தெய்வநல்லூர் கதைகள் – 1

This entry is part 1 of 3 in the series தெய்வநல்லூர் கதைகள்

 இந்த சம்பவங்கள் நடந்து முப்பத்தைந்து ஆண்டுகளை நெருங்குவதை நினைத்தால் வயதை எண்ணி பதட்டமாகிறது. அதற்காக வரலாற்றை மாற்றக் கூடாதில்லையா ? ஆகவே …

நெல்லையின் உள்வாங்கிய கிராமமொன்றில் (தெய்வநல்லூர் என்று வைத்துக் கொள்வோம்) இருக்கும்  ஆரம்பப் பள்ளி ஒன்றில் நடக்கும் இந்த சம்பவங்களிலிருந்து நாம் தெய்வநல்லூர் ஊருக்குள் நுழைந்து மெளன சாட்சியாய் இக்கதைகளை கேட்டும் பார்த்தும் வரலாம்.  1 லிருந்து 5 ஆம் வகுப்பு வரை தலா ஒரு பிரிவு மட்டுமே உள்ள துவக்கப்பள்ளி. இருநூறு மாணவர்கள் இருந்திருக்கலாம். இங்குதான் நான் படித்தேன். ஆனால் அங்குதான் நம் சம்பவங்களின் நாயகன் பரணியும் படித்தார். ஊரில் பெரிய வசதியுடைய செல்வாக்கான  நிலக்கிழார் வீட்டு பிள்ளை. செட்டியாரம்மா வீடு என்றால் தெரியாதோர் இல்லை. எண்பதுகளிலேயே இரண்டு கார்கள் வைத்திருந்த குடும்பம். அவரும் நானும் ஒன்றாகப் படித்தோம் என்றால் சொல்குற்றம் அல்ல பொருள்குற்றம். 

பரணி அவர்கள் பள்ளி என்பதை விளையாட்டு மைதானமென கருதுபவர். விசித்திரமான விளையாட்டுகளை நிதமும் அரங்கேற்றி மகிழ்வார். பின்னாளில் கிளாடியேட்டர் படம் எனக்கு எந்த வியப்பையும் தராமல் போனதற்கு காரணம் தரணி புகழ் பரணி தான். வகுப்பில் இருவரைத் தேர்வு செய்வார். இருவரும் சண்டை போட வேண்டும். விழும் அடிகளை பரணி கணக்கெடுப்பார். யார் அதிக அடிகள் கொடுக்கிறாரோ அவரே வெற்றியாளர். அவருக்கு பரணியால் பச்சைக் காகிதம் சுற்றிய பத்து பைசா ந்யூட்றின் சாக்லேட்டின் பாதி மனமுவந்து அளிக்கப்படும். 

சத்துணவு அரிசி மூட்டையிலிருந்து அரிசி திருடி பரணியிடம் சேர்ப்பிக்க வேண்டும். அதை அவர் பள்ளி வாயிலில் உள்ள தாத்தாவிடம் கொடுத்து கல்கோனா, சூடம் மிட்டாய், பல்லி மிட்டாய் போன்றவற்றை பண்ட பரிமாற்றம் செய்து கொள்வார். அதில் திருடி வந்த புல்லுக்கும் ஆங்காங்கே பொசிய வாய்ப்புண்டு.

அவரது வீட்டுப்பாட நோட்டை முன்வரிசை மாணவர்கள் முதல்நாள் மாலையில் எடுத்துச் சென்று பாடங்களை எழுதி வந்து மறுநாள் காலையில் அவரிடம் சேர்ப்பிக்க வேண்டும். இதில் பரணியின் கருணையைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். எல்லா நாளும் ஒரே ஆள் எழுதி வர வேண்டியதில்லை. எனக்கு கணக்கு வராததால் தமிழ், ஆங்கிலம் ஆகிய செம்மொழித் துறைகளை  எனக்கு ஒதுக்கி கணக்கின் அல்லல் போக்கி நல்லவை அருளினார் அன்னார்.  

