை விழுங்கி விட்டு தன் மனைவியின் கதறலையும் பொருட்படுத்தாமல் சென்று விடுகிறான். தேம்பி அவள் அழும் ஒலி மெல்ல மெல்ல அடக்க மாட்டாத பெரும் சிரிப்பாக ஆகிறது. 

ரியா மீண்டும் க்ரீட்டிற்கு பயணிக்கிறாள். அங்கே அந்த ஆடு, மற்றும் சாம்பல் மரத்தின் உதவியுடன் அழகான ஆண்மகவைப் பெற்று, ஜீயஸ் (Zeus) என்று பெயர் வைக்கிறாள். 

ஆட்டுப் பாலும், மரத்தின் சத்துக்களும் குழந்தையை வளர்க்க உதவுகின்றன. ரியா முடிந்த போதெல்லாம் தன் மகனை வந்து பார்க்கிறாள்; அவனுக்கு பழி வாங்கும் கலையைக் கற்பிக்கிறாள். வலிமை மிக்கவனாக, சொல்லில் அடங்கா அழகுடன் ஜீயஸ் வளர்கிறான். தன்னைச் சாப்பிட முனைந்தவன் தன் தந்தை என்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. பயத்தைத் துணை கொண்டு ஆட்சி செய்கிறார் உன் தந்தை என்றும், அவருக்கு விசுவாசம், நம்பிக்கை போன்றவற்றில் ஈடுபாடே இல்லை என்றும் அன்னை அவனிடம் சொல்கிறாள். 

அவனுக்குப் பதினாறு வயது ஆகும் போது, தன் நண்பரான மெடிசிடம் (Metis) அவனை எதிர்காலத்திற்காகத் தயார் செய்ய அவள் கேட்டுக் கொள்கிறாள். மெடிஸ் அவனுக்கு பொறுமை, கைவினைத் திறமை, பிறரை அணுகுவதும், அவர்களின் உள் நோக்கத்தைப் புரிந்து கொள்வதும் எப்படி, அவன் இதயத்தை விட அவன் மூளை சொல்வதைக் கேட்டு தந்திரத்துடனும், விவேகத்துடனும் நடந்து கொள்வது எப்படி, காரணங்களைக் கண்டுபிடிப்பது, திட்டமிடுதல் போன்ற அனைத்தையும் சொல்லித் தருகிறாள். 

ஜீயசின் 17 வது பிறந்த நாளன்று ரியா அவனை ஆத்ரீசுக்குக் கூட்டிச் செல்கிறாள்..அதுவும் எப்படி? மெடிசிஸ் தயாரித்துத் தந்த விஷபானத்துடன். 

தன் மனைவி தன்னை அணுக விடாமல் இருப்பது, க்ரோநோசிற்கு தூக்கமின்மையை, எரிச்சலை உண்டு பண்ணுகிறது. அவள் நெருங்கி வரும் ஒலி அவன் மனதையே துள்ளச் செய்கிறது. ரியா அவனுக்கு தான் ஒரு அழகிய இளைஞனை, அவனது பெருமையைப் போற்றி மேலெழுப்பவனாகச் செயல்படப் போகிறவனை, பரிசாகக் கொண்டு வந்துள்ளதாகச் சொல்கிறாள். புன்னகை புரிந்து கொண்டே ஒரு கிண்ணத்தை மகன் தந்தைக்கு அளிக்க, அதைப் பறித்துக் கொண்டு, ஒரே முழுங்கில் க்ரோநோஸ் அதை குடிக்கிறான். 

தன் காதலை அவன் மீண்டும் ரியாவிடம் சொல்கையில் அவள் கொதிக்கிறாள். என்னுடைய அனைத்துக் குழந்தைகளையும், ஒருவரைத் தவிர, அனைவரையும் விழுங்கிய உனக்கு காதல் ஒரு கேடா என ஏசுகிறாள். க்ரோநோசின் மூளை தடுமாறுகிறது- அனைத்துக் குழந்தைகளையும் தான் முழுங்கியது என்பது அவனுக்கு தொலைவு நினைவாக இருக்கையில், இவள் என்ன புதுக் கதை சொல்கிறாள்?  

