தெய்யம் — மனிதன் கடவுளாக மாறும் ஆட்டம்

ஓலைப் பாயில் படித்திருந்தவரின் முகம் முழுவதும் செஞ்சாந்து வண்ணம் பூசப்பட்டிருந்தது. கண்களை சுற்றி இரு அடர் வட்டங்களாக கருவண்ணம். மூடிய கண்களும், ஏறி இறங்கும் விலா எலும்புகளும், கையில் மடித்து வைத்திருந்த ஒரு துண்டு காகிதத்துடன் அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர் போல தென்பட்டார். அவர் தலைக்கு அருகே அமர்ந்து இருந்தவர் கருப்பு வண்ணத்தில் நனைத்த ஒரு தேங்காய் நார் தூரிகையால் படுத்திருந்தவரின் முகத்தில் ஒரு வளைந்த, மெல்லிய கருப்பு கோட்டைத் தீட்டத் துவங்கினார். வரைபடத்தில் சிவப்பு வண்ண நிலப்பரப்புகளில் வளைந்து செல்லும் சாலை போல நாசியிலிருந்து காது வரை அந்தக் கோடு நீண்டது. வரைபவரின் கவனம் முழுவதும் படுத்திருந்தவரின் முகத்தில் குவிந்திருந்தது. பழைய புத்த மடாலயங்களில் அரிதான பழம் புத்தகங்களை பிழைகள் இல்லா பிரதி எடுக்கும் புத்த பிட்சு போல. புள்ளிகள், கோடுகள், வளைவுகள், வட்டங்கள், சுருள் வட்டங்கள் என நிறைந்துக் கொண்டிருக்கும் படுத்திருந்தவரின் முகம் மெதுவாக மாறத் துவங்கியது.

தென்னம் ஓலைகளால் வேயப்பட்ட தட்டிகளை சவுக்கு கொம்புகளால் முட்டுக் கொடுத்து அமைக்கப்பட்ட ஒரு சிறிய அறையில் தான் இந்த உருமாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அறையின் ஒரு ஓரத்தில் சிறு மூங்கில் பிளாச்சுகள், பாக்கு மட்டை, சிவப்பு பருத்தி துணி, தங்க நிற ஜரிகை, குதிரையின் வால் போல மெல்லிசாக சீவப்பட்ட குருத்தோலை ஆகியவைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு வட்டத் தலை அணி அலங்கரிக்கப்பட்ட ஒரு சிறு தெய்வம் போல அமர்ந்திருந்தது. மஞ்சள் பொடி நிறைந்த கொட்டாங்குச்சிகள், கரிப்பொடி, மரகுவளைகள், சிறு தூரிகைகள், கயிற்று கொடியில் தொங்கும் வண்ண உடைகள் இது ஒரு ஒப்பனை அறை தான் என்று அறிவித்தது. ஆனால் முகத்தில் வண்ணம் ஏற்றி, ஜொலிக்கும் உடை அணிவித்து மனிதனை நடிகனாக உருமாற்றும் வெறும் ஒப்பனை அறை அல்ல. மனிதனுள் உறைந்து இருக்கும் கடவுளை வெளிக்கொணர வைக்கும் கருவறை.

~o0o~

இரு வாரங்களுக்கு முன் ‘இங்கே பக்கத்தில் தெய்யம் நடக்கவிருக்கிறது வருகிறாயா’ என்று கேரளத்தில் இருக்கும் நண்பர் கேட்டிருந்தார். எனக்கு பல வருடங்களாக மனதில் ஓடிக் கொண்டிருந்த ஆசைகளில் அதுவும் ஒன்று. ஏறக்குறைய 25 வருடங்களுக்கு முன் சுரேஷ் கோபி மிக அபாரமாக நடித்திருந்த ‘களியாட்டம்’ படம் அந்த விதையை ஊன்றி இருக்கலாம். அந்த விதைக்கு நீர் விட்டது என்னமோ வில்லியம் டால்ரிம்பில் (William Dalrymple) தெய்யம் ஆடுபவரான ஹரி தாஸ் என்ற மனிதரை பற்றி எழுதிய கட்டுரை. தாழ்ந்த சாதியை சேர்ந்த இவர் எப்படி வருடத்தில் சில நாட்கள் மட்டும் எல்லோராலும் வணங்கப்படும் கடவுளாக உருவெடுக்கிறார் என்பதை அந்தக் கட்டுரை விவரித்திருந்தது.

‘சரி’ என்று நண்பரிடம் சொல்லி விட்டு தெய்யம் பார்ப்பதற்க்கு கன்னன்காட் வந்து இறங்கினேன். வடக்கு கேரளா, மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் தான் தெய்யம் நடைபெறுகிறது. அதுவும் டிசம்பர் தொடங்கி மார்ச் வரை குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே இது நடைபெறும்.

