மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு

புதுடில்லி 2000

நடுராத்திரிக்கு ஓ என்று சத்தம் போட்டுக்கொண்டு சின்னச் சங்கரன் எழுந்து படுக்கையில் உட்கார்ந்திருந்தார். உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. குளிர்காலம் வந்து கொண்டிருக்கும் நவம்பர் மாதம் என்றாலும் வியர்வை உடலிலிருந்து ஒழுகிக் கொண்டிருந்தது. 

மாதம் ஒரு தடவையாவது திரும்ப வரும் கனவில் வெளி எல்லாம் மிளகு வாசம் அடிக்கும். அத்துவானக் காட்டிலிருந்து ஒரு குழந்தைக் குரல் நிறுத்தாமல் கூப்பிடும் – அப்பா அப்பா அப்பா. பின் அழும். ’சுப் ஷைத்தான் மத் ரோ கோலி தேங்கே’ என்று கனமான குரல் ஒன்று கேட்க சூழல் நாற்றமடிக்கும் விமானமாகும். ஐந்து துப்பாக்கிகள் சங்கரனை நோக்கி உயரும். ஓவென்று கத்தி அழுது கொண்டு சங்கரன் எழுந்து உட்கார்வார். ’அப்பா அப்பா’ குரல் மங்கி ஒலிக்க, படுக்கை அறையில் அவருக்கு மட்டும் தட்டுப்படும் மிளகு வாடை.

அதே கனவு தான் இப்போதும். குரல்கள் அதே தொனிகளில் அதே உணர்ச்சிபூர்வமாக அல்லது அதிகாரத்துடன் ஒலிக்கின்றன. அப்பா என்று விதிர்விதிர்த்துக் கெஞ்சும் குழந்தைக் குரலும், சைத்தானே, அழாதே, சுட்டுக் கொன்னுடுவேன் என்று பயங்கரவாதக் குரலும் சங்கரனை விடாமல் தொடர்கின்றன. பாதிக் கனவில் துப்பாக்கி உயர சங்கரன் பைஜாமாவை நனைத்துக் கொண்டு எழுந்து உட்கார்கிறார். 

வசந்தி அவருக்கு அடல்ட்ஸ் டயபர் போட்டு விட்டிருக்கிறாள். தனியாகப் படுத்துக் கொள்கிறாள். சங்கரன் துர்ஸ்வப்பனம் கண்டு எழும்போது அவரைக் குழந்தை போல மடியில் போட்டுக் கொண்டு இரண்டு நிமிடம் ஆசுவாசப்படுத்துகிறாள். மூத்திரம் நனைந்த பைஜாமாவைக் கழற்றி வேறு போட்டு விடுகிறாள். சங்கரனைக் கட்டிக்கொண்டு ஜோஜோஜோஜோவென்று காதில் ஓதி உறங்க வைக்கிறாள்.

விமானம் மலைச் சிகரங்களைத் தட்டாமல் பறந்து போகிறது. பனி மூடிய மலைகளில் அருகே தொட்டு விடும் தூரம் என்பதுபோல் நெருங்கிப் போய் விலகி உயரம் தாழ்த்தி மறுபடி பறக்கிறது. தரை வெற்றுவெளியாக கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து பரந்திருக்கிறது. கோடை காலப் பறவை ஒன்று காலம் தப்பித் தனியாகப் பறக்கத் தொடங்கி எந்தப் பக்கம் கூடு என்று முடிவுக்கு வரமுடியாமல் முன்னும் பின்னுமாகப் பறந்து களைக்கிறது. புழுதிக் காற்று சுழன்றடித்து மண் துகள் குவிந்து மேலேறி நாலு திசையிலும் இறங்க இடம் இன்றி இன்னும் மேல் நோக்கி நகரக் காற்றின் உந்துதலை எதிர்பார்த்து ஓஓஓ என்று சத்தம் எழுப்பி நிலைக்கிறது.

புழுதிக் காற்று முடிவில் ஆலங்கட்டி மழையைக் கொண்டு வருகிறது. கால நிலை குளிர்காலத்தின் ஒரு தினத்தைப் பிய்த்துக் கோடையில் ஒட்ட வைத்தது போல் விசித்திரம் செய்கிறது. பனிக்கட்டிகள் சின்னதும் பெரிசுமாக வானத்திலிருந்து பொழிந்து தரையில் உருள்கின்றன. தொடர்ந்து சீராகப் பனி பெய்ய ஆரம்பிக்கிறது. விமானம் வந்த வழியே திரும்பலாமா என்று மேலும் கீழுமாக உயரம் அதிகரித்தும் குறைத்தும் பனிக்கு ஊடாகப் பறக்கிறது.

ராத்திரி விஸ்கி, பிராந்தி, ரம் விருந்துக்குப் போவதெல்லாம் கட்டோடு ஒழித்துக் கட்டிவிட்டாள் வசந்தி.  விமானம் கடத்தப்பட்ட கனவு போதையில் பாதி நிஜமாகத் தெரிய நிமிடம் நிமிடமாக சாவு பயத்தையும், மணல் பிரதேசத்தில் அந்நியச் சூழலில் தனிமையையும் முழுக்க உணர்ந்து இரவு முழுக்க உறங்காமல் கிடக்க சங்கரனுக்கு விதிக்கப்படவில்லை. விருந்துகளுக்கு வரச் சொல்லும் தொலைபேசி அழைப்புகள் சங்கரனின் கவனத்துக்குப் போவதற்கு முன் chordless phone கார்ட்லெஸ் ஃபோன் மூலம் வசந்திக்கு எடுக்கக் கிடைக்கின்றன. 

