1/64,  நாராயண முதலி தெரு – 2

This entry is part 2 of 3 in the series 1/64, நாராயண முதலி தெரு

1972

“தேவுடு வஸ்துன்னாரு..” என்று தெலுங்கு அம்மாள் தாழ்வாரத்தில் அறிவித்துக் கொண்டே ஆரத்திக்கு தேவையானவற்றை எடுத்து வர தன்னறைக்குச் சென்றாள்.

     மேனகா அதை மொழிபெயர்த்து “மாமீ.. வாசல்ல பெருமாளை ஏளப்பண்ணின்டு வர்றாளாம்..” என்று சுந்தரவல்லியிடம் சொல்ல, அவள் “எந்தக் கோவில்.. பைராகி மடமா..” என்றாள்.

     “என்னமோ புதுசா கேட்கறேளே.. நம்ம ரோடுக்கு, முல்லா சாகிப் தெருவுல இருந்து ரங்கநாதர் மட்டும் தானே வருவார்..” என்றவாறே அவள் பாவாடை மேலாக்கை சரிசெய்து கொண்டு நெற்றியில் சாந்துப் பொட்டு இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள்.

      சாம்பவி மாமி மூங்கில் கூடையில் தேங்காய், வாழைப்பழம் எடுத்து வைத்துக் கொள்ள, தில்லை சிவகாமசுந்தரி தானே தொடுத்த சம்பங்கிப் பூச்சரத்தோடு வெளியே வர, சுந்தரவல்லி எவர்சில்வர் தட்டில் கல்கண்டோடு பின்தொடர அனைவரும் வாசலுக்கு விரைந்தனர். 

     அர்ச்சகர் “பச்சைமா மலை போல் மேனி..” பாசுரத்தைச் சொல்லி உற்சவ மூர்த்திக்கு கற்பூரம் ஏத்தி காண்பிக்க, அனைவரும் கன்னத்தில் போட்டுக் கொண்டு சுவாமியைத் தரிசித்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தனர்.

     அரை மூடித் தேங்காயை உடைத்து பத்தைகளை பிரசாதமாக எல்லோருக்கும் விநியோகித்தாள் சாம்பவி. “உன் பிள்ளையாண்டான் தாமு எங்கேயாக்கும்..” என்று அந்த மாமி கேட்டவுடனே சுந்தரவல்லிக்கு பையன் ஞாபகம் வந்தது. “எங்க போயிட்டான்.. ரொம்ப நேரமா ஆளைக் காணோமே.. டேய்..” என்று கூவினாள்.

    “வழக்கம் போல தெருமுக்கு கடையில நின்னுண்டு பராக்கு பார்த்துண்டிருப்பான் மாமி..” என்றாள் மேனகா.

    “எங்கயும் சொல்லாம போமாட்டான்டி.. மொட்டை மாடியில இருப்பானோ..”

    மெத்தையில் உலர்ந்த துணிகளை எடுத்து வருவதற்காகப் போயிருந்த சிவகாமசுந்தரி “அங்கேயும் காணோமே..” என்றவாறு இறங்கி வந்தாள்.

   அந்தச் சமயம் வாசலில் தபால்காரர் குரல் கேட்டது “சார்.. போஸ்ட்.. ஏ.தாமோதரன் யாரு”

    மேனகா ஓடிப் போய் “இந்த வீடு தான்.. குடுங்க” என்று வாங்கிக் கொண்டாள். ‘சனாதன தர்ம உயர் பள்ளி’யிலிருந்து வந்த அஞ்சல் அட்டையைத் திருப்பிப் பார்த்தாள். ‘PROMOTED’ என்று ரப்பர் ஸ்டாம்ப் குத்தி தலைமையாசிரியர் கையொப்பமிட்டிருந்தார். 

    “மாமி.. தாமு பாஸ் ஆயிட்டான்..”   

     சுந்தரவல்லி “அப்பாடா.. இப்பதான் நிம்மதியா இருக்கு..” என்றாள்  “சரி.. எங்க போயிட்டான் இந்த கடன்காரன்..” 