வடக்கு மலபாருக்கு இது தான் முதல் பயணம். கன்னன்காட் ரயில் நிலையம் அருகே இருக்கும் முக்கிய சாலையில் தென்னை மரங்கள் போல ஷாப்பிங் மால்கள் முளைத்திருந்தன. இருபது அடிக்கு ஒன்று தென்பட்டுக் கொண்டே இருந்தது. மால்களுக்குள் யாரும் சென்று வருவதாகத் தெரியவில்லை. சிறு மொபைல் கடைகளிலும், பேக்கரி, ஜூஸ் கடைகளில் தான் கூட்டம் மொய்த்தது.

கன்னன்காட் சிறு ஊர் தான் ஆனால் இரு பிரபலமான ஆசிரமங்கள் உள்ளன. ஆனந்தாஸ்ரம் 1931 ஆம் ஆண்டு சுவாமி ராம் தாஸால் நிறுவப்பட்டது. சிறு குன்றில் அமைந்திருக்கும் இது ஊரில் இருந்து சற்று தள்ளி உள்ளடங்கி இருக்கிறது. உள்ளே நுழைவதற்கு ஆதார், ஐடி ஆகிய சமாச்சாரங்களை குறிப்பெடுத்துக் கொண்டு தான் உள்ளே அனுமதிக்கிறார்கள். வளைந்த பாதைகள், குன்றின் பல அடுக்குகளில் அமைந்த கட்டிடங்கள், கேரளாவின் பச்சை போர்வை, அமைதி ஆகியவையே மனதில் சட்டென்று பதிகின்றது.

குன்றின் முகட்டில் சுவாமி ராமதாஸ் தங்கி இருந்த வீடு இருக்கிறது. கேரள பாணியில் நிறைய ஜன்னல்களும், ஓடு வேயப்பட்ட சரிந்த கூரையுடன், நன்கு பராமரிக்கப்பட்ட பழங் கட்டிடங்களுக்கே உரிய கம்பீரத்துடன் நின்று கொண்டிருக்கிறது. உள்ளே மூன்று பேர் தான் இருந்தார்கள். ஹார்மோனியப் பெட்டி முன் உட்கார்ந்திருந்த ஒரு வெளிநாட்டு பெண்மணி ‘ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்’ என்று பாடிக் கொண்டிருந்தார். மேற்கத்திய ஓபெராவையும், பஜனை ஸ்வரங்களையும் கலந்து ஹார்மோனியப் பெட்டியின் ஸ்ருதிக்குள் அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். விசித்திரக் கலவையாக ஒலித்த அந்த சங்கீதம் சற்று திகைப்பூட்டினாலும் அவர் உட்கார்ந்திருந்த பாங்கும், எதிரே இருந்த சுவாமி ராம் தாஸின் புகைப்படத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்த விதமும் அவர் கொண்ட பக்தியை தான் என் மனத்தில் முன் நிறுத்தியது. மனதை கரைக்கும், பிசிறில்லாத சங்கீதம் தான் இறையை அடைய ஒரே வழியா என்ன?

1920 களில் சுவாமி ராம் தாஸ் இந்தியாவின் பல பகுதிகளுக்கு கால் நடையாகவே பயணித்திருக்கிறார். அவரின் சுய சரிதை படிக்கும் பொழுது அந்த கால கட்டத்தில் இந்தியாவின் கிராம மக்கள் நாடோடி சாதுக்களை எவ்வளவு அரவணைத்தார்கள் என்று தெரிகிறது. உணவு, தங்குமிடம், மருத்துவம் என்று எந்த பிரதிபலனும் பாராமல் சுவாமி ராம் தாஸ் போன்றவர்களை பேணி இருக்கிறார்கள்.

இரண்டாவது ஆசிரமம், ஐகேரி வம்சத்தை சார்ந்த சோமசேகர நாயக்கரால் எழுப்பப்பட்டு, இப்பொழுது மிகவும் சிதிலம் அடைந்த ஹோசதுர்க் கோட்டை அருகே இருக்கிறது. சுவாமி நித்தியானந்தா ஆசிரமம் (இவர் வேறு!). 1920 களில் இந்த ஆசிரமத்தில் ஒரு பெரும் பாறையை குடைந்து 43 குகைகளை சுவாமி நித்யானந்தா உருவாக்கியதாக கூறப்படுகிறது. சிறிதும் பெரிதுமாக இக் குகைகள் உள்ளே குளிர்ந்து இருந்தன. சூரிய வெளிச்சம் எங்கிருந்தோ மிக மெலிதாக கசிந்துக் கொண்டிருந்தது. நிசப்தம் செவிச்சவ்வை அழுத்தியது. குகைகளை இணைக்கும் பாதையின் உத்தரம் பல இடங்களில் தாழ்வாக இருந்த படியால் குனிந்து தான் செல்ல வேண்டி இருந்தது. ஆங்காங்கே அமைதியாக உட்கார்ந்து தியானம் செய்வதற்கு ஏதுவாக கற்பலகைகள் செதுக்கப் பட்டிருக்கின்றன. நல்ல வேளை பாறையின் சுவற்றில் அங்கே வந்தவர்களின் அமரக் காதலை பிரகடனப்படுத்தும் வாக்கியங்களோ, குறியீடுகளோ கிறுக்கப்படவில்லை. அது போன்ற பேர்வழிகள் அங்கு வருவதில்லை போல.