நிழலிலிருந்து அந்த நேரம் வெளிப்படும் ஜீயஸ், தான் யாரென்று சொல்கிறான். க்ரோநோசிற்கு வயிற்றைக் கலக்குகிறது, வாந்தி வருகிறது; கடைசியாக விழுங்கிய கல் முதலில் வெளி வருகிறது, பின்னர் அந்த ஐந்து குழந்தைகளும். உடனடியாக அந்த பானம் செயல்பட்டு அவனை ஆழ் தூக்கத்தில் ஆழ்த்தி விடுகிறது. காயா செய்திருந்த அறிவாள், க்ரோநோசை வீழ்த்த உதவாது என்று ஜீயஸ் அறிகிறான். இப்போது விடுவிக்கப்பட்ட குழந்தைகளும் ஜீயசை தலைவனாக ஏற்றுக் கொண்டு அவனுக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதி ஏற்கிறார்கள். மேலும், புது அமைப்பை ஏற்படுத்தவும், தங்களை இனி டைடன் என அழைக்க வேண்டிய தேவையில்லையென்றும், அவர்கள் பழைய கடவுள்கள் இல்லை என்றும், தாங்களே கடவுள் என்றும் அறிவிக்கிறார்கள். 

டைடனிகளிடையே போரும், மூன்றாவது விதியும். 

ரியாவும், அவளது குழந்தைகளும், டைடன் களிடமிருந்து சற்று விலகினர். க்ரோநோஸ் வீழ்ந்துபட்டதை அறிந்த டைடன்கள் வஞ்சம் தீர்க்கத் துடித்தனர். மாபெரும் போர் மூண்டது. 10 வருடங்களாக, அழிவும், வன்முறையும் தலைவிரித்தாடிய போர். மலைகள் நெருப்பைக் கக்கின, பூமி அலை மோதியது, தீவுகள், நிலங்கள் முட்டிக் கொண்டன, புதிதாக கண்டங்களும், புதிய வடிவங்களும் ஏற்பட்டன. நேரடியான போராக இருந்திருந்தால், புதிதாக முளைத்த, தங்களைக் கடவுள் என்று அறிவித்துக் கொண்ட ஜீயஸ் குழுவை, டைடன்கள் வென்றிருப்பார்கள். ஆனால், ஜீயஸ் ஒற்றைக் கண் அரக்கனையும், நூறு கரங்கள் கொண்ட அசுரனையும், போரில் ஈடுபடுத்தினான். டைடன்கள் யுத்த நிறுத்த அறிவிப்பைச் செய்ய நேரிட்டது. மாயாவிகளையும், வானம், நிலம், நீர், மலை போன்றவற்றில் மறைந்திருந்து தாக்கிய அசுரர்களைப் பற்றியும் நம் இராமாயணமும், பாரதமும்  விரிவாகவும், அற்புதமாகவும் பேசுகின்றன 

தன் அதிகாரத்தை இவர்கள் எவரும் கேள்வி கேட்கக் கூடாதென்று ஜீயஸ் பல கட்டளைகளைப் பிறப்பித்தான். அட்லஸ் (Atlas) பல யுகங்களுக்கு வானைத் தாங்கிப் பிடித்தவாறே நின்று, பின்னர், அட்லஸ் மலையாக உறைந்து போனான். க்ரோநோஸ, தலைமறைவாகச் சென்று, நாட்கள், மணிகள், மணித்துளிகளின் என்றும் நிலைக்கும் தன்மையை அளந்து கொண்டே இருக்குமாறு பணிக்கப்பட்டான். அவனை ‘முன்னொரு காலத்தின் நேரத் தந்தை’ எனச் சொல்கிறோம் இப்போது. (நமது அஸ்வத்தாமனும் இன்னமும் அலைந்து கொண்டிருக்கிறார்.) 

அனைத்து டைடன்களும் தண்டிக்கப்பட்டனரா என்றால் அது தான் இல்லை. கடவுள் அணியில் இணைந்து போர் செய்தவர்களுக்கு பதவிகள் கிடைத்தன. ப்ரோமிதியஸ் (Prometheus)  அந்த வகையில் ஜீயசிற்கு நெருக்கமானான்.  

ஜீயஸ் இன்றைய இந்தக் கடவுள்களுக்கான புது வீடுகளையும், கூடுகைகளையும் அமைக்கிறான். அவர்கள் பன்னிருவர்கள் ஆகிறார்கள். முதல் இரண்டு தெய்வங்களைக் காட்டிலும், இந்த மூன்றாவது எழுச்சியான தன் அரசு சிறப்பாகச் செயல்படுமென்றும், இது நிலைக்கும் என்றும் நம்புகிறான். 