     “அப்படியெல்லாம் பேசாதடி..” என்று சிவகாமசுந்தரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் மௌனமாக உள்ளே நுழைந்தான். 

     மேனகா “டேய்.. நீ ஆறாங்கிளாஸ் போயாச்சு.. இந்தா ‘ப்ரமோடட்’ கார்டு..” என்றாள்.

     தாமு மிகுந்த சந்தோஷத்துடன் “ஹையா.. ஜாலி..” என்று அதை அம்மாவிடம் கொடுத்தான்.

    “இவ்ளோ நேரமா எங்கடா போயிருந்தே.. “ என்றாள் சுந்தரவல்லி கோபமாக. உடனே அவன் முகம் சுருங்கியது. மகிழ்ச்சி அல்பாயிசில் காணாமற் போயிற்று.

    “ஏண்டி.. அவனை வெய்யறே.. எவ்ளோ சமத்தா படிச்சு பாஸ் பண்ணியிருக்கான்.. “ 

    “ஃப்ரெண்ட் தனசேகர் வந்து அவாத்துக்கு கூப்பிட்டான்மா.. ‘பாணா காத்தாடி வாங்கியிருக்கேன்.. நூலுக்கு மாஞ்சா போடணும்’னான்.. ”

    “அதுக்காக யானை கவுனி வரைக்கும் போனியா.. ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாமே..”

    “அதான் வந்துட்டானே.. விடுங்களேன்.. “என்றாள் மேனகா.

     சாம்பவி “இந்தாடா நேந்திரம்பழம்.. ஒனக்காக எடுத்து வெச்சேனாக்கும்..” என்று நீட்டினாள். தாமு அம்மாவைப் பார்த்து விட்டு அதை வாங்கிக் கொண்டான். 

    சிவகாமசுந்தரி “இங்க வா..” என்று அவனை அணைத்துக்கொண்டு சமையலறைக்குப் போய் “வாயைத் திற” என்று எதையோ திணித்தாள்.

    “என்னது மாமி.. தித்திப்பா இருக்கே.. “என்று உதட்டைத் துடைத்துக் கொண்டான்.

    “வெண்ணெய் காய்ச்சினேன்டா.. அந்தக் கசடுல கொஞ்சம் அரிசி மாவையும் சர்க்கரையையும் கலந்து வெச்சேன்.. ஒனக்கு பிடிக்குமேன்னு.. ”

     சுந்தரவல்லி “இந்த போஸ்ட் கார்டை பத்திரமா வை.. ராத்திரி அப்பா வந்தவுடனே காட்டணும்..” என்றாள்.

     “சரிம்மா.. நம்மாத்துக்கு வர்ற தபாலை எல்லாம் நீளமா ஒரு கம்பியில குத்தி ஆணியில மாட்டியிருக்காளே.. அதுல இதையும் சேர்த்துடறேன்..” என்றவாறே படுக்கையறைக்கு ஓடினான்.

     ‘சிவனடியார்கள் பண் இசைக் குழாம்’ என்பது தேவார திருவாசகப் பதிகங்களைக் கோஷ்டியாகப் பாடும் பக்தர்களின் திருக்கூட்டம். பல ஆண்டுகளாக கந்தகோட்டத்தின் அருகில் இயங்கி வரும் அந்த ஆன்மீகச் சபையில் ராமச்சந்திர ஐயரும், தில்லை சிவகாமசுந்தரியும் உறுப்பினர்கள். வாய்ப்பாட்டில் ஆர்வமுள்ள மகள் மேனகாவையும் அதில் சேர்த்து விட்டனர். 

     ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் மாலை வேளைகளில் சௌகார்பேட்டையின் ஏதாவதொரு கோவிலில் அதன் வகுப்புகள் நடக்கும். அம்மாவும் பெண்ணும் வாரந்தோறும் ஒயர் கூடையில் பாட்டுப் புத்தகமும் ஹார்மோனியப் பெட்டியும் கூஜாவில் வெந்நீரும் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள். 