இவை தவிர காலையில் இவருக்கு ஆசிரியர்களுக்கு சொல்வது போலவே வணக்கம் சொல்லாதவர்களை பென்சிலால் குத்துதல், அவர்களது பென்சில்களின் முனையை உடைத்து வைத்தல், சத்துணவுத் தட்டை எடுத்து ஒளித்து வைத்தல், அவரிடமும் ஆசிரியர்களிடமும் மட்டுமே இருக்கும் மைப்பேனாவால் சட்டையில் புத்தோற்றங்களைக் கொணர்தல் ஆகியனவும் உண்டு. பெண்களுக்கு பரணியாரின் அணுகுமுறையே வேறு வகை. பூ வைத்துக்கொண்டு வரும் பெண்கள் அவருக்கு நிகுதியாக நெல்லிக்காய் ( உப்புடன்), பனங்கிழங்கு, பத்து பல்லி மிட்டாய் ( குறைவாக இருப்பின்  ஒருநாளைக்கு கூடுதலாக 3  என்ற கணக்கில் பிற நாட்களில் வசூலித்துக் கொள்ளப்படும் சலுகையும் அடக்கம்), தமக்கு பிறந்த நாள் எனில் அவர் கால் தொட்டு ஆசி வாங்கிகொள்ளுதல் ( பையன்களுக்கு வேண்டாம்ல.. பொட்டப் புள்ளேள் தான் ஆம்பளைங்க கால்ல விழனும் – கருணை முத்துக்களில் ஒன்று என அறிக) . எந்தப் பெண் எந்தப் பையனிடம் பேசலாம் அல்லது கூடாது எனும் அனுமதி பரணியார் கைவசம் என்பதால் இருதரப்பாரும் இதில் அமைதி காத்தனர் என்பதையும் சொல்லியாக வேண்டும். 

இவை அனைத்தையும் விட ஒரு ட்ரோன் ஏவுகணை அய்யா வசம் உண்டு. தன் வழமையான திருவிளையாடல்கள் அவருக்கு அலுக்கும் சமயத்திலோ, அல்லது தண்டனையின் அளவைக் கூட்டும் பொருட்டோ பரணியார் இந்த உத்தியைக் கையிலெடுப்பார். பள்ளியின் புரவலப் பெருந்தகையோர் பரணியாரின் குடும்பம் என்பதால் ஆசிரியர்கள் இவரை ஒரு கல்வி அதிகாரியின் பாங்கில்தான் நடத்துவர். அதில் கார்த்திகேயக்ரிஷ்ணன் ( என்ன விசித்திரப் பெயர்) எனப்படும் ஆசிரியர் செட்டியாரம்மா வீட்டில் கணக்கெழுதும் (நெல் கொள்முதலில் வியாபாரிகளுடன் மல்லுக்கு நிற்பது) தலையாயப் பணியோடு சேர்த்து கூடுதல் பொறுப்பாக ஆசிரியப் பணியையும் நடாத்தி வந்தார். அவர்தான் இவரது மாதண்ட நாயகன். பரணி போய் பெயர் மட்டும் சொன்னால் போதும்; இவர் பாய்ந்து அடி நொறுக்கி விடுவது மட்டுமல்லாமல் தண்டனைகளும் தருவார். சமயங்களில் பரணியாரே போய் பாவம் சார், விட்ருங்க என பரிந்துரைக்கும் அளவுக்கு தண்டனைகளில் தொழில் நுட்ப வல்லுநர் கா கி சார்.

இந்த பின்னணியில்தான் பரணிக்கு எதிரான புரட்சி சு.கணேசன் ( கணேசன் என்ற பெயரில் 7 பேர்கள் இருப்பதால் ப, ம, போன்ற அகர மெய்யெழுத்துகளே கணேசன்களை பிரித்தடுக்கப் பயன்பட்டது) தலைமையில் வெடித்தது.  சு.கணேசன் ( சுப்பையா மகன் கணேசன் என்றறிக; நாங்கள் சுனா கானா என்று சொல்வோமாக்கும்) புரட்சி வீரனானது தனிக்கதை. 

