- அதிரியன் நினைவுகள்-1
- அதிரியன் நினைவுகள்-2
- அதிரியன் நினைவுகள் -3
- அதிரியன் நினைவுகள் – 4
- அதிரியன் நினைவுகள் – 5
- அதிரியன் நினைவுகள் – 6
- அதிரியன் நினைவுகள் – 7
- அதிரியன் நினைவுகள் – 8
- அதிரியன் நினைவுகள் – 9
- அதிரியன் நினைவுகள் – 10
- அதிரியன் நினைவுகள் – 11
- அதிரியன் நினைவுகள் – 12
- அதிரியன் நினைவுகள் – 13
- அதிரியன் நினைவுகள் -14
தமிழாக்கம்: நாகரத்தினம் கிருஷ்ணா

நாற்பது வயதை நான் நெருங்கிக்கொண்டிருந்த காலகட்டம் அது, அந்த வயதுல் நான் இறக்க நேர்ந்தால் அதிகபட்சமாக என்ன நடந்திருக்கும், அரசாங்க முக்கிய அதிகாரிகள் பெயர்வரிசையில் நானும் இடம்பெற்றிருப்பேன், அதுபோக, ஏதென்ஸை சேர்ந்த ஆர்கோன்(மாஜிஸ்ட்ரேட்) என்றவகையில் மரியாதைநிமித்தமாக கிரேக்க மொழியிலும் என்னைப்பற்றி பதிவு செய்திருப்பார்கள். இப்படியானதொரு குழப்பமான சூழல் வாழ்க்கையான பிறகு நடுவயதை அடைந்த மனிதன் ஒருவனின் மறைவைக் காணும்தோறும், இவ்விஷயத்தில் இறந்தவனுடைய வெற்றி தோல்விகளை துல்லியமாக அளவிட முடியும் என்கிற பொதுமக்கள் நம்பிக்கையைவைத்து, நான் நினைவு படுத்த முடிவது : அந்த வயதில் எனது கண்களுக்கும் என்னுடைய சினேகிதர்களின் கண்களுக்கும் மட்டுமே நான் உயிர் வாழ்ந்ததும். அந்நண்பர்கள் என்னை எப்படி ஒருசில சமயங்களில் சந்தேகித்தார்களோ அதுபோல நானும் என்னை நானே சந்தேகித்தேன் என்பதும் ஆகும். இறப்பதற்கு முன் இந்த உண்மையை ஒருசிலரே உணர்கிறார்கள் என்பதையும் நான் புரிந்துகொண்டேன்: அவர்கள் தங்களின் கடமையை முழுமையாக நிறைவேற்றாமலேயே இறக்கிறார்கள் என்கிற முடிவுக்கும் பரிதாபமாக நான் வந்தேன். விரக்தியான இவ்வாழ்க்கை ஊட்டிய அச்சம் ஒரு விஷயத்தில் எனது சிந்தனையை ஸ்தம்பிக்கச் செய்து, அதனைச் சீழ்பிடித்த கட்டியாகவும் உருமாற்றியது, பலனாக காதல் வயப்பட்ட ஒருவன் உண்ணவும், உறங்கவும், சிந்திக்கவும் ஏன் தன் காதல் உறவைக்கூட உரிய சடங்குகளோடு பூர்த்திசெய்யவும் மறப்பதுபோல, என் அன்றாடவாழ்க்கையை அதிகாரத்தின் மீதான வேட்கை மாற்றியது. எதிர்காலம் குறித்த முடிவுகளை எடுக்க உரிமையற்று இருக்கிற சூழலில் மிக அவசரமான பணிகள் பயனற்றவையாக எனக்குத் தோன்றின; அரசுக்குப் பயனுள்ளவனாக இருப்பதற்குரிய ஆர்வத்தை நான் திரும்பப்பெறவேண்டுமெனில், வருங்கால ஆட்சி என்னுடையதெகிற உத்தரவாதம் எனக்கு வேண்டும். சிலவருடங்கள் கழித்து, ஒரு