ஜோ ரோகன் – புதுயுகத்தின் கலாச்சார நிகழ்வு

இன்ஃப்ளூயன்சர்

அமெரிக்காவில் கருத்துகளை, ரசனையை உருவாக்குவார்கள் இன்றைய தொழில்நுட்ப சாத்தியங்களால் அமெரிக்காவைத் தாண்டியும் தங்கள் தாக்கத்தை செலுத்துபவர்களாக இருப்பதைப் பார்க்கலாம். அமெரிக்கா இன்று விரும்புவதை/கண்டுபிடித்ததை நாளை உலகமே விரும்பி ஏற்றுக்கொள்ளும் என்பது குறிப்பிட்ட அளவுவரை சரிதான். அனைவருக்கும் தெரிந்த இரு உதாரணங்களைச் சுட்டலாமெனில் கலைத் துறையில் மைக்கேல் ஜாக்சன், அரசியலில் அதிபர் ஒபாமா. அவ்வாறு பல துறைகளில் சுவைகளை உருவாக்குவராக, பலரின் மேல் தாக்கத்தை செலுத்துபவராக இப்போதிருக்கும் நட்சத்திரம் ஜோ ரோகன். 1980களுக்குப் பின் பிறந்த பலருக்கு ஆதர்சமாக விளங்கும் அவரின் இந்த உலகளாவிய புகழுக்கு (பிரதானமான) காரணம் “ஜோ ரோகன் அனுபவம்”(Joe Rogan Experience) சுருக்கமாக ஜே.ஆர்.இ எனப்படும் பாட்காஸ்ட்டுகள் தான்.  முன் தயாரித்த கேள்விகள் இல்லாமல், பேட்டி கொடுப்பவரின் பதில்களில் இருந்து அடுத்த கேள்விகள் என மூன்று மணிநேரத்தில் இருந்து அதிகமாக நான்கைந்து மணி நேரம் வரைகூட நீளும் பேட்டிகள் தான் “ஜோ ரோகன் அனுபவம்”. முறைப்படுத்தப்பட்ட ஒழுங்கு இல்லாததனால் இப்பேட்டிகள் வானத்தின் கீழ் பூமிக்கு மேலே உள்ள அனைத்து விஷயங்களையும் ரோகனும், பேட்டி கொடுப்பவரும் பேசிக்கொள்ளும் இயல்பான உரையாடலாக அமைகிறது. கச்சிதம் என்பதோ, துறைசார் முழுமை என்பதோ இதன் இலக்கு அல்ல என்பதால் மட்டுறுத்தலோ, தவிர்க்கப்பட வேண்டிய தலைப்புகளோ பெரும்பாலும் இல்லை எனலாம். ஆனாலும் பாட்காஸ்ட்டுகளாக ஸ்பாட்டிபையிலும், யூடியூப்பில் முழுவடிவிலும்(2021 வரை), சிறிய துண்டுகளாவும் வெளிவரும் அவற்றை  நியூயார்க் டைம்ஸ் உலகிலேயே அதிக அளவு நுகரப்படும் ஊடகப் பொருளாகக் குறிப்பிடுகிறது.1

