இந்து மதத்தில் தந்த்ரா நெறிகள்

இந்துக் கடவுள் – கடவுளிகள் மற்றும் புராணங்கள் ஒற்றைப் பரிமாணம் கொண்டவையல்ல. பக்தி, ஆன்மிகம், தத்துவம், ப்ரம்மஞானம் (theosophy), மெய்யுணர்வு (mysticism), இயல் கடந்த ஆய்வு (metaphysics) ஆகியவற்றோடு தந்த்ர யோகமும் கலந்த பன்முகப் பரிமாணம் கொண்டவை. இந் நெறிகளை குறியீடுகளாகவும், உருவகங்களாகவும் கொண்டு மக்களுக்கு மறைமுகமாக போதிப்பவை. யோகா மற்றும் தந்த்ராவைப் பொறுத்தவரை, அவை த்யானம், அதிஆற்றல், அறிவியல், உடலியல், உளவியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உட்கூறுகளும் கொண்டவை என்பதால் இக் கூறுகளையும் அவற்றில் காணலாம். ஆன்மிக வாழ்வு, லௌகீக வாழ்வு – இரண்டுக்குமான நெறிகளும் அவற்றில் (தெய்வச் சித்தரிப்புகள் மற்றும் புராணக் கதைகள் / கருத்துகளில்) பொதிந்திருக்கும்.

மற்ற விஷயங்களைக் காட்டிலும் தந்த்ராவே இவற்றில் முதன்மை பெற்றதாகவும், மையக் கருத்தாகவும் விளங்குகிறது. இதற்கான காரணங்களையும் நாம் புரிந்துகொள்ள முடியும். அவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம்.

1. மேற்கூறிய பட்டியலில் ஆன்மிகம், தத்துவம், ப்ரம்மஞானம், மெய்யுணர்வு, இயல் கடந்த ஆய்வு ஆகியவை சாமான்ய மக்களான பக்தி மார்க்கத்தினரால் கடைபிடிக்கப்படக் கூடியவையல்ல. ஆழ்ந்த தேட்டமும், துறைசார் அறிவும் கொண்ட ஞான மார்க்கத்தினரால் மட்டுமே கடைபிடிக்கப்படக் கூடியவை. ஆனால், பக்தியைப் போலவே யோகாவையும் தந்த்ராவையும் சாமான்யர்களால் கடைபிடிக்க முடியும். அதற்கு ஞானமோ, பாண்டித்யமோ தேவையில்லை.

2. மேற்கூறிய ஞானத் தேடல்கள் யாவும் இறுதியில் சென்றடையக் கூடிய இடம் யோகமே! அதன் உச்ச நிலையே தந்த்ரா. அப்படியிருக்கும்போது, சாமான்யர்கள் நேரடியாகவே அதை அடைவது நல்லதும் சுலபமானதும் அல்லவா!

3. யோகாவும் தந்த்ராவும் யோகிகள் மற்றும் தாந்த்ரீகர்கள் மட்டுமே கடைபிடிக்கும்படியானவையல்ல. அவற்றின் மேம்பட்ட மற்றும் தீவிர நிலைகள்தான் அவர்களுக்கு மட்டுமானவை. சாமான்யர்கள் தங்களால் இயன்ற எளிய யோகப் பயிற்சிகளையும், தங்களுக்கு உகந்த / ஏற்புடைய தந்த்ர விஷயங்களையும் மட்டும் செய்தால் போதுமானது.

4. யோகாவுக்கும் தந்த்ராவுக்கும் துறவு வாழ்க்கை கட்டாயமல்ல. இல்லறத்திலிருந்தபடியே அவற்றை மேற்கொள்ளலாம். அதிலும் வாமாச்சார தந்த்ரா இல்லறம் மற்றும் லௌகீகத்தை வலியுறுத்துவதையே அடிப்படையாகக் கொண்டது.

5. வேதம், வேதாந்தம் (உபனிஷதம்), சித்தாந்தம் மற்றும் இதர ஞான மார்க்கங்கள் யாவையும் விட, தந்த்ராவே முழுமையானது. ப்ரபஞ்ச மெய்ம்மைகளை உள்ளடக்கியது. அது மட்டுமல்ல. அஹம் ப்ரம்மாஸ்மி (நானே கடவுள்) என்னும் வேத வாக்கியம் நிரூபணமாவது தந்த்ராவின் மூலமாகவே.

