
“குழலூதி மனமெல்லாம்” என்ற ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் பாடலை திரு. மகாராஜபுரம் சந்தானம் பாடிக்கேட்டிருக்கிறீர்களா?
இந்த பாடலில், மகரக் குண்டலம் ஆடவும் அதற்கேற்ப மகுடம் ஒளி வீசவும் என்று ஒரு வரி வரும். அதைத் தனக்கே உரித்தான குரலில் இசைப்பார் சந்தானம்.
“பார்க்கும் நிறங்களெல்லாம் நந்தலாலா நிந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா” என்றார் மஹாகவி.
மேற்சொன்ன இரண்டு பாடல்களையும் நினைவு படுத்தியது, நாங்கள் சமீபத்தில் சாலை வழிப்பயணமாக சென்ற மலேசியச் சுற்றுலா.
இது வரை மலேசியாவின் புகழ் பெற்ற பத்துமலை முருகன் கோவில், பெனாங், லங்காவி தீவுக்கூட்டம் என்று பார்த்திருந்த நாங்கள், இம்முறை செல்ல விரும்பியது கூட்டம் இல்லாத, கிராமப்புறம் போன்ற பகுதிகளுக்குத்தான்.
என்னோடு வேலை பார்த்த மலேசியத்தமிழர் ஒருவர், ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் காவடி சுமப்பார். அவர் சொல்லி நான் அறிந்த கோவில், பஹாங் மாநிலத்தில் உள்ள, மாரான் மரத்தாண்டவர் கோவில்.
சிங்கப்பூரிலிருந்து காலை ஐந்து மணிக்கு சிற்றுந்தில் பயணமானோம். வழக்கமான போக்குவரவு நெரிசல் எங்களை இரண்டு மணிநேரம், சிங்கப்பூர்- மலேசிய ஜொகூர் எல்லையில் கட்டிப்போட்டது. சுமார் நானூறு கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கும் வழியெல்லாம், ஆறுகளில் நீர் வெள்ளமாகப் பாய்ந்தோடிக்கொண்டிருந்தது. அங்கங்கே வாழை தோட்டங்களும், மலேசியாவின் முதுகுத்தண்டான பனை மரங்களுமாகத் தெரிந்தன.
மலைகள் அதிகம் இருக்கும் நாடு மலேசியா. நெடுஞ்சாலைகளோடு மலைகளும் கைகோர்த்தபடியே தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தன.
மாரான் என்ற பெயர் கண்ணுக்குத்தெரிந்த பின்னர், சாலையில் யாருமில்லை. இருபுறமும் மரங்கள் அடர்ந்த அடிக்கடி வளையும் அதிக அகலமில்லாத சாலையில் பயணப்பட்டோம்.கிட்டத்தட்ட நூற்றிமுப்பது ஆண்டுகளுக்கு முன்னர், எழுந்த ஆலயம் கண்களில் தென்பட்டது.
அந்நாட்களில் இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் அரசாங்கம் தேயிலை, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய என்று கொணர்ந்த மக்களில் பலரும் வறுமைக்கும், அதிகார வர்க்கத்தின் ஆளுமை வெறிக்கும் கிடைத்த, எளிய இலக்காயினர்.
எப்படி இலங்கை தேசத்திலிருந்து எழுதப்படும் இலக்கியங்கள், ஈழத்தின் குருதி இழையோடும் வரலாற்றையும், மக்களின் வாழ்க்கையையும் பேசுகின்றனவோ அப்படி, மலேசியாவில் இன்றும் பால்மரத்தை ஒட்டிய வாழ்க்கையைப்பகிரும் “சீ.முத்துசாமி அவர்களின் இருளில் அலையும் குரல்கள்” போன்ற புத்தகங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.
“எளி வந்த பிரான்” என்று தேவாரம் இறைவனின் இயல்பை சொல்லும். எளியவர்களுக்காக இறைவன் இறங்கி வந்த ஆலயங்கள் மலேசியா முழுதும் இருக்கின்றன.
குழந்தை வரம் வேண்டியவர்கள் வரும் கோவிலாக இந்த மரத்தாண்டவர் கோவில் இருக்கிறது. அப்பகுதியில் முந்தைய காலங்களில், இங்கிருக்கும் மரத்தின் வாசலில் நிற்காமல் செல்லும் வண்டிகள், சில தூரத்திலேயே பழுதாகி விடுமாம்.