ப்ரோமிதியஸ், மற்றும் முதல் மனிதன்  

அழகு, நல்லியல்புகள், உடல் வலு, எல்லாம் நிறைந்த ப்ரோமிதியஸ் ஜீயசிற்கு அணுக்கமாகிறான். இருவருக்கும் இடையே இணக்கமான அன்பும், மரியாதையும் நிலவுகின்றன. 

டோட்கேதியனான் ப்ரோமிதியசின் பதவி ஏற்பிற்கு ஒரு வாரம் இருக்கையில், அவன் நீள் புல் தரையில் உறங்கிக் கொண்டிருக்கையில், ஜீயஸ் அவனை எழுப்பி ஒரு செய்தியை துடிப்புடன் சொல்கிறான். ‘நம்மைப் போலவே, ஆனால், சிறிய உருவம் கொண்டவர்களாக, பலம் நம்மை விடக் குறைந்தவர்களாக ஒரு புது இனத்தை நாம் படைப்போம். அவர்கள் உணர்வுள்ளவர்களாக, நம்மை வழிபடுபவர்களாக, நம்முடைய விளையாட்டுப் பொம்மைகளாக இருப்பார்கள். நான் ‘ஹெரா’ (Hera) என்ற என் மனைவியின் கோபத்திற்கு ஆளாக விரும்பவில்லை; எனவே, நாம் படைப்பது ஆண்களை மட்டுமே.’ ஜீயசின் எச்சிலையும், பொருத்தமான களிமண்ணையும் கொண்டு ப்ரோமிதியஸ் தன் வேலையைத் தொடங்குகிறான். இரவு தொடங்குவதற்கு முன் வருமாறு ஜீயசை கேட்டுக் கொள்கிறான். (நந்தவனத்தில் ஓர் ஆண்டி, நாலாறு மாதமாய் குயவனை வேண்டி..  நெடும் புல் தரை- நந்தவனம். களிமண்- குயவன் வனையும் பானை இவற்றைக் கவனியுங்கள்.) 

அந்தப் படைப்புகளைப் பார்க்க வரும் ஜீயஸ், அவற்றை கண்டு வியக்கிறான்; அவன் தனியே வரவில்லை. தன் மகள் அதினாவையும் (Athena) அழைத்து வந்துள்ளான். வெறும் சுற்றுலாவாக அல்ல; அவள் தான் அத்தனைக் களிமண் உருவங்களுக்கும் மூச்சு கொடுக்கிறாள். (உயிர் என்பதும் சக்தி ஆற்றலே) 

ப்ரோமிதியஸ் தன் படைப்புகளுக்குத் தான் கடவுளாக இருப்பதை விட நண்பனாக, ஆசிரியராக இருக்க விழைகிறான்- அவன் அவர்களுக்கு, உழவு, சமையல், கருவி செய்தல் போன்ற அனைத்தையும் கற்பிக்க நினைக்கிறான்.  அவன் முடிக்கும் முன்பே, ஜீயஸ் கர்ஜிக்கிறான்- அவர்கள் ஒரு நாளும் நெருப்பை அறியக்கூடாதென்று. 

அவன் கைதட்டலில் முதல் மனிதர்கள் உருவாகிப் பின்னர் பல்கிப் பெருகினார்கள். உலகை நிறைத்தார்கள்; நோய், வறுமை, பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கடவுள்கள், டைடன்கள், சிரஞ்ஜீவிகள் அனைவரும் மனிதர்களை விரும்பினர். மனிதர்கள் அருமையாக வாழ்ந்த பொற்காலம் அது. 

(நம் புராணங்கள், ஆணை மட்டுமே படைத்த உலகத்தைச் சொல்வதாக நான் அறிந்த வரையில் இல்லை. சிவம் என்பது நிலையமைவு. சக்தி என்பது அதன் நிலையசைவு. இது சிவ-சக்தி தோற்றம். சிவனாக இருக்கையில் அது ஆணல்ல, பெண்ணல்ல,  அலியுமல்ல; திருவாசகத்தில், மாணிக்க வாசகர் சொல்கிறார் “முந்திய முதல், நடு, இறுதியும் ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார்?” நாம் சக்தியை வழிபடும் இனம். உஜ்ஜயனி நித்ய கல்யாணி என்று பாடிய கவிஞனின் வம்சம்.) கிரேக்கத்தில் முதல் மூன்று கடவுள் வரிசைகளில் ஆணும், பெண்ணும் இருக்கிறார்கள். ஆனால், ஜீயஸ், ஆணை மட்டுமே படைக்க ஆணையிடுகிறான- அப்போதிருந்தே பெண்ணின அழிப்பு தோன்றியது போலும். ஆனால், நாம் ஆணையும், பெண்ணையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகப் பார்ப்பவர்கள். ஒன்றின்றி மற்றொன்றிற்கு மதிப்பில்லை. 