வித மகிழ்ச்சிபோதையில் வாழவிருந்த அந்தியோக்கியா அரண்மனை, எனக்கொரு சிறைச்சாலையாகவே அன்று இருந்தது, இன்னும் சொல்லப்போனால் அதனை மரண தண்டனை விதிக்கப்பட்டகைதியின் சிறைக்கூடமென்றும் தெரிவிக்கலாம். எனக்கு குறிசொல்லிகளுக்கும், ஜூபிடர் அம்மோன், கஸ்டாலியா, சியுஸ் டொலிஷ்னுஸ் ஆகியோருக்கும் ரகசிய செய்திகளை அனுப்பினேன். பாரசீக சமயகுருக்களான மாகி(Mages) குழுவினரை வரவழைக்கவும் ஏற்பாடு செய்தேன். அந்த்தியோக்கியாவில் சிலுவையில் அறையப்படுவற்கென ஒரு குற்றவாளி நிலவறையில் அடைக்கபட்டிருந்தான், சிறையிலிருந்து அழைத்துவரப்பட்டிருந்த அவனை என் முன்னிலையில் ஒரு மந்திரவாதியைக் கொண்டு நெஞ்சினை பிளக்கவைத்தேன். அவ்வாறு பிளக்கப்படும்போது, வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையில் ஒரு நொடி அலைந்து கொண்டிருக்கும் அவனுடைய ஆன்மா எனது எதிர்காலத்தை கணிக்கும் என்பது நம்பிக்கை. சிலுவையில் அறையப்படவிருந்த அக்குற்றவாளி தான்படவிருந்த நீண்ட வேதனையிலிருந்து தப்பிக்க முடிந்ததேயன்றி, அவனுடைய ஆன்மாவிடம் கேட்டட கேள்விகளுக்கு எவ்வித பதிலுமில்லை. இரவு நேரங்களில் ஒரு பலகணியிலிருந்து மற்றொன்றிர்க்கும், ஒரு உப்பரிகையிலிருந்து இன்னொன்றிர்க்கும், அண்மையில் ஏற்பட்டிருந்த நிலநடுக்கத்தினால் விரிசல்கண்டிருந்த சுவர்களுடன் கூடிய மண்டபங்களில் நடந்து திரிந்து கற்பலகைகளில் ஆரூடக் கணக்கீடுகளைப் போட்டு, அனிச்சை நடுக்கத்துடனிருக்கும் நட்சத்திரங்களிடம் கேள்விகளை எழுப்புவதுண்டு. ஆனால் கடைசியில் பூமியில்தான் எனது எதிர்காலத்திற்கான அறிகுறிகளைத் தேட வேண்டியிருந்தது.
பேரரசர் இறுதியாக ஹத்ராவின்(Hatra) முற்றுகையை நிறுத்திக்கொண்டு, யூப்ரடீஸ் நதியைத் திரும்பக் கடக்க முடிவு செய்தார், அது நிறைவேறாமலேயே போனது. ஏற்கனவே சுட்டெரிக்கும் வெப்பம், இதனுடன் பார்த்தீனிய வில்லாளர்களின் உபத்திரவமும் சேர்ந்துகொள்ள அவர்கள் திரும்பிய பயணம் பெரும்சோதனையாக இருந்துள்ளது. ஒரு சுட்டெரிக்கும் மே மாத மாலையில், நான் நகரத்தின் நுழை வாயில்களுக்கு வெளியே, ஓரோண்டஸ் நதிக்ரையில் நலிவுற்ற நிலையில் பேரரசர், அட்டியானுஸ், மற்றும் அரசகுடும்ப பெண்கள் என்கிற சிறு கூட்டம் காய்ச்சல், பதற்றம், சோர்வு ஆகியவற்றால் பாதித்திருக்க கண்டேன். மன்னர் திராயான் அரண்மனைக்குத் தான் குதிரையில் திரும்பவேண்டுமென தெரிவித்தபோதும், அதற்குரிய