போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சி – 1

போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சி

ஒரு அரிசோனன்

  1.  பண்டையப் போர்விமானங்கள்

குறிப்பு:  விமானங்களின் பரிணாம வளர்ச்சி என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டு, அதைப்பற்றி எழுதாமல் போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி எழுதவேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுவது இயற்கையே.

பொதுவாக விமானங்கள் என்று எழுதினால் ரைட் சகோதரர்களிடமிருந்து தொடங்கி இன்றுவரை உள்ள பயணி விமானங்களைப் பற்றி எழுதி அதில் போர்விமானங்களை ஒரு சிறு பகுதியாகத்தான் ஆக்கவேண்டியிருக்கும்.

ஆனால், போர்விமானங்கள் என்றால், பழங்காலத்திலிருந்து தொடங்கி இன்றுவரை எழுதலாம்.  பாரதத்தின் பழம்பெருமையும் அதில் அடங்குவதால் அதையும் அறிந்துகொள்ளலாம்.  அதுவே, போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி எழுதவைக்கிறது.

ழங்காலத்தில் போர்விமானங்கள் இயங்கின என்று சொன்னால்,  விமானங்களின் செய்முறை இருந்தது என்றால், கட்டுக்கதை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.  ஏனெனில், அந்த அளவுக்கு நாம் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளோம். 

முதலில் இந்தியாவை எடுத்துக்கொள்வோம்.  ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்குமுன் கற்றளியாகச் செதுக்கப்பட்ட மாமல்லபுரம் இரதங்கள், தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரக் கற்றளிகள், எல்லோரா குடைவரக் கோவில்கள் இவையெல்லாம் தகுந்த கட்டுமான அறிவுடன்தானே வடிவமைத்துக் கட்டப்பட்டன?! 

ஏழம் பொது ஆண்டில் எழுதப்பட்ட வாக்கிய பஞ்சாங்கம் இன்றும் கிட்டத் துல்லியமாக கோள்களின் ஓட்டத்தைக் கணிக்கின்றதே!  சூரிய சித்தாந்தம் அப்பொழுதே இவ்வுலகம் சூரியனைச் சுற்றிவரும் நேரத்தை ஒரு விநாடிக்கும் நூற்றில் ஒருபங்கு துல்லியமாகக் குறிப்பிட்டதே!

அது எப்படி?

தென் அமெரிக்காவில் மாச்சுபிச்சு நகரம் (எந்திரன் படத்தில் பார்த்திருக்கலாம்) – நிலநடுக்கத்திற்கு பேர்போன இடத்தில் அமைக்கப்பட்டது எப்படி இன்னும் இருக்கிறது?  எகிப்திய பிரமிட்கள் — மெக்சிகோவின் கோவில் நகரங்கள் — அமெரிக்கப் பழங்குடியினரின் நகர்கள் — மொகஞ்சதாரோ, ஹாரப்பா போன்ற, சுரங்கமூலம் கழிவு நீரை நகருக்கு வெளியே செல்லும் வடிவமைத்துக் கட்டப்பட்ட பேரூர்கள் – இவற்றை அமைக்கும் அறிவு இன்று அகன்று — மேற்கு நாட்டவரின் அறிவுதான் சிறப்பு என்று கூறக் காரணம் என்ன?

எகிப்தின் மிகப்பெரிய பிரமிடுகள் எப்படிக் கட்டப்பட்டன? அந்த அளவு அறிவுள்ளவர் இன்று எப்படி உள்ளனர்?

வணிகத்தில் செழித்த கிரேக்கர், அவர்தம் கோவில்கள் ஏன் இடிபாடுகளாக உள்ளன?

யூதப்பேரரசனான டேவிட் கட்டிய கோவிலின் சுவர் மட்டுமே ஏன் வழிபாட்டுத் தலமாக விளங்கி நிற்கிறது?

மெக்சிகோவின் பெரும் கோவில் நகரங்களைக் கட்டிய, பெரும் நாள்காட்டியை வடிவமைத்தவர் எங்கு போயினர்?  அவரது அறிவுத் தொகுப்பு நூல்கள் எங்கே?

இந்தியாவின் நாளந்தா, எகிப்தின் அலெக்சாண்ட்ரியா, கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரம், துருக்கியின் கான்ஸ்டான்டினோபில், ஈராக்கின் பாக்தாத், இலங்கையின் யாழ்ப்பாணம், இவற்றின் அரிய நூலகங்கள், அஸ்டெக் குடியினரின் தொகுப்பு நூல்கள் இன்னும் பல அரிய ஓலைச் சுவடிகள், படையெடுப்பினால் தீயிட்டு அழித்து ஒழிக்கப்பட்டன.[1],[2],[3]

என்ன காரணம்?