இங்கு தங்குமிட வசதி இல்லாத போதும், கோவிலுக்குள் இருக்கும் ஒரு வித அமைதி, அனைவரையும் ஈர்க்கிறது.
நாங்கள் சென்ற மாலையில் குடமுழுக்குக்கான வேலைகள் நடந்துக்கொண்டிருந்தன.
பாலசுப்ரமணிய சுவாமியைத் தரிசித்த எங்களுக்கு எதிர்பாராத விதமாக இலை போட்டு மதிய உணவளித்தார்கள்.
கோவில் எழுப்ப வேண்டும் என முருகன் பக்தர் ஒருவரின் கனவில் வந்து முருகனே கூறியதால் எழுந்த ஆலயம் இது.
திரு.சோமசுந்தரம் பிள்ளை என்பவர் தொடங்கி வைத்த காவடி 1930 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு தைப்பூசத்திலும் பக்தியோடு பெருந்திரளாகத் தொடர்கிறது.
குழந்தை வரம் வேண்டுபவர்களுக்காக இங்கு மஞ்சள் துணியில் சுற்றிய சிறுத்தொட்டில் விற்கப்படுகிறது. அதை வாங்கி பக்தர்கள் மரத்தில் கட்டுகிறார்கள். கோவிலுக்குள் ஜோடி மயில்களும் இருந்தன.
சிங்கப்பூர் தீவுத்தேசமாக இருந்தபோதிலும், பெரும்பாலான கடற்கரைகளில் அலைகள் வேகமாக எழும்புவதில்லை.பக்கத்திலிருந்த குவாண்டன் என்ற சிறுநகரத்திற்கு பயணமானோம்.அங்கிருந்த கடல் அலைகள் எங்களைக்கண்டதும் குதியாட்டம் போட்டன.
நாங்கள் இரவு உணவுக்காக சென்ற சூரியா உணவகம் எங்களை வெகுவாகக்கவர்ந்தது. திருநெல்வேலி பகுதியிலிருந்து சிலர் வேலை செய்கிறார்கள்.
பருப்பு வடை, பச்சைப்பயிரை வெல்லத்தோடு கலந்து செய்த இனிப்பு பணியாரம், புளுட் இண்டி போன்றவற்றைப் பரிந்துரைத்தனர்.
இந்த உணவகத்தில் பாரம்பரியமான இந்திய உணவுகளில் ஆப்பம், இடியப்பம் என்று தொடங்கி, கேழ்விரகு கொண்டு செய்யப்பட்ட உணவுகளோடு, மலேசிய உணவுகளும் கிடைக்கின்றன.
புளுட் இண்டி மலேசிய இனிப்பு வகை.
வாழையிலைப் பொட்டலத்தைப்பிரித்ததும் சர்க்கரை சேர்த்த சாதத்தின் மேல், தேங்காய்ப்பூரணத்தின் வாசம் எங்களைக் கட்டிப்போட்டது.
அடுத்த நாள் காலையில் சென்ற குவாண்டானின் சித்தி விநாயகர் கோயில், சமீபத்தில் குடமுழுக்கு ஆன, நூறாண்டுகளைக்கடந்த மற்றொரு ஆலயம். மிக நேர்த்தியானச் சிற்பங்கள் கொண்ட கோபுரமும், அமைதியான, சுத்தமான சூழலும் எளிதில் மனதை ஒருமுகப்பட்ட வைத்தன.
இந்த படத்தில் உள்ள சிற்பங்களைப்போல தான், கோவிட் காலத்தில், உலகமே மார்கண்டேயரைப்போல, அவரவர் நம்பிக்கைப்படி தொழும் கடவுளின் காலடிப்பற்றி இருந்தோம். ஏனோ எனக்கு உலகம் ஸ்தம்பித்துப்போன வாரங்கள் நினைவுக்கு வந்தன!
அன்று மதிய நேரத்தில் அங்கிருந்து க்ராவ் யானைகள் காப்பகத்தில் சென்றோம். கோவிட் காலத்திற்குப்பிறகு, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பகுதிகளிலிருந்து வந்திருந்த பயணிகளின் முகங்கள் ஈராண்டுகள் தொலைத்த சந்தோஷத்தை மீட்டெடுத்ததை அப்படியே காட்டின.