     சில நாட்களில் தாமு “நானும் அவாளோட போயிட்டு வரேன்மா..” என்று சுந்தரவல்லியிடம் கேட்பான்.

     “வீட்டுப்பாடம் எல்லாம் எழுதிட்டியா.. கால் பரிட்சைக்கு வேற தயார் பண்ணணும்…”

     “எல்லாம் முடிச்சுட்டேன்மா.. நாளைக்கு ஸ்கூல் லீவுதான்..” 

     “ஏண்டி சுந்தரா.. உம்பிள்ளை என்ன ‘பியூஸி’யா படிக்கறான்.. சூட்டிகையான பையன்..  எப்படியும் தேறிடுவான்.. கவலைப்படாதே..  நீ வாடா..” என்று சிவகாமசுந்தரி அவனுக்காகப் பரிந்துரைப்பாள். 

     தாமு தில்லை மாமியின் கையைப் பிடித்துக் கொண்டு உற்சாகமாகச் செல்வான். பஜனை முடிந்ததும் தையல் இலையில் கேசரியுடன் சுண்டலும் பிரசாதமாக வழங்கப்படும். 

     பூக்கடை காவல் நிலையத்தின் அருகில் சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவப் பெருமாள் ஆலயங்கள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாதிரி அமைந்திருக்கும். இரண்டையும் சேர்த்து ‘பட்டணம் கோவில்’ என்று அழைப்பர். அந்தச் சிவன் கோவிலில் பிரம்பராம்பிகை சன்னிதி எதிரே ‘அனுபூதி மண்டபம்’ என்று ஒன்றுண்டு. அங்கு ‘சிவனடியார்கள் பண் இசைக் குழாமின்’ வருடாந்திர விழா சுதந்திர தினத்தன்று நடப்பது வழக்கம். அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல்வேறு குழுக்கள் பக்திப் பாடல்களை வாத்தியக் கருவிகளோடு இசைப்பர். தருமபுரம் சுவாமிநாதன், பித்துக்குளி முருகதாஸ் போன்ற பிரபலங்களும் அதில் கலந்து கொள்வது வாடிக்கை.

     தாமு அன்றைய தினம் பள்ளிக்கூடத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு சீருடையில் மூவர்ணக் கொடியுடனும், கை நிறைய மிட்டாய்களுடனும் வீடு திரும்பியவுடன் அப்பா அவனை பட்டணம் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

     அனந்தசயனம் ஏற்கெனவே ராமச்சந்திரனிடம் இவ்விழாவுக்காக ஐந்து ரூபாய் நன்கொடை கொடுத்து, ரசீதைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். மதியம் கோவிந்தப்ப நாயக்கன் வீதியிலுள்ள சத்திரத்தில் இசைக்குழவின் சார்பாக அன்னதானம் வழங்கப்படும். 

     மேனகா குழுவினரின் கச்சேரி காலையில் முதலாவதாகவும், இரவு மங்களம் பாடுவதாகவும் இருமுறை நடைபெறும். தாமு கோவில் வாசலில் நின்றபடி விழாவுக்கு வரும் பக்தர்களிடம் ஆவேசமாக உண்டி குலுக்கி காசு வசூல் செய்து, ‘நிகழ்ச்சி நிரல்’ நோட்டீஸ்களை எல்லோருக்கும் விநியோகித்துக் கொண்டு இருந்தான்.

     உறையிடப்பட்ட மிருதங்கத்தோடு ஒருவரும் வயலின் பெட்டியோடு மற்றவரும் பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தனர்.

     “உமக்காக தான் வாசல்லயே வெயிட் பண்ணின்டிருந்தேன்.. நம்ம கச்சேரி இந்த வேளைக்கு ஆரம்பிச்சிருக்கும்.. சீக்கிரம் வாரும்..” 

