
அந்த இரவில் மிக அமைதியாக காவலர்களும் மருத்துவர்களும் செவிலியர்களும் இயங்கிக்கொண்டிருந்தனர். மேரியை அன்று எப்படியும் கைது செய்ய திட்டம் தீட்டப்பட்டிருந்தது. காவல்துறையின் கைது ஆணையுடன் மூன்று காவலர்கள் மேரியின் வீட்டுக்கருகில் இருந்த ஒரு தேவாலயத்தில் ஆம்புலன்ஸுடன் காத்திருந்தார்கள். மேலும் இரண்டு காவலர்கள் மருத்துவர் ஜோஸஃபைன் பேக்கருடன் சென்று மேரி பணியாற்றிக்கொண்டிருந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார்கள்.
கதை திறந்த மேரி காவலர்களை கண்டதும் கதவை வேகமாக மூட முயன்றார். பலவந்தமாக காவலர்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது,மேரி வீட்டினுள்ளே ஓடி மறைந்தாள். மேரியை தொடர்ந்து உள்ளே சென்ற காவலர்களால் மேரியை கண்டுபிடிக்க முடியவில்லை. பனிப்பொழிவு காலமானதால் சமையலறையிலிருந்து தோட்டத்துக்கு செல்லும் வழியில் இருந்த மேரியின் கால் தடங்களும், வேலிக்கு அருகில் இழுத்துப் போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியும் மேரி தப்பித்துவிட்டதை காட்டின.
மேரி வீட்டு அழைப்பு மணி அழுத்தப்பட்டு அதற்குள் 3 மணிநேரம் ஆகியிருந்தது. தன் முயற்சியில் சற்றும் மனம் தளர்ந்திராத ஜோஸஃபைன் பேக்கர் மற்றுமொரு காவலருடன் மேரியை சுற்றுப்புறங்களில் தேடிக் கொண்டிருக்கையில் அண்டைவீடொன்றின் கம்பிவேலியில் மேரியின் கட்டம் போட்ட சிவப்பு சீருடையின் கிழிசல் சிக்கிகொண்டிருப்பதை பார்த்தார்,
அந்தவீட்டினுள் ஒரு பெரிய அலமாரிக்குள் மேரி ஒளிந்திருந்தாள். ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பல மாதங்களாக தேடப்பட்டு வந்த மேரி கண்டுபிடிக்கப்பட்டாள். தன்னை கைதுசெய்த பேக்கரை மேரி வசைபாடினாள், சாபமிட்டாள், பலவந்தமாக அவரிடமிருந்து திமிறி தப்பிக்க முனைந்தாள். காவலர்கள் ஒன்றாக சேர்ந்து மேரியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். மருத்துவமனையில் மேரி தப்பிக்க வழியில்லாமல் ஒரு தனித்த அறையில் தாளிடப்பட்டு மருத்துவக்காவலில் வைக்கப்பட்டாள். இது மேரியின் முதல் கைது.
1869ல் பிறந்த ஐரிஷ் பெண்ணான மேரி தனது அத்தையின் குடும்பத்துடன் பிழைப்புத்தேடி அமெரிக்கா வந்த போது அவருக்கு வயது 15 தான், 1883ல் மேரியின் உன்னத ஆங்கிலம் அமெரிக்காவில் அவருக்கு பெரிய வரவேற்பளித்தது அயர்லாந்தின் மிக வறிய பகுதியிலிருந்து அமெரிக்கா வந்த ஆயிரக்கணக்கான இளம்பெண்களைப்போல மேரியும் மேல்தட்டு குடும்பத்தினரின் பணிப்பெண்ணாக இருந்தார். மேரியின் பிறந்த ஊர் Cookstown, அதற்கு பொருத்தமாக மேரி நியூயார்க்கின் செல்வந்தர் வீடுகளில் சமையல் பணியில் மட்டும் இருந்தார்.
நியூயார்க் பகுதியில் அப்போது டைபாய்டு தொற்று பெருமளவில் இருந்தது, நோய் எப்படி பரவுகிறது என கண்டுபிடிக்கும் முயற்சிகள் அப்போது துவங்கி இருந்தன. தொற்றுப்பரவுதலின் காரணம் எவருக்கும் சரியாக தெரிந்திருக்கவில்ல. 1906 ல் மட்டும் 3467 நபர்களுக்கு டைபாய்டு பாதிப்பு இருந்ததும் அவற்றில் 639 இறப்பும் பதிவுசெய்யப்பட்டிருந்தது. உண்மையில் கணக்கில் வராத பல நூறு இறப்புக்களும் இருந்திருக்கலாம் என்றே கருதப்பட்டது.
அழுகிய பொருட்கள், மாசடைந்த நீர் அல்லது பால் ஆகியவற்றால் டைபாய்டு பரவும் என்னும் நம்பிக்கை மட்டும் நிலவியது. 1906ல் ஹோர்ரோக்ஸ் (Horrocks) என்பவர் கழிவுநீர்தொட்டியின் விஷவாயுக்களால் டைபாய்டு பரவும் என்று ஒரு ஆய்வறிக்கையை ராயல் சொஸைட்டிக்கு சமர்பித்திருந்தார். அவ்விஷயம் நிச்சயமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என அமெரிக்க மருத்துவ சங்க சஞ்சிகையும் அறிவித்தது.
சுகாதாரமற்ற குடிசைப்பகுதிகளில் மட்டுமல்லாது பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களுக்கு டைபாய்டு தொற்று உண்டானது, ,அவர்களின் சிகிச்சைக்கு கல்வி நிறுவனங்கள் பொறுப்பேற்றுக்கொண்டன. மிக தனித்திருந்த பல மாளிகைகளிலும் நகரைவிட்டு ஒதுங்கியிருந்த பல கிராமங்களிலும் கூட டைபாய்டு தொற்று உருவானது. எனினும் டைபாய்டு தொற்று பரவுவதன் காரணம் மர்மமாகவே இருந்தது.
டைபாய்டு வரலாறு
டைபாய்டு உலகெங்கிலும் முன்பே பரவி பல உயிர்களை காவு வாங்கி இருந்தது. கி மு 430ல் ஏதென்ஸில் கொள்ளைநோயாக பரவிய டைபாய்டு மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை அழித்தது.
1607 லிருந்து 1624 வரையிலான காலத்தில் வர்ஜீனியாவின் ஜேம்ஸ் டவுன் பகுதியில் சுமார் 6000 மக்கள் டைபாய்டினால் உயிரிழந்தார்கள்.
1853-56 வரை நடைபெற்ற க்ரைமியன்(Crimean) போரில் சுமார் 16,000 பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் டைபாய்டு தொற்றினால் உயிரிழந்தார்கள், போர்க்காயங்களால் இறந்தவர்கள் வெறும் 2600 பேர் மட்டுமே.1898 ல் நடந்த ஸ்பானிஷ்- அமெரிக்க போரில் 20 % அமெரிக்க வீரர்களுக்கு டைபாய்டு தொற்று உண்டானது.
இரண்டிலுமே சரியாக அகற்றப்படாத மனிதக் கழிவுகள் நீரில் கலந்ததால் டைபாய்டு நோயுண்டானது தெரியவந்தது.
முதன் முதலில் கார்ல் ஜோஸஃப் (Karl Joseph Eberth) 1880ல் டைபாய்டுக்கு பாசில்லஸ் வகை பாக்டீரியாக்களே காரணம் என கண்டறிந்தார். நான்காண்டுகளுக்கு பிறகு நோயியலாளர் ஜார்ஜ் காஃப்கி (Georg Gaffky) இதை உறுதி செய்து அந்த பாசில்லஸ் பாக்டீரியாவுக்கு Eberthella typhi, என பெயரிட்டார். அதுவே பிற்பாடு சால்மோனல்லா எண்டெரிக்கா (Salmonella enterica) என்றானது.