”அவர் இன்னும் அப்சர்வேஷன்லே இருக்கார். நிறைய ஓய்வு எடுக்கச் சொல்லியிருக்கா.  பழச்சாறு, ரசம் சாதம், குழம்புக் கருவடாம், அரிசிப் புட்டு  இப்படி சாத்வீகமாக சாப்பிட, குடிக்கன்னு சீலம் மாற்றி வச்சுண்டா இந்த கர்க்கடகத்துலே சரியாயிடும்னு சொல்றா. பார்ட்டி எல்லாம் இப்போ கூப்பிட வேண்டாம் தயவு செய்து. கெட்டக் கனவு கண்டு டயாபரை மாத்தி விட நான் தான் கஷ்டப்படவேண்டி வரும். சின்னக் குழந்தை மாதிரி சுத்திவர மூச்சா போய் முழங்காலைக் கட்டிண்டே படுக்கையிலே உக்கார்ந்திருக்கார்”.

”வசந்தி உனக்கு ஞாபகம் இருக்கோ?” சங்கரன் நடுராத்திரி போன ரெண்டுங்கெட்டான் பொழுதான ரெண்டரை மணிக்கு  வசந்தியின் கட்டில் பக்கம் போய்த் தரையில் உட்கார்ந்து ரொம்ப சகஜமாகப் பேச்சை ஆரம்பிப்பார். 

“வசந்தி, இதுக்கு மட்டும் பதில் சொல்லு. 1960லே இல்லே 1961லே நம்ம பகவதியை கர்ப்பத்திலே வச்சிண்டிருந்தியே” 

“அதுக்கென்ன?” 

“அதுக்கு ஒண்ணுமில்லே. அந்த கர்ப்பத்துக்கு ஆறு மாதம் முந்தி ஒருதடவை நீ ப்ரக்ணண்ட் ஆனே ஞாபகம் இருக்கா? பிள்ளைதான், வயத்துலே உதைக்கறான்னு சொன்னே. திடீர்னு ஒரு நாள் காலம்பற, அன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை.. உங்கப்பா, தம்பி, சித்தப்பா கரோல்பாக்கிலே வீட்டு  செப்டிக் டாங்க் ரிபேர் பண்ணிண்டு இருக்கான்னு வந்து டாய்லெட்டை நாறடிச்சாளே,  நம்பூதிரி தந்தசூரணம் பல்பொடி நெடி எங்கேயும் அடிச்சுண்டிருக்க நீ என்னை பாத்ரூமுக்கு கூப்பிட்டே. அந்தக் கர்ப்பம் கலைஞ்சு போச்சுன்னு அழுதுண்டே சொன்னே. ஞாபகம் இருக்கா. அது ஆம்பளைக் குழந்தைதானே. அந்த கரு இன்னும் உசிரோட இருக்கு. நான் பார்க்கலே. அப்பா அப்பான்னு கண்ட்ஹர்லே ப்ளேன்குள்ளே வந்து என்னைத் திட்டறதோ, நல்லதா நாலு வார்த்தை சொல்லறதோ தெரியலே. நல்ல வார்த்தை சொல்ல நான் ஒண்ணுமே செய்யலியே. திட்டுதான். என்னமோ அந்தக் குழந்தை கனவுலே வரும்போதெல்லாம் வீடு முழுக்க மிளகு வாடை. அது கூப்பிட்டுண்டு இருக்கும்போதே ஐஞ்சு கட்டாலேபோவான்கள் என் சிரசுக்கு துப்பாக்கி வைச்சிண்டு நிற்கறான். குடம் குடமா மூத்திரம் எப்படி வருதுன்னு தெரியலே. இவ்வளவுக்கும் ராத்திரி படுத்துக்கப் போறபோது போய்ட்டுத்தான் படுக்கறது. சரி சரி விஷயம் என்னன்னா அந்தக் குழந்தைக்கு நல்லதா ப்ரீதி பண்ணனும். அதுவரை வந்துண்டு தான் இருக்கும். ஞாபகம் இருக்கோ?”

”இல்லே நான் அப்படி எல்லாம் கர்ப்பம் தாங்கலே. உங்க தொடுப்பு வெள்ளைக்காரியைக் கேட்டுப் பார்த்தேளோ?” 

ஒரு பத்து நிமிஷம் கனமான மௌனம் நிலவும் அங்கே. 

”இல்லே, இது அதுக்கெல்லாம் ரொம்ப முன்னாடி.” 

“அப்போ தில்ஷித் கவுரை ஃபோன் பண்ணி வரச் சொல்லுங்கோ. கேட்டுண்டு மஞ்சள் குங்குமம் பிளவுஸ்  பீஸ் கொடுத்து அனுப்பலாம்”. 

வசந்தி சகஜமான மனநிலைக்கு வந்திருப்பாள். 

