சைக்கிள்

“இப்ப இருக்கிற நெலம என்னன்னு தெரியாம ஏன்டா இப்படி உயிர எடுக்குற?”

“போன தீவாளிக்கு மொத தீவாளியே கேட்டேன். அப்பவும் இதத்தான் சொன்ன? ” என்பதை சத்தமாகச் சொல்லிவிட்டு “எப்பத்தான் தத்திரியம் ஒழிஞ்சிருக்கு இந்த வீட்டுல” என்பதை வாய்க்குள் முணுமுணுத்தான் செந்தில். ஆனால் அதுவும் ஐயாவின் காதில் கேட்டுத் தொலைத்துவிட்டிருந்தது. இவன் வாசலைத் தாண்ட நினைத்தபோது பொளேரென முதுகில் ஒரு அடி விழ சுவற்றைப் பிடித்துக்கொண்டு விழாமல் தாங்கி நின்றவன் திரும்பிப் பார்த்தான். எல்லோரும் மௌனமாக குனிந்திருக்க வசந்தா மட்டும் வாயை மடித்துக் கொண்டு சிரிப்பது போலிருந்தது. இவன் பார்ப்பதைப் பார்த்ததும் சிரிப்பை தொலைத்து இயல்பாக எங்கேயோ விட்டத்தைப் பார்த்தாள்.

“என்னடா வாய் நீளுது உனக்கு?” என அம்மா கத்த மீண்டும் ஒரு தாக்குதல் இப்போது உதையாக இடுப்பில் விழ இவன் பிடிமானம் நழுவி வாயிற்கதவில் போய் முட்டிக்கொண்டு விழுந்தான். அம்மா பதறியபடி “ந்தா சும்மா இருக்கமாட்ட” என ஓடிவந்து மேலே விழுந்து மூன்றாவது அடியை வாங்கிக் கொண்டு இவனை எழுப்பினாள். நெற்றியில் அருக்கால் பிசிறு கிழித்து இரத்தம் வரத் தொடங்கியிருந்தது. 

“ஐய்யோ.. ஏய் கலை.. மஞ்சத்தூளும் எண்ணெயும் எடுத்துட்டு வாடி” எனக் கத்தினாள். நிமிர்ந்து கோபமாகவும் இயலாமையின் ஆத்திரத்தோடும் ஐயாவைப் பார்த்தான். அவர் இவனுக்கு பெரிய காயமில்லை என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டு “என்னடா முறைக்கிற” என அதட்டினார். அவர் வாயில் பீடி இருந்தது. இல்லையென்றால் இந்நேரம் கெட்ட வார்த்தைகள் வந்து விழுந்திருக்கும்‌. 

“ஏ.. சும்மா போறியா இல்லையா.. ” என அம்மா அதட்ட துண்டை ஆவேசமாய் உதறியபடி வெளியேறினார். 

செல்வத்தின் கோபம் இப்போது வசந்தாவின் மேல் முழுவதுமாக இறங்கியிருந்தது. 

“சிரிக்கிறியா நீயி?” என்றபடி அவளை அடிக்கப் பாய்ந்தவனை கலையும் அம்மாவும் சேர்ந்து அடக்கி அமர வைத்தார்கள். வசந்தாவுக்கும் அவனுக்கும் எப்போதுமே ஆகாது. ஒருவரையொருவர் மாட்டி வைப்பதும் ஐயா இல்லாத நேரங்களில் அடித்துக் கொள்வதுமாக அணையாத பகை இருவரையும் சூழ்ந்திருந்தது. வசந்தா கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு ஏத்தாப்பூரில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடைக்கு வேலைக்குச் செல்கிறாள். காலையில் நேரமாகச் சென்று கடையை திறந்து வைக்கும் பொறுப்பு இவளுடையது. தனவூரிலிருந்து மூன்று மைல்கல் தொலைவிலிருக்கும் ஏத்தாப்பூருக்குச் சென்றுவர போக்குவரத்து வசதியற்று பைக்கில் செல்வோர்களிடம் லிப்ட் கேட்பதற்காகவே பிரிவுரோட்டில் இவளையும் சேர்த்து கல்லூரி மாணவர்கள், பணியாட்களென ஒரு கூட்டம் காத்து நிற்கும். சிலர் அங்கேயே நிற்க சிலர் வாகனச்சத்தம் கேட்கையில் நிறுத்த மாட்டார்களாயென திரும்பி திரும்பிப் பார்த்தபடி நடந்தே செல்ல ஆரம்பித்திருப்பார்கள்.

