
என் இலக்கிய அறிமுகம் ஆல்பெர் கம்யு (Albert Camus) மூலமாகவே நடந்தது என்பதின் சாத்தியக் குறைவை (அபத்தத்தை?) நினைத்துக்கொள்கையில் எப்போதுமே சிரித்துக்கொள்கிறேன். சிக்கலில்லாத பதின் பருவத்தை கிரிக்கெட் விளையாடிக்கொண்டும், தமிழ் வாரப் பத்திரிகைகளின் விரசமான பகுதிகளைப் படித்துக்கொண்டும் கழித்திருக்கையில் அப்பாவின் உறவினர் ஒருவர் எங்கள் இல்லத்திற்கு வார இறுதிகளில் வரத் தொடங்கி இருந்தார். களக்காடு பகுதியைச் சேர்ந்த இவரால் செயின்ட் ஜோசஃப் திருச்சியில் இயற்பியல் படித்து முடித்து, தங்கப் பதக்கம் வென்றவராக இருந்தும், நிதி நெருக்கடியால் முதுகலை படிப்பைத் தொடர முடியவில்லை. விடுமுறைக்கு “ஊருக்கு” செல்கையில் இடைநிறுத்தமாக ஓரிருமுறை தங்கிய அந்தச் சிற்றூரிலில் பிறந்து வளர்ந்து, தனது திறன்களுக்கும் விருப்பங்களுக்கும் முற்றிலும் முரணான தொலைபேசி இலாகாவில் பணியாற்றிக் கொண்டிருந்த வாலிபர், அவரது வார இறுதி வருகைகளின் போது தன் பையிலிருந்து வெளிப்படுத்திய விதவிதமான பிரெஞ்சு நாவல்களின் பழைய பெங்குயின் பதிப்புகளை ஆர்வத்துடன் படிக்கும் பழக்கம் கொண்டிருந்தார். தன் வழக்கமான லுங்கி வெள்ளை பனியனில் எங்கள் டைனிங் டேபில் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, தாடையை வலதுகை உள்ளங்கயில் தாங்கிக்கொண்டு, கால்களை சீராக ஆட்டியபடி, அவற்றை அவர் படித்துக் கொண்டிருந்தது எனக்கு, இருபத்து ஐந்து வருடங்களுக்குப் பிறகும், இன்னமும் பசுமையாக நினைவிலிருக்கிறது.
அவர் தன் புத்தகங்களிலிருந்து எனக்குக் காட்டிய சார்த் மற்றும் கம்யுவின்- நான் தோராயமாகவே புரிந்துகொண்ட- கடவுள் மதம் குறித்த பத்திகள் எனக்கு ஒரு விதமான கிளர்ச்சியை அளித்தன. சாமான்யமான என் நடுத்தர வர்க்க நிலைக்கு எதிராக ‘கிளர்ச்சி’ செய்யும் பாவனைகளை எனக்கவை எளிதாக வழங்கியதால் அவற்றின் ஆசிரியர்களைக் “கடவுள்களாக” வழிபாடு செய்யத் தொடங்கியிருந்தேன். அந்த வருகைகளில் ஒன்றில், அவர் என்னை ஹிக்கின்பாதம்சிற்கு அழைத்துச் சென்று, கம்யுவின் ஸ்ட்ரேஞ்சர் நாவலை எனக்குப் பரிசாக வழங்கினார். (தலைப்பு அவுட்சைடராக இருந்திருக்குமோ என்ற சந்தேகத்தையும் அந்நினைவு உடனழைத்து வருகிறது, அதே தலைப்பு உள்ள, அவர் அக்காலத்தில் படித்துக் கொண்டிருந்த காலின் வில்சனின் புத்தகத்துடன் குழப்பிக்கொள்கிறேன் என்று எனக்கே விளக்கிக் கொள்கிறேன்)

முற்றிலும் எதிர்பாரா விதத்தில் தொடங்கிய இந்த இருத்தலிய மோஸ்தரில், கம்யுவின் The Outsider / Stranger, The Fall, The Plague, The Myth of Sisyphus மற்றும் The Rebel புத்தகங்களைத் தொடர்ந்து சார்த்தின் அயர்ன் இன் தி சோல் ட்ரைலாஜியையும் எனக்கு மிகவும் பிடித்தமான அவற்றின் பெங்குயின் பதிப்புகளில் (எவ்வளவு நவீனமான அட்டைப்படங்கள்!) படித்து முடித்தேன். விடலைத்தனமான “கிளர்ச்சி” என்று இப்போது வரையறுக்கத் தோன்றும் ஓர் உணர்வால் தூண்டப்பட்டிருந்தாலும், கம்யுவை ஒரளவு புரிந்துகொண்ட வாசிப்புகளின் வழியே அவரது இரண்டு முக்கிய கருட்பொருட்களை என்னால் வடிகட்ட முடிந்தது: அபத்தம் மற்றும் மறுப்பு (Absurdity and Revolt.) “மனித இதயத்தில் எதிரொலிக்கும் தெளிவிற்கான கட்டற்ற ஏக்கத்தின் குரல்” பிரபஞ்சத்தின் ஊமைப் பகுத்தறிவின்மையை எதிர்கொள்வதின் விளைவே அபத்தம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். அத்தெளிவு கிடைக்காத ஓர் உலகில் ஏன் தொடர்ந்து வாழ வேண்டும் என்ற கேள்வியை சிந்தித்துத் தத்தளிக்கையில் மனித மனம் பற்றிக்கொள்ளும் ஊன்றுகோல்தான் மறுப்பு. மதம்சார்ந்த