உடல்நிலையில் அவரில்லை. வாழ்க்கையை நன்கு அனுபவித்த ஒரு மனிதர் மரணம் நெருங்குவதாலோ என்னவோ நாங்கள் அறிந்த மனிதராக இல்லை. மெய்யியலாளர் கிரிட்டோவும் (Criton), மன்னரின் மருமகள் மத்திதியாவும் படிகட்டுகளில் ஏறவும், படுக்கவும், உதவிசெய்தவர்கள், அருகிலிருந்தும் அவரை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். அட்டியானுஸும், புளோட்டினாவும் சுருக்கமாக பின்னர் நடந்தவற்ற தெரிவித்தபோது, இவ்விபரங்களை அவர்கள் கூறவில்லை. தெரியவந்த இச்சம்பவ தகவல்களில் ஒன்று என்றுமே நான் மறக்கமுடியாத சொந்த நினைவுகளில் ஒன்று, குறியீடுகளில் ஒன்று எனக்கருதும் நிலைக்கு என்னைத் தள்ளி மிகவும் நெகிழச்செய்தது. பாரசீக வளைகுடா, சாரக்ஸ்(Chrax) கடற்கரைக்கு வந்து சேர்ந்ததும், கடினமான உப்புத் தண்ணீரை பார்த்தவண்ணம் உட்கார அயர்ச்சியிலிருந்த மன்னர் விரும்பினார். தமது வெற்றிகளில் இன்னமும் அவர் நம்பிக்கை கொண்டிருந்த காலம் அது, எனினும் முதன்முறையாக அவர் வாகை சூட நினைத்த உலகம் எளிதாக வெல்லக்கூடிய அளவிற்கு சிறியதில்லை என்பது உறுதிப்பட்டிருக்க சோர்வுற்றிருந்தார். தவிர வயதளிக்கும் உணர்வும், நமக்கென்றுள்ள வரம்புகளும், கட்டுக்குள் அனைவரையும் வைத்திருக்கின்றன. எந்த மனிதர் ஒருபோதும் கண்ணீர் சிந்த போதாதவரென நாங்கள் நினைத்திருந்தோமே அவருடைய சுருக்கம் நிறைந்த கன்னங்களில் அன்று கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது. இதுவரை அறிந்திராத நதிகள், வளைகுடாக்களிலெல்லாம் உரோமானியர்களின் பொன்னிற கழுகுசின்னத்தை சுமந்து வெற்றிவாகைசூடிய எங்கள் தலைவருக்கு இந்தியா, பார்த்தியா (Bactriane) பிரதேசங்களை வெல்லவென்று கனவுகண்ட கடற்பயணம் ஒருபோதும் சாத்தியமில்லை என்பது விளங்கிற்று. மன்னரை போதையில் ஆழ்த்திய கீழைத்தேயம் அனைத்தும் இனி அவருக்கு பெயர்களாகவும் கனவுகளாகவும் மட்டுமே மனதில் நிலைத்திருக்கும். மறுநாளே கிடைத்தை மோசமான செய்தியொன்றால் அங்கிருந்து புறப்படவேண்டிய கட்டாயம். ஒவ்வொரு முறையும் என்னுடைய ஊழ்வினையும், எனக்கு ‘கிடைக்காது’ அல்லது ”சாத்தியமில்லை’ என்று சொல்கிறபோதெல்லாம், தொலைதூர கடற்ககரைஒன்றில், ஒரு மாலைவேளையில், முதிய மனிதர் ஒருவர் தமது வாழ்க்கையை ஒருவேளை முதன்முறையாக நேருக்கு நேர் பார்த்ததன் விளைவாகவோ என்னவோ அன்று சிந்திய கண்ணீர் எனது நினைவிற்கு வருவதுண்டு.