யானை என்ற விலங்கை கண்டதே இல்லை என்று என்னிடம் பெல்ஜியம் நாட்டில் நான், வேலை செய்த ஈராயிரம் ஆண்டுக்குபின் வந்த ஆண்டுகளில் மீல் என்ற அந்நாட்டவர் சொல்லிக்கொண்டே இருப்பார்.
சமீபத்திய ஆவணப்படத்திற்கான இந்தியாவின் ஆஸ்கார் விருதுக்குப்பின்னர், இந்தியாவிற்கும், கிழக்காசிய நாடுகளுக்கும், இலங்கைக்கும், யானைகளைப்பார்க்க வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.
அங்கிருந்து பத்துமலை முருகன் கோவில் ஒரு மணிநேர தூரத்தில் தான் இருந்தது.
அவரைப்பார்க்க யாருக்குத்தான் ஆசை இருக்காது?
உலகின் மிகப் பெரிய முருகன் சிலை என்ற பெருமையை முதலில் பெற்ற பத்துமலை அமைந்திருக்கும் பகுதி சுண்ணாம்புக்கற்களால் ஆன குகைகளைக்கொண்டது.
முதலில் முருகன் கோவில், அதற்குப்பக்கத்தில், விநாயகர், சிவன் அம்பாள் என்றிருக்கும் தனிக்கோவில், பெருமாளுக்கென தனி கோவில், நெஞ்சில் இராமனை சுமந்தபடியிருக்கும் ஆஞ்சநேயர் என்று இந்த கோவில் வளாகம் மெல்ல மெல்ல, பலகோவில்களில் கூட்டமாக மாறி இருக்கிறது.
வாசலில் பல மலர்மாலைகள் விற்கும் கடைகளையும், லட்டு, ஜிலேபி, முறுக்கு என விற்கும் பணியாரக்கடைகளையும், இளநீரை சீவித்தரும் கடைகளுமாக அடிவாரம் எப்போதும் போல பரபரப்பாக இருந்தது.
மாலை நான்கு மணிக்கு அர்ச்சனைப்பண்டங்களோடு மலையின் மீது எற ஆரம்பித்தோம், செங்குத்தான படிக்கட்டுகளில் கவனமாக ஏறிக்கொண்டிருக்கும்போது, எங்கிருந்தோ ஒரு குரங்கு வந்து என் கையிலிருந்த பையைப்பிடுங்கியது. நான் இழுத்ததும் கோபமாக என்னைப்பார்த்து சீறியதில் என் உடல் முழுதும் பயத்தில் வியர்த்தது. ஏதோ போனால் போகிறது என்று விட்டுவிட்டாற்போல, அதன் பிறகு என்னைத்தொடரவில்லை.
மலையின் மேல் ஒரு பெருவிசேஷமான அம்சம், வேலாயுதரைத்தரிசிப்பதோடு, நெக்குருகி, மேலே கண்கள் உயர்ந்தால், அதன் வழியே நீளும் நீல நிற ஆகாயம், எப்போதும் பரம்பொருள் நான் உன்னை விடாமல் தொடர்கிறேன் என்று சொல்வது போல நம்பிக்கையைத்தரும்.

இம்முறை பலர் தமிழில் அர்ச்சனை செய்ய இருந்தனர். ஆனால், மேலே உள்ள கோவில் துப்புரவாக இல்லை. குரங்குகள் கூட்டமாக வந்து பிரசாதம் சாப்பிடுவோரின் இலைகளை இழுத்து சாப்பிட்டன. சர்வதேச கவனத்தைப்பெற்றிருக்கும் இந்த கோயிலைச் சரியாக நிர்வகிக்கவில்லை என்ற வருத்தத்தையும் பிரார்த்தனையாக்கித்திரும்பினோம்.
மலையை விட்டு கீழே இறங்கி, ஸ்ரீனிவாசப்பெருமாளையும், பத்மாவதி தாயாரையும், கூட்டமில்லாமல் பார்க்கமுடிந்தது. கீழே உள்ள குகைகளில், ராமாயணக்கதையின் முக்கியத்திருப்பங்களை மட்டும், காட்சிகளாக சிற்பவடிவில் அமைத்திருக்கிறார்கள்.