பேசில்லஸ் வகை பாக்டீரியாக்கள் டைபாய்டு நோயை உண்டாக்குவது 1880 ல் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே கார்ல் லிபேமெயிஸ்டர் ( Karl Liebermeister) இந்த கொள்ளை நோய் ஒரு மிகச்சிறிய, மனிதக்கழிவுகளில் காணப்படும் நோய்க்கிருமியினால் உருவாகிறது என்று அறிவித்தார்.
கார்ல் அவரது குழுவினருடன் இணைந்து மனிதக்கழிவினால் மாசடைந்த நீரினால் டைபாய்டு உருவாகிறது என்பதை நிரூபிக்கவும் முனைந்தார்
பிரிஸ்டல் பிரதேசத்தின் மருத்துவரான வில்லியம் பட்(William Budd) 1873ல் நோயாளிகளின் உடல் கழிவுகள் கலந்த நீரே டைபாய்டு தொற்றுக்கு காரணம் என உறுதிப்படுத்தினார்.
பட் ஒவ்வொரு டைபாய்டு தொற்றும், அதற்கு முந்தைய தொற்றின் நீட்சியே என்றும் தெரிவித்தார். அவர் மட்டுமல்லாது, உலகெங்கிலும் ஏராளமான மருத்துவர்கள் டைபாய்டு நோய் கிருமியை கண்டுபிடிக்க சோதனைகளையும் ஆய்வுகளையும் தொடர்ந்தனர்.
1879ல் மருத்துவர் கார்ல் ஜோசஃப் ( Karl Joseph Eberth,) டைபாய்டு நோயுற்று இறந்த ஒருவரின் பிரேத பரிசோதனையில் அவரது கணையத்தில் பேசில்லஸ் நோய்க்கிருமிகள் இருந்ததை கண்டுபிடித்தார்,அவரது கண்டுபிடிப்புகளை 1880-81 ல் வெளியிட்டார்
இந்த ஆய்வு முடிவுகளை ராபர்ட் காஃபும் அங்கீகரித்தார் டைபாய்டு நோய்க்கிருமியான சால்மோனெல்லா டைஃபி கண்டுபிடிக்கபட்ட போது,பலர் இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தாலும் இந்த பாக்டீரியாவிற்கு சால்மோனெல்லா என்னும் பெயர் அமெரிக்க கால்நடை நோயியிலாரும் USDA ஆய்வு திட்டங்களின் நிர்வாகியுமான சால்மனை (Daniel Elmer Salmon) கௌரவிக்கும் விதமாக வைக்கப்பட்டது.
ஆயிஸ்டர் பே தொற்று
1900களில் நியூயார்க்கில் டைபாய்டு காய்ச்சல் பரவ துவங்கி இருந்தது. திருமதி ஜார்ஜ் தாம்சன் நியூயார்க்கின் ஆயிஸ்டர் பே பகுதியிலிருந்த தனது ஆடம்பர மாளிகையை மேல்தட்டு மக்களுக்கு விடுமுறை காலங்களில் வாடகைக்கு விடுவதை ஒரு லாபகரமான தொழிலாக செய்து வந்தார். அவரே பணியாட்களையும் நியமித்துவிடுவதால் குடும்பமாக வந்து அங்கு தங்கி விடுமுறையை கழிக்க பலரும் வந்து கொண்டிருந்தனர்.
1906-7ல் நியூயார்க்கின் பல வங்கிகளின் சொந்தக்காரரும் பெரும் செல்வந்தருமான சார்லஸ் ஹென்றி வாரன் தனது குடும்ப உறுப்பினர்கள் மூவருடன் அந்த மாளிகைக்கு ஜூலை மாத இறுதியில் விடுமுறையை கழிக்க வந்திருந்தார். அங்கு பணியாட்கள் ஏழு பேர் நியமிக்கப்பட்டனர். ஆகஸ்ட்டிலேயே அங்கிருந்த 11 நபர்களில் 7 பேருக்கு டைபாய்டு தொற்று உண்டானது.
அச்சமயத்தில் டைபாய்டு இறப்புக்கள் அதிகமாக இருந்ததால் தொற்று வியாதிகளை உடனே ஆராயும் சிறப்பு அதிகாரிகள் இந்த ஆயிஸ்டர் பே நோய்த் தொற்று விஷயத்தை கையிலெடுத்துக்கொண்டு ஆராய்ந்தார்கள். எனினும் என்ன காரணத்தினால் தொடர்ந்து 7 பேருக்கு தீவிர டைபாய்டு தொற்று உருவானது என்று கண்டறிய முடியவில்லை. பல பக்கம் தட்டச்சிடப்பட்ட அறிக்கைகள் இந்த மர்ம நோய்த் தொற்றை குறித்து வெளியிடப்பட்டன எனினும் காரணமென்று எதையும் அவர்களால் குறிப்பிட்டுச்சொல்லமுடியவில்லை
திருமதி ஜார்ஜ் தாம்சனுக்கு இந்த மர்மம் தீர்க்கப்படாவிட்டால் அவரது மாளிகையை தொடர்ந்து வாடகைக்கு விட முடியாது என்னும் நெருக்கடி உண்டானது.அப்போது டைபாய்ட் அதிக நெருக்கடியான வாழிடங்களிலும் வறுமையான, சுகாதாரமற்ற இடங்களிலும் தான் உண்டாகும் என்னும் பரவலான கருத்து இருந்தது.
ஆனால் இப்படியான மிகத்தனித்த சொகுசு மாளிகைகளிலும். தொடர்ந்து டைபாய்டு தொற்று உருவானதால் திருமதி தாம்சன் அவரது மாளிகையின் பெயர் கெட்டுவிடக்கூடது என நினைத்து, ஜார்ஜ் சோபரை அந்த தொற்றுக்களை ஆராயும்படி கேட்டுக்கொண்டார்.
நியூயார்க் நல அமைச்சகத்தில் உடல்நல பொறியாளராக உயர் பதவியில் இருந்தவரான ஜார்ஜ் சோபர் (George Albert Soper II) அப்போது ’தொற்றுநோய் போராளி’ என்று அழைக்கப்படும் அளவுக்கு நோயால் பாதிக்கபட்டவர்களை தனிமைப்படுத்துவது, நோய் மீண்டும் மீண்டும் உருவாகும் வீடுகளை உரிமையாளர்களின் சம்மதத்துடன், அவரது மேற்பார்வையில் நெருப்பிட்டு எரிப்பதுமாக தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்.
ஆயிஸ்டர் பே பகுதியின் டைபாய்டு தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களிடம் ஜார்ஜ் அவர்களது சமீபத்திய பயணங்கள், என்ன உணவு உண்டார்கள், எங்கிருந்து நீர் எடுத்து உபயோக்கிறார்கள், நோய் எப்போது உருவானது போன்ற பல கேள்விகளுக்கான பதிலை எழுதி வைத்துக் கொண்டிருந்தார். இத்தனை ஆதாரங்களை திரட்டினாலும் தான் ஏதோ ஒரு மிக முக்கியமான விஷயத்தை தவற விடுகிறோம் என்று அவரது உள்ளுணர்வு சொல்லிக்கொண்டிருந்தது.
ஒருவழியாக ஆயிஸ்டர் பே பகுதியின் மிக மாசுபட்ட நீர்நிலை ஒன்றிலிருந்து இந்தியப் பெண்ணொருவர் கொண்டு வந்து விற்கும் கெட்டுப்போன சிப்பி மீன்களால் நோய் உருவாகி இருக்கலாம் என்று அவரது முடிவுகள் தெரிவித்தபோது உண்மைக்கு வெகு அருகில் வந்து விட்டதாக கருதினார். எனினும் டைபாய்டினால் பாதிக்கப்பட்ட பலரில் சிப்பிமீன்களை சாப்பிடாதவர்களும் இருந்தார்கள் எனவே அதுவும் காரணமல்ல என்றானது.