மறுநாள் காலை நான் பேரரசரை பார்க்கச் சென்றேன். மன்னரிடம் ஒருவித பந்தத்தை, சகோதரப் பாசத்தை என்னுள் உணர்ந்த தருணமது. மிகவும் மோசமானதொரு தனிமையில் தமது படைவீரர்கள் ஒவ்வொருவரும் எவ்வித மனநிலைக்குத் தள்ளப்படுவார்களோ அதுபோலவே தமது வாழ்க்கையிலும் சரி, அபிப்ராயங்களிலும் சரி பெருமிதத்தைத் தேடும் மனிதராகவே எப்பொழுதும் அவர் நடந்துகொண்டார். படுக்கையிலிருந்தவண்ணம், பிறர் ஆர்வம் காட்டாத பிரமாண்டமான திட்டங்களையெல்லாம் ஒருங்கிணைக்கத் தொடர்ந்து முயன்றார். வழக்கம்போல அவருடைய கருத்துகள் கோர்வையின்றி, சுருக்கமான வார்த்தைகளில் அழகின்றி வெளிப்பட்டன. உரோமில் அவருடைய வெற்றிகளை கொண்டாடுவதற்கு, விழா ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன, அதனைக்குறித்து மிகுந்த தடுமாற்றத்துடன் வார்த்தைகளை உச்சரிக்க சிரமப்பட்டு என்னிடம் பேசினார். மரணத்தை எங்கனம் மறுத்தாரோ அங்கனம் தோல்வியையும் மறுக்கின்ற மனிதராக அவர் இருந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக அவர் தாக்குதலுக்கு ஆளானார். இந்நிலையில் அட்டியானஸுடனும் புளோட்டினாவுடனும் எனது கவலைகளை மீண்டும் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. பேரரசியின் தொலைநோக்கு பார்வை எனது முன்னாள் தோழியை, சக்திவாய்ந்த பிரடோரியன் காவற்படை தலைமைக்கு உயர்த்தியதன் விளைவாக பேரரசின் காவற்படையின் முழு அதிகாரமும் எங்கள் கையில். மத்திதியா படுத்தபடுக்கையாக இருந்த மன்னரின் அருகே, அவரைவிட்டு நீங்காமல் கட்டிலருகிலேயே இருந்தார். ஆகமொத்தத்தில் அதிஷ்டவசமாக அனைத்தும் எங்கள் வசம். தவிர இந்த எளிய, அன்பான பெண், புளோட்டினாவின் கைப்பாவை. இருந்தும் மன்னரிடம் அவருடைய வாரிசு குறித்த கேள்வியை எழுப்பும் துணிவு எங்களில் ஒருவருக்கும் இல்லை. ஒருவேளை, அலெக்சாண்டரைப்போலவே, தமது வாரிசிசை தாமே நியமிக்கக்கூடாதென முடிவெடுத்திருப்பாரோ, அல்லது லூசியஸ் குயிட்டஸ் தரப்பினரிடம் பொறுப்பை ஒப்படைத்தன் காரணமாக இப்பிரச்சனை ஒருவேளை கைமீறி போயிருக்குமோ, என்றெல்லாம் ஐயங்கள் எழுந்தன, கடைசியில் தம்முடைய முடிவு நெருங்கிவிட்டதென்பதை ஏற்பதற்கு அவர் தயாரில்லை என்பதுதான் உண்மை: பல குடும்பங்களில், விருப்புறுதி ஆவணம் எழுதாமாட்டேனென்கிற பிடிவாதத்துடன் இறக்கிற முதியவயதினரைக் பார்த்திருக்கிறோம். இவர்களுக்கு இறப்பைத் தவிர்க்கவேண்டும் அவசரம் கூடாதென்று