 அவளுக்கும் செந்திலைப்போல நடைவாழ்வு ஒரு வெறுப்பைத் தந்திருந்தது. சிலர் கருணையோடு வண்டியை நிறுத்தி ஏற்றிக் கொள்வார்கள். சிலர் பார்க்காதது போல முகந்திருப்பி ஆக்ஸிலேட்டரை திருகுவார்கள்.‌ சில ஆண்கள் வண்டியில் ஏறியபிறகு ஒருமாதிரியான பேச்சுகளை ஆரம்பித்து அதே சாக்கில் கடைக்கு வந்து நின்று சிரிப்பார்கள். இன்னும் சிலர் முழு இருக்கையை ஆக்கிரமித்து அமர்ந்து உடலுரசுவதை கண்மூடி சுகித்தவாறு வண்டி ஓட்டுவார்கள். எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு தான் அச்சாலையில் நின்று கைகாட்டுகிறாள்.

இவன் மீண்டும் எழுந்து வருவதற்குள் ஓடிவிடும் முனைப்புடன் வாசலிலிருந்த ரோஜாவைப் பறித்து தலையில் வைத்துக்கொண்டு கிளம்பினாள். 

“போ.. போ.. அங்க யாரு இருக்காங்கனு தெரியும் எனக்கு” என பொடி வைத்தவனை “யார்டா?” என அம்மா அதட்ட எதுவும் சொல்லாமல் தலை குனிந்து கொண்டான்.

அவளது பால்யத் தோழன் சந்தோஷ்  அதே சாலையில் தான் கல்லூரிக்குச் செல்கிறான். எல்லோரையும் பெருநகரத்தோடு இணைக்கும் குறுநகருக்கான கிராமத்து சாலையது. அவன் சைக்கிளில் கடந்து செல்ல இவள் யாரிடமாவது லிப்ட் கேட்டு நிற்கும் அந்த குறுகிய நேரத்துக்குள் இருவரது பேச்சும் சைகையும் ஒரு மயக்கத் தொனியில் நீள்வதை ஒருநாள் கண்டறிந்ததிலிருந்து அவளை இவன் மிரட்டிக் கொண்டிருக்கிறான்.

பள்ளிக்கு புறப்பட்டு வெளியே வந்தவன் காயத்தை தொட்டுப் பார்த்துக்கொண்டே மேற்கு வீதியில் திரும்பினான்‌.

ஏத்தாப்பூர் பிரிவுச் சாலையில் வசந்தா இன்னும் நின்றிருந்தாள்.

பணிக்குச் செல்லும் அவசரத்தில் வாகனங்கள் வேகமாக நகர்வதையும் இவள் கைகாட்டி கைகாட்டிக் களைத்து நிற்பதையும் கொஞ்ச நேரம் இமை கொட்டாமல் பார்த்தவாறு நின்றிருந்தான். 

சந்தோஷ் சைக்கிளை தாறுமாறாக நெளித்தபடி அக்காவை ஏக்கத்தோடு திரும்பித் திரும்பிப் பார்த்து நகர்வது இவனுக்கு நகைப்பாக இருந்தது. ஒருநாள் இல்லனாலும் ஒருநாள் ஐயாகிட்ட போட்டுக் குடுத்துடணும் என நினைத்துக் கொண்டவன் ஏராளமான சைக்கிள்கள் பின்னால் புத்தகப்பையைக் கட்டியபடி அவனைக் கடந்து கொண்டிருப்பதில் பாதைக்குத் திரும்பி பள்ளியை நோக்கி நடையை எட்டிவைத்தான்.

செந்தில் முதன்முறையாக சைக்கிள் ஓட்டிப் பழகிய போது அது தனக்கொரு போராட்டமான பால்யத்தை பரிசளிக்குமென அவன் உணரவில்லை. அப்படியவன் முன்பே அறிந்திருந்திருந்தால் பழகாமலேயே விட்டிருக்கக்கூடும்.