சிரிக்கவைக்கும் சண்டைகாரன்

தன்னை முதலில் ஒரு ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையாளராகவும் சக நகைச்சுவையாளர்களுடன் இயல்பாக உணர்வதாக கூறிக்கொள்ளும் ரோகன் உண்மையில் பல தளங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வெற்றி தோல்விகளின், புகழின் பல அடுக்குகளை தாண்டியே இந்த இடத்தை அடைந்திருப்பதாக சொல்லலாம். கலாச்சார போலி பாவனைகளையும், அன்றாட அரசியல் நிகழ்வுகளையும் நையாண்டி செய்யும் வேளையில் ஆழமான சமூக விமர்சனங்களை வைக்கும் புகழ்பெற்ற ஜார்ஜ் கார்லின், ரிச்சர்ட் ப்ரேயர் போன்றவர்களின் நகைச்சுவை தொடர்ச்சியாக தன்னைப் பார்க்கிறார். வெறும் பெயருக்கு இல்லாமல் மேற்கூறியவர்களின் நகைச்சுவை துணுக்குகளைப்  பேட்டிகளுக்குக்கிடையே நினைவு கூறுவதை பலமுறை கண்டிருக்கிறேன். ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையாளராக வெற்றி பெறுவதற்கு முதலில் தனித்துவமான வெளிப்பாட்டு முறை தேவை. நகைச்சுவைத் துணுக்களை ஒப்பிக்கக் கூடாது, பார்வையாளரின் எதிர்வினையைக் கணக்கில் கொண்டு பயணிக்க வேண்டும். இரண்டாவது விந்தையான பார்வைக் கோணம், சமயங்களில் சிலரை முகங்சுளிக்க வைக்கும் பிறழ்நோக்கு என்று கூட சொல்லலாம். இவை இரண்டும் ரோகனிடம் இருப்பதை நாம் எளிதில் அறியலாம்,  ஆனால் நகைச்சுவையாளராக அவர் துவங்கிய தொண்ணூறுகளில் புகழடைந்தாரா? தனித்தன்மை கொண்டிருந்தாரா?  என்பது குறித்து இருவேறு கருத்துக்கள் இருக்கின்றன. தனிப்பட்ட முறையில் எனக்கு அவரின் நகைச்சுவைத் துணுக்கள் ஈர்க்கவில்லை, இருப்பினும் அவரின் வளர்ப்பு மிருகங்களைப் பற்றிய நகைச்சுவையும், பெண்களின் பேராசைகள் பற்றியவையும் முக்கியமானதாக டாக்டர் கார்னெல் வெஸ்ட் போன்றவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். ரோகனின் அடுத்த ஆர்வம் கூட்டுத்தற்காப்புக்கலைகளில்(mixed martial arts), அதிலும் கூண்டில் நிகழும் சண்டையான யூஎப்சியில்(எண்கோண வளையத்தில் கைகள், கால்கள் இரண்டையும் பயன்படுத்தி குறிப்பிட்ட எடை பிரிவில் இருவர் பங்குகொள்ளும் சண்டை) வர்ணனையாளராக அதன் துவக்கம்(1997) முதல் இன்றுவரை இருந்து வருகிறார். அதில் மிகச் சிறந்தவராக கருதபட்டு பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். சண்டையின் உச்சத்தில் உற்சாக மிகுதியில் ரோகன் கட்டை குரலில் கத்துவதும் வர்ணனையாகவே கருதப்படுவது விசித்திரம் தான். வர்ணனையை தாண்டி அவரும் இளமை முதலே டேக்வாண்டோ பயிற்சி பெற்று கருப்புப் பட்டை வென்றவர். சொந்த வாழ்வின் நெருக்கடிகளே தன் முழு ஆற்றலையும் டேக்வாண்டோ பயிற்சிகள் நோக்கித் தள்ளியதாக குறிப்பிட்டிருக்கிறார். ஜிஜிட்சு பிரேசிலிக்குச் சென்று அங்கு கற்றவர். உடற்பயிற்சி, உணவு மற்றும் ஊக்க மருந்துகள் சார்ந்து தனிப்பார்வை கொண்டவர். அவர் உரையாடல்களில் நகைச்சுவைத் துணுக்குகளும், பிறர்போல் பேசுவதும், கூட்டுத்தற்காப்புக்கலை நுட்பங்களும் மீண்டும் மீண்டும் இடம்பெறுவதால் அவரின் ஆளுமையில் அவை பெரும் பாதிப்பை செலுத்தி இருப்பதை எளிதாக கணிக்கலாம்.

