ஆயுதம்

டீக்கடையின் வாசலில் நின்றிருந்த பார்த்திபனும் கனகுவும் சாலையின் இருபுறமும் பார்த்தார்கள். வேலு அவர்கள் பின்னால் தரையைப் பார்த்தபடி  நின்றுகொண்டிருந்தான். ஆள் நடமாட்டமில்லாத நாற்பதடி சாலையில் அவ்வப்போது பைக்குகளும் எப்போதாவது கார்களும் சென்று வந்தன. பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் மங்களம்பட்டி கிராமத்து பஸ்ஸ்டாப் அருகே இருந்தது அந்த டீக்கடை. கடையை ஒட்டி வலப்பக்கம் ஒரு பேன்சி ஸ்டோர், இடப்பக்கம் காலியிடம், கடைக்குப் பின்பக்கம் புதர் மண்டி இருந்தது. கடையெதிரே சாலையின் மறுபக்கம் ஒற்றையறை ஓட்டுக்கூரை மெஸ்ஸின்முன் அவர்கள் ஓட்டிவந்த இரு பைக்குகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பார்த்திபன் கட்டிடத்தின் சுவர்மூலைகளைப் பார்த்தான். “சுத்திப் பாத்தாச்சு, எதுவும் இல்ல,” என்றான் கனகு. பார்த்திபன் கடைக்குள் பார்த்தான். 

கான்கிரீட் தீப்பெட்டி போன்றிருந்த டீக்கடையின் முன்புறம் இருவர் நடக்குமளவு இடைவெளி விட்டுப் போடப்பட்டிருந்த “L” வடிவ மேடையின் மேல் கேஸ்அடுப்பில் பாய்லரும் பால்பாத்திரமும் கொதித்துக் கொண்டிருந்தன. மேடையின் மறுபக்கம் பிஸ்கட் ஜாடிகளும், பருப்புவடை சுகியன் தட்டுகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கடைக்குள் இரு பிளாஸ்டிக் மேஜைகள், மேஜையைச் சுற்றி நான்கு பிளாஸ்டிக் நாற்காலிகள். கடைசி நாற்காலியில் அமர்ந்து கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்த பனியன்-லுங்கி அணிந்த இளைஞன் முன்னால் பார்த்து எழுந்து வந்தான், “உள்ள வாங்கணா.”

அவர்கள் மூவரும் கடைக்குள் நுழைந்தார்கள். கசங்கிய வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்த பார்த்திபன் “மூணு டீ போடு தம்பி,” என்று சொல்லிவிட்டு பின்சுவரோடு ஒட்டியிருந்த நாற்காலியில் சாலையைப் பார்த்தபடி அமர்ந்தான். வேலு பார்த்திபனின் அருகே அமர்ந்தான். 

மேடைக்கு அருகே நின்றிருந்த கனகு, “வடை வேணுமாண்ணே?” என்று கேட்டான். பார்த்திபன் தலையாட்டினான். “அண்ணே உங்களுக்கு?” என்று கனகு வேலுவைப் பார்த்தான். பார்த்திபன் தலைகுனிந்து அமர்ந்திருந்த வேலுவின் தோளைத்  தொட்டு, “வடை, பருப்புவடை. வேணுமா?” என்று கேட்டான். வேலு குறுக்காக தலையாட்டிவிட்டு தலையைக் கவிழ்த்துக் கொண்டான். 

“ஏன் தம்பி, இன்னைக்கு போட்டதா?” என்று பார்த்திபன் கேட்டான். 

அடுப்புக்கு முன்னால் நின்றிருந்த டீக்கடைக்காரன், “வடை இன்னைக்குப் போட்டதுதாங்கணா,” என்று சொல்லி ஒரு தட்டில் இரு வடைகளை எடுத்து கனகுவிடம் கொடுத்தான்.

சுகியனை எடுத்து கடிக்க ஆரம்பித்திருந்த கனகு மறுகையில் தட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று மேஜையின் மேல் வடைத்தட்டை வைத்துவிட்டு லுங்கியை இளக்கிக் கொண்டான். 

“என்னடா பண்ணற?” என்ற பார்த்திபன் ஒரு வடையை எடுத்துக் கடித்தான். 

