
சரக்கொன்றை
சடசடவென உதிர்க்கும்
சகதிகள் அப்பிய
மீங்குளத்தில்
பூங்கண்களின்
மிதப்பு அலைகளாக
மௌனிக்கும் மீங்குஞ்சுகள்
ஈரச்சுவடுகள்
வகுடெடுத்த
கீழ்முகட்டின்
உடைகரையருகே
அந்தர வெளியில்
கோதியலைகின்றன
தலைநீட்டிய நாணல்
பூவிதழ்களோடு…
வெயில் அப்பிய
உச்சி மதியத்தில்
வேப்பம் பூக்களை
அலப்பிவிட்டு
தலைப்பூவாய்
சூடிக்கொள்ளும்
ரெட்டைவால் குருவிகள்
பிஞ்சு பழுத்த
பளிங்கு கற்களை போன்ற
அடர்சிவப்பு அப்பிய
மாதுளை மணிகளை
கொறித்து தின்கிற போது
வடிக்கும் செவ்வரளிபாலாய்
தலைநீட்டிய
அலகில் வடிகிறது
செவந்த மாதுளை சாறு…
நூலாம்படைகள்
அறுந்து தொங்கும்
இலையுதிர்ந்த புங்கை மரத்தில்
முட்டி மோதும்
மீன்கொத்திகளின்
கூட்டுச்சண்டையிலிருந்து
வெகுண்டெழுப்பும் பெருத்தொலிகள்
தெறிக்கும் உச்சி வெயிலில்
கதவுதிறந்த வரவேற்பரையில்
வகுடெடுத்த கொடிப்பிச்சியின்
நெடு நிழலில்
வால் சுருட்டி
இளைப்பாறும்
பூனையின் காதினை
அலைக்கழிக்கும் மீங்கொத்திகள்
கூடிக்கலையும்
முகட்டு மேகங்களின்
பக்கவாட்டில்
சிட்டாய் பறக்கிறது
பூனையின் மியா சத்தத்தில்
திசைகள் நோக்கி…
சுள்ளெறும்புகள் கிடத்தியமரும்
அம்மிக்கல்லில்
வறண்டு கிடக்கும்
உப்பும் மஞ்சளும்
நிமிரும் மாடவிளக்கின்
நெற்றிச்சுடரில்
கோதியலையும் நிழலில்
நடவு செய்த
முத்தங்களைப்போன்று
தனித்திருக்கும் இரவுகளின்
எச்சமிருக்கும் நினைவுகளை
அள்ளிக்குவித்து
அரைக்கும் அம்மிக்கல்
புதர்மண்டிய பாங்கிணற்றில்
உறங்கும் ஆலங்கொடிபோன்று
உறங்குகிறது கொட்டடியில்…
முந்தையவை
One Reply to “அய்யனார் ஈடாடி கவிதைகள்”