“அவள் அப்புறம் முழுசா பத்து வருஷம் கழிச்சுத்தான் ஹோம் மினிஸ்ட்ரியிலே இருந்து டைப்பிஸ்டா ட்ரான்ஸ்பர்லே வந்தா”. 

“சரி அப்போ ஏதாவது நடந்திருக்கும்”. 

“சே அதெல்லாம் இல்லே. ரிகார்ட் ரூம்லே பழைய ஃபைல் தேடறபோது ஒரு தடவை கரண்ட் போய் இருட்டாச்சா? என்னைக் கட்டிப் பிடிச்சு பச்சுபச்சுன்னு முத்தம் கொடுத்தா”. 

கொஞ்ச நேரம் பேசாமல் யோசித்துக் கொண்டிருப்பார் சங்கரன். திரும்பப் பேச ஆரம்பிப்பார்.

”அப்படித்தானா, இல்லே நான் தான் அவளுக்கு கொடுத்தேனா?” 

“யார் யாருக்கு கொடுத்தேளோ, போன வருஷம் அவ ரிடையர் ஆனபோது திராட்சைப் பழம் வாங்கிண்டு வந்து கொடுத்து சாதாரணமா பார்த்து பேசிட்டு போனா. நீங்க தான் அலைஞ்சீங்க போல இருக்கு”. 

“அப்படி இருக்க, அவளுக்கு எப்படி கர்ப்பதானம் பண்ணியிருக்க முடியும்?”

“அதான் வெள்ளைக்காரியைக் கேளுங்கோன்னு சொல்றேன்”. 

“சொல்லிண்டே இருக்கேனே தெரிசா பழக்கமானது 1970லே. நான் கேக்கறது அதுக்கு பத்து வருஷம் முந்தி 1960லே. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலம்பர தான் பாத்ரூம்லே வென்னீர் வேம்பா பக்கத்துலே நின்னுண்டு கலைஞ்சு போச்சுன்னு அழுதே. ஞாபகம் இருக்கா. நீ சட்டுனு சொல்வேன்னு நினச்சேன்”.

”ஆமா, என்னிக்கு க்ரீடை பண்ணினது, என்னிக்கு சூல் பிடிச்சது, என்னிக்கு கலைஞ்சதுன்னு ஹோ அண்ட் கோ டயரி போட்டு குறிச்சு வச்சுக்கணுமா என்ன? திருக்கல்யாண வைபோக விவரண டயரி. அரசூர் சங்கரய்யர் தர்மபத்னி வசந்தாளோடு ரமித்த விவரங்கள் ஈண்டுக் காணலாம்னு முதல் பக்கத்துலே எழுதி வச்சு”. 

சங்கரன் தூங்கியிருந்தார். வசந்தியும்  அடுத்த பத்து நிமிஷத்தில் நெருங்கி அடித்துக்கொண்டு  அதே கட்டிலில் கிடந்தாள்.

வசந்தி வேண்டுமென்றே அசட்டை செய்தாலும் கனவு வருவது என்னமோ நிற்கவில்லை. சங்கரனின் கனவிலே வரும் குழந்தை அவர்களுக்காக உருவாகி அவர்களால் அழிக்கப் பட்டது என்று நாளுக்கு நாள் திடமாக நம்பப் பட்டது சங்கரனால்.  இந்த மிளகு வாசனை வேறே சுற்றிச் சுற்றி வருகிறது அந்தக் கனவுக் காலத்தில். 

அப்போதுதான் வசந்தி சொன்னது – ”நாமும் அம்பலப்புழை போய் சுவாமி தரிசனம் பண்ணி வருஷம் நாற்பது ஆச்சு. வாங்கோ ஒரு நடை போய்ட்டு வந்துடலாம்”.  

அப்படியே சங்கரனுடைய நாள்பட்ட சிநேகிதியும், ரிடையர்ட் செய்தி அலுவலக தலைமை நிர்வாகியும், தில்லியில் அரசாங்க, அரசியல் வட்டாரங்களில் இன்னும் மகத்தான செல்வாக்கும் உள்ள பிடார் ஜெயம்மாவை அவள் இருக்கப்பட்ட மங்களூரில் வைத்துக் குசலம் விசாரித்து விட்டு வரவும் தீர்மானமானது.

அப்படியே, ஹொன்னாவர் பக்கம் கடற்கரையோடு போனால் நல்ல இயற்கைச் சூழ்நிலை, சமுத்திரம், அரபிக் கடல். கொஞ்ச தூரத்தில் திருக்கோகர்ணம் ஸ்தலத்தில் மகாகணபதி, மகாபலேஷ்வர், பத்ரகாளி இப்படி பனிரெண்டு கோவில்களை தரிசிக்க ரொம்ப நாளாக ஆசை வசந்திக்கு. மகாபலேஷ்வர் கோவிலிலும் மகா கணபதி கோவிலிலும் பிரார்த்தனை செய்தால் இந்த சொப்பனத் தொல்லை அறவே நீங்கும் என்று திடமான நம்பிக்கை புருஷன் பெண்ஜாதி ரெண்டு பேருக்கும். 