தொலைக்காட்சிப் பிரபலம்

‘நியூஸ் ரேடியோ’ போன்ற பிரபலமான தொலைக்காட்சி நாடகங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தாலும் அவரின் புகழ் அடுக்கில் அடுத்த கட்ட நகர்வை சாத்தியமாகியது 2001 முதல் 2006 வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய ‘பியர் பாக்டர்’ (Fear Factor) என்னும் என்பிசியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி தான். “உங்கள் உலகின் மிகப் பெரிய பயங்கள் நிஜமானால் எப்படி இருக்கும்” என்ற அறிவிப்புடன் துவங்கும் நிகழ்ச்சியில், ஒவ்வொரு போட்டியாளரும் மூன்று அல்லது நான்கு கட்டங்களாக உடல் மற்றும் மனம் சார்ந்த சோதனைகளை தாக்குப்பிடிக்கும் திறனைக் கொண்டு வெற்றியாளர் தேர்வு நடக்கும். அதில் இயல்பிற்கு புறம்பாக பூச்சிகளை உண்பது, கண்ணாடிப் பெட்டியில் படுத்திருக்க எலிகளை மேலே ஊற விடுவது, விஷமில்லா பாம்புகள் நெளியும் குடுவைக்குள் தலையை விடுவது போன்ற மனங்கோணவைக்கும் சோதனைகளும், பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து கடலில் குதிப்பது, அதிவேகமாக செல்லும் ஒரு படகில் இருந்து மற்றொன்றிற்கு குதிப்பது போன்ற உடல்சார்ந்த சோதனைகளும் இருக்கும்.  அதன் நெறியாளராக செயல்பட்ட ஜோ ரோகன், அந்த அனுபவங்களை உதிரியாக பல இடங்களில் பதிவுசெய்திருக்கிறார். அவற்றை இரு விஷயங்களில் அடக்கலாம், ஒன்று பியர் பாக்டர் தொடரின் நெறியாளராக ஒப்புக்கொள்ள முக்கியக் காரணம் பணம், அடுத்தது அதிலிருந்து தன் ஸ்டாண்ட்-அப்பிற்கு நகைச்சுவைத் துணுக்குகளை சேகரிக்கலாம் என்பதே. சில இடங்களில் அந்நிகழ்ச்சி பெரிய வெற்றியோ வரவேற்போ பெறாது என நினைத்ததாகவும், அது வணிகரீதியாக வெற்றி பெற்றது அதில் ஆறு ஆண்டுகள் தொடரக் காரணமாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு மாற்றாக சிலர் குறிப்பிடுவது அன்றைய நிலையில் பிரபலங்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன் ஒப்பிட்டால் பியர் பாக்டர் நிகழ்ச்சிக்கான செலவு குறைவு என்பது தான் பெரிய வெற்றி இல்லையென்றாலும் பியர் பாக்டரை தொடரக் காரணம் என்கிறார்கள். இதன் சில பகுதிகளை இந்தியாவில் கல்லூரியில் படிக்கையில் ஏ.எக்ஸ்.என்(AXN) தொலைக்காட்சியில் விரும்பிப் பார்த்திருக்கிறேன், அதனால் தான் பியர் பாக்டர் நிகழ்ச்சியில் வரும் சோதனைகளையும், உடல் சாகசங்களையும் போட்டியாளர்களிடம் விளக்கத்தக்க ஆளுமையை கொண்டிருந்தார் என்று கார்டியன்2 குறிப்பது மிகச் சரியான அவதானிப்பாகப் படுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் அறிந்தோ அறியாமலோ ரோகன் தனக்கான பார்வையாளர் பரப்பை(எண்பத்தைந்தில் இருந்து தொண்ணூறு சதம் ஆண்கள் என்று அவரே குறிப்பிடும்) உருவாக்கிக் கொண்டார் என்று தோன்றுகிறது.