“இருங்கண்ணே,” என்று நெளிந்த கனகு பார்த்திபனுக்கு எதிர்நாற்காலியில் அமர்ந்ததும் அவன் பின்புறத்தில் சட்டைக்குள் இருந்து ஒரு கத்தி நழுவி தரையில் விழுந்து நங் என்ற சத்தத்துடன் மேலெழுந்து மறுபடியும் கீழே விழுந்தது. டீக்கடைக்காரன் திரும்பிப் பார்த்தான். அரையடி நீள கத்தியின் கூர்முனை பளபளத்தது. 

விருட்டென எழுந்த பார்த்திபன் கனகுவின் கன்னத்தில் அறைந்து, “உன்னை யாரு கொண்டுவரச் சொன்னது,” என்று கேட்டுவிட்டு டீக்கடைக்காரனைப் பார்த்தான். சிரித்தபடி அமர்ந்தான். “பேரு என்னன்னு சொன்ன தம்பி?”

டீக்கடைக்காரன் அவசரமாய் டீயை ஆற்றினான். டீ வழிந்து தரையில் விழுந்தது. “சேகர்ணா” என்று சொன்னான். பாதி வார்த்தை வாயிலிருந்து வரவில்லை. சேகர் தலைகுனிந்து அமர்ந்திருந்த வேலுவைப் பார்த்தான். பொருந்தாத பாண்ட் சட்டை அணிந்திருந்த வேலு மேசைமேல் கைகளைக் கட்டிக்கொண்டு குறுகி அமர்ந்திருந்தான்.  தலைமுடி கலைந்து, தூங்காத கண்களுடன் அவன் முகம் வாடிப்போய் இருந்தது.  

“பாத்துப் பொறுமையா போடு சேகரு. டீ சிந்துது பாரு,” என்ற பார்த்திபன் நாற்காலியில் அமர்ந்தான், “எனக்கு சக்கரை போடாத.” 

கத்தியை எடுத்து லுங்கிக்குள் சொருகிக்கொண்ட கனகு, “எனக்கு சக்கரை அதிகமா போடு,” என்றான். 

சேகர் வால்பாத்திரத்தில் இருந்த டீயைக் கீழே கொட்டிவிட்டு மறுபடியும் பாத்திரத்தை எடுத்தான். 

பாதி கடித்த வடையை தட்டில் வைத்தவிட்டு பார்த்திபன் கேட்டான், “எண்ணை சாப்பிட்டாலே நெஞ்சு எரியுது. சேகரு, வடை எப்போ போட்டதுன்னு சொன்ன?”

“ணா, சத்தியமா காலைல போட்டதுங்கணா.”

“எண்ணை பழசோ?”

பார்த்திபனைப் பார்த்து ஒரு அடி பின்னால் நகர்ந்த சேகர், “மன்னிச்சுடுங்கங்கணா,” என்றான். 

கனகு பார்த்திபனுக்கு மட்டும் கேட்கும்படி, “அழுதுறப் போறாண்ணே. விட்டுறுங்க,” என்றான். 

மூன்று டீகிளாஸ்களையும் எடுத்துவந்து மேஜையில் வைக்கும்போது சேகரின் கை நடுங்கியது. வேலு தலைதூக்கி சேகர் முகத்தைப் பார்த்தான். சேகர் நகர்ந்து அடுப்புக்கு முன்சென்று நின்று கொண்டான். 

ஒரு மிடறு டீயைக் குடித்துவிட்டு பார்த்திபன் வேலுவின் காதில் சொன்னான், “ஒண்ணும் கவலைப்படாதீங்க தம்பி. நாலு பேரு வராங்க. வேலைய அவங்க முடிச்சுடுவாங்க. நீங்க பின்னாடி நின்னு ஒரு பார்வை பாத்துக்குடுங்க. முடிஞ்சதும் பசங்ககூட வண்டியேறிடுங்க. நாளை காலை அரக்கோணத்துல ஸரண்டர். வேலூருக்கு கூட்டி போவாங்க. தமிழரசு அண்ணன் ஆளுங்ககிட்ட சொல்லியிருக்கு. அங்கதான் உங்களுக்கு பாதுகாப்பு.” 

வேலு தலையாட்டிவிட்டு டீயை ஒரே மடக்கில் குடித்து முடித்து கிளாஸை டேபிளில் வைத்தான். பார்த்திபன் கனகுவைப் பார்த்து சிரித்து டீ குடித்து முடித்தான். கடிகாரத்தைப் பார்த்தான். மணி 2.42. 