ரயில் ஏர்கண்டிஷனிங் கோச் பர்ஸ்ட் க்ளாஸில் டிக்கெட் வாங்கலாம் என்று தத்கல் மூலம் நியூ டெல்லி – ஆலப்புழை இரண்டு டிக்கெட் எடுத்ததும் தான் சங்கரன் நியாயமான சந்தேகத்தைக் கிளப்பினார்.

”ரயில்லே போறபோது பயங்கர சொப்பனம் ஏதும் வராதுன்னு எப்படி நிச்சயமா நினைச்சுக்க முடியும்? ரயில்லே சும்மாவே எலும்பை உறைய வைக்கற மாதிரி குளிர் வேறே”. 

அவசரமாக ஆளனுப்பி வசந்தி டிக்கெட்டுகளை கேன்சல் செய்வதற்கு ஏகக் கஷ்டப்பட்டுப் போனாள்.  சங்கரன் டெபுடி செக்ரட்டரிக்கு அங்கே இங்கே குடல் தெறிக்க ஓடி ஆயிரம் சுத்துவட்ட காரியம் செய்ய ஆள் அம்பு என்று ஒரு பெரிய திரளே இருந்தது. இப்போதோ அவர் சங்கரன் ரிடையர்டு டெபுடி செக்ரெட்டரி. ரேஷன் கார்ட் புதுப்பிக்க வேண்டும் என்றால் கூட போய் முடித்து வர ஆள் தேடி காரியம் நடப்பதற்குள் போதும் போதுமென்றாகிறது. 

ஒரு வழியாக ரயில் டிக்கெட் கேன்சல் செய்து நியூ டெல்லி – கொச்சி விமானப் பிரயாணம் செய்ய டிக்கெட்கள் கைக்கு வந்தபோது வசந்தி சொன்னது – ”ரயில் மாதிரி இல்லே. ரெண்டரை மணி நேரம் தான் தூங்காம வந்துடுவீங்க இல்லே. 

”உக்காந்து தூங்கினால், ஏர் டிராவல்லே சொப்பனம் வராது வசந்தி”. 

”சொல்றேள், பார்க்கணும். ப்ளேன்லே ஏறினதும் ஹைஜாக் பண்ணிண்டு போன அந்த கண்ட்ஹர் ஃப்ளைட் ஞாபகத்துக்கு வந்துடாமல் இருக்கணும்”.

“நீயே சதா ஞாபகப்படுத்திண்டிருப்பே” பொய்யாகக் குற்றம் சாட்டும் தொனியில் சொன்னார் சங்கரன். அபூர்வமான சிரிப்பு அவர் கண்களில்.

“என் கவலை எனக்கு. ஆனைக்கு கோமணம் கூட கட்டி விட்டுடலாம். நடு ஃப்ளைட்லே உங்களுக்கு பைஜாமா போட்டு விடறது கஷ்டம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் வசந்தி. 

ஒரு ஐந்து நிமிடம் பேசாமல் இருந்து விட்டுச் சொன்னாள் – ”எவ்வளவு செயலா கம்பீரமா சுத்தி வந்துண்டிருந்ததென்ன. இப்படி தடான்லு வந்து ஓய்ச்சு போட்டதென்ன. அழுதா இன்னும் கஷ்டமா போயிடும் அதான் சிரிச்சிண்டே இருக்கேன்”. 

வசந்தி புடவைத் தலைப்பால் கண்ணைத் துடைத்துக் கொள்கிறாள்.

”தனியாக வீட்டில் இருக்கணும். முடியுமா இல்லே நீயும் அம்பலப்புழை வர்றியா” என்று ஒரே மகள் பகவதியைக் கேட்டார் சங்கரன். இவள் கொச்சு பகவதி. பாட்டி பகவதி பெயரும் அதே என்பதால். 

பெரிய பகவதிக்கு அம்பலப்புழை போவதென்றால் உயிர் மூச்சு விடுவதாக இருந்திருக்கும். ஆனால் அவள் ஜீவிச்சிருந்தபோது நினைத்தால் ப்ளேன்லே போக முடிந்திருக்காது. 

ஒரு குருணி பணம் கொட்டி டிக்கெட் வாங்கி சீட் பெல்ட் போட்டுக்கக்கூட பயந்து உசுரைக் கையிலே பிடிச்சுண்டு போனது பெரிய பகவதி காலம். கொச்சு பகவதிக்கு எங்கேயும் போக வேணாம். தில்லியில் அவளுடைய சிநேகிதர்களை வருஷத்துக்கு ஒரு தடவை ஒவ்வொருத்தரும் என்று சந்தித்து வந்தாலும் டபுள் ஷிப்ட் எடுத்து ஒரே நாளில் நாலைந்து பேரைச் சந்தித்தாலே ஒரு மாதிரி நண்பர்கள் பட்டியலில் எல்லா பெயருக்கும் டிக் அடிக்க முடியும். 

சங்கரனும் வசந்தியும் இல்லாவிட்டால் என்ன? பிட்ஸாவும், பர்க்கரும் கடைக்கு ஃபோன் செய்தால் அரை மணி நேரத்தில் வந்து சேரும். 

ஒரு மாறுதலுக்காக லாஜ்பத்நகர் செண்ட்ரல் மார்க்கெட் தாபாவில் இருந்து ருமாலி னானும், ஆலு மட்ட்டர் பனீர் சப்ஜியுமாக ஆர்டர் செய்து சுடச்சுட சாப்பிட்டு, வேறு வேலை இருந்தால் கவனிக்கலாம். 