அடிப்படைப் படிப்பினை என்னுள் இருத்திவிட்டிருந்த கருணைமிக்க, சர்வவல்லமை படைத்த கடவுளுடன் உலகிலுள்ள தீமையையும் துன்பத்தையும் சமரசப்படுத்திக்கொள்ள முடியாதததால், அபத்தம் என்று அதை வரையறுக்காவிட்டாலும் , கம்யுவின் முதற் கருட்பொருளை நான் அக்காலகட்டத்தில் சுயமாகவே வந்தடைந்திருந்தேன். தற்கொலை போன்ற விபரீதமான எண்ணங்களிலிருந்து என்னைப் பாதுகாக்க கோழைத்தனம் எனக்கொரு கேடயமாக அமைந்தது. மேலும் உலகத்தின் சிற்றின்பங்கள் என்னுடன் அளவிற்கு அதிகமாகவே இன்னமும் உடனிருந்ததால் அதன் அப்பட்டமான அபத்தத்தைப் பொருட்டு அவற்றைத் துறக்கும் அளவிற்கு நான் தள்ளப்படவில்லை. த மித் ஆஃப் சிசிஃபஸ் “ஏளனத்தால் வெல்ல முடியாத விதி இல்லை” என்பதை எனக்குக் கற்பித்தது. வறுமையும் சூரியனும் என்று பின்னர் தாயுடன் ஆதரவற்று அல்ஜியர்ஸில் கம்யு வாழ்ந்த காலகட்டத்தை விவரித்த சரிதையை நான் மேலும் அறிந்துகொள்கையில் அதை எளிதாக்கிக்கொள்வேன். கம்யு விவரித்தது போல் “சூரியனுக்கு கீழே வெளிச்சம் நிறைந்திருக்கும் உலகிலும், வரலாற்றிலும், அனைத்துமே சரியாகவே இருக்கிறது என்று நம்புவதிலிருந்து வறுமை என்னைத் தடுத்தது. வரலாறுதான் எல்லாம் என்பதை மறுதலிக்க சூரியன் எனக்குக் கற்றுத் தந்தது”

சரி, இந்த சிசிஃபஸ்சின் தொன்மத்தில் அப்படி என்னதான் இருக்கிறது. கிரேக்க மன்னன் சிசிஃபஸ் அவனது கர்வத்திற்காக கடவுள்களால் தண்டிக்கப்படுகிறான் (அவர்களைக் காட்டிலும் தான் புத்திசாலி என்று அவன் நினைப்பதால்.) கீழிருந்து மலை உச்சிக்கு ஒரு பாறாங்கல்லை உருட்டிச் செல்ல அவன் நிர்ப்பந்திக்கப்படிகிறான். கடவுள்கள் சாடிஸ்டுகளாகவும் இருப்பதால் ஒவ்வொரு முறையும் அவன் உச்சியை அடையப்போகும் தருணத்தில் அந்தப் பாறாங்கல் கீழே உருண்டு செல்கிறது. அவன் அதை மீண்டும் உருட்டிச் செல்வதற்காகக் கீழிறங்கிறான். எனவேதான் எண்ணற்ற கார்ட்டூன்களில் அவன் பயணற்ற உழைப்பிற்கான குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறான். கேள்வி என்னவென்றால், சிசிஃபஸ் ஏன் குன்றிலிருந்து குதித்து தன் வீண் உழைப்பை முடித்துக்கொள்வதில்லை? அவனுக்கு அளிக்கப்பட்ட உலகின் அபத்தத்தை அவன் உணர்ந்துகொள்கையில் அதை எதிர்க்கத் தேர்வு செய்து, இறுதியில் தோல்வியுறப் போவதை அறிந்திருந்தும் வாழ முடிவுசெய்கிறான், என்பதே கம்யுவின் பதில். மித் ஆஃப் சிசிஃபஸ்சின் மிக அழகான பத்தி ஒன்று இதை நெகிழ்வூட்டும் விதத்தில் நமக்களிக்கிறது:
“நான் சிசிஃபஸை மலையின் அடிவாரத்தில் விட்டுச் செல்கிறேன். தன் சுமையை ஒருவன் எப்போதுமே மீண்டும் எதிர்கொள்கிறான். ஆனால் சிசிஃபஸ் நமக்கு கடவுள்களை மறுதலிக்கும் அதைக் காட்டிலும் உயர்ந்த ஒரு விசுவாசத்தைக் கற்பித்து பாறைகளை உயர்த்துகிறான். அனைத்தும் நன்றாகவே இருக்கிறது என்ற முடிவுக்கே அவனும் வருகிறான். எஜமானர் இல்லாத இந்தப் பிரபஞ்சம் மலட்டுத்தனமானதாகவோ பயனற்றதாகவோ அவனுக்குத் தோன்றவில்லை. அக்கல்லின் ஒவ்வொரு அணுவும், அந்த இரவினால் நிரம்பிய மலையின் ஒவ்வொரு கனிமச் செதிலும், தன்னளவில் ஒரு உலகத்தை உருவாக்குகின்றன. உயரத்தை நோக்கிய போராட்டமே ஒரு மனிதனின் இதயத்தை நிரப்பப் போதுமானது. சிசிஃபஸ் மகிழ்ச்சியாகவே இருந்திருக்க வேண்டும் என்று நாம் கற்பனை செய்துகொள்ள வேண்டும்.”
சில விளக்கங்கள் சிசிஃபஸை சூரிய தொன்மங்களுடன் இணைக்கின்றன, கிழக்கின் உதயத்திற்கும் மேற்கின் அஸ்தமனத்திற்கும் இடையே விரியும் சூரியனின் பாதையை சிசிஃபஸின் மலை ஏறுதுல் இறங்குதல் பயணத்திற்கு அவை ஒப்புமை செய்கின்றன. நான் முன்பு கூறியது போல் வறியவாழ்வும், சூரியனும்!