     “நான் என்ன ஸ்வாமி பண்ணறது.. கவர்னர், கோட்டையில கொடி ஏத்திட்டு திரும்பி போறார்னு ரோடுல போலீஸ் கெடுபிடி.. அரை மணி நேரமா கிராஸ் பண்ணவே விடலை..” 

     “உஜ்ஜல் சிங் தானே.. அந்த சர்தார்ஜிக்கு வேற வேலையில்ல..”

     “அவர் போயி.. கே.கே.ஷா வந்தாச்சே.. மறந்துட்டேளா..”  என்றவாறே இருவரும் மேடையை நெருங்கினர்.                                                

        வ்வொரு ஆண்டும் தீபாவளிச் செலவுக்கு அனந்தசயனம் கடை முதலாளியிடம் சம்பள முன்பணம் கேட்பார். குழந்தைகளுக்கு மட்டுமாவது புத்தாடைகள் வாங்கித் தர வேண்டுமென்பது அவர் நோக்கமாக இருக்கும். சில சமயம் எதிர்பார்த்ததை விட அதிகமாக போனஸும் கிடைக்கும்.  

        “இந்த வாட்டி ‘டபுள் ஷேட்’ புடவை ஒம்பது கஜத்துலயும்  வந்திருக்காம்.. வாங்கிக் குடுங்கோன்னா..” என்றாள் சுந்தரவல்லி.. “ஆகட்டும்.. பார்க்கலாம்..” என்றார் காமராஜர் பாணியில். 

        “அப்பா.. எனக்கு ‘ஃபுல் பேன்ட்’ வேணும்.. முழுக்கை சட்டை தெச்சுக்கணும்.. “ என்று கேட்டான் தாமு.

     “அதெல்லாம் நீ எட்டாங்கிளாஸ் போகும் போது பார்த்துக்கலாம்..”

     “தனசேகர் இப்பவே போட்டுக்க ஆரம்பிச்சுட்டான்ப்பா..”

     “சரிடா.. நச்சரிக்காதே.. “

     “அப்பறம்.. பட்டாஸ் வாங்கணும்.. ராக்கெட்.. ஹைட்ரஜன் பாம்..”

     “வெடியெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.. காசை கரியாக்கிண்டு..“ என்றாள் சுந்தரவல்லி  “பட்சணம் என்ன செய்யறதுன்னு தெரியலை.. போன வருஷம் தேங்கா பர்ஃபியும் பப்பு பில்லையும் பண்ணியாச்சு…”

     “ஆபீஸ்ல அட்வான்ஸ் கிடைச்சா தான் எதுவுமே..” 

     அப்பா கடைசியில் எப்படியும் வாங்கிக் கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கை தாமுவுக்கு இருந்தது. சட்டைக்கு நீளமான காலரும், பேன்ட்டில் ‘ஜிப்’பும் வைத்து தைக்கும்படி ராவ் டெய்லரிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டான். 

     அந்த வருடம் அழகப்ப செட்டியார் ஏதோ விசேஷத்திற்காக காரைக்குடி சென்றவர் இரண்டு வாரங்களாகத் திரும்பி வரவில்லை. தீபாவளிக்குப் பிறகே மெட்ராஸ் வருவார் என்று பேசிக் கொண்டார்கள். 

     அனந்தசயனம் செலவுக்கு என்ன செய்வது என்று யோசித்தார். அலுவலக  நண்பர் வேணுகோபாலனிடம் கைமாத்து கேட்க, அவர் தீர்மானமாக எதுவும் சொல்லாமல் காலம் கடத்தினார். 

     பண்டிகைக்கு மூன்று நாட்கள் இருக்கும் வரை தாமுவுக்கு துணி வாங்கித் தைக்கக் கொடுக்கவில்லை. ‘இன்னும் பணம் கிடைக்கலைடா’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவனது கனவுகள் மெதுவாகக் கரையத் தொடங்கின. 