“ஏன் சேகரு. இந்த நேரத்துக்கு வாடிக்கையா வர ஆளுங்க யாராச்சும் உண்டா?”

அவர்கள் பேசுவதைக் கவனிக்காததுபோல நடித்துக்கொண்டிருந்த சேகர், “அண்ணே, என்கிட்டயா கேட்டீங்க?” என்றான். கனகு நாற்காலியில் திரும்பி சேகரைப் பார்த்து அமர்ந்தான். “அப்படி யாரும் இல்லைங்ணா. மூணு மணி பஸ்ஸுல யாராவது வந்தா உண்டு,” என்றான் சேகர். 

“மணிமாறன் அந்த பஸ்லதான் வருவான், இல்ல?” என்று கேட்டான் பார்த்திபன். 

“தெரீலயேணா”

“அண்ணே, சேகர் பொய் எல்லாம் சொல்றாண்ணே,”  என்றான் சேகரைப் பார்த்தபடி அமர்ந்திருந்த கனகு. 

பார்த்திபன் எழுந்து நின்றான். கனகுவும் எழுந்தான். சேகர் முன்னால் வந்து “அண்ணா, அப்பா இல்லைங்கணா. அம்மாவும் ரெண்டு தங்கச்சியும் பொழைக்க வழியில்லாமப் போயிடும்,” என்று பார்த்திபனின் காலருகே குனிந்தான். 

ஒரு அடி பின்னால் நகர்ந்த பார்த்திபன், “யேய், பின்னாடி போ. பொருள் வெச்சுருக்கவன் போடக் குனியற மாதிரி முன்னால வர? அடுப்புல போய் நில்லு,” என்று சொல்லிவிட்டு திரும்பி சுவரோரம் இருந்த வாஷ்பேசினில் சென்று கை கழுவினான். பேசின் மேல் பொருத்தியிருந்த கண்ணாடியில் முகம் பார்த்து “தம்பி,” என்று அழைத்தான். வேலு தலைதூக்கிப் பார்த்தான். 

“ரெடியா இருங்க. பசங்களுக்கு ஏதும் உதவி வேணும்னா பாத்துக்குங்க. எதுவும் வேண்டி இருக்காது. எதுக்கும் பாத்துக்குங்க,” என்றான் பார்த்திபன். வேலு தலையை ஒருமுறை ஆட்டிவிட்டு குனித்துக் கொண்டான்.

பார்த்திபனும் கனகுவும் டீக்கடை மேடை அருகே சென்று நின்றார்கள். “எவ்வளவு ஆச்சு?” என்று பார்த்திபன் கேட்டான். “ஒண்ணும் வேண்டாண்ணா, ” என்று சேகர் சொன்னான். 

“அட சொல்லுப்பா, நாங்க என்ன போலீஸ்காரங்களா, சாப்பிட்டு காசு குடுக்காம போக?” என்று பார்த்திபன் தன் பர்ஸில் இருந்து ஐம்பது ரூபாய்தாளை எடுத்து சேகரிடம் கொடுத்துவிட்டு சொன்னான், “சேகரு. கொஞ்ச நேரத்துல உன் கடை முன்னாடி சில விஷயங்கள் நடக்கும். அதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை, புரிஞ்சுதா? யாரு வந்தாங்க, யாரு போனாங்கன்னு உனக்கு ஒண்ணும் தெரியாது. புரிஞ்சுதா? நீ கடைக்கு உள்ள வேலையா இருந்த.”

சேகர் தலையாட்டிவிட்டு தயங்கியபடி சொன்னான், “ணா, மணிமாறன் நல்லவருணா.”  . 

“அப்படியா? நல்லவரா? இப்போ என்ன பண்ணலாம்?” என்றான் பார்த்திபன். 

“பசங்ககிட்ட சேகரையும் கவனிக்க சொல்லுவோமாண்ணே?” என்ற கனகு சேகரின் முகம் போகும் போக்கைப் பார்த்து சிரித்துவிட்டு மேசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிஸ்கட்டில் ஒன்றை எடுத்துக் கடித்தான். பார்த்திபன் சொன்னான், “வேண்டாம் பாவம். அம்மா, தங்கச்சி எல்லாம் இருக்கே சேகருக்கு. சரிதானா சேகரு?”       