L’etranger-ஐப் பொறுத்தமட்டில், அதை Le Mythe de Sisyphe என்ற கட்டுரையின் புனைவு வடிமாக நாம் வாசிக்கலாம். நாவலின் முதல் பாதியில், ஒரு இளம் அல்ஜீரிய குமாஸ்தாவின் “வறிய வாழ்க்கை” நமக்குத் தரப்படுகிறது: அன்றாடப் பணிகளின் சலிப்பூட்டும் அர்த்தமில்லாத மறுநிகழ்வுகளில் நேரத்தைக் கழிக்கும் வழக்கமான தினசரி அரைப்பு நமக்கு மிகவும் பரிச்சயமானது. (ப்ரூஃப்ராக் சொல்வது போல் வாழ்வு அளவிடப்படிகிறது காஃபி-ஸ்பூன்களில்.) நாவலின் நாயகன் மெர்சோ, சிகரெட் பிடிப்பது, ஞாயிற்றுக்கிழமைகளில் படுக்கையில் சோம்பிக் கிடப்பது. சட்டியிலிருந்து நேராக முட்டைகளைச் சாப்பிடுவது போன்ற அன்றாடங்களில் கழியும் அவன் வாழ்வு “அபத்தமாக” சித்தரிக்கப்படுகிறது. ஆனால், அதன் அபத்தத்தை அவன் உணர்ந்து கொள்வதில்லை. அவன் அம்மா இறந்துவிடுறாள், அவள் ஈமச் சடங்கில், இந்த இழவு எப்போது முடியும், படுக்கைக்குச் சென்று மீண்டும் எப்போது தான் பன்னிரண்டு மணி நேரம் தூங்கக் கூடும் என்ற சிந்தனையே அவன் மனதில் உழல்கிறது. போகிற போக்கில் போகட்டும் என்ற நிலையில்தான் அவன் வாழ்க்கையை எதிர்கொள்கிறான்; தன் உணர்வுகளை வெளிப்படையாக காட்டிக்கொள்ளாது, முதலாளி அவனை வேறு இடத்திற்கு மாறச் சொல்லிக் கேட்டாலோ, அல்லது அவன் காதலி தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினாலோ உணர்வற்ற எதிர்வினையையே அவனால் ஆற்ற முடிகிறது. சுருக்கமாகச் சொன்னால் அவன் அனைத்திற்கும் மந்தமாக ஒப்புதல் அளிக்கிறான், க்ரூஸ் கண்ட்ரோலில் ஓடிக்கொண்டிருக்கும் இவ்வாழ்க்கையை முதற் பகுதியின் இறுதியில் வரும் நிகழ்வொன்று தூக்கிவாரிப் போடுகிறது. ஒருநாள் கடற்கரையில் நடந்து செல்கையில், வெப்பத்தால் நிலைகுலைந்து, அவன் ஒரு அரேபியனைச் சுட்டுவிடுகிறான். அவனைப் படுகாயப்படுத்தி கொன்றதோடு மட்டுமல்லாது, அவன் விழுந்தபிறகும் மேலும் நான்குமுறை அவன் சடலத்தின்மீது தோட்டாக்களைப் பாய்ச்சுகிறான்.
இரண்டாம் பகுதியில், சிறையில் அடைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் தனது நாளுக்காகக் காத்திருக்கும் அவன் தனது பழைய குடியிருப்பில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக மறுபரிசீலனை செய்வதில் தனது நேரத்தைச் செலவிடுகிறான். முந்தைய வாழ்வின் அர்த்தமற்ற வழக்கத்தை மற்றொரு அர்த்தமற்ற வழக்கத்திற்காக அவன் பதிலீடு செய்துகொண்டு விட்டதை நாம் உணர்ந்து கொள்கிறோம். தாயின் இறுதிச்சடங்கில்கூட அவன் அழவில்லை என்பதையும், அவனது உணர்வின்மையையும், செய்த குற்றத்திற்காக அவன் வருத்தப்படவில்லை என்பதையும் அரசாங்க வக்கீல் ஊதிப் பெருக்கி வாதம் செய்கிறார். அடிப்படையில், அவன் உலகத்தொடு ஒற்றொழியாமல், அதற்குப் புறத்தே, இணங்க எதிர்பார்க்கப்படும் சமூக ஒழுக்கங்களுக்கு “அந்நியனாக” இருப்பதற்காகவே கண்டனம் செய்யப்பட்டு, மரண தண்டனைக்கு விதிக்கப்படுகிறான். நீதி அமைப்பிடமோ, கடவுளிடமோ முறையீடு செய்வதைத் நிராகரித்து, அனுதின சலிப்பென்ற மலையில் இணக்கப்பாறைகளை எவ்வாறு தள்ளிக்கொண்டிருந்தோம் என்பதை அவன் உணர்ந்துகொள்கிறான். சிறை ஜன்னலின் ஊடே வீசும் காற்று கிராமப்புற ஒலிகளையும், இரவு மற்றும் நிலத்தின் உப்புவாடைகளையும் உடனழைத்து வருகிறது, அவற்றை அவன் ரசிக்கிறான். அவற்றுடன், மரண தண்டனைக்காகக் காத்திருக்கையில் நட்சத்திரங்களை நோக்கியே கண்விழிப்பதையும். ஏதோவொரு வகையில், வாழ்க்கையின் அபத்தம் மற்றும் மரணத்தின் பயனற்ற தன்மையை உணர்ந்த போதிலும், அவற்றை வாழ்க்கைக்கு “ஆம்” என்று எதிர்வினையாற்றும் காரணங்களாக அவன் ஆமோதிக்கிறான். சிறை அறையின் வறுமையில், தனக்கு ஒதுக்கப்பட்ட சூரியனின் வரங்களைக் கண்டெடுக்கிறான். நாவலின் பிரசித்தி பெற்ற அம்முடிவை நாம் படிக்கையில்:
அனைத்துமே நிறைவடைவதற்கும், என் தனிமையைக் குறைத்து கொள்வதற்கும், நான் தூக்கிலிடப்படும் நாளில் பார்வையாளர்கள் ஒரு பெருந்திரளாகத் திரண்டு வெறுப்புக் கூக்குரல்களுடன் என்னை வரவேற்கவேண்டும், என்று நான் விழைவதே போதுமானது.
இறப்பதற்கு முன் சிசிஃபஸ் தன் மனைவியிடம் பொதுச் சதுக்கத்தின் நடுவில் தனது நிர்வாண உடலை வீசுமாறு அறிவுறுத்தியதையும் நாம் நினைவில் கொள்கிறோம்.

த பிளேக் நாவலை (என் கருத்துப்படி அவரது தலைசிறந்த நாவல்) நம்மால் சிசிஃபிய வெளிச்சத்தில் படிக்க முடியும். தி ஸ்ட்ரேஞ்சர் ஒரு தனிப்பட்ட வாழ்க்கையின் பின்னணியில் சிசிஃபிய தொன்மத்தை ஆராய்ந்தால், பிளேக் அதை ஒரு முழு நகரத்தின் சூழலில் ஆராய்கிறது. இதில் அன்றாடத்தை புரட்டிப்போடும் நிகழ்வு பிளேக் என்ற தொற்றுநோயின் மூலம் வருகிறது. நகரத்தை வெளி உலகத்துடனான அனைத்து தொடர்புகளிலிருந்தும் அது துண்டித்து விடுகிறது. இத்தனிமைப்படுத்தால் திகைப்புறும் நகரவாசிகள் தங்கள் முந்தைய அன்றாடத்தில் பொதிந்திருந்த வளங்களை உணர்ந்து கொள்கிறார்கள். கடமையைச் செய்வதற்கான எளிய கோரிக்கைகளுக்கு ஏற்ப அவர்கள் செய்லபடும்போது வீரம் அல்லது புனிதத்துவம் என்று கருதுவதற்கான நற்பண்புகளை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், திரண்டெழும் இக்குடிமை நல்லொழுக்கத்தில் எவ்விதமான ஆதர்சப்படுத்தலுமே (ரொமாண்டிசைசேஷன்) இல்லை. ஏனெனில் பிளேக் தணிந்து நகரம் மீண்டும் திறக்கப்பட்டவுடன், மீண்டும் அதன் முந்தைய மறதியான சோர்வுக்கே அது திரும்புகிறது. நாவலின் நாயகன் டாக்டர் ரியூவின் தத்துவ இணையான தரூ, “எனக்குக் கண்டிப்பாக தெரியும்… நம் ஒவ்வொருவருக்குள்ளும் பிளேக் உள்ளது” என்று கூறுகிறார். மேலும் “…ஆரோக்கியம், ஒருமைப்பாடு மற்றும் தூய்மை என்பதெல்லாம் மனித விருப்புறுதியின் விளைவாகும், கவனமான நம் விழித்திருத்தலாலேயே அவற்றை நாம் தக்கவைத்துக் கொள்கிறோம்; அதை நாம் ஒருபோதும் தளரவிடக்கூடாது.” கோவிட்டால் முற்றுகையிடப்பட்டபோது பிளேக் நாவலை மீண்டும் படித்தேன், அதில் இன்னும் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை நேரடியாகவே உணர்ந்துகொண்டேன்.