     தீபாவளிக்கு முந்தின நாள் அப்பாவின் வருகையை எதிர்பார்த்து வாசல் திண்ணையிலேயே காத்திருந்தான். அவர் வந்ததும் ரெடிமேட் டிரஸ்ஸாவது வாங்கிக் கொள்ளலாம் என்ற நப்பாசை மிச்சமிருந்தது. வெடிச் சப்தங்களும் வானத்தில் வண்ண வெளிச்சங்களும் அவனை ஈர்த்தன.

     இரவு ஏழு மணிக்கு அனந்தசயனம் வந்ததும் “ரூபா கிடைச்சுதாப்பா.. கடைக்கு போலாமா..” என்றான் ஏக்கத்தோடு.

     “இல்லடா.. முதலாளி ஊருக்கு போயிட்டார்.. வேணுகிட்ட கேட்டுப் பார்த்தேன் அவரும் கையை விரிச்சுட்டார்.. “

     “அப்ப.. நாளைக்கு புதுசு போட்டுக்க முடியாதாப்பா..” துக்கம் தொண்டையை அடைத்தது தாமுவுக்கு.

     “பள்ளிக்கூட யூனிஃபார்ம் இன்னொரு செட் தைச்சது அப்படியே தானே இருக்கு.. அதை எடுத்துக்கோ.. அப்பறம் பார்க்கலாம்..” 

     கண்களில் நீர் மல்க “சரிப்பா..” என்று டிரங்க் பெட்டியிலிருந்து காக்கி டிராயரையும் வெள்ளைச் சட்டையையும் எடுத்து காலர் நுனியில் மஞ்சள் தடவித் தயாராக வைத்தான். 

     “கங்கா ஸ்நானம் ஆச்சா அனந்து..” என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தார் ராமச்சந்திரன், நெற்றி நிறைய விபூதியுடன்.

    “வாங்கோ ஐயர்வாள்.. ஹேப்பி தீபாவளி..” என்ற அனந்தசயனம் அவர் கையைக் குலுக்கினார்.

    “இந்தா தாமு.. ஒனக்கு புது சொக்கா.. டிரவுசர்.. அளவு சரியா இருக்கா பாரு..” என்று சிவகாமசுந்தரி துணிப்பையை நீட்டினாள். அதில் ‘டி.மங்காராம்’ கடையின் பெயர் அச்சாகியிருந்தது. அவன் அப்பாவைப் பார்த்து விட்டு அதை வாங்கிக் கொண்டான்..

     “எதுக்கு மாமி இதெல்லாம்..” என்ற சுந்தரவல்லியிடம் “இருக்கட்டும்.. அவன் எங்க செல்லம்..  மேனகா தான் போய் வாங்கிண்டு வந்தா..” என்றாள் “நீ என்னடி பட்சணம் பண்ணினே..” 

     ‘பணம் கிடைக்காததால் எதுவும் செய்யவில்லை’ என்று அவள் சொல்லத் தயங்கிய போது “தீவாளி வாழ்த்துக்கள்..” என்ற குரல் கேட்டது. மாத்வ மாமா பித்தளை தூக்கு நிறைய ‘மோஹன்டால்’ என்ற இனிப்பைக் கொடுத்து விட்டு “ஒரு ஃபங்ஷனுக்காக ஸ்வீட் போட்டேன்.. எல்லாரும் எடுத்துக்கோங்கோ..”  என்று சொல்லி அவசரமாக வெளியே கிளம்பிச் சென்றார்.

     “என்ன அனந்து.. இந்த வருஷம் பண்டிகை நாத்திக்கெழமை வந்துடுத்து.. ஒரு நாள் லீவும் போச்சு..” என்று குறைபட்டுக் கொண்டார் ராமச்சந்திரன் “அப்பறம்.. உங்க எம்எல்ஏ ஹண்டே எப்படியிருக்கார்.. “

     “அவர் பார்க் டவுன் தொகுதிக்கு தானே..” 

     “போன வருஷ எலக்‌ஷன்ல அந்த டாக்டருக்கு பயங்கரமா கேன்வாஸ் பண்ணேளே.. பூத் ஏஜென்ட்டா இருந்தேள் போலருக்கு..”

