- ஸ்ரீ அரவிந்தரின் நெருப்புப் பறவை – ஒரு பார்வை
- ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில்
- ‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’
- ஊர்வசி காதலில் கண்விழித்தாள்!
- ‘ஊர்வசியின் களிப்பு- புரூரவஸின் சலிப்பு’
- இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்
- அதிர்ஷ்டம் வாய்ந்த சுவர்க்கத்தின் துரதிர்ஷ்டம்!
- தனிமையின் பிடியில் புரூரவஸ்
- புரூரவஸ் செய்த பாவம் – அழகு, காதல்
- மாறாத பேரானந்தம்

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப – தொல்காப்பியர்
இதனை உண்மையாக்கிய மானிடர் ரிஷிகளாக (நிறைமொழி மாந்தராக) வாழ்ந்த நாடு நம்முடையது. இவர்களுள் ஸ்ரீ அரவிந்தரும் ஒருவர் எனும் பேருண்மை பலரும் அறியாதது. அறிந்திருந்தாலும் அனுபவிக்காதது. ஒரு ஆத்ம அனுபவமாக அன்னார் எழுதியுள்ள கவிதைகளிலிருந்து ஒன்றை நோக்கின், நம்மையும் ஆன்மீக அனுபவங்களும் எண்ணங்களும் ஆச்சரியத்திலாழ்த்திவிடும். என்னை அவ்வாறு ஒரு அனுபவத்தில் கடந்த சில நாட்களில் சிறிது நேரம் மூழ்கி முத்தெடுக்க வைத்த ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
ஸ்ரீ அரவிந்தரின் பறவைகள் பற்றிய கவிதைகளில் நாம் ஆங்காங்கே காணும் ‘மாயப்பறவை’ என்பது ‘எல்லையற்ற ஆனந்தத்தில் அமிழ்ந்துள்ள ஆத்மா’ என அவரே ‘சாவித்ரி’ எனும் தமது நூலில் விளக்குகிறார்.
அவருடைய ‘சாவித்ரி’யில் ஓரிடத்தில் இப்பறவையைப்பற்றிப் பேசுகிறார். சாவித்ரி எனும் பிரமிக்க வைக்கும் அறிவும் ஆற்றலும் கொண்ட சிறுமியின், இளமங்கையின் எல்லையற்ற ஞான ஒளியைக் கண்டவர்கள், அது ஆனந்தத்தில் மிதக்கும் ஆத்மாவே எனச் சற்றேனும் உணர்ந்தனர். அவளுடைய ஒளிமயமான உணர்தலினாலும், அரவிந்தர் ‘எல்லையற்ற ஆனந்தம் நிறைந்த வெண்ணிறத் தீப்பறவை’ எனக் குறிப்பிடும் பொருளினாலும் அந்த அற்புத வடிவமான ஆத்மா அவருடைய விளையாட்டுத் தோழமையாகின்றது.
தனது பெருஞ்சிறகுகளை விரித்தபடி அவளை, ஒரு காரணத்தின் பொருட்டு உலகில் உதித்த அக்குழந்தையான சாவித்ரியை அது காவல் புரிகிறது.
‘சாவித்ரி’யே ஒரு ப்ரம்மாண்டமான தீப்பறவையின் வடிவாக நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறாள் என்பது மிகையேயில்லை. ஒரு அதி உயர்வான, ஜ்வலிக்கும், பொற்சிறகுகளைக் கொண்ட, அற்புதமான பறவை உன்னதமாகப் பறந்து நாம் எட்டவே முடியாத உலகங்களிலிருந்து நம்மிடம் வந்துள்ளது.
உன்னதமான உலகுக்கும், அழியக்கூடிய உலகுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. அழியக்கூடிய உலகு துயரத்தின் இருப்பிடம். அன்பின் தெய்வமான சாவித்ரி, இப்படிப்பட்ட உலகுடனான துயரமயமான தொடர்பில் உள்ளவள். அவளுடைய உண்மையான ஆனந்தமயமான உலகம் துயரங்களால் தொல்லைப்படாதது. ஆனால் ஒரு முக்கியமான செயலுக்காக அவள் இந்தத் துயரம் நிறைந்த உலகுக்கு வருவது இன்றியமையாததாகின்றது. தனது உலகு எப்படிப்பட்டதென நினைவிலிருத்திக் கொண்டுள்ளவள் அவள். கண்ணாடியைப் போன்ற ஒளிபுகக்கூடிய, ஒளிமயமான, நிலையற்ற நீரின் தன்மையைக் கொண்டவளாக அவள் சித்தரிக்கப்படுகிறாள். மற்ற நிறங்களும், வர்ணங்களும் அவளை மாசுபடுத்துவதில்லை. அப்படிப்பட்ட ஒரு புனிதமான தலம் அவளானால், அத்தலத்தில் சாளரங்கள் ஒளி ஊடுருவிச் செல்லக்கூடியனவாக, நிறமற்று இருக்க வேண்டுமல்லவா?