6. தந்த்ரா மற்றும் யோகாவுக்கு பக்தி அவசியமில்லை. இவ் வழிமுறை சாங்கியர்கள்* (sankhyas), சார்வாகர்கள்* (charvakas) போன்ற முன்னோடி கடவுள் மறுப்புவாதத்தினராலும் பின்பற்றப்பட்டதே! இன்னமும் சொல்லப் போனால், பகுத்தறிவுவாத அடிப்படை கொண்ட சாங்கியம் மற்றும் ப்ராமண ஆதிக்கம், ஜாதிப் பகுப்பு, வேதக் கருத்துகள் ஆகியவற்றுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த லோகாயதம் எனப்படும் சார்வாகம் ஆகியவற்றின் வழி வந்த சமரச யோக நெறியே தந்த்ரா.

இந்து மதப் பிரதிகளின் மும்மைப் பொருள்கோள்கள்

இந்து மதத்தின் வேதங்கள், உபனிஷத்துகள், புராணங்கள், இதிகாசங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகிய பிரதிகள் மும்மைப் பொருள்கோள்கள் (interpretation) கொண்டவையாகும். அவையாவன: 1. நேர்ப் பொருள். இது சாமான்யர்களான பக்தர்களாலும், பாமரர்களாலும் கொள்ளப்படுவது. 2. குறியீட்டுப் பொருள். இது பண்டிதர்களால் கொள்ளப்படுவது. 3. தந்த்ரா பொருள். இது யோகிகள் மற்றும் தாந்த்ரீகர்களால் கொள்ளப்படுவது. இம் மும்மைப் பொருள்கோள்கள் இவ்வத்யாயத்தின் துவக்கத்திலேயே சொல்லியிருந்தபடி இந்துக் கடவுள் உருவங்கள் மற்றும் அவர்கள் சார்ந்த சமய நம்பிக்கைகள், வழிபாடுகள், சடங்குகள் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

இவற்றில் தாந்த்ரீகப் பொருளே முதன்மையான மைய நோக்கமாகும். எனினும் மக்களில் பெரும்பான்மையராக உள்ள சாமான்யர்களைக் கருத்தில் கொண்டே அவர்களுக்குத் தக்கபடியாக அற்புதமும் (fantasy), சாகசமும் (adventure), சுவாரஸ்யமும் கொண்ட கதைகளாக புராணங்கள் உருமாற்றப்பட்டிருக்கின்றன. கடவுள் நிலை என்பதும் கடவுள் இருப்பாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சாமான்யர்களுக்கான நேர்ப் பொருளில் பக்தியும் நீதிபோதனைகளும் நோக்கம். பண்டிதர்களுக்கான குறியீட்டுப் பொருளில் சற்றே மேம்பட்ட ஆன்மிக, தத்துவ நோக்கங்கள் அமைந்திருக்கும். யோகியருக்கான தந்த்ரா பொருளிலேயே ப்ரபஞ்சப் பேருண்மைகளின் தரிசனங்கள் யாவும் அடங்கியுள்ளன.

இனி வருபவை இவற்றுக்கான விரிவான விளக்கங்கள்.

தந்த்ரா கடவுள் தம்பதி மற்றும் குடும்பம்

அ. சிவஷக்தி: ப்ரபஞ்சப் பேருண்மைகளின் ஞானத் திறவுகோல்

இந்து தந்த்ரா முதன்மையாக சைவம் மற்றும் சாக்த சமயங்களைச் சேர்ந்தது. இன்னும் சொல்லப் போனால், சைவ – சாக்த அடிப்படையே தந்த்ராதான்.