     “எனக்கு ராஜாஜி மேல ரொம்ப அபிமானம் உண்டு… “ என்றார் அனந்தசயனம் “அவரோட சுதந்திரா கட்சி ஆள் பக்கத்து தொகுதியில நிக்கறாரேன்னு.. ஏதோ என்னால முடிஞ்ச உபகாரம் பண்ணேன்.. 

     “நம்ம ‘ஹார்பர்’ல என்னடான்னா.. ஒரு சுயேச்சை ஜெயிச்சுட்டார்.. ஆமா.. கேட்கணும்னு நினைச்சேன்.. இன்னிக்கி நீங்க மார்வாடி கடைக்கெல்லாம் போவேளே..”

     “அதுக்கு தான் கிளம்பிண்டே இருந்தேன்.. நீங்க வந்தேள்..” 

     “இவர் விட்டா மணிக்கணக்கா பேசிண்டே இருப்பார்.. நீங்க புறப்படுங்கோ மாமா..” என்ற சிவகாமசுந்தரி “வாங்கோ.. போலாம்..” என்று கணவரை அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.

     னந்தசயனம் பணிபுரியும் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் வடஇந்தியர். தீபாவளியன்று தங்களது வணிகத்திற்கான புதுக்கணக்கைத் தொடங்குவது அவர்கள் மரபு. வியாபார வட்டாரத்தில் இருக்கும் அனைவருக்கும் அன்றைய தினம் ‘லட்சுமி பூஜை’க்கு அழைப்பு விடுப்பர்.

     அதற்கு வருடாவருடம் தாமுவும் அப்பாவுடன் செல்வது வழக்கம். அன்று தில்லை மாமி வாங்கிக் கொடுத்த புத்தாடைகளை அணிந்து கொண்டு அவருடன் கிளம்ப ஆயத்தமானான்.

     முதலில் ‘ஹீராலால் அண்ட கோ’ சேட்டு “ஆயியே.. ஆயியே.. பைட்டியே..” என்று வரவேற்றார். சந்தனப் பொட்டுடன் தொப்பியும், சில்க் ஜிப்பாவும் அணிந்திருந்தார். எல்லோருக்கும் ‘ஸெவன் அப்’ குளிர்பானம் விநியோகித்தனர். தாமு முதன்முறையாக அதைச் சுவைத்துக் குடித்தான். வாசலில் ‘டெர்லின் ஷர்ட்’டும், ‘பெல்பாட்டம் பேன்ட்’டும்  அணிந்த மார்வாடிப் பையன்கள் ஆயிரம் வாலா சர வெடி கொளுத்துவதை அவன் ஏக்கத்துடன் பார்த்தான்.

     மஹாவீரர், கஜலட்சுமி படங்களுக்கு ரோஜாப்பூ மாலை போட்டிருக்க, கணக்கெழுதும் பேரேடுகள் மீது குங்குமத்தில் ஸ்வஸ்திக் வரைந்து இந்தியில் ‘லாப்’ என்று எழுதியிருந்தனர். பண்டிட் மணி அடிக்கும் சப்தம் கேட்டது. முக்காடு அணிந்த பெண்மணிகள் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தனர்.

     அங்கு அன்பளிப்பாகக் கொடுத்த இனிப்புப் பெட்டிகளை வாங்கிக் கொண்டு அப்பாவும் பிள்ளையும் கிளம்பினர்.  மேலும் நான்கைந்து கடைகளுக்குச் சென்று விட்டு வீடு திரும்பியதும் அம்மா, “டேய்.. சாம்பவி மாமி பையன் ‘நீ இருக்கியா’ன்னு கேட்டான்.. போய் என்னன்னு விசாரி..” என்றாள்.