சுனா கானா பள்ளிக்கு வருவதில் ஆர்வமுள்ள ஆள். ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது இரு முறைகள் அமர்ந்து சிறப்பித்து ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனைக் கூர்தீட்டும் உரைகல்லென அமைந்தருளும் அய்யனார். பரணி இவரை ஒருமுறை கிளாடியேட்டராகத் தேர்வு செய்தார். அதிலிருந்து இவரே தினமும் சாக்லேட் தின்ன ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் இவருக்கு இணையாக யாரை பரணி தேர்வு செய்தாலும் அவர்கள் மணமுடித்த முப்பதாம் நாளில் மணவாளனை இழந்த மங்கை நல்லாளின் நிலையை ஒத்து  பெருங்குரலெடுத்துக் கதறி விதிமேல் பழி சொல்லி பிலாக்காணம் பாட ஆரம்பித்தனர். தோற்பவர்கள் அல்ல இணையாக ஆட முன்வருவோர் கூட இல்லாத முழு வெற்றி சுனா கானாவுக்கு. இங்குதான் ஊழ்வினை உருத்து வந்தது. 

பரணி வந்ததும் சுனா கானா பரணியிடம் சென்று “போட்டியாளர் இல்லாததால் எனக்கே பாதி , உன் பாதி வேண்டுமெனில் என்னை ஜெயித்து எடுத்துக் கொள்”–(இந்த வசன சுடர் விளக்கின் தூண்டுகோல் அடியேன்தான்)  என உரைத்து அவர் கையிலுள்ள சாக்லேட்டை முழுமையாகப் பறித்து உண்ண ஆரம்பித்த நாளில்தான் புரட்சி விதை ஊன்றப்பட்டது. என்னைப் போலவே பிற அனைவரும் மௌனமாக இருந்து சுனா கானா வுக்கு ஆதரவு தெரிவித்தோம். அவருடன் பேச பரணி தடை விதித்ததோடு மட்டுமன்றி பிற கணேசன்களும் தம் பெயர்களை மாற்றிக்கொள்ள ஆணையிட்டார். அவர்களும் எம் ஜி ஆர், ரஜினி, கமல், விஜயகாந்த் என மாற்றிக்கொண்டனர். ரஜினி என்ற பெயருக்கு 3 கணேசன்கள் கடும்போட்டியிட்டதால் தன்வீட்டருகில் உள்ள பொந்திலிருந்து கிளிக்குஞ்சு கொணர்ந்து தருவதாகச் சொன்ன ப.கணேசனுக்கே ரஜினி பெயர் பரணியால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

உள்ளார்ந்த ஆதரவு மாணவர்களிடையே சுனா கானா வுக்கு இருப்பதால் தம் குழுவினர் தவிர பிறர் வாயசைவு, கண்ணசைவு மூலம் அவருடன் தொடர்பில் இருப்பதை பரணி உய்த்தறிந்தார். ஆகவே பிற மாணவர்களை ஒற்றறிய ரஜினி, கமல், எம் ஜி ஆர் ஆகியோர் அவரால் உளவாளிகளாக நியமிக்கப்பட்டனர். சிவாஜி என பரணியால்  பெயர் சூட்டப்பட்டதில் மனக்குறை கொண்டிருந்த சா.கணேசனால் (ரஜினி பெயருக்கு மோதி வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட) எங்களுக்கு இத்தகவல் சொல்லப்பட்டது. கவுண்டர் இன்டலிஜென்ஸ் என்பதை அப்போதே கற்றுக்கொண்டோம்.  நான் வகுப்பு நேரங்களில் பரணிக்கு ஆதரவாகவும், பள்ளி விட்டதும் உளவாளிகள் பார்வை மறைவில் ( எங்கள் வீட்டு பின்புறத் தோட்டத்தில்) சுனா கானா ஆதரவாகவும் நடுநிலை வகித்துக் கொண்டிருந்தேன். அப்படியான ஒரு கூட்டத்தில்தான் பரணியின் அநியாயங்களுக்கு முடிவு கட்டும் சபதம் எடுக்கப்பட்டது. ஆனால் கவனமாக அந்த சபதத்தை நிறைவேற்றும் பொறுப்பு மட்டும் சுனா கானா வுக்கு கொடுக்கப்பட்டது. 