ஜே.ஆர்.இ

2005ல் ஆப்பிள் நிறுவனம் பாட்காஸ்டுகளை ஐட்டுயூனில் வெளியிடத் துவங்கியது, ஐட்டுயூனின் வருகைக்கு பிறகு எவ்வாறு இசைத்தகடுகள் வெளியீடு மற்றும் விற்பனையில் மாற்றம் நிகழ்ந்ததோ அதே போல பாட்காஸ்டுகள் எளிதாக பயனர்களுக்கு கைபேசியிலேயே கேட்கும் சாத்தியம் உருவாகியது. அதன் அடுத்த கட்டம் தான் இன்று பாட்காஸ்டுகளும் சந்தைப் பொருளாக விற்க முடியும் என்பது தெளிவாகி இருக்கிறது. மரபான ஊடகங்களை தவிர்த்து 2009ல் முதல் ஜோ ரோகன் அனுபவம் ஒலிவடிவ பாட்காஸ்டாக வெளியாகியது. இங்கு குறிப்பிடத் தகுந்த அம்சம் தனக்கான பார்வையாளர்களை ஏற்கனவே பெற்று இருந்ததால் ஊடகத் தொடர்புகள் இல்லாமலேயே (ஜே.ஆர்.இயின் வீச்சு சார்ந்து தனக்கு பெரிய எதிர்பார்ப்பு அன்று இருக்கவில்லை என்கிறார் ரோகன். மேலும் தன் நண்பர் ஒருவரின் வீட்டிலேயே ரேடியோ நிகழ்ச்சி தயாரித்து வெளியிடுவதைப் பார்த்து நாமும் செய்து பார்க்கலாமே என்ற எண்ணத்தில் தான் ஜே.ஆர்.இ உதயமாகியது என்கிறார். அதில் ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாததனால் தான் இன்றும் அது தொடர்ந்து வருவதாக எண்ணுகிறார்)3 குறைந்த செலவில் அவரால் தொடர முடிந்தது. முதற்கட்ட நல்ல எதிர்வினைகளைப் புரிந்துகொண்டு திட்டமிட்டு வாரம் இரு பாட்காஸ்ட்களுக்குக் குறையாமல் வெளியிட்டு தன் நிலையை தக்கவைத்துக் கொண்டார். நண்பர்களுக்கு இடையே நடக்கும் உரையாடலாக ஜே.ஆர்.இ இருக்க வேண்டும் என்பதே ஆரம்பகட்ட நோக்கமாக இருந்ததை ரோகன் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். அதை தெளிவாக்கும் விதமாக முதல் போட்டியாளர்கள் பலர் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையாளர்கள் தான். 2013ல் துவங்கி யூடியூபிலும் தன் பேட்டிகளை பதிவிட்டது அவரை இன்னும் புகழின் பல படிகள் மேலே கொண்டு சென்றது. சமூக ஊடகங்களின் வருகையும், வீச்சும் மரபான ஊடகங்களின் மீதான சந்தேகங்களையும், கேள்விகளையும் பெருகின. அதேவேளையில் தொழில்நுட்பப் பெருநிறுவனங்கள் அரசு கொள்கைகளைமீறி தணிக்கைவலை ஒன்றை அமைத்து வலதுசாரி கருத்துக்கள் மேலெழவிடாமல் தடுப்பதாக குரல்கள் எழுந்தன. இந்தப் பின்னணியில் தான் ஊடகங்களில் தவிர்க்கப்படும் தலைப்புகளும் நபர்களும் இடம்பெறும் தளமாகவும் ஜே.ஆர்.இ மாறியது. இதுவே இன்றளவும் ஜோ ரோகன் மீது வைக்கப்படும் பெரும் விமர்சனமாக இருந்து வருகிறது. 