அப்படியானால் ஸ்ரீ அரவிந்தரின் ஆகாயத்தை ஊடுருவிச் செல்லும் இந்தப் பறவையை யாரென்பது? மற்றவைகளுடனான அதன் தொடர்பென்ன என்ற வினா எழுப்பப்பட்டபோது ஸ்ரீ அரவிந்தர் கூறிய விடை: “அதனை என்னவென்பது? அதனை ஒருவரால் பார்க்க மட்டுமே முடியும்,” மேலும் கூறுவார்: “அப்படிப்பட்ட பறவைகள் அனைத்துமே தொடர்புகள் உடையவை ஆகும். ஆனால் இது எல்லையற்ற ஆனந்தத்தின் பறவையாகும். இந்த நெருப்புப் பறவை மனம் சம்பந்தப்பட்டதும் தவம் சம்பந்தப்பட்டதும் ஆகும். இதனை மனதால் உருவகப்படுத்த மிகவும் முயற்சி செய்தால் ஆன்மீக, மனோததத்துவ ரீதியான விஷயங்களின் தாத்பர்யத்தை உணர்வது கடினம். அதனால்தான் ஒரு சாதகன் இதனைத் தன் ஆழ்மனதால் காணலாம் ஆனால் உருவகித்து விளக்க இயலாது,” என்கிறார். இது 1936-ல் அவர் கொடுத்துள்ள விளக்கம்!
இதற்குச் சில ஆண்டுகள் முன்பு 1933-ல் நெருப்புப் பறவை என ஒரு கவிதையை அரவிந்தர் எழுதினார்.

நெருப்பு பறவை
ஆங்கில மூலம்: ஸ்ரீ அரவிந்தர்
(தமிழாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்)
பொன்மயமான வெள்ளைச் சிறகுகள் பெரும்பரப்பில் படபடவென அடித்துக்கொள்ள, விட்டுவிட்டுப் பிரகாசித்தபடி எரிஞாயிற்றின் வளைவின் மேலாக மங்கலான மேற்கை நோக்கி அந்த தீச்சுடர்ப் பறவை சென்றது;
தூதுசெல்லும் ஒரு கப்பலின் பாய்மரத்தை லேசாகத் தொட்டுக்கொண்டு, அந்த நீலப்பறவை வேனிற்காலத்தில் வீணான, ஓசையற்ற, வழியுமற்ற தகிக்கும் கடலில் சென்றது.
இப்போது மங்கிவரும் உலகின் மாலையில் நிறமும் பிரகாசமும் திரும்பவும் மிதந்துவந்து என் மார்பினுள் ஒரு நீல மினுக்கொளியான காற்றாகப் புகுகின்றன.
எப்போதும் அழிவற்ற நீரின் பரவசமான வெண்மைநிற நுரையாலான ஆடைக்குத் தீயும் பளபளப்பும் கறையேற்படுத்துகின்றன.
அடங்கா பிரபஞ்ச நெருப்புப் பறவையின் பொன்மயமான வெள்ளைச் சிறகுகளே, காலவரையறையற்ற எல்லையிலிருந்து தாமதமாகவும், மெதுவாகவும் வந்துள்ளீர்கள் நீங்கள்.