தெய்யம் மாலையில் தானே அதற்குள் இந்தக் கோவிலை பார்த்து விட்டு வந்து விடலாம் என்று நண்பர் சொல்லியதால் அனந்தபுரா விஷ்ணு கோவில் சென்றோம். கும்பளா அருகே அமைந்திருக்கும் இந்தக் கோவில் ஒரு குளத்தின் நடுவே உள்ளது. கரையிலிருந்து ஒரு சிறு பாலம் நீண்டு குளத்தின் நடுவே அமைந்திருக்கும் கருவறையை இணைக்கிறது. உள்ளே கடு சர்க்கரை கலவையால் உருவமைக்கப்பட்ட விஷ்ணு. பாம்பு படுக்கையில் அமர்ந்திருக்கிறார். ஆமாம், இடது கால் தரை தொட வலது கால் மடக்கி அமர்ந்த நிலையில் ஒரு மிக அரியக் கோலம்.

நமஸ்கார மண்டபத்தின் கூரையின் உள் பாகத்தில் மரத்தில் செதுக்கப்பட்ட தசாவதார சிற்பங்கள் உள்ளது. கூரையின் உள்ளே சுற்றி நிற்கும் வெயில் படிந்த நீரின் பிம்பம் விஷ்ணுவின் அவதாரங்கள் இடையே சிறு வெள்ளிப் பாம்புகள் போல நெளிந்தன.

திருவனந்தபுரத்தில் இருக்கும் அனந்த பத்மநாப ஸ்வாமியின் மூல ஸ்தானம் இது தான் என்று நம்பப்படுகிறது. குளத்தை ஒட்டிய பாறை சுவற்றில் ஒரு சிறு குகை வாயிலை சுட்டிக் காட்டி இது திருவனந்தபுரத்தில் இருக்கும் அனந்த பத்மநாப ஸ்வாமி ஆலயம் வரை செல்கிறது என்றார் அர்ச்சகர். உண்மையா, இல்லையா என்று தெரியவில்லை. நம்பிக்கை என்று ஒரு விளக்கை எடுத்து கொண்டு குகையினுள் சென்றால் வட கேரளாவிலிருந்து தென் கேரளா வரை இருக்கும் பாதை புலப்படுமோ என்னவோ.

ஆச்சர்யங்கள் இதோடு முடிவதாக இல்லை. சில ஆண்டுகள் முன் வரை இந்தக் கோவில் குளத்தில் சைவ உணவு மட்டுமே உண்டு வாழ்ந்த முதலை ஒன்று இருந்தது. முன்னாட்களில் அதை பார்ப்பதற்கு இங்கு பெரும் கூட்டம் கூடும் என்றார் நண்பர். ஆமாம் என்று ஆமோதித்தார் அர்ச்சகர். நமஸ்கார மண்டபத்தை ஒட்டி குளத்தில் உள்ள பாறையை காட்டி இங்கே தான் அந்த முதலைக்கு பெருமாளின் பிரசாதமான அன்னம் அளிக்கப்படும் என்றார். அந்த முதலை சைவம் தான் என்று எப்படி உங்களுக்கு தெரியும் என்று அர்ச்சகரிடம் வினவினேன். குளத்தில் மீன்களின் எண்ணிக்கை குறையவில்லையே என்றார் அர்ச்சகர். எலிமெண்டரி மை டியர் வாட்சன் என்று அவர் பார்வை கூறியது.

குளத்தின் அருகே ஒரு சிறிய காவில் வன சாஸ்தாவும், வேட்டைகொருமகனும் பிரதிஷ்டை செய்ய பட்டிருக்கிறது. இவற்றிற்கு உருவங்கள் இல்லை, நடப்பட்ட கற்கள் மட்டுமே. அருகே உள்ள சிறு திண்ணையில் அமர்ந்து கொண்டோம். ஆட்கள் யாரும் இல்லாத இடம். மெல்லிய காற்று வன சாஸ்தாவிற்கு முன் ஏற்றப் பட்டிருந்த விளக்கு சுடருடன் விளையாடிக் கொண்டிருந்தது. அவருக்கு முன் ஒரு பித்தளைத் தட்டின் மேல் தண்ணீர் நிறைந்த கிண்டியும், சிவப்பு அரளி மலர்களும், சிறு இலையில் சந்தனமும் இருந்தது. இது போன்ற எளிமையான இடங்களில் நம் கண்கள் நம்மையும் அறியாமல் மூடுகின்றன. அகம் பல தடைகளைத் தாண்டி குவிய முயல்கிறது. சற்று நேரத்திற்கேனும். கிளம்பலாமா என்றார் நண்பர்.