மங்களப்புதூரில் குளுக்கோஸ் பேக்டரி தொடங்கப்பட்டபோது அதன் இரசாயனம் இரண்டு மைல் தாண்டி வந்து நிலத்தடி நீரை மாசுபடுத்துமென தனவூர்வாசிகள் நினைத்திருக்கமாட்டார்கள். 

கொஞ்சம் கொஞ்சமாக சகித்துக்கொண்டு பருகத் தொடங்கியபோதும் ஒருகட்டத்தில் வாயில் வைக்க முடியாத அளவுக்கு உப்பு கரிக்கத் தொடங்கியது. பருப்பு வேகவைத்தால் மணிக்கணக்கில் கல்லாக ஊறிக்கிடந்து காலையில் பணிக்குச் செல்வோரின் வீடுகளில் கலவரம் மூண்டது. இதெல்லாம் போக தோல் அரிப்பு முதல் பெயர் தெரியாத புதுப்புது வியாதிகள் வரை படையெடுக்கத் தொடங்கிவிட்டிருந்தது.புற்றுநோய் கூட அதிகளவில் தலையெடுப்பதாக பேசிக் கொண்டவர்கள் மேட்டூர் குடிநீர் ஏத்தாப்பூர் வரை மட்டுமே விநியோகம் என்றிருக்கும் நிலையில் பல்வேறு முறை மனு போட்டும் வேலைக்காகாதது கண்டு ஒருவரை மாற்றி ஒருவர் நொந்து கொண்டனர். இப்போதைக்கு சமையலுக்கு நல்ல தண்ணீர் என்றால் வரதன் கிணறு தான். இவர்களது குடியிருப்பிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி ஊர் எல்லையில் அது அமைந்திருந்தது. வரதன் மிகுந்த கொடையாளியாக இருந்ததில் ஊரிலிருக்கும் பெரும்பாலானோருக்கும் குடிக்கவும் குளிக்கவுமான நீரை எப்போதும் தங்குதடையின்றி பெற தொட்டி கட்டியிருந்தார். 

செந்தில் பள்ளிக்கு கிளம்புவதற்குள் கக்கத்தில் இரண்டு கைகளில் இரண்டென இடுக்கியபடி குடத்தை எடுத்துக் கொண்டு அதிகாலைக் கருக்கலில் ஓடுவான். சைக்கிள்களற்ற அவனது வெறுமையின் மீது பெல்லடித்துக் கொண்டே தனது வாகனங்களை அவனது சகத்தோழர்கள் ஏறி மிதித்துக் கடப்பார்கள். 

‘என்னடா செந்தில்.. இன்னிக்கும் நடராஜா சர்வீஸ் தானா?’ எனச் சிரிப்பான் தெற்குத் தெரு மணி.

எல்லோரும் வரதன் கிணற்றை சென்றடைவதற்குள் நன்றாக விடிந்திருக்க அங்கேயொரு பெருங்கூட்டம் அவர்களுக்கு முன்பாக க்யூவில் நின்றிருக்கும். 

சிலநேரங்களில் தள்ளுமுள்ளு கூட நடக்கும். வரதனின் மகன் அவ்வப்போது வந்து வரிசையை சரிசெய்து அதட்டிவிட்டுப் போவான். 

வரதன் இருந்தால் எத்தனை நடை வந்தாலும் ஒன்றும் சொல்லமாட்டார் ஆனால் இவன் ‘குடிக்கிறதுக்கு சமையலுக்கு நாலு குடம் தண்ணி தான். அதுக்கு மேல புடிக்காதீங்கப்பா.. எல்லாருக்கும் வேணும்ல’ என ஏதாவது முணுமுணுப்பான். 