தேவதையே, இங்கு என்னை நோக்கி,
பாடுபடும் பூமிக்கு அவனுடைய (ஆண்டவனுடைய) சிவந்த, தீவிரமான, தெய்வீக அன்பிலிருந்து விடுதலையான மௌனமான சக்தியையும் கொண்டு வருகிறீர்கள், –
ஒளியின் பிரகாசம் துளும்பும் பெரும் பீப்பாய்களில் இருந்து, (அல்லது தொட்டி எனலாமா?) இன்பவெள்ளமான பீப்பாய்களில் இருந்து எடுக்கப்பட்ட நுரை ததும்பும் ரோஜாச்சிவப்பான மதுவை வெண்மை ஒளிக்கிரண ஜாடிகளில்,
இறப்பேயில்லாத கொடிகளில் வளரும் அவனுடைய சூரிய-திராட்சைப்பழமானது காலத்தில் நடனமாடுபவனின் (ஆடலரசனான நடராஜனின்) கால்களால் மூர்க்கத்தனமாக திடீரென துவம்சிக்கப்பட்டதா?
அழிவற்ற மௌனத்தால் கட்டப்பட்ட வெண்மை ரோஜா நிறமான பலிபீடம், இப்போது எனது இயற்கைத்தன்மையை விரிவாக்கி, அவனுடைய (ஆண்டவனுடைய) தனிமைக்கு அந்தரங்கமான விருந்தாளியாக்கும்,
ஆனால் அதற்கு உயரே பொன்னிறமான ஒருத்தி அவளுடைய வைரம்போலும் ஆதிக்க எல்லையில் அவளுடைய நட்சத்திரப் பூக்களின் ஒளிவட்டத்துடனும் பெருவிருப்பக் கதிர்களுடனும்!
ஓ பறவையே, காயப்பட்டு நிர்வாணமாக, கடினமான செங்குத்துப்பாறை போன்ற பற்களைக் கொண்ட உலகத்தை நோக்கி ஏறும் ஆன்மாவின் குருதிபோல் செழிப்பான சிவந்த மார்பு உன்னுடையது,
வெள்ளி – பொன்னாலான, நிலவு தழுவும் இரவும் உதயமாகும் பகலும் கொண்டுசெய்த பூ ஜாடியில் இருக்கும் தீச்சுடர்-இதழான அன்பு இரத்தினம் இது.
ஓ சுடரே, காலத்தின் கடைசி வரமான தியாகமே, எல்லையற்ற ஒன்றிற்கு அர்ப்பணிக்க எல்லையுள்ள கடவுள்கள் கைகளில் வைத்துக் கொண்டிருக்கும் அர்ச்சனை மலரே,
எரியும் ஒளிமிகுந்த சிறகுகளையும் வெட்டவெளியையும் தாண்டிப் பார்க்கும் தடைகளற்ற மூடிகளையும் கொண்ட அதிசயப் பறவையே,
உனது ஒரு அழுத்தமான மாய – விசித்திரத் தாவல், சிந்தையின், வாழ்வின் தடைகளை உடைத்துக்கொண்டு ஒளிமிகுந்த வரையறையான உனது பறத்தல் என்னும் செய்கையில் வந்து சேர்கிறது.
நேரமற்ற முகத்தின் முன்னாலுள்ள கண்களால் சிவந்த மௌனத்தின் இரகசியப் பிடிப்புகளைத் தாக்குகிறது.

மேலே கூறிய ஆத்ம தத்துவத்தை இங்கு பறவையுடன் பொருத்தினால் அது எத்தனை அழகாகப் பொருந்துகிறது என உணரலாம்; சிலிர்க்கலாம் – எனக்கு நேர்ந்த மாதிரியே!!
நாம் இதனை உய்த்துணரும்போது எல்லையற்ற ஆற்றல் நம் விருப்பப்படி உள்ளிறங்குவதனை இது உணர்த்துகிறது. சக்தி எனும் சர்ப்பம் மேலிருந்து உயிர்நிலைமீது வேலைசெய்து, குண்டலினி எனும் சர்ப்பத்தை ஆதாரத்திலிருந்து எழுப்புகிறது. வெண்ணிறத்தீ என்பது ஆற்றலின் நெருப்பு, செந்நிறத்தீ என்பது விருப்புகள் அனைத்தையும் துறத்தலும் தவம் இயற்றுதலும் ஆகும். நீலநிறத்தீ என்பது ஆன்மீகமும் அதைப்பற்றிய ஆழ்ந்த அறிவும்- இதுவே அறியாமை எனும் இருளை விலக்கி, உள்ளத்தைத் தூய்மையாக்குகிறது.