~o0o~

அன்று மாலை நண்பருடன் கன்னன்காட் அருகே இருக்கும் பெரியே ஸ்ரீ புலிபூத தேவஸ்தானத்திற்கு தெய்யம் காண பயணித்தேன். சாலைகள் விரிவாக்கப்பட்டு வருகின்றன. மண் வெட்டப்பட்டிருந்த சரிவுகள் சாலையின் இருபுறமும் சிவப்பு அரண்கள் போல நின்றிருந்தது.

செம்புரைக்கல்லால் ஆன சுற்று சுவர்களுக்குள், பாக்கு மரங்களால் சூழப்பட்டு ‘நீ பெரிதா நான் பெரிதா’ என்று போட்டிப் போட்டு கொண்டு கட்டப்பட்டது போல் பெரிய வீடுகள் காசர்கோடு மாவட்டம் முழுவதும் காணப்படுகிறது. ஆனால் பெரும்பாலான வீடுகளில் யாரும் இல்லை. ‘எல்லாரும் கல்ப்ல இருக்காங்க’ என்றார் நண்பர் சுருக்கமாக. நீல வானத்தை சுரண்டும் தென்னையும், பாக்கும், பச்சையின் நிழலும் இங்கு இருக்க சுட்டெரிக்கும் வெயிலும், பாலையும், ஒட்டகங்களும் உள்ள தேசத்தில் இருக்கும் முகம் அறியா மனிதர்களை நினைத்து கொஞ்சம் வருத்தமாக இருந்தது. மூடியிருந்த கண்ணாடி ஜன்னல்களும், பூட்டப்பட்டிருந்த தேக்கு வாயிற் கதவுகளும் கொண்ட வீடுகள் தங்களின் உடமஸ்தரின் வருகைக்காக ஏங்கிக் காத்திருப்பது போலவே தோன்றியது.

ஸ்ரீ புலிபூத க்ஷேத்திரம் ஒரு திடலில் அமைந்துள்ளது. பொதுவாக தெய்யம் மூன்று விதமான இடங்களில் நடைபெறும். காவு என்று அறியப்படும் சிறு காடுகளில், தரவாடு என்று அழைக்கபடும் முக்கிய குடும்பங்களின் வீடுகளில் அல்லது இதைப் போன்ற க்ஷேத்திரங்களில். புலிபூத க்ஷேத்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும் தெய்யம் நடப்பதால் கருவறையை சுற்றி உள்ள பிரகாரம் மேல்கூரையிடப்பட்டு, பக்தர்கள் தெய்யத்தை அமர்ந்து காண சிமெண்ட் மாடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

இருபுறமும் சரியும் ஓடு வேய்ந்த கூரையை தாங்கி நிற்கும் மரத்தூண்கள் சூழ்ந்த கருவறை முன் நின்றோம். சிறிய கருவறையினுள் மூர்த்தி எதுவும் இல்லை. பல நீள, அகலங்களில் வாள்கள், மரத்திலான வில்லும் அம்பும் மட்டுமே தொங்கும் சர விளக்குகளின் வெளிச்சத்தில் மங்கலாக மிளிர்ந்தது. இவையே இங்கே பூஜிக்கப்படும் பொருட்கள்.

‘இவர் தான் தெய்யக்காரன்’ என்று காதில் கிசுகிசுத்தார் நண்பர். என்னிடமிருந்து சற்று தள்ளி நின்று கொண்டிருந்தவரை அப்பொழுது தான் பார்த்தேன். சற்று குள்ளமாக, நெற்றியில் சிறு சந்தன கீற்றிட்டு, வெற்று மார்போடு, இடுப்பில் சிவப்பு நிற வேட்டி சுற்றி, கும்பிட்ட கைகளோடு கண் மூடி நின்றிருந்தார் ஒருவர். ‘இவரா’ என்று சந்தேகத்தோடு நண்பரை பார்த்தேன். ‘ஆமாம்’ என்று தலையசைத்தார்.