தீ, சினம், பண்டோரா  

ப்ரோமிதியசிற்கு மனித இனம் வஞ்சிக்கப்படுவதாக ஒரு எண்ணம் வருகிறது. பாதுகாப்பான, மகிழ்ச்சி  நிறைந்த, சவால்களற்ற நிம்மதியான வாழ்க்கை அவர்களுக்குக் கிடைத்திருக்கிறதுதான். ஆனால், அனுபவம்? மனித இனத்திற்குத் தேவையானது நெருப்பு என அவன் தீர்மானிக்கிறான். 

இதுவரையில் ஜீயஸ் சொல்லை அவன் மீறியதில்லை; ஆனால், இப்போது தீர்மானித்துவிட்டான். யார் கண்ணிலும் படாமல் ஒலிம்பஸ் (Olypus) மலையில் ஏறி, அங்கே கடவுள்கள் விருந்தும், மதுவுமாக (சோம பானம், சுரா பானம்) களித்துக் கொண்டிருக்கையில், பெருஞ்சீரகத் தண்டில்  (Fennel Stalks) நெருப்பைப் பற்றிக் கொண்டு, மலையிலிருந்து பறந்து சென்று விடுகிறான். முதலில் நெருப்பைக் கண்டு அலறிய மனிதர்கள், அதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என அறிந்த பிறகு நெருப்பை அஞ்சவில்லை. (சிக்கி முக்கிக் கற்களும், அரணிக்கட்டைகளும் நம் புராணங்களில் நெருப்பு தோன்றிய விதத்தைச் சொல்கின்றன.) 

ஜீயஸ் நிலப்பகுதியை பார்வையிட வரும் போது , ஆங்காங்கே சென்னிறக் கொழுந்துகளைப் பார்த்து விடுகிறான். இது யாருடைய வேலை என்றும் அவனுக்குத் தெரிகிறது. ஆனாலும், முதலில் மனிதர்களைப் பழி வாங்க வேண்டும் என தீர்மானிக்கிறான். பின்னர் ப்ரோமிதியசைப் பார்த்துக் கொள்ளலாம். 

அவன் ஹெபேஸ்டஸ் (Hephaestus) என்ற சகக் கடவுளை அழைத்து, அழகான, இளமை நிறைந்த பெண்ணைப் படைக்குமாறு கட்டளை இடுகிறான். (நம் புராணங்களில் திலோத்தமை அப்படியாகத்தான் படைக்கப்படுகிறாள்.) ஒவ்வொரு கடவுளும் அவளைப் படைப்பதிலும், அவள் திறமைகளைச் செறிவூட்டுவதிலும் பங்கேற்கிறார்கள். அவள் பெயரே பண்டோரா- (Pandora) பரிசுப் பெட்டகம். ஜீயஸ் அவளுக்கென்றே அழகான ‘பிதாஸ்’ (Pithos) என்ற ஜாடியைச் செய்து கொடுக்கிறான். அருமையான வேலைப்பாடுகளுடன் கூடிய மண் குடுவை அது. அதைத் திறக்கக் கூடாதென்றும், அவளுக்குத் தேவையான ஒன்றும் அதிலில்லை என்றும் திடமாகச் சொல்கிறான். ‘என்றும் திறக்க மாட்டேன்’ என்று அவளும் உறுதி அளிக்கிறாள். 

கிரேக்கக் கடவுளின் தூதரான ஹெர்மிஸ் (Hermes) அந்தப் பெண்ணை, ப்ரோமிதியசின் சகோதரரான எபிமீதியஸ் (Epimetheus) வசிக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று, ‘இவள் உன் வருங்கால மனைவி ‘ என அறிமுகப்படுத்துகிறார். இருவரும் மணம் செய்து கொண்டு அன்புடன், மகிழ்வாக வாழ்கிறார்கள். 