பறவை என்பது ஆத்மாவின் அடையாளம் அன்றி வேறொன்றல்ல! பெரும்பான்மையான பொழுதுகளில் இவை மனோ-சக்தியையும் ஆத்ம சக்தியையும் குறிக்கின்றன. இங்கிவை ஸ்ரீ அரவிந்தரின் எழுச்சியடைந்த ஆன்மீக அறிவை வெள்ளிய நீலநிறம் கொண்ட தீயினால் உருவகித்து உலகிற்கு உணர்த்துகின்றன. அது ஒரு மரத்திலமர்ந்துள்ள பறவை போன்றது; சந்திரனிலிருந்து ஒழுகும் சோமரசம் குளிப்பாட்டும் சோமா எனும் செடி; அலைகளுடன் கொந்தளிக்கும் கடல்; அபரிமிதமான பலம்கொண்டவனும், தான் செய்யும் காரியங்களில் வெகு சாமர்த்தியமானவனுமான ஒருவன் தனது வாயில் நெருப்பை ஏந்திக்கொண்டு வேகமாகச் செல்வது போன்றதாம். வேறு உவமைகள் இன்னும் தேவையா? பிரமிக்கிறோம்.
காலத்தைக் கடந்ததொரு வெளியினின்றும் இந்த அபூர்வ அதிசயப்பறவை வந்ததோவெனும் கவிஞரின் (ஸ்ரீ அரவிந்தரின்) வியப்பு ‘நெருப்புப் பறவை’ எனும் இக்கவிதையில் வெளிப்படுகிறது. மூன்று நிறங்களைக் கொண்ட தீயைக் காட்டும் இப்பறவையை ஒரு கட்டத்தில் தியாகத்தின் சின்னமாகக் காணலாம். இந்த மாயப்பறவை ஒரே ஒரு தாவலில் மனம், உயிர் ஆகிய தடைகளைக் கடந்து விடுகின்றது.
பரந்த ஆகாயத்தை வெள்ளிய பொன்னிறங்கொண்ட சிறகுகளால் கடக்கும் நெருப்புப் பறவை, ஆகாயத்தில் ஒளியேற்றிப் பின் கவிஞரின் இதயகமலத்தில் அமர்கிறது. காலங்களைக் கடந்த வெளியினின்றும் அது வந்ததோவென அவர் வியக்கிறார். தெய்வீக அன்பை மட்டும் அது கொண்டுவரவில்லை; அமைதி தவழும் ஒரு விடுதலை உணர்வையும் உலகிற்குக் கொண்டுவந்துள்ளது. தியாகத்தின் வரமானது அந்த நெருப்புப் பறவை.
தமது ஒரு கடிதத்தில் ஸ்ரீ அரவிந்தர் நெருப்புப் பறவையை இந்திரனுக்கும், ஒரு முனிவருக்கும் சோமரஸத்தைக் கொண்டுவந்த ஒரு வேதகாலக் கவிஞனாகவும் காண்கிறார். “இவை ஒரு அற்புத உலகத்தின் சின்னங்கள்,” என்கிறார் அவர். இதனை அவர், தனது தந்தை காஸ்யப மகரிஷக்காக மற்ற கடவுள்களை எதிர்கொண்டு அமுதமயமான சோமரசத்தைக் கவர்ந்துவந்த கருடனுக்கும் ஒப்பிடக் கூடும். மேலும் இந்த உருவகம் நெருப்பைச் சின்னமாகக் கொண்ட தெய்வீக ஞானத்தை அடைந்த கவிஞரின் குறிப்பாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள நிறங்களுக்கும் ஒரு விளக்கம் அளிக்கப்படுகின்றது. வெள்ளிய பொன்னிறமான சிறகுகளுடன் அப்பறவை நீலநிறமான ஆகாயத்தில் பறந்து செல்கிறது. பின் கவிஞரின் இதயத்திற்குள் ஒரு நீலச்சுடராக நுழைகிறது.
இதனையே அவர் இவ்வாறு விளக்குகிறார்.
“இப்போது மங்கிவரும் உலகின் மாலையில் நிறமும் பிரகாசமும் திரும்பவும் மிதந்துவந்து என் மார்பினுள் ஒரு நீல மினுக்கொளியான காற்றாகப் புகுகின்றன.
எப்போதும் அழிவற்ற நீரின் பரவசமான வெண்மைநிற நுரையாலான ஆடைக்குத் தீயும் பளபளப்பும் கறையேற்படுத்துகின்றன.”