ஜார்ஜ் மனமுடைந்தார், அவரது உதவியாளர்களுடன அயராது நோய்த்தொற்று காரணத்தை கண்டுபிடிக்க பணியாற்றியும் எந்த பலனும் இல்லாமலேயே இருந்தது. ஜார்ஜ் சோபர் அவரது விசாரணையை தொடங்கிய 1906 ல். நியூயார்க்கில் 639 நோயாளிகள் டைபாய்டினால் உயிரிழந்திருந்தனர்
பின்னர் ஒரு குற்றத்தை துப்பறிபவர் போல நோய்த்தொற்றுடன் தொடர்புடைய ஒவ்வொரு நுட்பமான விஷயங்களையும் ஜார்ஜ் ஆராய தொடங்கினார்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கழிவுநீர்த்தொட்டி, புல்வெளிகளுக்கு உபயோகப்படுத்தும் உரம், குளியலறை, பாதிக்கப்பட்டவர்களின் வீட்டின் சுகாதாரம், அருகிலிருக்கும் வீடுகளின் சுகாதாரம் என்ன ஒவ்வொன்றாக ஆராய துவங்கினார். திருமதி தாம்சனின் மாளிகையிலும் அவர் ஆய்வுகளை செய்தார். எதிலுமே அவருக்கு பதில் கிடைக்காத போது ஒருவேளை வீட்டிற்கு வெளியிலிருந்து வந்துபோகும் தொற்று கொண்ட ஒருவரால் பாதிப்பு உண்டாகி இருக்குமோ என முதன் முதலாக அவருக்கு தோன்றியது.
ஏற்கனவே அவர் நல அமைச்சகத்தில் தொற்று நோய்களை குறித்து பல ஆய்வுகளை செய்திருந்தார். டைபாய்டு தொற்றுநோய் உருவாகி குணம் அடைந்தவர்கள் பல வாரங்களுக்கு அவர்களது சிறுநீரில் நோய்க்கிருமியை வெளியேற்றுவதை கவனித்து, சிறுநீரில் நோய்க்கிருமி இல்லாததை உறுதிப்படுத்திய பிறகே அவர்களை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பும் முடிவை மருத்துவர்களுடன் இணைந்து ஜார்ஜ் எடுத்திருந்தார்.
ஆய்வக சோதனைகள்
சிறுநீரில் இருக்கும் டைபாய்டு நோய்க்கிருமிகளை ஆய்வகத்தில் வளர்க்கும் வசதிகள் ஜார்ஜின் ஆய்வகத்தில் இருந்தது என்றாலும் நோயாளிகளின் மலத்தில் இருக்கும் கிருமிகளை கண்டுபிடிக்கும் சோதனை முறைகளை அவர் அப்போது மேற்கொண்டு இருக்கவில்லை.
1902ல் ஜெர்மெனியின் ட்ரியர் பகுதியில் (Trier) நடைபெற்ற டைபாய்டு தொற்று ஆய்வுகளில் கொன்ராடி மற்றும் ட்ரிகல்ஸ்கி ஆகியோரின்( Conradi and Drigalski) ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு புதுவித அகர்-அகர் ஊடகத்தை கொண்டு நோயாளிகளின் மலப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதை ராபர்ட் காஃப் ஒரு கட்டுரையில் தெரிவித்திருந்தார். ஜார்ஜுக்கு அது ஒரு திறப்பாக இருந்தது.
ராபர்ட்காஃபின் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு 1903 ல் வெளியான ஒரு சிறப்பு மருத்துவ மலரில் எந்த நோயறிகுறிகளும் இல்லாத, ஆனால் டைபாயிடு பாதிப்பு கொண்டிருப்பவர்களால் நோய்த்தொற்று பரவுவதை பல ஆய்வுக் கட்டுரைகள் குறிப்பிட்டிருந்தன.
மேரியும் டைபாய்டும்
அமெரிக்காவில் எங்குமே அப்படியான நோயறிகுறிகள் இல்லாத ஒருவரின் மலத்திலிருந்து நோய் தொற்று உருவானது முன்னர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. ஜார்ஜுக்கு அப்போதுதான் ஆயிஸ்டர் பே மாளிகை விசாரணையில் கவனத்தை ஈர்த்த சுகாதாரமற்றவள் என சிலரால் சுட்டிக்காட்டபட்ட பணிப்பெண் மேரி மேலன் கவனத்துக்கு வந்தார்.

மேரி அப்படியான ஒருவராக இருந்து அவரது சுகாதாரமின்மையால் அந்த மாளிகையில் தங்கி இருந்தவர்களுக்கு டைபாய்டு தொற்றை உண்டாக்கி இருக்கலாம் என்று ஜார்ஜ் நினைத்தார். ஆனால் மேரி அங்கிருந்து சென்று 6 மாதங்கள் ஆகிவிட்டிருந்தது,அவள் அப்போது எங்கு பணியாற்றுகிறார் என்பதை அவர் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது
ஆனால் மேரியை குறித்து,அவரது தோற்றம் குறித்தானவைகளை தவிர பெரிய அளவில் தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
அவருக்கு கிடைத்ததெல்லாம், ஐந்தடி ஆறங்குல உயரம் , நல்ல நிறம், கம்பீரமான உடற்கட்டு, பொன்னிற கூந்தலும் நீலக்கண்களுமாக மேரி மேலனை பார்த்ததும் அழகி என்று சொல்லிவிடலாம். மேரிக்கு உறவினர்கள் என்றும் குடும்பம் என்றும் சொல்லிக்கொள்ள யாருமில்லை. பல செல்வந்தர்களின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த மேரி ஒருபோதும் யாருக்கும் பணம் அனுப்பியதும் இல்லை என்பவையே.
திருமதி வாரன் மேரியின் சமையலை மட்டும் நினைவு கூர்ந்தார். பிற பணியாளர்களிடம் மேரி அத்தனை கலந்து பழகாததால் அவர்களாலும் மேரியைகுறித்து ஏதும் தெரிவிக்க முடியவில்லை. ஒரு சிலரிடமிருந்து மேரி அத்தனை சுகாதாரமானவரல்ல என்பதைத் தவிர முக்கிய தகவல்கள் ஏதும் ஜார்ஜுக்கு கிடைக்கவில்லை.
ஆனால் தொடர்ந்த விசாரணைகளில் கிடைத்த தேதிகள் பல உபயோகமான தகவல்களை தந்தன, அம்மாளிகையில் மேரி பணிக்கு சேர்ந்தது ஆகஸ்ட் 4, அங்கிருந்தோரில் முதல் நோய்த்தொற்று உருவானது ஆகஸ்ட் 27. கடைசி நபருக்கு டைபாய்டு வந்தது செப்டம்பர் 4 ஒவ்வொரு தொற்றுக்கும் இடையில் சரியாக 7 நாட்கள் இருந்ததும் முதல் தொற்று நிச்சயம் மேரி வந்தபின்னர் தான் உண்டானது என்பதையும் ஜார்ஜினால் திட்டவட்டமாகச் சொல்ல முடிந்தது.
ஆனாலும் வேகவைக்கப்படும் உணவுகளை தயாரிக்கும் ஒரு பணியாளரிடமிருந்து எப்படி குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் டைபாய்டு தொற்றியிருக்கும் என்பதையும் ஆராயவேண்டியிருந்தது.