முதற்கட்டமாக பரணி சொல்லும் பணிகளைத் தடுக்கும் பணியில் சுனா கானா இறங்கினார். பிறந்த நாள் அன்று பள்ளிக்கு வராத ஜெயலட்சுமி மறுநாள் பரணியிடம் “அதான் பொறந்த நாள் நேத்தே முடிஞ்சிருச்சே , இன்னைக்கு கிடையாதே” என தர்க்கபூர்வமாக , விஞ்ஞான ரீதியில் பேசி நாசூக்காக காலில் விழ மறுத்து ஒதுங்கியதில் பரணிக்கு உள்ளே மணியடித்தது. உளவுத்துறை முடுக்கி விடப்பட்டது. உளவுத்துறையிடம் பாதி ந்யூட்ரின் சாக்லேட்க்கு விலை போன இசக்கியம்மாளால் விஷயம் கசிந்தது.  “எந்த புள்ளைகளாவது அவன் கால்ல விழுந்தீங்கன்னு தெரிஞ்சது பூ வைக்க சடை இருக்காது “ என சுனா கானா விவேகானந்தர் மாதிரி கைகளைக் கட்டிக்கொண்டு பெண்கள் வரிசைக்கு மேலிருக்கும் நேரு படத்தை முறைத்துக்கொண்டே சொன்ன தகவல் பரணிக்கு போய் சேர்ந்தது.   

பரணி தன் ட்ரோன் அட்டாக்கை கையில் எடுத்தார். கா கி சாரிடம் போய் சுனா கானா தன்னை அடித்து விட்டதாக கண்களைக் கசக்கினார். கா கி சாருக்கு ஏற்கனவே கணக்கில் சிறு குழப்பம். வரவு செலவு கணக்கை சுனா கானா விடம் நேர் செய்து விட்டார். பிரம்புகள் இரண்டு உடைந்தன. அஞ்சா நெஞ்சனாக அறியப்பட்ட சுனா கானா அடி தாளாமல் தரையில் விழுந்து உருண்டு புரள்வதைக் காண ஜெயலட்சுமிக்குதான் முதலில் அழுகை வந்தது. பின்னர் இசக்கியம்மாள் ஆரம்பித்தார். அதன்பின் பெண்கள் குழுவே கேவி அழ சுனா கானா ரணகளத்திலும் கிளுகிளுப்பானார். 

கலிங்கத்துப்பரணியை மிஞ்சும் அளவுக்கு ஓல அழுகைகள் கூடியதால் கா கி சார் அடிமுறையிலிருந்து தண்டனைகளுக்கு மாறினார். முதல் தண்டனை ஒரு மணிநேரம். சத்துணவு அறையிலிருந்து ஒரு கை கல்லுப்பு எடுத்து வரப்பட்டு வகுப்பின் வடகிழக்கு மூலையில் இருசிறு குவியல்களாக ஒரு சாண் இடைவெளியில் பரப்பப்பட்டது. அந்த உப்புக் குவியல்கள் மேல் முழங்கால் வருமாறு மண்டியிடும்படி சுனா கானா பணிக்கப்பட்டார். அவர் கைகளை ஊன்றி முழங்காலை உப்பிலிருந்து உயர்த்தினாலோ ,துடைத்தாலோ பின்புறம் நின்றுகொண்டு உள்ளங்காலில் பிரம்பால் ஒரு அடி வைக்கும் உயரதிகாரம் பரணிக்கே வழங்கப்பட்டது.{ ஒரு மணி நேரத்தில் ஆறுமுறைகள் மட்டுமே அடிவாங்கினார் சுனா கானா}.

அடுத்த முக்கால்மணிநேரம் வேறொரு தண்டனை. நின்றவாக்கில் இருகைகளையும் சரியாக தோளுக்கு நேராக மடங்காமல் நீட்டி வைக்க வேண்டும். சத்துணவு கூடத்திலிருந்து ஒரு விறகுக் கட்டை எடுத்துவரப்பட்டு கைகளின் மேல் குறுக்காக வைக்கப்படும். இப்போது கையைத் தாழ்த்துவதோ, உயர்த்துவதோ கூடாது. அப்படி கைகளை அசைத்தால் அல்லது விறகு கீழே விழுந்தால் தலைவனோடு கூடி வந்த தலைவியின் கன்னங்களில் ஓடும் செவ்வரிகளை ஒத்த வரிகளை பிரம்பின் துணை கொண்டு சுனா கானாவின் பின்புற அமருமிடத்தில் பொறிக்க பரணிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. 12 முறைகள் என்பதை சுனா கானா வே பிறகு சொன்னார், எங்களிடம் காட்டாததால் நாங்கள் இன்னும் அந்த எண்ணிக்கையை ஐயப்பட்டியலில்தான்  வைத்திருக்கிறோம்.