அன்றிரவு கென்டிங் மலைப்பிரதேசத்திற்கு கீழே ஒரு வீடெடுத்து தாங்கிக்கொண்டோம். மறுநாள் காலையில் அங்கிருந்து, மலையின் ஒரு பகுதி வரை சென்று சிற்றுந்திலிருந்து இறங்கிக்கொண்டோம்.
அங்கிருந்த கேளிக்கைப்பூங்காக்களில் பல சுற்றுகளுக்குக்கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது.
நாங்கள் கடலிலிருந்து நாலாயிரத்து அறுநூறு அடி உயரமுள்ள மலைக்கு மேலே உள்ள சின் சுவீ கோயிலுக்குச் சென்றோம்.
கோவில் பத்து நிலைகளைக்கொண்டிருந்தது. கையிலிருந்த பைகளை வாங்கி வைத்துக்கொண்டு ஏற அனுமதித்தார்கள். ஆறு நிலைகளுக்குப்பிறகு, மேகங்களுக்கு மேலே நாங்கள் இருந்தோம். வெண்பஞ்சு கூட்டம் அலைந்தபடியிருந்தது. ஒவ்வொரு நிலையிலும் சுவற்றில் பதித்திருந்த சின்னச்சின்ன புத்தர் சிலைகளில், அவற்றைக்கொடுத்தவர்களின் பெயர்களும் இருந்தன. பரந்த வெளியைப்பார்த்தால் மனம் ஒன்றுவது இயல்பு. இங்கு பல தேசத்து மக்கள் கூடியிருந்தனர். ஆனால் அனைவரது பார்வையும் சட்டென்று காருண்யமாக இருந்தது. மனிதர்களின் மன அழுக்கை, மேகங்கள் திசுத்தாள் போல துடைத்து சுத்தம் செய்திருந்தன.
கீழே இறங்கி மறுபக்கம் பார்த்தால் குவான் யின்னின் பெரிய சிலை நம்மை கருணையோடு பார்த்தது. பக்கத்தில் புத்தரும் இருந்தார். குவான் யின் ஜப்பானியர்களும் சீனர்களும் வழிபடும் ஒரு போதிசத்வர் ஆவார். போதிசத்வர்கள் தாங்கள் ஞானம் பெற எல்லாத்தகுதிகளையும் பெற்றிருந்தாலும், இந்த உலகமக்கள் அனைவரும் ஞானம் பெறும்வரை காத்திருப்பேன் என்று சத்தியம் செய்தவர்கள். அவலோகதீஸ்வரர் என்ற வடமொழி பெயரில், நம்மூர், அஷ்ட தச புஜ துர்க்கை போல, பல கரங்களும் அவற்றில் பல பொருட்களுமாக குவான் யின்னின் சிலை இருந்தது.
கர்மபலன்களை விளக்கும் மற்றொரு முயற்சியையும் பார்த்தோம்.
மேற்கு நோக்கிய பயணம் (Journey to West) என்ற பலநூற்றாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட படைப்பில், ஒரு குரங்கு ஞானத்தை தேடி, சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்து, பௌத்த மதத்தின் தத்துவங்களை உள்வாங்கி, ஞானம் பெறும். அந்த காட்சிகளைச் சிற்பங்களாகக்காட்டி, அவற்றோடு, நரகத்துக்கான பத்து அறைகள் என்ற பெயரில் மரணத்துக்குப்பின்னர் என்ன நடக்கும் என்பதையும் சிற்ப வடிவங்களில் எல்லாரும் நன்மையைக்கடைப்பிடிக்க மறைமுகமாக வலியுறுத்தியிருந்தனர்.
சிங்கப்பூரில் ஆடி மாச அமாவாசை இந்துக்களுக்கு மட்டுமல்ல, சீனர்களுக்கும் இறப்போடும், நீத்தார் வழிபாடோடும் தொடர்புடைய ஒன்று தான். தெருவெங்கும் ஆரஞ்சு பழங்களும், பிஸ்கட் வகைகளும் தரையில் வைக்கப்பட்டு, மேல் உலகத்துக்கான பணத்தை, எரித்து தங்கள் முன்னோர்களைத் திருப்திபடுத்துவார்கள்.