கோவில் வெளிச்சப்பாடு (பூசாரி — இவரே பல நேரங்களில் சன்னதம் வந்து மக்களுக்கு குறி சொல்வது உண்டு) நீட்டிய ஆரத்தி தட்டில் இருந்த விளக்கை வணங்கி, உள்ளங்கைகளில் தீர்த்தம் வாங்கி அருந்தினார். நீண்ட பிடி போட்ட ஒரு விளக்கை எடுத்து கொண்டு முன்னே ஒருவர் செல்ல தெய்யக்காரர் பின் தொடர்ந்தார். விளக்கு ஏந்தி முன்னால் செல்பவர் இல்லை என்றால் கோவிலுக்கு வரும் சாதாரண பக்தரையும் இவரையும் வேறுபடுத்துவது கடினம். ஆனால் சில மணி நேரங்களில் இவரை நான் ஒப்பனை அறையில் கண்ட பொழுது சாமானியன் மறைந்து கடவுள் குடியேறி இருந்தது.

~o0o~

சிறிது நேரத்தில் ஒப்பனை முழுவதுமாக முடிந்திருந்தது. முடி என்று அழைக்கப்படும் தலை அணி தலையின் மேல் ஆதிசேஷன் போல விரிந்திருக்க அதன் விளிம்பில் மணிகள் கோர்க்கப்பட்ட சிறு வெள்ளை குஞ்சரங்கள் மெதுவாக ஆடிக் கொண்டிருந்தன. கழுத்தை சுற்றி சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட அட்டிகை பாதி மார்பை மறைக்க, மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை வெள்ளி கங்கணங்கள் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்டு இருந்தது. இடுப்பிற்கு கீழே அணிந்திருந்த சிவப்பு கீழாடை குடை போல விரிந்து, கணுக்காலை வளைத்து இருக்கும் கனமான சிலம்புகளை நிழலிட்டது.

கரு வண்ணம் தீட்டிய கண்கள் இன்னும் மூடிய படியே இருந்தது. விளக்கு ஏந்தி வந்தவர் தெய்யக்காரர் காதுகளில் ஏதோ சொல்லிவிட்டு ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை அவர் முன் நீட்டினார். கண்கள் திறந்து தன் முகத்தை ஆடியில் பார்க்கும் தருணத்தில் தான் வேடமிட்டவர் தன்னை கடவுள் என்பதை உணர்கிறார். உள்ளிருக்கும் தெய்வம் திரண்டு மேலெழும் கணம். தெய்யம் என்ற சொல்லே தெய்வம் என்ற வார்த்தையின் திரிபு தானே. ஒரு மெல்லிய அதிர்வு அவர் உடல் முழுவதும் பரவுவதை கால்களிலும் கைகளிலும் அணிந்திருந்த சிறு மணிகளின் கிணுங்கல் சொல்லியது. செண்டை மேளங்களின் சீரான அறைவு முன் செல்ல, கரங்களை இருவர் பற்றிக்கொள்ள, மெலிதாக ஆடியபடியே, க்ஷேத்திரத்தின் கருவறையை நோக்கி நடந்து சென்றார். அவரின் பார்வை இடமும், வலமும், மேலும், கீழும் சுற்றிக் கொண்டே இருந்தது. உலகத்தை புது கண்களோடு பார்ப்பவர் போல.

~o0o~

தெய்யத்தின் துவக்க புள்ளிகள் வரலாற்றின் அடர்ந்த பனி மூட்டத்தில் மறைந்து விட்டன. ஆனால் அதன் சில கூறுகள் சங்க காலங்களில் காணக் கிடைக்கின்றது. குறிஞ்சி நிலத்தில் மக்களின் பிணியையும், துயரத்தையும் போக்க மலை தெய்வமான முருகன், ஒருவர் உடலில் இறங்கி ஆடும் ஆட்டத்தை வேலன் வெறியாட்டம் என்ற பெயரோடு அக்காலத்தில் அறியப்பட்டிருந்தது.

வெறியாட்டம் ஆடுபவர் கொடிகளால் கட்டப்பட்ட ஜாதிக்காய்களை இடையில் கட்டி, மல்லிகையும், வெண்ணிற வெண்டாளி பூவையும் சேர்த்து தொடுத்த மாலையை தலையில் அணிந்து, மார்பெங்கும் சந்தனம் பூசி முருகனை புகழ்ந்து பல பாடல்கள் பாடுவார். இந்த ஆட்டத்திற்கு களத்தில் புதுமணல் பரப்பி நடுவில் ஒரு வேல் அல்லது சேவல் கொடியை நட்டு, அதை சுற்றி ஆடி, குருதி பலி கொடுத்து குறி சொல்லும் வழக்கம் பற்றிய குறிப்புக்கள் பழந் தமிழ் இலக்கியங்களில் உள்ளது. இந்த ஆட்டத்தில் எழும்பும் இசையின் ஒலியானது அருகில் விழும் அருவியின் பலத்த உருமலையையும் எஞ்சுகிறது என்று திருமுருகாற்றுப்படையில் கவித்துவமாக பேசப் பட்டிருக்கிறது. குறுந்தொகையில் ‘வேலன் புனைந்த வெறிஅயர் களம் தொறும் செந்நெல் வான்பொரி சிதறி அன்ன’ என்று வெறியாட்டம் ஆடிய களத்தில் சிதறி இருக்கும் சிவப்பு நெல்லும் வெள்ளை நெல்லும் போல என்று பொருள் படும் பாட்டும் ஒரு உதாரணம்.