யோகத்தின் முதன்மைக் கடவுளர்கள் சிவன் – ஷக்தி / காளி தம்பதியே என்பது பரவலாக அறியப்படக் கூடியது. இவர்கள் சம்மந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் தந்த்ரா யோக விளக்கங்கள், யோகச் சார்புகள் கொண்டவையே! ஆனால், இவர்களின் வடிவங்களிலும், செயல்களிலும் பொதிந்திருக்கக் கூடிய தந்த்ரக் குறியீடுகளையும், உருவகங்களையும் பெரும்பான்மையான சாமான்ய பக்தர்கள் மட்டுமின்றி, பக்தி மார்க்கத்தில் உள்ள பெரும்பான்மையான துறவிகள், மத குருமார்கள், உபன்யாசகர்கள், பண்டிதர்கள் போன்றவர்களுமே கூட புரிந்துகொள்ளாததால் தவறான விளக்கங்களே காலா காலமாகத் தொடர்ந்து சொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

யோகக் கோட்பாடுகளின்படி இரு பாலரிமுள்ள ஆண் சக்தியின் உருவகமே (metaphor) சிவன்; அதேபோல இரு பாலரிலுமுள்ள பெண் சக்தியின் உருவகமே ஷக்தி. ஆண் பாதி, பெண் பாதியாக உள்ள அர்த்தநாரீஸ்வர வடிவம் இந்த யோக விளக்கத்தின் அதியற்புதக் (hyper fantasy) குறியீடே. அது மட்டுமல்ல; சிவலிங்கம் ஆண்குறியினுடையதும், அதன் சக்தி பீடம் பெண்குறியினுடையதுமான குறியீடுகளே. சிற்றின்பத்தின் மூலமே பேரின்பத்தை அடையலாம் எனும் வாமாச்சார மார்க்கத்தின் கொள்கை விளக்கமே லிங்க – யோனி வழிபாடுகள். காமசூத்திரக் கலவிச் சித்தரிப்புச் சிலைகளுக்கு உலகப் பிரசித்தி பெற்ற கஜுராஹோ, கோனார்க் சிவ ஆலயங்களில் மட்டுமன்றி, அனேக சைவ – சாக்த ஆலயங்களிலும் சிற்றின்பகரமான (erotic) நிர்வாண, கலவிச் சிற்பங்கள் மற்றும் சுதைகள் இடம் பெற்றிருப்பதும் இக் கொள்கையை வலியுறுத்துவதற்கே!

சிவனின் கழுத்திலும், தலை, புஜங்கள், மணிக்கட்டுகள், கணுக்கால்கள் ஆகிய இடங்களிலும் காணப்படுகிற நாக பாம்புகள் குண்டலினியைக் குறிப்பவையே. சிவனின் நெற்றிக் கண் என்பது குண்டலினி சக்கரங்களில் ஆக்ஞா சக்கரத்தையும், கழுத்தில் தேக்கப்பட்ட பாற்கடல் பாம்பின் (வாசுகி) விஷம் என்பது விஷுத்த சக்கரத்தையும் குறிப்பதாகும். இவ்விரு சக்கரங்களும் யோகத்தின் உச்ச நிலை கொண்டவை; சிவனுக்கு உரித்தானவை. யோகக் கடவுளாக சிவன் ஆவதும் இவ்விதமே. இவ்விரு சக்கரங்களும் ருத்ரக்ரந்தி** எனப்படும். அவர் ஜடாமுடியில் சூடியிருக்கிற பிறை நிலவு, ஆண் – பெண் இரு பாலரிலும் வலது புறமாக உள்ள நிலா சக்தி (lunar energy) எனப்படும் ஆண் சக்தியைக் குறிப்பதாகும். ஆக்ஞா சக்கரத்தோடு அதற்குள்ள தொடர்பையும், அதன் முக்கியத்துவத்தையும் சுட்டும் விதமாக சிவன் உருவத்தின் நெற்றிக் கண்ணுக்கு அடியில் மேல் நோக்கிய பிறைக் குறியை இடுவது வழமை. துறைசார் தந்த்ரா ஓவியங்களிலும் (paintings), விளக்கச் சித்திரங்களிலும் (illustrations) சஹஸ்ராரைக் குறிக்கும் விதமாகவும் நெற்றியின் மேல் விளிம்பில் கீழ் நோக்கிய பிறை நிலவு வரையப்பட்டிருக்கும்.