மரணத்தைத் தள்ளிப்போடும் பணி கடினமானது, ஏன் இறப்பைத் இவர்கள் தவிர்க்கிறார்கள் ? இறப்பிற்குபின் அல்லது இவர்கள் இல்லையென்றான பிறகு எந்த முடிவும் இம்மனிதர்களுக்காக காத்திக்கப் போவதில்லை, பிறரை ஆச்சரிப்படுத்தவோ, உயிருள்ள மனிதர்களுக்கு நம்பிக்கை தரவோ அல்லது அவர்களை அச்சுறுத்தவோ இறந்தபின்பு சாத்தியமில்லை, எனவேதான் இறப்பைத் இம்மனிதர்கள் தவிர்க்க முயற்சிக்கிறார்கள், ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல அதைக்காட்டிலும் தங்கள் பொன்னையும் பொருளையும், தாங்கள் இராச்சியத்தையும் ஜீவனுள்ளவரை, கைவிரல்கள் முடங்கிய நிலையிலுங்கூட கட்டிக் காத்தல் இவர்களுக்குச் சுலபம். முழுமையான அதிகாரம் செலுத்தி பழகிய மனிதர்களில் பெரும்பாலோர் சரியோ தவறோ தங்களுடைய வழிமுறைகளில் திட்டமிட்டு உறுதியாக செயல்படக்கூடிய ஒரு சாதுர்யமான வாரிசை மரணத் தறுவாயில் நம்பிக்கையின்றி தேடிக்கொண்டிருப்பதுண்டு, அப்படியொரு வாரிசை என்னுள் தேடும் விஷயத்தில் மன்னருடன் நாங்கள் வேறுபட்டிருந்தோம். உண்மையில் இப்பிரச்சனையில் சக்கரவர்த்தியின் நிலைமைகண்டு பரிதாபப்பட்டேன். துரதிர்ஷ்ட்டவசமாக அவரைச் சூழ்ந்திருக்க வேண்டிய ஆட்சிவல்லுனர் அமைப்பு சூன்யமாக இருந்தது, என் ஒருவனைத்தவிர. ஆம் நான் ஒருவன் மட்டுமே நிர்வாகத்தில் தேர்ந்த, கடமைகள் தவறாத சிறந்ததொரு யுவராஜாவாக இருக்கமுடியும். அரசுப்பணிகள் எங்கனம் நிறைவேற்றப்படுகின்றன என்பதை மதிப்பிடுவதில் கைதேர்ந்த ஆட்சித்தலைமையும் ஒருவகையில் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி என்னை ஏற்றுக்கொண்டார். என்னை வெறுக்க இதுவே ஒரு சிறந்த காரணமாகவும் மாறியது. அவர் அறையை விட்டு வெளியேற அனுமதிக்கும் அளவுக்கு அவரது உடல்நிலையும் குணமடைந்தது. விளைவாக அவரது பேச்சு புதிய படையெடுப்பு பற்றியதாக இருந்தது, ஆனால் இந்தமுறை தன்னைமட்டுமே அவர் நம்பியிருக்கவில்லை. கடுங்கோடையின் வெப்பநிலைக்கு அஞ்சிய பேரரசரின் மருத்துவர் கிரிட்டோ, இறுதியாக அவரை மீண்டும் ரோம் நகருக்குச் செல்லும்படி சமாதானப்படுத்துவதில் வெற்றி பெற்றார். அவர் புறப்படுவதற்கு முந்தைய நாள் மாலை, அவரை இத்தாலிக்கு அழைத்துச் செல்லும் கப்பலுக்கு என்னை வரவழைத்து, நாட்டின் முதன்மைத் தளபதியென அவருக்கு மாற்றாக என்னை நியமித்தார். ஒருவகையில் இவ்விஷயத்தில் இறங்கிவந்தார் என்கிறபோதும், எதிர்பார்த்த முக்கியமானது நடைபெறவில்லை.