அடுத்த தண்டனை சுவரை ஒட்டி அமர்ந்து இரு கால்களையும் நீட்டி விரிக்க வேண்டும். இரு பாதங்களுக்கும் நடுவே குதிகால் உள்கரண்டைகளைத்  தொட்டும், தொடாதவாறுமாக விறகுக் கட்டை ஒன்று குறுக்கில் வைக்கப்படும். கால்களைச் சுருக்கினாலோ, விறகுக்கட்டையை கால் பாதங்கள் தொட்டாலோ முன்தொடையில் பிரம்பினால் முத்திரை பதிக்கும் வாய்ப்பும் பரணிக்கே தரப்பட்டதில் வியப்பில்லை. மொத்தம் வாங்கிய பதினாறு முத்திரைகளில் மூன்று முன்தொடையில் அல்லாது முழங்காலுக்கு கீழே விதிமுறைகளை மீறி பதிக்கப்பட்டதால் பதிமூன்று என்றே கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்ற சுனா கானாவின் வாதத்தை நாங்கள் பிறகு ஏற்றுக்கொண்டோம்.   

ஏன் இவ்வளவு தண்டனைகள் என உங்களுக்குக் கேள்விகள் எழலாம். நான் மிகைப்படுத்துவதாகவும் நீங்கள் எண்ணலாம். ஆனால் இதற்குக் காரணம் சுனா கானா தான். ஒவ்வொரு தண்டனை முடிவிலும் பரணியிடம் மன்னிப்பு கேட்குமாறு கா கி சார் பேரம் பேசுவார். சுனா கானா பதில் பேசாமல் கைகளைக் குறுக்கே கட்டிக்கொண்டு “ப்” என்ற உச்சரிப்பில் உதடுகளை உறையச் செய்து காந்தித் தாத்தா படத்தை முறைக்க ஆரம்பித்து விடுவார். மும்முறை பேரக் கேட்பு சாரால் கேட்கப்படும். தன்னிலை மாறாத சுனா கானாவுக்கு அடுத்த தண்டனை தயாராகும். இவ்வாறாக பேரம் பேசத் தெரியாத சுனா கானா தனக்கான தண்டனைகளை அதிகரித்துக்கொண்டது அவர் தவறே என எம்ஜிஆர் மற்றும் ரஜினியால் சொல்லப்பட்டது. கமல் நடுநிலையாக எதுவும் சொல்லவில்லை. ஆனால் முகத்தை சுளித்து உதடுகளைக் கோணி தலையை வெடுக்கெனத் திருப்பிக் கொண்டதன் வழியே சிவாஜி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். 

அன்றைய நாள் முடிவுக்கு வந்தது. மன்னிப்பு கேட்காவிட்டால் மறுநாளும் தண்டனைகள் தொடரும் என்றார் கா கி சார். வீட்டுக்குப் போவது போல் போய் பதுங்கி இருந்து  விட்டு பரணி போனதும் நானும், சிவாஜியும் பள்ளிக்கே திரும்பி ஓடினோம். கால்களை ஒட்டி வைத்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்த சுனா கானா வுக்கு பக்கத்திலிருந்து நெல்லிக்காயை எடுத்து நீட்டிக் கொண்டிருந்த ஜெயலட்சுமியைப் பார்க்க எனக்கு வியப்பாகவில்லை. ஜெ. ல  போனதும் சுனா கானா எழுந்தார். கால்கள் நடுங்கின. கண்கள் சிவந்து உடலே மினுமினுவென இருந்தது. அடியெடுத்து வைக்க முடியவில்லை. நான் அவர் பைக்கட்டை எடுத்துக்கொள்ள சிவாஜி சுனா பானா தோளைப் பிடித்துக்கொள்ள அன்னாரை வீடு கொண்டு சேர்த்து திண்ணையில் உட்காரவைத்துவிட்டு ஓடி வந்து விட்டோம்.