ஜோ ரோகனின் சிறப்பியல்பு அல்லது தனித்துவம் அவரின் பேட்டிகளையும் அவரையும் எந்த குடுவையிலும்(சித்தாந்தங்களிலோ/ அரசியல் சரிநிலைகளிலோ)அடைக்க முடியாது என்பதே. எவ்வாறு இதை சாதித்தார் என்றால் தன்னைப் பழைய பாணி தாராளவாதியாக(Classic Liberal) கருதும் ரோகன் ஜே.ஆர்.இ-யில் ஊடகங்களால் புறக்கணிக்கப்படுகின்ற வலதுசாரி நபர்களுக்கு இடம் தருகிறார். அது மட்டுமல்ல தன்னை முழு முட்டாளாக பிரகடனப்படுத்திக் கொண்டே பேட்டிகளை அமைக்கிறார் என்பதால் எந்த விமர்சனத்தையும் எளிதாக புறந்தள்ளுவதுடன் தன்னை தானே கிண்டல் செய்தும் கடக்கிறார். அதே சமயம் பேட்டியளிக்க வந்தவரின் பதில்கள் சரியாக இருப்பதற்கான வாய்ப்பிற்கு இடமளிப்பதும்,  எந்தப் புள்ளியில் முரண்படுகிறார் என்பதை தெளிவாகுவதிலும் தவறுவதில்லை. உதாரணங்களாக 2018ல் எலான் மஸ்க்குடான பேட்டியில் அவரின் சிறுவயது அனுபவங்களை நினைவுகூரச் சொல்லி, “அப்பொழுதே பைக்குழல் இசைக்கருவி போல் உங்கள் மூளை இரவு பகலாக சத்தமிட்டுக் கொண்டேயிருந்ததா?” என சிரித்தபடி கேட்டதைச் சொல்லலாம். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் கஞ்சா குடித்தபடி தன்னை தளர்த்திக் கொண்டு பதிலளிக்கிறார் என்பதை எவரும் உறுதிசெய்து கொள்ளலாம். மற்றொன்று அன்றைய ட்விட்டர் தலைமைச் செயலாளராக இருந்த ஜாக் டோர்சி பேட்டி. அதில் டோர்சியை எந்த கடுமையான கேள்விகளும் கேட்காமல் விட்டதற்கு தன் பார்வையாளர்களிடம் வருத்தம் தெரிவித்தது மட்டுமல்லாமல் ஓரிரு வாரங்களில் டோர்சியுடன் ட்விட்டர் சட்டப் பிரிவு தலைவர் விஜயா கட்டே பங்கேற்க ட்விட்டரின் தணிக்கைக் கொள்கைகளின் விமர்சகரான டிம் பூல் என்ற பத்திரிகையாளர் கேள்விகள் கேட்கும் வண்ணம் பேட்டியை அமைத்தார். இது எந்த ஊடகவியலாளரும் கற்க வேண்டிய பாடம் என டேவின் கார்டன் குறிப்பிடுகிறார்.4

பதினான்கு ஆண்டுகளில் ஜே.ஆர்.இயில் பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்பத்துறைத் தலைவர்கள் என பலரை பேட்டி எடுத்திருக்கிறார். அனைவருமே அவரின் ஸ்டுடியோவிற்கு (அன்று வுட்லண்ட் ஹில்ஸ் இன்று ஆஸ்டின்) வந்து பேட்டியில் பங்குகொண்டிருக்கிறார்கள். என் நினைவில் நிற்கும் மூன்று முக்கிய பேட்டிகள்: 1. கறுப்பின போராளியும், தத்துவவாதியுமான கார்னெல் வெஸ்டுடனான பேட்டி உண்மையில் செகாவ் குறித்தும், உறுதிப்பாட்டு வாதத்திற்கு வலுச்சேர்ப்பது போலுள்ள இன்றைய எதார்த்தம் குறித்தும், மார்க்சிய சிந்தனைகளின் முக்கியத்துவம் என பல தலைப்புகளைத் தொட்டுச் செல்லும் இனிய உரையாடல். 2. ஹாலிவுட் நடிகரான கெவின் ஹார்ட்டுடனான உரையாடல். வேலை மற்றும் குடும்பம் என இரண்டையும் சமாளிப்பது எப்படி, வெற்றி என்பதன் அர்த்தம் என்ன, உடல் ஆரோக்கியத்திற்கான தேடல், பால் மற்றும் மாமிசமில்லா (விகன்) உணவுகளின் குறைகள் என இருநண்பர்கள் ஓய்வு நேரத்தில் பேசிக்கொள்வது போல் அமைந்திருந்தது.  3. 1960களின் லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகரில் உருவான ‘மேன்சன் குடும்பம்’ என்ற மதக் குறுங்குழு பற்றியும் அதன் தலைவரான குறிப்பாக சார்லஸ் மேன்சனை பற்றியும் ஆய்வு செய்த “கேயாஸ்” என்ற புத்தகத்தை எழுதிய பத்திரிக்கையாளரான டாம் ஓனில் பங்குகொண்ட மறக்கமுடியாத பேட்டி. 