ஆனாலும், பண்டோராவின் மனதின் மூலையில் ஒரு நச்சரிப்பு இருந்து கொண்டே இருக்கிறது. ‘அந்தக் குடுவையில் அப்படி என்னதான் உள்ளது?’ வாக்குக் கொடுத்தது நினைவில் இருந்தாலும், மறைக்கப்பட்ட விஷயத்தின் கவர்ச்சி அவளை வென்று விடுகிறது. ஒரு நாள் இரவில் அவள் தன் தோட்டத்திற்கு நழுவிச் சென்று அந்தக் குடுவையின் மூடியைத் திறக்கிறாள். 

பல பயங்கரமான உயிரிகள், மிகுந்த ஓசையுடன், சிறகுகள் அடித்துக் கொண்டும், கக்கிக் கொண்டும், உடல்களை இழுத்துக் கொண்டும் வெளி வருகின்றன. ஓநாயைப் போல உருவு கொண்டு மறைந்திருந்து, இக்காட்சியை ஜீயஸ் புன்சிரிப்போடு பார்த்துக் மொண்டிருக்கிறான்- வேண்டும், இந்த மனிதர்களுக்கு-  நிக்ஸ், எரெபஸ் இவர்களின் இருண்ட தீய குணமுள்ள வாரிசுகளான கடின வாழ்க்கை, வலி, பட்டினி, கொடுங்கோன்மை, பொய், சச்சரவு, சண்டை, இனப்படுகொலை, கொலை கொள்ளை எல்லாம் கொடும் விஷமாக உலகில் பரவி நிலைத்தன. பண்டோரா மீண்டும் அந்தக் குடுவையை மூடுகிறாள்; அதனுள் பறக்கும் ஒன்றே ஒன்று, என்றென்றைக்குமாக சிறை பட்டது- அது நம்பிக்கை. 

இந்தியப் புராணங்கள், ‘நம்பிக்கைக்கு வழியில்லை’ எனச் சொல்வதில்லை. மாயையால் சூழப்பட்டு நாம் வாழ்கிறோம் அல்லது வாழ்வதாக நினைக்கிறோம் என வேதாந்தங்கள் சொன்னாலும், குகையின் முடிவில் வெளிச்சம் இருக்கிறது என்றும் காட்டுகிறது. நம் மந்திரங்களின் முடிவில் ஒரு பாடல் அல்லது செய்தி தவறாமல் இடம் பெறும் அதற்கு ‘பலஸ்ருதி’ என்று பெயர். அந்த மந்திரத்தைச் சொல்பவர்கள், தியானிப்பவர்கள் அடையும் பலனைப் பற்றிச் சொல்வதாக அது இருக்கும். இ்தைக் கொச்சையாகப் பண்டமாற்றென்றோ, பேரம் என்றோ புரிந்து கொள்ளக் கூடாது. அவை நம்பிக்கை தந்து, தன் முனைப்புடன், கவனத்துடன் நம் செயலைச் செய்ய ஊக்குவிக்கும் வழி முறை. இறையிடம் கேட்கும் போதே ‘ நானும் உனக்குத் தருகிறேன்’ என்று சொல்லும் மனிதன் தன் முனைப்பையும், அவன் அருளையும் துலாத்தட்டில் வைக்கிறான். நாளை என்ற ஒன்றைக் கருதாமல் எறும்புகள் கூட இல்லை- ‘முட்டை கொண்டு வற்புலம் சேரும் சிறு நுண்ணெறும்பின்..’ 

‘இன்றிருப்போர் நாளையில்லை’ என்ற வழமையான சொல்லைச் சொல்லவில்லை திருவள்ளுவர். ‘நெரு நல் உளனொருவன் இன்றில்லையெனும் பெருமை உடைத்தது இவ் உலகு’ அதாவது நேற்றிருந்தவர் இன்றில்லை என்று சொல்லும் போது ‘நன்றி, கடவுளே, நான் இன்று இருக்கிறேனே’ என்று  நேர்மறையாக நினைக்கச் செய்கிறார். மார்க்கண்டேயன் நம்பிக்கையுடன் லிங்கத்தை அணைத்துக் கொண்டதால், யமனிடமிருந்து பிழைத்தானே? 