தம்மவர் அல்லர், தமது சமயத்தவர் அல்லர், தமது பண்பாட்டுக்கு மாறுபட்டவர், தம் மொழி பேசாதவர், வேற்று நிறத்தவர் என்பதே அதற்குக் காரணம்.  அப்படிப்பட்டவர் தமது பழம் பெருமையை மறக்கவேண்டும், பண்பாட்டை மறந்து, இழக்க வேண்டும், என்ற எண்ணமே!  அதனால்தான் உலகம் நிறைய அறிவுச் செல்வங்களை இழந்து நிற்கிறது.

ஆகவே, பழங்காலத்தில் போர்விமானங்கள் இருந்திருக்கவே முடியாது என்ற திட்டவட்டமான எண்ணத்தைச் சிறிதுநேரம் ஒத்திவைத்துவிட்டு, இதுவரை நமக்கு என்ன சான்றுகள்/குறிப்பீடுகள் கிடைத்துள்ளன என்பதைப் பார்ப்போம். அதன்பின் இக்காலத்திற்கு வருவோம்.

முதலில் ‘விமான’ என்ற சொல் எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்று நோக்கினால், வேதங்களில் அச்சொல்லைக் காணலாம்.  விமானம் என்ற சொல் பல பொருள்களில் கையாளப்பட்டுள்ளது.

அவையாவன:[4]

  • அவமானப்படுத்தப்பட்டவர்
  • கடந்து செல்லக்கூடியது
  • ஊர்தி
  • தானாக இயங்கும் வானூர்தி
  • பேரரசனின் மாளிகை
  • கோவில் கருவறையின் மேற்கூரை
  • கப்பல், படகு,
  • அளக்கப்பட்டுத் தனியாக வைக்கப்பட்டது

ரிக் வேதம் பறக்கும் பறவைகளைப் பற்றிக் கூறுகிறது.  பழம் பாரத நூல்களில் இந்தப் பறக்கும் பொறிகளைப்(விமானம்) பற்றி அதிக அளவு காணலாம்.  இந்திரன், சூரியன், மற்றும் பல தெய்வங்கள் இரதங்களிலும், பறவைகளிலும் (திருமால் – கருடன்; முருகன்- மயில்), விலங்குகளின்மீதும் (இந்திரன் – ஐராவதம் என்ற வெள்ளை யானை), பறக்கும் குதிரைகளின் மீதும் விண்ணுக்கும் மண்ணுக்கும் பறந்ததைப் புராணங்கள் கூறுகின்றன.

பக்தி இலக்கியங்களை எடுத்துக் கொண்டால், திரிபுர அரக்கர்கள் பறக்கும் கோட்டையின் மூலம் பல தீயசெயல்களைச் செய்ததாகவும், தேவர்களின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்து, திரிபுர அரக்கர்களைச் சிவபெருமான் வதம் செய்தார் என்று பல இடங்களில் இயம்பப்படுகிறது.  திரிபுரத்தைச் சிவபெருமான் அழித்ததைச் சிறப்பித்துத் திருஞானசம்பந்தர் தேவாரத்தில் இருபது இடங்களிலும்,  திருநாவுக்கரசர் இருபத்தெட்டு முறையும், சுந்தரமூர்த்தி நாயனார் ஆறு தடவையும், மாணிக்கவாசகர் ஒரு முறையும் குறிப்பிடுகின்றனர்.[5]  ஆக, திரிபுரம் எனும் பறக்கும் கோட்டை ஒரு பெரிய போர் விமானமாக இருந்திருக்கலாம் என்று ஊகிக்க இடமுள்ளது.

புராணங்களிலும் பறக்கும் விமானங்களுக்கு எடுத்துக்காட்டுகள் உள்ளன.

திருப்பூவனத் தலபுராணம், துன்மனச் சருக்கத்தில், துன்மனன் மரணமடைந்த பின்னர் சிவதூதர் விமானத்தில் வந்து அவனை அந்த விமானத்திலேயே அழைத்துச் சென்றதைக் குறிப்பிடுகிறது.