பக்தி மார்க்க ஓவியங்கள் மற்றும் சிற்பங்களில் ஷக்தியும் காளியும் கூட பிறை நிலவைச் சூடியிருக்கக் காணலாம். அதற்கு மேற்சொன்ன அர்த்தங்களேதான். சில ஓவியங்கள் மற்றும் சிற்பங்களில் ஷக்தி சூரியனைச் சூடியிருப்பாள். அது இரு பாலரிலும் இடது புறமாக உள்ள சூரிய சக்தி (solar energy) எனப்படும் பெண் சக்தியைக் குறிக்கும்.

பொதுவாக, கவித்துவப் பயன்பாடுகளின்படி, சூரியனை ஆண் என்றும், நிலவைப் பெண் என்றும் உருவகிப்பதே வழமை. அப்படியிருக்க, இங்கே ஏன் நிலா ஆண் சக்தியோடும், சூரியன் பெண் சக்தியோடும் பொருத்தப்படுகிறது? பெண்ணுக்குள் இருக்கும் ஆண் சக்தியையும், ஆணுக்குள் இருக்கும் பெண் சக்தியையும் குறிப்பதற்காகவே!

சிவனின் வாகனமான காளை, காமம் மற்றும் பாலியலின் குறியீடாகும். இந்த இச்சைகளை அடக்கி ஆளக் கூடியவர் என்பதைச் சுட்டிக் காட்டும் முகாந்திரமாகவே அது அவரது வாகனமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

சிவன் – ஷக்தி / காளி இணையே ப்ரபஞ்ச இயக்கத்தின் உருக்கொடுப்புகள் (embodyment) தான். சிவன் பொருள்; ஷக்தியே அதன் ஆற்றல். ப்ரபஞ்ச தம்பதி (cosmic couple) எனப்படும் இவர்களில் பொதுவாக சிவனின் நிலையில் மாற்றங்கள் இல்லை. ஆனால், சிவனின் மனைவியான பார்வதி, ஷாந்த்த நிலையில் ஷக்தி வடிவாகவும், ரௌத்ர நிலையில் காளி வடிவாகவும் சித்தரிக்கப்படுகிறாள். இவ்விரு வடிவங்களுமே தந்த்ரா யோக ரகசியங்களின் அடிப்படைக் கோட்பாட்டு விளக்கங்கள்தான். ப்ரபஞ்சப் பேருண்மைகளின் ஞானத் திறவுகோல் என்றும் இந்த இணையைக் குறிப்பிடலாம். இந்த அடிப்படை வடிவங்கள் மட்டுமன்றி, சிவனும் ஷக்தியும் எண்ணற்ற வடிவங்களில் சித்தரிக்கப்படுகிறார்கள். அதோடு எராளமான அவதாரங்களையும் எடுக்கிறார்கள். இந்த ஒவ்வொரு வடிவங்களிலும், அவதாரங்களிலும் உள்ள சித்தரிப்புகள் பல்வேறு தத்துவங்களையும், யோக / தந்த்ரக் கருத்தியல்களையும் உள்ளடக்கியவையாகவே இருக்கும். அவர்கள் அமர்ந்திருக்கும் அல்லது நின்றிருக்கும் நிலை, நான்கு – எட்டு – பதினாறு எனத் தொடங்கி ஆயிரம் வரை பன்மடிப் பெருக்கமுறும் கைகளின் எண்ணிக்கை, அவற்றின் முத்திரைகள், ஏந்தப்பட்டிருக்கும் பொருட்கள் அல்லது ஆயுதங்கள், அவர்களது ஆடை – அணிகலங்கள், அவற்றின் வண்ணங்கள், தலைமுடி அலங்காரம் என ஒவ்வொரு அம்சங்களிலும் அதைக் காணலாம்.