செந்திலின் ஐயாவுக்கு பிரச்சினை இல்லை. பாக்கு தோப்புக்கு வேலைக்குச் செல்பவர் பணி முடிந்து அங்கேயே பம்புசெட்டில் குளித்து விடுவார். அவன் அம்மா இரண்டு நாட்களுக்கு ஒருமுறை துடைத்து விட்டாற் போல கழுவிக் கொள்வாள். இப்போதைக்கு இரண்டு குடம் நீரில் இவனோடு வசந்தியும் கலாவும் தண்ணீரை பகிர்ந்து கொள்கிறார்கள். மீதமிருக்கும் இரண்டு குடங்கள் சமையலுக்கு. தெருக்குழாயில் வரும் உப்பு நீரை பிற உபயோகங்களுக்கு எப்போதும் போலொரு கலக்கத்தோடு பயன்படுத்திக் கொள்வார்கள்.

செந்தில் அவனது தோழர்கள் வருவதற்கு முன்பாக முண்டியடித்துக் கொண்டு ஓடி வந்துவிடுவான். அப்படி வந்தால் யாராவது ஒருவருடைய சைக்கிளின் பின்புறம் குடங்கள் தொங்க கேரியரின் மேல் ஒரு குடம் வைத்துக் கொள்ளும் சலுகை கிடைக்கும். இன்னொரு குடத்தை தோளில் சுமந்துகொண்டு பின்னாலேயே ஓடுவதைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். ஆனால் அதற்கும்கூட  இணையாக குறுக்கே வரும் நல்லத்தி ஓடையின் மேட்டிலும் செம்மண் திட்டிலும் சைக்கிளை முன்னால் தள்ளி பதிலுக்கு உதவ வேண்டும். முகுந்தனும் ரமேஷும் சில நேரங்களில் மூன்று குடங்களோடு வந்து விடுவார்கள். அவர்கள் ஒரு கையால் ஹேண்டில்பாரைப் பிடித்தபடி மறுகையால் மூன்றாவது குடத்தை கேரியரின் மீது அழுத்தியபடி ஓட்டிவரும் வல்லமை படைத்தவர்கள். அது போன்ற நாட்களில் வேறு வழியற்று மணியிடம் கெஞ்சுவான். கடைசியாய் மணியின் கேரியரில் குடத்தை வைத்துக்கொண்டு ஓடியபோது மணிக்கு இவனோடு விளையாட வேண்டுமெனத் தோன்றியது போலும். 

செம்மண் திட்டில் வண்டி ஏறத் தொடங்கியபோது ‘வேகமாத் தள்ளுடா வெண்ண’ என அவன் திட்ட ஒரு கையால் தோளிலிருந்த குடத்தை தாங்கியபடி மூச்சிரைக்க வந்த செந்தில் பதறிப்போய் ஒற்றைக் கையை அல்லையில் முட்டுக்கொடுத்து பலங்கொண்ட மட்டும் குடத்தோடு சேர்த்து கேரியரைத் தள்ளினான். வண்டியின் மீது அவன் விசை செயல்பட்டதாகவே தெரியவில்லை. 

‘ரெண்டு கைலயும் குடத்த வச்சிக்கிட்டு தள்ளுனா எப்படிடா நகரும் மாக்கான்..’ என்ற மணியின் குரலிலிருந்த கேலித்தொனியில் இவன் முகம் கறுத்தது. 

தோளிலிருந்த குடத்தை இருகைகளாலும் இவன் வாகான இடத்தில் இறக்கிவைத்தபோது மணி சைக்கிளை அதிவேகமாக இயக்கியிருந்தான். இவன் ஓடிப்பிடிப்பதற்குள் கேரியரிலிருந்த குடம் நீரோடு விழுந்து உடைந்துத் தெறித்தது. செந்தில் அதிர்ந்து மீள்வதற்குள் கீழே இறக்கி வைத்திருந்த குடம் திட்டிலிருந்து சரிந்து உருளத் தொடங்கியது. உருண்ட குடத்தை பிடிக்க ஓடும்போது அதுவும் உடைந்து ஒன்றுமில்லாமல் போவதை உணர்ந்து விட்டிருந்தான். 

மேடேறிய பையன்கள் இவனது அலைச்சலைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். மணியின் முகத்தில் இன்னமும் கேலி நகைப்பு மாறாமல் இருந்தது கண்டு இவன் விடுவிடுவென மேடேறினான். 

‘எதுக்குடா என் குடத்த உடைச்ச?’