சரி, மீண்டும் த ஸ்ட்ரேஞ்சருக்குத் திரும்புவோம். இளமையில், விதிக்குப் பெப்பே காட்டும் கடப்புகளற்ற நம்பிக்கையைத் தழுவிக்கொள்ளும் இந்த சிசிஃபிய வீரமே என்னை அதன்பால் ஈர்த்தது. ஆனால் 2000-களின் முற்பகுதியில், தன்மையில் நன்றாக எழுதப்பட்டிருக்கும் கதைகளின் வசீகரங்களையும், அவை எவ்வாறு மிகத் தந்திரமாக அவற்றின் கண்ணோட்டத்துடன் நம்மை உடன்பட வைக்கின்றன என்பதைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கையில் கம்யுவின் அந்நியன் நாவல் உடனடியாக என் மனதில் தோன்றியது (அதனுடன் ஷெர்லி ஜாக்சனின் “We have always lived in the castle” நாவலும்.) அதன் நடுநிலை போல் தொனிக்கும் நடை, அவ்வப்போது தொட்டுணரக்கூடிய விதத்தில் அதில் சில விவரணைகள் வெடித்தெழுந்தாலும், நம்மை மந்த நிலையில் மயக்கி வைத்திருக்கிறது. கொலையைக் கண்டு அனிச்சையாகவே நம் உள்ளுணார்வு அதிர்ந்து பின்வாங்கினாலும், மெர்சோ அரபியனைக் கொல்ல எத்தனிக்கவில்லை என்றும், சூழ்நிலையே அவன் விறுப்புறுதியை ஆட்கொள்கிறது என்றும் அவன் முன்வைக்கும் பார்வையுடன் நாம் இறுதியில் உடன்படுகிறோம். மோசமான நிலைமையில் சிக்கிக் கொண்ட ஒர் துரதிர்ஷ்டன் அவன் என்று நாம் பாவித்துக்கொள்கிறோம். சொல்லப்போனால் செய்த குற்றத்திற்காகக் கிஞ்சித்தும் வருத்தப்படாத இந்தக் கொலைகாரனை (“மீண்டும் அவ்வாறே வாழ நான் தயாராக இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன்” என்று அவன் கூறுகிறான்) இறுதியில் ஒரு கொடூரமான சமூகத்தால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, அது கோரும் நடத்தை முறைகளுக்கு இணங்காததால் தண்டிக்கப்படும் ஒரு எதிர்மறை நாயகனாக (ஆன்டி-ஹீரோ) நாம் ஆதர்சப்படுத்துகிறோம். கருத்தளாவில் மறுப்பின் உருவமாகவே கம்யு அவனைப் புனைய நினைத்திருந்தாலும், நாவல் வெளியாகி (1942) பல ஆண்டுகள் கழிந்த பின்னும், அவர் அவனை ஒருவித கிறிஸ்துவைப் போன்ற உருவமாக உயர்த்திக் கொண்டிருந்தார்: “நமக்குத் தகுதியான ஒரே கிறிஸ்து“, “நிழல்களை விட்டுச்செல்லாத ஒரு சூரியனை நேசிக்கும் பாவப்பட்ட நிர்வாண மனிதன்” இத்யாதி. எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு, சமூக ஊடகங்களில் கோரிக்கை சீற்றங்கள் விரவிக் கிடக்கும் நம் சூழலிலும்கூட, அவனது ஆதர்சப்படுத்தல் தடையின்றி தொடர்கிறது. சில சமயங்களில் கலை வாழ்க்கையை வென்றுவிடும் போல… ஆனால் “கேடுகெட்ட அந்த அரபிக்கு என்னவாயிற்று” என்று யாராவது கேட்கத் துணிவார்களா?