பொதுவாக ‘புருஷன்’ (ஆண்) எனப்படும் இறைவர்கள் – ப்ரம்மா, விஷ்ணு, சிவன் – ஆன்மீக மெய்ம்மையை (spiritual reality) குறிப்பவர்கள். ‘ப்ரக்ருதி’ (இயற்கை) எனப்படும் இறைவிகள் – சரஸ்வதி, லக்ஷ்மி, ஷக்தி – பொருளியல் மெய்ம்மையை (material reality) குறிப்பவர்கள். மூல மும்மைக் கடவுள் – கடவுளிகளான இந்த மூன்று தம்பதிகளுமே யோகம், தந்த்ரா மற்றும் குண்டலினி அடிப்படையில் உண்டாக்கப்பட்ட உருக்கொடுப்புகளே! எனினும், யோகத்தின் உச்ச நிலைக் கடவுள் தம்பதியான சிவன் – ஷக்தி இணையே, யோகம், தந்த்ரா மற்றும் ப்ரபஞ்ச மெய்ம்மை (cosmic reality)த் தத்துவம் ஆகியவற்றின் ஒட்டு மொத்த வடிவாக உள்ளார்கள். அதிலும் ஷக்தி என்பதே ப்ரபஞ்ச ஆற்றலைக் குறிப்பதுதான். குண்டலினி என்பதும் ப்ரபஞ்ச ஆற்றல் மற்றும் ஷக்தியின் வடிவே!

. யானை முக கணபதி: மூலாதார முதல்வன்

சிவ – ஷக்தி தம்பதியின் மகன்களான கணபதி மற்றும் முருகன் இருவருமே கூட தந்த்ர வடிவங்களே! புராணங்களில் சொல்லப்படும் இந்துக் கடவுள் கதைகள் யாவிலுமே மறைபொருளாக தந்த்ரா விஷயங்களே இருக்கும். கணபதி மற்றும் முருகன் கதைகளிலும் அப்படித்தான். தற்கால மாந்தரீக எதார்த்தவாத (magical realism) கதைகளின் முன்னோடிகள் என சொல்லத் தக்க புராதன இந்திய ரிஷிகளின் அதீத கற்பனாவாதமும் (hyper romaticism), அற்புதமும் (fantasy), குறியீட்டுத் தன்மையும் மிகுந்த புராணங்கள் யாவுமே ஒரு வகையில் தந்த்ர இலக்கியங்களின் பட்டியலில் சேர்க்கத் தக்கவைதான்.

மானுட உடலும், யானைத் தலையும் கொண்ட கணபதி உருவத்துக்குக் காரணம் என்ன என்பது பற்றி புராணங்கள் சொல்லும் சுவாரஸ்யமான கதையும், அவ் வடிவம் குறித்து உபன்யாசகர்கள் விளக்கும் தத்துவமும் ஒரு புறம் இருக்க, தந்த்ர இலக்கியங்கள் அவ் வடிவத்துக்கு வேறு விதமான – தந்த்ர விளக்கத்தைக் கொடுக்கின்றன. குறிப்பாக யானையின் நீண்ட தும்பிக்கை லிங்கத்தையும், அதன் புலனுணர் (sensuous) வாய்ப் பகுதி யோனியையும் குறிப்பதாக தந்த்ர சாஸ்த்ரம் கூறுகிறது. அவரது பேருடலும் (immense body) கலப்பு உருவமும் தந்த்ர யோக ஆன்மீக மார்க்கத்தின் அக வலிமை மற்றும் கூருணர்வுகளைக் குறியீடுகளாகக் கொண்டவை; யானைகள் அரசப் பண்பு மற்றும் புராதன காலத்து ஆற்றல் நிறை ஆட்சிமையைக் குறிப்பன என்று மேலும் அது விரித்துரைக்கிறது.