சோதிவிடுகின்ற திரிசூலர் சிவதூதர்
மாதிரம் விளங்கு கதிர்மன்னு மணிதுன்னுங்
கோதில் பல் ‘விமானம்’ அவை கொண்டு அவண் விரைந்து
நாதன் அருளான் மகிழ்விண்ணினர்கண் மன்னோ.[6]

மேலும், திருப்பூவனத்தில் சிவபெருமானை வணங்கி வரம்பெற்ற பின்னர், சூரியன் விமானத்தில் ஏறிச் சென்றதைப் பூசனைச் சருக்கம் அத்தலபுராணத்தில் சொல்கிறது.

சூரியனாவது, கீழே இறங்கிவந்து சிவபெருமானை வணங்கி வரம்பெருவதாவது, விமானத்தில் ஏறிச் செல்வதாவது என்ற ஆராய்ச்சியை இங்கு எடுக்கப் போவதில்லை.  விமானம் என்று ஒன்று உண்டு, அதில் ஏறி வானத்தில் செல்லலாம் என்ற எண்ணம் புராணகாலத்தில் இருந்திருக்கிறது.

கம்பராமாயணத்தில் புஷ்பக விமானத்தைப் பற்றி முப்பத்தெட்டு இடங்களில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் கவிதைகளாக வடித்துள்ளார்.  அதில் ஒருவர் முதல் எண்ணற்றவர் ஏறிச் செல்லலாம் என்று படிக்கிறோம்.  ஏர்பஸ்-ஏ380 விமானத்தில் ஐநூறுக்கும் மேற்பட்டவர் பயணிக்கலாம் என்பது கண்கூடு.  ஆக இராமயண காலத்தில் அப்படிப்பட்ட ஒரு விமானம் இருக்க வாய்ப்பிருக்கிறதல்லவா! 

ஏர்பஸ் ஏ380 விமானத்தைப் பற்றி நூற்றைம்பது ஆண்டுகளுக்குமுன்னர் சொன்னால், எவராவது நம்புவார்களா?  கட்டுக்கதை என்று பட்டம் கட்டியிருப்பர்.

மகாபாரதம்கிருஷ்ண பரமாத்மா வுடன், துவாரகையைத் தாக்கவந்த மன்னன் சால்வனுடன் விமானத்தில் போர்புரிந்து வென்றதாகத் தெரிவிக்கிறது.  அக்காலத்திலும் போர்விமானம் பயன்பட்டதை அறியலாம்

வடமொழியான சம்ஸ்கிருதத்தில் விமான வடிவமைப்பைப் பற்றி எழுதப்பட்ட ‘பாரத்வாஜ வைமானிக சாஸ்திரம்’ என்ற ஒரு நூலே உள்ளது.  பொது ஆண்டு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட  அந்த நூலில் ருக்ம, ஷகுன, சுந்தர, திரிபுர விமானங்களின் வடிவமைப்பு விவரிக்கப்பட்டுள்ளது.[7],[8] அவற்றில் சில ஏர்பஸ் ஏ380, போயிங் 747 விமானங்களைப் போல அடுக்குள்ள விமானங்கள். அவற்றின் வடிவமைப்பும், அமரிக்கா அனுப்பி நிலவில் இறங்கிய விண்ணூர்தியின் வடிவமைப்பும் ருக்ம விமானத்தைப் போலிருப்பதைக் காணலாம்.

இதை எப்படி நம்புவது என்று குழம்பினால், மேலும் மேலும் சான்றுகள் வெளிச்சத்துக்கு வருகின்றன்.

9-11 என்றால் நினைவுக்கு வருவது, நியூயார்க்கில் இரட்டைக் கோபுர அடுக்குக் கட்டிடகளை பயணி விமானங்கள் மூலம் தகர்த்ததுதான்.[9]  அமெரிக்காவுக்கு எதிராகத தாலிபான் நடத்திய விமானப்போர் அது.  பயணி விமானத்தையும் போர்ப்பயிற்சி சிறிதுமில்லாத, வெறிபிடித்த தாலிபான் தற்கொலைப் படையினரால் போர்விமானமாகக் கையாள இயலும் என்று காட்டியது.

அந்தத் தாலிபானின் கொட்டத்தை ஒடுக்க, அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானத்தை ஆக்கிரமித்தது நாம் அனைவரும் அறிந்ததே. 