கிடைத்த உத்தரவுகளுக்கு மாறாக, ஆஸ்ரோஸ்களுடன்(Oséroses) உடனடியாக அதேவேளை, ரகசியமாக சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினேன். சக்கரவர்த்திக்கு நான் இனி பதில் சொல்ல வேண்டியதில்லை என்ற துணிச்சலில் எடுத்த அபாயகாரமான முடிவு. பத்து நாட்கள்கூட ஆகவில்லை, ஒருநாள் தூதர் ஒருவர் வருகையால் நள்ளிரவில் நான் கண்விழிக்குபடி ஆயிற்று, வந்த ஆள் புளோட்டினாவின் நம்பிக்கைக்குரியவர் என்பதை உடனடியாக புரிந்துகொண்டேன். இரண்டு கடிதங்களை அவர் கொண்டு வந்திருதார். முதற் கடிதம், உத்தியோகபூர்வமான கடிதம், அதில் தெரிவிக்கபட்டிருந்த தகவலின்படி கடற்பயணம் ஒத்துவராததால் இத்தாலிக்குச் செல்லவேண்டிய சக்கரவர்த்தி திராயான், செலினுண்டே-இன்-சிலிசியாவில்(Sélinonte- en-Cilicie) தரையிறக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் ஒரு ஒரு வணிகரின் வீட்டில் படுத்தபடுக்கையாக இருக்கிறார் என்கிற உண்மை. மற்றொரு கடிதம் உத்தியோகபூர்வமானதல்ல, ஒரு இரகசிய கடிதம். மன்னரின் மரணச் செய்தியை முடிந்தமட்டும் எவ்வளவு நாட்களுக்கு இயலுமோ அவ்வளவு நாட்கள் மறைத்துவைக்க முயற்சிப்பதாக புளோட்டினா உறுதி அளித்திருந்ததோடு மன்னர் மரணத்தை முதலாவதாக அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் அளித்திருந்தார். சிரிய துருப்புகளுக்கு வேண்டிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்த பிறகு, தாமதிக்காமல் செலினுண்டேவுக்கு புறப்பட்டேன். வழியிலேயே கிடைத்த மற்றொரு தகவல் பேரரசரின் மரணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. என்னை வாரிசாக நியமித்த அவரது மரணசாசனம் பாதுகாப்பான நபர்வசம் உரோமுக்கு அனுப்பப்பட்டது. பத்து வருடங்களாக பைத்தியக்காரத்தனமாக நான் கனவு கண்டவை, திட்டமிட்டவை, விவாதித்தவை, போதுமென்று வாயடைக்கப்பட்டவை அனைத்தும் கிரேக்க மொழியில், பெண்ணொருத்தியின் திடம் வாய்ந்த கரத்தினால் சிறிய கையெழுத்தில், இரண்டுவரிகளில் சொல்லப்பட்டிருந்தன. செலினுண்டே கடற்கரையில் எனக்காகக் காத்திருந்த அட்டியானுஸ் செலுத்திய வணக்கமே சக்கரவர்த்தி என்றவகையில் நான்பெற்ற முதல் வணக்கம்.
இங்குதான், உடல்நிலை சீர்குலைந்து மன்னர் கப்பலிலிருந்து கரைசேர்ந்தற்கும் அவர் இறக்கும் தருணத்திற்குமான இடைவெளியில் என்னால் மீளுறுவாக்கம் செய்வதற்கு இயலாதவகையில் தொடர்ந்து சில நிகழ்ச்சிகள் நடந்தேறின, அவற்றில் ஒன்றே எனது விதியையும் தீர்மானித்தது. அட்டியானுஸும், சில பெண்களும் வணிகரின் வீட்டில் கழித்த அந்த சிலநாட்கள் என்றென்றைக்குமாக முடிவு செய்ததென்னவோ என்னுடைய வாழ்க்கையை, இருந்தும், நிரந்தர பிரச்சனையாக அது இருக்குமென்று தோன்றியது, அதாவது பின்னர் நைல்நதியின் ஒரு குறிப்பிட்ட பிற்பகலுக்கு நேரந்ததுபோல, அதைக்குறித்தும் முழுமையாக அறிவதற்குரிய வாய்ப்பு ஒருபோதும் எனக்குக் கிடைக்கவில்லை, இருந்தும் இவை அனைத்தும் முக்கியமானவை, நான் முன்னமே தெரிந்து வைத்திருக்கவேண்டும். அடுத்தவர் விவகாரங்களில் ஆர்வம் கொண்ட எந்தவொரு உரோமானியரும் என்னுடைய