குண்டலினி சக்கரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கடவுள் உரித்தானவராகக் குறிப்பிடப்படுவதுண்டு. முதல் சக்கரமான மூலாதார சக்கரத்தின் வாயில் காப்போன் கணபதியே! இந்த அடிப்படையிலேயே கணபதி முதற் கடவுள் எனப் போற்றப்படுகிறார். மற்ற கடவுள்களின் கோவில்களிலும் கணபதி முன்னிலைப்படுத்தப்படுவதோடு, அவரையே முதலில் வணங்குவதும் நியமமாக உள்ளது. பிற பூஜைகள், யாகங்கள், சடங்குகள் ஆகியவற்றிலும் அவருக்கே முதலிடம். பக்தி இலக்கியங்களிலும் கணபதி ஸ்தோத்திரத்துக்குப் பிறகே, உள்ளடக்கம் இடம் பெறும். பொதுவாக எந்த நற்காரியங்களையும் கணபதியை வழிபட்ட பிறகே தொடங்குவது மரபு. சமய நம்பிக்கை மிக்க க்றிஸ்துவர்கள் சிலுவைக் குறியையும், இஸ்லாமியர்கள் 786 என்னும் மறை எண்ணையும் குறியீடாக இட்ட பிறகே ஏதொன்றையும் எழுதவோ அச்சிடவோ செய்வது போல இந்துக்கள் – குறிப்பாக தமிழ் இந்துக்கள் – தமிழ் உயிரெழுத்துக்களில் ஒன்றான ‘உ’ என்னும் எழுத்தை கணபதி சுழி யாக இடுவது வழமை. இது குண்டலினியைக் குறிப்பதாகும். இவ்வெழுத்தின் துவக்கமான சுழிப் பகுதி குண்டலினிப் பாம்பின் சுருளையும், அதிலிருந்து வெளியே நீட்சியுறும் நேர் கோடு குண்டலினி எழுச்சியையும் சுட்டுகிறது. கணபதி அரைஞாணாகக் கட்டியிருக்கும் பாம்பும் குண்டலினியே!

மற்ற இந்துப் பெருந் தெய்வங்களைப் போலவே கணபதிக்கும் எண்ணற்ற வடிவங்கள் உள்ளன. பரவலாக அறியப்படும் இவற்றில், சித்தி கணபதி வடிவம் தந்த்ர விளக்க வடிவங்களில் ஒன்றாகும். தென்னிந்தியாவில் பொதுவாக கணபதி ப்ரம்மச்சரியக் கடவுளாகவே ப்ரசித்தி பெற்றிருக்கிறார். வட இந்தியாவிலோ அவர் மணமானவர். சித்தி கணபதி என்னும் அவ் வடிவில் அவரது மனைவியான சித்தி என்னும் கடவுளி குறிப்பது குண்டலினி யோகத்தின் விளைவாக யோகிகள் பெறக் கூடிய சித்தி என்னும் புலன் கடந்த ஆற்றலையே. சித்தி – புத்தி என்னும் இரு மனைவிகளோடு இருக்கும் சித்தி புத்தி கணபதி வடிவில் இரு மனைவியரும் குறிப்பது குண்டலினி சக்தியை மேலெழுப்பும் ப்ராணாயாமப் பயிற்சியின் முதன்மை நாடிகளான இடகலை (இடது நாடி), பிங்கலை (வலது நாடி) ஆகியவற்றையே. இது தவிர அவ்வளவாக அறியப்படாத கணபதியின் ஆண் பாதி – பெண் பாதி இணைந்த அர்த்தகணேஷ்வரி, முழுப் பெண் உருவான கணேஷ்வரி போன்ற வடிவங்கள் முற்றிலும் தந்த்ரவியல் சார்ந்தவை.