‘யாரு நானா? உனக்குதான்டி மாப்ள குடத்த புடிக்க தெம்பு இல்ல’

‘வேணும்னே தான்டா என்ன தள்ளவிட்டு நீ சைக்கிள எடுத்த?’ என ஆத்திரம் முற்றிய அழுகையோடு இவன் கேட்க

‘சைக்கிள் வாங்க வக்கத்தவன்லாம் எதுக்குடா தண்ணியெடுக்க வர்றீங்க?’ என்றபடி திரும்பிப் பார்க்காமல் அவன் பெடலை மிதித்து நகர ஆரம்பித்தான். 

செந்திலின் ஐயா குடித்துவிட்டு வந்தாலும் அடிக்காத அளவுக்கு நல்லவர்தான். ஆனால் அவன் சொன்ன தத்திரியம் என்ற வார்த்தை அதிகம் வலித்தது.அவர் வைத்திருக்கும் எக்ஸெல் வண்டியை நம்பியே வீடுவீடாகச் சென்று பாலெடுக்கும் தொழில் அவருக்குப் பிழைத்துக் கிடக்கிறது. அதிகாலையிலும் அந்தியிலும் கேன்களைக் கட்டிக் கொண்டு புறப்பட்டால் வீடுவீடாகச் சென்று நிறுத்தி பெருவிரல் வலிக்க வலிக்க தானே பால் கறந்து வந்து சொஸைட்டியில் ஊற்றுவார். கறந்த கூலியும் பெட்ரோல் காசும் போக லிட்டருக்கு இவ்வளவெனக் குறைத்து வீடுகளுக்கு பணம் தந்துவிடுவார். மதிய வேளைகளில் பாக்குத் தோப்பு வேலை. இவ்வளவு உழைத்தும் மிச்சம் தேறுவதேயில்லை. வறக்காட்டில் போரோட்டி நஷ்டமடைந்த கடன், மினி ஆட்டோ வாங்கி விபத்தானதை அடைக்க வேண்டிய கடனென இதிலேயே அவரது வாழ்வு கரைகிறது. எந்தத் தொழில் செய்தும் பிழைக்கத் தெரியாததன் மிரட்சியும் எதிர்காலத்தில் தோற்றுவிடுவோமோ என்பதற்கான சாத்தியங்களை எந்நேரமும் அலசிக் கொண்டேயிருக்கும் பயமும் அவரை நிழல் போல சுற்றிக் கொண்டிருந்தன. மெதுவாக படுக்கையில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்த செந்திலின் தலையைக் கோதினார். காயத்தின் மீது பூசிய மஞ்சள் திட்டாக உறைந்திருந்தது.

‘நம்ம கஷ்டத்தப் போய் அவன் மேல் காட்டிட்டு இப்ப என்னமோ வந்து தடவுற?’ என்ற மனைவியின் பக்கம் அவர் திரும்பவில்லை.

விடிந்ததும் அவனை நேரமாக எழுப்பி வண்டியில் இருத்திக் கொண்டு புறப்பட்டார். நேற்றைய களேபரத்தினால் செந்தில் இறுக்கமான முகத்தோடே அமர்ந்து வந்தான். என்ன ஏதென்று எந்தக் கேள்வியும் கேட்காதவனின் கண்கள் கௌதமன் சைக்கிள் கடைக்கு முன் வண்டி நின்றதில் அகல விரிந்தன. 

“எறங்குடா..” என்றவர் நேராக கடைச்சந்துக்கு அழைத்துச் சென்றார்.

உள்ளறையில் விதவிதமான பழைய சைக்கிள்கள் சர்வீஸ் செய்யப்பட்டு பாதி கம்பீரத்தோடு நின்றிருந்தன. பள்ளிக்கூடத்தில் சும்மா தரப்பட்டவையும் நிறைய கடைக்காரரின் கைக்கு வந்திருந்தன‌. ஆனால் அவையெல்லாம் தண்ணீரடிக்க லாயக்கில்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். கேரியர் தடிமனாக இருந்த ஒரு சைக்கிளை சுற்றிச் சுற்றி வந்து நோட்டமிட்டான். எண்ணெய் தேய்த்த மினுமினுப்பில் கருகருவென காளையின் தோரணையில் இருந்த அது அவனுக்குப் பிடித்துப் போனது. அடித்து பேரம் பேசப் பேச படியாமல் போய்விடுமோ என்ற கலக்கம் தீர்ந்து ஒரு வழியாய் ஆயிரத்து ஐநூறுக்கு முடிந்தபோது தான் இவனுக்கு நிம்மதி வந்தது. 