பார்த்திபன் வாசலில் நின்று ஒருமுறை டீக்கடைக்குள் பார்த்துவிட்டு வெளியே வந்து சாலையைக் கடந்து எதிரே இருந்த மெஸ்ஸின் முன்னால் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் மேஜை நாற்காலியில் டீக்கடையைப் பார்த்தபடி அமர்ந்தான். கனகு பார்த்திபனின் அருகே அமர்ந்தான்.

மெஸ்ஸுக்குள் இருந்து வயதான முதியவர் வெளியே வந்து, “ஐயா, என்ன சாப்பிடறீங்க?” என்று கேட்டார். 

கனகு மெஸ்ஸுக்குள் பார்த்தான். ஆளில்லா டேபிள்கள். கல்லாவில் ஒரு மத்திமவயது பெண். “ரெண்டு ஆம்லெட் போடுங்க,” என்றான் கனகு. 

“சாப்பாடு வேண்டாங்களா?” என்ற முதியவர் தலையாட்டி கடைக்குள் சென்றார். 

பார்த்திபன் மணி பார்த்துக்கொண்டான். கனகு கேட்டான், “யாருண்ணே இந்த வேலு? ஒரு தினுசா இருக்கார்?”

“ஆளு வெளியூரு. உயிருக்கு ஆபத்துன்னு வண்டியில போட்டு மலையப்பன் அண்ணன்கிட்ட சேப்டியா பாத்துக்க சொல்லி அனுப்பியிருக்காங்க. அவரு நம்ம அண்ணன்கிட்ட உதவி கேட்டுருக்கார். இப்படி ஜெயிலுக்கு அனுப்பற ஐடியா நம்ம அண்ணனுதுதான்.”

“எதுவும் புரியாம அமைதியா உக்காந்துட்டு இருக்காரே, சம்பவத்தைப் பார்த்து பயந்துட்டா?”

“யாரு அவனா? அவன் செஞ்சுட்டு வந்த வேலையும் பெருசு, கொடுத்திருக்கும் விலை அதைவிடப் பெருசு. வெளியதான் அமைதியா இருக்கான், உள்ள நெருப்பு பொங்கிட்டு இருக்கும்.”

கனகு டீக்கடைக்குள் அமர்ந்திருக்கும் வேலுவைப் பார்த்தான். “அப்படி என்னண்ணே செஞ்சுட்டாரு?” என்று கனகு கேட்கும்போதே மூன்று இளைஞர்கள் இரண்டு பைக்குகளில் மெஸ்ஸின் முன்னே வந்து நின்றார்கள். பார்த்திபன் அவர்களுக்கு கண்காட்ட பைக்குகள் டீக்கடையின் முன் சென்று ஓரமாய் நின்றன. பைக் பின்னால் அமர்ந்திருந்த ஒரு இளைஞன் கடைக்கு இடதுபக்கம் சென்று ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டான். வண்டியை ஓட்டிவந்த இரு இளைஞர்களும் பைக்கிலேயே  அமர்ந்திருந்தார்கள்.

பார்த்திபன் மணி பார்த்தான், 3.05. முதியவர் இரண்டு தட்டுகளில் ஆம்லெட்டைக் கொண்டுவந்து மேஜையில் வைத்தார். “ரெண்டும் எனக்குத்தான்” என்ற கனகு தட்டுகளை அவன் பக்கம் இழுத்து வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தான். “எங்கடா பஸ் இன்னும் வரலை?” என்று கேட்டான் பார்த்திபன்.

“இப்ப வந்திடும். ஏன்ணே இந்த மணிமாறன் மாதிரி புள்ளைபூச்சியெல்லாம் இவங்களுக்கு எதிரியா?”

“அந்த ஆளு மூட்டைப்பூச்சிடா. தகவல் அறியும் சட்டம்னு ஒண்ணை வெச்சுட்டு  இதைக்குடு அதைக்குடுன்னு கேட்டு உயிரை எடுக்கறானாம். காசு குடுத்தா வேண்டாம்னு மயிரு நியாயம்வேற. டேய், பஸ் வந்திருச்சு.”

குலுங்கிக் குலுங்கி வந்து நின்ற பேருந்து பத்து ஆட்களை இறக்கிவிட்டு கிளம்பிச் சென்றது. கூட்டம் வெவ்வேறு திசைகளில் பிரிய நான்கு கல்லூரி மாணவர்கள் டீக்கடைக்குள் ஏறினார்கள். அவர்கள் பின்னால் மணிமாறன் கடைக்குள் சென்றார். ஐம்பதை நாற்பதாகக் காட்டும் உடம்பு. கருப்புக்குள் ஒளிந்துகொண்ட வெள்ளை முடி. அவர் பின்னாலேயே பஸ்சில் வந்த பார்த்திபனின் ஆள் குருசும் கடைக்குள் நுழைந்தான். கடைக்குள் நான்கு மாணவர்களும் முன்புற மேசையிலும், குருசு வேலுவின் எதிரிலும், மணிமாறன் வேலுவின் அருகிலும் அமர்ந்தார்கள். 