~oOo~
அக்காலத்தில் நான் எழுதுவதில் அதிகம் ஈடுபடாததால், இச்சிக்கல்களைக் குறித்த எண்ணங்களை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வப்போது என் கவனத்தை ஈர்க்கும் எண்ணற்ற பிற சிந்தனைகளுடன் இதுவும் செயலின்மையின் குப்பைத் தொட்டிகளில் கைவிடப்பட்டது. ஆனால், மடிக்கணினி வைத்திருக்கும் எவருக்கும் தெரியும், குப்பைத் தொட்டிகளைக் கூட மீட்டெடுக்க முடியுமென்று. இந்த மார்ச் மாதம், மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பாஸ்டனில் கடைசியாக நின்றுகொண்டிருக்கும் பெரிய செகண்ட் ஹேண்ட் புத்தகக் கடைகளில் ஒன்றான தி ப்ராட்டில் புத்தகக் கடைக்குச் சென்றேன். எதையுமே வாங்காது திரும்பிப் போகப்போகும் தருணத்தில் “The Meursault Investigation” என்ற புத்தகம் கண்ணில் பட்டது. பின்னட்டை வாசகங்களைப் படித்தபின் அந்த கேடுகெட்ட அரபியைப் பற்றி யாரோ கேட்கத் துணிந்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன். ஓரானில் வசிக்கும் அல்ஜீரிய பத்திரிகையாளர் கமெல் தாவுத் (Kamel Daoud) கம்யுவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு நாவலை எழுதி, கொலை செய்யப்பட்ட அரேபிய குடும்பத்தின் கண்ணோட்டத்தில் கம்யுவின் நாவலை மறுபரிசீலனை செய்திருக்கிறார் என்பதையும். நாவல் நல்ல வரவேற்பைப் பெற்று Prix François-Mauriac மற்றும் Prix des cinq continents de la Francophonie விருதுகளையும் முதல் நாவலுக்கான Prix Goncourt பரிசையும் வென்றது. ஒரு திரைப்படத் தழுவலும் திட்டமிடப்பட்டது, ஆனால், அது என்னவாயிற்று என்பதை என்னால் சரியாக உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. எப்படியிருந்தாலும், புத்தகத்தை வாங்குவதற்கு இப்பின்னட்டைச் சான்றுகள் போதுமாக இருந்தது (வெறுங்கையுடன் ஒரு புத்தகக் கடையை விட்டு வெளியேறுவதில் எனக்கிருந்த தயக்கத்திற்கும் இதில் சிறு பங்கிருந்தது என்பதும் உண்மை.) ஆனால் புத்தகத்தை வாங்குவது ஒரு விஷயம், அதை வாசிப்பது முற்றிலும் வேறுபட்ட விஷயம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய புத்தகங்கள் இன்னும் என்னைப் படிக்கத் தூண்டும் “சரியான” தருணங்களுக்காகக் காத்திருக்கின்றன. இருப்பினும், இப்புத்தகத்தின் விஷயத்தில், வியக்கத்தக்க வகையில், வாங்கிய உடனேயே, அதை மிக விரைவாகவே படித்து முடித்தேன். மிகவும் நெகிழ்வூட்டும் வரிகளை எழுதியதற்காகவும், இலக்கியம் படிக்கும் பழக்கத்திற்கு என்னைத் தூண்டியதற்காகவும். கம்யுவிற்கு இன்னமும் என் மனதில் ஒரு பிரத்யேக இடம் இருந்து கொண்டிருந்ததை நான் உணர்ந்து கொண்டேன். நாவல்களைவிட அவரது ஆற்புதமான கட்டுரைகளுக்காகவே நான் அவரை இப்போது மதிக்கிறேன் என்று தோன்றுகிறது. அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரது “த ரிட்டர்ன் டு திபசா” கட்டுரையை மொழிபெயர்த்தேன் என்பதையும் இங்கு பெருமையுடன் பதிவு செய்கிறேன்.
கம்யுவின் The Fall நாவலை நினைவுறுத்தும் நடையுடன் (இன்னமும் சரியாக புலப்படாத காரணங்களுக்காக António Lobo Antunes-இன் South of Nowhere நாவலையும்) அதை ஆட்டிப்படைக்கும் கொலை நடந்து ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு, கொலைசெய்யப்பட்ட அரபியனின் (அவனுக்கு ஒரு வழியாக ஒரு பெயரும் கிட்டுகிறது, மூஸா) சகோதரன் ஹாருனின் குரலில் Meursault Investigation நம்முடன் கதைக்கிறது. முந்தைய நாவலின் மைய அத்தியாயத்தைக் கொலை செய்யப்பட்ட மனிதனின் குடும்பத்தின் பார்வையில் இருந்து மறுபரிசீலனை செய்து the Arab என்று பொத்தம்பொதுவாக பெயரிடப்பட்டவனுக்கு ஒரு முகத்தை அளிப்பதே நாவலின் குறிக்கோள். ஆனால், அதன் வெற்றி அதன் ஒளிமுறிவுத் திறனையே பொறுத்திருக்கிறது. முந்தைய நாவலின் ஒளியைக் காலனியத்தால் பாதிக்கபட்டவர்களின் நனவு என்ற பெட்டகத்தினூடே மூலத்தை நினைவுபடுத்தியபடியே திறம்பட உருமாற்றுவதே அதன் சவால். எனவேதான் “அம்மா இன்று இறந்துவிட்டாள்” என்ற முந்தையதின் தொடக்கத்தை நினவுகூறும் “அம்மா இன்னமும் உயிருடன்தான் இருக்கிறாள்” என்ற பிந்தையதின் ஆரம்பம். ஆனால், இவ்வாறு படிக்கப்படுவதென்பது, காலனியத்திற்கு உட்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட்ட பிறகும் தங்களைத் தாமே விளக்கிக் கொள்வதற்குக்கூட சில சமயங்களில் தங்கள் முன்னாள் அடக்குமுறையாளர்களின் கதையாடல்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது என்பதையும் நகைமுரணாக உணர்த்துவதும்கூட. ஹாருனே தன் கதையைக் “கொலைகாரனின் வார்த்தைகளையும் தொடர்களையும்” கொண்டு கூறப் போவதாக நம்மிடம் அறிவிக்கிறான். அவற்றை அவன் “காலனித்துவவாதிகள் விட்டுச் சென்ற பழைய வீடுகளின் கற்களுக்கு” ஒப்பிடுகிறான். இதையே நாம் குரல் இல்லாதவர்கள் மற்றவர்களால் குரல் கொடுக்கப்படுவதாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இப்படிப் பொருட்படுத்துகையில் கதைக்கு சில மதரீதியான மேலோட்டங்கள் சேர்கின்றன: இறந்த மற்றும் குரல் இல்லாத மூஸாவிற்கு (மோசஸ்) அவனது சகோதரன் ஹாருன் (ஆரோன்) குரல் கொடுக்கிறான் என்ற அர்த்தத்தில்.