அப்பாவும் அம்மாவும் பயணம் வைத்த நாள் நெருங்க நெருங்க பகவதி அவர்களுக்கு ரொம்ப அனுசரணையாக இருந்தாள். சாரதா தெரிசா ஆண்ட்டிக்கு பாலிகா பஜாரில் இருந்து கத்தரிப்பூ கலரில் சூரிதாரும், மேல்சட்டையும் மஞ்சள் தாவணியும் அவள் பணத்தில் செலவழித்து வாங்கி வந்தாள்.  

இனிப்புக் கடையில் தெரிசாவுக்காக பொன் நிறத்தில் பெரிய பாதுஷாக்களும் மோதிசூர் லட்டுகளும் வாங்கி வந்து வசந்தியிடம் கொடுத்தாள். 

மற்ற நேரம் என்றால் இப்படி யாருக்காவது வாங்கி வரும் இனிப்புப் பொதியிலிருந்து கள்ளத்தனமாக எடுத்து சாப்பிடாமல் சங்கரனைத் தடுக்க சந்தோஷமான முஸ்தீபுகள் மேற்கொள்ளப்படும். அந்த மகிழ்ச்சிக்கு இடம் இல்லாமல் கையில் வலியப் போய் கொடுத்தாலும் சங்கரன் நாவுக்கு ருசி என்று எதையும் இப்போது சாப்பிடுவதில்லை. 

எல்லாவற்றிலும் மிளகு வாடையை மட்டும் அவர் நாசி கண்டு பிடிக்கிறது. காலையில் காப்பியில் மிளகு வாடை வராமல் இருக்க, துணி கொண்டு மூக்கைச் சுற்றிக் கட்டி டம்ளரை உதடுப்பக்கம் தொட்டும் தொடாமலும் வைத்துக்கொண்டு காப்பி குடிக்க சிரமமாக இருக்கும்தான்.

ராத்திரி ஏழரைக்கு கொச்சி போய்ச் சேரும்போது வழக்கம்போல் நெடும்பாசேரி விமானத் தாவளத்தில் கனத்த மழை பெய்து கொண்டிருந்தது. இரண்டரை மணி நேரப் பயணம் என்ன காரணத்தாலோ மூன்று மணி எடுத்துக் கொண்டது. விமானத்தில் பயணம் முழுக்கக் கண்ணை மூடிக்கொண்டே வந்தார் சங்கரன். 

வாரம் நாலு தடவை இந்தியா முழுக்க விமானப் பயணம் போய்க் கொண்டிருந்த அவருக்கு ஓர் ஒற்றை விமானப் பயணம், அதுவும் நன்றாகவே பழக்கமான கொச்சி எரணாகுளத்துக்கு வர பிரயத்னம் நிறையத் தேவைப்பட்டது. 

சீக்கிரம் சரியாகிவிடும் என்று ஒரு டாக்டருக்கு மூணு ஸ்பெஷலிஸ்டுகள் அவருக்கு நல்ல நம்பிக்கை கொடுத்திருந்தாலும் கனவையும், மிளகு வாடையையும், காதுக்குள் கேட்கிற குரலையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

விமானத் தாவளத்துக்கு தெரிசா கார் எடுத்துக்கொண்டு வந்திருந்தாள். இங்கிலாந்து போய்விட்டு வந்த பிறகு புதுக்கார், கொஞ்சம்போல் பெரியதாக வாங்கியிருந்தாள்.  

வசந்தியம்மா வாங்க என்று தெரிசாவும், சாரதாம்மா நல்லா இருக்கீங்களா என்று வசந்தியும் ஏர்போர்ட்டுக்கு வெளியே சங்கரனும் வசந்தியும் வந்தபோது சங்கரனைப் புறக்கணித்து கட்டிப் பிடித்துப் பிரியம் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.  

சங்கரனுக்கும் தெரிசாவுக்கும் வாய்த்த உறவு நெருங்கிய சொந்தத்தில் பட்ட எல்லோருக்கும் பட்டவர்த்தனமாகத் தெரிந்தும் ஏதும் அசம்பாவிதமாக நிகழாமல் போய்க் கொண்டிருப்பது சங்கரனுக்கு வியப்பாக இருந்தது. அணைத்துக் கொண்ட சக்களத்திகள் பிரிய ஒரு முழு நிமிடமானது. சங்கரனைக் கடந்த பிரியம் அவர்களுக்குள்ளே.

சங்கரனும் சாரதாவும் பேசட்டும் என்றோ என்னமோ வசந்தி கொச்சி நெடும்பாசேரி விமானத் தளத்தில் பயணப் பை, பெட்டிகளை கன்வேயர் பெல்ட்டில் வரும்போது எடுக்காமல் மூன்று முறை தவற விட்டாள். நகரும் பட்டையின் அருகில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்த காவலர் வசந்தியைப் பார்த்துச் சொன்னார் – ”அம்மா, உங்களால தூக்கி இறக்க முடியலேன்னா எங்கிட்டே சொல்ல வேண்டியதுதானே ஏன் கஷ்டப்பட்டுக்கிட்டு லக்கேஜ் எடுக்காம நிக்கறீங்க”.