க்சிதிகர்பா (Kstitigarbha) என்ற போதிசத்வர் நரகத்தின் வாசலை, ஜூலை மாசம் திறந்துவிடுவாராம். இயற்கையான வழியில் மரணமடையாதவர்கள் மீண்டும் பிறக்கத்தான் வேண்டுமாம். அவர்கள் எங்கு, யாராக பிறக்க வேண்டும் என்பதை இந்த பத்து வாசல்களையும் அந்த உயிர் கடந்தபின்னரே முடிவு தெரியும்.
முதல் வாசலைக்கடந்த பிறகு வரும் வாசல்கள் ஒவ்வொன்றிலும் தண்டனைகள் வேறு வகையானவை. எனக்கு அந்நியன் படம் நினைவில் வந்து போனது. கருட புராணமும் தான்.
நரகத்தின் இரண்டாவது அறையில், ஆண்களையோ பெண்களையோ கடத்தி அவர்களுக்குச் சொந்தமில்லாத சொத்துக்களை ஆக்கிரமித்தவர்கள் அல்லது மற்றவர்களுக்கு உடல்ரீதியாகத் தீங்கு செய்தவர்கள், நோயாளிகளை ஏமாற்றிய மருத்துவர்கள், விபச்சார தம்பதிகள் மற்றும் தங்கள் மகப்பேறு கடமைகளை முடிக்காமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் தண்டனை பெறுவார்கள்.
ஐந்தாவது அறையில் வன்புணர்வு மற்றும் கொலை செய்தவர்களுக்குத்தண்டனை வழங்கப்படுகிறது.
படத்தில் காட்டியுள்ளது போல கட்டி வைத்து எரிக்கிறார்கள்.
சிறு குழந்தைகளைக்கூட விட்டுவைக்காத இன்றைய அதிநவீன கைபேசி உலகில், பெருகி வரும் பாலியல் குற்றங்களுக்காக இவை போன்ற தண்டனைகளுக்காக ஏன் இம்மை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்று தோன்றியது?
இதே போன்றக் கருத்துகளை உள்ளடக்கி, சிங்கப்பூரில் டைகர் பாம் நிறுவனத்தின் ஹா பார் வில்லா என்ற பெயருடைய பூங்கா இருக்கிறது. எனக்கு இந்த பயணத்தில் ஏன் எதற்கு என்ற விசாரணைகளாக பல இருந்தாலும், அந்த தேடலில், சீன பௌத்தர்களின் நம்பிக்கையை புரிந்துக்கொண்ட மகிழ்ச்சியும் கலந்திருந்தது.
பதினைந்தாண்டுகளாக சிங்கப்பூரில் வசித்தாலும், முள்நாறிப்பழம் என்று தமிழில் பெயர்கொண்ட டுரியான் பழத்தை நான் அது வரை ருசித்ததில்லை.
நான்கு சுளைகள் சில நேரம் ஐம்பது வெள்ளிக்கு மேல் கூட விற்கப்படுகின்றன.
மலையேறி, நரகத்தில் என்ன நடக்கும் என்று பார்த்துவிட்டதால், “போனால் போகட்டும் போடாவென்று” டுரியான் சாப்பிட சம்மதித்தேன்.
பழம் கொழகொழ வென்று ஒரு தினுசான பதத்தில், இனிப்பாக இருந்தது. பழங்களின் அரசனாம். அதையும் ருசிபார்த்தாகிவிட்டது.
அதற்கு பிறகு நாங்கள் சென்றது, பல ஆட்சியாளர்களின் கையிலும் மாறி மாறி, கலாச்சாரங்கள் பலவற்றின் கலவையாக இருக்கும் மலாக்காவிற்கு.
பரமேஸ்வரா என்ற ஸ்ரீவிஜய இளவரசனால் கண்டடையப்பட்ட இந்த ஊர், பல நூற்றாண்டுகளாக தன் வரலாற்றில் பல வண்ணங்களைப்பூசி கொண்டிருக்கிறது. இதை, இஸ்லாமியர்கள் ஆண்டிருக்கிறார்கள். அப்போதைய பட்டுப்பாதை எனப்படும் சீன, இந்திய, பாரசீக வணிகத்திற்கு முக்கியத் துறைமுகமாக மலாக்கா இருந்திருக்கிறது. வாஸ்கோடகாமா இந்தியாவை கண்டடைத்தப்பின்னர், போர்ச்சுகிசியர்களால் பல யுத்தங்களுக்குப்பின்னர் கைப்பற்றப்பட்டது. ஒரு நூற்றாண்டுக்குப்பிறகு, டச்சு ஆளுகைக்கு பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆளானது. அதன் பிறகு, மலாக்கா சரிவைச் சந்திக்கத்தொடங்கியது. மற்ற துறைமுகங்கள் டச்சுக்காரர்களுக்கு முக்கியமாகிவிட்டன. அதன் பிறகு, பிரிட்டன் அரசும் ஆண்டிருக்கிறது.