     தாமு பயத்துடன் தயங்கியபடி அவர்கள் போர்ஷனுக்குள் சென்றான். அந்த உயர்ந்த மனிதன் “இந்தாடா.. நிறைய பட்டாசு மத்தாப்பு எல்லாம் இருக்கு.. எடுத்துக்கோ.. விஷ்ணு சக்கரம் கொளுத்தும் போது மாத்திரம் கவனமா இரு.. கேட்டியா.. கையை சுட்டுடுமாக்கும்..” என்றான். 

    சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக்கொண்ட தாமு அண்ணாந்து பார்த்து “தேங்க்ஸ்” சொன்னான்.

     அவனும் பதிலுக்கு “நோ மென்ஷன்” என்றான். 

     ரை பரிட்சை முடிந்து கிறிஸ்துமஸ் விடுமுறையில் தாமுவுக்கு ‘போரடித்தது’. காலையிலேயே  அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடி முப்பது பைசா பறித்துக் கொண்டு தெருமுக்கு கடையில் ‘கோகுலம்’ பத்திரிகை வாங்கப் போனான்.

     வீட்டிலிருந்து சற்று தூரத்தில் ஆதியப்ப நாயக்கன் வீதிச் சந்திப்பில் இருக்கும் ‘ஃபரூக் ஸ்டோர்ஸ்’ அருகில் நின்றவாறே வேடிக்கை பார்ப்பது அவனுடைய பொழுதுபோக்கு. அதன் பக்கத்தில் எப்போதும் ‘சஞ்சீவி மலையோடு பறக்கும் ஆஞ்சநேயர்’ சின்னத்துடன் ஏபிடி பார்சல் சர்வீஸ் வேன் எதற்காகவோ நிறுத்தப் பட்டிருக்கும்.

     அந்தப் பெட்டிக் கடையில் பன்மொழி நாளிதழ்களும், சஞ்சிகைகளும் விற்கப்படும்.  பிரிட்டானியா ரஸ்க், டிஏஎஸ் ரத்தினம் பொடி, சிக்லெட் சூயிங்கம், பாவுட்டா பீடி என்று சகலவிதமான வஸ்துக்களும் கிடைக்கும். சிகரெட் பற்றவைக்க தென்னங்கயிற்றின் நுனியில் நெருப்பு புகைந்து கொண்டிருக்கும். 

     தாமு கடையின் மேல் பகுதியில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கித் தொங்கவிடப் பட்டிருந்த புத்தகங்களை தலையை சாய்த்துக் கொண்டு பார்த்தான்.

    அம்புலிமாமா, வானொலி, ஆந்திர பிரபா,  முத்து காமிக்ஸ், மாத்ருபூமி, பேசும் படம், இல்லஸ்ட்ரேடட் வீக்லி, பாலமித்ரா என்று எல்லாமே இருந்தன. ஓரமாக ப்ளேபாய், இந்து நேசன், பருவம் போன்ற இதழ்களும் காணப்பட்டன.

     “கோகுலம் இல்லையா..” 

     “அது மாசத்துக்கு ரெண்டு தான் தம்பி.. பதினஞ்சாம் தேதி வந்தது காலியாயிடுச்சு.. அடுத்து ஜனவரியில தான் வரும்..”

     அப்போது ஒருவர் சைக்கிளை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தி செய்தித்தாள்களைக் கொடுத்து விட்டு வேகமாகச் சென்றார். கடைக்காரர் அதைப் பிரித்து நவசக்தி, அலைஓசை தினசரிகளுடன் கோலி சோடா பாட்டில்களுக்கு நடுவே செருகி வைத்தார். ‘வால் போஸ்டரை’ தாமுவிடம் நீட்டி  “இதை.. முன்னாடி மாட்டுப்பா..” என்றார்.

     அவன் அதைப் பிரித்துப் படித்தான். ‘சுதேசமித்திரன் – சென்னை விசேஷப் பதிப்பு –  26-12-1972’ என்ற தலைப்பின் கீழ் கொட்டை எழுத்துக்களில் “மூதறிஞர் ராஜாஜி காலமானார் – தலைவர்கள் இரங்கல் – பொதுமக்கள் அஞ்சலி” என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. கருப்புக் கண்ணாடி மற்றும் கைத்தடியுடன் நிற்கும் அன்னாருடைய படமும் இடம் பெற்றிருந்தது.