வசந்தி சிரித்துக்கொண்டே அவர் உதவியை நாடினாள். இல்லாவிட்டால் மிகவும் விசனத்துக்குள்ளாவார். ட்ராலியில் இரண்டு பெட்டிகளையும் ஏற்றி உருட்டிக்கொண்டு நடந்தபடி முன்னால் கொஞ்ச தூரத்தில் பேசியபடி நின்ற சங்கரனையும்  தெரிசாவையும் பார்த்தாள். 

என்ன ஸ்பெஷலாக இந்தப் பெண்ணிடம் இருக்கு என்று தேடித் தேடிப் போய் விழுந்தார் சங்கரன் என்று வசந்தி யோசித்தாள். வெளிநாடு, இங்க்லீஷ் உச்சரிப்பு, மதர்த்த அரபிக் குதிரை போல உடம்பு, பன்றியும் அழகாகத் தெரியும் பருவம் என்று அவரை வீழ்த்தி இருக்கும். 

அது என்னமோ, முடியுமானாமல் வந்து ஜெயித்துவிட்டுப் போ என்று ஒரு காலத்தில் தெரிசா பிரி முறுக்கி நின்றிருந்தது தான் காரணம். 

போனார். ஜெயித்தாள். 

இப்போது அந்த உறவின் எச்சங்கள் பிரியத்தோடும் நேசத்தோடும் கசியும்போது வசந்திக்கு அதைத் தடுக்கவோ ஒடுக்கவோ மனமும் இல்லை, காரணமும் இல்லை. 

தீவிரவாதிகள் சங்கரன் இருந்த விமானத்தைக் கடத்தியது தெரிந்து உடனே லண்டனில் இருந்து போட்டது போட்டபடி கிடத்திவிட்டு ஓடி வந்தாளே தெரிசா அந்த அன்புக்கு வசந்தி செய்யக்கூடிய குறைந்த பட்ச மரியாதை அவளை சங்கரனோடு மட்டுமில்லை, கொச்சு பகவதியோடு கூடவும் கட்டுப்பாடுகள் இன்றிப் பழகி இருக்க வகை செய்ய வேண்டியது தானே.

கார் சீரான வேகத்தில் போய்க் கொண்டிருந்தது. மற்ற நேரம் என்றால் சங்கரன் கார் அமைப்பு பற்றி, ஓட்டம் பற்றி, பெட்ரோல் குடிப்பது பற்றி எல்லாம் விடாமல் விசாரித்திருப்பார். அவர் மௌனமாகி இருக்கும் நாட்கள் இவை. நகரும் எந்தக் கூண்டும் அவருக்குச் சங்கடத்தைத் தருவதாக இப்போது மாறியுள்ளது. நடக்கும்போதும், உட்கார்ந்திருக்கும்போதும் சமாளிக்க முடிகிற பயம் நகரும்போது பெரிய பெரிய பஞ்சுப் பொதிகள் மேலே அழுத்துகிறது போல் பெரியதாகக் கவிந்து சுவாசம் தடைப்பட வைக்கிறது.

”எப்போ வாங்கினீங்க, மாருதி சுசுகி வாகனர் கார் ரொம்ப நல்லா இருக்கே” என்று வசந்தி கேட்டபடி பாராட்டும் பார்வையை சாரதா தெரிசாவை நோக்கிச் செலுத்தினாள். 

கார் ஓட்டி வந்த சாரதாவுக்கு இடப்பக்கம் வசந்தி இருக்க, பின் சீட்டில் முகத்தில் மெல்லிய பயம் தெரிய சங்கரன் ஒரு ஓரமாக உட்கார்ந்து வயதான, சிறகு நனைந்த கழுகு போல் உட்கார்ந்திருந்தார். 

கார் ஓட்டமோ, விமானப் பறத்தலோ எல்லாமே நிச்சயிக்கப்பட்ட காலமும் தூரமும் கடந்து எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அத்தனை சீக்கிரம் நிறைவேற அவருக்குள் எதிர்பார்ப்பு தேங்கி நின்றது. நகர்தலும் விசையும் எல்லாம் பயம் உண்டாக்கக் கூடியவையாக சங்கரனுக்குத் தோன்ற ஆரம்பித்த நாட்களில் துப்பாக்கிப் புகையும் மிளகு வாடையும் சேர்ந்து பிணைந்து போக்குக் காட்டின. 

அப்புறம் அந்தக் குரல். ஏன் இன்றைக்கு அது கேட்கவில்லை. இதயத்தைப் பிசையும் குழந்தைக் குரல். யார், எந்தக் குழந்தை எங்கே? கல் நெஞ்சமா இப்படிக் கெஞ்சும் ஒரு சின்னக் குழந்தையை விட்டுவிட்டு எங்கோ போக. சங்கரன் முன்னிருக்கை மேல் கை வைத்துத் தலை சாய்த்தபடி பயணப்பட்டார். 

“ஏன்னா என்ன ஆச்சு தூக்கம் வருதா? முழிச்சுண்டு உக்காருங்கோ. தெரிசாவோட புதுக்கார் பத்தி கேட்கவே இல்லே” என்று பேச்சை மேலும் ஈர்ப்போடு கொண்டு செலுத்த பிரயத்தனம் எடுத்துக் கொண்டிருந்தாள் வசந்தி.  