இந்து மதத்தைப் பொறுத்த வரையில் நெற்றிக் கண் பொதுவாக சிவனின் அடையாளம். அது சிவனுக்கே உரித்தானதாகவும், அழிப்புத் தொழில் கடவுளான அவரது எரித்தழிக்கும் ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாகவும், ஞானதிருஷ்டி (clairvoyance) கொண்ட ஞானக் கண்ணாகவும் மட்டுமே பெரும்பான்மையோரால் கருதப்படுகிறது. எனினும் யோகக் கடவுளான அவரது ஆக்ஞா சக்கரத்தைக் குறிப்பது என்பதைப் பலரும் அறிந்திருப்பர். தந்த்ரா மற்றும் குண்டலினி விஷயங்கள் குறித்து எதுவும் அறிந்திராதவர்களாக இருந்தாலும், குண்டலினியின் மற்ற சக்கரங்களின் எண்ணிக்கையோ பெயர்களோ தெரியாவிட்டாலும், ஆக்ஞா சக்கரத்தின் பெயர், இருப்பிடம், ஞானதிருஷ்டி ஆற்றல் ஆகியவற்றை இந்துக்களில் பலரும் அறிந்திருக்கக் காணலாம். புத்த தாந்த்ரீகமான வஜ்ராயணத்தில் (vajrayana) புத்தருக்கும், மற்ற ஞானிகளுக்கும், அனைத்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களுக்கும் (deities) நெற்றிக் கண் குறிக்கப்படுகிறது. இந்து மதத்திலோ சிவன், ஷக்தி மற்றும் கணபதிக்கு மட்டுமே நெற்றிக் கண் குறிப்பது மரபு. அதிலும் சிவன், ஷக்தி வடிவங்களில் இடம் பெறும் அளவுக்கு கணபதி வடிவங்களில் கூட அது அவ்வளவாக இடம் பெறுவதில்லை. குண்டலினியின் இறுதிச் சக்கரமான சஹஸ்ராரத்தைக் குறிக்கும் ஒளி வட்டத்தையே தெய்வங்கள் அனைத்துக்கும், ஞானிகள் மற்றும் மஹான்களுக்கும் பொதுவாக்கியவர்கள், நெற்றிக் கண்ணை இவ்வளவு கட்டுப்பாடாக வைத்திருப்பது கவனத்துக்குரியது. இந்த தந்த்ரா யோகக் கடவுள் குடும்பத்தின் இன்னொரு முக்கிய அங்கத்தினரும், மேலான தந்த்ர யோகியும், யோகக் கடவுளான தனது தந்தை சிவனுக்கே (அதுவும், தான் குழந்தையாக இருக்கும்போதே) ஓம் எனும் ப்ரணவ மந்திரத்தின் உட்பொருளை விளக்கியவருமான முருகனுக்கே கூட நெற்றிக் கண் உரிமை வழங்கப்படவில்லை என்பதும் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.

. முருகன் () ஸ்கந்தன்: யோகத்தின் சிகரனான போர்க் கடவுள்

சிவ – ஷக்தியின் இளைய மகனான முருகன், தமிழகத்தில் தமிழ்க் கடவுள் என்று போற்றப்படுபவர். தத்துவ விசாரங்களோ, ஞானத் தேட்டமோ, யோகப் பயிற்சிகளோ அற்ற பாமர பக்தர்களாலும், ஞானத்தில் முதிர்ந்தவர்களாலும் விரும்பி வழிபடப்படுகிறவர். வட இந்தியாவில் ஸ்கந்தன், கார்த்திகேயன் உள்ளிட்ட பெயர்களில் சமஸ்க்ருதத்தில் குறிப்பிடப்படும் போர்க் கடவுளான அவரது எண்ணற்ற தமிழ்ப் பெயர்களில் ஸ்கந்தன் என்பதின் தமிழ் வடிவமான கந்தன் என்பதும் ஒன்று. ஸ்கந்தன் என்பது விந்து சக்தி குண்டலினியாக எழுப்பப்பட்டு, பேரின்பம் அடையும் நிலையைக் குறிப்பதாகும். முருகனின் வாகனமான மயில், தன் காலடியில் நாக பாம்பை மிதித்துக்கொண்டிருப்பது, குண்டலினி சக்தியை அடக்கி ஆளக் கூடியவர் அவர் என்பதைக் குறிப்பது. அவரது ஆறு முகங்கள் உடலுக்குள் உள்ள ஆறு குண்டலினி சக்கரங்களைக் குறிப்பவை. மலைச் சிகரத்தில் அவர் குடிகொண்டிருப்பது, யோகத்தின் உச்ச நிலையைக் குறிக்கும். (சிவனின் கைலாயம், மேரு ஆகியனவும், ஐயப்பனின் சபரிமலையும் கூட இவ்வாறானவையே). முருகனின் பெயர்களில் ஒன்றான சுப்ரமண்யம் என்பது ஆத்ம சாதகர் அடையக் கூடிய இறுதி நிலை. அதை அடைந்துவிட்ட பிறகு அடைவதற்கு எதுவும் இல்லை. தாருகாசுரனை வதம் செய்வதற்காக சிவனும் ஷக்தியும் கடும் தவம் இருந்து பெற்ற பிள்ளை முருகன் என்பது தவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகும்.