கால ஓட்டத்தில் தெய்யம் பல கடவுள்களை தன்னுள் இழுத்துக் கொண்டது. இன்றைக்கு வடக்கு மலபாரில் மட்டுமே ஏறக்குறைய 400 வகையான தெய்யங்கள் (தெய்வங்கள்) இருப்பதாக கூறப்படுகிறது. பெருந் தெய்வங்களான சிவன், விஷ்ணு மட்டும் அல்லாமல் குலிகன், பூமருதன் என்று பிற தெய்வங்களும், மனிதராய் பிறந்து தெய்வங்களாய் ஆன தொட்டும்கர பகவதியும், முச்சிலோட்டு பகவதியும் , தெய்வங்கள் மிருகங்களாய் பிறந்து மனிதனோடு ஊடாடியதை கொண்டாடும் புலி கண்டன், நாககன்னி தெய்யம் என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு. ஒவ்வொரு தெய்வத்திற்கும் வரையப்படும் ஒப்பனைகள், பாடப்படும் பாடல்கள், நடத்தப்படும் சடங்குகள் என்று எல்லாவற்றிலும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

தெய்யத்தின் மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் இதன் வரையறைகள். இந்த நிகழ்வுகளில் அனைவரும் பங்கெடுக்கலாம் என்றாலும் தெய்யம் ஆடுபவர், ஒப்பனை செய்பவர், பக்க வாத்தியக்காரர்கள் அனைவருமே குறிப்பிட்ட சில சாதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமே. வண்ணான், வேலன், தியா, மலையன் இது போல இன்னும் சில சாதிகளை சார்ந்தவர்களுக்கு மட்டுமே தெய்யம் ஆடும் உரிமை உண்டு. அதுவும் சில தெய்யங்கள் குறிப்பிட்ட சில சாதியினர் மட்டுமே ஆட உரிமை உண்டு. உதாரணத்திற்கு வேட்டகொருமகன் தெய்யத்தை வண்ணான் சாதியை சேர்ந்தவர் மட்டுமே ஆட முடியும். மேலும் க்ஷேத்திரங்களும், காவுகளும் சில குறிப்பிட்ட தெய்யங்களை மட்டுமே அரங்கேற்றும். நான் சென்றிருந்த ஸ்ரீ புலிபூத க்ஷேத்திரத்தில் புலி கண்டன், காலப்புலி, விஷ்ணுமூர்த்தி போன்ற தெய்யங்கள் மட்டும் வருடந்தோறும் நடைபெறும்.

~o0o~

கருவறையின் முன் சிறு நடுக்கத்தோடு நின்றுக் கொண்டிருந்த தெய்யக்காரர் பாடத் துவங்கினார். இந்த பாடலில் அவரை கை பிடித்து கூட்டி வந்த இருவரும் சேர்ந்து கொண்டனர். தெய்யம் ஆடுபவரின் குரலில் ஒரே நேரத்தில் கரகரப்பும், நெகிழ்வும் சேர்ந்து இருந்தது. சட்டென்று உச்சத்தைத் தொட்டு உடைந்து, கீழிறங்கி, மௌனமாகி மீண்டும் முளைத்தது. ஆந்திராவிலும், ராஜஸ்தானிலும் சில கிராமங்களில் குளிர் காலங்களில் நெருப்பை சுற்றி அமர்ந்து சில நாடோடிகள் பாடுவதை கேட்டிருக்கிறேன். என்ன என்றே தெரியாத ஒரு ஈர்ப்பு அந்த குரல்களுக்கு உண்டு. அது போலவே செண்டை மேளங்கள் உதவியோடு மலையாளத்தில் ஒலித்த இந்தக் குரல் பார்வையாளர்களின் சலசலப்பையும் தாண்டி என் செவிகளில் நிறைந்தது. பாட்டில் வந்து விழுந்த சொற்களின் அர்த்தம் ஓரளவுக்கே புரிந்தாலும் தெய்யம் ஆடுபவரின் ஒப்பனையிடப்பட்ட முகம் காட்டிய பாவனைகள் மீதத்தை நிரப்பியது.

பொதுவாகவே இப் பாடல்கள் வந்திறங்கிய தெய்வத்தின் பெருமையையும், கீர்த்தியையும் போற்றுவதாகவே அமைந்திருக்கும். இங்கே நடைபெற்ற தெய்யத்தில் சிவன் புலி உருவம் எடுத்த புலி கண்டன் பற்றியும், மக்களை காக்க புலிகளை எதிர்த்து அவற்றிற்கு இரையாகி பின்னர் இறையாகி போன கரிந்திரி நாயர் பற்றியும் பாடல்கள் பாடப்பட்டன.