நிச்சயம் வெப்பமூட்டப்படாத உணவிலிருந்தே நோய்க்கிருமி பரவியிருக்க முடியும் என்று முடிவெடுத்த பின்னர், துப்பறிதல் அந்த திசையை நோக்கி திரும்பியது. விசாரணையில் மேரி பணியாற்றிய வீடுகளில் ஒவ்வொரு ஞாயிரன்றும் அனைவருக்கும் பிடித்தமான புத்தம் புதிய பீச் பழங்கள் நறுக்கி போடப்பட்ட்ட ஐஸ்கிரீமை தனிப்பட்ட சுகாதாரத்தை குறிப்பாக கைகளில் பேணாத மேரி தயாரித்து கொடுத்தது தெரியவந்தது,
ஆனால் இன்னும் பலரை தொற்றுக்குள்ளாகும் நோய்க்கிருமிகளை உடலில் கொண்டிருக்கும், சுகாதாரமாக தன்னை பேணிக்கொள்ளாத மேரி எங்கே என்னும் கேள்வி விசாரணையின் முன்னர் நின்றிருந்தது
மேரிக்கு 45 டாலர் ஊதியமாக கொடுக்கப்பட்டதும், அவரை சமையல் வேலைக்கு நியமித்தது திருமதி ஸ்ட்ரைக்கர் நடத்திவந்த வீட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் என்றும் கண்டுபிடிக்க முடிந்தபோது மேரியை கொஞ்சம் நெருங்கி விட்டிருந்தார் ஜார்ஜ்.
ஆனால் மேரி ஓரிடத்தில் தொடர்ந்து வேலைசெய்யாததும், பல வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மூலம் வேலை பெற்றிருப்பதும், பல சமயங்களில் விளம்பரங்களின் பேரில் வேலைக்கு சேர்ந்ததும் தெரியவந்ததே தவிர மேரியின் அப்போதைய இருப்பிடம் யாராலும் கண்டுபிடிக்க முடியாததாக இருந்தது
முதல் கட்ட விசாரணைகளின் முடிவில் மேரி வேலைசெய்த 7 வீடுகளில் டைபாய்டு தொற்று ஒவ்வொருவருக்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் உண்டானது உறுதியானது.
கடைசியாக 1900 த்தில் மேரி மெமெரேனெக் பகுதியில் ஒரு குடும்பத்தினரின் கோடை விடுமுறை வாசஸ்தலத்தில் பணியாற்றியதும், விடுமுறைக்கு அங்கு வந்த ஒரு இளைஞருக்கு 10 நாட்களில் டைபாய்டு வந்ததும் தெரிய வந்தது. ஆனால் அந்த இளைஞன் டைபாய்டு தொற்று பரவி இருந்த ராணுவமுகாமொன்றின் அருகிலிருக்கும் நகரிலிருந்து வந்ததால் அவர் அங்கிருந்தே நோய் தொற்றுக்கு ஆளாகி இருக்ககூடும் என குடும்பத்தினர் எண்ணியிருந்தார்கள் மேரியை ஒருபோதும் ஒருவரும் சந்தேகித்திராத படிக்கு அவர் ஆரோக்கியமான ஆனால் டைபாய்டு தொற்றின் அறிகுறிகளற்ற நோயாளியாக இருந்திருந்தார்.
மேரி 1901-2ல் 11 மாதங்கள் ஒரு குடும்பத்தில் பணியாற்றியதும், அக்குடும்பத்தின் சலவைப்பணிப்பெண் டைபாய்டு தொற்றால் ரூஸ்வெல்ட் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டதும் ஜார்ஜுக்கு தெரியவந்தது. அந்த மருத்துவமனையில் நோயுற்ற அந்த பெண்ணுக்கு மருத்துவர் கார்லிசில் (Dr. R. J. Carlisle) சிகிச்சையளித்திருந்தார் எனினும், அவர் நோய்குறித்த விசாரணையில் ஈடுபடவில்லை
1902 ல் நியூயார்க்கின் பிரபல வழக்குரைஞரான கோல்மே டிரேடன் (Coleman Drayton,) மேரியை தான் கோடை விடுமுறைக்காலத்திற்கென வாடகைக்கு எடுத்திருந்த மேனே பகுதியின் (Maine), புதிய வீட்டுக்கு சமையல் பணிக்கென அழைத்துச்சென்றார்.
மேரி சென்ற 2 வாரங்களில் குடும்பத்தின் முதல் உறுப்பினருக்கு டைபாய்டு தொற்று உண்டானது அடுத்தடுத்து 1 வார இடைவெளியில் 9 பேர் கொண்ட அக்குடும்பத்தின் 7 பேருக்கு டைபாய்டு தொற்று உண்டானது.
திரு டிரேடனுக்கு முன்பே டைபாய்டு வந்து குணமாகி இருந்த்தால் அவருக்கும், மேரிக்கும் மட்டுமே டைபாய்டு வந்திருக்கவில்லை மேரியும் அவருமாக நோயுற்றவர்களை அருகிலிருந்து கவனித்து பணிவிடைசெய்தார்கள். மேரியின் அந்த கூடுதல் அன்பின்பொருட்டு தனது நன்றியை தெரிவித்த டிரேடன் அவருக்கு சம்பளத்துடன் கூடுதலாக 50 டாலர்கள் பரிசளித்தார்.
அந்த குடும்பத்தின் நோய்த்தொற்றை பாஸ்டனை சேர்ந்த மருத்துவர் டேனியலும், பிலடெல்ஃபியா மருத்துவரான லூயிஸும் ஆராய்ந்தனர். அவர்கள் முதல் மூன்று தொற்றுக்களும் வீட்டிற்கு வெளியே இருந்துதான் வந்திருக்குமென கருதினர். ஆனால் அந்த அறிக்கைகளை வாசித்த ஜார்ஜுக்கு அதில் ஒப்புதலில்லை. அவர்கள் மூவரும் ஒரே இடத்துக்கு சென்று வரவில்லை, ஒரே மாதிரியான உணவுகளையும் உண்டிருக்கவில்லை. அவர்கள் மூவரின் நோய்தொற்றுக்கும் பொதுவான ஒரு காரணமும் வெளியில் இருக்கவில்லை என்பதையும் ஜார்ஜ் கவனித்தார்
1904ல் நியூயார்க்கின் மக்கள் நெருக்கம் மிகுந்த தென்கிழக்குபகுதியின் நீள் தீவின் ஒரு வீட்டில் மேரி பணிக்கு சேர்ந்திருந்தார்.
அவர் பணியில் சேர்ந்த 10 ம் நாளிலிருந்து சலவைப்பணியாளர், சமையற்காரரின் மனைவி, மனைவியின் தங்கை என ஒவ்வொருவராக டைபாய்டு தொற்றுக்கு உள்ளாகினர்.அந்த வீட்டிலிருந்த 7 பணியாளர்களில், மேரியை தவிர அனைவரும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். பணியாளர்கள் அனைவரும் ஒரு வீட்டில் தங்கி இருந்ததால் அந்த வீட்டில் தொற்றுண்டாக்கும் காரணிகள் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இந்த நோய்த்தொற்றை பல மருத்துவக்குழுக்கள் ஆராய்ந்தார்கள் அவர்களில் நியூயார்க் நல அமைச்சத்தின் தொற்றுநோய் பிரிவின் கண்காணிப்பாளரான மருத்துவர் வில்சனும் இருந்தார். வில்சன் முதன்முதலில் தொற்றுக்குள்ளான சலவைப்பணிப்பெண் வீட்டுக்கு வெளியிலிருந்து நோயுடன் வந்திருக்கலாம் என சந்தேகித்தார் ஆனால் அவராலும் அதை உறுதிப்படுத்த முடியவில்லை.