வாழ்க்கையில் இந்த அத்தியாங்கள் பற்றி தனக்கென ஓர் அபிப்ராயம் கொண்டிருப்பார். ஆனால் நானோ பிற மனிதர்களின் இதுபோன்றபிரச்சனைகளை மிகக் குறைவாகவே அறிந்திருக்கிறேன். மரணத் தருவாயிலிருந்த சக்கரவர்த்தியின் வலியையும் வேதனையையும் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, எனக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மோசடி சாசனத்தைச் எழுதச் செய்ததாக புளோட்டினா மீது என் எதிரிகள் குற்றம் சுமத்தினார்கள். மோசமான அவதூறுக்குச் சொந்தக்காரர்களோ ஒருபடி மேலே சென்று திரையிட்ட கட்டில், ஒளியை அதிகம் சிந்தாததொதரு விளக்கு இவற்றுடன் மருத்துவர் கிரிட்டோ இறந்த சக்கரவர்த்தியுடைய குரலில் சொல்ல, எழுதப்பட்டதே இக்கடைசி விருப்ப சாசனம் என்றார்கள். ஃபோடிம் என்பவர் மன்னரிடம் இறுதிவரை விசுவாசமிக்க ஊழியராக பணியாற்றியவர், ஆனால் என்னை வெறுக்கும் மனிதர். இந்நிலையில் அவர் தன் எஜமானர் இறந்த மறுநாளே கொடியகாய்ச்சலுக்குப் பலியானார். இச்சம்பவத்தை ஒரு சிலர், அந்த ஊழியரின் மௌனத்தை விலைபேசுவது என்னுடைய நண்பர்களுக்கு இயாலாத ஒன்றெனவும், அத்தகையவர் திடீரென இறக்கநேர்ந்தது உண்மையில் எங்களுக்கு மிகவும் அதிஷ்டமென்றும் வாதிட்டனர். இதுபோன்ற கற்பனை சித்திரங்களில் வன்முறையும், மனிதமனங்களில் ஆவலைத் தூண்டும் செய்தியும் உள்ளன, சராசரி மனிதர்களைமட்டுமல்ல என்னிடத்திலும் இவை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவ்விஷயத்தில் என்பொருட்டு ஒரு சிறிய எண்ணிக்கையில் நேர்மையான மனிதர்கள் சிலர் குற்றம் செய்யவும் துணிந்திருந்தார்கள், மகாராணியும் என்மீதுகொண்டிருந்த ஈடுபாட்டினால் எல்லை மீறிவிடக்கூடும் என்று அஞ்சினேன், காரணம் உரிய முடிவை எடுக்கத் தவறினால் அரசுக்கு நேரக்கூடிய அபாயத்தை அவர் உணர்ந்திருந்தார். ஆகவே இதுபோன்ற பிரச்சனைகள் எனக்குச் சங்கடத்தை அளித்தன. இவ்விஷயத்தில் அவசியம் கருதி மகாராணி தவறிழைக்க சம்மதித்து இருப்பினும் அவருடைய ஞானமும், பொது புத்தியும், பொதுநலமும், நட்புணர்வும் அதற்குக் காரணமாக இருக்குமென்பதால், அவர் மீது உரிய மரியாதை வைத்திருக்கிறேன். என்னுடைய எதிரிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நாளிலிருந்து அந்த ஆவணம் என் கைவசம், மன்னர் நலிவுற்ற நிலையில் தெரிவித்த இறுதிவிருப்ப ஆவணத்தின் நம்பகத்தன்மைக்கு ஆதரவாகவோ எதிராகவோ வார்த்தைகளை என்னால் பிரயோகிக்க முடியாது. பதிலாக, இறப்பதற்கு முன் தன்னுடைய பிரத்தியேக சலுகைகளை தியாகம் செய்து, மன்னர் திராயான் தமது சுயவிருப்பத்தின் பேரில் பேரரசை மொத்தத்தில் மிகவும் தகுதியானவரென எவரைக் கருதினாரோ அவருக்கு வழங்கினார் என்பது நிச்சயம், அதை நான் நம்புகிறேன். ஆனால் இதற்கு கையாண்ட வழிமுறை என்னவென்பது முக்கியம்மல்ல எடுத்த முடிவே முக்கியம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்: மிகவும் இன்றியமையாத விஷயம், ஆட்சியில் அமர்ந்த மனிதர் அதைச் செயல்படுத்தத் தகுதியானவர் என்பதை பின்வந்த நாட்களில் நிரூபித்தார் என்கிற உண்மை.