பாடல்களின் வேகம் அதிகரிக்க தெய்யம் ஆடுபவரின் உடல் மேலும் அதிரத் தொடங்கியது. வெளிச்சப்பாடு அவர் முன் நீட்டிய தட்டிலிருந்த வாழைப்பழத்தை எடுத்து தோலை சற்று நீக்கி மீண்டும் தட்டிலேயே இட்டு, பிடி அரிசி எடுத்து அதை நான்கு கால்கள் கொண்ட ஒரு மரப் பீடத்தின் நான்கு மூலைகளிலும் கும்பமாக இட்டு…எல்லா செயல்களிலுமே ஒரு உறுதி. அங்கங்கள் முழுவதும் குவிந்த தீவிரம். சில மணி நேரங்கள் முன்னம் வரை சாமானியனாக இருந்தவர், முற்றிலும் புலி கண்டனாக மாறி இருந்தார்.

அடுத்த இரண்டு மணி நேரம் காட்டாற்று வெள்ளம் கரையை உடைத்துக் கொண்டு வெளியேறுவது போல அவர் அகத்தில் உறை நிலையில் இருந்த சக்தி உருகி, கொப்பளித்து, பொங்கி அவர் அங்கங்களை இயக்கியது. கால்களில் சிலம்பின் மணிகள் அதிர, நடையில் வேகமும், கனமும் கூடியது. கைகளும், கால்களும் செண்டைகளின் ஒலிகளுக்கு ஒத்திசைத்து நகர்ந்தது. சட்டென்று ஓட்டம் எடுத்து கால்களை நிலத்தில் உதைத்து, மேலெழும்பி, அந்தரத்திலேயே உடலை பக்கவாட்டில் திருப்பி சுற்றி, நிலம் இறங்கி, மீண்டும் துள்ளி, தொடர்ந்து இது போலவே பல முறை செய்தபடியே ஒரு அரை வட்டம் அடித்தார். சட்டென்று ஒரு ஓரமாக நின்று அமர்ந்திருந்த பக்தர்களை நோக்கி, குரல் உயர்த்தி ஒரு பாட்டின் சில வரிகளை பாடி ஆசி வழங்கினார். பிரகாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சக்கரங்கள் வைத்த மரப் புலி வாகனத்தின் மேல் ஏறி சுற்றி வந்தார். கருவறையின் முன் வந்து ஒரு வாள் எடுத்து மெதுவாக சுழற்றியபடியே வட்டம் அடித்து, மெதுவாக வேகம் கூட்டி, செண்டை மேளங்களின் கொட்டு பாய்ச்சல் எடுக்க, வாளை அதிவேகமாக சுற்றி பல முறை வட்டம் இட்டார். வண்ணங்கள், அதிர்வுகள், வாளில் பட்டு தெறித்த வெளிச்சச் சிதறல்கள் மட்டுமே கொண்ட ஒரு சுழற்காற்று கருவறையின் முன் ஒரு பத்து நிமிடத்திற்கு சுழன்றது.

~o0o~

தெய்யம் ஆட தேர்ந்தேடுக்கப் படுபவர் குறைந்தது ஒரு மண்டலத்திற்காவது விரதம் இருப்பார். மாமிசம், மது சமாச்சாரங்கள் விலக்கி சில நியமங்களை கடைபிடிக்க வேண்டிய அவசியம் உண்டு. இவர்களில் பலர் சிறு வயதிலிருந்தே உடலை வலிமையாக்கவும், நெகிழ்வாக வைத்துக் கொள்ளவும் பல பயிற்சிகள் செய்வதுண்டு. செண்டை மேளம் அடிக்கவும், நடன அசைவுகளை பழகவும், தெய்வங்களின் புகழ் பாடும் பாடல்களை மனனம் செய்வதும் என்று சில வருடங்கள் செலவிடப்படும். இதைத் தவிர முகமெழுத்து என்று அறியப்படும் ஒப்பனை கலையும், தெய்யம் நிகழ்வின் பல்வேறு சடங்குகளை பற்றிய விவரங்களும் அறிந்து கொள்ள வேண்டும். தெய்வங்கள் உள்ளிறங்கி அவற்றின் ஆகிருதி முழுவதும் பரிமளிக்க மனதிற்கும், உடலிற்கும் இந்தப் பயிற்சிகள் தேவைப்படுகின்றன.