ஜான்கர் தெரு என்பது பல கலாச்சாரங்களும், கலந்த கலவை மலாக்கா என்பதன் அடையாளம். பலதேசத்து உணவுகளும் இங்கு கிடைக்கும். பனை வெல்லம், டுரியான் பழத்தில் செய்த சாறு, சீன நூடுல்ஸ் வகைகள் என்று பலவும் இதில் அடக்கம். முழு தர்பூசணி பழத்தை வெட்டாமல் ஓட்டை போட்டு குடைந்து குடிக்கக்கொடுத்தனர். ஐரோப்பிய சுற்றுலா ஆர்வலர்களை இந்த இடம் வெகுவாக ஈர்க்கிறது.
மலாக்காவில் மலேசியாவின் பழமையான பொய்யாத விநாயக மூர்த்தி ஆலயம், அன்றைய சிட்டி சமூகத்தினரால் 1781 இல் கட்டப்பட்டு இன்றளவும் புகழோடு விளங்குகிறது.
நாங்கள் சென்ற மாலை நேரம், ஒரு வித சமநிலையை உண்டாக்கியிருந்தது. நல்லிணக்கத்தெரு என்று அழைக்கப்படும் இந்த தெருவில் ஒரு மசூதி, சீனர்களின் தாவோயிசக்கோயில், பிள்ளையார் கோயிலுக்கு அடுத்து இருந்தன.
இந்த கோயில், பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் உள்ள தமிழர் வீட்டுக்குள் வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. பழைய இரும்பு பெட்டி, ஆத்தங்குடி மரபு சார்ந்த தரை, தாழ்வாரம் போன்ற அமைப்பு, சுற்றி வர கிணறு என்று எல்லாம் நம்மை காலத்தில் பின்னோக்கி போக வைக்கின்றன.
கோவிட் காலம் முடிந்த பின் போகும் பயணம் என்பதால், உலக நன்மை தான் கற்பூர ஜோதியில் மிளிர்ந்த பொய்யாத விநாயகரிடம் எங்கள் முதல் வேண்டுதலாக இருந்தது.
அண்ணனைப்பார்த்துவிட்டோம், தம்பியையும் பார்ப்போமே என்று சன்னாசி மலை ஆண்டவர் கோயிலுக்குச் சென்றோம். கோயிலில் யாருமில்லை. நகரத்தார் எனப்படும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கட்டியக் கோயில்.
பிள்ளையாரைப்பார்த்துவிட்டு, சன்னாசிமலை ஆண்டவர் எனப்படும் முருகன் சந்நிதிக்கு வந்தால் அங்கே லிங்கம் இருந்தது.
லிங்கத்துக்கு முன்னால் பீடத்தின் மேல் மயில் நின்றிருந்தது.
இந்த கோயிலில் ஒரு மகானின் ஜீவ சமாதி இருக்கிறது. அங்கு வாழ்ந்து வந்த அவர் உலகத்தில் உடலோடு இருந்த நாட்களில் வழிப்பட்ட லிங்கத்தை அவர் சமாதியான பின்னர், நகரத்தார், அவரிடம் உத்தரவு வாங்கி, முருகனாக வழிபட்டு வருகின்றனர்.
அந்நாளில் போர்ச்சுகிசியர்கள் அதிகம் வாழ்ந்த பகுதி இது. இப்போதும் அவர்களின் வாரிசுகளில் சிலர் வாழ்ந்து வருகின்றனர்.
மாசி மகம் திருவிழாவில், சன்னாசிமலை ஆண்டவர், நாம் சுற்றுலா போவது போல அவர் அண்ணன் தும்பிக்கையான் பொய்யாத விநாயகரைப்போய் பார்த்துவிட்டு வருவாராம்.எங்களுக்கு ஒரு வித ஆன்ம பலத்தையும் தந்ததோடு, பல புதிய செய்திகளையும் இந்தப்பயணம் கற்றுத்தந்தது.