மறுநாள் சம்பவங்கள் நிறைந்த நாளாக இருக்கப்போகும் பரபரப்பில் நாங்கள் பள்ளிக்குப் போனோம். ஆனால் சுனா கானா பள்ளிக்கு வரவில்லை. பரணியிடம் தோல்வி அடைந்து பள்ளியை விட்டே சுனா கானா ஓடிவிட்டதாக பரணிக்கு உளவாளிகள் குழுவால் பாடப்பட்ட பரணி, தெய்வநல்லூர் வரலாற்றில் மூன்று நாள் உண்மை என்றே குறிப்பிடப்படுகிறது. நான்காம் நாள் காலை சுனா கானா வின் அப்பா அவனுடன் பள்ளிக்கு வருகை புரிந்தார். உள்ளூர் ஆடுபுலி ஆட்டக் களங்கள் மட்டுமன்றி மாவட்டத்தின் பல களங்களிலும் ஆடுபுலி ஆட்ட நிபுணரான அவர் காவல்துறையுடனும் ஆடுபுலி ஆட்டத்தை அவ்வப்போது ஆடிவரும் தொழில்முறையாளர். பல சுப்பையாக்கள் உண்டென்பதால் காவல்துறை பதிவேட்டில் புலிச்சுப்பையா என்றே பட்டமளிக்கப்பட்டவர். 

பள்ளிக்குள் நுழைந்த வேகத்தில் கா கி சாருக்கு பெருங்குரலில் தொடர் முகமன்களை முழக்கியவாறே வந்தார் புலியார். “உம்ம குண்டில மொளகாப் பொடியைத் தேய்க்க “ எனும் முகமன் மட்டுமே அவைப்பண்பாடு கருதி ஈண்டு பகிரத்தக்கது. ஆசிரியர்கள் கூடினர். தெருவோர் கூடினர். புலியார் சமூகத்தின் நாட்டாமையார் கூடினர். பரணியின் தந்தையும் வந்து சேர்ந்தார். 

விவகாரங்கள் இருதரப்பிலும் பேசப்பட்டன. சுனா கானா கைகள்,கால்கள் நெறிக்கட்டி காய்ச்சலாக இருந்தபோதும் பரணியின் திருவிளையாடல்களை படலங்கள் எதையும் மறக்காமல், மாற்றாமல் அரங்கேற்றினார். கா கி சாரின் ஓரவஞ்சனைத்தனம் “பூனைபிசுக்கித்தனம்” எனவும் புலியாரால் சிறப்பித்துக் கூறப்பட்டது. 

பதிலுக்கு சுனா கானாவின் மேல் பெண்களின் கூந்தலை அரிந்து விடுவேன் என மிரட்டிய ஈவ் டீசிங் வழக்கும், வகுப்பின் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த வழக்கும், பிற மாணவர்களை சாக்லெட்டுக்காக கொலை செய்யும் நோக்கில் தாக்கிய வழக்குகளும் கா கி சார் தரப்பிலிருந்து வைக்கப்பட்டன. இவை நடக்கையில் பரணி அவர் அப்பாவின் காரில் அமர்ந்து கொண்டு ஃப்ளாஸ்கிலிருந்த காபியை ஊற்றிக் குடித்துக்கொண்டிருந்தார்.