”கொஞ்சம் டவலை எடு” என்றார் சங்கரன் அவள் பேசிய எதற்கும் மறுமொழி தராமல். 

“நெனைச்சேன் டவலை இன்னும் கேட்கலியேன்னு. முகம் தெளிவாத்தான் இருக்கு. எதுக்கு திரும்பவும் தொடச்சுக்கணும்?” 

சொல்லியபடியே வசந்தி சிறு தேங்காய்ப்பூத் துவாலையைக் கைப்பையில் இருந்து எடுத்து சங்கரனிடம் கொடுத்தாள். அவசரமாக துவாலையில் முகம் புதைத்து முகம் மறைத்த நெருப்புக்கோழி போல் ஆசுவாசம் கிடைக்கப் பெற்று, கொஞ்சம் அசங்கினாலும் அந்த அமைப்பும் அமைதியும் சீட்டுக்கட்டுக் கோபுரம் போல் உதிர்ந்து விழுந்து விடலாம் என்று பயந்தோ என்னமோ நலுங்காமல் அப்படியே சங்கரன் அமர்ந்து வரக் கார் போய்க் கொண்டிருந்தது. 

“கொச்சிக்கும் அம்பலப்புழைக்கும் எத்தனை தூரம்?” வசந்தி கேட்டாள். 

“நாற்பத்தஞ்சு மைல்” என்று சங்கரன் துவாலையில் இருந்து தலை தூக்கிப் பார்த்துச் சொன்னார். தெரிசா புன்னகையோடு எழுபது கிலோமீட்டர் என்றாள்.  

அளவைகள், தொடக்கம்  பற்றிய உறுதியைத் தராவிட்டாலும், ஏதோ ஒரு விதத்தில் முடிவு குறித்து காலபோதம் வரவழைத்துத் தரும். கொச்சிக்கும் அம்பலப்புழைக்கும் எவ்வளவு தூரம் என்று யாராவது சங்கரனைக் கேட்டால் துவாலையில் இருந்து முகம் அகற்றி அவர் சொல்வார் – 

“அது அம்பலப்புழையிலிருந்து அம்பலப்புழைக்கு உள்ள தூரம் தான். கொச்சியில் இருந்து கொச்சி  அகன்றிருக்கும் தூரம் தான்”.

 அம்பலப்புழை போய்ச் சேரும்போது எட்டரை மணி ராத்திரி. சுக்காகக் காய்ந்திருந்த பூமி அங்கே. ஜான் கிட்டாவய்யர் சைவ உணவகத்தில் ராச்சாப்பாடு கழித்துவிட்டுப் போகலாம் என்ற யோசனை வசந்தியால் முன்வைக்கப்பட, சாரதா தெரிசா சந்தோஷமாக ஏர் கண்டிஷன் வசதி செய்யப்பட்ட போஜன சாலைக்கு அவர்களை அழைத்துப் போனாள். 

வசந்தி வழிகாட்டி முன்னே நடக்க,  சங்கரன் செலுத்தப்படும் பசுவின் கன்று போல் இழுத்த இழுப்புக்கு கூடவே நடந்தார். சப்பாத்தியும், மட்டான உரைப்பு சேர்த்த குருமாவும், ஆலு மட்டரும், ஃப்ரைடு ரைஸும், சாக்லெட் ஐஸ்கிரீமுமாக வசந்தி ரசித்துச் சாப்பிட்ட ராச்சாப்பாடு. 

சங்கரன் எல்லாம் ஒரு விள்ளல், ஒரு ஸ்பூன், ஒரு கவளம் என்று சாப்பிட்டதாகப் பெயர் பண்ணிக்கொண்டு மேலே எல்லாம் இறைத்துக்கொண்டு சாப்பிட்டதைப் பார்க்க தெரிசாவுக்கு மனதில் துக்கம் கவிந்தது. 

கடைசியாக வந்த தேங்காய்ப்பூ அடைத்த பான் மட்டும் ரொம்பப் பிடித்துப்போய் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு கொண்டு வரச் சொல்லிச் சாப்பிட்டார் அவர்.

”ரெஸ்ட் எடுக்கணும்” என்று சாரதாவிடம் சொன்னார் சங்கரன். சின்னக் குழந்தை மாதிரி தனக்கு என்ன வேணும் என்று கோரிக்கை விடுத்து உடனே நிறைவேற்றித் தருவதை எதிர்பார்த்து இருக்கிறார் அவர். விமானக் கடத்தலில் மாட்டிக் கொண்டது எவ்வளவு பாதித்திருக்கிறது அவரை என்று புரிந்தது சாரதாவுக்கு. “இதோ போய் ஜோ ஜோ தூக்கம் தான்” என்றாள் அவள்.

ஹோட்டலில் தங்கலாம் என்று வசந்தி ஒரு இங்கிதமான பேச்சாகச் சொன்னாலும், சாரதா தெரிசா அதை எதிர்பார்த்திருந்தது போல் சங்கரனும் வசந்தியும் தன் வீட்டு முதல் மாடியிலேயே சகல வசதிகளும் கவனிப்புமாக எத்தனை நாள் வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகலாம் என்று அன்புக் கட்டளை விடுத்தாள். 