வீட்டுக்குத் திரும்பும் போது நாகராஜ் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று கொத்து பரோட்டா வாங்கித் தந்தார். சால்னாவை ஊற்றிப் பிசைந்து வாய்நிறையக் குதப்புபவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தார். அவன் கூச்சத்தோடு நெளிந்துச் சிரித்ததில் இறுக்கம் தளர்ந்து பழைய பிடிப்பு வந்து ஒட்டிக் கொண்டது.

சாப்பிட்டு முடித்ததும் “நீ முன்ன போப்பா நான் வர்றேன்” என சைக்கிளில் ஏறி அமர்ந்தான். முதல் ஐந்து நிமிடம் பழக்கத்துக்கு வராத சைக்கிள் மிதிக்க மிதிக்க வணங்கி வந்தது. நாளை காலையில் மணி முன்பாக ஒத்த கையில் சைக்கிள் ஓட்டியபடி மூன்று குடத்து நீரையும் தளும்பாமல் வீடு கொண்டு வந்து சேர்க்கப் போவது குறித்து நினைக்கையில் பிரமிப்பாக இருந்தது.

ஊருக்குள் நுழையும் போது மணி ஒன்பதை நெருங்கி விட்டிருக்க வசந்தா இன்னமும் பிரிவுச் சாலையிலேயே நின்றிருப்பதையும் ஐயா அவளிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பதையும் கண்டு சைக்கிளை நிறுத்தினான்.

“மணி இங்கயே ஆச்சுப்பா.. நானும் பாக்கு வேலைக்கு போவ வேணாமா?” என்றவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தவளைப் பார்த்து ‘சைக்கிள் எப்படியிருக்கு?’ என  பழிப்பு காட்டினான். அவள் ஒருகணம் இவன் மீது பார்வையை நிறுத்தி முறைத்துவிட்டு மறுகணமே ஐயாவிடம் நகர்த்தி மீண்டும் குழைத்தாள். 

“அப்பா ப்ளீஸ்ப்பா.. இன்னிக்கு ஒருநாள் மட்டும் கொண்டாந்து உடேன்” 

“வண்டி என்னா தண்ணீலயா ஓடுது? இப்பதான அங்கயிருந்து வர்றேன். இரு யாரையாச்சும் புடிக்கிறேன்” என்றபடி வண்டியை நிறுத்திவிட்டு அவரும் கைகாட்ட ஆரம்பித்தார்.

இரண்டு பைக்குகள் நிற்காமல் கடந்தபிறகு மூன்றாவதாக 

சந்தோஷுடைய சைக்கிள் வளைவில் திரும்பியது. உற்சாகமாக வண்டியை வளைத்தவன் அசாதாரணச் சூழலின் பொறியில்  சட்டென மருண்டு அவளது ஐயாவின் கண்களை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்தபடி எம்பி எம்பி பெடலை மிதித்து நகர்ந்தான். செந்தில் இருவரையும் மாறி மாறிப் பார்த்து நமட்டுச்சிரிப்பொன்றை தந்துவிட்டு சைக்கிளை செலுத்தத் தொடங்கியிருந்தான். ஆனால் அதற்குள் ஐயா சந்தோஷுடைய சைக்கிளை மறித்து விட்டிருந்தார். 

“யார் வூட்டு பையன் தம்பி நீயி..? சும்மா எங்க பாப்பாவ டிஸ்டர்ப் பண்றனு கேள்விப்பட்டேன் ” என்றவரை ஒருகணம் நிமிர்ந்து பார்த்துவிட்டு தலைகுனிந்து “இல்லீங்க.. நான் இல்லீங்க..” என்றவனுக்கு யாரும் எதிர்பாராதவாறு ஒரு அறை விழுந்தது.