நீண்ட வாதங்களுக்குப் பிறகு வழக்கு அபராத வழக்காக மாற்றப்பட்டு ஐம்பது ரூபாய் புலியாருக்கு நஷ்ட ஈடாகவும், இன்னுமொரு ஐம்பது ரூபாய் வழக்குச் செலவுகளுக்காக நாட்டாமையார் கணக்கிற்கும் வரவு வைக்கப்பட்டு வழக்கு பைசல் செய்யப்பட்டது. ஆனால் பரணியை இப்படியே விட்டுவிடக்கூடாது என்றும், அவருக்கும் தவறை உணரும் விதத்தில் தண்டனை தரப்பட வேண்டும் எனவும் நாட்டாமைகளில் ஒருவரான சாத்தையா (சா கணேசன் என்ற சிவாஜியின் அப்பா) உறுதியாக நின்றார். கா கி தானே முன்வந்து அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மறுநாள் பள்ளியில் தானே முன்னின்று அதைச் செய்வதாகவும், இனி வேறு எவருக்கும் இப்படித் தண்டனைகள் கொடுப்பதில்லை என்றும்  உறுதி அளித்தார். அதோடு பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது.  ஐம்பதாகக் கொடுக்காமல் ஐம்பத்தி ஒன்றாகக் கொடுத்த பரணி அப்பாவின் “பெரிய மனுஷத்தனம்” பஞ்சாயத்துக் கலைவில் உரக்க ஒலித்துக் கொண்டிருந்தது. 

மறுநாள் நாங்கள் ஆவலுடன் காத்திருந்த பொழுதும் வந்தது. நீதி என்றும் மறையாது, நியாயம் வெல்லும், தர்மம் தோற்காது என உறுதி கொண்டு நாங்கள் எந்த நொடிக்காகக் கட்டுண்டு காலமெலாம் பொறுத்திருந்தோமோ அந்த நொடியும் வந்தது. கா கி உள்ளே நுழைந்தார். நாங்கள் எல்லோரும் பரணியையே பார்த்தோம். கா கி குரலைச் சரி செய்துகொண்டார். “தம்பி, இங்க வா “ என்றார். பரணி வந்து நின்றார்.

“தம்பி, நம்ம பக்கமே நியாயம் இருந்தாலும் கொஞ்சம் விட்டுக்கொடுத்துதான் போணும். வெறும் பயலும், நீயுமா பெனையலு ? இனியாவது ஒழுங்கா இரு.” என்று குரல் கம்ம சொல்லிவிட்டு நாங்கள் யாவரும் இன்றுவரை கனவிலும் கண்டு நடுங்கும், நம் எதிரிக்கும் நேரக்கூடாத  அந்தத் தண்டனையைச் சொன்னார். எங்கள் வியப்பு உச்சத்தையும் தாண்டியது அடுத்த நொடிக்குள் எந்த எதிர்ப்புமின்றி பரணி அந்தத் தண்டனையை ஏற்றுக்கொண்டு உடனே அதில் இறங்கியதுபோதுதான். 

“தம்பி, ஓடிப்போய் அந்த மரத்தை தொட்டுட்டு வா, நிக்காம போணும், முக்கா முக்கா மூணு மட்டம்” … அதில் இரண்டாம் முக்கா வில் சார் குரல் உடைந்து அழுகைச் சப்தம் வந்தது என சிவாஜி இன்றுவரை உறுதியாகச் சொல்கிறார். நாங்கள்  தண்டனையின் கொடூரத்தில் உறைந்து விட்டதால் சரியாகக் கேட்கவில்லை. அன்றிலிருந்து சுனா கானா பள்ளிக்கு வருவதில்லை. நின்று விட்டார்.

இதன் அடுத்த ஆண்டில் கா கி சார் உள்ளூரிலேயே தொடங்கப்பட்ட இன்னொரு பள்ளிக்கு மாறினார். அவருக்கு பிரிவுபசாரம் நடத்தப்பட்டது. தழதழுப்புடன் கா கி சார் தன்னைப் பற்றி, பணியில் தன் நேர்மை பற்றி தானே உரையாற்றினார். “மாணவர்களுக்குள்ள நான் என்னைக்குமே வேறுபாடு பார்த்ததில்லை. தவறு செய்தா கடுமையா கண்டிக்கிறேன்னு எனக்கு கெட்ட பேருதான். ஆனா பசங்களைக் கண்டிச்சதை நெனச்சி நான் ஒவ்வொரு முறையும் வேதனைப்படறது யாருக்கும் தெரியாது. இதோ, பரணித் தம்பி இருக்கான். அவன் தப்பே பண்ணலைன்னாலும் தப்பு நடந்த எடத்துல இருந்தான் ங்கறதுனாலேயே அவனுக்கும் கடுமையான தண்டனைகள் கொடுத்துருக்கேன். (குரலை கம்மச் செய்து தலையை அசைத்து மீண்டார்). நான் கடைசி வரை நேர்மையான ஆசிரியனா இருப்பேன் “ 

அவர் கிளம்பும்போது ஜெயலட்சுமியும், ரஜினியும், கமலும் அழுதார்கள். அழவில்லை என்றால் வந்து அடிப்பாரோ என்ற பயத்திலும், அழுவதா வேண்டாமா என்ற குழப்பத்திலும் எங்கள் முகம் அழுவதுபோலவே இருந்ததால் நாங்கள் தப்பிவிட்டோம். 