இன்று ராத்திரி ஹோட்டலில் தங்கி சங்கரனுக்கு கனவு வந்து அலறிக்கொண்டு எழுந்திருக்கக் கூடும். வெளியாருக்குத் தெரிய வரும். தொந்தரவாக இருக்கும். தெரிசா வீட்டில் தங்கினால் அந்தக் கவலை எதுவும் வேண்டாம் என்று வசந்திக்குப் பட்டது. 

அடுத்த பத்து நிமிடத்தில் கார் சாரதா தெரிசாவின் வீட்டு வாசலில் நின்றது. 

எந்தக் கனவுமே இல்லாமல் ஆழ்ந்து உறங்கினார் விசாலமான மாடிப் படுக்கை அறையில். வசந்தியும் ரொம்ப நாளுக்கு அப்புறம் நல்ல தூக்கத்தில் ஆழ்ந்தாள்.

காலை ஐந்து மணிக்கு கோவிலில்   தரிசனத்துக்கு ஏற்பாடு செய்திருந்தாள் தெரிசா. நாலரை மணிக்குக் குளித்து விட்டு கோவில் போகும்போது பாதுகாப்பாக சங்கரனைக் கூட்டிப் போவதுபோல் அவர் நடுவில் நடக்க இரண்டு பக்கமும் இரண்டு பெண்டாட்டிகளும் கூட வந்தார்கள். 

திலீப் ராவ்ஜியும் விடிகாலை கோவிலில் தொழும் இனிய அனுபவத்துக்காக சங்கரன், வசந்தியோடு சேர்ந்து கொண்டார்.  வீட்டிலிருந்து பதினைந்து நிமிடம் நடை தூரத்தில் ஸ்ரீகிருஷ்ணன் கோவில் என்பதால் வாகனம் இன்றி நடந்து போய் அந்த அதிகாலையில் தரிசிக்க எல்லோருக்கும் மனதுக்கு இதமாக இருந்தது. 

“இதைவிட அமைதியான ஆத்ம அனுபவம் வேணும்னா, கோவில் திறந்ததும் அதியதிகாலை மூணு மணிக்கு வரணும்” என்றார். 

சாரதா சொன்னாள் – “மூணு மணிக்கு கிருஷ்ணன் தரிசனம் தர தயாராக இருப்பார், பக்தஜனம் தான் உறங்கிட்டிருக்கும்”. 

”நாம இந்த கோவில்லே என்ன கதைன்னு தெரியாமல் கதகளி பார்த்தோமே நினைவு இருக்கா?” என்று சங்கரனிடம் கேட்டாள் வசந்தி. 

சங்கரன் விஸ்தரித்துச் சொல்ல அலுப்பு காரணமோ என்னமோ ஆமாமா என்று சொல்லி நிறுத்திக் கொண்டார். ”என்ன அனுபவம் அதுன்னு தான் சொல்லுங்களேன் வசந்தி’ம்மா” என்று தெரிசா ஆவலோடு கேட்க வசந்தி சொன்னது இது – 

”பெரிய குத்துவிளக்கு முன்னால் வைத்து இருக்க, கண்ணை உருட்டிக்கொண்டு ஆட்டக்காரர் ஒருத்தர் நடுவிலே நின்றார். பக்கத்தில் பெண் சாயலில் வேஷம் போட்ட இன்னொருத்தர் எதையோ அவருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். கதகளி உடுப்பால் வளமான இவர்களின் பின்பாகம் தட்டக்கூடிய நெருக்கத்தில், கெச்சலான ஒரு தாடிக்காரர் பாடிக் கொண்டிருந்தார். மேளமும் கைத்தாளமும் கொட்டிக் கொண்டு இன்னும் இரண்டு பேரும் அங்கே உண்டு”.

”ராமாயணம் மாதிரி இருக்கு. ஹனுமான்கிட்டே சீதா சூடாமணி கொடுக்கறது”.

சங்கரன் வசந்தியிடம் தணிந்த குரலில் சொல்ல, முன்னால் இருந்து யாரோ ரோஷமாக பின்னால் பார்த்து, ”இது கல்யாண சௌகந்திகம்” என்றார்கள்.

”பீமன் திரௌபதைக்கு புஷ்பம் கொடுக்கற கதை”.

”அவர் பின்னால் சாய்ந்து சொல்லி நிமிர்ந்தார். என்ன நினைத்துக் கொண்டாரோ, திரும்பப் பின்னால் சாய்ந்து ”மகாபாரதம்” என்றார்”.

”அங்கே சிரிக்க ஆரம்பித்ததை ஓட்டம் ஓட்டமாக தங்கியிருந்த லாட்ஜுக்கு ஓடி வந்து   தான் நிறுத்தினோம்”  

தெரிசாவும் திலீப் ராவ்ஜியும் மனம் விட்டுச் சிரிக்க தெரிசா சங்கரனின் உள்ளங்கையில் மெல்லச் சுரண்டினாள்.

”ஆமா, நாம ரெண்டு பேரும் போனோமே, ஞாபகமிருக்கு” என்றார் சங்கரன். சாரதா தெரிசாவைப் பார்த்துச் சொன்னது அது.

(வளரும்)

Series Navigation<< மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்றுமிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.