நீலநிற ஆகாயமும் கடலும் முடிவற்ற தெய்வீக உணர்வைக் குறிக்கின்றன; நெருப்புப்பறவை எனும் ஆத்மாவானது நீலநிற ஆகாயத்தில் வெண்மைநிற நுரையாலான அழிவற்ற நீரில் கறையேற்படுத்திப் பறந்து செல்கிறது.
திரும்பவும் அந்த ஆத்மாவான பறவை துயரப்படும் பூமிக்கு கடவுளின் சிவந்த, தீவிரமான தெய்வீக அன்பைக் கொண்டு வருகிறது என்கிறார். அதனை,
“அந்த சோமரசத்தை ஒளியின் பிரகாசம் துளும்பும் பெரும் பீப்பாய்களில், இன்பவெள்ளமான பீப்பாய்களில் இருந்து எடுக்கப்பட்ட நுரை ததும்பும் ரோஜாச்சிவப்பான மதுவானது, வெண்மை ஒளிக்கிரண ஜாடிகளில், காலத்தில் நடனமாடுபவனின் (ஆடலரசனான நடராஜனின்) கால்களால் இறப்பற்ற திராக்ஷைக்கொடி மூர்க்கத்தனமாக திடீரென படைக்கப்பட்டதா?” எனக் கேட்கிறார்.
கவிஞரின் தேர்ந்தெடுத்த சொற்பிரயோகங்களில் நிறங்களின் அழுத்தமும் ஆதிக்கமும் நெருப்பின், அதன் சக்தியின் உயர்வான தரத்தைக் குறிக்கின்றன. நீலநிற ஆகாயமும் கடலும் தெய்வீகத்தின் எல்லையற்ற தன்மையைச் சுட்டுகின்றன. ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மீக நெருப்பானது பிரகாசமாக எரிந்து மனித ஆத்மாவைச் சுத்திகரித்து, தெய்வீக அன்பையும் அறிவாற்றலையும் தேடும் உள்ளங்களுக்குக் கொண்டு தருகிறது எனலாம்.
திரும்பத் திரும்ப நாம் நெருப்பிற்கான இந்தக் குறியீடுகளையே ஸ்ரீ அரவிந்தரின் அனைத்துக் கவிதைகளிலும் காண்கிறோம். நெருப்பென்பது ஒளி கொடுப்பது, உலகை வலம் வருவது, தெய்வீக உணர்வு, தெய்வத்தூதன், உண்மையின் தூதன், உண்மையின் காவலன் இன்னும் பல.
நெருப்புப் பறவையில் காணும் பறவை ஸ்ரீ அரவிந்தரை ஒரு யோகியாகக் காட்டுகிறது. அவரது உள, ஆன்மீக நிலைப்பாட்டை இக்கவிதையில் வெகு நன்றாக உணர முடிகிறது. அடர்ந்த சிவந்த மார்பினால் அப்பறவை கரடுமுரடான உலகைத் தேடி ஏறுவதும், காயப்படுவதும் ஆத்மாவானது உயர்வான ஒரு பேரின்பத்தை நாடுவதைக் குறிக்கின்றது.
ஸ்ரீ அரவிந்தரின் மற்றொரு படைப்பான ‘ஊர்வசி’யில் அவளைத் தேடிச் செல்லும் புரூரவஸின் பயணமானது பறவையின் பறத்தலைக் குறிப்பிடுகிறது. மனிதர்களின் உலகின் அரசனான புரூரவஸ் கடவுளைத் தேடும் மனித ஆன்மாவிற்கு ஒப்பிடப்படுகிறான். ராஜரிஷியான அவன் தெய்வப்பெண்ணான ஊர்வசியைத் தேடி அலைகிறான். கடைசியில் அவன் உலகை நீத்து தேவலோகத்தை அடைகிறான். இதனை ஒரு பறவை உயரஉயரப் பறப்பதுடன் ஒப்பிடுகிறார் ஸ்ரீ அரவிந்தர்.