1906 செப்ட்மப்ர் 21 லிருந்து அக்டோபர் 27 வரை மேரி டக்ஸிடோ பகுதியின் ஒருவீட்டில் சமையல் பணியிலிருந்தார் அவர் பணியில் சேர்ந்த 14 ம் நாளில் அவ்வீட்டின் ஒரு பணியாளர் டைபாய்டினால் பாதிக்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர் ரஷ்மோரினால் சிகிச்சையளிக்கப்பட்டார்.
நோய்தொற்றின் அறிகுறிகளற்றவராக இருந்த மேரி இந்த விசாரணைகளில் எங்குமே சந்தேக வளையத்துக்குள் வரவேயில்லை. அவரும் ஒரே இடத்தில் தொடர்ந்து அதிககாலம் பணியாற்றவும் இல்லை

ஜார்ஜ் இந்த தொற்றுக்களை துப்பறிய துவங்கிய 4 வது மாதத்தில் மேரி பார்க் அவன்யூ பகுதியின் ஒரு பழைய மோஸ்தர் வீட்டில் பணியில் இருந்தார், அவ்வீட்டின் மற்றொரு பணியாளர் மேரி வந்தபிறகு டைபாய்டு பாதிப்பினால் மருத்துவமனையில் சிகிச்சையிலும், அக்குடும்பத்தின் ஒரே பெண் குழந்தை டைபாய்டினால் உயிரிழக்கும் தருவாயிலும் இருந்ததை பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு ஜார்ஜ் அறிந்தார்.
மேரியே தொற்றுகளை உருவாக்கி இருக்கமுடியும் என ஜார்ஜ் நம்பியதால் முதன்முறையாக அந்த வீட்டின் சமையலறையில் மேரியைச் சந்தித்து உரையாடினார், பொறுமையாக பழைய சம்பவங்களை மேரிக்கு விளக்கி, தொற்றுக்களுக்கு மேரி காரணமாயிருக்கலாமென்றும் அதை ஆய்வக பரிசோதனைகளில் அறிந்துகொள்ளலாம் என்றும் விளக்கினார்.
மேரியின் சிறுநீர், ரத்தம் மற்றும் மலம் ஆகியவை சோதனைக்கு தேவைப்படுவதாக ஜார்ஜ் தெரிவித்தபோது ஒரு கூரிய முள்கரண்டியால் மேரி ஜார்ஜை தாக்கமுனைந்தார். அதிலிருந்து தப்பித்தவரை மேரி கூடத்திலும், தோட்டத்திலும் வெளிக்கதவு வரையிலுமே துரத்திக்கொண்டு வந்தார், ஜார்ஜ் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார்.
மேரியிடம் வேறு விதமாக கேட்டு அவற்றை பெற்று அவரது நோயையும் குணமாக்கி இருக்கலாம் என்று பிற்பாடு ஜார்ஜ் பலமுறை நினைத்ததுண்டு, ஆனால் சோதனைகளை செய்யாமலேயே மேரிதான் டைபாய்டு தொற்றுகளுக்கு காரணமென்று அவரது விசாரணை முடிவுகள் திட்டவட்டமாக தெரிவித்தன. எனினும் எப்படி அவர் காரணமாயிருந்தார் என்பதை அறியவே சோதனைகள் தேவைப்பட்டன. கழிவறையை உபயோகித்த பின்னர்,மேரியின் சுகாதாரமற்ற முறையில் பேணப்பட்ட கைகளே தொற்றுகிருமிகளை உணவின் வழியே பலருக்கும் பரப்பியிருந்தன என்பதை ஜார்ஜ் யூகித்திருந்தார்.
மிகத் தீவிரமான நோய்த் தொற்று மையமாக இருந்த மேரியை சிகிச்சைக்குள்ளாக்க வேண்டியது அப்போது கட்டாயமாகி இருந்தது. அணுகமுடியாதவராக இருந்த மேரியை தொடர்ந்து சென்று கண்காணித்த ஜார்ஜ் வேலைநேரத்துக்கு பிறகு 33 வது தெருவில், பகலில் முடிதிருத்தகமாகவும், இரவில் வசிப்பிடமாகவும் இருந்த ஒரு மாடியறையின் உரிமையாளரான சிகைதிருத்துனர் ஒருவருடன் மேரி நட்பில் இருந்ததையும் பல மாலைவேலைகளை அவருடன் செலவிட்டு இரவுணவை ஒன்றாக உண்பதையும் கண்டுபிடித்தார்.
மேரிக்கு தெரியாமல் அவருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்ட ஜார்ஜ் அந்த அறைக்கு ஒருமுறை சென்றிருந்தார். அத்தனை மோசமான அழுக்கும் குப்பையும் நிறைந்திருந்த ஒரு அறையை ஜார்ஜ் அதற்கு முன்னர் பார்த்திருக்கவில்லை, போதாக்குறைக்கு அங்கு மேரியின் பிரியத்துக்குரிய மயிரடர்ந்த ஒரு பெரிய நாயுமிருந்தது.
அந்த நண்பருடன் உடன்படிக்கை செய்துகொண்டு ஒரு மாலை டெட்ராய்டின் மருத்துவரான ரேமாண்டுடன் ஜார்ஜ் மேரி வருவதற்காக அந்த அறையிலேயே காத்திருந்தார்.
மாலை நண்பரைக்கான வந்த மேரிக்கு, ஜார்ஜ் அப்படி முன்னறிவிப்பின்றி அங்கு காத்திருந்தது கோபமூட்டியது. எனினும் முன்பே ஒத்திகை பார்த்திருந்த நல்லவிதமான உரையாடலினால் தாக்குதலை தவிர்த்து மேரியிடம் என்ன எதிர்பார்த்தார் என்பதை ஜார்ஜினால் தெரிவிக்க முடிந்தது.
ஆனால் மேரி தனக்கும், தான் பணி புரிந்த வீட்டின் டைபாய்டு தொற்றுக்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்பதை உறுதியாக தெரிவித்தார். அவர் பணி புரிந்த இடங்களில் மட்டுமல்ல அப்போது நாடெங்குமே டைபாய்டு இருந்ததும், மேரி நோயறிகுறிகளோ ஆரோக்கிய கேடுகளோ ஏதுமின்றி நலமுடன் இருந்ததும் மேரியின் தரப்பில் வலுவான ஆதாரங்களாக முன்வைக்கப்பட்டன.
விசாரணையில் முன்னேறிச்செல்ல முடியாமல் மீண்டும் சுவற்றில் முட்டிக்கொண்ட ஜார்ஜ், ரேமாண்டுடன் மாடியிலிருந்து பொழிந்த வசைமழையில் நனைந்தபடி திரும்பினார்.
பார்க் அவென்யூ பகுதியிலிருந்து வெளியேற மேரி முயற்சிப்பதை அறிந்த ஜார்ஜ் வேறு வழியின்றி காவல்துறையின் உதவியை நாடினார். மேரி நோய்த்தொற்றின் மையமாக இருப்பதால் அவரை பலவந்தமாகவேனும் அழைத்துவந்து அவரது உடல்கழிவுகளை சோதனைக்குள்ளாக்கவேண்டிய நிர்பந்தத்தை காவல் துறை உயரதிகாரிகளுக்கு நல அமைச்சகதின் மூலம் உருவாக்கினார்.
மீண்டும் ஒரு சாத்வீக முயற்சியாக மருத்துவர் ஜோஸபைன் (Josephine Baker) நல அமைச்சகத்திலிருந்து சென்று மேரியை இதன்பொருட்டு சந்தித்து முள்கரண்டிக்கு தாக்குதலுக்கு பதிலாக முகத்திலேயே கதவு அறைந்து சாத்தப்பட்டார்
பின்னரே அந்த ஐந்து மணி நேர பரபரப்பான கைது நிகழ்ந்தது.