“என்னண்ணே, கடை ஹவுஸ்புல் ஆயிடுச்சு,” என்று கனகு கேட்டான். இரண்டாவது ஆம்லெட்டையும் சாப்பிட்டு முடித்திருந்தான். 

“கடைக்குள்ள ஒண்ணும் வேண்டாம்னு சொல்லியிருக்கேன். ஆள் வெளிய வரட்டும். சிகரெட் இருக்கா?” என்ற பார்த்திபன் கனகுவிடம் சிகரெட் வாங்கிப் பற்றவைத்துக் கொண்டான். குடித்து முடித்து இன்னொரு சிகரெட்டைப் பற்றவைத்தபோது மணிமாறன் வேலுவிடம் ஏதோ பேசுவது தெரிந்தது. வேலு அவன் முன்பாக நீண்டிருந்த மணிமாறன் கையில் இருந்த தண்ணீர்கிளாஸை வாங்கிக் குடித்தான். “என்னண்ணே நடக்குது அங்க?” என்று கனகு கேட்டான். 

“ஏதும் சொதப்புதோ? நீ நைசாப் போய் பைக்ல இருக்கற ரவிகிட்ட என்னான்னு விசாரிச்சுட்டு வா” என்றான் பார்த்திபன். 

கனகு ரவியிடம் சென்று பேசினான். ஓரிரு நிமிடத்தில் கடைக்குள் இருந்த குருசு அவர்கள் அருகே வந்து ஏதோ பேசிவிட்டு மறுபடியும் கடைக்குள் சென்றான். நான்கு கல்லூரி மாணவர்களும் டீக்கடையை விட்டு வெளியே வந்து வலதுபுறமாக நடந்தார்கள். கனகு சற்று தள்ளி நின்றிருந்த கோகுலைப் பார்த்து தலையசைத்துவிட்டு சாலையைக் கடந்து பார்த்திபன் அருகே வந்து அமர்ந்தான். 

“என்ன ஆச்சுடா?

“நாலு பசங்களும் டீ குடிச்சு கிளம்பிட்டாங்க. மணிமாறன் ஏதோ போன் பேசிட்டு இருக்கான். பசங்க எல்லாம் ரெடியா நிக்கறாங்க” என்றான் கனகு.

“வேலு எதுக்கு மணிமாறன்கூட பேசினானாம்?” என்று கேட்டான் பார்த்திபன். 

“குருசைக் கூப்பிட்டு கேட்டேண்ணே. பெருசா ஒண்ணும் இல்லை. வேலு விக்கல் எடுத்துட்டே இருந்தானாம். மணிமாறன் தண்ணி புடிச்சுக் குடுத்துருக்கான்.”

பெருமூச்சுவிட்ட பார்த்திபன், “அவ்வளவுதானே. அப்ப சரி. நான் ஹைவே திருப்பத்துல டீக்கடை முன்னால நிக்கறேன். எல்லாம் சரியா நடக்குதான்னு பாத்துட்டு நீயும் அங்க வந்திடு.” என்று சொல்லிவிட்டு தன் பைக்கில் ஏறி கிளம்பினான். ஹைவே திருப்பத்து டீக்கடை பூட்டி இருந்தது. பார்த்திபன் வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு கடைக்கூரையின் கீழே நின்று வெட்டிக்குள் கைவிட்டு ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டான்.  

மூன்றாம் பீடி அணையும்முன் கனகுவின் பைக் பார்த்திபன் முன்னால் வந்து நின்றது. ஓட்டி வந்த கனகு பதட்டத்தில் இருந்தான். பைக் பின்னால் குருசு அமர்ந்திருந்தான். “இவனை ஏன்டா கூட்டிட்டு வந்த?” என்றான் பார்த்திபன். குருசு பைக்கில் இருந்து கஷ்டப்பட்டு இறங்கினான். “வேலை முடிஞ்சுதா?” என்று கேட்ட பார்த்திபன் பீடியைக் கீழே வீசினான். 