பல ஆண்டுகள் கழித்து சுனா கானா ட்ராக்டர் ஓட்டும் பணியில் செட்டியாரம்மா வீட்டில் வேலை பார்ப்பதாக அறிந்தேன். பணி ஒய்வு பெற்ற கா கி சார் முழு நேரக் கணக்கராக அங்கேயே வேலை செய்து வருவதாகவும் அறிந்தேன். ஜெயலட்சுமி குறித்துதான் அறிந்து கொள்ளவே முடியவில்லை.

(வளரும்)

Series Navigationதெய்வநல்லூர் கதைகள் – 2 >>

8 Replies to “தெய்வநல்லூர் கதைகள் – 1”

  1. 80- களின் பள்ளி வாழ்க்கையை இயல்பாக சித்தரித்துள்ளார் ஜானா ரானா. வாய்விட்டு சிரிக்க வைக்கும் இடங்களையும் உணர்ச்சியை வெளிக்காட்டாமல் சொல்லிச் செல்வது சிறப்பு.

    அடுத்த அத்தியாயத்திற்கு காத்திருக்கிறேன்.

  2. ஒரு கடந்து வந்த வாழ்க்கையை திறம்பட சுவாரஸ்யத்துடன் அதே உற்சாகத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது.சிரிக்காமல் ஒரு வரி கூட கடக்க முடியவில்லை. ஆனால் அதில் உறைந்திருக்கும் நிலப்பிரபுத்துவ வாழக்கை முறையை அதே ஒட்டதுடன் நேர்மையாகவே வெளிப்படுத்தப்பட்டிருந்தது.அடுத்தடுத்த தொடர்கள் வாசிக்க ஆர்வமாக உள்ளது. எழுத்தாளர் ஜா.ராஜகோபாலன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

  3. ஒரு நாவலுக்கான சுவாரசியத்துடன் தொடங்குகிறது தெய்வநல்லூர் கதைகள். பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் குழு உருவாகும்போது அதில் இயல்பாக வந்து சேரும் உளவாளிகளின் பங்களிப்பு எல்லா நாடுகளிலும் உள்ளதுதான் போல. காலம் எல்லா தண்டனைகளையும் வலிகளையும் ஒரு விளையாட்டுபோல மாற்றி விடுகிறது.

  4. ஜா.ராஜகோபாலன் அவர்களின் இந்த “நனவிடை தோய்தல்” எழுத்து ஒரு காலத்தின் சித்திரங்களை உள்ளடகியுள்ளது. வாழ்வின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் நினைவுகளின் குளிர்மை ததும்பும். ஜா.ராஜகோபாலனின் இந்த தொடருக்கு வாழ்த்துக்கள்.

  5. “முக்கா முக்கா மூணு மட்டம்” … அதில் இரண்டாம் முக்கா வில் சார் குரல் உடைந்து அழுகைச் சப்தம் வந்தது என சிவாஜி இன்றுவரை உறுதியாகச் சொல்கிறார்” — இந்த சிவாஜிகள் ரொம்ப தொல்லை தான்… 😀

  6. முதல் அத்தியாயமே களை கட்டுகிறது. செறிவான மொழியுடன், ஒவ்வொரு வரியிலும் மிளிரும் நகைச்சுவையை புன்னகைக்காமல் கடக்க முடியவில்லை. அதிலும் சுனா கானா செட்டியாரம்மா வீட்டிலேயே வேலைக்குச் சேர நேர்ந்ததை என்னவென்று சொல்வது பாவம்தான். அருமையான தொடர்
    அடுத்த என்ன எழுதப் போகிறீர்கள் என்று ஆவலாக இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.