அண்ணனுக்கு நேர் மாறாக, வட இந்தியாவில் ப்ரம்மச்சாரியாக இருக்கும் முருகன், தமிழ் நாட்டில் இரு மனைவிகளைக் கொண்ட இல்லறத்தவராக உள்ளார். தேவமகளான தேவயானியும், பழங்குடி வேடர் இனத்தைச் சேர்ந்த வள்ளியுமான அவரது இரு மனைவியரும் (கணபதியின் மனைவியர்களான சித்தி மற்றும் புத்தி போலவே) யோக நாடிகளான இடகலை, பிங்கலை ஆகியவற்றின் உருக்கொடுப்புகளே! முருகனைப் பற்றிய தமிழ் பக்தி இலக்கியங்களான கந்தர் சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி போன்றவை தந்த்ராவோடும் அதன் இணைக் கிரியைகளான மந்த்ரம் மற்றும் மாந்தரீகத்தோடும் நெருங்கிய தொடர்புடையவையும் கூட.

(அடுத்த இதழில் மேலும் அறிவோம்)

அடிக் குறிப்புகள்:

* 1. சாங்கியம்: இந்து தத்துவ மரபின் ஆறு முக்கிய பிரிவுகளில் ஒன்று சாங்கியம். மற்றவை வேதாந்தம், யோகம், நியாயம், வைசேஷிகம், மீமாம்சை ஆகியன. இந்த ஐந்தும் இறை நம்பிக்கையின் பாற்பட்டவை. சாங்கியம் மட்டுமே கடவுள் மறுப்புவாதத்தின் பாற்பட்டது. எனினும் அதன் பரிணாமவாதம் மற்றும் இருமைவாதக் கோட்பாடுகள் (dualism) யோகம், வேதாந்தம் மற்றும் பிற தத்துவக் கொள்கைகளோடு (doctrine) இயைந்து செல்லக் கூடியவை. எனவேதான் மற்ற ஆச்சார தத்துவ மரபுகளோடு இதுவும் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. கபில மகரிஷி இதன் தோற்றுவிப்பாளராகக் கருதப்படுகிறார்.

* 2. சார்வாகம்: லோகாயதம் என பரவலாக அறியப்படும் பொருள் முதல்வாத (materialism) கோட்பாட்டை மையமாகக் கொண்ட சார்வாகம் மேற் கூறிய தத்துவ மரபுகளுக்கு நிகரானது. ஆச்சாரம், இறை நம்பிக்கை, அதன் உப விளைவான மூட நம்பிக்கைகள், இவற்றையெல்லாம் உற்பத்தி செய்து கட்டிக் காத்து வருகிற சனாதன தர்மம், அதன் ஆகப் பெரும் ஆயுதமான வேதங்கள் ஆகியவற்றுக்கு எதிரான அதை நாத்திக – கலகத் தத்துவ இயக்கம் எனலாம். அது வேதங்கள் கூறும் மோட்சம், மரணத்துக்குப் பிறகான வாழ்வு, மறு பிறப்பு, அவதாரம், சமயச் சடங்குகள் ஆகியவற்றை மறுதலித்து, புலனியல் சுகங்களில் கட்டற்றுத் திளைப்பதையே வாழ்வின் பயனாகக் கொண்டிருந்தது. அதற்காகவே மது, மாமிசம், வரம்பற்ற பாலியல் உறவு ஆகியவற்றை அது கைக்கொண்டது. சனாதன இந்து மதத்தால் சகித்துக்கொள்ளவியலாத புரட்சித் தத்துவ இயக்கமான இது ஆச்சாரமற்ற காரணத்தாலேயே இந்து மதத்தின் முதன்மைத் தத்துவ மரபுகளில் சேர்த்துக்கொள்ளப்படாத ‘தீண்டாமைக்கு’ உள்ளாகியிருக்கிறது. எனினும், முற்காலத்திய அறிவுஜீவித் தத்துவ இயக்கம் என தற்காலத்திய அறிஞர்கள் பலரும் அதை மதிப்பிடுகிறார்கள். இவ்வியக்கத்தின் தோற்றுவிப்பாளர் சார்வாகர்.

Series Navigation<< தந்த்ரா: இந்து மதத்தின் ஆதார ஸ்ருதிதந்த்ரா: இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி – 3 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.