அப்பொழுது அமெரிக்க இராணுவத்தினர் ஆஃப்கானிஸ்தானத்தில் இருந்தபோது ஒரு குகையில் கண்ட, ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான, கல்லில் பொறிக்கப்பட்ட ஓவியங்கள் பறக்கும் விமானங்களையும், அதில் மனிதர் அமர்ந்திருப்பதையும், சில கணக்கீடுகளையும் கண்டனர்.[10]

இந்தியர்களுக்குக் கற்பனை மிகுதி என்று சொல்வது மேற்கு நாடுகள் மட்டுமல்லாது, போலி உலகியல் (pseudo-secular) சார்ந்த இந்தியர்களின் கூற்று.  இந்தியாவில் ஏற்பட்ட எந்தவிதமான விஞ்ஞான முன்னேற்றமும் மேற்கு நாடுகளால்தான் என்பது அவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

அது சரியல்ல பழங்காலத்தில் இந்தியாவுடன் நடுவன் கிழக்கு நாடுகளில், ஆப்பிரிக்கா, வட, தென் அமெரிக்கக் கண்டங்களிலும் விமானங்கள் இருந்திருக்கக் கூடும் என்ற சான்றுகளும் கிடைத்துள்ளன.

நடுவன் கிழக்கு நாட்டில் இருந்த பாபிலோன் நகரம் பண்பாட்டின் தொட்டில் என்று படித்திருக்கிறோம்.  அதன் சட்ட நூலான ஹல்கதாவில், பறப்பது பற்றிய ஆரம்பகால பாதுகாக்கப்பட்ட பதிவுகளில் ஒன்று உள்ளது, “பறக்கும் இயந்திரத்தை இயக்குவது ஒரு பெரிய சலுகையாகும். பறக்கும் அறிவு மிகவும் பழமையானது, உயிர்களைக் காப்பாற்ற பழங்கால கடவுள்கள் அளித்த பரிசு,” என்று குறிப்பிடுகிறது.  வரலாற்றுக்கு முந்தைய பயணத்தை விவரிக்கும் பாபிலோனிய (ட்)டானாவின் காவியம் (Epic of Etana) பொது ஆண்டு 3,000க்கு முன்பிலிருந்து 2400 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த கியூனி வடிவத்திலுள்ள (cuneiform),  ஒரு துண்டு துண்டான பதிவு பாதுகாக்கப்பட்டுள்ளது.[11]

பழங்காலத்தில் மிகப்பெரிய பிரமிட்களைக் கட்டி, கணக்கீடு முறையிலும், கட்டுமானக் கலையிலும்,  உலகத்தை வியக்கவைத்த நாடு, எகிப்து.  இந்தியாவுக்கு மிகவும் நட்புநாடு.  அங்கும் விமானங்கள் இருந்திருக்கலாம் என்பதற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன.

எகிப்தில் சக்வாரா என்ற இடத்திலுள்ள சமாதியில் இக்கால விமானங்கள் போலுள்ள சில பதுமைகள் கிடைத்துள்ளன.  இவை கைய்ரோவில் பழங்கால அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவை பொது ஆண்டுக்கு 200 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை என்று வல்லுனர் கூறுகின்றனர்.

மேலும், இந்தப் பதுமைகளின் அளவை மதிப்பிட்டபோது, இவற்றின் அளவீடு இக்கால விமானத்தின் வடிவமைப்போடு மிகவும் துல்லியமாக ஒத்திருக்கின்றது.  இப்படிப்பட்ட பதினான்கு பதுமைகள் மற்ற எகிப்திய சமாதிகளிலும் கிடைத்துள்ளன.[12] 

அபிதாஸ் என்னுமிடத்திலிருக்கும் முதலாம் ஸெட்டிக்கான கோவிலில் உள்ள புடைப்புச் சிற்பங்களிலும் விமானங்களின் படம் காணப்படுகிறது.

அமெரிக்கக் கண்டங்கள் பசிபிக், அட்லான்டிக் பெருங்கடல்களால் பிரிக்கப்பட்டுள்ளன.  அப்படி இருப்பினும், தென் அமெரிக்காவில், கொலம்பியா நாட்டின் பழமையான இங்க்கா (Inca) பண்பாட்டுக்கும் பழமையான பண்பாட்டு மனிதரால் செய்யப்பட்ட, ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான, இரண்டு அங்குலம் அளவுள்ள தங்கப் பொருள்கள், இக்கால விமானங்களை ஒத்துள்ளன.