இது சுலபம் அல்ல. ஆகவே தான் இந்த களியாட்டத்தை முழுமையாக்கி அதனால் முழுமையானவர்கள் தெய்வமாகவே கருதப்படுகிறார்கள். அதில் முதன்மையானவர் ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன் கறிவெல்லுரில் பிறந்த மணக்காடன் குருக்கள். வண்ணான் சமூகத்தை சேர்ந்த இவர் சிறு வயதிலேயே மருத்தவம், தர்க்க சாஸ்திரம், மாந்த்ரீகம் ஆகியவற்றில் தேர்ச்சி அடைந்தார். இவரின் திறமையை சோதிக்க எண்ணிய கொலத்திரி ராஜா அவரை ஒரு சவாலுக்கு அழைத்தார். சவாலை ஏற்றுக் கொண்ட மணக்காடன் குருக்கள் ஒரு இரவுக்குள்ளேயே அந்தப் பகுதியின் 39 தெய்வங்களையும் போற்றும் 39 தெய்யங்களை அரங்கேற்றினார். ஓர் இரவில் நடேந்தேறிய இந்த அமானுஷ்ய நிகழ்வு இன்று வரை பேசப்பட்டு வருகிறது. மணக்காடன் குருக்களின் ஜீவ சமாதி இன்றும் கறிவெல்லுரில் உள்ளது.

~o0o~

புலி கண்டன் முன் ஒரு நீள் வரிசை உருவாகியது. மலங்க விழித்தபடியும், பாதி தூக்கத்திலுமாக இருந்த சிறு குழந்தைகள் இடுப்பில் வீற்றிருக்க பளிச் என்று புடவை உடுத்திய பெண்களும், வயதானர்வகளும், வெள்ளை வேட்டி அணிந்து, நன்கு செதுக்கிய மீசையுடன் ஆண்களும், திறந்த வாயுடன் புலி கண்டனை வைத்த கண் மாறாமல் பார்க்கும் சிறுவர்களுமாக அந்த வரிசை நீண்டிருந்தது. நாமும் சேரலாம் என்று நண்பர் சொல்ல, சேர்ந்துகொண்டோம். ஒவ்வொருவராக அருகில் சென்று கும்பிட்ட கரங்களுடன் ஆசி வேண்டினர். நம் முன் இருப்பவர் வேடமிட்ட ஒரு சாதாரண மனிதன் என்ற எண்ணமே அவர்களுக்கு உதித்தாக தெரியவில்லை. எதிரில் அமர்ந்திருப்பது தெய்வம் என்பது அவர்கள் முகத்தில் பிரதிபலித்த பக்தியிலும் , பயம் கலந்த மரியாதையிலும் மிக வெளிப்படையாக தெரிந்தது. புலி கண்டன் ஒவ்வொருவரையும் ஆசிர்வதித்தார், பிரச்சனைகளுக்கு பரிகாரங்கள் சொன்னார். குரலின் தொனி உயர்ந்திருந்தது. அவர் ஆட்டத்தை நிறுத்தி இருந்தாலும் வேகமாக வந்து விழுந்த மலையாள சொற்கள் சட்டென்று ஏறியும் அடுத்த வினாடி இறங்கியும் ஒலிகளால் ஆன ஒரு தெய்யத்தை இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது.

என் முறை வந்தது. கும்பிட்ட கரங்களுடன் முன் நின்றேன். சிவப்பு சாயத்தால் மிகைப்படுத்தப் பட்டிருந்த அவரது உதடுகள் அசைந்தது. எந்த ஊரிலிந்து வருகிறாய் என்று கேட்டார் புலி கண்டன். சென்னை என்றேன். அவருக்கு புரிந்ததா என்று ஒரு வினா என் மனதுள் தோன்றி மறைந்தது. என் கூப்பிய கரங்களின் விரல் நுனிகளை பற்றினார். மிகவும் வெம்மையாக இருந்தது அவரின் விரல். முகத்தில் கண்களை சுற்றி தீட்டப்பட்டிருந்த கரு வண்ணங்களின் நடுவே செவ்வரி ஓடிய விழிகள் என்னை உற்று நோக்கியது. அவர் வாயிலிருந்து சட சட வென்று வார்த்தைகள் உருண்டோடி வந்தன. ஒரு சிறு காணிக்கையை அளித்தேன். பூவரச இலையில் சிறிது மஞ்சள் பொடி வைத்து என்னிடம் தந்தார். அங்கிருந்து நகர்ந்தேன். நண்பர் புலி கண்டன் சொன்னவற்றை எனக்கு மொழியாக்கம் செய்து கொண்டிருந்தார். ஆனால் என் காதில் எதுவும் விழவில்லை. வெது வெதுப்பான விரலும், கூர்ந்து நோக்கிய கண்களும், முட்டி மோதி வந்து வீழ்ந்த வார்த்தைகளும், இவற்றை எல்லாம் நான் சொல்லவில்லை என்பது போல் இருந்த அவர் பாவமும் தான் என் மனதில் நிறைந்திருந்தது.

One Reply to “தெய்யம் — மனிதன் கடவுளாக மாறும் ஆட்டம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.