‘நெருப்பின் மணப்பெண்’ எனும் கவிதையில் காணும் நெருப்பு, ஒரு எரியும் மானிட ஆத்மா தெய்வீக ஞானத்தையும் உள்ளொளியையும் பெறுவதைக் குறிக்கிறது. அதே மானிட ஆத்மா, ‘பிறப்பின் அதிசயம்’ எனும் கவிதையில் ஸ்ரீ அரவிந்தரால் நிரந்தரமான நெருப்பின் பொறியாகக் காண்பிக்கப்படுகிறது. இந்த மானிட ஆத்மா (ஜீவாத்மா) பரமாத்மாவின் ஒரு துகளே அன்றோ? மனித உள்ளம் தெய்வீக ஞானத்தைப் பெற முயலும்போது அது ஒரு அதீதமான விசையுடன் வருகின்றது. ‘நெருப்புக் காற்று’ எனும் கவிதை இதனை அறிவின் அல்லது உண்மையின் சக்தி அல்லது விசை என விளக்குகிறது.
நெருப்புப் பறவை மன, உடல் தொடர்பான தடைகளை உடைத்துக்கொண்டு, ஒருங்கே தெய்வீக ஞானத்தையும் கொணர்ந்து, சோமரசத்தைத் ‘தேடல்’ பக்குவத்திலிருக்கும் மனித உள்ளத்திற்கு அளிக்கிறது.
இங்கு ஸ்ரீ அரவிந்தரின் நெருப்புப்பறவை உயரே எழுந்து பிரகாசமாகப் பறந்து நம்மையெல்லாம் ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கிறது.
இதனை மட்டுமே படித்து, உள்வாங்கி, அந்த பிரமிப்பில் இருந்து நான் இன்னும் விடுபடவில்லை.
(ஸ்ரீஅரவிந்தரைப் பற்றிய ஒரு அறிமுகம்:
ஸ்ரீ அரவிந்தர் (முந்தைய பெயர் அரவிந்த கோஷ்) கொல்கத்தாவில் ஆகஸ்ட் 15ம் தேதி 1872-ல் பிறந்தார். அவர் ஒரு யோகி, தத்துவவாதி, மஹரிஷி, கவிஞர், இந்திய விடுதலைப் போராளி எனப் பன்முகங்கள் கொண்டவர். பத்திரிகையாளராகவும் சிலகாலம் செயல்பட்டார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து விடுதலைக்காகப் போரிட்ட தலைவர்களில் இவரும் ஒருவர்.
1910ன் பின்பு ஆன்மீக சீர்திருத்தவாதியாக மாறி ஆன்மீக முற்போக்குச் சிந்தனைக்கும், மனித சமுதாய முன்னேற்றத்திற்கும் வழிகோலினார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஐ. சி. எஸ் படித்தார். விடுதலைப் போராட்டப் பங்களிப்பில் சிறையில் பலகாலம் இருந்தார். அப்போது இவருக்குப் பல ஆன்மீக அனுபவங்கள் ஏற்பட்டன. சிறையினின்றும் வெளிவந்தவர் தமது அரசியல் சார்ந்த பணிகளை நிறுத்தி பாண்டிச்சேரி சென்று ஆன்மீகத் தேடலில் இறங்கினார்.
அங்கு இவருடன் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்ட “அன்னை” எனப்படும் மிர்ரா அல்ஃபாஸ்ஸா என்பவருடன் இணைந்து அரவிந்த ஆசிரமத்தை அமைத்தார்.
இவர் எழுதியன ஏராளமான நூல்கள் இவருடைய ஆன்மீகத் தேடல்களையும் அனுபவங்களையும் விவரிக்கின்றன. அவை (Savitri- a legend and a symbol, The Life divine, Synthesis of Yoga, Hymns to the Mystic Fire, The Upanishads)
ஸ்ரீ அரவிந்தர் 1950-ல் சமாதி அடைந்தார்.)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தொடர்பான பார்வை நூல்கள், கட்டுரைகள்:
- The Letters of Sri Aurobindo
- Sri Aurobindo, The collected Poems
- K D Sethna, The poetic genius of Sri Aurobindo
- Nagin Doshi, The power of Agni and the psychic power- some answers by Sri Aurobindo, Mother India. June- Jul 1974.
- http://savitri.in/blogs/light-of-supreme/the-white-fire-dragon-bird-of-endless-bliss
- https://incarnateword.in/cwsa/27/replies-to-questions-on-the-bird-of-fire
- Savitri- a legend and a symbol- by Sri Aurobindo-1933