“நான் இங்க கேட்டுட்டு இருக்கேன். எம் பொண்ண பாத்து என்னடா சிரிக்கிற?” என எகிறியவரை வசந்தா இழுத்துப் பிடித்தாள்.  உண்மையில் அவன் இப்போது சிரிக்கும் நிலையில் இல்லையென்பது அங்கு நின்றிருந்த எல்லோருக்கும் தெரியும். உடலைக் குறுக்கியபடி தன்னை அவசரமாக விடுவித்துக் கொண்டு விரைவாக சைக்கிளை செலுத்தியவனின் கண்கள் கலங்கியிருந்தன. செந்தில் சைக்கிளை மெல்லமாய் வீடு நோக்கிச் செலுத்தினான். அவன் கால்கள்  முன்பிருந்த குதூகலிப்பிலிருந்து விடுபட்டு பெடலை மெல்ல அழுத்தின.

மறுநாள் எப்போதும் போன்ற சலிப்போடு புலரப் போவதில்லையென்ற இனம்புரியாத கொண்டாட்ட மனநிலை அந்த வீடெங்கும் பரவியிருந்ததை எல்லோருமே உணர்ந்தபடி  உறங்கியிருந்த பின்னிரவில் வசந்தா விசும்பிக் கொண்டிருந்தது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது.

அதிகாலையில் தேநீர் அருந்தி முடித்த கையோடு சைக்கிளுக்கு காற்றடித்துத் துடைத்து வாகாக வாசலில் நிறுத்தினான். வசந்தா எந்தச் சலனமுமின்றி கண்ணாடி முன்பாக நின்று பணிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.  குடங்களை எடுத்துக் கொண்டு வந்தவன் நின்று யோசித்து ஏதோ நினைத்துக் கொண்டவனாய்  வரதன் கிணற்றை நோக்கி நடக்கத் தொடங்கினான். விநோதமாகப் பார்த்தார் ஐயா. கலை அம்மாவை அழைக்க அவள் வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்தாள்.

“டே கிறுக்கா.. சைக்கிள் இருக்குறது மறந்துப் போச்சா” 

எதுவும் பேசாமல் நகர்ந்தவனை இம்முறை ஐயா அழைத்தார். 

“இல்ல.. அக்கா கடைக்கு போறதுக்கு கை காட்டி கை காட்டி ஏறுறா. ஊர்க்காரங்க முகத்த சுளிச்சிக்கிட்டே ஏத்துறாங்க. சில பேரு ஒரு மாதிரி பாக்குறாங்க. அவ பேசாம சைக்கிள்லயே போகட்டும்”

என்று திரும்பிப் பார்க்காமல் சொல்லிவிட்டு குடத்தை தூக்கிக்கொண்டு ஓடியவனை வசந்தா இலுப்பை மரத்தடியில் குறுக்கே ஓடி வந்து மடக்கிப் பிடித்தாள்.

“ரொம்ப தேங்க்ஸ்டா” என்றவளை‌ வழக்கம்போல் முறைத்தவன் அடக்க முடியாமல் லேசாக புன்னகைத்தான். அடுத்த நொடியே அதற்காக வெட்கப்பட்டுக் கொண்டே நகர்ந்தான். 

“சரிடா.. ஆசையா வாங்குனல்ல. இன்னிக்கு ஒருநாள் நீ ஓட்டு. நாளைக்கு நான் எடுத்துக்குறேன்” என்றவளை நோக்கி மறுப்பது போலத் தலையசைத்தான். 

“அதெல்லாம் உனக்கு தெரியாது. ஓட்ட ஆரம்பிச்சிட்டா அப்புறம் ஆச விடாது. நீ எடுத்துட்டுப் போ” என்றவனை பரிதாபமாய் பார்த்தாள்.

“உண்மைலயே அக்கா லிஃப்ட் கேட்டு நிக்கிறாங்கிறதுக்காக மட்டும் தான் குடுத்தியாடா?” என்றவளின் குரலில் ஒரு எதிர்பார்ப்பு ஒளிந்திருந்தது.

“அதுக்கும் சேர்த்து தான்..” எனச் சிரித்தபடியே திரும்பிப் பார்க்காமல் ஓடினான். 

4 Replies to “சைக்கிள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.