வட அமெரிக்காவின் மெக்சிகோ நாட்டின் தற்போது அழிந்துபோன, பழமையான மாயா பண்பாட்டினரால் கட்டப்பட்ட பல கோவில்கள் உள்ளன.  அவற்றில் இருக்கும் சிற்பங்கள் இக்கால விண்வெளி விமானங்களைப் போல இருக்கின்றன.[13]  அவற்றுள் இருக்கும் மனிதர்கள் இக்கால விண்வெளி வீரர்களைபோல உடுப்புகளும் அணிந்துள்ளனர்.

இந்தச் சான்றுகள்,, பழங்கால போர்விமானங்களின் வடிவமைப்புகள், போர்விமானங்கள் அக்காலத்திலும் இருந்திருக்கலாமோ என்ற நியாயமான ஐயத்தை நம் மனதில் தோற்றுவிக்கிறது.   அவை எதைக் குறிக்கின்றன, அவை உண்மையா, பொய்யா, கற்பனையா, காரணமா, மாற்றமடைந்த பழமையா என்பதை வல்லுனர்களின் ஆராய்ச்சிக்கு விட்டுவிடலாம்.

விமானங்களின் பரிமாண வளர்ச்சிக்கு இது ஒரு முன்னுரையாகத்தான், அறிமுகமாகத்தான் இக்கட்டுரை அமைந்துள்ளது.  இக்காலப் போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சியை அடுத்து வரும் கட்டுரைகள் காட்டுவதாக அமையும்.

(தொடரும்)


[1]      Top 10 Knowledge Centers and Libraries That Were Tragically Destroyed,  Eric Yosomono, TOPTENZ, November 6, 2013, Updated:July 9, 2019, https://www.toptenz.net/top-10-knowledge-centers-libraries-horribly-destroyed.php

[2]     10 Lost Libraries And The Mysteries Of Their Contents  by Jane Alexander, ListVerse, May 3, 2018, https://listverse.com/2018/05/03/10-lost-libraries-and-the-mysteries-of-their-contents/

[3]     6 Famous Libraries That Were Tragically Destroyed  by Julius Lobo, Book Riot, Dec 21, 2020, https://bookriot.com/famous-libraries-that-were-tragically-destroyed/

[4]     விமானம் என்ற வடமொழிச் சொல்லுக்கு விளக்கம், மானியர் வில்லியம்ஸ் வடமொழி-ஆங்கில அகராதி,  https://www.sanskrit-lexicon.uni-koeln.de/scans/MWScan/2020/web/webtc2/index.php 

[5]     திரிபுரங்கள், திரிபுரத்தவர்கள், திரிபுரம், திருஞானசம்பர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணைக்கவாசர் மூவர் தேவாரம் திருவாசகம், தமிழ் இலக்கியத் தொடரடைவு, முனைவர் ப. பாண்டியராஜா, http://tamilconcordance.in/TVRM-SAMBconc-1-ti1.html#%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

[6]     திருப்பூவனம் திருவிளையாடல் புராணம், முனைவர் நா. ரா. கி. காளைராஜன், https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2020/02/flights-on-puranams.html

[7]     Vimana: The Ancient Indian Aerospace Craft – Time for Indigenisation, Air Power Asia, https://airpowerasia.com/2020/08/27/vimana-the-ancient-indian-aerospace-craft-time-for-indigenisation/

[8]     These Hindu Texts Describe Flying Vimanas And Details Of An Ancient Nuclear War, By Gaia Staff, October 8, 2021, https://www.gaia.com/article/do-hindu-texts-describing-the-flying-vimanas-also-detail-a-nuclear-war

[9]     9/11 Timeline, by History.com Editors, Updated: Sep 7, 2022, Original: Jun 21, 2011, https://www.history.com/topics/21st-century/9-11-timeline

[10]   5000 year old Flying Machine image found by American Soldiers in Afghan Cave.published by Anil Chopra, retired Air Marshal from the Indian Air Force,  Pinterest

[11]    Myths of Flight,  Myths of Flight, Ancient Wisdom, www.ancident-wisdpm.com/flight.htm  

[12]    மேற்படி தகவல்.

[13]   The Palenque Astronaut: Evidence of Ancient Alien Visitation?  by Robert Bitto, Ancient Mysteriers, Mexico Unexplained, Feb. 8, 2016, https://mexicounexplained.com/the-palenque-astronaut-evidence-of-ancient-alien-visitation/

Series Navigation<< இன்றையப் போர்விமானங்களின் தோற்றம்நவீனப் போர்விமானங்கள் >>

3 Replies to “போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சி – 1”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.