வாலிபத்தைக் கடந்துவிட்ட குடிகாரனாக ஹாருன் தன் சகோதரனின் கொலைச் சம்பவத்தைக் குறித்து (அவன் ஏழு வயதுச் சிறுவனாக இருந்த போது நிகழ்ந்த சம்பவத்தை) ஓரானில் உள்ள ஒரு பாரில், தங்கள் “வயது, கடவுள் அல்லது மனைவியுடமிருந்து” தப்பிப்பதற்காக வரும் ஒரு கேவலமான பாரில், அங்கு வருகைதரும் ஒரு ஆராய்ச்சியாளரிடம் பேசுகிறான். இப்புனைவின் சட்டகம் மற்றொரு புனைவாக இருந்தாலும் அம்மூலத்தின் புனைவுச் சம்பவங்கள் இப்புனைவின் கதையாடலில் நிஜமாக எடுத்தாளப்பட வேண்டும் என்பதே எனக்கு இந்நாவலின் சுவாரசியமான விஷயமாக இருந்தது. ஆக, The Stranger என்ற புனைவில் மூஸாவிற்குப் பெயரில்லை என்பதால் Meursault Investigation -இல் அவனது சடலத்தை ஹாருனாலும் அவன் தாயாலும் அரசாங்கத்திடமிருந்து மீட்டுவர முடிவதில்லை. இதனால் நனவில் நடக்கும் அவன் ஈமச் சடங்கு, அவன் சவக்குழி சடலமில்லாது காலியாக இருப்பதால், ஒரு அரங்கேற்றப்பட்ட நாடகத்தை போல் காட்சியளிக்கிறது. துக்கத்தில் இருக்கும் தாயால் அதிலிருந்து விடுபட முடியாததால், அவள் க்ளைடெம்னெஸ்ட்ராவின் ஒரு அரேபிய அவதாரத்தைப் போல் கொலைசெய்யப்பட்ட சந்ததியருக்காக நீதி வேண்டி பழிவாங்கத் துடிக்கிறாள். சட்டபூர்வமான வழிகள் முட்டுச்சந்துகளில் முடிவதால், அச்சம்பவத்தை தன் கறபனைக்கேற்ப திரித்துக் கொண்டு. (“அம்மாவிடம் ஆயிரத்தொரு கதைகள் இருந்தன, அவ்வயதில் எனக்கு உண்மை அவ்வளவு முக்கியமானதாக இருக்கவில்லை.”) ஹாருனைப் பழிவாங்கும் கருவியாக மாற்றுகிறாள். இதுவே “மீண்டும் மீண்டும் கிழே உருண்டு செல்லவிருக்கும் பிணத்தை மலை உச்சிக்கு முடிவில்லாது தள்ளிச் செல்லும்” அவன் அபத்த நிலையை தொடங்கி வைக்கிறது. புனைவாரங்கள் ஒன்றையொன்று பிரதிபலிக்கும் இந்த அபத்த அரங்கில் சிசிஃபஸ்சின் தொன்மம் ஒரு முழு வட்டம் வந்துவிட்டது.
அதன் முன்னோடியைப் பிரதிபலிக்க வேண்டிய கட்டாயத்தின் விசை கண்டிப்பாக ஒரு கொலையைக் கோருகிறது. அதற்கேற்ப இரண்டாம் பகுதியில் ஒரு கொலையும் நிகழ்கிறது. முந்தையதின் கண்ணாடி பிம்பம் போல், இதில் ஹாருன் என்ற அரபியன், அதிகாலை இரண்டு மணிக்கு பொழியும் நிலவிற்கு கீழே, இரு தளங்கள் சில சுவர்களுக்கிடையே சிக்குண்டிருக்கும் (“wedged between two stories and some walls” ) ஜோசெஃப் லார்கே என்று பெயர்கொண்ட பிரெஞ்சுக்காரனை கொலை செய்கிறான். தன் தளமே (my story) ஜோசஃப் வெளியேறுவதற்கான ஒரே வழி என்று ஹாருன் நமக்கு தெரிவிக்கிறான். இந்த my story-ஐ நாம் “என் கதையாகவும்” வாசிக்கலாம். சாய்வெழுத்துகளில் அளிக்கபட்டிருக்கும் சொற்களைக் கம்யுவின் அந்நியன் நாவலின் கொலைச் சம்பவத்துடன் பொருத்திப் பார்த்தால் நமக்கு இந்நாவலில் நிகழ்த்தப்பட்டிருக்கும் தலைகீழாக்கம் வெளிப்படையாகவே புலப்படும். ஜோசஃபிற்குத் தப்பிப்பதற்கான வாய்ப்பே இல்லை என்ற தகவலும் நமக்கு அளிக்கப்படுகிறது. ஏனெனில், “மதியம் இரண்டு மணிக்கு நீந்துவதற்கு அவன் துணிந்து” “வெய்யில் தோய்ந்த சருமத்துடன், இலகுவான மனதுடன், குதூகலமாகவும் சுதந்திரத்துடனும்” அவன் திரும்புவதால் ஹாருனின் தாய் தன் வஞ்சத்தை தீர்த்துக்கொள்வதற்கான பலியாடாக அவனைத் தேர்வு செய்ததால்.
ஆனால், ஹாருனின் பழிவாங்கும் கொலை சற்று தாமாதமாகவே நிகழ்கிறது. சரியாகச் சொல்வதானால் ஒரு மாதம் தாமதமாக நிகழ்கிறது. முந்தைய ஆண்டு பாரிஸில் அல்ஜீரியர்கள் கொலை செய்யப்பட்டதைப் பிரதிபலிக்கும் வகையில் 1962ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஓரானில் ஐரோப்பியர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அவன் தன அடையாளப் பழிவாங்கலைச் செய்திருந்தால் இறந்த பிரெஞ்சுக்காரனின் பேரில் யாரும் தூக்கத்தை இழந்திருக்க மாட்டார்கள். ஆனால் இப்போதோ, அவனது கொலைக்காக இவன் பதில் சொல்லியாக வேண்டியிருக்கிறது, சிறையில் தள்ளப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறான். அவன் கடந்த காலம் நிகழ்காலத்தைப் பாதிக்கும் வகையில் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது, குறிப்பாக அவன் ஏன் ரெசிஸ்டான்ஸ் என்று அழைக்கப்பட்ட அல்ஜீரியப் போராட்டத்தில் கலந்து கொல்லவில்லை என்பதே அவனை சந்தேகத்துக்குரியவனாக ஆக்குகிறது. கொலை செய்ததற்காக விசாரிக்கப்படவில்லை, அதைச் சரியான நேரத்தில் செய்யாததற்காகவே விசாரிக்கப்படுகிறோம் என்பதை அவன் உணர்ந்துகொள்கிறான். அதிகார அல்லோலகல்லோலத்திற்குப் பிறகு காரணமேதும் அளிக்கப்படாமல் தான் விடுவிக்கப்படப் போவதையும். நகைமுரணாக இது அவனை அவமானப்படுத்தும் வகையில் எரிச்சலூட்டுகிறது. சகோதரரின் மரணம் சட்ட ஒழுங்கின் தாழ்வாரங்களில் மறதிக்குத் தள்ளப்பட்டதென்றால் அவனது பழிவாங்கலும் “அதே முக்கியத்துவமற்ற நிலைக்குத் தள்ளப்பட உள்ளது” என்ற கசப்பான நிதர்சனமே அவனை ஆத்திரப்படுத்துகிறது. யூகித்தது போல் மறுநாளே விடுவிக்கப்படுகிறான்.