இன்று யார் தன்னால் பேட்டியெடுக்கப் படவேண்டும் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார். ஜே.ஆர்.இயின் பேட்டிக்குப் பிறகு பலருக்கு புகழின் ஒளி கிடைத்திருக்கிறது அல்லது கூடியிருக்கிறது.   பலர் அதே வடிவ நீள்பேட்டிகளைக் கொண்ட பாட்காஸ்ட்டுகள் தாங்களும் துவங்கி வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஜே.ஆர்.இயின் பரிந்துரைக்குப் பிறகு தம் பழைய நூட்கள் விற்பனை அதிகரித்ததாக எழுத்தாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகளுக்கு நன்கொடைகள் அதிகரிக்கின்றன அதையே ‘ஜே.ஆர்.இ விளைவு’ என பெயரிட்டிருக்கிறார்கள். ஆக ஜே.ஆர்.இயின் வெற்றி அதன் கலாச்சார வீச்சிலும், புதிய தொழில்நுட்ப தொடர்புகளின் சாத்தியங்களை பயன்படுத்தியதிலும் ஒரு முழுமையான சமூக ஆய்விற்கு உகந்தது எனலாம். 2021 முதல் “ஜோ ரோகன் அனுபவம்” யூடியூப்பில் (பழைய பேட்டிகள் முதற்கொண்டு) இருந்து ஸ்பாட்டிபைக்கு (Spotify) மட்டுமேயாக இடப்பெயர்ந்திருக்கிறது. அதற்கு அவருக்கு அளிக்கப்பட்ட ஊதியம் பத்தாண்டுகளுக்கு இருநூறு மில்லியன் டாலர்கள். அங்கும் பயனர்களுக்கு இலவசம் தான். ஸ்பாட்டிபை தளத்திலும் ரோகனின் பேட்டிகள் தான் நம்பர் ஒன். சார்லி ரோஸ், ஜேம்ஸ் லிப்டன் அரசியல் பிரபலங்களை, திரைப் பிரமுகர்களை போன்றவர்கள் நீள்வடிவ பேட்டிகளைத் தொலைக்காட்சிக்காக எடுத்திருக்கிறார்கள்.  பிரையன்(ட்) கம்பெல், பாப் காஸ்டஸ் விளையாட்டு வீரர்களை, ஆளுமைகளை கறாரான கேள்விகளுடன் பேட்டியெடுத்திருக்கிறார்கள். இருப்பினும் இன்றைய தலைமுறையின் முக்கிய கலாச்சார வீச்சாக திகழும் ஜோ ரோகனை அறிமுகம் செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம். 

நான் எட்டாண்டுகளாக ஜோ ரோகனின் பேட்டிகளைப் பின்தொடர்பவன், அவரின் பரிந்துரைகளை பெரும்பாலும் ஏற்பவன்.  இந்த எட்டாண்டுகளில் பல மணிநேரங்கள் ஜே.ஆர்.இயின் பேட்டிகளைக் கேட்டுத் தெளிவடைந்திருக்கிறேன், குழம்பியிருக்கிறேன், புதிய ஆளுமைகளை அறிந்திருக்கிறேன், பழைய எண்ணங்கள் மாறியிருக்கின்றன, தேடல்கள் கூர்மை அடைந்திருக்கின்றன. புத்தகங்கள், எழுத்தாளர்களை அடுத்து என்னை வலுவாக பாதித்தவராக ஜோ ரோகன் இருப்பதற்கு காரணம் ஏற்பு மறுப்பைத் தாண்டி அவரிடம் தெறிக்கும் உண்மை தான். 

சலூட் யூ ஜோ ரோகன்!

1 – https://www.nytimes.com/2021/07/01/business/joe-rogan.html

2 – https://www.theguardian.com/us-news/2022/jan/30/joe-rogan-neil-young-feud-spotify-music-streaming-industry

3 -https://web.archive.org/web/20110909180530/http://www.jsonline.com/blogs/entertainment/127610833.html

4 – https://www.theatlantic.com/entertainment/archive/2019/08/my-joe-rogan-experience/594802/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.