“இல்லண்ணே” என்ற கனகு குருசைப் பார்த்தான். பார்த்திபன் கவனித்துப் பார்த்தபோதுதான் குருசுவின் தோளில் சிவப்புச்சட்டையின் மேல் ரத்தம் வடிந்து கொண்டிருப்பது தெரிந்தது. 

“என்னங்கடா ஆச்சு?”    

“நீங்க கிளம்பினதுக்கு அப்பறம் மணிமாறன் போன் பேசி முடிச்சு கடைக்காரனுக்கு காசு குடுத்துட்டு வெளிய வந்தான். கடைக்கு முன்னாடி நம்மமாளுங்க மூணு பசங்களும் கத்தியும் அருவாளும் ஒளிச்சு வெச்சுட்டு நின்னாங்க. மணிமாறன் பின்னாடி குருசும் அவன் பின்னாடி வேலுவும் வெளியே வந்தாங்க. மணிமாறன் ரோட்டுல கால் வெச்சதும் ரவி கத்திய வெளிய எடுத்து சுத்தினான். வெட்டு விழுந்ததும் மணிமாறன் ரோட்டுல ஓடாம மறுபடியும் கடைக்குள்ள நுழைஞ்சுட்டான்.” என்ற கனகு குருசைப் பார்த்தான். 

குருசு தோளைப் பிடித்துக்கொண்டே தீனமான குரலில் சொன்னான், “உள்ள வந்தவர்  என்னை ஒரே தள்ளா தள்ளிட்டு எனக்குப் பின்னாடி நின்ன வேலு முதுகுக்குப் பின்னாடி போய் மறைஞ்சு நின்னு காப்பாத்து தம்பினு ஒரு கத்து கத்தினாரு. நான் சட்டைக்குள்ள இருந்த அறுவாளை எடுத்து வீசப் போனேன், ஒரே செகண்ட், அசையாம நின்னுட்டிருந்த அந்த வேலு திரும்பி ஒரு மொறை மொறைச்சு என் கண்ணத்துல அறைஞ்சு கையுல இருந்த அறுவாளைப் பிடுங்கி என் தோள்லயே இழுத்துட்டு என்னைக் கடைக்கு முன்னாடி தள்ளி விட்டுட்டான். நான் நம்ம பசங்க மேல போய் விழுந்தேன். ‘நான் உசுரக் காப்பாத்த கத்தி எடுத்தவன்டா-‘ ன்னு அந்த வேலு கத்தினான். மணிமாறன் ஒரு அடி பின்னாடி போய் நின்னுட்டார். அப்பறம் நம்ம பசங்க போய் ஒண்ணும் பண்ண முடியலை. அவனுது நல்லா பழகின கையுண்ணே, நம்ம பசங்க யாருக்கும் பெரிய சேதம் இல்லை. ஆனா எல்லாவனும் எந்திருச்சு நடக்க மூணு மாசமாவது ஆகும். தெரிஞ்சே இடம்பாத்து வெட்டறான். இடைக்கிடைல ‘நான் உசுரக் காப்பாத்த கத்தி எடுத்தவன்டா-’ன்னு கத்தறான். நான் வெளிய கனகு அண்ணனப் பார்த்ததும் தெறிச்சு ஓடி வண்டியில ஏறி வந்துட்டேன்.”

“மயிராண்டிகளா, வேலைய யாருடா முடிப்பா? வந்து கதை சொல்லிக்கிட்டு இருக்கானுங்க. வாங்கடா பின்னாடி,” என்று சொன்ன பார்த்திபன் தன் பைக்கைத்  திருப்பி உறுமிக்கொண்டு டீக்கடையை நோக்கி பறந்தான். கனகு பைக்கைத் திருப்ப குருசு பின்னால் ஏற மறுத்துவிட்டான். பார்த்திபன் பைக்கை விரைந்து ஓட்டிச் சென்று மெஸ்ஸின் முன் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி எதிரே பார்த்தான். மணிமாறன் டீக்கடைக்கு உள்ளே அமர்ந்திருந்தார். அவர் காயத்தை சேகர் கவனித்துக் கொண்டிருந்தான். இருகைகளையும் முதுகின் பின்னால் கட்டிக்கொண்டு டீக்கடை வாசலில் நின்றிருந்த வேலு தலை நிமிர்த்தி முன்னால் பார்த்துக் கொண்டிருந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.