தனிமைச்சிறை
தனிமைச்சிறையிலிருந்த மேரியின் உடல்கழிவுகள் வாரத்துக்கு மூன்று முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன ஆய்வுமுடிவுகள் மேரியின் உடல்கழிவுகளில் டைபாய்டு நோய்கிருமிகள் இருந்ததை உறுதிப்படுத்தின. 163 மாதிரிகளை சோதனையிட்டதில் 120 மாதிரிகள் சால்மோனல்லா நோய்கிருமியை கொண்டிருந்தன
மேரியின் நோயை குணப்படுத்த அளிக்கப்பட்ட எந்த சிகிச்சையிலும் நோய் குணமாகவில்லை அதாவது அவர் உடலிலிருந்து சால்மோனல்லா பாக்டீரியா வெளியேறவே இல்லை. மேரியை கருவுற்றிருக்கையில் அவரது தாய்க்கு டைபாய்டு உண்டாகி இருந்து கருக்குழந்தையாகவே மேரி டைபாய்டு தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என அனுமானிக்கப்பட்டது.
சோதனை முடிவுகளை அறிந்துகொண்ட பிறகும் மேரி கூச்சலிடுவதையும் வசைபாடுவதையும் நிறுத்தியிருக்கவில்லை. மேரி தனிமைப்படுத்தப்பட்டிருந்த அந்த தூய வெண்ணிற ஆறையில் ஒருநாள் ஜார்ஜ் மேரியை சந்தித்தார். தான் முன்பே கேட்டபோது ஒத்துழைத்திருந்தால் கைது செய்திருக்கவேண்டி வந்திருக்காது என்பதையும் மேரியினால் தொற்றுக்குள்ளாகி சிலர் உயிரிழந்தும் இருப்பதால் வேண்டுமென்றே செய்திருக்காவிட்டாலும் அவற்றிற்கு மேரிதான் காரணமென்பதை அப்போதாவது ஒத்துக்கொள்வாயா என்ற ஜார்ஜின் கேள்விக்கு ஆத்திரமும் கோபமும் கண்ணீரென திரண்டு நிறைந்திருந்த கண்களால் அவரை ஏறிட்டு பார்த்த மேரி பதிலேதும் சொல்லவில்லை.
மேரியிடம் தொடர்ந்து பேசிய ஜார்ஜ் கழிவறையை உபயோகிக்கையில், கழிவுகளிலிருந்த டைபாய்டு கிருமி மேரியின் கைகளுக்கு வந்து சரியாக சுத்தம் செய்யப்படாடத கைகளுடன் உணவு தயாரிக்கையில் அந்த உணவின் வழியாக அதை உண்டவர்களின் உடலுக்குள் சென்று அவர்களுக்கு டைபாய்டை உருவாக்கியதை விவரித்து, மேரி தனது கைகளை நன்கு கழுவி சுகாதாரமாக வைத்து கொண்டிருந்தாலே நோய் உருவாகி இருக்காது என்பதை விளக்கினார்.
அப்போதும் மேரி எந்த பதிலும் அளிக்காமல் ஜார்ஜை உற்றுநோக்கிக்கொண்டிருந்தாள். தொடர்ந்த ஜார்ஜ் ’’என் கேள்விகளுக்கு மட்டும் நீ பதில் சொன்னால் போதும் உனக்கும் சிகிச்சையளித்து உன்னால் மற்றவர்களும் பாதிக்கப்படாமல் காப்பாற்ற முடியும். உன்னை குறித்து உன் அடையாளங்களை வெளியிடாமல் ஒரு புத்தகமும் எழுதுகிறேன், அந்த புத்தகத்தின் லாபம் அனைத்தையும் உனக்கே அளிக்கிறேன்’’ என்று சொல்லிகொண்டிருக்கையில் அவர்மீது வைத்த கண்ணை எடுக்காமலேயே குளியலறைக்குச் சென்று கதவை அறைந்து மூடி மேரி தாளிட்டுக்கொண்டாள்.
மீண்டும் ஜார்ஜ் மேரியை சந்தித்த போது அவள் நார்த் பிரதர் தீவில் ஒரு வசதியான பங்களாவில் சிறைவைக்கப்பட்டிருந்தாள். செவிலியர்கள் மேரிக்கு உதவ அங்கு பணியிலிருந்தார்கள், மேரிக்கு தேவையான பொருட்கள் அளிக்கப்பட்டு அவரே அங்கு சமைத்து சாப்பிட்டு கொண்டு சுகமாக இருந்தாள். நவீன வசதிகள் அனைத்தும் கொண்ட அந்த வீடு ஒரு ஆற்றங்கரையில் தேவாலயத்திற்கருகில் அமைந்திருந்தது.
மேரியின் பித்தப்பையில் டைபாய்டு நோய்கிருமிகள் ஏராளமாக வளர்ந்துகொண்டிருப்பதால் அதை அறுவை சிகிச்சையில் நீக்க வேண்டும் என பலமுறை எச்சரித்தும், வேண்டியும் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர். மேரி கடைசிவரை அதற்கும் சம்மதிக்கவே இல்லை.
இரண்டுவருட வீட்டுக்காவலுக்குப் பின்னர் மேரி மிக சாமார்த்தியமான வழக்குரைஞரான ஜார்ஜ் ஃப்ரேன்சிஸின் (George Francis O’Neil) மூலம் தன்னை விடுதலை செய்ய வேண்டி உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்
வழக்குக்கு தேவையான பணம் வில்லியம் ரேண்டோல்ஃப் (William Randolph Hearst), என்னும் நாளிதழ் உரிமையாளரால் அளிக்கப்பட்டது. சுவாரஸ்யமான வழக்குகளை நாளிதழ்களில் வெளியிட்டு வாசக வரவேற்பை பெறுவது அவருக்கு வாடிக்கையான விஷயம்.
இலக்கண சுத்தமான ,முத்து முத்தான கையெழுத்தில் எழுதுவது மேரிக்கு பிடித்தமானது தனிமைச்சிறையிலிருநது அவரது வக்கீலுக்கு மேரி நீள நீளமான கடிதங்கள் எழுதினார்
மேரியின் விடுதலைக்காக மிக தீவிரமான வழக்கு விவாதங்கள் அப்போது நடைபெற்றன. தான் ஆரோக்கியமானவள் என்றும் தன்னால் டைபாய்டு பரவி இருக்க வாய்ப்பில்லை என்றும், எந்த குற்றமும் செய்திருக்காத தன்னை சட்டநெறிகளை முறையாக பின்பற்றாமல் கைதுசெய்துவிட்டார்கள் என நோய்க்கிருமிகள் கண்டறியப்படாத ஆய்வக முடிவுகளை முன்வைத்து மேரியின் தரப்பில் வாதிக்கப்பட்டது
அந்த வழக்கு விசாரணையை தினம் தினம் வெளியிட்ட நாளிதழ்கள் மேரியை ஆரோக்கியமான, ஆற்றல் கொண்ட, பளிச்சிடும் கண்களுடைய அழகிய பெண் என வர்ணித்தன.
நல அமைச்சகத்தின் தரப்பில் ஆரோக்கியமாக தோற்றமளித்தாலும் டைபாய்டு கிருமிகளை உடல்கழிவுகளில் கொண்டிருக்கும் மேரியை விடுவிப்பது டைபாய்டால் பாதிக்கப்பட்டிருக்கும் சமூகத்திற்கு மேலும் தீங்கு விளைவிக்கும் என வாதிடப்பட்டதால் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்து மேரியை விடுவிக்கும் பொறுப்பை தாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தது.