உரோமின் சக்கரவர்த்தியினுடைய இறுதி சடங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுவதற்கு முன்பாக கடற்கரையில் என் முன்னிலையில் நான் சென்ற சிறிது நேரத்திலேயே உடல் எரிக்கப்பட்டது. விடியற்காலையில் மிக எளிமையாக நடத்தப்பட்ட அந் நிகழ்வில் கிட்டத்தட்ட யாரும் கலந்து கொள்ளவில்லை, தவிர இறந்த மன்னர் திராயானுக்கு அரண்மணையில் வழங்கப்பட்ட சிசுருட்சைகளின் தொடர்ச்சியாக பெண்கள் வழங்கிய இறுதி அத்தியாயமென அதைக் கூறலாம். மத்திதியா வெப்பக் கண்ணீர் பெருக்கெடுக்க அழுதார். ஈமத்தீ காற்றில் அசைந்து எரிகிறபோதெல்லாம் புளோட்டினாவின் தோற்றத்தை மங்கச் செய்தது. அமைதி, ஒதுங்கிய நிலை, காய்ச்சலால் ஏற்பட்ட பலவீனம் என்கிற நிலமையிலும் பெண்மணி வழக்கம்போல எவ்வித சஞ்சலத்திற்கும் பலியாகாதவராக இருந்தார். அட்டியானுஸும், க்ரிட்டோவும் உடல் நன்கு பிடித்து எரிகிறதா என பார்த்துக்கொண்டனர். நிழலற்ற காலையின் வெளிறிய காற்றில் சிறிய புகை கலந்தது. சக்கரவர்த்தியின் மரணத்திற்கு முந்தைய நாட்களில் நடந்த சம்பவங்கள் குறித்து நண்பர்கள் ஒருவரும் வாய்திறக்கவில்லை. அமைதியாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது; சங்கடத்திற்குரிய கேள்விகள் எதையும் எழுப்பக்கூடாதென நானிருந்தேன்.
அன்றைய தினமே விதவையான மகாராணியும் அவருக்கு வேண்டியவர்களும் உரோம் நகருக்கு திரும்பப் புறப்பட்டனர். நான் அந்தியோக்கியாவுக்குத் திரும்பினேன், வழியெங்கும் படையினர் அணிவகுத்து ஆர்ப்பரித்து என்னை வாழ்த்தினார்கள் . ஒரு அசாதாரண அமைதி என்னைப் பற்றிக் கொண்டது: இலட்சியமும், அச்சங்களும் கடந்தகாலக் கொடூரகனவுகளாக தெரிந்தன. எது நடந்தாலும், எனது அரசுரிமை வாய்ப்பை இறுதிவரை கட்டிக்காப்பதென்பதில் உறுதியாக இருந்தேன், ஆனால் தத்தெடுக்கும் செயல் எல்லாவற்றையும் எளிதாக்கியது. எனது சொந்த வாழ்க்கை பற்றிய கவலைகள் இனியில்லை என்றாயின. பிற மனிதர்களைக் குறித்து என்னால் மீண்டும் சிந்திக்க முடிந்தது.
(தொடரும்)