அந்நியன் நாவலின் ஏற்ற இறக்கங்கிலில்லாத தரவுகளுக்கேற்ற சார்புகளற்ற நடையையும் (பின்னர் வந்த த ப்ளேக் நாவலின் பாத்திரமொன்று தான் காலகாலமாக செப்பனிட்டுக் கொண்டிருக்கும் வரியொன்றைப் பற்றி இவ்வாறு கூறுகிறது “அனைத்து உரிச்சொற்களையும் கத்திரித்துவிட்டேன்“) அதிலிருந்து விடுவிக்கும் வகையில் வெடித்தெழும் தொட்டுணரக் கூடிய பொருண்மை உடனடித்தன்மை மிளிரும் பகுதிகளையும் நான் சற்றுமுன் குறிப்பிட்டிருந்தேன். இவை இரண்டுமே நான் என் ஆரம்பகால கம்யு வாசிப்பில் கடைந்தெடுத்த அபத்தம், எதிர்ப்பு / மறுப்பு கருட்பொருட்களொடு தொடர்பு கொண்டவை. ஆனால் தன் கலைத்திட்டத்தில் மூன்று கருட்பொருட்களைக் கம்யு திட்டமிட்டிருந்தார் என்று அவரது சரிதை தெரிவிக்கிறது: அன்பே அம்மூன்றாவது கருப்பொருள். மூன்தீர்மானிக்கப்பட்ட ஒரு பிரபஞ்சத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்த ஒரு மனிதன் தன் எழுத்துக்கலை என்று வரும்போது எவ்வளவு நுணுக்கமாக திட்டமிட்டிருக்கிறார் என்பது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. 1957இல் அவர் தனது நோபல் பரிசு உரையில் இத்திட்டத்தை விவரித்தார்:
“நான் என் வேலையைத் தொடங்கியபோது எனக்கு ஒரு துல்லியமான திட்டம் இருந்தது. மறுத்தலையே நான் முதலில் வெளிப்படுத்த விரும்பினேன். மூன்று வழிகளில்: நாவல் வடிவத்தில் (இது த அவுட்சைடரை உருவாக்கியது); நாடக வடிவில் (இது கலிகுலா மற்றும் கிராஸ் பர்பசஸை உருவாக்கியது); மற்றும் கட்டுரை வடிவில் (த மித் ஆஃப் சிசிபஸ்). பின்னர் மூன்று வழிகளில் நேர்மறையான விழுமியங்களை வெளிப்படுத்தும் மேலும் சில படைப்புகளின் திட்டவரைகளையும் என்னால் யூகிக்க முடிந்தது: நாவலாகவும் (தி பிளேக்); தியேட்டராக (ஸ்டேட் ஆஃப் சீஜ் மற்றும் லெஸ் ஜஸ்டஸ்); மற்றும் ஒரு கட்டுரையாகவும் (எதிர்ப்பும் மறுப்பும்) இவை என் மனதில் தோற்றம் கொண்டன. காதல் என்ற கருப்பொருளில், மூன்றாவது அடுக்காக என் எழுத்து உருக்கொள்வதையும் மங்கலாக உணர்ந்து கொண்டேன்.”
அவரது வாழ்க்கை ஒரு அபத்தமான சாலை விபத்தால் குறைக்கப்பட்டதால் இக்கடைசி கருப்பொருளை வார்த்தெடுக்க அவருக்கு போதுமான நேரம் அளிக்கப்படவில்லை. அவரது மரணத்திற்குப் பின் பதிப்பிக்கப்பட்ட முதல் மனிதன் நாவலில் தாய் மீதான அன்பு போன்ற அம்சங்களில் அதன் சில கீற்றுகளை நம்மால் அடையாளம் காண முடிகிறது. ஆனால், காதலும் அதன் சிற்றின்பக் களிப்பும் கம்யுவின் நாவல்ளில் அவ்வப்போது மின்னி மறைகின்றன. அந்நியன் , மெர்சோ விசாரணை நாவல்களில் அது முறைப்படி மரீ மரியம் பாத்திரங்களின் வழியே தோன்றுகிறது. மெர்சோ நாவலின் இறுதியில் வரும் பகுதியில் மரியம் தனது Ph.D., ஆய்வறிக்கையின் ஒரு பகுதியாக கம்யுவின் இறந்த அரேபியனின் தடயங்களுக்கான தேடலை ஹாருன் மற்றும் அவனது அம்மாவின் வீடு வரையிலும் நூல் பிடித்து வந்துவிடுகிறாள். மரியம் மூலம்தான் ஹாருன் தி ஸ்ட்ரேஞ்சர் என்ற புத்தகத்தை அறிந்து கொள்கிறான், அதில் அவன் சகோதரன் இருபத்தைந்து முறை குறிப்பிடப்பட்டுள்ளான் என்பதையும், ஆனால் அவன் பெயரால் அல்லாது “அரபியன்” என்ற பொதுமையில் என்பதையும். நாவலின் முடிவில் கிராமத்தின் விளிம்பில் உள்ள ஒரு மரத்தடியில் ஹாருனும் மரியமும் ஓய்வெடுப்பதைச் சித்தரிக்கும் அற்புதமான காட்சி வருகிறது. மெர்சோவும் மரியும் அந்நியன் நாவலில் சேர்ந்து நீந்திக் களித்திருக்கும் காட்சியை அது பிரதிபலிக்கிறது. எவ்வளவு நெருக்கமாகப் பிரதிபலிக்கிறதென்றால், முந்தைய நாவலில் வரும் சொற்றொடர்களை (“ஒரு வித விளையாட்டுத்தனத்துடன்”, ” கரத்தால் அவள் இடுப்பைச் சுற்றி அணைத்துக் கொண்டேன்” “உன்னை விட நான் கருப்பு” இத்யாதி) பிந்தைய நாவலின் நாயகனான ஹாருன் அப்படியே மாற்றேமேதுமில்லாமல் பயன்படுத்துகிறான். இரண்டு காதல்களுமே தோல்வியடைகின்றன, மெர்சோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கையில், மேரி அவனைப் பார்க்க வருவதை நிறுத்திக் கொள்கிறாள், மரியமோ கோடையின் இறுதியில் ஹாருனின் ஊரை விட்டு வெளியேறுகிறாள்.