மேரியின் வழக்கு விசரணைகளின் போது நாளிதழ்களில் மேரி மண்டையோடுகளை வாணலியில் இட்டு சமைப்பதுபோன்ற சித்திரங்கள் வெளியாகின
மேரியின் வழக்கை மேற்கோள் காட்டி பொது இடங்களில் கைகளை அடிக்கடி கழுவுவதன் முக்கியத்துவம் சுவரொட்டிகளின் மூலம் தெரியப்படுத்தப்பட்டது. சமீபத்தில்தான் நாம் அனைவரும் கொரோனா தொற்றின் போது இதே போன்ற அறிவிப்புக்களை அன்றாடம் சந்தித்திருந்தோம்.
நியூயார்க் அமெரிக்கன் நாளிதழ் மேரியை 1909ல் டைபாய்டு மேரி என்று அழைத்தது, பின்னரதுவே அவரது பெயராகியது
இரண்டு வருடங்களும் 7 மாதங்களும் அந்த வீட்டுக்காவலில் இருந்த மேரியை நல அமைச்சகத்தின் புதிய கண்காணிப்பளர் விடுதலை செய்ய முன்வந்தார். இனி சமையல் பணிக்கு செல்வதில்லை, பிறரின் உணவுகளை ஒருபோதும் கையாளுவதில்லை, தன் உடலை சுகாதாரமான முறையில் நிச்சயம் பேணிக்கொள்ள வேண்டும் என்பவை உள்ளிட பல நிபந்தனைகளின் பேரில் , ஒவ்வொரு மூன்று மாதத்திற்கொருமுறையும் அவர் தன்னை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்னும் கூடுதல் ஆணையின் பேரிலும் மேரி விடுதலை செய்யபட்டாள்.
இந்த தண்டனைக்காலத்தில் மேரி தன்னால் சமுதாயத்துக்கு நேர்ந்த சிரமங்களை உணர்ந்திருப்பார் என்னும் நம்பிக்கையின் பேரிலேயெ அந்த விடுதலை நடைபெற்றது
ஆனால் நல அமைச்சகத்துக்கு தான் அளித்த உறுதிமொழிகளை காற்றில் பறக்கவிட்ட மேரி மீண்டும் மறைந்துபோனாள்.
உயர்மட்ட குடும்பங்கள் தங்களுக்கான பணியாளர்களை திருமதி ஸ்ட்ரைக்கர் மற்றும் திருமதி ஷேலா ஆகியோரின் வேலைவாய்ப்பு நிறுவனங்களிலிருந்தே அமர்த்திக்கொண்டார்கள், எனவே அந்நிறுவனக்களில் தன் அடையாளத்தை மறைக்க முடியாத மேரியினால் வீடுகளில் முன்புபோல பணிக்கு செல்லமுடியவில்லை.
தன்பெயரை மேரி பிஷஃப் என்றும் திருமதி பிரெளன் என்றும் அவ்வப்போது மாற்றிக்கொண்டு பல நட்சத்திர விடுதிகளிலும் உணவகங்களிலும் நோய் சிகிச்சைக்கு பிறகு மக்கள் தங்கி ஓய்வெடுக்கும் நலமையங்களிலும் (sanatoria) மேரி தொடர்ந்து சமையல்பணிகளை செய்துவந்தாள், மேரியின் கைகளின் வழியே டைபாய்டும் பரவிக்கொண்டே இருந்தது.
ஒரு நலவிடுதியில் மேரி தானே வீட்டில் இருந்து தயாரித்து கொண்டுவந்த அஜீரண கோளாறுக்கான மருந்தை உண்ட ஒருவர் டைபாய்டு தொற்றுக்குள்ளாகி தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார், மேரி பணிபுரிந்த மற்றுமொரு நவீன விடுதியில் உணவருந்திய இரு குழந்தைகள் டைபாய்டினால் தீவிரமாக பாதிக்கப்பட்டன.
தொடர்ந்த ஐந்து வருடங்களில் தன் அடையாளத்தை மாற்றிகொண்டு டைபாய்டை பரப்பிகொண்டே இருந்த மேரியை அதிகாரிகள் எத்தனை முயன்றும் கண்டுபிடிக்கவே முடியவில்லை,
அவளது ’’டைபாய்ட் மேரி’’ என்னும் பெயர் அப்பொது புழக்கத்தில் வந்திருந்தது வீடுகளில் பணிசெய்யும் வசதியும், சுதந்திரமும், சம்பளமும் மேரிக்கு விடுதிகளில் கிடைக்கவில்லை பணிச்சுமையும் கூடுதலாக இருந்தது அவளால் பிறபணியாளர்களுடண் சுமுகமான உறவையும் ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை.
ஜார்ஜ் சோபர் மேரியின் வழக்கை நல அமைச்சகத்துக்கு அறிக்கையாக சமர்ப்பித்து, அவளது கைதுக்குப்பின்னர் அந்த வழக்கிலிருந்து விலகி விட்டிருந்தார், ஒரு நாள் ஸ்லோன் பெண்கள் (Sloane) மருத்துவமனையின் தலைமை மகப்பேறியல் மருத்துவரான எட்வர்டு, ஜார்ஜை தொலைபேசியில் அழைத்து ’’ஒரு அதிமுக்கியமான விஷயம் குறித்து பேச மருத்துவமனைக்கு உடனே வரமுடியுமா?’’ என கேட்டிருந்தார்
அங்கு ஜார்ஜ் சென்றபோது தன் மருத்துவமனையில் தங்கி இருக்கும் கர்ப்பிணிகளில் 20 பேருக்கு தீவிர டைபாய்டு பாதித்திருப்பதாகவும் பிற செவிலிகள் வேடிக்கையாக அங்கு சமையல்பணியிலிருக்கும் பெண் ’டைபாய்டு மேரியாக இருப்பாள் போல’ என்று பேசிச்சிரித்து கொள்வதால் ஒருவேளை அது உண்மையிலேயே அதே மேரியா என சரிபார்க்க முடியுமா? என கேட்டார். அப்போது வேறு பெயரில் அங்கிருந்த மேரி வெளியே சென்றிருந்தாள் ஆனால் அவளைகுறித்த வர்ணனைகளும் அவளது முத்துமுத்தான கையெழுத்தில் எழுதப்பட்ட சில ஆவணங்களும் அது மேரியேதான் என சந்தேகத்துக்கிடமின்றி காட்டின.
மீண்டும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேரி கைதுசெய்யப்பட்டாள் இம்முறை மேரி எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. மீண்டும் அதே பழைய சொகுசு வீட்டுகாவலில் வைக்கப்பட்டாள்.
அந்த இரண்டாம் தண்டனைக்காலம் 23 ஆண்டுகள் நீடித்தது, மேரி அந்த நீண்ட காலத்தில் ஒருமுறைகூட தப்பிக்க முயலவில்லை அமைதியாகவே அங்கு வாழ்ந்தாள். அவள் தான் எத்தனை அபாயகரமானவள் என்று உணர்ந்திருந்தாளா அல்லது தான் செய்தவற்றிற்கு அந்த தண்டனை தேவைதான் என நினைத்து அமைதியாக இருந்தாளா அல்லது இனி வெளியில் இருந்து மறைந்து வாழ்ந்து வருமானமின்றி சிரமப்படுவதற்கு சொகுசான வீட்டுக்காவலே பரவாயில்லை என நினைத்துக்கொண்டாளா என்பது மேரி மட்டுமே அறிந்த ஒன்று.
அல்லது அவளது வழக்குரைஞர் சொல்லியதுபோல ஒரு குற்றவாளியாக கருதி அவளை சமூகம் புறக்கணித்ததில் காயப்பட்டு சமுகத்திலிருந்து விலகி இருக்கும் அந்த தண்டணையை அவள் விரும்பி ஏற்றுக்கொண்டுமிருக்கலாம்.