     தாமுவுக்கு உடனே இதை அப்பாவிடம் சொல்ல வேண்டுமென்று தோன்றியது. அடிக்கடி அந்தத் தலைவரைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பார். அவர் எழுதின புத்தகங்களைப் பொக்கிஷமாக வைத்திருக்கிறார். வேகமாக வீட்டிற்குத் திரும்பி வந்தான்.

     சுந்தரவல்லி வாசல் திண்ணையில் அமர்ந்தபடி முறத்தில் அரிசியிலிருந்து கற்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள். “அப்பா எங்கேம்மா.. “

     “ராஜகோபாலாச்சாரி செத்துப் போயிட்டார்டா.. அவரோட இறுதி ஊர்வலத்துக்கு போயிருக்கா..” 

     “எப்படிம்மா தெரியும்.. இப்பதான் நான் பேப்பர்ல படிச்சேன்..”

     “கார்த்தாலை ஏழே காலுக்கு டெல்லி நியூஸ்ல சொன்னாளாம்.. அதைக் கேட்டதுலருந்து அப்பாக்கு ரொம்ப துக்கமாயிடுத்து.. அழுதுண்டே கிளம்பினா.. ‘ஆபீஸ்க்கு லீவு சொல்லிட்டு அங்க போறேன்.. ராத்திரி வர்றதுக்கு லேட்டாயிடும்’னார்..” என்றாள்.

     தாமுவுக்கு வருத்தமாயிருந்தது. இதுவரை அப்பா எதற்குமே கண்கலங்கி அவன் பார்த்ததில்லை. அவர் புறப்படும் போது வீட்டில் இருந்திருந்தால் தானும் கூடவே போயிருக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டான்.

(தொடரும்)

Series Navigation<< 1/64,  நாராயண முதலி தெரு1/64, நாராயண முதலி தெரு – 3 >>

10 Replies to “1/64,  நாராயண முதலி தெரு – 2”

 1. சித்ரூபன், 70-களின் ஆரம்பத்துக்கு அழைத்துப்போகும் இக்கதையின் சித்திரங்களை அனுபவித்துப் படித்தேன். பாராட்டுக்கள். இவற்றுடன் 50-களில் தாமுவைப் போன்ற ஒரு சிறுவனின் வாழ்க்கையில் நடக்கும் என் சிறுகதைகளை (1950 களின் கதைகள்) ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. அமர்நாத்

  1. அமர்நாத் அவர்களின் பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி. தங்கள் சிறுகதைகளையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். வாசிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

   1. சித்ரூபன்,
    எல்லாம் சொல்வனத்தில் இருக்கின்றன.
    1950 களின் கதைகள்: 1957-1, 1957-2, ஏகபோகம், அத்திம்பேர். அவற்றுடன்
    ஒந்தே ஒந்து, வானம் பொழிகிறது பூமி விளைகிறது
    டீச்சர் (அடுத்து வரும்)
    உங்கள் கருத்துக்களை மகிழ்வுடன் வரவேற்கிறேன்.
    அமர்நாத்

  2. திரு. அமர்நாத், தாங்கள் எழுதிய வானம் பொழிகிறது சிறுகதை வாசித்தேன். அருமையாக இருந்தது. கால இயந்திரத்தில் வாசகர்களை ஏற்றிக் கொண்டு 1959-க்கே அழைத்துச் சென்று விட்டீர்கள்.. வாழ்த்துகள்..

 2. Excellent visual recreation!! As for smell, there is perhaps just one reference (vibhuthi smell from someone). Sound (other than speech), touch and taste are mostly implicit.

  This particular Ondu kudithanam has been better than a joint family, which seems to offset the economic woes, so far. Ah, the nostalgia; even bitter becomes bittersweet in retrospect.
  Good going, Chitroopan! Very engaging!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.