கம்யுவின் நாவலைப் பிரதிபலித்து எதிரொலிக்கும் பிரதியைப் பின்னிச் செல்கையில் கமெல் தாவுத் காலனித்துவத்தின் அநீதிகளை மட்டுமல்ல, காலனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சுதந்திரத்தின் உற்சாகத்தில் பிற்போக்கர்களாக உருமாறி இழைக்கும் அநீதிகளையும் விமர்சிக்கும் உபப்பிரதியையும் நுட்பமாகக் கட்டமைக்கிறார். ” சுதந்திரத்தின் உற்சாகம் தன்னைத் தானே அழித்துக் கொள்வதையும், ஆதர்சங்கள் வீழ்ச்சியடைவதையும் கண்ணுற்றேன்., அதன்பின் எனக்கு வயதாகிவிட்டது., இப்போதோ இங்கே இம்மதுக்கடையில் உட்கார்ந்தபடி, எவருமே கேட்க முயற்சிக்காத இந்தக் கதையைச் கூறிக் கொண்டிருக்கிறேன்.” என்று ஹாருன் தன் குடிபோதையில் வருத்தப்பட்டுக் கொள்கிறான். அரசாங்கம் மதவாதிகளால் கட்டுப்படுத்தப்படுவதால் மரியம் போன்ற “சுதந்திரமான, துடுக்கான, கீழ்ப்படியாத, உடலைப் பாவமாகவோ அவமானமாகவோ கருதாது அதை ஒரு கொடையாக உணர்ந்திருக்கும்” பெண்கள் தன் தேசத்தை விட்டுக் காணாமல் போய்விட்டார்கள் என்று அவன் அங்கலாய்க்கிறான். மசூதியின் கோபுரத்தில் தன்னைப் பூட்டிக்கொண்டு அதன் ஒளிப்பெருக்கிகள் வழியே தன் “பலவிதமான வசைமாரிகளையும் மதநிந்தைகளையும்” ஒளிபரப்ப அவன் விழைகிறான்.
ஆதிக்கம் செலுத்தும் மத அமைப்பின் சுயமேன்மை உணர்விற்கு எதிராக ஹாருன் மற்றும் அவன் இதுவரையில் கதைகேட்பவரிடம் “உங்கள் நாயகன்” (ஏதோ நாமெல்லோறுமே மெர்சோவிற்கு உடந்தையாக இருப்பது போல) என்றே அழைக்கப்படும் மெர்சோவும் மேற்கொள்ளும் இறுதி மறுப்பில், காலனியம் செய்வோர், காலனியத்திற்கு உட்படுத்தப்படுவோர், இருவர் குரலும் இணைந்து ஒற்றை குரலில் ஒலிக்கின்றன. பாதிரி இமாம் இருவருக்கும் எதிரான அவர்கள் வசைமொழிகள் ஒன்றுக்கொன்று கார்பன் பிரதிகள் போல் இருக்கின்றன. பிரசித்தி பெற்ற அந்த பகுதியின் அனைத்து பழக்கப்பட்ட சொற்றொடர்களும் நமக்கு மீளொலிக்கின்றன: “அவர் தன் தரப்பில் மிகவுமே உறுதியாக இருக்கிறார் இல்லயா? இருப்பினும் அவருடைய உறுதிப்பாடுகள் எதுவுமே நான் நேசித்த பெண்ணின் தலையிலுள்ள ஒரு முடிக்குக்கூட ஈடாகாது..” முதலியன… மெர்சோவின் குரலில் பேசுகையில், இருவரது சூழ்நிலைகளின் அபத்தத்தை ஹாருன் உணர்ந்துகொள்கிறான்:
அவன் தன் தாயின் இறுதிச்சடங்கில் அழவில்லை என்பதற்காகக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டாலோ, ஜூலை 5, 1962 அன்று, ஒரு நாள் தாமதமாக நான் ஒரு ஆளைக் கொலை செய்துவிட்டேன் என்பதற்காகக் குற்றம்சாட்டப்பட்டாலோ, என்ன ஆகிவிடப் போகிறது?
அவனும் தன் பார்வையாளர்கள் படையணியாகவும், தன்னை வெறுப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று விழைவுடன் தனது நாவலை முடிக்கிறான்.
நாவலைக் குறித்த நாவலான The Meursault Investigation பெரும்பாலான தொடர் நாவல்களைப் போலல்லாது நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நாவலும்கூட.ஆனால் நாவலுக்கு வெளியே வாழ்க்கை அதன் மோசமான உரைநடையில் கலையின் கொடூரமான பகுதிகளைப் பின்பற்றத் தேர்ந்தெடுக்கிறது. “மத வெறியர்களாலான முழுப் படையொன்று” தன் புனைவுப் பாத்திரம் ஹாருனை வேட்டையாடுவது போல் கமேலும் இஸ்லாமிற்கு எதிராக அவர் இழைத்த குற்றங்களுக்காக ஒரு சலாஃபிஸ்ட் இமாமால் வேட்டையாடப்பட்டார்.
ஒருக்கால் எப்போதும்போல் வாழ்க்கையின் அபத்தம் அதை வெறும் உருவகிக்க மட்டும் செய்யும் கலையை மீண்டும் வென்றுவிட்டதோ?
~oOo~

நம்பி கிருஷ்ணன், May 2023.
மூலநூல்கள் / மேலும் படிக்க:
Daoud, Kamel, The Meursault Investigation, Tr.by Cullen, John, Other Press, 2015
Camus, Albert, The Stranger, Tr. by Ward, Matthew, Vintage, 1989
Camus, Albert, The Plague, The Fall, Exile and the Kingdom & Selected Essays Tr. byGilbert, Stuart & O’Brien, Justin, Everyman’s Library, 2002
சிறப்பான கோணத்தில் மிகத் தெளிவாக எழுதப்பட்டுள்ள கட்டுரை. இரு கதைகளின் வேரும், இணைத்தன்மைகளும்,அழகாக வெளிப்பட்டுள்ளன.
இந்தத் தருணத்தில் 2019ல் நான்இந்த இரு கதிகளின் அன்னையரை எடுத்துக் கொண்டு ஒரு கதை-கட்டுரை எழுதினேன். அதை பதாகைம் இணைய இதழ் வெளியிட்டது. விருப்பமுள்ளவர்கள் அக்கதையை இச் சுட்டியில் படிக்கலாம்.
https://padhaakai.com/2019/06/10/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/
ஒரு சிறு கடிதத்தில் இரண்டு பிழைகள்- வருந்துகிறேன்
கதிகளின்- கதைகளின்
பதாகை- ‘ம்’ தேவையில்லாமல் வந்துள்ளது.
மன்னிக்கவும்.