அப்பொது 48 வயதாயிருந்த மேரி நல்ல உடலாரோக்கியத்துடன் இருந்தாள். முன்பு வேலியை தாண்டி குதித்து காவலர்களுடன் சண்டையிட்ட அதே வலிமையும் அவளுக்கிருந்தது, எனினும் அமைதியாகவே அந்த வீட்டில் அவள் இருந்தாள்.
மேரிக்கு கணிசமான உதவித்தொகை அப்போது வழங்கப்பட்டது. மேரியிடம் யாருமே அவளது கடந்த காலத்தை குறித்து பேசவில்லை.
அவ்வப்போது மேரி அந்த தீவில் காவலர்களின் துணையின்றி வெளியே சென்று வரத்துவங்கினாள், சமயங்களில் அத்தீவில் நெடுந்தொலைவில் இருந்த அவளுக்கு வேண்டிய ஒரு குடும்பத்தை பார்த்து வரவும் சென்றிருக்கிறாள், ஆனால் அக்குடும்பம் மேரியின் வரவை விரும்பியிருக்கவில்லை
ஓரிரு வர்த்தைகளை தவிர அதிகமாக யாருடனும் அக்காலத்தில் மேரி பேசி இருக்கவில்லை. மேரியின் காதல்களை பற்றி கேட்ட ஒரு பெண்ணை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த மேரி ஒரு பதிலும் சொல்லாமல் எழுந்து போனதை பிற்பாடு அந்த பெண் தெரிவித்திருந்தாள். தண்டனைக்காலமாகிய 24 வருடங்களுமே மேரிக்கு டைபாய்டு இருந்தது எந்த நோய் அறிகுறிகளுமின்றி.
1932 ன் கிருஸ்துமஸ் தினத்தன்று மேரிக்கு ஒரு பரிசைகொண்டு வந்தவர் அந்த பங்களாவின் கூடத்தில் மேரி சுயநினைவின்றி விழுந்து கிடப்பதை கண்டார். மேரிக்கு மூளை ரத்தக்கசிவினால் பக்கவாதம் உண்டாகி இருந்தது. உடலின் ஒரு பாதி செயலிழந்த மேரி அதன்பிறகு 6 வருடங்கள் படுத்த படுக்கையாக இருந்தாள், மேரியை மருத்துவர்கள் நன்கு கவனித்துக்கொண்டார்கள்.
நவம்பர் 11 1938ல் நிமோனியா பாதிப்பால் தனது 69 ம் வயதில் மேரி உயிரிழந்தாள். அவளது பிரேதம் அவசர அவசரமாக பிணப்பரிசோதனை கூட செய்யப்படாமல் எரிக்கப்பட்டு, சாம்பல், அவளுக்கென்றே முன்பே தயாராகி இருந்த பிரான்க்ஸ் பகுதியின் தேவாலயமொன்றின் கல்லறையில் புதைக்கப்பட்டது
பலருடன் கலந்து வாழ்ந்து பலருக்கு நோயளித்த மேரியின் சவஅடக்கம் அவள் வாழ்ந்த வாழ்விற்கு முரணாகவும் துயர்மிகுந்ததாகவும் இருந்தது.
புனித லியூக் பகுதியின் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் அவளது இறுதிக்காரியங்கள் நடைபெற்றது. மேரியை அந்த தண்டனைக்காலத்தில் பார்த்திருந்த 9 பேர் மட்டும் தேவாலயத்தில் இருந்தனர். அவர்களில் ஒருவர் கூட சவ ஊர்வலத்தில் கலந்துகொள்ளவில்லை மேரியின் சாம்பல் கல்லறை தோட்டத்துக்கு தன்னந்தனியே தான் பயணித்தது.
மேரியினால் டைபாய்டு தொற்றுக்காளானவர்கள் 59 பேர், அவர்களில் உயிரிழந்தவர்கள் 3 பேரென்று அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. டைபாய்டு தொற்று ஏன் உண்டானது என்று தெரியாமலேயே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது மிகச்சிறியதுதான் எனினும் வெளிச்சத்துக்கு வராத மேரியினால் தொற்றுண்டானவர்களின் எண்ணிக்கை மிக அதிகமானதாக இருக்குமென்றும் யூகிக்கப்படுகின்றது.
மேரி இறப்பதற்குள் நியூயார்க் சுகாதார அதிகாரிகள் சால்மோனல்லா டைஃபியின் 400 க்கும் மேற்பட்ட ஆரோக்கியமான நோய்த்தொற்று மையங்களாக செயல்பட்டவர்களை அடையாளம் கண்டனர், ஆனால் வேறு யாரும் வலுக்கட்டாயமாக மேரியைப்போல அடைத்துவைக்கப்படவில்லை.
அந்த இரண்டாவது நீண்ட தண்டனைக்காலத்தில் சிறையிலிருந்த மேரியை ஒருமுறைகூட யாரும் வந்து சந்தித்ததில்லை, மேரி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கையில் ஒரு மாதம் தொடர்ந்து ப்ரான்க்ஸ் மாகாண நாளிதழ்களில் பலமுறை விளம்பரம் செய்தும் கூட அவரை பொறுப்பேற்றுக்கொள்ள எவரும் முன்வரவில்லை.
ப்ரான்க்ஸ் கடலோர பகுதியில் 16 ஏக்கர் பரப்பலவுள்லள சொகுசு பங்களாவில் ஃபாக்ஸ் டெரியர் வகை நாய் மட்டுமே மேரிக்கு துணையாக இருந்த்து
- இப்போது டைபாய்ட் மேரி என்னும் பெயர் தெரிந்தோ தெரியாமலோ நோயை பரப்புபவர்களின் பொதுப்பெயராக மருத்துவ உலகில் புழங்குகிறது
- மார்வெல் காமிக் கதைகளில் ஒரு சூப்பர் வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் Typhoid Mary Fisk.
- நியூயார்க்கின் பிரபல ஹிப்ஹாப் இசைகுழுவொன்றின் பெயரும் Hail Mary Mallon தான்.
- அமெரிக்க மருத்துவ உலகை பின்புலமாக கொண்ட தொலைக்காட்சி தொடரான The Knick மேரியை ’மெலிஸா’ என்னும் கதாபாத்திரமாக்கி பல செல்வந்தர்களின் வீடுகளில் அவர் நோயை உருவாக்குவது போல சித்தரிக்கிறது
- மேரியின் சமையலறைக்கத்தி Warehouse 13 தொடரில் பலருக்கு நோயைபரப்பும் ஒரு பொருளாக காட்டப்பட்டிருந்தது.
- மேரியின் வாழ்க்கை Typhoid Mary: An Urban Historical என்னும் பெயரில் 2001ல் Anthony Bourdain என்பவரால் எழுதப்பட்டு வெளியானது
ஜார்ஜ் நடத்திய ஆயிஸ்டர் பே தொற்று விசாரணையில் தெரியவந்தது மேரியின் வாழ்வின் ஒரு சிறு துண்டு மட்டுமே அதுவே அவரை நுண்ணுரியல் வரலாற்றில் டைபாய்டு மேரி எனும் பெயருடன் நிலைத்து நிற்கச் செய்துவிட்டது. நோய் அறிகுறிகள் ஏதுமின்றி டைபாய்டை பலருக்கு தொடர்ந்து பரப்பிய மேரி மருத்துவ வரலாற்றில் ஒரு விநோதமென்றால் அவ்வகையான தொற்றுக்கள் ஆரோக்கியமாக தோற்றமளிக்கும் மனிதர்களாலும் பரவும் என யூகித்து மேரியை தொடர்ந்து சென்ற ஜார்ஜ் உள்ளிட்ட மருத்துவர்களும் வரலாற்றில் அபூர்வமானவர்களே!
மேலதிக தகவல்களுக்கு:
அருமையான தகவல்கள் நிறைந்த கட்டுரை. வாழ்த்துகள்.