மீண்டும் கிரேக்கம் 

ப்ரோமோதியசிற்கான தண்டனை உடனடியாகத் தொடர்கிறது. ஜீயஸ் அவனை மலைப் பாறையுடன் பிணைத்துக் கட்டுகிறான். ஒவ்வொரு நாளும், இரு வல்லூறுகள் அவனது குடலைக் கிழித்து உண்ணும்; மறு நாள் வளர்ந்து வளர்ந்துள்ள குடலை மீண்டும் கிழித்து உண்ணும்; மீண்டும், மீண்டும்… 

ஒரு நாள், ஜீயசை எதிர்த்து, மனித இனத்திற்காகப் பாடுபட்ட ப்ரோமிதியஸ். ஒரு தலைவனால் விடுவிக்கப்படுவான். ஆம், அந்தக் கதை, அது மற்றொரு சமயம். 

இவைகளில் கிரேக்கத் தொன்மங்களையும், இந்தியக்,  கதைகள், புனைவுகள் புராணங்கள், இதிகாசம் குறித்து சில செய்திகளைப் பார்த்தோம். 

நல்லது, கெட்டதும் உலகில் விரவியிருக்கின்றன. பலரும் சிந்திப்பதைப் போல ‘இறைவன்’ கருணையே உருவானவனாக இருந்தால், உலகில் இத்தனை கஷ்டம் ஏன், பிரிவினைகள் ஏன், கொடுமை ஏன், வன்முறைகள் ஏன்? ‘இறைவன் உலகத்தைப் படைத்தானாம், ஏழ்மையை அவன் தான் கொடுத்தானாம், ஏழ்மையைப் படைத்தவன் அவன் என்றால், இறைவன் என்பவன் எதற்காக?’ என்று சிந்தித்த மனிதன் தன் நல்லியல்புகளையும், தீய குணங்களையும் கடவுளுக்குக் கொடுத்து மகிழ்கிறான் என்று தான் தோன்றுகிறது. 

ஒரு முனிவர் இருந்தார். அவரது குருகுலத்தில் ஒரு மாடும் இருந்தது. ஒரு நாள், ஒரு புலி, அந்த மாட்டைக் கவ்விச் செல்வதைப் பார்த்த குருவின் சீடன் அதை சபிக்க முயலும் போது குரு தடுத்து விடுகிறார். ‘அந்தந்த ஜீவன் இயற்கையாம்; இதைத் தடுக்க நினைப்பது மதியீனம்’ இயற்கை சுழல்கிறது, பருவங்கள் மாறுகின்றன. மனிதனின் பேராசையால் வளங்கள் குறைந்து புவி வெப்பமயமாகிறது.  இது நம்மிடமுள்ள அரக்கத் தன்மையும், அலட்சியமும் அன்றி வேறென்ன? 

இந்தியப் புராணங்களில், ஆதியில், இந்திரன், வருணன், வாயு, யமன்,  நாகங்கள் ஆகியவை அஞ்சப்பட்டு, வழிபடப்பட்டு, பலி அளிக்கப்பட்டு சீற்றம் தணிக்கப்பட்டதாகப் படிக்கிறோம். தன் பதவிக்கு இடையூறு நேருமோ என்று இந்திரன் எத்தனை அசுர வேள்விகளுக்கு இடையூறு செய்தான். அவனது இடத்தை அவனுக்குக் காட்டவே கோவர்த்தன மலைக்கு ,கண்ணன் வழிபாடுகள் செய்தான். வாயுவால் புல்லைப் பெயர்க்க முடியவில்லை. இந்த ஆதி தேவர்களிடம் அசுர குணங்களையும் நம் புராணங்கள் காட்டுகின்றன. 

ஒரு காலத்தில் உலகமெங்கும் ஒரே மொழி  இருந்திருக்கிறதோ, என்னவோ? 

பொதுவாக இந்துக்கள் பிள்ளையாரிடமிருந்து தொடங்குவார்கள். நான் அவரில் இதை முடிக்கிறேன். ஹம்சத்வனி இராகத்தில் முத்துஸ்வாமி தீக்ஷிதர் எழுதிய ‘வாதாபி கணபதிம்’ பாடலின் அனுபல்லவி இப்படி வரும்: 

‘பூதாதி சம் சேவித சரணம், பூத பௌதிக ப்ரபஞ்ச பரணம், வீதராகினம், வினுத யோகினம், விஷ்வ காரணம், விக்ன வாரணம்’ 

இக்கட்டுரை Mythos https://www.blinkist.com/books/mythos-en தழுவியும், இந்தியாவின் புனைவுகளையும், வாய் மொழிக் கதைகளையும் பிணைத்து எழுதப்பட்டது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.